(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
செங்கற்பட்டு ஸ்டேஷனிலிருந்து காஞ்சீபுரம் வழியில் போகும் ரெயில் வண்டி பகல் பதினொரு மணிக்கு ரெட்டிப்பாளையம் ஸ்டேஷனில் நின்றது. இரண்டு பிரயாணிகள் இறங்கினார்கள். ஒருவரும் ஏறவில்லை. இரண்டு நிமிஷம் மேலும் கீழும் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, ‘கார்ட்’ ஊதலை ஊதி, கொடி காண்பித்தார். மேலே போக இஷ்டமில்லா ததுபோல் வண்டி முனகிக்கொண்டே அசைந்து கொடுத்துவிட்டுப் பிறகு ஏக ஆர்ப்பாட்டத்துடன் நகரத் தொடங்கியது.
அதுவரையில், ஸ்டேஷனுக்கு எதிர்ப்புறத்தில் மரங்கள் அடர்ந்து இருந்த தோப்பில் ஒரு மரத்தின் மறைவில் நின்றுகொண்டிருந்த துலுக்காணம் திடீரென்று தன் மறைவிடத்திலிருந்து பாய்ந்து ஓடிப் போய் ரெயிலில் ஏறிக்கொண்டான்.
‘டக்’கென்று கதவு திறக்கும் சப்தம் கேட்டுப் பிரயாணிகள் சிலர் திரும்பிப் பார்த்தார்கள். திரும்பிப் பாராமல் வேறு ஞாபகமாய் இருந்தவர்களும் ‘படீர் படீர்’ என்று சப்தம் வந்ததைக் கேட்டதும் திரும்பிப் பார்க்கவேண்டியதாயிற்று. வண்டியின் கோடியில் நின்றுகொண்டு, மேலே போட்டுக்கொண்டிருந்த அழுக்கேறின பனியனைத் தூக்கி மடித்துவிட்டுக் கொண்டு துலுக்காணம் வயிற்றில் படீர் படீரென்று அடித்துக்கொண்டிருந்தான்.
அருவருப்புடன் முகத்தைச் சுளித்துக்கொண்டு எல்லோரும் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினார்கள். குழந்தைகள் மட்டும் ஸ்வாரஸ்யத்துடன் இந்த வேடிக்கையைக் கவனித்தன.
துலுக்காணம் வயிற்றிலே அடித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு, “மகம்மதியர் மதத்தில், மாணிக்க மாய்ப் பிறந்த, மௌலானா மகம்மதாலியே-” என்று பாடத் தொடங்கினான்.
‘ஜிகுஜிகு’ என்று சப்தம் போட்டுக்கொண்டு ரெயில் வண்டி ஓடியது. பாடிக்கொண்டிருந்தவன் மெதுவாய் ஒவ்வொருவரிடமாய் வந்துநின்று கையை நீட்டிப் பிச்சை கேட்டான். அவன் இடது கரத்தில் மணிக்கட்டே இல்லைபோல் தோன்றிற்று. கை மடிந்து ஐந்து விரல்களும் தொள தொளவென்று தொங்கிக்கொண்டிருந்தன. தனக்குக் கை ஊனம் என்பதைக் காண்பிப்பதற்காகவே அந்தக் கையைத் தூக்கி முன்னால் நீட்டிக்கொண்டிருந்தான். இரண்டு தம்படிகள் அவன் கையில் விழுந்தன. அநேகர் வேறு பக்கம் பார்த்துக்கொண்டே தலையை ஆட்டிப் போகச் சொன்னார்கள்.
அடுத்த ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்குள் வண் டி நுழைந்தது. வண்டி அங்கே நிற்பதற்குள் படா ரென்று கதவைத் திறந்துகொண்டு ‘கார்ட்’ உள்ளே ஓடிவந்தார். அவரைப் பார்த்ததும் துலுக்காணம் விடு விடென்று வண்டியின் இன்னொரு கோடிக்கு ஓடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே குதித்தான். ஸ்டேஷனுக்கு எதிர்ப்பக்கத்தில் அவன் குதித்த படியால் அவனைத் தடுப்பவர்கள் அங்கே யாரும் இல்லை. கீழே குதித்தவன் சிறிது தூரம் ஓடிப் போய், தூரத்தில் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தான். ‘கார்ட்’ கையைப் பலமாக ஆட்டிவிட்டு, மறுபடியும் வந்த வழியே வெளியே சென்று கொடி காண்பித்தார்.
மறுபடியும் ரெயில் புறப்பட்டபோது வண்டியில் இருந்தவர்கள் பிச்சைக்காரன் எனன செய்யப் போகிறான் என்று வெளியே தலையை நீட்டிக் கொண்டு பார்த்தார்கள். கடைசி வண்டி பிளாட் பாரத்தைத் தாண்டிப் போகிற சமயத்தில் துலுக்காணம் மறுபடியும் விடுவிடென்று ஓடிவந்து எழும்பிக் குதித்து வண்டியில் தொற்றிக்கொண்டான். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள். ‘கார்டி’ன் முகத்தில் மட்டும் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்கும் வரையில் துலுக்காணம் காத்துக் கொண்டிருக்கவில்லை. பொத் தென்று அவன் குதித்த சமயத்தில் ‘கார்டு’ம் கீழே குதித்து அவனைத் துரத்தினார். அப்போது வேறொரு வண்டியிலிருந்த பிச்சைக்காரப் பெண் ஒருத்தியை விரட்டிக்கொண்டு ஒரு போலீஸ்காரனும் ஓடி வந்தான். எதிரே இருந்த இரும்புக் கிராதியில் நுழைந்து தப்பித்துக் கொள்வதற்கு அகலமான இடைவெளி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இரண்டு பிச்சைக்காரர்களும் ஓடினார்கள்.
முதலில் துலுக்காணம் அப்படி ஒரு வழி கண்டு பிடித்துக்கொண்டு வெளியே ஓடிப்போய், தூரத்தில் நின்று திரும்பிப் பார்த்தான். பின்னால் ஓடிவந்த பெண்ணின்மேல் போலீஸ்காரன் ஒரு கல்லை வீசி எறிவதையும், அவள் உடம்பை வளைத்துக் கொடுத்து கல்லடியிலிருந்து தப்பிக் கால் இடறிக் கீழே விழுந்து மறுபடியும் எழுந்து ஓடுவதையும் பார்த்தபோது அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இதற்குள் ரெயில் கிளம்பிவிட்டது. அந்தப் பெண்ணும் போலீஸ்காரன் கையில் பிடிபடாமல் தப்பித்துக் கொண்டு துலுக்காணம் இருந்த இடத்துக்கு வந்தாள். கிட்டே நெருங்கியதும் அவளைப் பார்த்துவிட்டுத் துலுக்காணம் ஆச்சரியத் துடன், “நீ சின்னப் பொண்ணு இல்லையா?” என்று கேட்டான்.
அந்தப் பெண்ணும் ஆச்சரியத்துடன், “ஆமாம்’ என்று சொல்லிவிட்டு, “ஓ, நீயா?” என்றாள். அவள் கண்களிலே ஒரு மலர்ச்சி தோன்றியது. மாசக் கணக் காய்க் குளிக்காமல் அழுக்கேறியிருந்த முகத்தில், இரு கண்களும் திடீரென்று சந்தோஷத்தினால் ஒளிவிட்டுப் பிரகாசித்தன.
“ஆமாம். அவ எங்கே உங்க ஆத்தா?” என்று கேட்டான் துலுக்காணம்.
“செத்துப் போச்சு.”
ஒன்றும் சொல்லாமல் துலுக்காணம் ஒரு மரத்தின் வேரின்மேல் உட்கார்ந்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியதுதானே?’ என்று நினைத்துத்தான் அவன் பேசாமல் இருந்தானோ என்னவோ, தெரியவில்லை. கடைசியில் கோபத்தோடு, “உங்க அம்மா எனக்கு எட்டணாத் தரணும். எங்கிட்டேயிருந்து திருடிக்கிட்டு ஓடிப் போனா. அதனால்தான் செத்தாள்!” என்றான்.
சின்னப் பெண் இதற்கு ஒன்றும் பதில் சொல்ல வில்லை. தரையைப் தரையைப் பார்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டு நின்றாள். “எவ்வளவு துட்டு இன்னிக்குச் சம்பாரிச்சே?” என்று துலுக்காணம் கேட்டதும் அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. “முக்காலணாக் கெடச்சுது. ஓடிவரபோது தடுக்கி விழுந்தேன்; அதுவும் எங்கேயோ விளுந்துட்டுது” என்றாள்.
துலுக்காணம் விழுந்து விழுந்து சிரித்தான். சம்பாதித்த காசை வைத்துக் கொள்ளத் தெரியவில்லையே என்று நினைத்தபோது அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
”நான் அந்தக் ‘கார்டு’க்குத் தண்ணி காமிச் சேனே, பாத்தியா? என்னைப் பிடிக்க அவன் தாத்தா வரணுமே!” என்றான்.
பிறகு, “என்ன பாட்டுப் பாடுவே நீ?” என்று அவன் கேட்டபோது சின்னப் பெண், “பாரத மாதா பாட்டு” என்றாள்.
“வாரே வா!” என்று துடைமேல் பளீர் பளீரென்று அடித்துக்கொண்டான் துலுக்காணம்.
2
பாரதமாதா என்றால் என்ன என்பது துலுக்காணத்துக்குத் தெரியாது. துலுக்காணம் என்ற பெயரைப்பற்றி எனக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் அவனுக்கும் பாரதமாதாவைப் பற்றித் தெரியும். அதை யெல்லாம் தெரிந்துகொள்ளும் சக்தியை அவன் தாய்தந்தையர் அவனுக்கு அளிக்க வில்லை. ஏன்? – தகப்பன் என்று ஒரு ஜீவன் இருக்கிறது என்பதையே துலுக்காணம் உணர்ந்தவனல்ல. அதைப்பற்றி அவன் கவலைப்படவும் இல்லை. அறிவு தெரிந்தது முதல் தன் தாயைத்தான் அவன் அறிந்திருந்தான். அவனுக்கு நடக்கத் தெரியாத போது அவள் அவனைத் தன் புடைவைத் தலைப்பில் போட்டுத் தூக்கித் தன் கழுத்தோடு முடிந்துகொண்டு அப்படியே எங்கும் சென்று பிச்சை எடுத்தாள். அவன் நடக்கத் தொடங்கிய பிறகு, இடது கையை மடித்துக் காண்பித்து ஊனமான கைபோல் அதை வைத்துக்கொள்ள அவனுக்குச் சொல்லிக் கொடுத்தவளும் அவள்தான். இந்த வித்தையைத் துலுக்காணம் விடாப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டான். நாளடைவில் அந்தக் கயை உபயோகிக்கும் விதமே அவனுக்கு மறந்து போய்விட்டது. உண்மையிலேயே ஊனமான கைபோலவே அது தொள் தொள என்று ஒடிந்து விழுவதுபோல் எப்பொழுதும் தொங்கிக்கொண் டிருந்தது. ஒரே கையுடன் துலுக்காணம் ஓடுகிற ரெயிலில் எழும்பிக் குதித்துத் தொற்றிக் கொள்ளுவான்; இடுப்புத் துணியையும் ஒரே கையால் வரிந்து கட்டிக்கொள்வான்.
அவனுக்கு ஏழெட்டு வயசு நடந்துகொண் டிருந்தபோது அவன் தாய் செத்துப் போனாள். இதனால் ஒன்றும் அவனுக்கு முழுகிப்போகவில்லை. அவளுக்குப் பதில் வேறொரு தாய் உடனே கிடைத்து விட்டாள். அவள்தான் சின்னப் பெண் ணின் தாய். இந்த ‘நொண்டி’ப் பையன் தன் பிழைப்புக்கு அதிக உதவியாக இருப்பான் என்று தெரிந்து கொண்டு அவள் அவனைத் தன்னோடு வைத்துக் கொண்டாள். அவள் தான் அவனுக்கு வயிற்றில் ஓங்கி அடித்துத் தாளம் போடவும் கற்றுக் கொடுத்தவள். அவள் பாடும்போது துலுக்காணம் மொண்டிக் கையை நீட்டிக்கொண்டு மற்றொரு கையால் வயிற்றிலே அடித்துக்கொள்வான். அப் பொழுது சின்னப் பெண்ணுக்கு ஐந்து வயசு இருக்கும். மூக்கிலிருந்து சளி ஒழுக, இடுப்பில் கன்னங்கறேலென்று ஒரு கந்தலைக் கட்டிக்கொண்டு இவர்கள் பின்னாலேயே அவள் ஓடுவாள். இப்படி நான்கைந்து வருஷங்களை அவர்களுடன் கழித்தான்.
துலுக்காணத்துக்கு வயசு பன்னிரண்டாயிற்று. தைமாதம் பிறக்கப்போகிறது; பொங்கல் பண்டிகை வரப்போகிறது. அந்த வருஷம் அவனுக்கு ஒரு விபரீதமான எண்ணம் தோன்றியது. பொங்கலுக்கு எல்லாரையும்போல் தானும் ஒரு புதுத்துணி வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. உடனே இரண்டாம் பேருக்குத் தெரியாமல் பிச்சைக் காசில் கால் காலணாவாய்ச் சுங்கம் பிடித்துச் சேர்த்து வைக்கத் தொடங்கினான். இப்படி, கிட்டத்தட்ட அரை ரூபாய் சேர்ந்தது. அவன் இடுப்பிலிருந்த பண முடிச்சும் சிறிது சிறிதாய்ப் பெரிதாகிக்கொண்டே வந்தது.
ஆனால், பணமோ காசோ எதுவும் அதது போய்ச் சேரவேண்டிய இடத்திலேதானே போய்ச் சேரு கிறது ? ஒரு நாள் துலுக்காணம் தூங்கி எழுந்து இடுப்பைத் தடவிப் பார்த்தபோது பணமுடிப்பைக் காணவில்லை! அதனுடன் சின்னப் பெண்ணும் அவள் தாயுங்கூட எங்கேயோ மாயமாய் மறைந்து விட்டார்கள்.
இதை நினைத்து இப்பொழுது துலுக்காணம் தன் மனத்துக்குள் சிரித்துக்கொண்டான். அவன் இடுப் பில், முன்பு அவன் பணத்தை முடித்துப் போட்டு வைத்திருந்த இடத்தில், இப்போது, அவன் தின்று மீதி வைத்திருந்த வெள்ளரிக்காய்த் துண்டு ஒன்று இருந்தது. அதை எடுத்து, “இந்தா” என்று சின்னப் பெண்ணிடம் கொடுத்தான். அவள் ஆவலுடன் வாங்கித் தின்றாள்.
இருவரும் அங்கிருந்து நடந்தார்கள். துலுக்கா ணம் உத்ஸாகத்துடன் பாடிக்கொண்டே போனான். ‘கோட்டை கொத்தளம் மீதில் ஏறிக் கூசாமல் குதிப் பேன் !-‘ இந்தப் பாட்டு நெடுநாளைக்கு முன் அவன் ஒரு தெருக்கூத்திலே கேட்டது. லே கேட்டது. அது அப்படியே, அவன் மனத்திலே பதிந்துவிட்டது. சந்தோஷமாக இருக்கும்போதெல்லாம் அவனையும் அறியாமல் இந்தப் பாட்டை அவன் மனம் முணுமுணுக்கும்.
அன்றையிலிருந்து துலுக்காணத்தையாவது சின்னப் பெண்ணையாவது ஒருவரும் தனியாய்ப் பார்க்கவில்லை. இருவரும் ஜோடியாகவே எங்கும் செல்லத் தொடங்கினார்கள்.
3
ஐந்து வருஷங்கள் சென்றன.
பிச்சைக்காரர் உலகத்தில், ஒரு வருஷத்தில் பெரும் பகுதி ஒரு விநாடியைப்போல் போய்விடும். மழைக்காலமும் குளிர்காலமும் வந்துவிட்டால்தான் ஒரு யுகம் போவதுபோல் இருக்கும்.
அந்த வருஷம் மழை மிகவும் கடுமையாக இருந்தது.தீபாவளிக்கு இன்னும் பத்துத் தினங்களே இருந்தன. தீபாவளிக்காக மூட்டம் போட்டுக் கொண்டு மழை நான்கு நாட்களாய்ச் சேர்ந்தாற் போல் ஓயாமல் கொட்டிக்கொண்டே இருந்தது. வானம் கண் திறக்கவே யில்லை.
இந்த மழையில் பிச்சைக்காரர்கள் எங்கே போய்ப் பிச்சை எடுப்பார்கள்? பிச்சை எடுப்பதற்குத் தான் தெருக்களிலே ஜனநடமாட்டம் ஏது?
மழையில் நனைந்ததனால் சின்னப் பெண் காய்ச்ச லுடன் ‘போர்ட் ஸ்டேஷன்’ பிளாட்பாரத்தில் ஓர் ஓரத்தில் ஒண்டிக்கொண்டு படுத்திருந்தாள். கால் களைக் கட்டினபடியே பக்கத்தில் உட்கார்ந்திருந்தான் துலுக்காணம். இன்னும் ஏழெட்டுப் பிச்சைக்காரர் கள் அங்கங்கே உட்கார்ந்திருந்தார்கள். ஒரு கிழவன் தலையைச் சொறிந்துகொண்டே ‘வளவள’ என்று தன் உடன்பிறந்தவளைப்பற்றிப் பேசிக்கொண் டிருந்தான். அவள் பெரிய இடத்திலே சம்பந்தப்பட்டிருந்தாள் என்று தெரிந்தது. அதாவது கல்கத்தாவிலே ஒரு பிச்சைக்காரனோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாளாம்!
சின்னப் பெண்ணும் துலுக்காணமும் மூன்று நாட்களாய்ப் பட்டினி. துலுக்காணத்துக்குத் தலைகிறு கிறென்று சுற்றியது. படுத்துக்கொள்ளலாம் என்றால் தூக்கம் வரவில்லை. குளிரினால் உடம்பு வெடவெட என்று உதறல் எடுத்தது. இவ்வளவு போதாதென்று ஜுரம் வேறு வந்திருக்கிறதே; பாவம்! சின்னப் பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்பதை நினைத்தபோது அவன் மனம் மிகவும் வேதனை அடைந்தது.
“சின்னப் பொண்ணு! சின்னப் பொண்ணு!” என்று கூப்பிட்டான்.
“உம்-” என்று அவள் முனகினாள்.
“எங்கேயாவது போய் ஒரு காலணாவாவது சம்பா திச்சு ஒரு இட்டிலி வாங்கிட்டு வரேன். இங்கேயே இரு” என்று சொல்லிவிட்டு அவன் எழுந்திருந்தான். மழை சிறிதும் ஓயவில்லை. பகல் மூன்று மணி தான் என்றாலும் வானம் இருட்டிக்கொண் டிருந்தது. ஓர் இடியாவது மின்னலாவது இல்லாமல் சோ என்று மழை பிடிவாதத்துடன் கொட்டிக்கொண்டிருந்தது.
துலுக்காணம் எழுந்து நின்று எங்கே போகலாம் என்று யோசித்தான். அப்பொழுது பத்தடி தூரத்தில் பெஞ்சியில் படுத்துக்கொண் டிருந்த ஒருவர் சட்டைப் பையின்மேல் அவன் பார்வை விழுந்தது. அந்தப் பையிலிருந்து ஒரு ‘மணிபர்ஸ்’ நீட்டிக்கொண் டிருந்ததை அவன் கண்கள் கவனித்தன.
‘அடேயப்பா துலுக்காணம்! திருடுவது பாவமடா!’
ஆனால் விதி யாரை விட்டது? துலுக்காணம் எட்டு மாசம் கடுங்காவல் தண்டனை அடைந்தான்.
4
பின்னும் நான்கு வருஷங்கள் ஆயின. இப்போது துலுக்காணத்தைப் பார்த்தால் அடையாளமே தெரியாது. விடு விடென்று மெல்லிசாக இருந்த சரீரம் பெருத்து ஊதிப்போய்விட்டது. கை கால்கள் குறைந்து அழுகிச் சொட்டிக்கொண்டிருந்தன. உடம்பெல்லாம் சிரங்கும் சொறியுமாக இருந்தன. கண் பார்வையும் மங்கித் தட்டுத் தடுமாறி நடந்துகொண் டிருந்தான்.
எட்டு மாசச் சிறைவாசத்தைத் துலுக்காணம் எட்டு யுகங்களாகத்தான் கழித்தான். சின்னப் பெண்ணை விட்டுப் பிரிந்த பிறகுதான் அவளிடம் தனக்கு ஏற்பட்டிருந்த அன்பின் ஆழத்தை அவன் உணர்ந்தான். மூன்று நாள் பட்டினியாய், காய்ச்ச லோடு கிடந்தவளிடமிருந்து தன்னைப் பிரித்து விட்டார்களே என்று நினைத்து நினைத்துக் கண்ணீர் விடுவான். தவிர, சின்னப் பெண் கர்ப்பமாய் இருக் கிறாள் என்ற சந்தேகமும் அப்போது அவனுக்கு இருந்தது.
சிறையிலிருந்து அவன் வெளியே வந்து பட்டணம் எங்கும் தேடியும் சின்னப் பெண்ணைக் காணவில்லை. அவள் எங்கே போனாள் என்ற விவரம் தெரிவிப்பவர்களும் ஒருவரும் இல்லை. சரி, அவள் செத்துத்தான் போய்விட்டாள் என்று துலுக் காணம் தீர்மானித்துக்கொண்டான். ஒரு வியாதிக் கார ஸ்திரீயுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்ததில் அவனுக்கும் வியாதி வந்துவிட்டது. சிறிது சிறிதாக அது அவனை உயிரோடு தின்றது. உடலும் உள்ளமும் ஒருங்கே மழுங்கிக் குறைந்து கொண்டே வந்தன.
ஒரு நாள் மூன்று மணிவரையில் ஒரு தம்படி கூட அவனுக்குக் கிடைக்கவில்லை. ஒருவரும் அவனைக் கிட்டே அணுகவிடவில்லை. ‘போ போ’ என்று அருவருப்போடு விரட்டினார்கள். முதல் நாள் காலையில் அரை வயிற்றுக்குச் சாப்பிட்டதோடு சரி. அப்புறம் பசிக்கும்போதெல்லாம் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தான்.
சைனா பஜார் பஸ் ஸ்டாண்டிலிருந்து நொண்டி நொண்டி நடந்து பூக்கடை பஸ் ஸ்டாண்டுக்கு வந்து களைப்புடன் சுவரில் சாய்ந்துகொண்டு உட்கார்ந்தான். வாயைத் திறந்து கேட்கவும் சீவன் இல்லாமல், போகிறவர் வருகிறவர்களை எல்லாம் பார்த்து வயிற்றைக் காண்பித்துக் கையை நீட்டினான். ஒருவரும் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.
ஒரு பஸ் வந்து நின்றது. உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு, “ஐயா! ஒரு பைசா குடுங்க சாமி!” என்று துலுக்காணம் அடிவயிற்றிலிருந்து ஒரு சப்தம் போட்டான். பஸ்ஸில் இருந்த ஒரு வயோதிகர் சட்டைப் பையிலிருந்து காலணாக் காசை எடுப்பதை அவன் கண்கள் பார்த்தன. அவன் உடம்பிலே எப்படித்தான் சக்தி வந்ததோ தெரிய வில்லை. சட்டென்று எழுந்திருந்து கையை நீட்டிக் கொண்டு பஸ் அருகில் சென்றான். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பிச்சைக்காரி இடுப்பில் ஒரு குழந்தையுடன் ஓடிவந்து, அவனை ஓர் இடி இடித்துக் கொண்டு கிழவர்முன் போய்க் கையை நீட்டி அந்தக் காசை வாங்கிக்கொண்டாள். துலுக்காணம் போய் நின்றபோது கிழவர், “போடா “போடா போ, எத்தனை பேருக்குப் போடுவது ?” என்றார். பஸ் நகர்ந்தது.
துலுக்காணம் அந்தப் பிச்சைக்காரியைப் பார்த்தான். அவளும் அவன் பக்கம் அலக்ஷ்யமாகப் பார்த்துவிட்டு வந்த வழியே சென்றாள். அப்படியே பேய் பிடித்தவன்போல் நின்றான் துலுக்காணம். அந்தப் பிச்சைக்காரி சின்னப் பெண்தான்; வேறு யாரும் இல்லை. இல்லை. ஆனால், அவள் துலுக்காணத்தை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
அவனையும் மீறிக் கால்கள் அவள் சென்ற வழியே அவனை இழுத்துச் சென்றன. அதிக தூரம் நடக்க முடியாமல் வழியில் ஒரு மரத்தடியில் பொத்தென்று விழுந்தான். அவனையும் அறியாமல் அவன் மனம், ‘கோட்டை கொத்தளம் மீதில்-‘ என்று முணுமுணுத்தது.
உண்மைதான் ; இதோ அவன் கண் எதிரே வானையளாவி நிற்கும் கோட்டை ஒன்று தெரிகிறது. துலுக்காணம் விடுவிடென்று அதன்மேல் ஏறி அதன் உச்சியில் நிற்கிறான். கீழே குனிந்து பார்த்தால் கிடு கிடு பாதாளம். கண் இருள்கிறது ; தலை சுற்றுகிறது. ஆனால், அவன் சிறிதும் அஞ்சவில்லை. ஒரு தாவு தாவி அங்கிருந்து கீழே குதிக்கிறான். லக்ஷக்கணக்கான பறவைகள் ‘கிறாகிறா’ என்று சப்த ஜாலங்களை எழுப்பு கின்றன. ஆயிரக் கணக்கான வண்டுகள் காதிலே ஒய்யென்று ரீங்கார மிடுகின்றன. ஊ என்று அண்ட ஊ சராசரங்களும் பிரலாபிக்கின்றன.
அதனுடன் அவன் ஆத்மா சாந்தி அடைந்தது.
– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.