கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 1, 2024
பார்வையிட்டோர்: 243 
 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

ஆடிமாசம். மேல்காற்று மட்டு மரியாதையில்லாமல் புழுதியை வாரி இறைத்து கேலிக் கூச்சல் போடுகிறது. சேலை துணிமணிகளைக்கூட உடம்பிலிருந்து இழுத்துக் கொண்டு ஓடப்பார்க்கிறது. புன்செய் பொழிவில் நடக்க முடியவில்லை. ஆளைப் பிடித்துத் தள்ளுகிறது.

கம்மங்கதிர் மணி பிடிக்க ஆரம்பித்து விட்டது. கட்டை குட்டையாக நிற்க வேண்டிய ஒட்டு வீர்யக் கம்பம் பயிர், ரசாயன உரத்தில் வீர்யம் அதிகரித்த கரிசல்மண் வளத்தினால்… தலையை மறைக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. 

மாரியம்மாள், முதலாளி புன்செயை ஒரு பாசத்துடன் பார்த்துக் கொண்டே நடந்தாள். நீளம் நீளமாய் வளர்ந்திருக்கிற கதிர்கள், கனத்துப் போய் காற்றுக்கேற்ப ஒரு சேர அசைகிறபோது… பார்க்க எவ்வளவு அழகாயிருக்கிறது! 

‘இந்த ரெண்டரை குறுக்குத் தோட்டத்துலே அரைக் குறுக்கம் புஞ்சைலேயுள்ள கம்மந் தட்டைன்னா சரியாய்ப் போகும்… பிரிஞ்சு வாயைப் பெளந்து கிடக்குற வீட்டுக் கூரையை பிரிச்சு மேஞ்சிடலாம். வீட்லே கூரைதானே முக்யம்? அது திறந்துகிடந்தா… கேவலந்தானே! கூரையை மேஞ்சி ஒழுங்கு பண்ணிட்டாத்தான்… குடிச்ச கஞ்சி கூட்டிலே சேரும். 

அவள் நினைவுகளை ஒரு லாரியின் முரட்டுத்தனமான சத்தம் அறுத்தது. கிழக்கிலிருந்து வருகிற மெட்டல் ரோட்டில் ஒரு மஞ்சள் லாரி ஊருக்குள் ஓடி வருகிறது… கொள்ளையடிக்க வருகிறவர்களைப் போல… எதையோ அள்ளிக்கொண்டு ஓடப்போகிற வெறி வேகத்தில்… 

ஊர்லே இருக்கிற எருமை மாடுகளிலெல்லாம் பீய்ச்சுகிற பாலை மொத்தமாக வாங்கி கேன்களில் அடைத்து வைத்திருக்கிற சொஸைட்டிக்காரர்களிட்மிருந்துதூக்கிக் கொண்டு போக வருகிறது. காலி கேன்களைத் தூக்கியெறிந்து விட்டு, பால் கேன்களை ஏற்றி அடுக்கிக் கொண்டு லாரி நிற்காமல் ஓடிவிடும்… 

நாலு வீட்டுக்கு ஒரு வீடு கணக்குலேÅ… ஊர் முழுக்க மோர் கடையுற சத்தம் காலை நேரத்திலே என்னமாய் கேட்கும்…!வீட்டுக்கு வீடு ‘உறைமோர்’ கொடுத்து வாங்கிக் கொள்கிற அந்தப் பரஸ்பரம்!… மாடு இல்லாத பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சட்டி சட்டியாக மோர் ஊற்றிக் கொடுக்குற பெருந்தன்மையான அந்யோன்யம்… 

சவலை பாய்ந்த குழந்தைகளுக்கு தினந்தோறும் ஓசிப்பால் தருகிற இயல்பான தயாளம்…… பால் வாங்க வரத் தயங்குகிற குழந்தைகளின் தாய்களை ‘உறுத்தோட’ கண்டித்துக் கொள்கிற அந்தப் பிணைப்பு… 

ஒரு வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துவிட்டால்… கேட்காமலேயே வெண்ணெய் வந்து சேருகிற அந்த நிஜமான பரிவு.. 

…இப்படி எத்தனையோ பல நல்ல சமாச்சாரங்களை சுத்தமாதுடைத்து அள்ளிக்கிட்டுப் போகுதே… லாரி! 

மாத மிருமுறை நடக்கிற பால்பணப் பட்டுவாடா சந்தோஷத்தில் – ஜனங்கள் இழக்க விரும்பாமல் பறிகொடுத்து விட்ட பண்புப் பொக்கிஷம்! 

சூரியனை நோக்கி ஓடுகிற லாரியையே பார்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளுக்கு கண்கள் காந்தலெடுத்தது. இமை தட்டி முழித்துக் கொண்டாள். 

வந்த வேலை ஞாபகம் வந்தவளாக… திடுதிப்பென்று பரபரப்பானாள். தோட்டத்துக்குக் கீழ்புறம் படப்பாக அடையப்பட்டிருந்த மிளகாய் மாரில் உருவி ஒரு கட்டு கட்டிக் கொண்டாள். புஞ்சைக்குள் இறங்கி அகத்திக்கொழையை ஒடித்தாள். ஒரு கட்டு சேர்ந்து விட்டது. காலை வெய்யிலில் கழுத்தடிக்குள் வியர்வை நச நசத்தது. 

“முளகாமாரைக் கொண்டு போய் முதலாளி வீட்லே போட்டுட்டு… அகத்திக் கொழையை அவுக வீட்டு ஆட்டுக் கிடாய்களுக்கு தூக்கில் கட்டிவிட்டு… கஞ்சியை குடிச்சிட்டு, முதலாளி வீட்டு வயக்காட்டுக்கு பருத்தியெடுக்கப் போகணும்…” 

அவசர உணர்வில் கால்களுக்கு இறக்கை முளைத்துக் கொண்டது. 

வீட்டுக்குப் போனாள். புருஷனுக்குக் கஞ்சி ஊற்றித் தந்தாள். அலுமினியத் தூக்குச் சட்டியில் கம்மஞ் சோறையும், வறுத்த மிளகாய் வற்றலையும் வைத்து, மூடிக் கொடுத்து விட்டாள். பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கும், சத்துணவுக் கூடத்திற்கும் போய்விட… மாரியம்மாள் வயக்காட்டை நோக்கி ஓடினாள். 

நடையை எட்டிப் போட்டாள். 

கம்மந்தட்டைகள் விலகிச் சரிந்து… கூரை முகடு ‘முண்டமாய் கிடப்பது நினைவுக்கு வந்தது. 

‘…கூரை வாயைப் பொளந்து கெடக்குது. ரவ்வுலே படுத்தாகண்லே ஒறக்கம் ஒட்ட மாட்டேங்குது. கஞ்சிகுடிச்சா என்ன… குடிக்காட்டா என்னஉடம்பை மூடுறதுக்குதுணியும் படுத்துறங்க ஒழுகாத வீடும் இருந்தாகணும். கூரையை மேய்ஞ்சு முடியுற வரைக்கும் குடிக்கிற கஞ்சி கூட்டிலே தங்காது.’

கூட்டம் கூட்டமாக எருமைகள் பாதைகளை அடைத்துக் கொண்டு மேய்ச்சலுக்குப் போகின்றன. சின்னஞ் சிறு கிராமத்து மொட்டுகள் மாடுகளின் வாலில் பாடம் படித்துக் கொண்டு பின் தொடர்கின்றன. 

எல்லாவற்றையும் கடந்துகொண்டு மாரியம்மாள் வேகமாய் நடந்தாள், காலை வெய்யில் உஷ்ணமில்லாமல் அடித்தது. 

ஊருக்குக் கிழக்கே சற்றுத் தள்ளி அரண்மனை போல புதிதாகக் கட்டப்பட்டு சந்தன நிறத்தில் சூரியனாக பிரகாசித்த பால் சொஸைட்டிக் கட்டிடத்தைப் பார்த்தாள். பிரிந்து கிடக்கிற கூரையை நினைத்துக் கொண்டாள். 

முன்பெல்லாம்… இறவைத் தோட்டங்களில் கோடை வெள்ளாமையாக மயிலங்கம்பு பயிரிடுவார்கள். கம்மந் தட்டை ‘ஓங்குதாங்க உயரமாவளரும். தட்டையும் உலர உலர கரும்புத்தட்டை மாதிரி வலுவாக இருக்கும். ஒடியாது. அதை வைச்சு கூரை வேய்ந்து விட்டால்… எவ்வளவு அருமையாக இருக்கும். 

ஐந்து வருஷத்திற்கு கவலையில்லை… ஜம்மென்று இருக்கும். 

இப்போதெல்லாம் ஒட்டு வீர்யக் கம்புதான்… பயிர் கட்டை குட்டையாகத்தானிருக்கும். தட்டை காய்ந்து விட்டால் பொடிப் பொடியாய் நொறுங்கும்… சீக்கிரத்தில் செமித்து குப்பையாகிப் போகும். என்ன செய்வது? இப்போது இதைவிட்டால் வேறு வழி கிடையாது. இந்த ஒட்டுக் கம்பந்தட்டைகளை வைத்துத்தான் வேயவேண்டியிருக்கிறது. 

அது ஒண்ணு… முதலாளி இருக்கிற வரைக்கும் கம்பந்தட்டைக்கு அலைய வேண்டியதில்லை. கூரை வேய வேண்டிய வருஷத்திலெல்லாம் வேண்டுமென்கிற அளவுக்கு எடுத்துக்கொள்ளச் சொல்லிவிடுவார். 

‘நிலையிலேயே நாம் அறுத்துக் கொள்ள வேண்டியது. வண்டியில் பாரமேற்றி வீடு கொண்டு வந்து சேர்த்துக் கொள்வது நம்ம பொறுப்பு. கம்பந்தட்டைக்காக அஞ்சு பைசா கூட வாங்கிக் கொள்ளமாட்டார். 

அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா என்ன? வருஷமெல்லாம் வஞ்சகமில்லாமல் கொசுறு உழைப்பு உழைத்து விடுவது. சித்த சித்த நேரம் செய்ய வேண்டிய ஓசி வேலைக்கெல்லாம் அலுப்பு பார்க்காமல் – அட்டியில்லாமல் – கலந்து கொள்வது. மிளகாய் வற்றல் வருகிற மாசி பங்குனி மாசத்துலே ரவை, ரவைக்கு சண்டு வற்றல் பொறுக்குவது – ஆட்டு குட்டிக்கு கொழை ஒடித்துப் போடுவது வீட்டுக்கு விறகு கட்டிக் கொண்டுவந்து போடுவது – களத்துலே வற்றல் காய்கிற போது மழை கிழை வர்ராப்புலேயிருந்தா… ஓடி ஒடிக் கூட்டிக் குவிச்சு… மூடி வைப்பது… 

இது ஒரு வகையான கொடுக்கல் வாங்கல். கூலிவேலை செய்கிற நேரம் போக மீதி நேரங்களில் இதுமாதிரியான கூலியில்லாத ஓசி உழைப்பு தருவது. 

முதலாளி மவராசனும் தங்கமான குணம். ‘இட்டடை முட்டடை’க்கு உதவுவார். நல்லது பொல்லதுக்கு நாப்பது ஐம்பது கடன் கொடுப்பார். கூரை வேய்தலுக்குத் தவறாமல் தட்டை தந்து விடுவார். 

கம்பந்தட்டையும் வேறு எதற்கும் பிரயோசனப்படாது. காளை மாடுகள் இதைத் தின்னாது. யாரும் விலைக்கு வாங்கமாட்டார்கள். 

ஏதோ… அரைக்குறுக்கம் கம்பந்தட்டையை ஒழுகாம அறுத்துக்கிடச் சொல்லிவிட்டார்னா, வீடு பார்த்துக்கலாம். அப்பிகை காத்திகை அடை மழைக்கு பத்திரமா அடைச்சு முடங்கிக்கிடலாம்… 

கூரை வீட்டுலே ஒரு வசதி. ஓடு வேய்ந்த வீடு மாதிரி பனிக்காலத்துலே ரொம்பக் குளிர்வதும்… வெய்யில் காலத்துலே ரொம்பப் புழுங்குவதுமான தொல்லையிருக்காது. காரை வீடு மாதிரி. குளிர் காலத்துலே கதகதப்பா, கோடை காலத்துலே குளிர்ச்சியாக இருக்கும். 

முதலாளி நமக்குத் தருவார். வேற யாருக்கும் தரவா செய்வார்? நம்ம மேலே ஒரு வாஞ்சை, பிடித்தம். நாமும் நாள் தவறாமல் அவர் தோட்டத்துக்கே வேலைக்குப் போகிறோம். வேலைகள் நெறிபுரி’யா நடக்குற வெள்ளாமைக் காலத்துலே கூலி வேலையாளுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு வரும். அப்பக்கூட விலகாம, அவருக்கே வேலைக்குப் போறோம். அதனாலே அவருக்கு நம்மமேலே ஒரு பாசம்… 

மாரியம்மாளுக்குள் பெருமிதம் ததும்பியது. சக வேலைக்காரர்களுக்குக் கிடைக்காத சலுகை தனக்கு மட்டுமே கிடைப்பதில் ஒரு பெருமை. 

மாரியம்மாள் நடையைத் தொடர்ந்தாள். ஓடையைக் கடந்து, இறவைத் தோட்டங்களின் பொழியில் நடந்தாள். 

கதிரறுத்து கம்பந்தட்டையும் அறுத்து முடித்துவிட்டு ஒரு புஞ்செய்யில் உழுது போட்டிருந்தார்கள். கரிசல் மண், ஈரக் கனிவோடும், கரிய மினு மினுப்போடும் புரட்டப்பட்டுக் கிடந்தது. உழவுக்குள் குறுக்காக நடந்தாள். மண்ணுக்குள் பாதங்கள் புதைந்து, ஒரு குளிர்ச்சியான சுகத்தை அனுப வித்தன. 

‘இன்னிக்குச் சாயங்காலம், தட்டை வேணும்னு முதலாளிகிட்டே சொல்லிடணும்’ என்று மனசுக்குள் கவனமாகக் குறித்து வைத்துக் கொண்டாள். 

பருத்தி எடுத்து முடித்துவிட்டு, சாயங்காலம் வீடு திரும்பினாள்.காப்பித் தண்ணியைக் கொதிக்க வைத்து விட்டு, நூறு பால் வாங்க கிளாஸுடன் சொஸைட்டிக்கு நடந்தாள். 

ஒரு மைதானம் முழுவதும் எருமைகள். கன்று களுடனும் இல்லாமலும் நெருக்கமாய் நின்றன. மாட்டுக் காரர்கள் பால் பீச்சிக் கொண்டிருக்க, வெண்டர்கள் மாட்டுக் காரர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். 

மைதானத்தின் ஓரத்தில் பாலை அளந்து ஊற்று கிறார்கள். அங்கும் நிறைய மனிதர்கள்… பாலை ஊற்றுகிற வர்கள்… வாங்குகிறவர்கள்… சிட்டை பதிகிறவர்கள்… சில்லறை பால் வாங்குகிறவர்கள்… 

சொஸைட்டி முளைச்சு, லோனு கொடுத்த பெறகு ஊருக்குள்ளே எருமை மாடுக எம்புட்டோ பெருகிப் போச்சு. பால்மாடு வளர்க்குறது வெவசாயம் மாதிரி ஒரு தொழிலாகிப் போச்சு. காடுகள்லே ஜனங்க ‘புல்லு, புல்லு’ என்று அலைஞ்சு மாயுதுக. புல்லுக்கும் ஏக தட்டுப்பாடு. இப்பவெல்லாம் புஞ்சைக்குள்ளே புல்லறுக்க சம்சாரிக நுழையவிட மாட்டேங் குறாங்க. ஊருக்குள்ளே இம்புட்டு மாடுகள் இருந்தா சம்சாரிகதா என்ன செய்வாக. பாவம்? புஞ்சை அழிமானம் ஆகுறதை சகிச்சுக்கிடவா செய்வாக…! 

சம்பந்தமில்லாதவைகளை நினைவுகள் மேய, மாரியம்மாள் பாலை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு விரைந் தாள். கூரை வேய வேண்டியது பற்றியும், பிரிந்து கிடக்கிற அவலம் பற்றியும் முதலாளி அம்மாகிட்டே முந்தாநாள் ஜாடைமாடையாகச் சொல்லி வைத்தது ஞாபகத்துக்கு வந்தது. 

‘பெறகு போய், முதலாளிகிட்டே வெளிப்படையா சொல்லிரணும்’என்று காலையில் மனசில் குறித்து வைத்ததை மறுபடியும் வாசித்துக் கொண்டாள். 

வீட்டுக்குள் நுழைந்தாள். ‘காப்பி’யில் பாலை ஊற்றிக் குழந்தைகளுக்கும் புருஷனுக்கும் அந்தத் தேயிலைத் தண்ணியை ஊற்றிக் கொடுத்தாள். தானும் குடித்தாள். 

ஆடிமாசக் காற்று ரொம்ப ரோஷத்துடன் வீசியது. கூரை முகட்டில் மோதி இரைந்தது. வீட்டிற்குள் கருந்தூசிகள் உதிர்ந்தன. பிய்ந்த கூரை வழியே பார்த்தாள். வானத்தில் மிதந்த மலட்டு மேகத் துணுக்குகள் தெரிந்தன. 

அடுப்பில் சோறு வெந்து கொண்டிருந்தது. ஊருக்குள் பால் லாரி நுழைகிற சத்தம் கேட்டது. 

இருட்டி விட்டது. பிள்ளைகள் உறங்கி விட்டனர். புருஷன் நடுத்தெருப் பக்கம் போய்விட்டான். அவள் முதலாளியின் வீட்டுக்குக் கிளம்பினாள். 

வீடு நெருங்கிவிட்டது. 

வீட்டுக்குள் முதலாளியுடன் கீழத்தெரு செல்லம்மாள் பேசிக்கொண்டிருந்தாள். நிறைய எருமை மாடுகள் வைத்திருக்கிறாள். கையில் கொஞ்சம் துட்டுச் செருக்கு. மாரியம்மாளும் அவளும் அவ்வளவாக முகம் கொடுத்துப் பேசிக்கொள்ள மாட்டார்கள். சின்ன மனஸ்தாபம். 

‘சரி, அவள் பேசிவிட்டுப் போகட்டும்’ என்ற நினைப் பில் வீட்டோடு ஒட்டிய தொழுவத்திற்குள் மாரியம்மாள் நுழைந்தாள். கிடாய்கள் இவளைப் பார்த்து நட்புச் சந்தோஷத்தில் கட்டுக்கயிற்றை இழுத்துக் கொண்டு ஆடியது. 

“அப்ப. அண்ணாச்சி, நா வரட்டா?” 

“சரிம்மா… சரிம்மா..?” 

முதலாளி குரலில் மகிழ்ச்சி. செல்லம்மாள் வெளியேறு கிற காலடிச் சத்தம். 

வீட்டம்மாவுடன் முதலாளி ஒரு குதூகலக் குரலில் பேசுகிற சத்தம்… 

“பார்த்தீயா, எந்தக் காலத்துலேயும் இல்லாத அதிசய கூத்தாயிருக்கு. ஒட்டுக் கம்பு தான்யத்துக்கு உருப்படியா வெலையில்லை. யாரும் சீந்திப் பாக்காத இந்தக் கம்பந் தட்டைக்கு வந்த கிராக்கியைப் பார்த்தீயா?” 

”ஊர் ஊருக்கு பால் சொஸெட்டிகளும், எரும் மாடுகளும் பெருத்துப் போச்சு. கூளத்துக்கு தட்டுப்பாடு. புல்லுக்கு ஒரு புஞ்சையிலேயும் நுழைய முடியலே… பாவம் என்ன செய்வாக. என்னத்தையாச்சும் வாங்கிப் போட்டு எரும மாடுகளை வளர்த்தாகணுமில்லே? சரி, என்ன வெலைன்னு பேசி முடிச்சீக?” 

“கேட்டுக்கிட்டு இருந்தீல்லே? ரெண்டரைக் குறுக்கம் கம்பந்தட்டைக்கும் நானூத்தறுவத்தைஞ்சு ரூவா.” 

“அரைக்குறுக்கம் கம்பந்தட்டைக்கு வெலை பேசாம நிறுத்தி வச்சியிருந்துருக்கலாம்…” 

“என்னத்துக்கு? ” 

“கூரை பிரிஞ்சு கிடக்கு. மேயணும்னு மாரியம்மா சொன்னா. நம்மளைத் தவிர வேறு யாருகிட்டே போய் கேப்பா, பாவம்!” 

“ம்ம்ம்… அப்…பு…டியா” 

“நம்ம தட்டையில்லாம அவள் எப்பவும் கூரை மேய்ஞ்சதுல்லே. வேற வீட்டுக்கும் வேலைக்குப் போக மாட்டா. நம்மதானே குடுத்து உதவணும்? வழமைபோல அரைக் குறுக்கத்தை அவளை அறுத்துக்கிடச் சொல்லி யிருக்கலாம்.” 

“நீ சொல்றது வாஸ்தவம்தான். செல்லம்மாகிட்டே ரேட் பேசி, சம்மதம் சொல்லிட்டேன்லே? ஆமா, இதுலே என்ன வழமை வேண்டி கிடக்கு? சம்பளமில்லாமலா வேலைக்கு வாரா? முன்னாலே தட்டை கேக்க நாதியிருக்காது. குடுத்தது சரிதான். இப்போ… ஐந்நூறு ரூவாயை அடுத்து வருதே… இதை வுட்டுடவா முடியும்? வழமைக்காக வர்ர ரூவாயை விட முடியுமா, என்ன?” 

தொழுவத்திற்குள் நின்ற மாரியம்மாள் இடிந்து போனாள். உள்ளுக்குள் ஒரு பகுதி சரிந்து விழுந்து நொறுங்கு வது போலிருந்தது. கண்களுக்குள் நீர் கோர்த்து உறுத்த லெடுத்தது. 

‘வாஞ்சை… பிடித்தம்… பாசம்’ என்றெல்லாம் எவ்வளவு செருக்குடன் இருந்தாள். அவளுக்கு அவமானமாக இருந்தது. 

மனசுக்குள் ஆடிமாசக் காற்று, புழுதியை வாரி இறைக்கிறது. 

பால் லாரி தினம் இரண்டு தடவை ஊருக்குள் நுழைந்து பால் கேன்களை மட்டுமா தூக்கிக்கொண்டு போகிறது! இந்த வழமையையுமல்லவா அள்ளிக் கொண்டு போய்விட்டது! 

சூழ்ந்து நின்ற வெறுமை அவளுக்குள் ஒரு அவலச் சோகமாக ஏறிக்கொண்டு கனத்தது. 

அந்த வேதனையில் ஒடுங்கிப் போய் மௌன அழுகையோடு மாரியம்மாள் வெளியேறி, பிரிந்து கிடக்கும் கூரை வீட்டை நோக்கி அரவமில்லாமல் நடந்தாள். 

– செம்மலர் – செப்டம்பர் 1984.

– சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987, கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *