கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 16, 2024
பார்வையிட்டோர்: 4,571 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 21-24 | அத்தியாயம் 25-27

அத்தியாயம்-25

கோபியின் தாயார் சுசீலாவிடம் ஒரு விசேஷத் தன்மை உண்டு. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வாள். பிறகு மாடு அசை போடுவது போல, தனிமையில் உட்கார்ந்து எல்லாவற்றையும் தீரயோசித்துப் பார்ப்பாள். பிறகு யோசனையின் முடிவைக் கணவரிடமோ, பிள்ளைகளிடமோ அல்லது மருமகள் மாலதியிடமோ, தெரிவிப்பாள். அவர்கள் அவளுடைய முடிவுகளைப் பற்றி அலசினாலோ அல்லது எதிர்த்தாலோ, மீண்டும் யோசனையில் ஆழ்ந்து தான் ஏற்கனவே எடுத்திருந்த முடிவை மறுபரிசீலனை செய்து பார்ப்பாள். எடுத்திருந்த முடிவு சரி என்று மனச்சாட்சிக்குப் பட்டால் அவ்வளவுதான், அந்த பிரம்மனே வந்தாலும் மாற்றமுடியாது. 

மொத்தத்தில் ஜனநாயகமும், யதேச்சாதிகாரமும் கலந்து குழைந்த ஒரு ஜன்மம் அவள். 

கோபி தேர்ந்தெடுத்த அமிர்தா அவளுக்கு மருமகளாக வர யோக்யதை இல்லை என்று மருமகள் மாலதி ஊரெல்லாம் சுற்றி வளைத்துக் கூறினாள். அமிர்தா ஒரு ஏழை டைப்பிஸ்டின் மகள் என்ற காரணத்தைக்காட்டியிருந்தால் அதை சுசீலா தூக்கி எறிந்திருப்பாள். உலகத்தில் பணக்காரனாவதே ஒரு அதிர்ஷ்டத்தின் விளைவுதாள் என்று தீர்மானமாக எண்ணிக் கொண்டிருக்கிறவள் அவள். ஆனால் அவளுடைய இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டிருக்கும் மாலதி, அமிர்தாவின் ஏழ்மையைச் சுட்டிக் காட்டவில்லை. செத்துப்போன ரகுவையும், அவன் ஏன் கலியாணமாகாத ஒரு இளம் பெண்ணுக்குத் தன் சொத்து பூராவும் எழுதி வைத்துவிட்டுப் போகவேண்டும் என்ற கேள்வியையும் இழுத்து சுசீலா முன் வைத்தான். 

மருமகள் மாலதிக்கு என்ன பிடிக்கும் என்று சுசீலாவுக்கு நன்றாகத் தெரியும். மாலதி பேசுவதையெல்லாம் ரசிக்க வேண்டும். ஆமாம் ஆமாம் என்று தலை அசைக்க வேண்டும். அப்புறம் மாலதி ஒரு குரங்குதான். யார் தடியைத் தரையில் அடித்து ராமா ராமா என்று சொன்னாலும் கரணம் அடித்து ஆட ஆரம்பித்துவிடுவாள். 

“மாலு, நீ சொல்றது சரிதான்… நான் என்னமோ நினைத்தேன்” என்று ஆரம்பித்தாள் சுசீலா. 

“அம்மா, நீங்க வெளுத்ததெல்லாம் பால்னு நெனைக்கிறவங்க… உங்களை ஒரு ஊமை கூட ஏமாத்திடலாம். பாவம்!”

சுசீலா உள்ளூரச் சிரித்துக் கொண்டாள். ஒரு ஹை கோர்ட் ஜட்ஜின் பெண் அவளை அளந்து வைக்கிறாள். 

“என்னமோ, நான் அப்படியே வளர்ந்து விட்டேன்.. ஆமாம். இந்தப்பொண்ணு அமிர்தா நம்ம கோபிக்கு ஏத்தவள் இல்லேன்னு நீ அபிப்பிராயப்படறே. நானும் ஒத்துக்கறேன். ஆனா கோபி ஒரே மூச்சா நிக்கறானே…” 

“அவன் அமிர்தாவுக்காக, அவளுடைய அழகுக்காக இப்படி ஒரே மூச்சாக நிக்கறான்னு நீங்க நினைக்கிறீங்களா?”

“பின்னே வேறு என்ன காரணம் இருக்க முடியும்னு நீ நினைக்கிறே?”

“ரகுவோட சொத்து”. 

“என்ன?” 

“அமிர்தா நம்ம கம்பெனியில் இன்னி நேற்றிலிருந்தா வேலை பார்க்கிறாள். எத்தனை வருஷமாறது? அவளை இப்பத்தான் நம்ம கோபி முதல் முதலாப் பார்க்கிறானா?”

“நீ சொல்றதிலும் அர்த்தம் இருக்கு” 

“அமிர்தாவுக்கு இதெல்லாம் தெரியாது. தெரிஞ்சாலும் கவலைப்படமாட்டாள். ஏன்னா அவளுக்கு நெஞ்சு உரம் ரொம்ப ஜாஸ்தி, நம்ம வீட்லே ஒரு பெண்ணுக்கு நெஞ்சு உரம் இருக்கலாமா?”

“எல்லோருக்கும் உன்னை மாதிரி இளகிய மனசும், விட்டுக்கொடுக்கிற சுபாவமும் வருமா மாலு?” என்றால், மாலதிக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று சுசீலாவுக்குத் தெரியும். 

“கோபி அமிர்தாவின் அழகில் மயங்காமல் போகலே. ஆனாலும் அவன் மனசில் அவளுடைய சொத்துதான் கரை கட்டி நிற்கிறது” என்றாள் மாலதி. 

“இவனுக்கு எதுக்கு அவளுடைய சொத்து?” 

“நன்னாக் கேட்டீங்க ஒரு கேள்வி. கோபிக்கு ஏகப்பட்ட கடன்.கம்பெனியில் அவனுக்கு அளந்து கொடுத்து, வாங்கிய கடனையும் சம்பளத்திலே வசூலிக்கிறார்கள்”. 

“யாரு, ரமேஷ் சொன்னானா?”

“ஆமாம். அவர்தான் சொன்னார். நான்கூடக் கேட்டேன், கூடப் பிறந்த தம்பின்னு பார்க்காம இப்படிச் செய்கிறீர்களேன்னு. அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா அம்மா?”

“எனக்கு எப்படித் தெரியும், உன் புருஷன் உன்கிட்ட என்ன சொன்னான்னு?” 

“என்னதான் சொத்திலே பாதி, கம்பெனியிலே பாதி கோபிக்கு உண்டுன்னாலும், கம்பெனி நிர்வாகம் வேறு, அண்ணன் தம்பி பாசம் வேறுன்னார். எனக்கு அவர் பதில் பிடிக்கவில்லை”. 

“எனக்கு மட்டும் பிடிக்குதுன்னு நினைச்சியா மாலு… அதுசரி, ஏன் நம்ம கோபிக்குக் கடன் வந்தது?”

“எனக்குச் சொல்ல நாகூசுகிறது.”

“பரவாயில்லை, சொல்லு”. 

“அமெரிக்காவிலே எங்கேயோ எக்கச்சக்கமா மாட்டிண்டிருக்கார்.” 

“எக்கச்சக்கமான்னா?”

“நீங்களே ஊகித்துப் பாருங்கோ… அமெரிக்காவிலே மாட்டிக்கணும்னா?”

“பெண் விவகாரமா?”

“எனக்கு நாக்கு கூசறது”. 

“நீ ரொம்ப அழுத்தம் பிடிச்சவள், மாலு.”

“என்னம்மாசொல்றீங்க?”

“நீ இந்த வீட்டு மருமகள் தானே… அதுவும் மூத்த மருமகள்!” 

“ஆமாம்”. 

“நாளைக்கு நான் கண்மூடினால் நீதானே எல்லாப் பொறுப்பையும் ஏத்துக்கணும்?”

“ஐயோ அம்மா, இப்படியெல்லாம் பேசாதீங்க”.

“ஏன், பொறுப்பைக் கண்டு பயப்படறியா?”

“அதுக்கில்லே”. 

“நான் சீக்கிரம் கண்ணை மூடிடுவேனோன்னு வருத்தப் படறியா?”

“ஏன் இப்படி அச்சானியமாப் பேசறீங்க… நீங்க என்னென்னிக்கும் இருந்தாத்தான் எங்களுக்கெல்லாம் பலம்… ஆமாம், ஏன் என்னை அழுத்தக்காரின்னு குற்றம் சாட்டினீங்க?”

“பின்னே என்னவாம்… நம்ம வீட்டு கோபியைப் பற்றி என்னவெல்லாமோ தெரிஞ்சு வைச்சிருக்க. இது வரையில் ஒரு வார்த்தைகூட சொல்லலியே?”

“அவசியம் வர்றப்போ சொல்லிக்கலாம்னு இருந்தேன். ஏன் பாவம், உங்க மனசு வேதனைப்படனும்?”

“அவனைப்பற்றி முன்னாலேயே சொல்லியிருந்தா. அவன் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க மாட்டான். முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பேன்” என்றாள் சுசீலா. 

“முளை விட்டதே அமெரிக்கா மண்ணிலே தானே, அம்மா?”

“இப்ப என்ன செய்யறது மாலு?”

“நானே சில நடவடிக்கை எடுத்திருக்கேன். உங்களுக்குத்தான் தெரியப்படுத்தலை.”

“நீ அழுத்தக்காரி!” என்று சொல்லி சுசீலா சிரித்தாள். பிறகு, “என்ன நடவடிக்கை?” என்று கேட்டாள். 

“அமிர்தாவை ஒரு தடவைக்கு ரெண்டு தடவையாய்ப் பார்த்துப் பேசினேன்…. விஷயத்தைப் புட்டுப்புட்டு வைக்காம, நாசூக்கா பூடகமாச் சொன்னேன்.” 

“பேஷ்!”

“அவள் யோசிக்க ஆரம்பிச்சுட்டா.”

“அப்படியா?” 

“என்னதான் கோபி தலை தெறிக்கப் போனாலும் அவன் நம்ம வீட்டுப் பிள்ளை. நம்ம வீட்லே ஆயிரம் இருக்கும். ஆனாலும் வெளி உலகத்துக்கு நாம் நம்ம கோபியை விட்டுக் கொடுக்கக் கூடாது இல்லியா-அம்மா?”

“ரொம்ப சமத்காரமான பேச்சு!”

“அதே சமயத்தில். நம்ம வீட்டுக்கு அமிர்தா மருமகளா வர அவளுக்கு யோக்யதையோ அருகதையோ கிடையாதுங்கறதா நாம நினைக்கறதும் அவளுக்குத் தெரியக்கூடாது”. 

“ஆகா, நீ புத்திசாலிப்பெண்… எவ்வளவு சாதுரியமா நடந்து கொண்டிருக்கே!”

“இரண்டே வார்த்தையிலே சொல்லப்போனா, அமிர்தா தானா நழுவிப் பின் வாங்கிடுவாள்”. 

“ரெண்டு வார்த்தைக்கு மேலேயே இருக்கு, மாலு.”

“ஒரு பேச்சுக்குச் சொன்னேன்”. 

“நானும் ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். நம்ம கோபியப் பத்தி நீ என்னதான் நெனைக்கிறே?”

“செல்லமா வளர்ந்த பிள்ளை. புத்திசாலிப் பிள்ளை, விவரம் தெரியாத வயசிலே கிடைச்ச சுகத்தினாலே, விவரம் தெரிஞ்சப்போ கொஞ்சம் திசை மாறிப் போய்விட்ட பிள்ளை.”

“மாலு, நான் உன்னை என்னமோன்னு நினைச்சேன், நீ ரொம்ப கெட்டிக்காரி!”

“தாங்க்ஸ் அம்மா”

“மொத்தத்திலே இப்போ நம்ம கோபி கடிவாளம் இல்லாத குதிரை, இல்லியா?”

“கரெக்ட்” 

“ஆனா அமிர்தாங்கற கடிவாளம் சரியில்லே அல்லவா?”

“அப்படித்தாள் எனக்குத் தோண்றது.”

“அமெரிக்காவிலே ஏதோ பெண் விவகாரம்னு சொன்னே… “

“நான் அப்படிச் சொல்லலே!” 

“உனக்குத்தான் சொல்ல முடியாம நா கூசிற்றே. பரவாயில்லே… எனக்கு நாக்கு கூசலே… அவன் அமெரிக்காவிலே ஒரு பெண்ணைக் கலியாணம் பண்ணிண்டு, ஒரு குழந்தையையும் பெத்துக்கொடுத்து அவளை அம்போன்னு விட்டுட்டு இங்கே ஓடிவந்திருக்கான்”. 

“அப்படியா?”

“ரமேஷ் இன்னும் இதை உங்கிட்டே சொல்லியிருக்கலேன்னா, உனக்கும் ரமேஷக்கும் ஏதோ அன்னியோன்னியக் குறைவுன்னு அர்த்தம். “

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை அம்மா.”

“சரி, எப்படியோ போகட்டும். நான் சொல்லப் போறதைக் கேளு. ரமேஷ் மாதிரிதான் கோபியும் எனக்குப் பிள்ளை. சில பிள்ளைகள் கலியாணத்துக்கு முன்னாலே கொஞ்சம் ஆட்டம் ஆடுவார்கள். இதுக்குக் காரணம் சரியா வளர்க்காத தோஷம், கிடைக்கிற சந்தர்ப்பங்கள் நான். இனிமே என்னோட கடமை, கோபியைச் சரியான வழிக்குக் கொண்டு வருவதுதான்!”

“எப்படி அம்மா?” 

”மொதல்லே அவன் கடனைப் பற்றிய விவரத்தை யெல்லாம் தெரிஞ்சிக்கிறது”. 

“தெரிஞ்சுட்டு?”

“அதை நானே தீர்க்கிறது”. 

“அப்புறம்? ஒருவேளை, உண்மையிலே அமிர்தாவைத் தான் கலியாணம் செய்து கொள்ளுவேன்னு பிடிவாதம் பிடிச்சா”

“அப்போ ரகு வைச்சுட்டுப் போன சொத்துக்காக அவள் பின்னால அலையறது. புரிஞ்சுடும்”. 

“புரிஞ்சா?”

“அமிர்தா என் மருமகள்!”

மாலதி அயர்ந்து போனாள். ஆனால் அதைக்காட்டிக் கொள்ளாமல் புன்முறுவலித்தாள். 

அத்தியாயம்-26

அமிர்தாவின் தந்தை பசுபதி, வாலிப வயதுக்குப் பிறகு எந்த சுகத்தையும் அனுபவிக்காதவர் தான். எத்தனையோ இரவுகள் வெறும் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பியிருக்கிறார். பல நாட்கள் கொட்டுகிற மழையில் தம்புச் செட்டித் தெருவில், தன் அரை வயிற்று அமுத சுரபியான டைப்ரைட்டிங் மெஷினைத் தலைமேல் வைத்துக் கொண்டு, ஒதுக்கமான இடத்தைத் தேடி அலைந்திருக்கிறார். அவருக்குக் கிடைக்கும் தினசரி ஊதியத்தில் பெரும்பங்கை தாயற்ற இரு பெண்களுக்கே அர்ப்பணித்திருக்கிறார். 

அவருடைய ஏழ்மையின் கடுமையிலும் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்துக் காப்பாற்றி வந்தார் என்றால் அது மானம்தான். எவரிடமும் அவர் உழைக்காமல் கையேந்தி நின்றதில்லை. நெருங்கிய ஓரிருவரிடம் கூடப் பைசா கடன் வாங்கியதில்லை. 

இப்பேர்ப்பட்டவருடைய மானம், கோபி கிருஷ்ணனுடைய வருகைக்குப் பிறகு காற்றில் ஆடத் தொடங்கி விட்டதாகத் தோன்றியது அவருக்கு, அமிர்தா அவனை விரும்புவது பற்றி அவர் கவலைப்படவில்லை. அவர் பெரும் மகிழ்ச்சியே அடைந்திருப்பார், கோபி மட்டும் ஒரு யோக்கியமான பிள்ளையாக இருந்திருந்தால். 

தம்புச் செட்டித் தெருவுக்கு அருகே கோபி கிருஷ்ணனுடைய கம்பெனியும் இருந்ததால் அவனைப் பற்றி, தெரிந்த சிலரிடம் விசாரிக்க எளிதாயிற்று. ஒருவர்கூட கோபி கிருஷ்ணனுடைய குணத்தைப் பற்றியோ, வாழும் விதத்தைப் பற்றியோ சிலாகித்துப் பேசவில்லை. நிர்வாகத் துறையில் கெட்டிக்காரன் என்று மேலேழுந்த வாரியாகப் பேசினார்களே தவிர, மற்றபடி சொன்னவையெல்லாம் குறைகள் தான். அவனுடைய அமெரிக்க நாடகங்களைப், பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாதுதான். ஆனால் சென்னையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சில நாடகங்கள் தெரிய வந்தன. ஓரிரண்டு இரவு விடுதிகளுக்கு அவன் செல்லுகிறான் என்றும், ராணி என்ற நடனக்காரியுடன் அவனுக்குத் தொடர்பு இருக்கிறது என்றும் அவர் கேள்விப்பட்டார். 

அதிலிருந்து பசுபதியின் மனம் ஒரு நிலையில் இல்லை. மற்றவர்கள் கூறுவது எல்லாம் உண்மை என்றால், அமிர்தா அவனுடன் ஆறுமாதம் கூட அமைதியாக – சந்தோஷமாக வாழ முடியாது. 

இத்தனை நாள் காத்திருந்த அமிர்தாவுக்கு இப்படி ஒரு மண வாழ்க்கை தேவைதானா? 

அன்று மத்தியானம் அவர் திடீரென்று வீட்டுக்கு வந்த போது. கோபி அமிர்தாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டார். இதுவரையில் அவர் உணர்ந்தறியாத ஆத்திரம் தலைக்கேறியது, 

“மிஸ்டர் கோபி கிருஷ்ணன்” என்று கத்தினார். அமிர்தா திடுக்கிட்டு நின்றாள். 

கோபிக்கு ஒன்றும் புரியவில்லை.

“உன்னைத்தான்!” 

“என்ன சார்?”

“யூ ஃபர்ஸ்ட் கெட் அவுட்… இனிமே இந்த வீட்டுப் பக்கம் உன்தலை தெரியப்படாது!” 

“அப்பா, என்ன சொல்றீங்க?” என்றாள் அமிர்தா.

“இந்த அயோக்கியன் உன் கழுத்திலே தாலி கட்டக் கூடாது” என்றார் பசுபதி. 

கோபி சினந்தான். 

“என்கிட்டே என்ன அயோக்கியத்தனத்தை நீங்க கண்டு விட்டீர்கள் சார்?”

“அதை என் பெண் முன்னாலேயே உன்கிட்டே சொல்லத் தேவை இல்லை… நீ வெளியே போகலாம்!” 

“சார், நீங்க மரியாதை தெரியாமல் பேசறீங்களா? இல்லை, தெரிஞ்சும் அது இல்லாமல் பேசறீங்களா?”

“உனக்கு எதுக்குடா நான் மரியாதை காட்டணும்?”

“மிஸ்டர் கோபி” என்று சுத்தின அமிர்தா, தன் அப்பாவைப் பார்த்து, “என்ன வந்துவிட்டது உங்களுக்கு?” என்று கேட்டாள். 

“இவனோடு நீ பழகுவது எனக்குப் பிடிக்கவில்லை.”

“ஏம்ப்பா?”

“அதை நான் அப்புறம் சொல்லுகிறேன்… கோபி, நீங்க தயவு செய்து போய் விடுங்கள்… உங்க கிட்டே மரியாதையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்” என்றார் பசுபதி. 

“சார், நான் போய் விடுகிறேன்… உங்க பெண்ணு கிட்டே நான் எல்லா ரகசியங்களையும் சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்கிறேன். அவளே என்னை மன்னிக்கிற மன நிலையில் இருக்கிறாள்”. 

“அந்த மன நிலைக்கு நீங்க அவளை இழுத்து வந்திருக்கீங்க!” 

“அமிர்தா, நான் வருகிறேன்”.

“ஐ-ஆம் ஸாரி, கோபி.”

“மிஸ்டர் பசுபதி! உங்க பெண் என்னுடைய கம்பெனியிலேதான் வேலை பார்க்கிறாள். ஆனால் நீங்க என்னை இப்போ வெளியேற்றினதுக்காக நான் அவளைப் பழிவாங்க மாட்டேன்!”

“யாரை பயமுறுத்துகிறீர்கள் கோபி? இந்த உலகம் நீங்க நினைக்கிற மாதிரி சின்னஞ்சிறு எள்ளுருண்டை இல்லை… உங்க கம்பெனி இல்லை என்றால் ஆயிரம் கம்பெனி!”

“போதும்ப்பா!”

“குட்பை!” என்று என்று சொல்லி விட்டு கோபி வெளியேறினான். 

“என்னப்பா இது, திடீர்னு வந்து ஒரு கூத்தே ஆடி விட்டீங்களே?” என்றாள் அமிர்தா. 

“நான் அவனைப்பற்றி நிறைய பேர்கிட்டே விசாரிச்சேன்… என் பொண்ணு நல்ல இடத்திலே வாழ்க்கைப் படணும்”

“என்ன அப்பா விசாரிச்சீங்க?”

“உனக்கு ஏம்மா விவரமெல்லாம்… கோபியை மறந்துவிடு”. 

“மறக்கிறதுன்னு என் மனசிலே நீங்க வர்றத்துக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடிதான் நாள் தீர்மானம் செய்தேன்…ஆனா…” 

“ஏம்மா, நீயும் அவனைப் பத்திக் கேள்விப் பட்டிருக்கியா?'”

“அவரே எல்லாம் சொன்னார்… அவர் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கூடக்கேட்டார்… என் மனசு மன்னிக்கவும் மன்னித்தது.”

“என்ன தவறுகள் அமிர்தா?”

“விவரமெல்லாம் எதுக்கு அப்பா? அமெரிக்காவிலே நடந்த தப்புக்கள்!”

“ஐயோ அமெரிக்காவிலே வேறு ஆட்டம் ஆடியிருக்கானா?”

“நீங்க என்ன சொல்றீங்க?”

“இப்ப அவன் மெட்ராஸ்லே என்ன ஆட்டம் ஆடறான்னு தெரியுமாம்மாஉனக்கு?”

“தெரிய வேண்டாம் அப்பா.”

“ஏம்மா?”

“நான் அவரை மறந்துடறதுன்னு தீர்மானம் செய்தப் புறம் அவர் எங்கே என்ன ஆட்டம் போட்டால் என்ன அப்பா? ஆனால் நான் என் மனசைக் கல்லாப் பண்ணிக் கொண்டதுக்கு அவருடைய கடந்தகால நடத்தை காரணம் இல்லை. எனக்கு ரகு எழுதி வைத்த சொத்தில் கோபி கண் வைத்திருக்கிறார் என்று என் மனசில் ஏற்பட்ட எண்ணமும் காரணமில்லை.”

“அப்படி ஒரு எண்ணம் அந்த அயோக்கியன் மனசிலே இருக்கா அமிர்தா?”

“அதை விட்டுத் தள்ளுங்கள் அப்பா… நானே ரகுவின் சொத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்…”

“என்ன முடிவு அம்மா?” 

“அதை அப்புறம் சொல்லுகிறேன்… நான் ஏன் கோபியை ஒரே அடியாய் மறந்துடறதுன்னு தீர்மானம் செய்தேன் தெரியுமா?” 

“சொல்லு அம்மா!”

”ரகு உயிரோடு இருந்திருந்தா, அவர் அன்னிக்குப் பிழைச்சிருந்தா நான் அவரை ஏற்றுக் கொண்டிருப்பேன்!”

“என்னம்மா உளர்றே”. 

“ஆமாம்ப்பா… யார் கிட்டேயும் சொல்லாததை நான் உங்ககிட்டே, உங்களை என் அம்மாவா நினைச்சுச் சொல்றேன்… சாகிறதுக்குக் கொஞ்சநேரம் முன்னாலே அவர் அருகே நான் உட்கார்ந்திருந்த போது திடீரென்று மின்னலா ஒரு ஆசை என் மனசிலே முளைச்சது அப்பா! என் மனசு அவரை விரும்பித்து அப்பா!”

“எனக்கு ஒண்ணுமே புரியலை.”

“உங்களுக்குப் புரியாது அப்பா. ஏன்னா எனக்கே அப்போ புரியாம இருந்தது… தினம் தினம் ஒரு முழம் பூவை எனக்கு அனுப்பினவன் நல்லவன், பண்பு நிறைந்தவன் என்ற எண்ணத்தோடுதான் நான் இருந்தேன்… அவன் என்னிடம் பேசக்கூட முயன்றதில்லை. உங்களைப் பார்க்க இந்த வீட்டுக்கு வந்த நாளிலே கூட, என்கிட்டே பேசத் துடித்ததில்லை. நான் அவனை அப்போதெல்லாம் சாதாரண நண்பனாகத்தான் பாவித்தேன்…” 

“ஆச்சரியமா இருக்கும்மா”

“என் மனசிலே இப்படி மின்னலா ஒரு ஆசை விழுந்த போது அவன் ஆஸ்பத்திரியிலேயே கிடந்தான். அவன் இறந்து விடுவான் என்றோ, தன் சொத்து முழுவதையும் எனக்கு எழுதி வைத்திருக்கிறான் என்றோ, எனக்குத் தெரியாது… அந்த நிலையில் என் மனசிலே ஏற்பட்ட ஆசை தாம்ப்பா, உண்மையான – தெய்வீகமான – அழிக்க முடியாத பிணைப்பு….” 

“இந்தக்காலத்து மனசுகள் எனக்கு ஒரே புதிரா இருக்கு அமிர்தா”. 

“எந்தக் காலத்திலும் மனித மனம் ஒன்று தாம்ப்பா.. ஆனா அதனுடைய சாயைதான் வெவ்வேறு விதமாகத் தெரிகிறது. எனக்குக் காதல்லே நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. ஆனால் அந்த ஒரு நிமிஷம் நான் என்னையே மறந்து போயிருந்தேன்… அதுக்குப் பிறகு கோபியுடன் பழகிய போது நான் ஏற்கனவே உணர்ந்ததைத்தான் மறுபடியும் அனுப்பவிப்பதாகத் தோன்றியது….” 

“நீ உள்ளே போய் காரியத்தைக் கவனி” என்றார் பசுபதி.

“அப்பா” 

“என்னம்மா?” 

“நான் ஹைதராபாத்துக்குப் போகப் போகிறேன்…”

“அங்கே யார் இருக்கிறா.?” 

“அப்புறமாச் சொல்றேன்… நாளைக்கே என்னை ரெயிலேத்திவிடுங்கள்… அப்புறம் இன்னும் ஒன்று, உங்க பேரிலே ஒரு பாங்க் அகௌண்ட் ஓபன் பண்ணணும்”.

“எதுக்கும்மா?”

“ரகு நிறையச் சொத்து வைச்சிருக்கான்… உணர்ச்சி வயப்பட்டு அதைத் தூக்கி எறிகிற அளவுக்கு எனக்குப் புத்தி மழுங்கலை, அதனாலே அதை நல்ல காரியங்களுக்கும், நம்முடைய சொந்த உபயோகத்துக்கும் வைத்துக் கொள்ளணும்… முதற்படியாக நீங்க ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் ஆரம்பியுங்க… ஏழைப் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் இலவசமா சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க… வசதியுள்ள பெண்கள், பிள்ளைகளிடமிருந்து மட்டும் ஃபீஸ் வாங்குங்க”. 

“என்னம்மா திடீர்னு மாறிட்டே… என்னென்னமோ சொல்றே? ஹைதராபாத் போகப் போறேன் என்கிறே…. டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கணும் என்கிறே… எனக்குத் தலை சுத்தறது அம்மா” 

பசுபதி கீழே உட்கார்ந்தார். அதே சமயத்தில் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்து, கண்ணாடி போட்ட சுமார் ஐம்பத்தைந்து வயதான ஒருத்தி இறங்கி, நிதானமாக நடந்து படியேறி வந்து கொண்டிருந்தாள்! 

அத்தியாயம்-27

மருமகள் மாலதியிடம் சவால் விட்ட சுசிலா, கோபியைப் பற்றிய விவரங்களை அறிந்த போது துணுக்குற்றாள். கம்பெனியில் அவனுக்கு மாதம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். இதைத்தவிர, கார் அலவன்ஸ், கிளப் அலவன்ஸ் என்று விதவிதமான படிகள். ஆனால் அவன் வீட்டுக்கு என்ன கொண்டு வருகிறான்? தன் மூத்த பிள்ளையிடம் துருவித் துருவி விசாரித்த போது தான் உண்மை புலப்பட்டது. 

அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மாதா மாதம் இருநூற்று ஐம்பது டாலர்கள் – கிட்டத்தட்ட இரண்டாயிரம். ரூபாய் – அவன் அனுப்புகிறான். சுசீலா மேலும் விசாரித்தாள். 

தன் பிள்ளை ஏற்கனவே ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, அமெரிக்க மண்ணில் அலைய விட்டு தாய் நாடு திரும்பி வந்து இருக்கிறான் என்ற செய்தி இடியாக விழுந்தாலும் அதை அவள் தாங்கிக் கொண்டாள். 

அடுத்த நிமிடமே அவளுக்கு அமிர்தாவின் நினைவு வந்தது. மாலதி என்னதான் அமிர்தா அந்த வீட்டுக்கு ஏற்ற மருமகள் இல்லை என்று நாசூக்காகவும் சாதுரியத்தோடும் சொன்னாலும் அமிர்தா மீது கசீலாவுக்கு ஒரு இனம் புரியாத இரக்கமும் அபிமானமும் ஏற்பட்டிருந்தது. அவளை இப்போது உடனடியாகப் பார்த்து விட வேண்டும் என்று அவள் துடித்தாள். 

மாலதியிடம் விலாசத்தை வாங்கிக் கொண்டு நேரே அமிர்தாவின் வீட்டை அடைந்தாள். 


படி ஏறின உடனேயே அமிர்தா அவளை எதிர் கொண்டழைத்தாள். 

“நீங்கள் … நீங்கள்… ” என்று அமிர்தா தயங்கிய போது.

“ஆமாம்…… நானேதான்.. கோபியின் அம்மாவே தான்….” 

“வாங்க… உங்களைப்பத்தி அவர் நிரம்பச் சொல்லியிருக்கிறார்…. அப்பா.. அப்பா….” 

“நீ ஏன், பாவம் உன் அப்பாவைத் தொந்தரவு செய்யறே? நான் உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன்….. கோபி என்னைப் பத்தி தூஷணையா ஏதும் சொல்லியிருக்க மாட்டானே…”

‘என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்.. உங்களை அவர் கோபுர உச்சியில் வைத்திருக்கிறார்”. 

“ஆனா என் பிள்ளையை நான் அந்த ஸ்தானத்தில் வைக்க முடியலை!” 

“என்ன சொல்றீங்க?”

“என் பிள்ளைக்கும் உனக்கும் கலியாணம் நடக்கும் என்று நீ எதிர்பார்க்கிறாயா?” 

“இல்லை” என்றாள் அமிர்தா. 

சுசீலா அயர்ந்து போனாள். இப்படிப்பட்ட பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. 

”ஏன்?” 

“காரணம் என்னுடைய சொந்த விஷயம்.” 

“நான் இப்ப எதற்கு வந்திருக்கிறேன், தெரியுமா?”

”நிச்சயமாக, ‘எங்க வீட்டில் விளக்கு ஏற்ற நீ வர வேண்டும்’ என்று அழைக்க இல்லை!”

“ரொம்ப கரெக்டா சொல்லிவிட்டாயே… எப்படி ஊாகித்தாய்?”

“உங்க வீட்டில் தான் ஒரு ஐகோர்ட் ஜட்ஜின் பெண் மருமகளாக இருக்கிறாளே. அவளுக்கேற்ற ஓரகத்தி நான் இல்லையே!” 

“ஓ, அவ வேறே வந்து தூபம் போட்டிருக்கிறாளோ?”

“அவ போட்டது தூபமா இல்லியான்னு தெரியாது. ஆனால் அவளுக்கு என்னைப் பிடிக்கலைன்னு மட்டும் புரிஞ்சுது.”

“அதனாலேதான் இப்படி ஒரு முடிவை எடுத்தியா?” அமிர்தா சிரித்தாள். 

“உட்கார்ந்திருக்கிற ரெயில் பிரயாணியால், ஏற இருக்கும் பிரயாணியை விரட்டற மாதிரியா இது… மாலதி ஏதோ சொல்லுகிறாளேன்னு நான் என் முடிவைத் தீர்மானம் செய்யவில்லை.” 

“நீ கொடுத்து வைத்தவள்!”

“ஏன் சொல்லுகிறீர்கள்?”

“கோபி என் பிள்ளைதான். பத்துமாசம் சுமந்து பெத்த பிள்ளை தான்.. ஆனா, அவன் என்ன தான் கெட்டிக்காரனாக இருந்தாலும் உனக்குக் கணவனா வர லாயக்கு இல்லை.”

“நான் அதைப்பற்றி சிந்தனை செய்யவில்லை.”

“எனக்குத் தெரியும்… ஒருத்திக்கு ஒருவன் மேலே ஆசை விழுந்திட்டா, அவன் கிட்டே என்ன குறை இருந்தாலும் பொருட்படுத்த மாட்டாள்.”

“நீங்க இப்ப என்ன சாப்பிடுகிறீர்கள்… எலுமிச்சம் பழ சர்பத் தரட்டுமா?” 

“ஓ, பேச்சை மாற்றுகிறாய்…”

“நீங்க புரிந்து கொண்டு விட்டீங்க.”

“என் பிள்ளைக்கு ஏற்கனவே அமெரிக்காவில் கல்யாணம் ஆகிவிட்டது”. 

“டைவர்சும் ஆயிடுத்து”. 

“ஓ, உனக்குத் தெரியுமா?”

“அவரே சொன்னார்”. 

இப்போது சுசீலா மீண்டும் திகைத்தாள். பிள்ளையே உண்மையைச் சொல்லியிருக்கிறான். 

“அப்படியா?.”

“உங்க பிள்ளை தன் சரித்திரத்தையே என்னிடம் சொல்லியாகி விட்டது”. 

”அதனால், நீ இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கே என்று எனக்குத் தெரியும்.”

“உங்க கணக்கு தப்பு”. 

“அப்போ…?”

“நான் அவரைக் கலியாணம் செய்து கொள்ள லாயக்கு இல்லாதவள்”. 

“ஏன் அமிர்தா, இப்படி சொல்றே?” 

“ஏன்னா, எனக்குக் கலியாணமாகிவிட்டது” 

“அப்படியா?”

மூன்றாம் முறையாகச் சுசீலா அயர்ந்து போனாள்.

“ஆமாம்”. 

“எப்போ? எங்கே?”

“ரகு சாவதற்கு முன்னாலே”

“ரகுவா உன் புருஷன்?”

“ஆமாம்.”

“ரகுவின் பெண்டாட்டியா நீ?”

“இல்லை.” 

சுசீலா குழம்பிப் போனாள். 

அமிர்தா நிதானமாக, “நான் அவரை என் கணவரா ஏற்றுக் கொண்டேனே தவிர, அவர் என்னைத் தம் மனைவியா நெனைச்சுண்டாரான்னு தெரியாது” என்றாள். 

“ஓ உன் மானசீகக் கணவரா? ஆண்டாள் கதை!”

“ஆண்டாளின் கண்ணன் சாகவில்லை!”

இப்போது சுசீலா சிரித்தாள். 

“நல்ல பெண்ணும்மா நீ. என் பிள்ளை உனக்கு லாயக்கு இல்லைன்னு சொல்லத்தான் நான் வந்தேன்.. ஆனா நீ என்னெல்லவோ பேசிட்டே..”

“நம்ம ரெண்டு பேருடைய எண்ணங்கள் வெவ்வேறா இருந்தாலும் முடிவு ஒண்ணாத் தானே இருக்கு?” 

“அது ஒரு வகையிவே சந்தோஷம்தான்… ஆனா, உன்னைவிடப் பெரியவள் என்கிற நிலையிலே சொல்றேன். நீ தத்துப்பித்துன்னு உளறிண்டு இருக்காம, சீக்கிரமே ஒரு நல்ல பிள்ளையாப் பார்த்துக் கலியாணம் செய்துகொள்.”

“தாங்க்ஸ்…”


அவள் போனதும் பசுபதி வந்தார்.

“என்னம்மா சொல்றா?”

“கோபியைப் போலவே அவர் அம்மாவும் நல்லவள் அப்பா… நான் அவரைக் கலியாணம் செய்துகிட்டாகஷ்டப் படுவேன்னு சொல்ல வந்திருக்கிறாள்” 

“கோபி நல்லவனா?”

“ஏம்ப்பா, அதிலே சந்தேகம்… அமெரிக்கப் பெண்ணை டைவர்ஸ் பண்ணினதாலே கெட்டவராயிட முடியுமா?”

“இன்னொரு பெண்… ஹைதராபாத்திலே. ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’சங்கத்திலே தெருத் தெருவா போய்ப் பாடற பெண்”. 

“அப்பா, ஒருவன் ஏற்கனவே ஒருத்தியைக் காதலிச்சதற்காக நாம இப்போ அவனைக் கெட்டவன்னு சொல்ல முடியுமா?” 

“ஸ்திரீலோலன்னா நல்லவனா? இப்பத்தாம்மா இந்த வியாக்கியானம் எனக்குப் புரிகிறது”. 

“கோபி, ஸ்திரீயும் இல்லை. லோலனும் இல்லை.., அவருடைய வாழ்க்கைப் பாதையிலே இடறின ரெண்டு கல்லுகள்”

“நீ மூணாவது கல்லா? இப்படியே போனா, நாலு, அஞ்சு ஆறுன்னு சுல்று வந்து கொண்டே இருக்கும்”. 

“நான் தான் அவரைக் கலியாணம் செய்து கொள்ளப் போவதில்லையே… முதல்லே ஹைதராபாத்துக்கு டிக்கெட் வாங்கிண்டு வாங்க… நான் பத்து நாளிலே திரும்பி வந்து விடுவேன்… அதுக்குள்ளே உங்க டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யுங்க!” 

“இன்ஸ்டிட்யூட் வேண்டாம் அமிர்தா”. 

“கண்டிப்பா ஆரம்பிக்கணும்”. 

“இந்த வயசிலே என்னாலே எப்படிம்மாமுடியும்?”

“நான் இருக்கேன்… எனக்கு டைப்பும் தெரியும். நிர்வாகமும் தெரியும்…. கெளரியையும் நாம வரச் சொல்லுவோம்….” 

பசுபதி வேறு வழி இல்லாமல் வெளியே சென்றார். 

அமிர்தா தன் மனம் நிரம்பி வழிந்தாற் போன்ற உணர்ச்சியை அனுபவித்தாள். ஒரு காதலைத் துறப்பது இவ்வளவு எளிதாக இருக்கும் என்று அவள் சற்றும் நினைக்கவில்லை. ரகு அவளுடைய இதயத்தில் இப்போது கொலு இருக்கவில்லை என்றாலும், அவனுடைய நினைவுக்கு அவளே ஒரு சின்னமாக ஆகிவிட்ட பிரமை எழுந்தது. முழுக்க முழுக்க யதார்த்தவாதியான அவளால் எப்படி ஒரு கற்பனை வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்தது? அவளையும் மீறி, அவளுடைய புத்தியையும் ஞானத்தையும் மீறி எப்படி மனம் இப்படிப்பட்ட மானசீகக் கணவனை உருவாக்கியது? கேட்கிறவர்கள் அவளைப் பைத்தியம் என்று சொல்ல மாட்டார்களா? 

அமிர்தாவின் நெஞ்சில் ஏன் துக்கத்தின் சாயை கூட இல்லை? ரகு இறந்து போனதால், ஒரு மனித உயிர் போய்விட்டதே என்ற வருத்தம் இருந்ததே தவிர, ஒரு சொந்தத்தை இழந்துவிட்டதான துக்கம் அவளுள் ஏற்படவில்லை. மானசீகக் கணவன் இறந்து போய் விட்டான் என்றால் துக்கம் பிற வேண்டுமே. ஏன் பிறக்கவில்லை? 

ஏன் இந்த அசம்பாவிதம்? திடீரென்று அவளுக்கு ஒரு உண்மை புலப்பட்டது. 

ரகு உயிராடு இருக்கும் போது அவளை அவள் தன் கணவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் இறந்த பிறகு இப்படிப்பட்ட மாயையே அவளுள் உதயமாயிற்று. பிறந்தது மறைந்தால் உணர்ச்சிகளுக்கு இடம் உண்டு. மறைந்து போனதற்குப் புத்துயிர்கொடுத்தால் அதுவும் வெறும் கற்பனையில் கொடுத்துக் கொண்டால் அது மறைவதற்கே இடம் இல்லை. 

ஆம், ரகுவை மறக்கும் நாள் பிறக்கும் வரை, அவளுடைய மானசீக தாம்பத்யம் பூவும் மஞ்சளுமாகப் பரிமளிக்கும். 

திடீரென்று வாசலில் குரல் கேட்டது. 

பூக்கடைக் கிழவன் பையன் மூலம் வழக்கம் போல பூ கொடுத்து அனுப்பியிருக்கிறான்.

அவள் பூவை வாங்கினாள். நேரே பூஜை அறைக்குச் சென்றாள். கண்ணில் பட்ட ஒரு படத்துக்கு அதைச் சார்த்தினாள். 

மீண்டும் கூடத்துக்கு வந்த போது. கூடம் வெறிச்சோடுவதாகத் தோன்றியது.

“இதுதான் கடைசி வரைக்கும்” என்று அமிர்தா தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள். 

(முற்றும்)

– கோபுர தீபம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1999, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *