கொசுத்தொல்லை அறுபது வருஷத்துக்கு முன்பும் இருந்தது. இன்று இருப்பதற்கு அப்போது இருந்த கொசுத்தொல்லை ஒன்றுமே இல்லை.
ஆனால் அறுபது வருடத்திற்கு முன்னால் அந்தக் கொசுக்கடியே மிகவும் கஷ்டமாக இருந்தது. பொதுவாக மத்தியான நேரங்களில் கொசுக்கடி இருக்காது. சாயந்திரம் ஆனதும் கொஞ்சம் கொஞ்சமாக கொசுக்கள் வரத்தொடங்கி விடும். ராத்திரியாகும் போது அவற்றின் எண்ணிக்கை அதிகமாகும். நிம்மதியாகத் தூங்க முடியாதபடி கை, கால், முகம் எல்லாம் கடித்துத் தொல்லை தரும்.
ஆனால் அறுபது வருடத்திற்கு முன்பு கொசுக் கடியையோ அதன் தொல்லையில் இருந்து தப்பித்துக் கொள்வதைப் பற்றியோ யாரும் பெரியதாக முயற்சி எதையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்போது யாருமே கொசுத் தொல்லையை அத்தனை தீவிரமாக பொருட்படுத்துவது கிடையாது. வாழ்க்கையின் ஒரு இயல்பான தினசரி அம்சம் மாதிரி கொசுத் தொல்லை அன்று இருந்து கொண்டிருந்தது.
அனால் எங்கள் வீட்டில் என் அப்பா கொசுத் தொல்லையை இயல்பான அம்சமாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லா விஷயத்திலும் சுத்தம் சுகாதாரம் என்ற கவனமும் அக்கறையும் உள்ளவர் என் அப்பா. கொசுத் தொல்லையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.
அறுபது வருடத்திற்கு முந்தைய அந்த என் சின்ன வயதிலேயே எங்கள் வீட்டில் எல்லோருக்கும் தனித்தனி படுக்கை அறைகள் இருந்தன. எங்கள் அம்மா அப்பாவிற்கு மட்டும் அவர்களின் படுக்கை அறையில் படுத்துக் கொள்வதற்குப் பெரிய அகலமான கட்டில் இருக்கும். எங்களுக்குக் கட்டில் கிடையாது. தரையில் விரிக்கபட்ட படுக்கைகளில் நாங்கள் படுத்துக் கொள்வோம்.
சாயந்திரம் வேலைகள் முடிந்து வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் எங்கள் வீட்டு வேலைக்காரியின் கடைசி வேலை, எங்கள் எல்லோருடைய படுக்கைகளையும் அவரவர் அறைகளில் நேர்த்தியாக விரித்து வைப்பது. சிறிதுகூட கோணல் மாணலாக இல்லாமல் நீவிவிடப்பட்டு படுக்கை விரிப்புகள் கச்சிதமாக அழகாக விரிக்கப் பட்டிருக்க வேண்டும். எந்த ஜமக்காளமோ அல்லது படுக்கை விரிப்போ கொஞ்சமும் சுருங்கியோ கலைந்தோ இருக்கக் கூடாது. எங்கள் படுக்கை அறைகள் மாடியில்.
வேலைக்காரப் பெண் மாடிக்குப் போய் எல்லோருடைய படுக்கைகளையும் நேர்த்தியாக விரித்துப் போட்டுவிட்டதாக வந்து சொன்னதும், என் அப்பா மாடிக்குப் போய்ப் பார்ப்பார். படுக்கைகள் செம்மையாக விரிக்கப் பட்டிருந்தால் மட்டும்தான் அந்தப் பெண்ணை என் அப்பா அவளுடைய வீட்டிற்குப் போக அனுமதிப்பார். அப்படி இல்லாவிட்டால் செம்மையாக படுக்கைகள் விரிக்கப்படும் வரை வேலைக்காரியை அப்பா வேலை வாங்குவார்.
வீட்டில் சுவர்க் கடிகாரம் எட்டுமணி அடிக்கும்போது நாங்கள் அனைவரும் இரவுச் சாப்பாட்டிற்கு அமர்வோம். சாப்பிட்டு முடித்த கையோடு முதலில் என் அப்பா மட்டும் மாடிக்கு ஏறிப்போவார். அறுபது வருடத்திற்கு முன்னால் இன்றைக்கு இருப்பது மாதிரி கொசுக்கடிக்கு எதிரான விதவிதமான விஷ ரசாயனப் பொருட்கள் கிடையாது.
ப்ளிட் என்ற பெயரில் ஒரு ரசாயன திரவம் விற்பனையில் இருந்தது. அந்த மருந்தையும் நூற்றில் ஒரு வீட்டிலாவது உபயோகித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். சில வீடுகளில் கொசு வீட்டிற்குள் வராமல் இருக்க வேரோடு பறித்த கற்றாழைச் செடிகளை கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். கற்றாழையின் வாசனைக்கு கொசு வராது என்பார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அப்பா கொசுவிற்கு எதிராக ப்ளிட் என்ற திரவ மருந்தை உபயோகப் படுத்துவார்.
இரவுச் சாப்பாடு முடிந்ததும் அப்பா மட்டும் மாடிக்குப் போவார். நாங்கள் யாரும் அப்போது மாடிக்குப் போகக்கூடாது. அப்பாவின் உத்திரவு இது. மாடியில் ஒரு அடி நீளத்திற்கு அழகான சிவப்பு நிறத் தகரக் குழாய் பொருத்தப்பட்ட வட்டமான டப்பாவிற்குள் ஊற்றி வைக்கப் பட்டிருக்கும் அந்த ப்ளிட் என்ற மருந்தை எங்களுடைய படுக்கை அறைகளில் சர் சர்ரென்று இண்டு இடுக்கு விடாமல் பீய்ச்சி அடிப்பார். அதன் நெடியிலும் நச்சுத் தன்மையிலும் கொசுக்கள் உடனே சுருண்டு விழுந்து செத்துப் போய்விடும்.
விற்பனைக்காக அந்த மருந்தை அடைத்து வைத்திருக்கும் சப்பையான பெரிய டப்பாவில், அந்த மருந்தால் கொசுக்கள் எப்படி தலைகீழாக விழுந்து செத்துக் கிடக்கும் என்பதை வரிசையாக படங்களாகப் போட்டுக் காட்டப்பட்டிருக்கும். அந்த டப்பாவை தொட்டுப் பார்க்கக்கூட எங்களை விடமாட்டார் அப்பா. மாடி அறைகளில் கொசு மருந்தை அவர் பீய்ச்சி அடித்து அரை மணிநேரம் சென்ற பிறகுதான் போய்ப் படுத்துக்கொள்ள எங்களை அனுமதிப்பார். லேசாக நெடியடித்துக் கொண்டிருக்கும் ப்ளிட் மருந்தின் வாசனை, கொசு கடிக்காது என்ற நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் எங்களுக்குக் கொடுக்கும்.
உடனே தூக்கமும் வந்துவிடும். பிறகு காலை ஆறரை மணிக்குத்தான் எனக்கு தூக்கம் கலையும். ஆனால் என் அம்மா அப்பாவின் கதை வேறு மாதிரி. ராத்திரி இரண்டு மணிவரை கொசுக்கடி இல்லாமல் நிம்மதியாக அவர்களால் தூங்க முடியும். அதற்குமேல் அந்தக் கொசு மருந்தின் நெடி பூராவும் காற்றில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, மருந்தின் வாசனையே இல்லாமல் போய்விடும். கொசுக்கள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கிவிடும். அதனால் என் அம்மாவும் அப்பாவும் தூக்கம் கலைந்து எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்து விடுவார்களாம்.
நானும் கொசுக்கடியால் கையையும் காலையும் சொறிந்தபடியேதான், ஆனால் தூக்கம் கலையாமல் படுக்கையில் புரண்டபடி கிடப்பேனாம். மறுபடியும் அந்த நேரத்தில் கொசு மருந்தை எடுத்து அடித்துக் கொண்டிருப்பது அப்பாவிற்கு சரிப்படாததாக இருந்திருக்கிறது. அதேநேரம் கொசுக் கடியும் எரிச்சலைத் தந்தது. இந்தப் பிரச்சினை முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது. பிரச்சினை மழைக்காலத்தில் ரொம்ப மோசமாகிவிடும். கொசுக் கூட்டம் பெரிய படை மாதிரி வரும்.
என் அப்பா கொசு மருந்து அடித்து அடித்து ஒரு மாதிரி களைத்துப் போயிருந்தார். மருந்து அடிப்பதில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் அவரில் குன்றிப்போனது. என்ன செய்யலாம் என்று யோசித்தார். கொசுவலையை கட்டித் தூங்குவதுதான் சிறந்த வழி எனத் தெரிந்தது. எங்கள் வீட்டில் அப்போது கொசுவலை என்பதே கிடையாது. ஆனால் எங்கள் வீட்டில் எல்லா ஜன்னல்களுக்கும் திரைச்சீலை தொங்க விடப்பட்டிருந்தது.
வீட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குச் செல்கிற இடங்களில் இருக்கிற ஒவ்வொரு நிலைப்படியிலும்கூட திரைகள் இருக்கும். கலை நயத்துடன் அவைகளைத் தேர்வு செய்து அவற்றை எல்லாம் வாங்குவது எப்போதுமே என் அப்பாதான். அவரின் தேர்வுகள் அழகாக இருக்கும். இத்தனை நாட்களும் கொசுவலை வாங்கி உபயோகிக்கலாம் என்ற யோசனையே இல்லாமல் போய்விட்டதே என்ற அங்கலாய்ப்புடன் அப்பா உடனே அதற்கான வேளைகளில் இறங்கிவிட்டார்.
அறுபது வருடங்களுக்கு முன்னால் ரெடிமேடாக கொசுவலைகள் விற்பனைக்கு கிடைத்ததா என்பது தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அது கிடைக்கவில்லை. துணியாக வாங்கித் தைத்துக் கொள்ளலாம் என்றால், அதற்கான துணியும் எங்கள் ஊரில் கிடைக்கவில்லை. அவ்வளவு சின்ன ஊர்.
அதனால் துணி வாங்கிவர எங்கள் வீட்டிற்குத் தேவையான உடைகள் எல்லாவற்றையும் தைக்கும் டெய்லர் சிவன்பிள்ளை என்பவரை கூட்டிக்கொண்டு மதுரைக்குக் கிளம்பிவிட்டார் என் அப்பா…