கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2022
பார்வையிட்டோர்: 6,736 
 
 

அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு பெயர் உங்களுக்குத்தேவை என்றால் சூட்டிக்கொள்ளலாம்” என்றான் வழிகாட்டி. “தேவையில்லை, கெய்ஷா என்ற சொல்லே ஒரு பெயர் போலத்தான் இருக்கிறது” என்றேன். “ஒரு கெய்ஷாவின் பெயரைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் எதையும் அறிந்துகொள்ளமுடியாது” என்றான். அந்த எண்ணம் எனக்கு இருக்கவுமில்லை

கெய்ஷாக்கள் பழைய ஜப்பானிய அரசாட்சிக் காலத்தில் பிரபுக்களை உபசரிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர்குடித் தாசிகள். கெய்ஷா என்றால் கலைபயின்றவள், அளிப்பவள் என்று பொருள். ஆணை மகிழ்விக்கும் கலையை ஆயிரம் வருடங்களாக கற்றுத் தேர்ந்தவர்கள். காமத்தை கலைகளாக விரித்து விரித்துச் செல்லும்போதும் அனைத்து முனைகளிலும் ஆணின் அகங்காரத்தையும் நிறைவு செய்யப்பயின்றவர்கள். நமது குலப்பெண்கள் ஆணின் அகங்காரத்தை அலட்சியம் செய்வதற்கு ஓரிரு வருடங்களிலேயே பழகிவிடுகிறார்கள்.

கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கையில் பணத்துடன் ஜப்பானுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தக் கனவு விதைக்கப்பட்டிருக்கும். அங்கு உயர்மட்டச் சுற்றுலா பயணிகளிடம் உள்ளூர் வழிகாட்டிகள் ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகிதப் பொம்மைக் கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான சுற்றுலாக்கவர்ச்சிகளைப் பற்றி சொல்லிச்செல்கையில் மிக இயல்பாக வழுக்கி கெய்ஷாக்களுக்குள் செல்வார்கள். கேட்பவன் தன் தனி ஆர்வத்தை கண்களில் காட்டாமல் இருக்க முயன்றாலும் அவர்கள் அதை எப்போதும் அடையாளம் கண்டுகொள்வார்கள்.

பல வழக்கமான சொற்றொடர்களுக்குப் பிறகு “இப்போது இருக்கிறார்களா கெய்ஷாக்கள்?” என்று அவன் கேட்கால் இருக்க மாட்டான். “இருக்கிறார்கள், ஆனால் மிக அபூர்வமாகவே…” என்று வழிகாட்டி பதில் சொல்வான். மீண்டும் பல சொற்றொடர்களில் சுற்றியபின் வேறெங்கோ நோக்கியபடி “ஒரு கெய்ஷாவை சந்திக்க முடியுமா?” என்று பயணி வரலாற்றுப்பண்பாட்டு ஆர்வத்துடன் கேட்பான். “கடினம்” என்பான் வழிகாட்டி. மீண்டும் சொற்றொடர்கள். மீண்டும் விழிச்சந்திப்புகள். அதன் பிறகு “எத்தனை செலவானாலும் பரவாயில்லை” என்று பயணி சொல்லியாக வேண்டும்

கவலையுடன் “சற்று செலவேறியதுதான். என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். விசாரித்துப்பார்க்கிறேன். ஒரு நாள் ஆகும். ஆனால் முழுமையாக உறுதி தரமுடியாது, மன்னிக்கவும்” என்று வழிகாட்டி சொல்வான். அவன் திரும்பிவரும்வரை நான் காத்திருந்தேன்

அந்த ஒரு முழுநாளும் அற்புதமானது. இணையத்திலும் வழிகாட்டி நூல்களிலும் சென்று கெய்ஷாக்களைப்பற்றி தேடி தெரிந்து கொள்ளலாம். திரும்பத் திரும்ப ஒரே விதமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் குறைவான தகவல்களிலிருந்து கற்பனைகளை விரித்தெடுக்கலாம்.

காமக்கலைகள்! காமத்தை எப்படி ஒரு கலையாக்க முடியும்? என்னதான் செய்தாலும் அடிப்படையில் அது அனைத்து விலங்குகளும் செய்யும் ஒரு செயல். சரியாகச் சொல்லப்போனால் மிருகத்தனமானது. அதிலிருக்கும் இன்பமே மிருகத்தனத்தின் களிப்புதான். மனிதர்கள் மனிதத்தன்மை என்று அவர்களுக்கு குழந்தையிலிருந்து கற்பிக்கப்பட்ட அத்தனையும் உதறிவிட்டு வெறும் மிருகங்களாக இருக்கும் அந்த சில நிமிடங்களுக்காகத்தான் அதன்மேல் அத்தனை பற்றுக் கொண்டிருக்கிறார்களா? உண்பதிலும் காமத்திலும்தான் வாய் அத்தனை முக்கியத்துவம் பெற முடியும். ஏனென்றால் மனிதன் அப்போது விலங்கு.

ஆனால் அந்த எளிய மிருகச் செயல்பாட்டின் மீதுதான் உலகத்தின் அத்தனை கவிதைகளையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அத்தனை கலைகளையும் அதைச் சார்ந்தேதான் நிகழ்த்துகிறார்கள். நினைத்துத் தீராத அத்தனை மெல்லுணர்வுகளையும் அதன் மீதுதான் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து சென்று அந்த சில அப்பட்டமான நிமிடங்களை அடைய வேண்டும். எழுந்தவுடன் கழற்றி வைத்த ஆடைகளை அணியும் பரபரப்புடன் அத்தனை சொற்களையும் எடுத்து மேலே போட்டுக்கொள்ள வேண்டும். கெய்ஷாக்கள் கலை என்பது எதை? அணிவிப்பதையா? கழற்றுவதையா?

ஜப்பானிய தேநீர் கலையை நான் பலமுறை கண்டிருக்கிறேன். உண்மையில் அவர்கள் அப்படித்தான் வழக்கமாகத் தேநீர் அருந்துகிறார்கள் என்றால் அது தேநீரே அல்ல. அல்லது அவர்கள் மனநோயாளிகள். மிக சொகுசான, மிக அரியதான ஒன்றை அருந்துவதான பாவனை மட்டும்தான் அது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் பழகி வைத்திருக்கும் ஒரு நாடகம், நாட்டியம் என்று சொல்ல வேண்டும். பீங்கான் குடுவையை எடுத்து நீர் நிரப்பி அனலில் வைப்பது தொடங்கி கிண்ணங்களை எடுத்து பரப்புவது, நிமிர்த்து வைப்பது, கால் மடித்து அமர்வது, உடல் வளைத்து வணங்குவது என்று அதன் அத்தனை அசைவுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வகுக்கப்பட்டுவிட்டவை.

ஜப்பானிய தேநீர் விருந்தில் தேநீரே தேவையில்லை. கெய்ஷாக்களின் காமவிருந்தில் கடைசியில் காமமே தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று நினைத்தபோது என் விடுதி அறையில் படுத்திருந்தபடி சிரித்துக் கொண்டேன். காமம் என்று இருக்கும் வரைக்கும் ஒரு கலையென அது ஆகமுடியாது கலை என்பது ஒரு பொருளின் மேல் ஒரு வார்த்தையின்மேல் அல்லது செயலின்மேல் மேலும் மேலும் அர்த்தங்களை ஏற்றி வைப்பது. படிமங்கள் தான் கலை. ஒரு நாற்காலியை, மேசை விரிப்பை, மலர்க்கிண்ணத்தை எதை வேண்டுமானாலும் முடிவின்றி விரியும் அர்த்தம் கொண்டதாக ஆக்கும் போதுதான் அது கலை. காமத்தை அப்படி ஆக்கிவிட முடியுமா? எத்தனை அர்த்தங்களை ஏற்றினாலும் அது கடைசியில் இயற்கை அளித்த ஒற்றை அர்த்தத்தில்தானே வந்து நிற்கும்?

அதைக் கலையாக்குவதற்காகத்தானே அத்தனை வருடங்களாக கவிதையையும் கதைகளையும் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். காதல் என்னும் வார்த்தையாக அதை மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் காலம் தேவை. ஒன்றுடன் ஒன்று இணைந்த நூற்றுக்கணக்கான உணர்வுகளைத் தொடுத்து காமத்தைச் சுற்றி அமைத்து அதை அமரகாதலாக ஆக்குவதற்கு அதுவரைக்கும் மனித இனம் உருவாக்கிய அனைத்து நுண்கலைகளும் தேவை. கூடவே காமம் என்றால் என்னவென்றறியாத இளமை. காமம் சற்றே சலித்துப்போன நாற்பது வயதான பயணிக்கு சிலமணி நேரங்கள் உடன் தங்கிப்போகும் ஒரு பெண் காமத்தை எப்படி கலையாக ஆக்க முடியும்?

அவள் கெய்ஷா உடையில் வருவாளென்று நான் நினைத்திருந்தேன். நூல்களில் கெய்ஷாக்களின் பல்வேறு உடைகள் வரையப்பட்டிருந்தன. இடுப்பில் மெத்தைபோல எதையோ கட்டிக்கொண்டவர்கள். கால்வரைவழியும் பெரிய கிமோனாக்கள். பழைய பாணி ஜப்பானிய ஓவியங்களில் வெளிறிய வண்ணங்களில் வரைந்து மேலும் வெளிற வைப்பதற்காக லேசாக நீர் தெளித்து ஒற்றி எடுக்கப்பட்ட ஓவியங்கள். கண்ணாடியில் ஒளிஊடுருவும் தன்மையுடன் ஆடைகள்.

வந்தவள் சிறுமியோ என்று தோற்றமளிக்கும் சிறிய உடல் கொண்ட இளம்பெண். நவீன மேலை நாட்டுக் குட்டைப்பாவாடை அணிந்திருந்தாள். ஒரு பதின்பருவத்து சிறுவனைப்போல் இருந்தாள். சிறிய கண்கள் இரண்டு நீர்த்துளிகள் போல. சிமிழ் போன்ற மிகச்சிறிய உதடுகள். மாசுமருவற்ற மஞ்சள் நிறம். தோல்நிறத்தில் மஞ்சளுக்கு நிகரானது பிறிதொன்றில்லை. வெள்ளையர் தோல்கள் சுருக்கங்களும் புள்ளிகளும் நிறைந்தவை கரியதோல்கள் ஒளியற்றவை .மாநிறத்தோல் மட்டுமே இந்தியாவில் அழகு கொண்டது. ஆனால் மஞ்சள்நிறத்தோல் தோலா உலோகமா என்றஅறியாத அளவுக்கு மெருகுகொண்டது

அவள் என்னை உடல் வளைத்து முறைப்படி வணங்கி முகமன் சொன்னாள். நான் அவளை வரவேற்றதும் பணிவுடன் நாற்காலியில் அமர்ந்து தன் கைப்பையை மேஜைமேல் வைத்தாள். வழிகாட்டி என்னிடம் தனியாக வந்து குனிந்து “புகழ்பெற்ற கெய்ஷா குடும்பத்தைச் சேர்ந்தவள். அரசகுலத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே உறவு வைத்திருக்கிறாள். இந்தியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருக்கிறார் என்றேன். அதை நம்பி வந்திருக்கிறாள். அந்த வார்த்தையை நீங்கள் வாய்தவறாமல் கொண்டு செல்லுங்கள்” என்றான்.

“நான் உண்மையிலேயே அரசகுடும்பத்தைச் சார்ந்தவன் தான்” என்றேன். அவன் கண்கள் ஐயத்துடன் சற்று மாற ”அப்படியானால் நன்று” என்றான். “இவள் கெய்ஷாவா? உண்மையிலேயே?” என்றேன். “ஆம், கெய்ஷாக்கள் என்பவர்கள் சில குடும்பங்களில் தொன்மையான மரபாக வருபவர்கள். காதற்கலையை அவர்கள் தங்கள் பாட்டிகளிடமிருந்து முறையாகக் கற்றுக் கொள்கிறார்கள். அந்தக் கலைதான் அவளைக் கெய்ஷாவாக்குகிறது. மற்றபடி அவளும் பிறரைப்போல இந்தக் காலத்தில் வாழ்பவள் தான். இந்தப்பெண் இங்கே டோக்கியோவில் ஒரு கல்லூரியில் படிக்கிறாள். படித்து முடித்தபின் எதாவது நிறுவனத்தில் வேலைக்குச் செல்வாள். குழந்தைகளை பெற்றுக் கொள்வாள். பிறரைப் போல் தான் அவள் வாழ்வு இருக்கும். ”

நான் “அதுவும் நன்று தான்” என்றேன். அவன் புன்னகையுடன் “அவர்கள் இரவில் மட்டும் தான் கெய்ஷாக்கள்” என்றான். நான் “நன்று” என்று சொல்லி அவன் தோளில் தட்டினேன். “இதற்கான பணத்தை நீங்கள் எனது வங்கிக் கணக்கில் செலுத்தலாம். அதை நான் உங்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறேன். பத்து நிமிடத்தில் நீங்கள் அதை செலுத்த முடியும்” என்றான். “சரி” என்றேன்.

“அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே செலுத்திவிடலாம். நீங்கள் செலுத்தின தகவலை அவளுக்கு நான் அனுப்பின பிறகுதான் அவள் கெய்ஷாவாக மாறுவாள்” என்றான். அவன் சொல்வதை நான் புரிந்து கொண்டு மீண்டும் “சரி” என்றேன். “சற்றுப்பெரிய தொகை” என்று அவன் சொன்னான். “சரி நண்பா…” என்று அவன் தோளில் மீண்டும் தட்டினேன்

அவன் மும்முறை வணங்கி வெளியே சென்று கதவை மூடினான். நான் திரும்பி வரும்போது அவள் கண்ணாடித் திரையிடப்பட்ட பெரிய சாளரத்தின் அருகே நாற்காலியில் பள்ளிக்கூடப்பெண் போல கால்களை மடித்துக் கொண்டு கைகளைக் கட்டி அமர்ந்திருந்தாள் நான் வந்த போது இயல்பான பணிவுடன் எழுந்து நின்று புன்னகை செய்தாள். நான் அவள் அருகே அமர்ந்தேன். முதலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பின்னர் சொற்களை தெரிவுசெய்தேன்

“நான் கெய்ஷா என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகவே தான் உன்னை வரச்சொன்னேன்” என்றேன். “கெய்ஷா என்றால் இரவில் வாழ்பவள் என்று பொருள்” என்றாள். “அப்படியா? விக்கிப்பீடியாவில் அப்படி இல்லையே” என்றேன். “ஜப்பானிய சொற்களை எழுதும் முறையால் அர்த்தம் கொள்ளச்செய்யமுடியும். நாங்கள் கெய்கோ என்போம்” என்றாள். ”ஆம், அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன்.

“இரவுகளில் மட்டும் ஒரு ஆளுமையை அணிந்து கொண்டு காலையில் கழற்றிவிடுபவர்கள் கெய்ஷாக்கள். உண்மையில் பகலில் சூரியன் எழுவதற்கு முன்பே அவர்கள் இறந்து விடுகிறார்கள்” என்றாள். நான் அவளைப்பார்த்துக் கொண்டிருந்தேன். கெய்ஷாப் பண்பாடு பற்றி ஒரு பேருரை ஆற்றப்போகிறாளா என்று சலிப்பு ஏற்பட்டது. “ஆகவே இரவில்பார்த்த கெய்கோவை பகலில்தேடக்கூடாது” என்றாள். அதைச் சொல்லத்தானா என நினைத்துக்கொண்டு “நான் நாளை மாலை இங்கிருந்து இந்தியா கிளம்புகிறேன்” என்றேன்.

“கெய்ஷாக்கள் இரவில் அணியும் அனைத்தையும் பகலில் துறந்துவிடுவதனால் இரவில் செய்யும் எந்த பாவமும் அவர்களைத் தொடர்ந்து வருவதில்லை. தொல்பழங்காலத்தில் அரசர்களுக்காக கெய்ஷாக்கள் கொலைகளையும் செய்திருக்கிறார்கள்” என்றாள். நான் சிரித்தபடி, “எனது தொழில் போட்டியாளர்களால் நீ இங்கு அனுப்பப்படவில்லை அல்லவா?” என்றேன். அவளும் சிரித்துக் கொண்டு, “பெரும்பாலும் இல்லை” என்றாள். “ அய்யோ! பயமாக இருக்கிறதே. . ” என்று நான் நடித்தேன். இருவரும் சிரித்த போது சற்று அணுகினோம். இருவர் அணுகிவருவதற்கு நடிப்பு சிறந்த வழிமுறை

பின்னர் எளிய அறிமுகச்சொற்களை பேசிக்கொண்டோம். என்னைப்பற்றிச் சொன்னேன். நான் ஒரு நாளிதழின் ஆசிரியன், எட்டுநூல்களை எழுதியிருக்கிறேன் என்றதும் மெல்லிய புருவங்கள் வளைய வியப்புடன் “அப்படியா?” என்றாள். “என் சொந்தப் பத்திரிகை. என் தாத்தா தொடங்கியது” என்றேன். பத்திரிகையின் பெயரை அவள் கேட்டிருக்கவில்லை. “இந்தியாவின் சுதந்திரப் போராட்டகாலத்து நாளிதழ்” என்றேன். அவள் என் நூல்களைப்பற்றிக் கேட்டாள். ஆறுநூல்கள் அரசியல். இரண்டுநூல்கள் பயணம். “நாவல் எழுதும் எண்ணம் உண்டு” என்றேன்.

அவள் சிரித்தபடி “இதழாளர்கள் நாவல் எழுதுவதுதான் இப்போது பொதுப்போக்கு. பதிப்பாளர் விரும்புவார்கள்” என்றாள். நான் புருவத்தைச் சுருக்கி “ஏன்?” என்றேன். “மற்ற இதழாளர்கள் பாராட்டி மதிப்புரை எழுதுவார்கள்” என்றாள். சுரீலென்று கோபம்வந்தாலும் உடனே அதைக்கடந்து சிரித்துவிட்டேன். “உண்மை, ஆனால் என் நாவல் மற்ற பத்திரிகையாளர்களை விமர்சிப்பதாகவே இருக்கும். எல்லாரும் வசைபாடுவார்கள்” என்றபின் “நீ படிப்பாயா?” என்றேன். “எனக்கு இளமையிலேயே இலக்கியம் கற்பித்திருக்கிறார்கள்” என்றாள்.

அவள் மது அருந்துவாளா என்று கேட்டேன். ஒயின் மட்டும் என்றாள். நானும் அதையே விரும்புவதாகச் சொன்னேன். அவளே ஒயினைப் பரிமாறினாள். “ஒயின் பரிமாறுவதில் கெய்ஷா முறை என ஒன்றும் இல்லையா?” என்றேன். “கெய்ஷா சடங்குகள் விரிவானவை. ஆனால் கெய்ஷாமுறை என்பது அச்சடங்குகள் அல்ல” என்றாள்.

நான் “கெய்ஷாக்களுக்கு காமத்தில் நுட்பமான பல கலைகள் தெரியும் என்கிறார்களே” என்றேன். “ஜப்பானிய தேநீர் விருந்து போல அது ஒரு பெரிய நடிப்பாக இருக்கும். அலங்கார உடைகளும் முறைப்படுத்தப்பட்ட உடல் அசைவுகளும் சடங்குகளும் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்”

அவள் சிரித்தபடி, “அத்தனைக்கும் பிறகு நீங்கள் காமத்தில் ஈடுபட்டதாக வெறுமே கற்பனை செய்து கொண்டு வீடு செல்ல வேண்டும் என்று சொன்னால் இவ்வளவு பணத்தை அளிப்பீர்களா?” என்றாள். “பணத்தை அளித்த குறுஞ்செய்தி வந்துவிட்டதா?” என்று நான் கேட்டேன். அவள் முகம் சற்று மாறி “ஆமாம்” என்றாள். அதை மாற்றும்பொருட்டு நான் “காமத்தில் நீ புதிதாக எனக்கு எதைக் கற்றுத்தரப்போகிறாய்?” என்றேன்.

“உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் இணையத்தில் இல்லாததே இல்லை. எனது பாட்டி ஒருமுறை இணையத்தில் இந்த படங்களை மட்டும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். இப்படியெல்லாமா இப்படியெல்லாமா என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். நாற்பது ஆண்டுகாலம் கெய்ஷாவாக வாழ்ந்த அனுபவம் உடையவள்” என்றாள்.

நான் சிரித்து “ஆம். மனித உடலில் இனி என்ன செய்வதற்கு உண்டென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “உனக்குத் தெரியுமா? தூக்கு போட்டுக் கொண்டு உறவு கொள்ளும் முறை ஒன்று உண்டு”

அவள் கண்கள் இடுங்கச் சிரித்தபடி ”தூக்குப்போட்டபடியா?” என்றாள். “ஆம். கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொண்டு பெண்ணுடன் குலாவுவார்கள். உச்சகட்டம் நெருங்கும்போது காலின் கீழ் இருக்கும் முக்காலியை உதைத்துவிடுவார்கள். கழுத்து இறுகி, மூச்சு நின்று மூளைக்கு ரத்தம் போவது குறையும் தருணத்தில் பலவகையான மாயக்காட்சிகள் தோன்றும். அப்போது காமத்தின் உச்சகணம் நிகழவேண்டும். மிகச் சரியான தருணத்தில் கயிறை அழுத்திக் கீழே விழவைத்து சுருக்கை விடுவித்து ஆக்சிஜனை கொடுத்து உயிரை மீட்டுவிடுவார்கள். காலம், இடம் எல்லாம் அழிந்து காமத்தின் உச்சம் மட்டுமே நிறைந்த ஒன்று அந்தக்கணம் என்கிறார்கள்”

“பாவம், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அப்படி தேடிச்செல்லத் தொடங்கினால் சாவுவரை செல்லமுடியும், அவ்வளவுதான்” என்று அவள் சொன்னாள். நான் “இப்படி செய்யப்பட்ட முயற்சியில் ஒருவர் இறந்து அதை போலீசார் புலன் விசாரணை செய்த போது தான் இப்படி ஒரு இணையக் குழுமம் இருப்பதே தெரியவந்தது” என்றேன். ““பலவகையான பைத்தியங்கள் இருக்கிறார்கள். உறவின்போது கேவலமாக வசை பாடிக் கொள்வது, கொடூரமாக வதைத்துக் கொள்வது, பலவகையான மாத்திரைகளை உண்பது, மூளைக்குள் அதிர்வுகளை அளிக்கும் ரசாயனங்களை உடலில் செலுத்திக் கொள்வது. உச்சகட்டம் நிகழும் போது சரியான தருணத்தில் தலையில் உடலிலும் மின்சார அதிர்ச்சி அளிக்கும் ஒரு முறை கூட உள்ளது. என்ன செய்தாலும் அதற்கு அடுத்த கட்டம் ஒன்று தேவைப்படுகிறது” என்றேன்.

அவள் சொல்லவேண்டியதை எல்லாம் நான் சொல்கிறேன் என்று பட்டது. “நாம் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று நான் கேட்டேன். “நீங்கள் தான் இதை பேச விரும்புகிறீர்கள். இதைச் சுற்றி ஒரு மர்மத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “இருக்கலாம்… இதுசாதாரணமாக முடியக்கூடாது என ஆசைப்படுகிறேன்” என்றேன்.

அவள் “இங்கும் அதெல்லாம் இருந்தது. பழைய காலத்தில் ஜப்பனிய அரசர்கள் தங்கள் உறவுகொள்ளும் பெண்ணின் கழுத்தை பட்டு நூலால் இறுக்கியபடியே அதைச் செய்வார்கள். மூச்சு திணறி அவள் இறக்கும் அந்த கடைசித்துடிப்பு அவருடைய உச்ச கணமாக இணையும்போது அது மிகப்பெரிய இன்பத்தை அளிக்கிறது என்பார்கள்” என்றாள்.

நான் சிரித்தபடி “ஆம் , அடுத்தபடி சாவு அல்லது கொலை என்பதுவரை சென்றுவிட்டார்கள்” என்றேன். “உண்மையில் உடல் சார்ந்த எல்லாமே எனக்கும் சலித்துவிட்டன. விசித்திரம் என்பது எதுவரை என்று தெரிந்துவிட்டது. கற்பனையில் எதாவது புதிதாக நடக்குமா என்று பார்க்கிறேன். இந்த நிகழ்காலத்திலிருந்து முன்னோ, பின்னோ சென்று கொண்டிருக்கிறேன். விண்வெளியில் காமம் கொண்டாடலாம். அல்லது செவ்வாய் கிரகத்தில், அல்லது சோழர் காலத்தில் ஒரு பரத்தையுடன், அல்லது ஒரு கெய்ஷாவுடன்” என்றேன்.

அவள் சிரித்து, “இதை முன்னரே சொல்லியிருந்தால் என் வீட்டுக்கு வரச்சொல்லியிருப்பேன். அங்கு இருநூறாண்டு பழைமையான அறைகள் இரண்டு உள்ளன. என் பாட்டி அணிந்த பழைய கெய்ஷா உடைகளும் நகைகளும் கூட இருக்கின்றன” என்றாள்.

“பரவாயில்லை இது ஒரு பாவனை தானே, நீ இப்போது இருநூறாண்டு முன்பிருக்கும் ஒரு கெய்ஷா. நான் இருநூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இங்கு வியாபாரம் செய்யவந்த ஒரு கடல்வணிகன்”

அவள் ”நீங்கள் அரச குலத்தார் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றேன். அவள் சிரித்தபடி “சரி அதுவும் ஒரு பாவனை தானே…” என்றாள். நான் உரக்க சிரித்துவிட்டேன். சிரிக்கச் சிரிக்க இருவரும் இயல்பான மனநிலைகொண்டோம். ஒயினும் இணைய ஒரு மெல்லிய மிதப்பு எங்களை ஆட்கொண்டது

“இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு கெய்ஷாவாக நடிக்க வேண்டும் அல்லவா?” என்றாள். “ஆம். கெய்ஷாவால் உபரிசிக்கப்படும் வணிகனாக நானும் நடிக்கிறேன்” என்றேன்.

அவள் எழுந்து பழைய ஜப்பானியய நடனஅசைவுகளுடன் ஜப்பானிய மொழியில் ஏதோ சொன்னாள். நான் சிரித்தபடி மெத்தையில் விழுந்துவிட்டேன். அவள் நிறுத்தி இடையில் கைவைத்து “ஏன்?” என்றாள்.

“கடந்து போனவை இந்த நிகழ்காலத்தில் அவை எல்லாம் கேலிப்பொருளாகத்தான் இருக்கும். இன்று டோக்கியோவின் தெருவில் ஒரு சாமுராயைப்பார்த்தால் மக்கள் அவருக்கு காசுகளை வீச ஆரம்பிப்பார்கள். அவர் தன் கடானாவால் முதுகைச் சொறிந்துகாட்டினால் அது அதற்கான கருவி என்று நம்புவார்கள்”

அவள் சிரித்தபடி பாய்ந்து மெத்தையில் விழுந்து என் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உதடுகளில் உதடு பதித்து ஆழ்ந்து முத்தமிட்டாள். பின்பு என் மேல் கால் போட்டு ஏறி அமர்ந்து தோள்களைப்பற்றி என் கண்களுக்குள் நோக்கியபடி “எதற்கு பாவனை? எந்த பாவனையும் கிழித்து பார்க்கக்கூடிய புத்திசாலி நீங்கள். ” என்றாள்.

“ஆம் அதுதான் என்னுடைய பிரச்னை” என்றேன். அவள் “கிழித்து கிழித்து எங்கே செல்கிறோம். கடைசியில் கசப்பும் துயரமும் தான் இருக்கும். ” என்றாள். “யாருக்குமா?” என்று நான் கேட்டேன். “யாராக இருந்தாலும். கிழித்து சென்றால் விஷம்தான் மிஞ்சும்” என்று அவள் சொன்னாள்

ஒருவரை ஒருவர் கண்களுக்குள் நோக்கிக் கொண்டோம். நான் அவளை சுழற்றி கீழே படுக்க வைத்து அவள் மேல் படர்ந்து. அவள் உதடுகளை முத்தமிட்டேன். மிகச்சிறிய உதடுகள். “மிகச்சிறியவை. எனக்கு இவை போதாது” என்றேன். “கற்பனையில் வளர்த்துக்கொள்ளுங்கள் அப்படித்தானே காமத்தில் செய்யவேண்டும்” என்றாள் அவள். சிரித்தபடி இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்.

“நான் கெய்ஷா அல்ல, ஒர் எளிய பெண் என்று பாவனைசெய்வோம். நீங்களும் ஒரு எளிய பெண்ணை விரும்பி வந்த ஒருவர். இங்கு இப்படி உடலால் இணைந்திருப்பது நமக்குப் பிடித்திருக்கிறது. இதற்கப்பால் ஒன்றும் தேவையில்லை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவள் சொன்னாள்.

நான் அவள் காதில் “கெய்ஷாவின் காமக்கலை என்கிறார்களே? அது உண்மையில் என்ன?” என்றேன். “இதுதான்” என்று அவள் சொன்னாள். “அன்றைய அரசர்கள் அடுக்கடுக்காக ஏராளமான பட்டு ஆடைகளையும் நகைகளையும் அணிந்திருப்பார்கள். உடைவாளையும் மணிமுடியையும் விலக்கவே மாட்டார்கள். பேசுவது எல்லாமே முறைமை சார்ந்த சொற்களைத்தான். அவர்களைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருமே அடிமைகளும், ஊழியர்களும், அவர்களுக்குச் சமானமான நிலை கொண்ட பிற அரசர்களும் தான். ஒவ்வொருவரிடமும் எப்படி பேசவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வகுக்கப்பட்ட நெறிகள் இருந்தன. ”

அவள் தொடர்ந்தாள். “அவர்கள் வாழ்வதில்லை, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய காவியத்திற்குள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பேசுவதும் செய்வதும் உடனடியாக கவிஞர்களால் பதிவு செய்யப்பட்டு நூல்களாக வெளிவருகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். காதலுக்கும் காமத்துக்கும் அவர்கள் செல்வது கூட பலவகையான வசனங்களை மனப்பாடம் செய்து பயின்று, பலவகையான நடிப்புகளைப்பழகிக்கொண்டுதான். மனைவிகளும் காதலிகளும்கூட அவர்களுக்கு அடிமைகள். அடிமைப்பெண்கள் அவர்களுக்கு பழக்கப்பட்ட விலங்குகள். செயற்கையான நாடக நடிப்பில் இருந்து தொடங்குவார்கள். அதன் மறு எல்லைக்குச் சென்று விலங்கு போல அந்தப்பெண்ணை கிழித்து கொன்று காமம் அடைவார்கள். ”

“கெய்ஷாக்களிடம் வரும்போதும் அவர்கள் அந்த பாவனைகள் அனைத்தையும் கொண்டுதான் வருவார்கள். கெய்ஷா அவர்களின் அவர்களை அஞ்சாமலும் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும் அதேசமயம் அவர்களை கோபம்கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைகொண்டவள். அவர்கள் அணிந்துவரும் பாவனைகள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதனாக ஆக்கிவிடுவாள். அதன் பின் அவளுடன் உறவு கொள்ளும் போது அவர்கள் எளிய விலங்குகளாக இருப்பார்கள். அந்தச் சுதந்திரத்தை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் உண்மை உருவத்தை மீட்டு எடுக்கும் கலையைத்தான் கெய்ஷாக்கலை என்கிறார்கள். ”

”எனக்குள்ளிருந்து என் உண்மை உருவத்தை மீட்டெடு பார்ப்போம் என்று” நான் குறும்பாக சிரித்தபடி சொன்னேன். “கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன். காலைக்குள் முழுமையாக வெளியே எடுத்து வைத்துவிடுவேன் போதுமா?” என்று அவள் சொல்லி “என்ன கேள்வி” என்று செல்லமாக என்னை அடித்தாள். என் மூக்கைப்பிடித்து இழுத்து “என்னவேண்டும் உங்களுக்கு?” என்றாள்

“நான் எங்கும் ஆடையின்றி நிற்கவே விரும்புவேன். ஆனால் ஆடையின்றி நிற்பதே கூட ஒரு பாவனைதான் என்று ஆகிவிடுகிறது” என்று நான் சொன்னேன். “ஆமாம். இங்கே வடக்கு பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. ஆன்சென் என்பார்கள் அங்கு ரெய்க்கோன் எனப்படும் நிர்வாணமாக அனைவரும் சேர்ந்து குளிக்கும் குளியல்மையங்கள் இருக்கின்றன. அங்கு சென்று பார்த்தால் தெரியும் நிர்வாணமென்பதே ஒரு ஆடை மாதிரி. நிர்வாணத்தாலேயே நம் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ளமுடியும்”

“ஆடையில்லாமை என்பதுமட்டும்தான் அது. அதற்கு அப்பால் ஏதாவது நிர்வாணம் உண்டா என்ன?” என்று நான் கேட்டேன். ”ஆமாம் அது புத்தர் சொன்ன நிர்வாணம்” என்றாள். “அடப்பாவி அதையா இப்போது எனக்கு அளிக்கப்போகிறாய்? அதற்கா அவ்வளவு பணம் வாங்கிக் கொண்டாய்?” என்று நான் செல்லமாக அலறினேன். “சரியான முட்டாள்” என்றபடி என் தோளை ஓங்கி அறைந்தாள். “அடிக்கிறாய்…” என்று சிணுங்கினேன்.

”கெய்ஷாக்கள் அடிப்பதும் உண்டு. வசைபாடுவதும் உண்டு. மன்னர்களுக்கு அது பிடிக்கும். அவர்களை வேறுயார் அடிக்கமுடியும்?” என்றாள். ”இப்போது என்னை என்ன செய்யப்போகிறாய்?” என்றேன். “உங்களை கொஞ்சப்போகிறேன். நீங்கள் ஒரு ஆண். கொஞ்சி கொஞ்சி உங்களை ஒரு கைக்குழந்தையாக்குவேன். என் மடியில் போட்டுக் கொள்வேன். ” என்றாள். நான் அவள் காதில் “பால் கொடுப்பாயா…?” என்றேன். “சீ” என்று அவள் என் தலையில் கொட்டினாள்.

நுணுக்கமான கொஞ்சல்கள், பாவனைகள், பரிமாறுதல்கள் வழியாக எங்கள் உடல்களை ஒன்றை ஒன்று அறியச் செய்தோம். பின்னர் பேச்சு நின்றது. பின்னர் பார்வைகளும் இல்லாமல் ஆயின. உடல்கள் மட்டும் ஒன்றை ஒன்று அறிந்தன.

பிற எந்தக் காமத்தையும் போலத்தான் அது என்று ஒரு தருணமும், அது மிக விசேஷமானது என்று இன்னொரு தருணமும் தோன்றிக்கொண்டிருந்தது. எல்லாக் காம உறவைப்பற்றியும் அப்படித்தானே தோன்றும் என்றும் நினைத்துக் கொண்டேன். அவள் என் உடலுடன் ஒட்டிக் கொண்டு தன் முகத்தை என் தோளில் புதைத்து படுத்துக் கொண்டாள். மஞ்சள் இனத்தவருக்கே உரிய கரிய பளபளப்பு கொண்ட தலைமுடி. சிறிய காது. சற்றே உந்திய கன்ன எலும்புகள். மெலிந்த அவள் தோள்களை கைகளால் வருடிக் கொண்டு படுத்திருந்தேன்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சொல்லவா?” என்று கண்களை மூடியபடி சொன்னாள். “சொல்” என்றேன். “இதுவும் பிற எந்தக் காமத்தையும் போலத்தானே இதற்கா இவ்வளவு பெரிய தொகை…?” என்றாள். “பொய்” என்று நான் அவளை தட்டினேன். “இந்த தருணத்தில் பணத்தை பற்றி நினைக்கும் அளவுக்கு நான் கீழ்மையானவன் அல்ல” என்றேன்.

“நான் அப்படி சொல்லவில்லை. கெய்ஷா என்ற வார்த்தை அதைப்பற்றிய கதைகள் இதெல்லாம் உங்களுக்கு ஏமாற்றுவேலை என்று தோன்றிவிட்டது. அல்லவா?” என்றாள். “இல்லை இந்த ஒரு தருணத்தை அழகாக்க அவை எப்படியோ உதவியிருக்கின்றன. ” என்றேன். “என்ன சொன்னாலும் இது சாதாரணமானதுதான், அதை மறைக்கமுடியாது” என்றாள் அவள். “இல்லை” என்றபடி நான் அவள் கழுத்தில் முத்தமிட்டேன்.

அவள் என் காதில் ”நான் ஒன்று சொல்லவா. . ?” என்றாள். “சொல்” என்றேன். “நான் கெய்ஷா இல்லை” என்றாள். “தெரியும்” என்று நான் சொன்னேன். “எப்படி?” என்றாள். “நீ உள்ளே வந்த போதே தெரியும். அல்லது அவன் உன்னை அழைக்க செல்லும்போதே தெரியும்” என்றேன்.

அவள் பெருமூச்சு விட்டாள். ”நன்றி” என்றாள். “ஏன்?” என்றேன். “நான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வில் இருந்தேன். இப்போது அது இல்லை” என்றாள். நான் “என்னை அவ்வளவு எளிதாக யாரும் ஏமாற்ற முடியாது பல ஏமாற்றங்களையும் பார்த்து வருந்தி அழுது பழகியபடித்தான் தொழிலில் வேரூன்றினேன். ஊடகத்தொழில் இன்று அரசுடன் செய்யும்போர் போல” என்றேன். “அப்படியானால் சரி” என்று அவள் சொன்னாள்.

“நீ என்ன படிக்கிறாய்?” என்று நான் கேட்டேன். “இலக்கியம்” என்றாள். “எந்த மொழி?” என்றேன். “ஜப்பானிய மொழி. ஆங்கில இலக்கியமும் இணைந்து தான் இங்கே பாடத்திட்டம்” என்றாள். நான் “இலக்கியத்தில் எனக்கும் ஈடுபாடு உண்டு. ஒரு இலக்கியப் பேராசிரியனாகத்தான் என்னை சின்ன வயதில் கற்பனை செய்து கொண்டேன். ” என்றேன்

”நீங்கள் இலக்கியம் படித்தீர்களா?” என்றாள். “இல்லை நான் வணிகவியல் தான் படித்தேன். பெரிய இலக்கியவாதி ஆகிவிடவேண்டும் என்ற கனவு இருந்தது. கூடவே புகழ் பெற்ற பேராசிரியராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதன்பின்னர்தான் இதழியல். அது என் குலத்தொழில்” என்றேன்.

“பேராசிரியராக இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்களா?” என்று அவள் கேட்டாள். ”இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னது. இதழாளர்கள் இதழாளர்த்தொல்லை இல்லாத பிரமுகர்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியும். ” என்றேன். அவள் சிரித்தபடி ”அது சரிதான்” என்றபடி என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள்.

அவள் மார்புகள் மிகச்சிறிதாக, இல்லையென்றே சொல்லத்தக்கவையாக இருந்தன. இடைக்குக்கீழே கூட சிறுவர்களுக்குரியவை போல வளராமல் இருந்தது. என் எண்ணத்தை புரிந்துகொண்டு அவள் ”உங்கள் ஊர்பெண்கள் கைகளும் இடைகளும் மிகப்பெரியவை அல்லவா?” என்றாள். “ஆம் இடுப்பும் மார்புகளும் கூடப்பெரியவை தான்” என்றேன்.

“ஆகவே தான் மாறுதலுக்காக கிழக்கு நோக்கி வருகிறார்கள் போல…” என்றாள். “இங்கிருந்து யாரும் அங்கே வருவதில்லையே” என்றேன். “ஆம் பயந்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று சொல்லி அவள் சிரித்தாள்.

இருவரும் மீண்டும் கொஞ்சம் உடல்குலவினோம். நான் அவளிடம் “யசுநாரி கவபத்தாவின் தூங்கும் அழகிகளின் இல்லம் நினைவுக்கு வந்தது” என்றேன். “நினைத்தேன். கெய்ஷாக்களைப்பற்றி அவருடைய பனிபூமி என்ற நாவலில் படித்திருப்பீர்கள். ” என்றாள். “ஆம் நீ இங்கு வருவதற்கு முன் அந்த நாவலைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ” என்றேன்.

என் கழுத்தை வளைத்து “இதற்குப் பிறகு ஏன் தூங்கும் அழகியை நினைத்தீர்கள்?” என்றாள். “அதில் வயதான ஒருவர் தன் உடலில் வற்றிக் கொண்டிருக்கும் உயிர்ச் சக்தியை மீட்டெடுத்து ஆயுளைக் கூட்டுவதற்காக இளம்பெண்களுடன் படுத்துக் கொள்ளும் வசதி செய்யும் ஒரு ரகசிய விடுதிக்கு வருகிறார் அல்லவா…?” என்றேன் “ஆம், வயதான எகுச்சி” என்று விழிகளில் சிரிப்பு எஞ்சியிருக்க அவள் சொன்னாள்.

”மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பெண்களை அவருடன் படுக்கவைக்கிறார்கள். இரு நிர்வாணப் பெண்களின் நடுவே எகுச்சி படுத்திருக்கிறார். அவர் உடலில் அவர்களின் உயிர் வந்து சேர்ந்து ஆண்மை அதிகரிக்கும் என்று நம்புகிறார். ஆனால் அதில் ஒரு பெண் மயக்கமருந்து மிகையாகி இறந்துவிட்டிருப்பாள். அன்று இரவு முழுக்க பிணத்துடன் தான் படுத்திருந்தார். ” என்றேன்

அவள் முகம் சிறுத்தது. தலை குனிந்து கைவிரல்களால் என் விலாவில் வருடிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி குனிந்து “என்ன?” என்றேன். “ஒன்றுமில்லை” என்றாள். தலையாட்டியபோது முடிக்கற்றை சரிந்து விழிகளை மறைக்க அள்ளிப்பின்னுக்குப் போட்டுக்கொண்டாள். “இல்லை, உன் மனம் மாறிவிட்டது” என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்” என்றே

என் கண்களைப்பார்த்து, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிகிறது” என்றாள். “நான் சாதாரணமாக நினைவுக்கு வந்த கதையைத்தானே சொன்னேன்” என்றேன். ஏன் அந்தக் கதை நினைவுக்கு வருகிறது?” என்றாள். “ஏன்?” என்று நான் அவளைக் கேட்டேன். அவள் அழுத்தமான குரலில் “பிணத்துடன் தூங்குதல்…” என்றாள்.

அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நான் அவளை இறுக அணைத்து “இல்லை, நான் அப்படி எதையும் உத்தேசிக்கவில்லை” என்றேன். “பரவாயில்லை” என்று அவள் சொன்னாள். “இல்லை நான் உண்மையிலேயே அப்படி எதையும் எண்ணவில்லை” என்றேன். “இங்கு ஒரு சொல் உண்டு. விபச்சாரியுடன் உறவு கொள்வது பிணத்துடன் உறவு கொள்வது போல…” என்றாள். “நம்பு நான் அப்படி உத்தேசிக்கவில்லை” என்று அவளை இறுக அணைத்தேன். “சத்தியம்” என முத்தமிட்டேன்.

“நீங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்கள் உள்ளம் உணர்ந்தது” என்றாள். “இல்லை உண்மையிலேயே இல்லை” என்று அவள் கைகளைப்பற்றிச் சொன்னேன். “நான் எங்குவேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன் உண்மையிலேயே இல்லை. இந்த இரவில் உன்னுடன் மிக நெருக்கமாகத்தான் உணர்ந்தேன். இவ்வளவு நெருக்கமாக எந்தப்பெண்ணிடமும் நான் உணர்ந்ததே இல்லை. ” என்றபோது என்குரல் சற்று உடைந்தது.

“இதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாடிக்கையாளன் விபச்சாரியை எந்த வகையிலும் சமாதானப்படுத்தவேண்டிய அவசியமில்லை” என்றாள். “நான் உண்மையில் அப்படி எண்ணவில்லை நான் இதற்குமேல் எப்படி சொல்லவேண்டும்…?” என்று என்னை மீறி எழுந்த உணர்ச்சியுடன் சொன்னேன்.

அவள் “நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மறந்து விடுங்கள்” என்றாள். “இல்லை நீ அப்படி நினைக்கிறாய் என்பது எனக்கு பதட்டத்தை உருவாக்குகிறது. நான் அப்படி நினைக்கவே இல்லை. ” என்றேன்

அவள் அதைக்கேளாதவளாக குனிந்தே இருந்தாள். கரிய பளபளக்கும் முடியால் முகம் மூடியிருந்தது. சட்டென்று ஒரு விசும்பல் ஒலி. வேறெங்கோ எவரோ அழுவதுபோல அதைக்கேட்டேன். அவள் என் மார்பில் முகம் புதைத்து விசும்பி அழத்தொடங்கினாள்.

மேலும் சற்று நேரம் கழிந்து தான் அவள் அழுகிறாள் என்பதே புரிந்தது. அவளை விலக்கி “அழுகிறாயா? ஏன்?” என்றேன். புரண்டு தலையணையில் முகம் புதைத்து உடல்குலுங்க அழத்தொடங்கினாள். நான் அவளை திருப்பி “சொல் ஏன் அழுகிறாய் நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன் தவறாக சொல்லியிருந்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றேன்.

“மன்னிப்பா? நீங்களா? நான்தான் மன்னிப்புகோரவேண்டும். நான் சரியாக நடந்து கொள்ளவில்லை” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றேன். கண்ணீர்த்துளிகள் நின்ற இமைகளுடன் “அவ்வளவு பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதிதான் எனக்கு வரும். ஆனாலும் என் கடமை. அவர்கள் என்னிடம் சொன்ன எதையும் நான் செய்யவில்லை”

“இல்லை” என்று ஏதோ சொல்லப்போனேன். “நான் கெய்ஷாவாக நடிக்கவில்லை. உங்களை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை” என்றாள். “இல்லை அப்படி அல்ல” என்று நான் அவள் தோளைப்பற்றி உலுக்கி சொன்னேன். அவள் அழுகை சட்டென்று மேலும் வலுத்தது. உடலை நன்றாக குறுக்கிக் கொண்டு சிறுகுழந்தை போல அழுதாள்.

நான் அவள் தோளைத் திருப்பி முகத்தை பார்த்து ”இதற்கு மேல் நான் என்ன சொல்லவேண்டும். நான் உண்மையில் எதையும் நினைக்கவில்லை” என்றேன். “ஆம் பிணம்தான். அப்படித்தான் நான் எல்லாரிடமும் இருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அப்படி இருக்கவில்லை. மற்ற அனைவரும் பிணமென்று என்னை நினைக்க வேண்டும் என்றே உண்மை நினைப்பேன்.ஆனால் நீங்கள் அப்படி நினைப்பது என்னைப் புண்படுத்துகிறது”

முகத்தை துடைத்து கூந்தலை அள்ளி பின்னால் குவித்து கழற்றிவைத்த கிளிப்பை டீபாயிலிருந்து எடுத்து அணிந்துகொண்டாள். மெல்ல அமைதியானாள் “நீங்கள் என்னை பெண் என்று நினைக்கவேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் என்னை பிணம் என்று நினைக்கிறீர்கள்…” என்றாள். “இல்லை இல்லை…. ” என்று அவள் கன்னங்களிலும் இதழ்களிலும் முத்தமிட்டுச் சொன்னேன்.

“நான் மிகமிக ஏழை. நாங்கள் ஒன்பது பேர் ஒரே அறையில் வசிக்கிறோம். என் மூன்று இளையவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது படிப்பை முடித்து ஒர் ஆசிரியர் வேலைக்கு சென்றால் இதிலிருந்தெல்லாம் மீள முடியும் என்று நினைத்தேன்” என்று அவள் சொன்னாள் “நாங்கள் கெய்ஷா குடும்பம் அல்ல. எனது மூதாதையர்கள் கிராமத்தில் விவசாயம் செய்தார்கள். அங்கிருந்து பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தோம். இங்கே எல்லாமே விலை உயர்ந்தவை. உடலை நன்றகா விரித்து படுத்துக் கொள்வதற்கான ஒர் இடத்திற்காக மாதம் முழுக்க வேர்வை சிந்த வேண்டும்”

நான் அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அழுதபோதிருந்ததை விட இப்போது மேலும் துயர்கொண்டிருந்தது அவள்முகம். சிறிய தந்தச்சிமிழ் போன்ற முகம். “அப்பா இருந்த வரைக்கும் நாங்கள் உழைத்து தான் வாழ்ந்தோம். அப்பா இறந்து அம்மாவுக்கும் குதிகால் வலி வந்து நிற்க முடியாமல் ஆனபோது அக்காவுக்கும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இவர்களின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் எனக்கு கொடுப்பது மிகச்சிறிய தொகைதான். அதற்கு அவ்வளவு அவமானம்…” கண்களைத் துடைத்துக் கொண்டு “இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது. சொன்னேன் என்று தெரிந்தால் அவர்கள் என்னைத் தண்டிப்பார்கள்” என்றாள்.

“இல்லை நான் யாரிடமும் சொல்லப்போவதில்லை. ” என்றேன். அவள் பெருமூச்சுடன் “இதை நான் ஏன் சொல்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. யாரிடமும் இதைச் சொன்னதில்லை இந்தக் கெய்ஷாவின் வீட்டுக்கு நீங்கள் வந்தீர்கள் என்றால் ஐந்து நிமிடம் அங்கே இருக்க உங்களால் முடியாது. ஒரே அறையில் எட்டு பேர் வாழும்போது அது பன்றித் தொழுவம் போல் ஆகிவிடுகிறது.” என்றாள்.

”என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி அவள் இடையை வளைத்து “நான் இதெல்லாம் ஓரளவுக்கு இப்படித்தான் என்று ஊகித்திருந்தேன். ஆனால் எங்கோ எனக்கு ஒர் அகங்காரம் இருந்திருக்கிறது. உன் தோரணையைப் பார்த்தபோது உன்னை உடைத்து உன்னை அழவைக்க வேண்டும் என்று அது ஆசைப்பட்டிருக்கிறது. நீ மனமுடைந்து அழுவதைப் பார்த்தபோது எனக்கு எவ்வளவு நிறைவு வருகிறது என்று கவனித்தேன். அப்போதுதான் என்னைப்பற்றி நானே தெரிந்து கொண்டேன். என்னையே நான் வெறுத்தேன்” என்றேன்.

அவள் என்னை அணைத்துக் கொண்டு ”பரவாயில்லை ஆண்களின் இயல்பு தானே அது? வலிக்க வைக்காத ஆண் என்று உலகத்தில் யாரும் இல்லை என்று என் அம்மா சொல்வார்கள்” என்றாள். பின்பு என் கண்களைப்பார்த்து ”ஒன்று மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்” என்றாள். “சொல்” என்றேன். “நான் பிணமில்லை” என்றாள். ”நான் அப்படி சொல்லவில்லை” என்றபடி நான் அவளை முத்தமிடத்தொடங்கினேன்.

என் கைகளில் அவள் உருகித் திரவமாக ஆகப்போகிறவள் போல குழைந்தாள். “நான் பெண். . நான் பெண். . ” என்று முனகிக் கொண்டிருந்தாள். அம்முறை முற்றிலும் புதிய ஒரு பெண்ணுடன் இருந்தேன். முதல் பெண்ணிடம் போல. பூமியில் மனிதர்களே இல்லாத போது தனித்து விடப்பட்ட இருவரைப்போல. அடுத்த கணம் இறந்து விடப்போகிறவர்களைப்போல.

பின்பு தழுவியபடி படுத்திருக்கும்போது அவள் இமைகளில் கண்ணீர் படிந்திருந்தது. மூடிய இமைகளின் விளிம்பில் மயிர் வெண்ணிறப்பீங்கான்மேல் மயிற்பீலி விளிம்பு போல படிந்திருந்தது. அதை என் கைகளால் தொட்டு வருடியபோது அதிலிருந்த ஈரம் தெரியவந்தது. “மீண்டும் அழுதாயா?” என்றேன். “இல்லை” என்றாள். “கண்ணீர் இருக்கிறது” என்றேன். “அழுதால்தான் கண்ணீர் வருமா…?” என்றாள். இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

“இல்லை” என்றபின் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டு அவள் காதில் “நானும் அழுதேன்” என்றேன். ”உண்மையாகவா…?” என்றாள். “ஆம், நான் அழுதே நிறைய வருடங்கள் ஆகிறது” என்றேன். என் காதில் என் உடலுக்குள் இருந்தே பேசுவதுபோல “எத்தனை வருடங்கள். . ?” ஒரு கணம் தாளமுடியாத அழுத்தத்தில் திளைத்து மெல்ல விடுபட்டு “இருபது வருடங்கள்” என்றேன்.

“உங்கள் மனைவி இருக்கிறார்களா. . ?” என்று கேட்டாள். “பிரிந்து போய்விட்டாள்” என்றேன். “மன்னிக்கவேண்டும் நான் அதைக் கேட்டிருக்ககூடாது” என்றாள். “இல்லை, பரவாயில்லை, நீ அறியவிரும்புவதைக்கேள்” என்று நான் சொன்னேன். “வேண்டாம், உங்களுக்கு அது துயரளிக்கிறது” என்றாள். “இல்லை நான் எவரிடமும் சொன்னதில்லை. உன்னிடம் சொல்லியாக வேண்டும்” என்றேன்.

“வேண்டாமே. நாம் ஓர் உயரத்தில் இருக்கிறோம். அதிலிருந்து ஏன் கீழிறங்க வேண்டும்?” என்றாள். “இது கீழிறங்கல் அல்ல. இந்தச் சுமைகளை இறக்காவிட்டால் நான் எப்போதும் மண்ணில் தான் நின்று கொண்டிருப்பேன்” என்றேன். “சொல்லுங்கள்” என்று என்னை அணைத்து என் தலைமயிரை வருடத்தொடங்கினாள்.

நான் என் அப்பாவின் பங்குதாரரின் மகளை இளமையிலேயே மணக்கவேண்டியிருந்தது. ஒரு ஆடம்பரமான அசட்டு நாடகம் போல நடந்த எங்கள் திருமணம். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வந்த மனக்கசப்புகள். சிறுமைசெய்யப்பட்டபோது நான் அடைந்த வன்முறை வெறி. நான் வணிகத்தில் வெற்றி பெறும் தோறும் என் மனைவி அடைந்த ஏமாற்றம். அவள் தன் அடிமையாகவே என்னை வைத்திருக்க வேண்டுமென்று அவள் எடுத்த முயற்சிகள். இறுதியில் ஒரு குழந்தையுடன் அவள் பிரிந்து சென்றது. அதற்குப்பிந்தைய ஆழ்ந்த மனக்கசப்பு

“பெண்கள்மீதான கடும் கசப்பாலேயே நான் காமத்தில் திளைத்தேன்” என்றேன். “ஆம், பலர் அப்படித்தான்” என்றாள். “நான் செய்தவை எல்லாம் அவளுக்கு எதிரானவை. எதற்கு எதிராக செயல்பட்டாலும் சரி எதிர்மறைச்செயல்பாடு கடைசியில் ஏமாற்றத்தை மட்டுமே எஞ்சவைக்கிறது” அவள் என்னை மென்மையாக முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். ஒருவார்த்தை கூட சொல்லக்கூடாது என்று அறிந்திருந்தாள்.

நான் பெருமூச்சுவிட்டு மெல்ல கண்களை மூடி தளர்ந்தேன். என் இமைகள் நனைந்திருந்ததை அவள் தன் விரல்களால் தொட்டு “ஈரம்” என்றாள். “ஆம்” என்றேன். “தூங்குங்கள்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபடி அவள் தோளில் முகம் புதைத்துக்கொண்டேன்

உறக்கம் வந்து என் எண்ணங்களை நனைந்து படியச் செய்வதற்கு முன்பு “நீ என்னுடன் இரு” என்றேன். என் உதடுகள் அவள் தோளில் கசங்கியமையால் குரல் போதையிலென ஒலித்தது. “சரி” என்று அவள் சொன்னாள். “என்னிடம் பணம் இருக்கிறது. உனக்கு வேண்டியதை எல்லாம் நான் தருகிறேன். நீ என்னுடன் இருந்தால் போதும்” அவள் என் கனவுக்குள் என “சரி” என்றாள்.

என் உள்ளம் உருகிக்கொண்டிருந்தது. கண்ணீர் அவள் தோள்களில் கழுத்தில் விழுந்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டேன். அடைத்த தொண்டையைச் செருமி “நீ என்னுடன் இருக்கவேண்டும்…” என்றேன். “ம்” என்றபோது அவள்குரலும் அடைத்திருந்ததை உணர்ந்தேன். முத்தமிட்டபோது அவள் கண்ணீர் என் முகத்தில் படிந்தது

“நான் இன்னொரு மனித உயிருடன் இத்தனை நெருக்கமாக ஆவேன் என்று நம்பவே இல்லை. எனக்கு யாருமில்லை. நீ என்னுடன் இருந்தே ஆகவேண்டும்” என்றேன். அவள் மூச்சொலிபோல் “இருப்பேன்” என்றாள். ”இறுதி வரை…?” என்ரேன். ”இறுதி வரை” என்றாள்.

அவளது அணைப்பில் முத்தங்களுடன் நான் துயின்றேன். காலையில் எழுந்தபோது எனது ஆடைகள் அருகே குறுமேடைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. கைக்குட்டைகள் குறுந்துவாலைகள் எல்லாமே சீராக அடுக்கப்பட்டிருந்தன. காலைச்செய்தித்தாள் காத்திருந்தது. ஒரு பெண் வந்து போனதற்கு தடயமே இல்லாமல் சீராக இருந்தது அறை.

– November 5, 2016 (நன்றி: https://www.jeyamohan.in)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *