(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சேகருக்கு நாலைந்து நாட்களாகவே வேலையில்லாமல் இருந்தது. தினமும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தவனுக்கு வேலையில்லாமல் போய் விட்டதால் சோர்ந்து மூலையில் உட்கார்ந்து விட்டான். தினக் கூலியில் கிடைத்து வந்த சொற்ப வருமானத்தில் தான் தினமும் தன் வயிற்றையும், மனைவி வயிற்றையும் கழுவி வந்தான்.
நாலைந்து நாட்களாகவே அதற்கு வழியில்லாமல் போய்விட்டாலும், வழக்கமாக வாங்கும் கடைகளிலே கடனாக அரிசி மற்றும் இதர சமையல் பொருள்களையும் வாங்கி வந்து நாட்களைக் கடத்தினான். அதுவும் சில நாட்களிலேயே தீர்ந்துவிட்டது. கையிலே காசும் இல்லை. வேலையும் கிடைத்தபாடில்லை.
அன்றைய சமையலுக்கு என்ன செய்வதென்று புரியாமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் கடையில் இனிமேலும் கடன் கேட்பதற்கும் வழியில்லாமல் இருந்தது! அடுத்த வீடு, எதிர்வீடு என்று உதவி கேட்கலாம் என்றாலும் அவர்களும் வசதியானவர்கள் அல்ல. தினக்கூலிகள் தான்! பஞ்சப்பாட்டுத்தான்!
இந்த நிலையில் தான் திடீரென்று உறவினர்கள் வந்தார்கள் வேறு யாருமல்ல சேகரின் தங்கையும், தங்கையின் கணவரும்தாம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் அண்ணனைக் காண வந்திருந்தாள்! தன் தங்கையைக் கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியுற்றான் என்றாலும் சற்று கலவரமும் அடைந்தான்.
கையில் காசு இல்லாததில் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சமையலுக்கு என்ன செய்வதென்று குழம்பித் தவித்தான்.
நிலைமையைப் புரிந்து கொண்ட அவனது மனைவி அவனிடம் பணம் கொடுத்து, அரிசி மற்றும் இதரப் பொருள்களையும் வாங்கி வரச் சொன்னாள்.
பணம் அவளுக்கு எப்படி வந்தது என்று அவளிடம் வினவினான். அதற்கு அவள்,
‘நான் உண்டியலிலே அன்றன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமா சிறுவாடு சேர்த்து, ஒரு சேலை எடுக்கலாமுன்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ளே அந்தக் காசுக்கு அவசரம் வந்துடுச்சு, அதான் உண்டியலை உடைச்சிட்டேன். உங்க மானமும், கௌரவத்தையும் விட வேறென்ன எனக்கு முக்கியம்!’ என சொல்லி முடித்தாள்,
அவன் கண்களில் சிறிதாக நீர்த் திவலை எட்டிப் பார்க்க, அவளை இறுக அணைத்துக் கொண்டான். இப்போது அவள், அவன் மனதில் நிறைவாக இருந்தாள்!
– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்