பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், சொந்த மண்ணில் கால் பதிக்கிறான் அவினாசி. அவனுக்குத் தன் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்று அதீத ஆசை. ஆனால், அவன் மேல் குடும்பத்திலுள்ள அனைவருக்குமே கோபம்! இது அவனுக்கும் தெரியும். பின்னே… அவசரப்பட்டு ஒரு கொலை பண்ணிவிட்டு, குற்றவாளி என்ற பெயரில் ஜெயிலில் அடைபட்டுக்கிடந்த அவனைச் சொந்தம் கொண்டாட யார்தான் விரும்புவார்கள்? அவன் ஜெயிலில் இருந்த காலத்தில், குடும்பத்திலுள்ள யாரும் சென்று பார்க்காததற்குக் காரணமும் அதுதான். கொஞ்சமாவது குடும்பம், மனைவி, மக்கள் என்ற எண்ணம் இருந்திருந்தால், இதுபோன்ற கொலை வெறி அவனுக்கு வந்திருக்குமா? இதுதான் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதங்கம்.
அவனது பார்வை வீட்டைச் சுற்றிச் சுழன்றது. அவன் ஜெயிலுக் குப் போகையில் இருந்த வீடு ரொம்பச் சாதாரணமானது. இப்போது, அது ஒரு பங்களாவாக மாறியிருந்தது.
பர்வதம் கஷ்டப்பட்டு நாலு இடங்களில் வேலை செய்து, மகனைப் பெரிய படிப்பு படிக்க வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தான். இன்று பையன் நல்ல வேலையில், கை நிறையச் சம்பளத்தில் இருக்கிறான். அவனது சம்பாத்தியத்தில்தான் வீடு இத்தனை அமர்க்களமாக இருக்கிறது என்று புரிந்தது. பரதேசியாக நிற்கும் தன்னை வீட்டில் ஏற்றுக்கொள்வார்களா, அல்லது விரட்டியடிப் பார்களா?
பின்னதுதான் உண்மை என்பதுபோல, அவனைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட அவனின் மகன், பெருங்கூச்சலிட்டுக் கொண்டே ஓடிவந்தான்… ‘‘தெரியும்! இன்னிக்கு நீங்க ரிலீஸ்னு சொன்னாங்க. நேரா இங்கேதான் வருவீங்கன்னு நினைச்சேன். போங்க… ஒரு கொலைகாரனுக்கு இந்த வீட்டுல இடமில்லை..!’’
பின்னாலேயே வந்து நின்ற இளம் பெண், அவன் மனைவியாக இருக்க வேண்டும். ‘‘அவர் கிட்ட என்ன பேச்சு? பேசாம கதவைப் பூட்டிட்டு வருவீங்களா?’’ என்று வெறுப்பை உமிழ்ந்துவிட்டு உள்ளே போனாள்.
‘எங்கே பர்வதம்? என் மனைவி எங்கே?’ அவளை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆசை அவினாசிக்குள் எழுந்தது.
‘‘ஏன் நிக்கிறீங்க… போங்கன்னு சொல்றேனில்லே? எங்காச்சும் போய் பிச்சை எடுத்துப் பொழைச்சுக்குங்க. இங்கே நின்னு எங்க மானத்தை வாங்காதீங்க!’’ என்று கத்தி, அவினாசியை வெளியே தள்ளிக் கதவை இழுத்துப் பூட்டினான் மகன்.
இப்போது வீட்டினுள் ஒரு பரபரப்பு தெரிந்தது. ஒரு பெண்ணின் குரல், அவன் காதுகளைச் சலனப்படுத்தியது. அது அவன் மனைவியின் குரலேதான்! கூடவே, ‘‘நீ போகாதம்மா! குடும்பத்தை நிராதரவா விட்டுட்டுப் போனவர் அந்த மனுஷன். அவர் மூஞ்சியில முழிக்கிறதே பாவம்!’’ என்ற மகனின் குரலும் கேட்டது.
சில நிமிடங்களில் கதவு திறந்தது. கையில் ஒரு மஞ்சள் பையுடன் வெளிப்பட்டாள் பர்வதம். அவினாசியைக் கண்டதும் ஆர்வத்தோடும் பாசத்தோடும் ஓடி வந்து அணைத்துக்கொண்டாள். ‘‘வாங்க, நாம எங்காச்சும் போய்ப் பொழைச்சுக் கலாம்!’’ என்று அவனை இழுத்துக்கொண்டு நடந்தாள்.
மகன் உள்ளேயிருந்து வெளிப்பட்டான். ‘‘என்னம்மா, பைத்தியமா உனக்கு? இவரை நம்பியா போறே? நம்பிக்கைக்குரிய முதலாளி வீட்டிலேயே திருடி, கையும் களவுமா பிடிபட்டு, அவரையே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனவர் இவர்! ஞாபகம் இருக்கில்லே?’’ என்றான்.
‘‘முட்டாள்! அது என் மானத்தைக் காப்பாத்துறதுக்காக இந்த உலகத்துக்கு இவரா சொன்ன காரணம். என்னைப் பொறுத்தவரைக்கும் இவர் வெறும் மனுஷர் இல்லை… தெய்வம்! இந்த ஒரு ஜென்மம் மட்டுமில்லே, இனி வரும் எல்லா ஜென்மங்களிலும் இவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்! வாங்க, போகலாம்!’’ என்றாள் பர்வதம்.
‘‘இருங்க!’’ என்று தடுத்தான் மகன். அவனுக்கு இப்போதுதான் ஏதோ புரிகிற மாதிரி இருந்தது.
– 01st ஆகஸ்ட் 2007