கொரோணா ஹொட்டேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 5,744 
 

கொழும்பு -14.4.20.

‘இந்த நேரம் நேற்று இந்த உலகத்தைவிட்டு மறைந்து விடவேணுமென்று நினைத்தேன்;’

அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்னைத் திடுக்கிடப் பண்ணின.அவளின் கண்கள் என் முகத்தில் நிலைத்திருந்தன. எனது பார்வையும் அவள் முகத்தில் சட்டென்று படிந்து நின்றதும் எனக்குத் தெரியும்.

என்ன சொல்கிறாள்? நேற்று மாலை ஏழுமணியளவில் இந்த உலகத்திலிருந்து பிரிந்தோட நினைத்தாளா?

‘ஏனம்மா அப்படிநினைத்தாய்?’ எனது குரலில் படபடப்பு.

தன்னுயிரை மாய்த்துக் கொள்ளுமளவுக்கு என்ன துயர் இவளுக்கு?;

அவளின் பெயர் சுலைகா.மும்பத்தைந்துக்கும் நாற்பதுக்குமிடையில் வயதுள்ள அழகான பெண்.

அவளுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாக அண்மையிற்தான் சொன்னாள்.முதலிரண்டும் பெண்கள் என்றும் கடைசி மகனுக்குப் பதிரெண்டு வயதென்றும் சொல்லியிருக்கிறாள்.அவர்களைத் தவிக்கவிட்டு அவள் மறைந்து விடவேண்டுமென்று நினைத்தாளா?.

‘ஒருத்தனை நம்பி எனது வாழ்க்கையை இப்படியாக்கி விட்டேனே என்று எனக்கு என்னில் ஆத்திரம் வந்தது.’ அவள் அந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அவள்முகம் சிவக்கத் தொடங்கி,கண்கள் பனிக்கத் தொடங்கியிருந்தன. அவள் தனது தலையைச் சுற்றியிருந்த முக்காட்டுத் துணியின்; நுனியால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

இலங்கைத் தலைநகர் கொழும்பு கொரோணாவால் மூடப்பட்டிருந்தது.வெளியில் எந்த சந்தடிகளுமில்லை.நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் ஹொட்டேலை அண்மித்திருக்கும் சந்திகளிலிருந்து பிரிந்துபோகும் நான்கு தெருக்களும்; வெறுமையாக உறங்கிக்கிடக்கின்றன.. ஆனால் எங்கோ புத்த பிக்குகளின் பிரார்த்தனை ஒலிகள் காற்றில் கலந்து வந்து எங்கள் காதுகள் மூலம் மனதை நிரம்புகிறது.

‘அவரை நம்பித்தானே நான் எனது வீட்டை விட்டு வெளியே வந்தேன்.’அவள் விசும்பத் தொடங்கினாள்.நான் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘இன்று அவனுக்கு விடுதலை நாள்,என்னுடன் இன்றிரவு என்னுடன் தங்கச் சொல்லிக் கேட்டேன்.ஆனால் புதுவருடத்தில் தனது பிள்ளைகளுடன் இருக்கவேண்டுமென்று சொல்லி விட்டு இன்றைக்கு என்னிடம் தங்காமற் போய்விட்டான்’.அவள் கோபத்தில் கொதித்தாள்.

எனக்கு மீண்டும் அதிர்ச்சி.

அவள் நேற்று தற்கொலை செய்ய முனைந்தது எனக்கு ஆச்சரியத்தை மட்டுமல்ல ஒருவித எரிச்சலையும் இப்போது உண்டாக்கத் தொடங்கியது..தற்கொலை என்பது,கோழைகளின்வழி என்பது எனது கருத்து. அதற்காக இந்த உலகத்தில் ‘கோழைகள்’இருக்க மாட்டார்கள் என்ற நினைப்பதும் தவறு என்றும் எனக்குத் தெரியும். அத்தோடு அவளின்’ கணவர்’ என்று எனக்குச் சொல்லியவருக்கு ஒரு குடும்பமும் குழந்தைகளும்; இருக்கிறதென்ற விபரமும் எனக்குத் தெரியாது.

அறையிலிருந்தபடி உலகத்துச் செய்திகளில் கொரொணாவின் பயங்கர தாக்கத்தைக் கேட்டு மனம் அதிர்ந்த வேளைகளில் ஹோட்டேலின் மொட்டைமாடிக்குச் சென்று சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும், பக்கத்துத் தோட்டத்தின் மரங்களில் வீடமைத்துக்கொண்டிருக்கும் பறவைகள், ஊர்ந்து திரியும் பல்லிகள், எறும்புகள் என்று எதையோவெல்லாம் புகைப்படமெடுத்துக்கொண்டிருப்பேன்.மழை நாட்களென்றால் ஹொட்டேலின் ஹாலில் வந்தமர்ந்து கொண்டு கிட்டத்தட்ட வெறுமையான தலைநகரின் பெருந்தெருவில்,அவசரசேவை, மக்களுக்கான உணவு சேவை என்று பல விதத்தில் அனுமதி பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சில வாகனங்களையும் கொரோணா காலத்திலும் வறுமையால் வெற்றுத் தெருக்களிலும் பிச்சைக்கு அலையும் ஏழைகளையும் பார்த்துப் பெரு மூச்ச விட்டுக் கொண்டிருப்பேன்.

நான் லண்டனிலிருந்து இங்கு வந்த சில நாட்களில், ஹொட்டேல் முன்னறையில் வெளியுலகத்தின் வெறுமையைத் தாங்காமல்; புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தபோது,அவள் வந்து தெருவை எட்டிப் பார்த்தாள்.

ஹோட்டேல் நிர்வாகி என்னைத் தவிர,இன்னும் இரு அறைகளில் மட்டும்தான விருந்தாளிகள் இருப்பதாகவும் சொன்னார்.

ஊரடங்குச் சட்டம் என்றபடியால் யாரும் ஹொட்டேலுக்கு வரமுடியாது என்பது தெரியும்.ஆனால்,அவள் யாரையோ எதிர்பார்ப்பது அவளின் முகபாவத்தில் தெரிந்தது.

‘தனியாகவா வந்திருக்கிறீர்கள்?’ அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.

‘தங்கைக்குச் சுகமில்லை,அவள் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருவதாகச் சொன்னதும் நான் லண்டனிலிநு;து வந்தேன்.அவள் ஹொஸ்பிட்டலில் சேர்ந்த அன்றுதான் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டது.அவளையும் பார்க்க முடியவில்லை. ஊருக்கும் போக முடியவில்லை’ என்றேன்.

எனது பெயர் சுலைகா, நாங்கள், கொழும்பில் வீடுபார்த்திருக்கிறோம்.வீட்டுக்குத் தளபாடங்கள் வாங்கச் சில நாட்கள் அலைந்தபோது ஊரடங்கு சட்டம் வந்து விட்டது.நான் இங்கு தங்க வேண்டி வந்துவிட்டது.இப்போது எனது கணவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.’ என்றாள்.

‘உங்கள் கணவர் ஏன் உங்களுடன் தங்கவில்லை?’

அவள் மறுமொழி சொல்ல முதல் அவளின்’கணவரின்’ கார் வருவதாகச் சொல்லி விட்டுச் சென்றாள்.

கொரோணா ஊரடங்குச் சட்டத்தால் நான் ஊருக்குத் திரும்ப முடியாமல் இந்த ஹோட்டெலில் அகப்பட்டுக்கொண்டபோது, இங்கு மூன்று அறைகளைத் தவிர மற்றவையெல்லாம் காலியாக இருந்தன. ஊரடங்கு சட்டம் வருவதால் ஹொட்டேலில் தங்கியிருந்த வெளிநாட்டார் அவசரமாக வெளியேறி விட்டார்கள் என்றும் கொழும்புக்கு வெளியேயிருந்து வந்த சில இலங்கையர்கள் மட்டும் இருப்பதாக ஹொட்டேல் மனேஜர் சொல்லியிருந்தார்.

‘கவனமாக இருங்கள்.’என்ற எனது குடும்பத்தினரதும் சினேகிதிகளிடமிருந்தும் ஒவ்வொரு நாளும் அன்பான வேண்டுகோள்கள் வந்து கொண்டிருந்தன.எனது குடும்பத்தைப் பிரிந்து கொழும்பில் அடைபட்டுக் கிடப்பது என்னை மிகவும் வருத்திக்கொண்டிருப்பதை ஒரு நாள் சுலைகாவிடம் சொன்னேன்.

அவள் அப்போது சமயலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள்.ஹொட்டேல் சமயல்காரர்கள்; ஊரடங்குச் சட்டத்தால் வரமுடியாததால், ஹொட்டேல் மனேஜரும் உதவியாளரும் அங்கிருக்கும் எங்களைப்போல் ஒருசிலருக்குச் சமைத்துத் தந்தார்கள்.சுலைகா அவர்களுக்கு உதவுவதாக நினைத்தேன்.

‘நானும் எனது குழந்தைகளைப் பற்றி நினைத்து சிலவேளை அழுவேன்’ அவள் மீன் கறியைச் சமைத்தபடி சொன்னாள்.

‘அவர்கள் யாருடன் இருக்கிறார்கள்’

‘அவர்களின் தகப்பனுடன் இருக்கிறார்கள்’.

‘அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் இங்கு தனியாகஇருக்கிறீர்கள்.’எனக்கு அவள் மிகவும் செலவு செய்துகொண்டு கொழும்பு ஹொட்டேலில் வாழ்வதன் விபரம் ஒன்றும் தெரியாது.

‘நான் அவர்களின் தகப்பனைப் பிரிந்து விட்டேன்.இப்போது ஒரு டாக்டரைத் திருமணம் செய்யப்போகிறேன்.அவருக்காகத்தான் இங்கு சமைக்கிறேன்.’என்றாள்.

என்ன சொல்கிறாள்? ஓரு டாக்டரைத் திருமணம் இனித்தான் செய்யப்போகிறாளா? அப்படியென்றால் ஒரு சில நாட்களுக்கு முன் வெளியில் எட்டிப் பார்த்துக்கொண்டு எனது ‘கணவரை’ எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றல்லவா எனக்குச் சொன்னாள்?

எனது குழப்பத்தை அன்று அவளிடம் கேட்கவில்லை.அது எனக்குத் தேவையில்லாத விடயமாகப்பட்டது.

இப்போது, சிங்கள தமிழ் புத்தாண்டு விழாவில் அவன் தனது குழந்தைகளுடன் இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறாள்.அது பொறுக்காமல் அவள் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள நினைத்ததாகச் சொல்கிறாள்.

கொரோணாவுக்குப் பயந்து அடைபட்டுக்கொண்டு இந்த ஹொட்டேலில் இருப்பதோ நான்குபேர் அதில் ஒருத்தி கொரோணாவைப் பற்றியோ தனது மூன்று குழந்தைகளைப் பற்றியோ எந்தவிதமான அக்கறையுமில்லாமல் ‘அவளது கணவர்'(?) புத்தாண்டில் தன்னுடன் இருக்கவில்லை என்பதால் தற்காலை செய்ய நினைத்ததாகச் சொல்கிறாள்;.

நான் அவளை ஏறிட்டுப் பார்த்தேன். மிகவும் ஆழமான சமயசிந்தனையுள்ளவள் என்று அவளின் ஆடைகளிலிருந்து தெரிந்தது.புத்தாண்டைத் தன் குழந்தைகளுடன் கொண்டாடும் இவளின் ‘கணவர்(?)’ யாராகவிருக்கும்?

‘அவர் ஒரு பௌத்த சிங்களவர்.’ என்றாள்.எனது மனதில் எழுந்த கேள்வி அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.இன்னும் தனது குடும்பத்துடன் வாழும் ஒருத்தனைத் தனது கணவன் எனறு எனக்குச் சொன்னாளா?

‘ஓ அப்படியா?’

‘ம்ம், அவரிடம் அவரின் குடும்பத்திலிருந்து விவாகரத்த எடுக்கச் சொல்லிப் பல வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.’

வெளியில் சரியான சூடு என்பது ஜன்னலைத் தாண்டி வந்த காற்றிலிருந்து தெரிந்தது..எனது மனதும் இனமறியாத வெப்பத்தில் கொதித்தது.

இவளுக்கு மூன்று குழந்தைகள்.அவனுக்கு இரண்டு பையன்களும் மனைவியும்?

சுலைகா தொடர்ந்தாள்.’அவருக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். மனைவி விவாகரத்துக் கொடுக்க மாட்டாளாம். அதனால் அவர் முடிந்தவரைத் தனது மகன்களைத் திருப்திப் படுத்துவதில் செலவழிக்கிறார். நான் ஒருத்தி எனது குடும்பத்தைப் பிரிந்து அவருக்காக வெளியே வந்து விட்டேன் என்பதை அவர் பெரிதாக எடுக்கவில்லை.’நேற்று நான் எனது துப்பட்டாவால் கழுத்தைச் சுற்றி மினவிசிறியில் தொங்கிச் சாக முயன்றேன் அதை அவருக்கு அனுப்ப ‘செல்பி’ எடுக்க முனைந்தபோது துப்பட்டா அறுந்து விட்டது.அதனால் எனது தற்கொலை தடைப்பட்டு விட்டது’

சுலைகாவின் பேச்சு எனக்கு இப்போது எரிச்சலைத் தந்தது. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

இந்த உலகமே கொரோணா வைராசால் நடுங்கிக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சமே பேதலித்துப்போயிருக்கும்போது, தனது ‘காதலன்(?)’ தன்னுடன் இரவு தங்கவில்லை என்பதற்காகத் தன் உயிரை விட நினைத்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒருபெண்ணை என்னவென்று புரிந்து கொள்வதென்று தெரியவில்லை.

அவள் இந்த உலகத்தில் நடக்கும் எதையும் புரிந்துகொள்ளாத ஒரு தனியுலகத்தில் வாழ்வது அவளின் பேச்சிலிருந்து புரிந்தது.

தனது காதலனுக்காகத் தனது உயிரையே பலியாக்க நினைத்த காரணம் என்னவாயிருக்கும் என்ற ஆய்வு செய்து கொண்டிருக்க விரும்பவில்லை. அவள் இன்னொருதரம் தற்கொலைக்கு முயலாமல் இருக்கவேண்டும் என்பதை அவளுக்கு அறிவுறுத்த வேண்டும்போலிருந்தது.

ஆனாலும் அவளின் தனிப் பட்ட வாழ்க்கையை விரிவாகக் கேட்கும் தேவை அப்போது இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதை அவளாகச் சொல்வாள் என்று எனக்குத் தெரிந்தது ஏனென்றால் அவள் மிகவும் குழம்பிப்போயிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.அன்றிரவு எனக்கு நித்திரை வரவில்லை.

எனது குடும்பத்தைப் பிரிந்து தாங்கமுடியாமல் வருந்துகொண்டிருந்தது மட்டுமல்லாமல் உலகைக் குலுக்கும் பயங்கர வைரசின் கோரத்தைக் கவனித்து நடுங்கிக் கொண்டிருந்த எனக்கு, காதலனுக்காக-அல்லது காமத்துக்காகத் தன்னைப் பலி கொடுக்கத் துடிக்கும் மூன்று குழந்தைகளின் தாயான இந்தப்பெண் எனக்குப் புரியாதவளாகத் தெரிந்தாள்.யாரோ ஒருத்தியின் கணவனை, இரு குழந்தைகளின் தகப்பனைத் தன்வயப் படுத்த நினைக்கும் இவளின் இந்த நடவடிக்கைகளக்குப் பின்னணியாக ஏதோ ஒரு பிரமாண்டமான காரணம் இருக்கவேண்டும் என்ற எனது அடிமனம் சொல்லியது.

அவளது தற்கொலை முயற்சி சரிவந்திருந்தால் அவளது குழந்தைகளின் துயர் எப்படியிருக்கும் என்பதை என்னால் முடிந்த அன்பான அறிவுரைகளால், மிகவும் கவனமாக எடுத்துரைத்தேன்.

அடுத்தநாள், மொட்டைமாடியில் வழக்கமாக எனது நடைப்பயிற்சியைச் செய்து கொண்டிருக்கும்போது, சுலைகா ஓடிவந்தாள்.

‘இதோபார்,எனது தவிப்பைப் புரிந்து கொள்ளாமல் எப்படி எழுதியிருக்கிறான்’ என்று சொல்லிக்கொண்டு அவளது காதலன் அனுப்பிய செய்தியை அவளது மோபலைலிருந்து காட்டினாள்.

‘அன்புடன் தினமும் பாலையூற்றி வளர்த்தாலும் அன்பு தெரியாத வி~ப் பாம்பு பால் கொடுத்தவனையே கடிக்கத் தயங்காது’ என்று அவன் செய்தி அனுப்பியிருந்தான்.

அதன் விளக்கம் தெரியாமல் அவளைப் பார்த்தேன்.

‘தனது காலைச்சுற்றிய நாகமாக என்னைப் பார்க்கிறான்’ அவள் வெடித்தாள்.

அவள் குரலில் அவனைப் பற்றிச் சொல்லவேண்டும் என்ற தொனி ஒலித்தது.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவளை அவன் தனது காமத்துக்காக வளைத்துப் பிடித்ததை இவள் காதல் என்று நினைத்துத் தனது கணவனையும் குழந்தைகளையும் தவிக்க விட்டு ஓடிவந்தாளா?

இருவரும் மொட்டை மாடியில் அமர்ந்தோம் பிரமாண்டமான கொழும்ப நகரின் உயர்ந்த கட்டிடங்களிலிருந்தும் தெருக்களிலிருமிருந்தும் வெளிச்சங்கள் யாருக்கும் பிரயோசனமில்லாமல் ஒளி பரப்பிக் கொண்டிருந்தது.

‘திருமணமாகிப் பிள்ளைகுட்டிகளுடனிருந்த நீ என்னவென்று இந்த சூழ்நிலைக்குள் தள்ளப் பட்டாய்?’ அவர்களின் மிகவும் சிக்கலான உறவை இதைவிட வேறுவிதமாகக் கேட்க எனக்குத் தெரியவில்லை.

அதாவது,மூன்று குழந்தைகளுக்குத் தாயான நீ,இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான அவனை என்னவென்று உனது வாழ்க்கைக்குள் நுழையவிட்டாய் என்பதுதான் எனது கேள்வியாகவிருந்தது.

‘ஓ,அவனை எனது இளவயதிலிருந்தெ தெரியும். பக்கத்துத் தெருவில் வசித்த குடும்பம். அவனது தாயும் எனது தாயும் ஒருகாலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள்.எப்போதாவது அவனைக் கண்டால்; ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியிருப்பேன்;.அவன் மெடிகல் கொலிஜ்சுக்குப் போன கால கட்டத்தில் எனக்குத் திருமணம் நடந்தது.எங்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்த காலத்தில் எங்கள் வாழ்க்கை நிலை மிகவும் கஸ்டமாகவிருந்தது. எனது கணவர் மத்திய தரைக் கடல் நாடொன்றுக்கு வேலைக்குப் போய்விட்டார். நான் ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்.;’ சுலைகா தனது கதையை இடையில் நிறுத்திவிட்டு அழத் தொடங்கினாள்.

நான் மௌனமாகவிருந்தேன்.கணவன் வெளி நாட்டில் வேலைக்குப்போனபின் அவள் மூன்று குழந்தைகளுடன் தனிமையான வாழ்க்கையுடன் போராடியிருப்பாளா?

‘ஆனால் கணவருக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. திரும்பி வந்துவிட்டார் அத்துடன் அவருக்கு உடம்பும் சரியாகவில்லை.நாங்கள் கணவரின் தமயனின் வீட்டில்; கொழும்பு நகரின் எல்லையில் கூட்டுக் குடும்பமாகவிருந்தோம். ஒருநாள் நான் வேலையால் திரும்பி வந்தபோத எனது ஏழுவயது மகள் அழுது கொண்டிருந்தாள்.அவள் ஏன் அழுகிறாள் என்று கேட்டபோது அவள் சொன்ன மறுமொழி என்னைப் பைத்தியமாக்கி விட்டது. சொந்தமென்ற இரத்த உறவொன்றே எனது சிறு பெண்ணைச் சீரழித்ததை என்னால் தாங்க முடியாதிருந்தது. அதைப் பற்றி யாரிடமும் சொல்ல முடியாது. சொன்னால், குழந்தைகளைக் கவனிக்காமல் வேலைக்குப் போகும் என்னைத்தான் எல்லாவற்றிற்கும் பழி சொல்வார்கள் என்று தெரியும்.’ சுலைகா என்னைப் பார்காமல் குனிந்திருந்த அழுதுகொண்டிருந்தாள்.

அவளின் கதை பரிதாபமாகவிருந்தது. கொஞ்ச நேரம் அழுது விட்டுப் பின்னர்; தனது கண்ணீரைத் துடைத்துவிட்டு அவள் தொடர்ந்தாள்.

‘அந்தக் காலகட்டத்தில், டாக்டர் ரஞ்சித்தைத் தற்செயலாகச் சந்தித்தேன்.சாதாரணமான விதத்தில் களங்கமற்ற விதத்தில் சுகம் விசாரித்தார்.அவரின் தொனியும் அன்பும் எனக்குப் பிடித்திருந்தது. அதன் பின் மீண்டும் ஒரு இடத்தில் தற்செயலாகச் சந்தித்தபோது கொஞ்சம் பேசினோம். காப்பி சாப்பிடக் கூப்பிட்டார். பிரியும்போது கொஞ்சம் பணம் தந்தார்.அவரின் டெலிபோனை நம்பரைக் கேட்டேன்’

அவள் தனது பார்வையை இருள் சூழும் வெளியுலகில் பதித்திருந்தாள். நாங்கள் இருந்த இடம் மிகவும் அமைதியாகவிருந்தது.பக்கத்திலிருந்த மரங்களிலிருந்து பறவைகள் அவ்வப்போது செல்லம் பண்ணின.

அவள் மீண்டும் தொடர்ந்தாள்.’ஒருநாள், எனது வாழ்க்கையை வெறுத்து எங்கோயோ ஓடவேண்டும் போலிருந்தது. டாக்டர் ரஞ்சித்துக்குப் போன் பண்ணி அழுதேன்.அவரின் குரல் மிகவும் கனிவாகவிருந்தது. ‘உங்கள் தோளில்முகம் புதைத்து அழவேண்டும் போலிருக்கிறது என்றேன்’ சுலைகா தனது பேச்சை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தாள்.

‘நான் என்ன நினைக்கிறேன் என்று பார்க்கிறாயா?’நான் மெல்லமாகக் கேட்டேன்.

அவள் ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள்.

அவனிடம் இவள் துக்கத்தைச் சொல்லியழ அவன்pன் தோளில் முகம் பதித்து அழவேண்டும் என்று சொன்னபின் என்ன நடந்திருக்கும்,தொடர்ந்திருக்கும்,என்பது இவள் அவனைத் தன்னுடன் இரவைக்கழிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நீட்சி கண்டிருக்கிறது என்பதை அவள் வார்த்தைகளால் வடிக்கத் தேவையில்லை.

‘நான் ஆங்கில நாட்டில் வாழ்கிறேன.அங்கு திருமணம் செய்தவர்கள் அவர்கள் வேலை செய்யுமிடத்தில் உள்ளவர்களுடன் பாலியல் ஈர்ப்பு வந்தால் தற்காலிக உறவை வைத்துக் கொள்வது நடப்பதுண்டு. ஒருசிலர் தங்கள் திருமணத்தையே உதறி விட்டுப் புதிய உறவுக்களுக்குள்; தங்களைப் புதைத்துக் கொள்வார்கள்.ஆனால் பெரும்பாலோர்;, ஒரு சில தடவைகளுடன் தங்கள் தொடர்புகளை நிறுத்திவிட்டுத் தங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள்’,நான் அவளுக்குச் சொன்னேன்..

‘நான் அப்படி அவரை மறக்க முடியாது. எனது வாழக்கைக்கு உதவி செய்ய யாரும் கிடையாது.’ சுலைகாவின் குரலில் அவனைக் குற்றம் சாட்டும் தொனி ஓங்காரமாக ஒலித்தது.

‘அதாவது,இப்போது இந்த ஹொட்டேல் வாழ்க்கைக்குச் செலவளிப்பதுபோல் உனது ஆயுள்பூராவும் அவனின் பொருளாதார உதவி தேவை என்கிறாயா?’

இன்னொருத்தியின் கணவருடன் உறவிருப்பதின் பலாபலன் தெரியாமல் சுலைகா எதிர்காலக் கனவு காண்பது ஆச்சரியமாகவிருந்தது.

‘சுலைகா,காதலும் காமமும் இருதுருவங்கள். அவனிடம் பணமிருக்கிறது.உன்னிடம் அவனுக்குத் தேவையான சுகம் கிடைக்கிறது.இதற்குமேல் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாய்’ அவளில் எனக்குப் பரிதாபம் வந்தது.

‘அவனிடம் பத்துவருடமாக என்னைக் கொடுத்திருக்கிறேன்.அது தெரிந்தவுடன் எனது கணவர் என்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். எனக்கு இவரை விட்டால் வழியில்லை’சுலைகா இன்னொருதரம் ஆவேசக் குரலை எழுப்பினாள்.

பத்து வருடங்கள் கணவருக்குத் தெரியாமல் தன்னுடன் உறவு வைத்தவளை நம்பி அவன் இவளுக்காகத் தனது மனைவி மகன்களை உதறவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு அறியாமை?.

‘ஏன் அவனை இவ்வளவுதூரம் இறுக்கிப் பிடிக்கப் பார்க்கிறாய்?’அவளைக் கேட்டேன்.

‘என்னைச் சரியாக நடத்தாத குடும்பத்திற்கு நான் ஒரு டாக்டரின் மனைவியாகிக் காட்டவேண்டும். எனது குழந்தைகளுக்கு அவர்கள் ஒரு டாக்டரின் குழந்தைகள் என்ற பெயர் வேண்டும்’

‘உன்னடைய காதலன் ஒரு பௌத்த சிங்களவன். புத்தாண்டுக்குப் பிக்குகளின் பிரார்த்தனைக்குப் போனதாகக் கோபப் பட்டுத்; துப்பட்டாவில் தொங்க நினைத்த நீ அவன் ஒரு இஸ்லாமியனாக மாறி உன் குழந்தைகளை ஏற்றுக் கொள்வான் என்ற நினைக்கிறாயா’

சுலைகா தனது தலையைத் துப்பட்டாவால் மூடிக்கொண்டாள் ‘அல்லாவிடம் அப்படி நடக்கவேண்டும் என்ற பிரார்த்திக்கிறேன்.அது நடக்கும். ஐ லவ் ஹிம் வெரி மச்’

‘அவன் உன்னைக் காதலிப்பதாக சொன்னானா’ நான் நேரடியாகக் கேட்டேன்.அவள் மறுமொழி சொல்லாமல் எழுந்தாள்.

அடுத்த சிலநாட்களின் பின் அவனின் கார் வந்தது. எனது அறைவழியாக எட்டிப் பார்த்தேன் அவன் ஒன்றும் வாட்டசாட்டமான ஆணழகனில்லை. சோர்ந்து தெரிந்த ஐந்தடி மூன்று அங்குலமள்ள ஒரு சின்ன டாக்டர்.

அவள் தனது அறையால் ஓடிவந்து அவனை அன்புடன் வரவேற்றாள். அவள் முகத்தில் கோபமில்லை.

ஒருநாள் அவள் முகத்தில் பரபரப்புடன் தனது காதலனுக்குச் சமைத்துக் கொண்டிருந்தாள்.என்னைக் கண்டதும்,

‘ஓ எனது பழைய கணவர் நெஞ்சு நோ என்று வைத்தியசாலைக்குக் கொண்டுபோகப் பட்டிருக்கிறார். எனது மூத்தமகள் அவருடன் நிற்கிறாள்’என்று சொன்னாள்.குரலில் ஒரு பதட்டமும் கிடையாது.

‘ஐயோ பாவம் இளம் பெண் குழந்தை.நோயாளியான தகப்பனுடன் தவிக்கப் போகிறாள்; நீ போகவில்லையா’?

நான் பரபரத்துக் கேட்டேன் பாவம்.இவளின் மகளான அந்த இளம் பெண். அவளுக்குப் பதினாறு வயது என்று சுலைகா சொன்னது ஞாபகம் வந்தது.

‘இல்லை,நான் டாக்டருக்குச் சமைத்துக்கொண்டிருக்கிறேன்.வைத்தியசாலையில் என்மகளுடன் அவளின் தகப்பனின் சொந்தக்காரர் யாரும் நிற்பார்கள்’.

‘அந்தத் தகப்பனுக்கு ஏதும் நடந்தால் உன் குழந்தைகளின் கதி என்ன?’

சுலைகா மறுமொழி சொல்லவில்லை.

அவளின் முதல்க் கணவர் இறந்துவிட்டால் அதைக் காரணம் காட்டி அவளின் காதலனிடம்; தன்னைக் கட்டாயம் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தப் போகிறாளா?

வெளியுலகில் கோரோணா மனிதரைப் படாதபாடுத்தி வாழ்க்கையை நாசம் செய்கிறது. சிலரின் மனதில் வரும் காமம் என்ற வைரஸால் பலரின் வாழ்க்கையே ஒட்டுமொத்தமாக நாசமாகிறதா?;

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *