கையூட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 1,640 
 
 

என் பணியிட்த்தை மாற்றி விட்டார்கள், இந்த அலுவலகத்திலேயோ, அல்லது அலுவலகம் வரும் மக்களில் யாராவது மொட்டை கடிதாசி போட்டிருப்பார்கள், அதுதான் தூக்கி விட்டார்கள். நான் கவலைப்படவில்லை. என்ன ஒரு வருத்தம், என்னுடனே இருந்து நான் வாங்கும் லஞ்சப்பணத்தில் பங்கு போட்டு வாங்கி கொண்டு என்னையே இப்படி காட்டி கொடுத்து இவர்கள் நல்லவர்கள் ஆகி விடுகிறார்களே என்ற எண்ணம்தான்.

நான் இந்த அரசு நிர்வாக துறையின் பொறுப்பில் இருந்து வருபவர்களிடமிருந்து வாங்கும் லஞ்சப்பணம எல்லாவற்றையும் நானேவா கொண்டு போகிறேன். இங்கு வரும் மந்திரி மார்களுக்கும் அவர்களுடன் வரும் அரசியல் கைத்தடிகளுக்கெல்லாம் எப்படி செலவு செய்வது? இவர்களுக்கு செலவு செய்ய நான் என் சொந்த காசையா செலவழிக்க முடியும்? இல்லை அவர்கள்தான் தங்களது சொந்த காசை செலவழித்து வந்து செல்வார்களா?

அவர்களுக்கு என்ன.? ஒரு விருந்தினர் அறையில் அவர்களுடன் வரும் அரசியல்வாதிகளுடன் உட்கார்ந்து கொள்வார்கள். இவர்களுக்கு சாப்பிடுவதிலிருந்து மற்றவைகள் வரை நான் மற்றவர்களிடம் லஞ்சமாக

சமபாரித்து வைத்திருக்கும் பணத்தை தான் தண்ணீராய் செலவழித்து கொண்டிருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த மாதிரி சூழ்நிலை வரும்போது மந்திரி முதல் அவருடன் இருக்கும் அரசியல்வாதிகள் வரை சுலபமாய் என்னை கை கழுவி விட்டு விடுகிறார்கள்..

புதிய இடம் என்றாலும் மேல் வருமானத்திற்கு இங்கும் வழியிருக்கும் என்று தெரிந்தவுடன் மனம் சமாதானாமாகி விட்டது. வெளியில் அபூபக்கர் என்னும் ஒருவரை அலுவலக உதவியாளன் அறிமுகப்படுத்தினான். அவர்தான் இங்கு எல்லாம். நமக்கும் வரும் பார்ட்டிக்கும் பாலமாக இருப்பவர், ஜாடைமாடையாக சொன்னான்.

அபூபக்கரை பார்த்தேன். வயது நாற்பதுக்கு மேல் இருக்கலாம், அமைதியாக தோற்றமளித்தார். சார் இங்க முன்ன இருந்த ஆபிசர் நல்ல மனுசன், வந்து ஒரு வருசம்தான் ஆச்சு அதுக்குள்ள மாத்திட்டாங்க., இப்படி சொன்னவரை கூர்ந்து பார்த்தேன். ஏன் அபூ ஏதாவது உனக்கு பாக்கி இருக்கா? என்னிடமிருந்து வந்த கேள்வியை புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது அபூபக்கருக்கு. அச்சோ அதெல்லாம் இல்லைங்க சார், பொதுவா சொன்னேன், அவ்வளவுதான்.

நான்கைந்து மாதங்கள் ஓடி விட்டன. இப்பொழுது எனக்கு எல்லாம் அபூபக்கர்தான். எனக்கு வரவேண்டிய தொகையானாலும் சரி அலுவலக நண்பர்களுக்கு வரவேண்டிய தொகையானாலும் சரி, தவறாது கைக்கு கொண்டு வந்து சேர்த்திடுவார். நானோ அலுவலகமோ பார்த்து கொடுக்கும் தொகையை பெற்று கொள்வார்..

இரண்டு நாட்களாக அபூபக்கர் வரவில்லை. எங்கள் அனைவருக்குமே தடுமாற்றமாகி விட்டது. வரும் மக்கள் நேரடியாக எங்களை அணுகுவதால் எங்களுக்கு அவர்களிடம் இவ்வளவு வேண்டும் என்று வாய் விட்டு கேட்க

முடியாத நிலைமை. சரி அவர்கள் கேட்பதை அப்புறம் வர சொல்லி தள்ளி போடலாம் என்றால் முரண்டு பிடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு சிலர் சண்டைக்கே வந்தார்கள்.அலுவலக உதவியாளனை அழைத்து அப்பா என்னாச்சு? அந்த அபூபக்கருக்கு பார்த்துட்டு வா, வீட்டுக்கு அனுப்பினேன். சார் காய்ச்சல்ல படுத்து கிட்டிருக்காரு, நாளைக்கு வந்துடறேன்னு சொன்னாரு.

எனக்கு சிரிப்பு வந்தது, அரசாங்க உத்தியோகம் நாங்கள் இல்லாமல் கூட நடக்கும் போலிருக்கிறது, இந்த மாதிரி ஆட்கள் இல்லாமல் நடக்க முடிவதில்லை, என்ன செய்வது? அலுவலக உதவியாளன் கொண்டு வந்த பைல்களை பார்த்து பார்த்து கையொப்பமிட்டேன். இதுக்கெல்லாம் வருமானம் வந்ததா? இல்லையா என்ற கவலையிலேயே கையெழுத்தை போட்டேன். அபூபக்கர் இருந்தால் வருமானம் வரும் பைல்கள் என்று தனியாக குறிப்பு ஒன்றை காட்டி வைத்து விடுவார். கவலைப்படாமல் கையெழுத்து போட்டு விடுவேன். அபூபக்கரை போலவே இன்னும் இரண்டு மூணு பேர் இருக்கிறார்கள், இருந்தாலும் அவரை நம்புவதை போல மற்றவரை நமப் முடிவதில்லை. வருமானத்தையும் குறைத்து கொடுக்கிறார்கள்.

மாலை அலுவலகம் முடிந்து அறையில் சும்மா உட்கார்ந்திருந்தேன். திடீரென்று அபூபக்கரை பார்த்து வரலாமா? என்ற ஒரு எண்ணம். அரசாங்க அதிகாரி இந்த மாதிரி ஆட்கள் வீட்டுக்கு சென்றால் அது நாளைக்கு பிரச்சினை கூட ஆகலாம், இந்த பயம் இருந்தாலும், இருட்டாகி விட்ட்து, மெல்ல நடப்போம், அந்த நகரத்து பரபரப்பில் காலாற நடந்தேன், அலுவலக உதவியாளன் எற்கனவே அபூபக்கர் வீடு இருக்குமிடத்தை சொல்லி இருந்தான்.

அந்த இடத்தில் தெரு விளக்கு எரியாததால் இருட்டாக இருந்தது. தடுமாறினேன். வலது பக்க முனை திரும்பியதும் ஒரு சந்து வரும் என்று சொல்லி இருந்தான், ஞாபகமாய் திரும்பி அந்த சந்தை கண்டு பிடித்தேன். இரு சக்கர வாகன்ங்கள் மட்டுமே நுழைய முடியும், அப்படி இருந்தது அந்த பாதை.எப்படியோ அங்கிருந்த சாக்கடையை தாண்டி வரிசையாய் இருந்த வீடுகளில் அடையாளம் சொன்ன வீட்டை கண்டு பிடித்து கதவை தட்டினேன்.

கதவை தட்டியதும் கதவை திறந்த பெண் என்னை கண்டவுடன் சட்டென்று முக்காட்டை தலை மீது போட்டு கொண்டு தன் கணவனை அழைத்தாள். யாரோ வந்திருக்கிறார்கள் உங்களை தேடி, அவள் உருதுவில் சொன்னது எனக்கு புரிந்தது.

கைலியுடன் வெளியே வந்த அபூபக்கர் இரண்டு நாள் காய்ச்சலில் வதங்கி இருந்தது தெரிந்தது. என்னை கண்டவுடன் சற்று தடுமாறி சார் நீங்களா? குரலில் ஆச்சர்யம், வாங்க வாங்க உட்காருங்க, அங்கிருந்த பழைய ஸ்டூலை இழுத்து உட்கார சொன்னார். பரவாயில்லை என்று வாய் சொன்னாலும், கொஞ்ச தூரம் நடந்து வந்த களைப்பு காரணமாய் உட்கார்ந்து கொண்டேன்.

எப்படி இருக்கறீங்க? கேட்டவனுக்கு அப்பொழுதுதான் ஏதாவது வாங்கி வந்திருக்கலாம் என்று தோன்றியது. சே..என்ன மறதி, என்னையே மனதுக்குள் திட்டிக்கொண்டேன். இப்ப பரவாயில்லை சார், நாளைக்கு வந்திடறேன், நான் வந்திருந்த வியப்பு மாறாமலேயே சார் ஒரு நிமிசம் காப்பியா? டீயா? கேட்டவுடன் நான் அதெல்லாம் வேண்டாம், புது இடம், எனக்கு ரூமுக்குள்ள உட்கார்ந்து

பொழுது போகலை, அதுதான் உங்களை பார்த்துட்டு போகலாமுன்னு வந்தேன். நீங்க வேற எதுவும் சொல்ல வேண்டாம், ஆமா குழந்தைகள்?..இழுத்தேன்.

உள்ளே இருக்காங்க சார்..கூபிடறேன், அவர் கூப்பிடும் குரல் கேட்டவுடன் வெளியே வந்த இரு பெண் குழந்தைள் அச்சு அசலாய் ஒரே மாதிரி பத்து வயதுக்குள் இருக்கலாம் வெட்கத்தில் நெளிந்து வளைந்து கொண்டு வந்தன. எந்த ஸ்டேண்டர்டு படிக்கிறாங்க?

இரண்டு பேருமே அஞ்சாம் கிளாஸ் படிக்கிறாங்க, பையன் ஒண்ணு இப்பத்தான் பிறந்திருக்கான், குரலில் வெட்கம்.

ரொம்ப சந்தோஷம் மெல்ல எழுந்தேன், நான் ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கணும், மறந்துட்டேன், தப்பா நினைச்சுக்காதீங்க, என்று இரு குழந்தைகளையும் அழைத்து ஆளுக்கு நூறு ரூபாய் கையில் கொடுத்தேன்.

சார் இதெல்லாம் வேண்டாம், வேண்டாம் பதட்டப்பட்ட அபூபக்கரை கூர்ந்து பார்த்தேன், ஏன் வேண்டாங்கறீங்க இது லஞ்ச பணமுன்னு நினைக்கிறீங்களா?

மன்னிச்சுக்குங்க சார், தப்பா நினைச்சுக்காதீங்க, நான் புரோக்கரா இருந்தாலும், இப்படி ஒரு பாலிசி வச்சிருக்கேன் சார், வர்றவங்க கிட்டே உங்களுக்குன்னு வாங்கினாலும் அதுல இருந்து ஒரு பைசா கூட எடுத்துக்க மாட்டேன். நீங்க கொடுக்கிறதை அந்த வேலைக்கு கூலியா நினைச்சு வாங்கிக்குவேன் சார் அபூபக்கரின் குரல் தேய்ந்தது,

எனக்கு தெரியும் அபூபக்கர், உங்க பாலிசி. நீங்க பணம் வாங்கி எங்களுக்கு கொடுத்தாலும் நாங்க கொடுக்கற பணத்தைத்தான் செஞ்ச வேலைக்கு கூலியா நினைச்சு வாங்கிக்கறீங்க, அப்படீங்கறதை எங்க ஆபிசுல சொல்லீட்டாங்க, அதுனாலதான் உங்களுக்கு உடம்பு சரியில்லையின்னதும் உங்களை ஒரு புரோக்கரா நினைக்காம, சக தோழனா நான் உங்களை பார்க்க வந்தது. இந்த பணம் என்னோட சொந்த பணம், இதை கண்டிப்பா நீங்க வாங்கிக்கலாம்.

வாங்கிக்குறேன் சார், தப்பா நினைச்சுக்காதீங்க, நான் புரோக்கரா இருந்தாலும், இப்படி ஒரு பாலிசி வச்சிருக்கேன் சார்.

மறுப்பு சொல்லியும் கேட்காமல் அவர்கள் கொண்டு வந்து கொடுத்த காப்பியை குடித்து விட்டு வெளியே வந்தேன். மணி பத்து இருக்கலாம், ஜிலு ஜிலு வென காற்று உடலை வருட மழை வரும் என நினைத்து நடையை எட்டி போடுகிறேன்.

வருமானம், வருமானம், நான் செய்யும் பணிக்கு அரசு தரும் ஊதியம் தவிர பல வழிகளில் வரும் வருமானம், எத்தனையை கொண்டு வீட்டில் கொட்டினாலும் பற்றவில்லை, பற்றவில்லை எனறு மனைவியின் பாட்டு, ஊருக்குள் நான்கைந்து வீடுகள்,கொஞ்சம் நிலபுலன்கள், இத்தனையும் சம்பாதித்தும் இன்னும் வேட்டையாடத்தான் மனசு சொல்கிறதே தவிர விட்டு கொடுக்க நினைப்பதில்லை. அபூபக்கரை நினைத்து பார்க்கிறேன், அவருக்கு இது ஒரு வேலை. அதற்கு கூலி நாங்கள் கொடுக்கும் கொஞ்சம் பணம், இதை கூலியாக நினைத்து குடும்பம் நடத்தும் அபூபக்கரின் குடும்பம் சந்தோசமாகத்தான் இருக்கிறது.

இத்தனை வருமானம் வந்தும் எனது வீட்டில் இப்பொழுதும் ஒலிக்கும் குரல் இன்னும் தேவை என்பதுதான், இதனால் இன்னும் எத்தனை இடங்களுக்கு என்னை மாற்றி அரசு தண்டனை கொடுத்து கொண்டிருக்க போகிறதோ?. எனக்குள் நினைத்துக் கொண்டே தங்கியிருக்கும் அறையை அடைந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *