கூவம் ஒர் அழகிய கிராமம். கூவம் எனும் சொல் நாற்றத்தின் குறியீடாக உள்ளது.கூவம் ஆற்றின் இரு கரைகளும் புறம் போக்கு நிலம் என்பதால் நெருக்கமாக குடிசைகளும், சீமை ஓடுகளும், கல்நார் சீட்டுகளும் வேய்ந்த வீடுகள் வரிசைகட்டி இருக்கின்றன.கிராமத்தில் அடிபட்டு பின்வாங்கிய குடும்பங்களுக்கு புகலிடம் தரும் நகர் பகுதி கூவக்கரை. இங்கு குறைந்த கொடை கூலியில் பட்டணத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வேலைக்கு சென்று வந்து ஜீவனம் நடத்தலாம். அப்படித்தான் சிங்காரமும் காஞ்சனாவும் இங்கு வந்து சேர்ந்தார்கள். சிங்காரத்திற்கு கொத்தனார் வேலை.மாதத்தில் எல்லா நாட்களும் வேலை இருக்காது. அதுவும் மழைக் காலம் என்றால் வீடே தஞ்சம்மென கிடப்பான். அவன் சக தொழிலாளி நரசய்யாவும் அவன் மனைவி நெலமாவும் கூவக் கரையில்தான் வாசம் செய்கிறார்கள். இவர்கள் ஆந்திராவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். முகப்பேர் பேருந்து நிலையத்தின் முன் தினமும் இரு நூறு பேர்களாவது கூடுவார்கள்.எல்லோருக்கும் வேலை கிடைத்துவிடும் என்பது உறுதியில்லை. மாதக் கணக்கில் நடக்கும் பெரிய கட்டிடங்களுக்கு அங்கேயே தங்கி வேலை செய்ய வட இந்திய கூலிகள் ஏராளம் இருப்பதால் சில்லரை பூச்சு வேலைகளுக்கு மட்டுமே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். இதில் சில நேரங்களில் நரசய்யா மேஸ்திரியாகவும் சில வேளைகளில் சிங்காரம் மேஸ்திரியாகவும் இருப்பான். இவர்களுக்குள் ஐந்து வருட நட்பும் அனுசரனையும் இருந்தது. வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாலையில் ஒரு போத்தல் மது அருந்திவிட்டு வீடு வந்து சேர்வான் நரசய்யா. நெலமாவிடம் ‘பூசை’விழும். அவனைவிட இரு மடங்கு ஓங்குதாங்கானவள். பருத்த தடிமனான கைகள் அவளுக்கு. கணவனிடம் சண்டையிடும் போது கூவக்கரையே நின்று வேடிக்கை பார்க்கும்.
“சாப்பாடு செஞ்சிருக்கேன் ஊரடங்குற நேரத்தில எங்கேயா போயிட்டு வாரே?”-மீன் குழம்பின் மணம் வீடு நிறைந்திருக்க சிங்காரத்திடம் காஞ்சனா கேட்டாள். வாசலில் பூனை கத்திக் கொண்டிருந்தது. சிங்காரத்திற்கு சொல்ல வெட்கமாக இருந்தது. அவன் கையை முகர்ந்து பார்த்தாள். அதில் சாம்பார்,சட்டினி,வாடை வீசியது.
“எவ்வளவு ஒரு தோசை?”-கேட்டாள்.
“தொன்னூற்றி ஐந்து ரூவா!”-என்றான்.
காஞ்சனாவுக்கு விக்கிக் கொண்டது. “இருபது ரூவாயிக்கு மாவு வாங்குனா நாலு தோச சுடலாமே.. நீ ஒத்த ஆளே இம்புட்டு ரூவா குடுத்து சாப்புட்டு வர்ரீயே நல்லா இருக்கா ஒனக்கு!”-அழும் தன் குழந்தையை அதட்டிக் கொண்டே கேட்டாள். முகப்பேரில் இருக்கும் சைவ உணவு விடுதியில் மசால் தோசை நன்றாக இருக்கும். பணக்காரர்கள் வந்து செல்லும் உணவகம் அது. சிங்காரம் மசால் தோசை ரசிகன். காஞ்சனாவின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.மௌனமாக இருந்தான். இரவு நெடு நேரமாகிவிட்டது. கதவடைத்து பாயை போட்டு அவனுக்கு முதுகை காட்டி படுத்துக் கொண்டாள். வெளியே பூனை கத்திக் கொண்டிருந்தது. வாசனை இருக்கும் வரை பூனை இருக்கும்.
பூச்சு வேலை மும்பரமாக நடந்து கொண்டிருந்தது. “டேய்,சிங்காரம் ஒனக்கு சாப்பாடா பிரியாணியா?”-என்று கேட்டான் மேஸ்திரி நரசய்யா. மணி ஒன்றாகிவிட்டது. “மசால் தோசை!”-என்றான் சிங்காரம். “மதியானம் ஒனக்கு எவன்டா மசால் தோசை வச்சிருக்கான்?”-வைது கொண்டே போனான் நரசய்யா.
மசால் தோசை கிடைக்காததால் ரூபாயை கையில் வாங்கிக் கொண்டான். வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தான் சிங்காரம். மாலையில் கூலியை பெற்றுக் கொண்டு வேகமாக கிளம்பினான் .முகப்பேர் பேருந்து நிலையம் எதிரே செல்லும் பிரதான சாலையில்தான் உள்ளது கௌரி கிருஷ்ணா உணவகம். பசி காதை அடைத்தது. சப்ளையரிடம் ஒரு மசால் தோசை சொல்லிவிட்டு டேபிளில் இருந்த நீரை குடித்தான். தோசை தமிழர்களின் உணவு கிடையாது. அது வடக்கே இருந்து வந்திருக்க வேண்டும். ‘தோ’-என்றால் ஹிந்தியில் இரண்டு என்று அர்த்தம். இரண்டு முறை ‘சை’-என்ற ஓசையுடன் வார்க்கப்பட்டுவிடுவதால் அதற்கு தோசை என்று பெயர். குழிகுழியாக உள்ள சில்வர் தட்டில் தோசை இருந்தது. டேபிளில் வைத்துவிட்டு போனார் சப்ளையர். அதை நன்றாக ஒருமுறை பார்த்து ரசித்துவிட்டு அதன் மணத்தை நுகர்ந்தான். கலை நயத்துடன் சுருட்டப்பட்டு இருந்தது. அதன் இரண்டு முனைகளும் அகலமான தட்டுக்கும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. ஆள் காட்டி விரலால் நடுவில் அழுத்திப் பார்த்தான். மெத்மெத்தென்றிருந்தது. ஆம்!உள்ளே மசாலா உள்ளது. சாம்பாரை விரல்களில் நனைத்து வாயில் சப்புக் கொட்டினான். என்ன சுவை. தேங்காய் சட்டினியில் மெலிதான இனிப்பு இருந்தது. காரசட்டினியின் புளிப்பும் காரமும் தூக்கலாக இருந்தது. பொன் நிறத்தில் சிறு சிறு துளைகளாக தோசை திரைச் சீலை போல் இருந்தது. அதன் ஓரத்தை உடைத்து தேங்காய் சட்டினியில் தோய்த்து வாயில் போட்டான். அமிர்தமாக கரைந்தது. நடுப்பகுதியை துளைத்து உருளைக் கிழங்கோடு எடுத்து சாம்பாரில் நனைத்து வாயில் போட்டான். நன்கு அவித்து பிசைந்த கிழங்கில் லேசாக மஞ்சள் தூவப்பட்டு வெறும் கடுகு மட்டுமே போட்டு தாழிதம் செய்யப்பட்ட மணமும் சுவையும் அவன் நாவில் நர்த்தனமாடியது. உழைப்பாளிக்கு ஒரு தோசை போதுமானது இல்லை. ஆனால்,அதன் மணமும் சுவையும் மனதை நிறைத்துவிட்டதே. இனி இரவுணவு இல்லையென்றாலும் நிம்மதியாக இருக்கலாம் உறங்கலாம். ஆனாலும் இந்த இடம் நவீன மோஸ்தர்கள் வந்து செல்லும் உணவகம். இங்கு வருபவர்களுக்கு ஒரு தகுதி வேண்டும். உழைத்து உப்பு பொறிந்த உடல், சுண்ணாம்பு காரை படிந்த சட்டை என்று இருந்தவனை புதிதாக வந்த சர்வர் மேலும் கீழும் பார்த்தார். ‘டிப்ஸ்’-என்று ஒரு சம்பிரதாயம் உள்ளதே அதற்கு இவன் உடன்படுவானா என்ற கேள்வி சர்வரின் மனதில் எழுந்தது. ரசீதும்,பணமும் வைப்பதற்கான அழகிய அட்டை மேசையில் இருந்தது. அதில் ரசீதை வைத்துவிட்டு தலையை சுரண்டினார் சர்வர். ரசீதில் நூறு ரூபாய் என்று இருந்தது. தன் சட்டை ஜேபியிலிருந்து நூறு ரூபாயை எடுத்து அட்டைக்குள் வைத்துவிட்டு எழுந்தான் சிங்காரம். டிப்ஸ் கொடுங்க என்று கேட்ட சர்வரை பார்த்து “நீர் புதுசா.வழக்கம் இல்லை!”-என்றான் சிங்காரம்.
“இது பெரியவங்க வர்ற இடம். நீங்கெல்லாம் இங்கே ஏன் வரணும்”-வயது முதிர்ந்த சர்வர் கேட்டார்.
“கடைவிரிச்சா யார் வேனுமானாலும் வரலாம்தானே.சரி கிடக்கட்டும். தோசை எவ்வளவு? நூறு ரூவா. வெளியே சாதா ஹோட்டல்ல அறுபது ரூவாதான். கேட்ட காச குடுத்துட்டேன். டிப்ஸ் முடியாது. இது தோசைக்கு sgst,cgst வரி போடுற நாடு. நீர் சம்பளம் பத்தலைனா முதலாளியை கேளும். சீருடை தந்த முதலாளிக்கு சம்பளம் குடுக்க தெரியாதா?”-என்று கேட்டுவிட்டு விருட்டென்று வெளியே வந்தான் சிங்காரம். மசால் தோசையின் ரசிகனாக இருந்தாலும் கேட்கும் தொகையையெல்லாம் தந்துவிடும் ரகம் அல்ல அவன். முன்பு ஒரு முறை ஒரு நடுத்தர வர்க்க உணவகம் ஒன்றில் மசால் தோசை சாப்பிட அமர்ந்தான். தோசையை உடைத்து அதன் உள்ளே இருக்கும் மசாலாவை சோதித்தான். அது பூரிக்காக வைக்கப்படும் மசாலா. எழுந்து கொண்டான். உணவகத்தின் முதலாளியிடம் வாக்குவாதம் செய்துவிட்டு பணம்தராமல் வந்துவிட்டான். அது முதல் தரமான உணவகங்களையே தேடிச் செல்வதையே விரும்பினான்.
வேலை முடிந்ததும் நரசய்யா ஒயின்ஷாப் தேடிச் செல்வதும், சிங்காரம் மசால் தோசையை தேடிச் செல்வதும் வாடிக்கை. இது அவர்களின் மனைவிமார்களுக்கு நன்றாக தெரியும். அதை தடுக்கும் வழி தெரியவில்லை. பல நாட்கள் சண்டையில் முடிந்து,விடிந்தால் சமாதானமாகிவிடும் தினச் செயல்.
அது நல்ல மழைக் காலம். தொடர்ந்து வானம் பெயர்த்துக் கொண்டு ஊத்திக் கொண்டிருந்தது. கேசாவரம் அணை திறந்துவிட்டார்கள். கருத்து ஓடிய கூவம் வெளுத்து இரு கரை தொட்டு ஓடியது. பகல் இரவு என பாராமல் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சேரியில் மீன் வியாபாரம் அமோகமாக நடந்தது. அது கடல் மீன்களின் காலம் அல்ல. நீர் நிலைகளிலிருந்து பிடித்து வந்து விற்பவர்களின் காலம். வீதிகளில் மீன் குழம்பின் மணம் நாசியை துளைத்தது. வேலையற்ற ஆண்களுக்கு சாராயம் தேவைப்பட்டது. வழக்கத்தை விட அதிகமான பூனைகளின் புழக்கம் தெரிந்தது. பட்டணத்தின் நவீனமும் புதுமையும் இவர்களை அதிகம் பாதிப்பதில்லை. காடா விளக்கின் வெளிச்சத்தில் குலுக்கு கட்டை போட்டு குலுக்கியபடியே ‘வை ராஜா வை’ விளையாடிக் கொண்டிருந்தார்கள் விடலைகள். பெரிய பெரிய கட்டிடம் கட்டும் வடகூலிகள் கட்டை விறகு எரித்து கரிச்சோறு சமைத்துக் கொண்டிருந்தார்கள்.போதையின் உச்சத்தில் இருக்கும் போதெல்லாம் திரு வீதி அம்மன் கோவிலின் அருகில் இருக்கும் வேம்படி திண்ணையில்தான் படுத்துக்கிடப்பான் நரசய்யா. அன்றும் அது போல் இருந்தவனுக்கு தட்டில் சோறு போட்டு மீன் குழம்பை ஊற்றி பிசைந்து சிறுவனிடம் கொடுத்து அனுப்பினாள் நெலமா.சிறுவன் அவன் முன் வைத்துவிட்டு விளையாட சென்றுவிட்டான். ஒரே தட்டில் நரசய்யாவும் தெரு நாயும் உணவை உண்டார்கள். அதை பார்த்துக் கொண்டிருந்த நெலமாவுக்கு ரத்த அழுத்தம் எகிறியது.
சிங்காரம் வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடந்தான்.
“மே,ஒரு நூறு ரூவா இருந்தா குடுமே!”-மனைவியை தாஜா பண்ணிப் பார்த்தான். அவள் மசியவில்லை.
“இருயா, தோச மாவு வாங்கியாரேன். நீ துண்ற மசாலா தோசய நா செய்து காட்றேன் “-என்றாள். அவன் தலை கவிழ்ந்து கொண்டான். நமட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு நாட்டார் கடை நோக்கி ஓடினாள். இதுதான் நல்ல சமயம் என்று அவள் சிறுவாடு சேர்த்த பணம் இருக்குமிடத்தை தேடினான்.வாசலில் வெளிச்சம் மங்கி இருள் படிய தொடங்கிவிட்டது. மசால் தோசையின் சுவை அவனை அழைத்துக் கொண்டிருந்தது. தேங்காயும்- மாவு பாக்கெட்டும், கறிவேப்பிலையும் வாங்கிக் கொண்டு வந்தாள். சிங்காரம் வெளியே போய்விட்டான். காலையே சுற்றி வந்து கொண்டிருந்த பூனையும் சட்டினியும் தோசையும் சரிப்பட்டு வராது என்று நினைத்து அடுத்த வீட்டை தேடிப் போனது. தோசைக் கல்லில் மெல்லிய அகலமான தோசையை சுட முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தாள்-காஞ்சனா.
போதை இறங்கி வீட்டிற்குள் வந்தவனை,தன் பருத்த தடிமனான கைகளால் நரசய்யாவை துவம்சம் செய்து கொண்டிருந்தாள்- நெலமா. ஏழறை கட்டையில் அவள் கத்தும் நாராசமான வார்த்தைகள் வீதியெங்கும் கேட்டது.
ஒன்பது மணிக்கு பூனை போல் வந்து வீட்டிற்குள் படுத்துக் கொண்டான் சிங்காரம். குழந்தை ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்தது. மெல்லிய விசும்பல் ஓசை இரவின் அமைதியை கிளித்துக் கொண்டு கேட்டது. காஞ்சனாவின் கண்கள் குழமாக நிறைந்து தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது. நெலமாவைப் போல் அவள் பத்ரகாளியாக மாறவில்லை.
அந்த நிசப்தமான இரவில் எங்கிருந்தோ,ஒரு குழந்தையின் அழுகுரலும், குல்பி ஐஸ் விற்பவனின் மணியோசையும் கேட்டுக் கொண்டிருந்தது.
தோசை என்றாலும் மனைவியையும் குழந்தையையும் விட்டு விட்டு உண்பவன் மனுஷ ஜென்மம் கிடையாது!.
– ‘தளம்’, ஜூலை 2023 இதழில் பிரசுரமானது.