கோபக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,621 
 
 

சுரேஷ் ஞாயிற்றுக் கிழமை காலை தன் வீட்டில் அமர்ந்து லாப்டாப்பைத் திறந்து மெயில் பார்த்தபோது வந்திருந்த அந்தக் கடிதத்தை படித்து சற்று மிரண்டார். அதை மறுபடியும் படித்தார்.

“ஏய் சுரேஷ், சித்ராவுடனான உன்னோட கும்மாளத்தை உடனே நிறுத்து. அவ இன்னொருத்தன் மனைவி. உனக்கு இப்ப வயசு 45 ஆயாச்சு. உனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. உன் மனைவி ரொம்ப நல்லவ, அப்பாவி, உத்தமி. அவள ஏமாத்தி இன்னொருத்தியோட கள்ள உறவு வெச்சிருக்கிற நீ உருப்படவே மாட்ட. உடனே நீ இந்த கள்ள உறவை நிறுத்தலேன்னா, நான் நிறுத்த வைப்பேன். ஜாக்கிரதை.
கோபக்காரன்.”

சுரேஷ் யார் இந்தக் கோபக்காரன் என்று யோசித்தார். அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஒரு வேளை தன்னுடன் வேலை செய்யும் எவரோ தன்னை விளையாட்டாக மிரட்டுகிறார்கள் என்று நினைத்தார். ஏனெனில் ஐ.டி கம்பெனிகளில் வெளிப்படையாக பிற பெண்களுடன் சுற்றுவது, நெருங்கிய சகவாசம் வைத்துக் கொள்வது என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கம்தான், அந்தப் பெண்கள் எழுத்து மூலமாக புகார் அளிக்காத வரையில். அதிகமாக சம்பாதிப்பதால் கை நிறைய பணம், பெரிய படிப்பு என்கிற திமிர், அயல் நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாலும், அங்கு அடிக்கடி சென்று வருவதாலும் தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்கிற கற்பனையான அசட்டு துணிச்சல்…. சுரேஷும் அதில் ஒரு அங்கம்தான். எனினும் கடிதத்தின் உண்மைகள் அவரை பயமுறுத்தின. .

சித்ராவும் சுரேஷும் இரண்டு வருடங்கள் முன்பு வரை ஒரே ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நெருக்கம், அதிக சம்பளத்திற்காக அவள் வேறு ஒரு ஐ.டி கம்பெனிக்கு சென்ற பிறகும் தொடர்ந்தது.

ஐ.டி கம்பெனி என்பதால் வாரத்துக்கு ஐந்து நாட்கள்தான் வேலை. அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் சென்னையின் சுற்றுப் புறங்களில் உள்ள ஏதாவது ஒரு நல்ல ஏ.ஸி ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு அங்கேயே தங்கி ஒருவருக்கொருவர் ஆசை தீர சரீர ஒத்தாசை செய்து கொண்டவுடன், இரவு டின்னரை வெளியில் முடித்துவிட்டு தத்தம் வீட்டிற்கு சென்று விடுவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் தங்களது குடும்பத்துடன் வாஞ்சை காட்டுவார்கள்.

மற்ற ஐந்து தினங்களில் அடிக்கடி தங்கள் மொபைலில் பேசிக் கொள்வார்கள், குறுஞ்செய்திகள் பரிமாறிக் கொள்வார்கள். இவர்களது பேச்சும், குறுஞ்செய்திகளும் அவர்களுடைய மறைத்து வைத்திருக்கும் உடற்கூறு வர்ணனை வக்கிரங்களாகத்தான் இருக்கும்.

சுரேஷுக்கு இது ஐந்தாவது ஐ.டி கம்பெனி. பிற பெண்களுடன் தொடுப்பு என்பது அவருக்கு மிகவும் இயல்பான ஒன்று. கை வந்த கலை, அவர் வாழ்க்கையின் ஒரு அங்கம்… அது பற்றிய குற்ற உணர்வோ, பய உணர்ச்சியோ அற்ற ஒரு நிலையில் சஞ்சரிப்பவர்.

சித்ராவிற்கும் அதே மன நிலை சஞ்சரிப்புதான். எத்தனையோ ஆண்களை கடந்து வந்திருந்தாலும், அவளுக்கு உடல் ரீதியாக சுரேஷுடன் மட்டும்தான் ஒரு நல்ல புரிதல் உண்டானது. அதனால்தான் மாய்ந்து மாய்ந்து அவருடன் அடிக்கடி ஈஷிக் கொள்வதில் அதீத ஆர்வம்.

அவளுக்கு அரசாங்கத்தில் வேலை செய்யும் எதிலுமே ஒரு ரசனையோ துடிப்போ இல்லாத ‘தேமே’ண்ணு ஒரு அப்புண்டு கணவர். +2 படிக்கும் ஒரு பெண்.

திங்கட்கிழமை காலை சுரேஷ் ஆபீஸ் கிளம்புவதற்குள் எட்டு குறுஞ்செய்திகள் சித்ராவிடமிருந்து வந்து விட்டன. எட்டரை மணிக்கு தன் காரை எடுத்துக்கொண்டு சுரேஷ் ஆபீஸ் கிளம்பும் போது அவர் மகன் சுதீர் அவருக்கு வசதியாக காரை எடுத்து வெளியே வைத்தான். பி.ஈ சிவில் படித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவன். கராத்தே கற்றுக் கொண்டு இரண்டு பெல்ட் வாங்கியிருக்கிறான். எம்.பி.ஏ படிக்கும் மகள் கல்லூரிக்கு சென்று விட்டாள். அப்பாவியான அருமை மனைவி ‘அது இருக்கா, இது எடுத்தாகிவிட்டதா’ என்று பார்த்து பார்த்து சுரேஷை அன்புடன் வழியனுப்பி வைத்தாள். .

வரும் சனிக்கிழமை 20ம் தேதி சித்ராவுக்கு பிறந்த நாள். மகாபலிபுரம் சென்று அவளுடன் தங்க வேண்டும். தவிர அன்று அவளுக்கு என்ன பரிசளிக்கலாம் என்று யோசித்தபடியே காரைக் கிளப்பினார்.

அனால் சித்ராவை அவரால் இனி சந்திக்கவே முடியாது என்கிற உண்மை அவருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

புதன் கிழமை மறுபடியும் அவருக்கு ஒரு மெயில் வந்தது. அதில் –

“டேய் சுரேஷ், நான் இவ்வளவு சொல்லியும் நீ மாறவேயில்லை. வரும் 20ம் தேதி சித்ராவின் பிறந்த நாளுக்கு அவளை நீ நேரில் பார்க்கக் கூடாது. மீறி நீ அவள பார்க்கணும்னு நெனச்சீன்னா 20ம் தேதி காலைல உன் கை, கால உடச்சிருவோம். அப்புறம் நீ ஆஸ்பத்திரிலதான் படுக்கணும். இந்த அசிங்கங்களை நீ உடனே நிறுத்தலேன்னா நாங்க நிறுத்த வைப்போம். திருந்தி வாழ இதுதான் உனக்கு கடைசி சந்தர்ப்பம்.
கோபக்காரன்.

சுரேஷுக்கு வியர்த்தது. அதெப்படி அவனுக்கு இவ்வளவு உண்மைகள் நம்மைப் பற்றித் தெரியும்? போலீசுக்கு போனால் சைபர் கிரைமில் உடனே அந்த கோபக்காரனை கண்டு பிடித்துவிடுவார்கள்தான். ஆனால் அவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வரும். சித்ராவுக்கும் தனக்கும்தான் அசிங்கம். இதை சித்ராவிடம் இப்போது சொன்னால் பயந்து கொண்டு மகாபலிரம் வர மாட்டாள். அப்புறம் சனிக்கிழமை அவளுடன் ஜாலியாக இருக்க முடியாது. எது நடந்தாலும் எதிர் கொள்வது என்று முடிவு செய்தார்.

வெள்ளிக் கிழமை திடீரென்று அவருக்கு அந்த ஐடியா தோன்றியது.

அருமை மகன் சுதீரிடம், “டேய் நாளைக்கு மகாபலிரத்துல எங்க கம்பெனி மீட்டிங் ஒண்ணு இருக்கு. என்னால அவ்வளவு தூரம் கார் ஓட்ட முடியாது… நீ என்ன டிராப் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துடு. நான் திரும்பி வர நைட் ரொம்ப நேரம் ஆகும். நான் யார் கிட்டயாவது கேட்டு ட்ராப் வாங்கிக்கறேன் அப்படி இல்லேன்னா தங்கிட்டு சண்டே வரேன்.” என்றார்.

“சரிப்பா, கண்டிப்பா வரேன். உங்கள ட்ராப் பண்ணிட்டு அப்படியே கராத்தே மாஸ்டர போய் பார்த்துட்டு வரேன்.”

சுரேஷ் நிம்மதியடைந்தார். என் மகன் சிங்கக் குட்டி. கராத்தே பயின்ற இவனை விட வேறு என்ன பாதுகாப்பு தனக்கு கிடைத்துவிட முடியும்?

இவனை மீறி எவனாவது என்னைத் தொட முடியுமா? வாங்கடா வாங்க. நாய்ங்களா என் பர்சனல் விஷயத்துல தலையிடற நாய் எவன்னு நாளைக்கு பார்த்துடறேன்…” கோபத்துடன் கறுவிக் கொண்டார்.

சனிக்கிழமை காலை ஒன்பது மணி. சுரேஷ் மழ மழவென்று ஷேவ் பண்ணிக் கொண்டு, வெது வெதுவென ஷவரில் அரை மணி நேரம் பிரத்தியேகமாக குளித்தார். மிக நேர்த்தியாக உடையணிந்து, சென்ட் அடித்து மணக்க மணக்க கிளம்பி ரெடியானார்.

காலை ஏழு மணிக்கே சுரேஷின் மனைவியும், மகளும் வட பழனி கோவிலுக்கு கிளம்பிச் சென்று விட்டனர்.

சுதீர் ரெடியாகி அப்பாவிடம் கார் சாவி வாங்கச் சென்றான். அப்போது அவன் மொபைல் அடிக்க, எடுத்துப் பேசினான்.

“ஓ அப்படியா… வெரி குட். உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே? எந்த ஹாஸ்பிடல்? போலீஸ் கேஸ் ஆயிடாதுல்ல? சரி நான் அப்புறம் பேசறேன்.”

அதே நேரத்தில் சுரேஷ் மொபைல் அடிக்க அதில் ‘சித்ரா’ என்கிற பெயர் ஒளிர்ந்தது. அருகில் சுதீர் இருப்பதால் அதை எடுக்கலாமா வேண்டாமா என்று அவர் தயங்க, சுதீர் குரலில் எகத்தாளமாக, “அவதான் எடுத்து பேசு” என்றான்.

“ஹலோ” .

“……………….”

சரேஷ் ஆடிப் போய் விட்டார். முகம் கறுத்து பேஸ்தடிக்க நின்றார்.

“ஒழுங்கா வீட்டோட கிட. என் நண்பர்கள்தான் சித்ராவ ஹாக்கி ஸ்டிக்கால அடிச்சு அவ கால உடச்சாங்க.. அவ உனக்கு ஹாஸ்பிடல்லர்ந்து போன் பண்ணாளாக்கும்? அம்மாவுக்கு துரோகம் செஞ்ச உன்னோட கையையும் காலையும் உடைக்கணும் என்பதுதான் என்னோட ஒரிஜினல் ப்ளான். ஆனா நேத்து நீ திடீர்னு எங்கிட்ட காரோட்டியா நான் வரணும்னு சொன்னப்ப உடனே ப்ளான மாத்திட்டேன். தண்டணைய உனக்கு பதிலா அவளுக்கு பிறந்த நாள் பரிசா குடுத்தா என்னண்ணு தோணிச்சி… ரெண்டு நாய்ல எத அடிச்சா என்ன?”

“……….”

“தெய்வ நம்பிக்கை நிறைந்த, வெகுளியான உன் மனைவிக்கு நீ எப்படி கொஞ்சங் கூட குற்ற உணர்வே இல்லாம… ச்சே, நீயெல்லாம் ஒரு மனுஷனா? அவளும் ஒரு பொம்பளையா? நீ தினமும் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள வரிசையா அவளிடமிருந்து ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ்… அந்தக் கண்றாவியெல்லாம் நான் தினமும் படித்துத் தொலைச்சேன்….உன்ன தொடர்ந்து பாலோ பண்ணேன். ஒவ்வொரு சனிக் கிழமையும் நீங்க அடிச்ச கூத்தை என் உயிர் நண்பர்களிடம் சொன்னேன். அவங்களவிட்டு உன்ன அடிக்கிறதுக்கு ப்ளான் பண்ணிய பிறகும், நீ திருந்தறதுக்கு சந்தர்ப்பம் கொடுத்து கோபக்காரனா மாறி உனக்கு மெயில் அனுப்பினேன். ஆனா நீ திருந்தற வழியா இல்ல.”

“சுதீர் உனக்கு சின்ன வயசு…. இதெல்லாம் உனக்கு இப்ப புரியாது. என் கடமைய நம்ம வீட்டுக்கு நான் ஒழுங்கா செஞ்சுகிட்டுத்தான இருக்கேன்? என் மனைவி எனக்கு வைப்பது படையல். சித்ரா எனக்கு அளிப்பது அறுசுவை விருந்து, படையலுக்கும் விருந்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு சுதீர்…”

“அடி செருப்பால, நாயே… என்கிட்டயே உனக்கு இப்படி பேசறதுக்கு வெட்கமா இல்ல? நீ ரெண்டு கால் தெரு நாய். நாலுகால் நாய் மாதிரி அலையாத. திருமணத்திற்கு தயாரா நம்ம வீட்லயே ஒரு பொண்ணு இருக்கு. சித்ரான்னு இல்ல.. நீ இனிமே எவளோடயும் உறவு வச்சுக்க முடியாது… மீறினேன்னா உன்ன நிரந்தரமா முடமாக்கி மூலைல தள்ளிருவேன்… உன்னக் கொலை பண்ணவும் நான் இப்பவே ரெடி. ஆனா என் அம்மா தாலிய நானே பறிக்க விரும்பல… அதனாலதான் உன்ன ஸ்கெட்ச் போட்டு தூக்காம விட்டு வச்சிருக்கேன். இனிமே யூ ஆர் அன்டர் மை கான்ஸ்டன்ட் சர்விலன்ஸ்… மவனே உன்னோட முன் வால சுருட்டிகிட்டு மரியாதையா ஒழுங்கா இரு. என்ன புரிஞ்சுதா…?”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *