கோட்டை காவல் நிலையம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 13,966 
 
 

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வேப்பம் பூக்கள் சிதறிக் கிடந்தன. சரவணன் அதைக் காலால் நெம்பித் தள்ளி விட்டு வாட்சைப் பார்த்துக்கொண்டான். கையெழுத்து போடுவதற்கு இன்னும் பத்து நிமிஷங்கள்தான் இருந்தன. முன்னதாகப் போனால், எஸ்.ஐ.விநாயகம் கர்புர் என்று கத்துவான்.

‘கோர்ட்டுல என்னால சொல்லியிருக்கு… பத்து மணின்னுதானுல போட்டிருக்கு… கா மணி நேரத்துக்கு முன்னால கால அகட்டிட்டு ஓடி வந்துருக்கே…’

அங்கு இருக்கும் மற்ற எல்லோருமே எள்ளலாக சரவணனைப் பார்வை பார்க்க, இவனுக்கு உடல் கூசும்.

‘திருப்பி உள்ள தள்ளிரலாமாவே?’ என்று இன்ஸ்பெக்டர் கேட்பதைத் தலை நிமிர்ந்தே பார்க்காமல் கையெழுத்துப் போட்டுவிட்டு, நோட்டை உள்ளே வைத்துவிட்டு வருவான். வெளியே வரும்போது இயலாமையால் கால்கள் பலமற்று நடக் கக் கெஞ்சும்.

கோட்டை காவல் நிலையம்போன வாரத்தில் ஒருநாள் மேனேஜர் சீனிவாசன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே நின்றுகொண்டு சிரித்துச் சிரித்து எஸ்.ஐ.விநாயகத்துடன் பேசிக்கொண்டு இருந்தான். சரவணனைப் பார்த்ததும் சட்டென்று முகம் மாறி, ‘அப்ப நான் வரட்டா?’ என்று கிளம்பினான். தான் பார்த்த இந்தக் காட்சியை மகாதேவனிடம் சரவணன் சொன்னபோது, ‘அத உடனே செல்லுல போட்டோ எடுத்துருக்கணும்வே” என்று மகாதேவன் சொன்னான். அவன் எளிதாகச் சொல்லிவிட்டான். அந்த இடத்தில் யாராக இருந்தாலும் எதுவும் செய்திருக்க முடியாது.

ஆட்டோவில் சென்று வங்கியில் அலுவல கப் பணம் ஐம்பதாயிரத்தைப் போடப் போகும்போதுதான் ஆட்டோவை போலீஸ் வளைத்துப் பிடித்தது.

”அவசரமா பேங்க்ல போடு… நான் நல்லா எண்ணிட்டேன்…’ என்று சீனிவாசன் சொன்னதை நம்பி கொண்டுவந்த பணம். ஸ்டேஷனில் வைத்து எண்ணிப்பார்த்தால் முப்பதாயிரம்தான் இருந்தது. சரவணனுக்கு மனசுக்குள் ஏதோ தப்பாக நெருடியது. ஆட்டோ ஓட்டி வந்த கதிரேசன் நெஞ்சுக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டு இருந்தான். இருவரையும் கீழே உட்காரவைத்து வெள்ளைத் தாளில் கையெழுத்துகளை விநாயகம் வாங்கினான்.

”நான் பணத்தை எண்ணல சார்…’ என்று இவன் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்ததை ஸ்டேஷனில் யாருமே காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.

அங்கு இருந்த இன்னோர் எஸ்.ஐ.தங்க பாண்டியன் சரவணனைப் பார்த்து, ‘உம் மச்சினன்ட்ட எனக்கும் சேர்த்துச் சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லிடுடா’ என்றான். இதைக் காதில் வாங்கியபடியே வெளியே நின்றிருந்த ரஞ்சிதத்தின் தம்பி ‘என்ன வாங்க அத்தான்?’ என்று கேட்டதுதான் அந்த நிமிடத்தில் கோபத்தைத் தந்தது. யாரிடமோ காட்ட முடியாத கோபத்தை அவனிடம் காட்ட எந்தத் துப்பும் இல்லை என்பது சட்டெனப் புலப்பட, ‘எனக்கு வேணாம் நாகு” என்றான் சரவணன்.

நாகு வெளியே சென்று ஒரு பார்சலுடன் திரும்பி வந்து, தங்கபாண்டியனிடம் நீட்டினான். ‘சிக்கன் வாங்னியால?’ என்று கேட்டதற்கு, அவன் பதிலேதும் சொல்லாமல் கொஞ்ச நேரம் அமைதியாக நின்றான். பிறகு, தங்கபாண்டியனைப் பார்த்து, ”அத்தான்கிட்ட அக்கா பேசணும்னுச்சு’ என்றான். ”அதெல்லாம் பேச முடியாதில்ல. ரிமாண்ட் பண்ணியாச்சில்லே?’ என்றான் தங்கபாண்டியன் இலையை விரித்தவாறே. பிறகு வாய்க்குள் சிரித்த படி ‘சரி… சரி… பேசச் சொல்லு” என்றான்.

நாகு தயக்கமாக செல்போனில் ரஞ்சி தத்தைக் கூப்பிட்டு சரவணனிடம் போனைத் தந்தான். அவளிடம் இருந்து நிறைய மௌனங்களும் வெடித்துவிழும் விசும்பல்களும் எழுந்தன.

‘வக்கீலைப் பாரு ரஞ்சி. எப்படியும் பதினஞ்சு நாளாயிடும். சீனிவாசன் சாரைப் போய்ப் பாரு… உதவி செய்வாரு’ என்றான். தங்கபாண்டியன் கோழியின் தொடைக் கறியை நெடுக்காக வாயால் கிழித்தபடி ‘போறும் போறும்… பேசுனது. இன்ஸ்பெக்டர் வந்தா கதை கந்தலா யிடும்” என்றான்.

அன்று சாயங்காலம் சரவணனை கோர்ட்டுக்குக் கூட்டிச் சென்று அங்கு இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லும் வரை சீனிவாசன் அங்கு வரவே இல்லை. ஆட்டோ டிரைவர் கதிரேசனிடம் கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார் கள்.

சிறை வாசலில் இவனைப் பார்த்து நாகு தயக்கமாக, ‘சாப்பாடு வாங்கவா அத்தான்?’ என்று கேட்டான். தண்ணீர் மட்டும் கேட்டு வாங்கி மடமடவெனக் குடித்தவனிடம் இருந்து பாட்டிலை வாங்கி ‘அத்தான்… சொல்லணும்னு நினைச்சேன்… சங்கரன் ஸ்டேஷன் கீழே நின்னான்” என்றான். ”நேரமாயிடுச்சு… உள்ள போய்யா” என்ற விரட்டலில் நாகுவின் குரல் தூரமாகிக்கொண்டே இருந்தது.

சங்கரன் எதற்காக அங்கு வர வேண்டும்? – பூட்டிய நீள அறையினுள் அந்தக் கேள்வி மட்டும் மிஞ்சி இருந்தது. பக்கத்தில் இருந்தவன் மிக சத்தமாகக் குறட்டைவிட்டது பயங்கரமாக இருந்தது. சீனிவாசனை ரஞ்சிதம் சந்தித்திருப்பாள் என்றும் மறுநாள் காலையில் அவள் தன்னைப் பார்க்க வரக்கூடும் என்றும் நினைத்துக்கொண்டான். அப்படி அவள் சீனிவாசனைச் சந்திக்கும்போதுதான், தன்னை இதில் சிக்கவைத்த சதித் திட்டம் தெரியவரும் என்று நினைத்தான்.

எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. அதிகாலையிலேயே கம்பியைத் தட்டி எழுப்பிவிட்டார்கள். மந்தகாசமாக ஒரு புன்னகையைச் சுமந்துகொண்டு ஜெயிலில் பார்க்கிற எல்லோரிடமும் எந்த கேஸில் தான் உள்ளே வந்தேன் என்று கூச்சத்துடன் சொல்ல வேண்டி இருந்தது. ‘ஓ… அந்த இன்ஸ்பெக்டர் அன்பழகனா? இருபத்தஞ்சாயிரம் கொடுத்தா… எஃப்.ஐ.ஆர். போட மாட்டானே?’ என்றான் ஒரு மீசைக்காரன். அநேகமாக ராத்திரி பக்கத்தில் படுத்து இருந்த ஆளாக இவன் இருக்கலாம் என்று தோன்றிற்று இவனுக்கு.

வாழ்க்கை அதுவரைக்கும் இல்லாமல் மிக விசித்திரமாக அந்தக் காலை வேளையில் இருந்தது. அறையினுள் சுவரைப் பிராண்டி ஒயரை இழுத்து செல்போனுக்கு சார்ஜ் போட்டு இருந்தார்கள். நாகு கொடுத்த துண்டும் மாற்று உடையும் எடுத்துக்கொண்டு குளிக்கப்போனான். வட்டில்களால் தண்ணீர் மொண்டு குளிக்க வேண்டி இருந்தது. ”பாத்ரூம்லாம் காலைலயே போயிடணும்… தண்ணி இருக்காது” என்றான் பக்கத்தில் நின்று குளித்தவன்.

ஆயாசமாக உணர்ந்தான் சரவணன். குளித்து முடித்தபோது நெளிந்த பிளாஸ்டிக் டம்ளரில் மீசைக்காரர் டீ குடித்துக்கொண்டு இருந்தார். அதன் நீர்த்த வாடை இவனுள் பசியைத் தூண்டியது. ”இங்க எங்க டீ வாங்க ணும்?” என்றான்.

‘வாங்குறது இல்ல. கேன்டீன்ல காசு கட்டினா வரும்.’

‘யார் கட்டணும்?’

‘உங்க வூட்டுல பாக்க வர்றப்ப கட்டச் சொல்லு.’

ரஞ்சிதம் பார்க்க வரும்போது எவ்வளவு பணம் கொண்டுவருவாள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சங்கரனுக்கு வட்டி கட்டியே நாசமாகப் போன குடும்பத்தில் வேலை பார்க் காத ஒரு பெண், பணத்துக்கு என்ன செய்வாள்? இயலாமை உடல் எங்கும் பரவ மீசைக்காரர் ஓரமாக இருந்த இன்னொரு பிளாஸ்டிக் குவளையைக் கழுவி, பாதி டீ ஊற்றி இவனிடம் நீட்டினார்.

‘இல்ல வேணாங்க… நாளைக்கு வீட்ல வந்துருவா.’

‘அட வுடு மாமா… இங்க நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான்’ என்றபடி வலுக்கட்டயமாகத் திணித்தபடி ‘வர்றப்ப பீடி வாங்கித் தரச் சொல்லு மாமா’ என்றார். சோர்ந்து கிடந்த வேளைகளில் பழைய ராமராஜன் பாடல்களைக் கையால் தாளமிட்டுப் பாடினபடி ”ஆயிரம் சொல்லு மாமா. லிப்ஸ்டிக் போட்டாலும் நம்ம மாமாவோட பாட்டை யாரால அடிச்சிக்க முடியும்’ என்றார்.

மீசைக்காரருடனான ஏதோ ஒரு நெகிழ்வான தருணத்தில்… தன்னுடைய தங்கைக்குக் கல்யாணம் செய்துவைக்க சங்கரனிடம் வட்டிக்குக் கடன் வாங்கி சீரழிந்த கதையைச் சொன்னான் சரவணன். நீண்ட நேர அமைதிக்குப் பிறகு, ‘நானும் அப்படித்தான் கெட்டேன் மாமா. இங்க உள்ளே வந்தப்ப முத மாசம் குடும்பமே திரண்டு வந்து பார்த்துச்சு. இப்ப யாருமே வர்றது இல்ல. வுடாம லெட்டர் போட்டுட்டே இருந்தா நெனப்பு வந்து எப்பவாச்சும் வருவாங்க’ என்று சொன்னார். அதுவரை காணாத துயரம் அவருடைய முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ‘உங்க மேல என்ன கேஸு’ என்று கேட்கலாமா என்று தோன்றியது. ஆனால், அதற்குள் அவராகவே, ‘என் தங்கச்சி புருஷனைக் கொலை பண்ண வந்தேன்னு என் மேல கேஸு. தங்கச்சி வாயைத் தொறக்கவே இல்ல. ‘எவ்ளோ செஞ்சே அந்த நாய்க்கு’னு என் பொண்டாட்டிக்காரி கத்துறா. சொல்றேன் கேட்டுக்க… குடும்பத்துல தம்பி தங்கச்சிக்குச் செஞ்சி வாழ்க்கையை நாசமாக்கின அண்ணன்மார் ஆவிலாம் மாளாது” என்றபோது அவருடைய கண்கள் கலங்கி இருந்தன.

‘அட வுடுங்க மாமா” என்றான் சரவணனும் அவருடைய பாணியிலேயே. மிக இயல்பாக அவரிடம் அப்படிப் பேசியதாக

அவனுக்குத் தோன்றியது. அன்றைய இரவு முழுக்க ”குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டு கேக்குதா…” பாட்டை மாறி மாறிப் பெண் குரலிலும் ஆண் குரலிலும் பாடிவிட்டு, ” ‘கரகாட்டக்காரன்’ படத்தைப் பாத்துட்டு என் தங்கச்சிக்குக் கனகா மாதிரி ப்ளூ கலர் பட்டுப் பாவாடை வாங்கிக் கொடுத்தேன் மாமா’ என்றார்.

மறுநாள் செல்லில் கூட இருந்த காசி ஓடையில் இருந்து ஒரு பாலிதீன் பொட்டலத்தை எடுத்துவந்து, அதைக் குழாயில் கழுவிக்கொண்டு இருந்ததை இவன் ஆச்சர்யத்துடன் பார்த்தான். ‘அது கஞ்சா மாமா. காசு கொடுத்துட்டா போலீஸ்காரங்க ஓடைல போட்டு வுட்டுறுவாங்க. மிதந்து வர்றதக் கழுவிக்கணும். கஞ்சா அடிக்காம பயபுள்ளைக்கு ஆய் போவாது’ என்றார் மாமா காசியைப் பார்த்துச் சிரித்தபடி. ‘நான் பொறகெதுக்கு பீடி கேட்டேன் உன்கிட்ட. திங்கக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பன்னெண்டு ரூவாய்க்குப் போற பீடிக்கட்டு வியாழன், ஞாயிறுலாம் அறுபது ரூவாய்க்குப் போவும் மாமா. சும்மாவா? நான் இதுலயே இருபதாயிரம் வெச்சிருக்கேன்’ என்றார் ரகசியக் குரலில். சரவணனுக்கு இதை எல்லாம் பார்க்கும்போதும் கேட்கும்போதும் ரொம்பவும் பதைப்பதைப்பாகவே இருந்தது. ஏதோ ஒரு மர்ம உலகத்துள் சிக்கிய மனநிலை தன்னுள் மெள்ள மெள்ளக் கவிழ்வதை உணர்ந்தான்.

நினைத்த மாதிரியே அன்று ரஞ்சிதம் வந்தாள். சீனிவாசன் ‘தனக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று சொல்லிவிட்டதாகச் சொன்னபோது அவர் மீது சந்தேகம் வந்தது. நாகுவுடன் வக்கீலைப் போய்ப் பார்த்த தாகவும் அவர் ஜாமீனுக்கு மனு செய்து இருப்பதாகவும் சொன்னாள். செலவுக்கு என்ன செய்தாள் என்று கேட்க எத்தனித்தபோதுதான் அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு தெரிந்தது. ‘ஏதாச்சும் சொல்லுங்க… ஏதும் வேணுமா?” என்றபடி சத்தமாகப் பேசினாள். அது அவள் வழக்கத்துக்கு மாறானது. கம்பி இடைவெளிகளுக்கு இடையே அவள் தன் இயல்பு மாறி சத்தமாகப் பேசியது மிகப் பெரிய துன்பத்தைத் தந்தது. மிடறு விழுங்கியபடி இவன் நின்றான். ‘சங்கரனும் சீனிவாசனும் சேர்ந்துதான் உங்களை மாட்டிவிட்டுட்டாங் கனு பேசிக்கிறாங்க. சீனிவாசனை நம்புனீங் களாமே… நாகு சொன்னான். சங்கரன் உங்களை மாட்டி விடணும்னே அவனுக்கும் அந்த எஸ்.ஐ.விநாயகத்துக்கும் காசு கொடுத்துட்டானாம்” என்றாள். ‘உங்க தங்கச்சிக்குக் கல்யாணம் கட்டிவெச்சி நாம நல்லாப் படுறோம் பாடு. ஒரு போன் பண்ணலயே… போறுமா?’ என்றாள் எப்போதும்போலவே.

‘என் தலையெழுத்து…’ என்றான் சரவணன். சத்தங்களுக்கு இடையே கேட்குமா என்ற சந்தேகத்தில் நெற்றிக்குக் குறுக்காக அனிச்சையாக விரலால் கோடு கிழித்தான். ‘கௌம்பு ரஞ்சி’ என்றான். ‘காசு வெச்சிருக்கியா?’

‘ம்… வெச்சிருக்கேன். சங்கரன் மேல நீங்க கந்துவட்டி கேஸு போட்டத வாபஸ் வாங்கிட்டா சமரசம் பேசிடுவாங்கனு சொல்றாங்களாம்… வாக்குமூலத்துலகூட அவன் ஆளுங்கதானே கையெழுத்து போட்டிருக்காங்களாம்.’

‘யாரு சொன்னா?’

‘நாகுட்ட அந்த தங்கபாண்டியன் எஸ்.ஐ. சொல்லியிருக்கான்’ என்றாள் மறுபடி சத்தமாக. திடீரென எல்லாப் புதிர்களும் கட்டவிழ்ந்த மாதிரி தோன்றியது இவனுக்கு. வழக்கை வாபஸ் வாங்க சங்கரன் பலர் மூலமாகப் பேசியது உண்டு. மிரட்டியதும் உண்டு. அதைச் செய்யாததால்தான் இந்தப் பழி என்றால், அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

‘கௌம்பு ரஞ்சி” என்றான். இவன் குரல் ரொம்பவும் இளகியிருந்தது.

ஜாமீன் கிடைக்க இருபத்தைந்து நாட்களாகிவிட்டன. உள்ளூர் கோர்ட்டில் கிடைக்காமல் மதுரையில்தான் கிடைத்தது. உள்ளூர் கோர்ட்டு பி.பி-க்கு சங்கரன் காசு கொடுத்ததாக ரஞ்சியும் நாகுவும் சொன்னார்கள். வெளியே வந்தபோது மாமா இவன் சட்டைகளைக் கேட்டு வாங்கிக்கொண்டார். இவனாகவே அவனுடைய செருப்பையும் அவருக்குக் கொடுத்தான்.

‘மறந்துடாத மாமா…” என்றார் கையைப் பிடித்தபடி. மத்தியானம் மீந்துபோன வத்தல் துண்டுகளையும் பொரி கடலையை யும் சேர்த்துத் தரையில் கல்லைவைத்து அவர் அரைத்துக் கொடுக்கும் துவையல் தொண்டைக்குள் வந்து எட்டிப் பார்த்துச் சென்றது.

தினமும் பத்து மணிக்குக் கையெழுத்து போட வேண்டியிருந்தது. அந்தக் கோட்டை காவல் நிலையம் பார்க்க சிறு வயதில் அவனுடைய அப்பாவுடன் சைக்கிளில் வந்தது இப்போது ஞாபகத்தில் வந்தது. ”இதெல்லாம் இங்லீஷ்காரன் நம்மள அடிமையாக்கிட்டுப் போன அடையாளம் சரவணா’ என்பார் அப்பா. கற்களால் ஒரு கோட்டை மாதிரி கட்டப்பட்டு உயரே இருக்கும் காவல் நிலையம் அது. அப்பா நினைத்தும் பார்த்திருக்க மாட்டார் இவன் பின் நாட்களில் அதில் ஜாமீன் கையெழுத்துப் போட வரக்கூடும் என்று!

தங்கச்சி என்னவென்றே கேட்கவில்லை. யார் யாருக்குச் செய்தானோ அவர்கள் யாருமே இவன் கஷ்டப்படும்போது வந்து பார்க்கவே இல்லை. வேலையும் இல்லை என்று ஆனது. வேலை கேட்கப்போன அன்று சீனிவாசன், ‘நீங்க இப்படிப் பண்ணுவீங்கனு நினைக்கவே இல்ல… கேஸ் முடியட்டும் பாக்கலாம்…’ என்றான். ஓங்கி அடித்து விட்டு, மறுபடி உள்ளே போய்விடலாமா என்றுகூடத் தோன்றியது. கையெழுத்து போடும் நேரம் எல்லாம் விநாயகம் ‘ஏல… வால…’ என்று கேவலமாகப் பேசுவதை இவனால் ஜீரணித்துக்கொள்ளவே முடிய வில்லை. ஒரு பெருமூச்சுக்குள் எல்லா உணர்வுகளையும் பூட்டிவைத்தான். படி இறங்கும்போது இவனுக்கு நாகு போன் பண்ணினான்.

‘எங்கிருக்கீங்க அத்தான்?’

‘கையெழுத்துப் போட்டுட்டு இப்பதான் இறங்குறேன்’ என்றான் இவன்.

‘இல்ல… அந்த கதிரேசன் இல்ல அத்தான். நீங்கதான் பேங்க் போற வழியில பணத்தை வீட்டுல போய் வெச்சிட்டுப் போயிட்டதா போலீஸ்ல சொல்லிட்டானு வக்கீல் சொல்றார்த்தான். எல்லாரும் காசு வாங்கிட்டாங்கத்தான்’ என்றான் படபடப்பாக.

இவன் அமைதியாக இருக்க இருக்க, ‘அத்தான்… அத்தான்…” என்று தொடர்ந்து நாகு கூப்பிட்டுக்கொண்டே இருந்து, பிறகு ரஞ்சியிடம் ”டவர் இல்ல போலக்கா… அவரு பேசுறது கேக்கல…’ என்றான்.

சரவணனுக்கு சிறுநீர் முட்டிக்கொண்டுவந்தது. தெரு முக்கு ஜெராக்ஸ் கடையைத் திறந்துவைத்து ஒரு பெண் வாசலைப் பெருக்கிக்கொண்டு இருந்தாள். கடையினுள் ரேடியோ ‘கண்ணே என் கார்முகிலே… கண்ணீரும் ஏனடியோ…’ என்று பாடிக்கொண்டு இருந்தது. ராமராஜன் பாடல் போலத் தோன்றியதும் மாமாவின் ஞாபகமும் கூட வந்தது. ஜெராக்ஸ் கடையை ஒட்டின சந்தில் சைக்கிளைச் சாய்த்துவைத்துவிட்டு ‘சிறுநீர் கழிக்காதீர்…’ என்ற வாசகத்தின் மீது, சிறுநீர் கழிக்கத் தொடங்கினான் இவன்!

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *