கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2022
பார்வையிட்டோர்: 4,738 
 
 

(1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘நான் என் சாய்வு நாற்தளர்ந்த காலியிற் படுத்துக்கிடக்கின்றேன். எழுபது ஆண்டுகளாக வாழ்ந்து விட்ட என் தளர்ந்த உடலுக்கு இந்தப் படுக்கையிலே ஒரு சுகம். அடுக்களையில் குரல் கேட்கின்றது. அது என் பேரன் சச்சியின் குரல்தான். அவனுடைய குரல் எப்பொழுதும் எடுப்பானதாகத்தான் இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒரு நாடகம் இடம் பெற்ற தாம். பனியும் அதுவும்….. நான் போய்ப் பார்க்க வில்லை . நல்ல வடிவாகச் சச்சி நடித்தான் என்று பலர் புகழ்ந்தார்களாம். அதைப் பற்றிப் பத்திரிகையிலே புதினம் வந்திருக்கிறது. அந்தப் புதினத்தைத்தன் தாய்க்கு உரத்துப் படித்துக் காட்டிப் புழுகிக் கொண்டிருக்கிறான்.

பாவாடை தாவணி அணிந்த ஒருத்தி, படலையைத் திறந்து, பத்திரிகையும் கையுமாக வருகின்றாள். என் கண் கொஞ்சம் புகைச்சல்’. யார்? அவள் திலகவதிதான். பெரிய பிள்ளை’ யாகி மூன்று வருடங்களாகின்றன. அந்தக் காலத்தில் சாமத்தியப் பட்ட பிறகு ஒரு குமர்ப் பெண்ணுடைய முக தரிசனம் கிடைக்கத் தவமிருக்க வேண்டும். காலம் மாறிப் போச்சு. என்னை கவனிக்காதவளைப் போல அவள் அடுக்களைப் பக்கம் விரைகிறாள். முகம் மலர்ச்சியிலே பொங்க, “அத்தான் அத்தான்” என்று அழைத்தபடி ஓடுகிறாள். “என்ன திலகவதி?” உள்ளேயிருந்து சச்சியின் குரல் கேட்கிறது.

“நான் சொன்னேனே அத்தான். நீங்கள் நல்லா நடிச்சியள். பேப்பரிலே வருமெண்டு. பாத்தியளே இந்தப் பேப்பரை ……”

சச்சியின் நடிப்புத் திறன் வழி வழியாக வந்த சொத்து என்று நினைத்துப் பார்ப்பதில் என் மனம் மகிழ்ச்சி கொள்ளுகின்றது. சச்சியின் தகப்பன்-என் மகன் ஒரு காலத்தில் நாடகம் ஆடினவன் தான். சிறுத்தொண்டனாக, நத்தனாராக அவன் ஆடிய கூத்துக்களை நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுது பத்திரிகைகளில் இதைப் பற்றி எழுதுவதுமில்லை ; எந்த மச்சாளும் புழுக ஓடி வருவதுமில்லை .

என் மகனுடைய நடிப்பிலே தொற்றி, என் நினைவுகள் வேறொரு கிளையிலே தாவுகின்றன. தளர்ந்து போயிருக்கும் என்னுடைய உடலை இப்பொழுது பார்ப்பவர்கள் நானும் ஒரு காலத்தில் கூத்தாடியவன் என்பதை நம்பப் பஞ்சிப் படுவார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என்று நினைக்கிறேன். ஓம் ; வள்ளிசாக ஐம்பது ஆண்டுகள் இருக்கும். நான் ஆடிய கூத்தைக் கண்டு “சபாஷ் போட்டவர்கள் ஆயிரமாயிரம். கொட்டகைக் கூத்தில் நான் உக்கிரசேனனாக நடித்த காட்சி இப்பொழுதும் என் கண் முன்னே நிற்கும். தூக்க முடியாத பெரிய கிரீடத்தைத் தலையில் கொண்டு, வில்லுடுப்புக்கள் போட்டு, பெரிய செங்கோலுக்குக் கீழே எறி வெடிகளை வைத்து ‘படார், படார்’ என செடித்து முழக்கி, “அண்டமெல்லாம் கிடு கிடுத்து நடுங்கிடாதோ இயமனும் நடுங்கிடானோ” என நான் பாடினால், தூங்கிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகள் கூட எழுந்து உட்கார்ந்து விடும். ஒரு மைலுக்கப்பாலுள்ளவர்கள் கூட, “உக்கிரசேனன் களரிக்கு வந்து விட்டான்” என்று ஓடோடி வருவார்கள்.

அண்ணாவி கந்தப்பிள்ளை என்பவர் அந்தக் காலத்தில் பெரிய அண்ணாவியார். வருதோத்திரங்களை’ அவர் பாடி, கூத்தில் வரும் ராசா ராணிகளை-நடிப்பவர்களை-அறிமுகப்படுத்தும் அழகுக்கு நிகரே கிடையாது *என்பது எல்லோருக்கும் தெரியும்

“அத்தான் கதாநாயகன் வேஷம் போட்டுக் கொண்டு மேடையில் நின்ற அழகைப் பார்க்க வேணும் அத்தை…உடனே ஆளை அடையாளம் தெரியலை” அடுக்களையில் திலகவதியின் குரல் கேட்கிறது.

ஒரு தடவை பள்ளிக் கூடத்து மேடையில் ஆடியதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம். நாங்கள் பத்துக் கிழமைகளாகத் தொடர்ந்து கூத்தாடியிருக்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு எட்டு மணிக்குக் கூத்துத் தொடங்கும். எட்டு மணியானதும் பார்த்தால் அந்த இலுப்பையடி வெளியிலே ஒரேசன சமுத்திரம். கண் எட்டு மட்டும் மனிதத் தலைகள். என்னுடைய காட்சி விடிய நாலு மணிக்குத் தான். ஒரு பெண்ணை வலோற்காரஞ் செய்யும் அரக்கனைக் கொன்றொழிக்கும் வீரம் மிக்க அரசனாக நான் நடித்தேன். என் நடிப்பைப் பார்த்து என் இரசிகர்கள் சால்வைகளில் பணம் முடிந்து எறிவார்கள். அதை எடுத்து அண்ணாவியார் வாழ்த்துவார். “இந்த நாடகத்திலே இன்னாரின் நடிப்புக்காக செல்வச் சீமான் பொன்னம்பலம் போட்ட கொள்ளே கொள்ளை இன்றும் போடுவார் இன்னும் போடுவார்” என அவர் வாழ்த்தும் காட்சி அருமையிலும் அருமை. இரவு பத்து மணிக்குத் தூக்கம் போட்டவர்கள் கூட, உக்கிரசேனனாக நான் வந்ததும் எழுந்து விடுவார்கள். என் தடல் புடல் நடிப்பு அப்படிப்பட்டது. அந்தப் பத்து வாரங்களும் நான் இந்த -ரில் இராசா மாதிரித்தான் தலை நிமிர்ந்து நடந்தேன்.

என் தலை நிமிர்வுக்கு கூத்திலே விழுந்த சால்வைகளும் மாலைகளும் காரணமென்றாலும், ஒரேயொரு சால்வையும் அதில் மடிந்து போட்ட ஒரு வெள்ளி ரூபாவும் தான் முக்கிய காரயம். அந்தச் சால்வையை வைத்துக் கொண்டு அண்ணாவியார் வாழ்த்தத் தொடங்கும் போது என் மனம் கிளுகிளுக்கும். அதைப் போடுபவர் என் மாமா சங்கரப்பிள்ளை. அந்தச் சால்வை முடிச்சிலுள்ள வெள்ளி ரூபாவில் என் மச்சாள் சின்னம்மையினுடைய இதயம் ஒளிந்து கொண்டிருப்பதான நினைவே நிறைவு.

“அத்தான் மேலுள்ள ஆசையில் இவள் புழுகுகிறாள்….” அடுக்களையில் சச்சியின் தாய் பேசும் குரல்.

இந்தக் காலத்துச் சிறிசுகளின் காதல். இந்தக் கிழவன் அந்தக் காலத்தில் காதலித்தான் என்று சொன்னால் இவர்கள் சிரிப்பார்கள். இவர்களுக்குக் காதல் என்பது இந்தக் காலத்துக்குரிய பண்டம் என்ற நினைப்பு. அது எந்தக் காலத்துக்கும் உரியது. அந்தக் காலத்தில் ஓர் ஒழுங்கு முறை இருந்தது.

பத்தாவது வார முடிவில் அண்ணாவியார் கூத்து உடுப்புகளுடனே எங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு பெரிய பணக்காரப் புள்ளிகளின் வீடுகளுக்கும், கூத்தாடியவர்களின் உறவு முறையானவர்களின் வீடுகளுக்கும் போய்ச் சிறிய ஆட்டம் காட்டிச் சன்மானம் பெறுவார்.

சில பெரிய புள்ளிகளின் வீடுகளைத் தரிசித்து’ விட்டு, என் மாமா சங்கரப்பிள்ளையின் வீட்டுப் படலையைத் தாண்டி முற்றத்துக்கு வருகின்றோம். காதல் எத்தகைய விந்தையான உணர்ச்சி என்பைைத அன்றைக்குத்தான் உணர முடிந்தது. எப்பொழுது இந்த முற்றத்துக்கு வருவோம் என்று என்மனம் உதைத்துக் கொண்டிருந்தது. வந்தாகி விட்டது. நெஞ்சத்தின் உதைப்பு, கூச்சம் என்ற வேறு உருவந்தாங்கிவிட்டது. ஒரு பக்கமாக ஒதுங்கி நடிகர்களுக்குப் பின்னால் மறைந்தும் மறையாததுமாக நின்றேன். அண்ணாவியார் கூத்தில் நடந்த ஒரு சிறுபகுதியாகிய பால பார்ட்’ நிகழ்ச்சியைக் காட்டி விட்டு நிறுத்தினார். என் மாமா வெற்றிலைத் தட்டத்திலே ஐந்து வெள்ளி ரூபாக்களை வைத்து அண்ணாவியாரிடம் நீட்ட, அவரும் வாழ்த்தி முடித்தார். நாங்கள் போகத் தயாரானோம்.

அப்பொழுது “என்ன மருமகப்பிள்ளை, பின்னுக்குப் பதுங்கி நிக்காமல் முன்னுக்கு வந்து நில்லேன்’ என்று என் மாமா அழைத்தார். கூத்தாடுவது சுகம். இப்படிப்பட்ட நேரத்தில் எல்லோர் முன்னாலும் போய் நிற்பதுதான் வலு வில்லங்கம் என்று தோன்றியது. சிறிது துணிவுடன் முன்னால் போய் நின்றேன். தன் மகளுக்கு என் முழு வேஷத்தைக் காட்ட நினைத்திருக்கலாம் என்று என்னுள் எழுந்த நினைவு அலை ஒன்றே எனக்கு அந்தத் துணிச்சலைத் தந்தது. கதவுக்குப் பின்னால் இருந்த வளைகரம் கதவைச் சிறிது நீக்கியதையும், கழுகாக அலைந்த என் கண்கள் பார்த்தன. என்னுள் ஒரு சிலிர்ப்பு.

மாமா தன் மனைவியான பாக்கியம் மாமியை அழைத்து, “மருமகப்பிள்ளை இந்தக் கூத்திலை உக்கிர சேனனான நன்றாக ஆடி சபாஷ் வாங்கினார். கண் திட்டி நாத்திட்டி படப் போகும். ஒரு கறுப்புப் பொட்டு வைத்து விடு” என்று சொன்னார். பாக்கியம் மாமி என் நெற்றியில் பெரியதாக ஒரு கறுப்புப் பொட்டு வைத்து விட்டுத் திரும்பினாள். அந்தக் கணத்தில் என் நெஞ்சிலே விரிந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.

“ஓம், பிள்ளை இப்பவே உன்ரை கொத்தானிலை வலு கரிசனை தான். பொழுது படையுக்கை மிளகாய் தடவி சுடத்தான் வேணும்” சச்சியின் அம்மா தான் பேசுகிறாள். அடுப்படியில் நடக்கும் சமா’ இன்னமும் கலையவில்ைைலப் போலும்.

பாக்கியம் மாமி இட்ட அந்தப் பெரிய கறுப்புப் பொட்டில் எல்லாத் திருஷ்டிகளும் அழிந்து விட்டன என்ற நிறைவு என் மனதிலே பொங்கிய அதே நேரத்தில், ஒருவன் காறித் துப்புவது என்காதில் விழுந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். எல்லாருமே திரும்பிப் பார்த்தார்கள். அங்கே சண்முகம் நின்றான். எல்லோர் முகங்களிலும் எழுந்து நின்ற கேள்விக் குறிக்குப் பதில் சொல்லுபவனைப் போல, “குத்தகை கொடுக்க வக்கில்லாதவனுக்கு இராச கூத்து எதற்கு? கறுப்புப் பொட்டு எதற்கு? அவரைப் பார்த்துக் கண் திருஷ்ட்டி படப் போகுதா மல்லோ”? என்று எல்லோர் செவிகளிலும் விழும் படியாகக் கூறினான். அந்த நாராசம் கலந்த வார்த்தைகள் என் செவிகளில் விழுந்ததுமே, சண்முகத்தின் கழுத்தைத் திருகிக் கொன்று விட என் கரங்கள் துடித்தன. மாமாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்திலும் கோபம் கொப்புளித்தது. கைகலப்பு எழும் சூழல். அண்ணாவியார், ஒரு நல்ல காரியம் நடக்கும் போது விபரீதம் விளையக் கூடாது என்று தடுத்து விட்டார்.

“நாடகம் வடிவா ஆடினது போதும். சோதினை முடிவு வந்தாலல்லவோ தம்பியின்ரை வண்டவாளம் தெரியப் போகுது?”

“அத்தை, அத்தான் இந்தப் தடவை கட்டாயம் பாஸ் பண்ணுவார்” திலகவதி தன அத்தானுக்காகப் பரிந்து பேசுகிறாள்.

“உப்பிடித்தான் நீ போன முறையும் சொன்னனி.”

அடுக்களையில் பேச்சு வேறு திசையிலே திரும்புகின்றது.

என் மாமா முன்னிலையில், என் மச்சாள் அறியும் வண்ணம், நான் மானபங்கப் படுத்தப் பட்ட அந்த நிகழ்ச்சி என் மனத்தை அரித்தது. இரவு முழுவதும் தூக்கம் இல்லை. பொழுது விடிந்தது. என்னுள் ஒரு தெளிவு ஏற்பட்டது.

தோட்டம் குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டிருந்தேன். புகையிலைக் கன்றுகளை விட, சாமை, குரக்கன் பயறு முதலியனவும் பயிரிட்டேன். இவை சாப்பாட்டிற்கு. புகையிலை அந்தக் காலத்தில் !- கணக்கில் விற்பதில்லை. என்றாலும், புகையிலை விற்ற காசு மிஞ்சும். பாடத்து முசுப்பாத்தியில் காசை வேறு வழிகளில் தாராளமாகச் செலவு செய்தேன். குத்தகைப் பணத்தை இரண்டு வருடங்களாகக் கொடுக்க வில்லை. நான் சோம்பேறியுமல்ல. இரண்டாயிரங்கன்று புகையிலைக்கு ஏழு மணித்தியாலம் துலாவை விட்டு இறங்காமல் உழக்கக் கூடிய வாலிபன் என்று ஊரில் எனக்குப் பெயர். இதனால் என்னுள் இருந்தமான உணர்ச்சி வீறு கொண்டு எழுந்தது.

கூத்துத் தொடங்குவதற்கு முன்பே அண்ணாவியார் செலவுக் கென்று – இடையிலே குழப்பாமல் இருப்பதற்காகவும் தான் – ஒவ்வாருவரும் நூறு ரூபா கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்து, ஒரு மனேஜரையும் நியமித்து விட்டார்கள். நல்லதம்பி இதற்காக நியமிக்கப்பட்டார். அவரிடம் பணத்தை முதலிற் கொடுத்தவன் நானே. கூத்து என்றால் எனக்கு அப்படிப்பட்ட ஒரு பைத்தியம் இருந்தது.

கூத்து பழகத் தொடங்கி விட்டோம். இந்தச் சண்முகம் தொடக்கத்தில் இராசா வேஷத்துக்குச் சேர்க்கப்பட்டான். ‘தொண்டை சரியில்லை” என்று அண்ணாவியார் கூறி, அந்தப் பகுதியை என்னையே ஆடச் சொன்னார். கூத்தாடிய எல்லோருக்கும் என்மீது ஒரு விதப் பொறாமை. இதனால் என்னை வெல்லக் கூடியதாக உடுப்புகள் தேட ஆரம்பித்தார்கள். இந்தப் போட்டியில் நானா விட்டுக் கொடுப்பவன்? என் முடிக்காக, வில்உடுப்புக்காக, புஜ கிரீடங்களுக்காக, கையிலே சுழற்றும் பட்டு இலேஞ்சிக்காக, நீண்ட செங்கோலுக்காக எவ்வளவோ செலவழித்தேன். அத்துடன் வெள்ளுடுப்பு, மேடையேற்றம் என்பவற்றுக்கெல்லாம் பார்த்தும் பார்க்காமல் என் கையால் பணம் விட்டேன்.

நான் ஆடிய கூத்தின் பலன்? குத்தகைப் பணம் கொடாமல் விட்டதற்காகக் காறி உமிழ்கிறான் சண்முகம்!

“உப்பிடி நடிப்புத் திறமையோடை இந்தியாவில் பிறந்திருந்தால் நாளைக்கே சினிமாஸ்டார்”

“உந்த வசுக்கோப்புப் பைத்தியம் குறுக்கிட்டுத் தான் படிப்புகளை நாசமாக்குது; திலகவதி உன்னை வீட்டிலை தேடப் போகினம்; நீ போயிட்டு வா பிள்ளை.” சச்சியின் தாயின் குரலில் கண்டிப்பும் சற்றே ஏறி இருக்கின்றது.

அடுத்த நாள் மாமா என்னை ஆள் விட்டுக் கூப்பிடுவித்தார். குத்தகைக் காசு முப்பது ரூபாவையும் என் முன்னால் எடுத்து வைத்தார். சண்முகத்தின் முகத்திலே வீசியெறிந்து விட்டு, தன் தோட்டத்திலே வேலை செய்யும்படி கூறினார். கோப்பி கொண்டு வந்து தந்த பாக்கியம் மாமி இன்னொரு புதினத்தையும் சொன்னார். “இருக்கிற காணி பூமிகளை வித்தாவது அத்தான் இன்னும் இரண்டொரு கூத்து ஆடவேணும். சண்முகம் போன்ற ஆட்கள் எரிச்சலிலை சாக வேணும்” என்று இரவு முழுவதும் என் மச்சாள் சின்னம்மை வாய் பொருமினாளாம்.

அப்பொழுது நான் நிதானத்தை இழக்காமல் யோசித்தேன். என்கையில் உரமிருக்கிறது. தோளில் வலு இருக்கிறது. சண்முகம் கூறிய வடு இருக்கிறது. இரக்கமும் பரோபகாரமும் தேவையில்லை. என் சொந்தக் காணியிலை செழிப்பாகப் பயிர் செய்யும் வரைக்கும் கூத்தைப் பற்றியும், விவாகத்தைப் பற்றியும் எண்ணிப் பார்ப்பதேயில்லை என்று என் மனதிற்குள் நான் சபதமேற்றேன். பணத்திற்குள் வேறு ஏற்பாடு செய்து விட்டேன்” என்று மாமா தந்த பணத்தைத் தட்டிக்கழித்து’ விட்டு வீடு திரும்பினேன்.

கூத்துக்காக நான் செய்வித்த இராச முடி, வில்லுடுப்பு, செங்கோல், முத்துமாலை எல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றின. மின்னல் போல ஒரு யோசனை. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு கூத்து நடப்பித்த மனேஜர் நல்ல தம்பிடம் சென்றேன். அங்கே அண்ணாவி கந்தப்பிள்ளையும் இருந்தார். என் கூத்துடுப்புகளை நல்லதம்பி அவர்களின் பாதத்தின் அடியில் வைத்து, அவற்றை அடமானமாக வைத்துக் கொண்டு நூறு ரூபா தரும்படி கேட்டேன்.

என்னுடைய மனோ நிலையை அவர் புரிந்து கொண்டார். பணத்தை எடுத்து வருவதற்காக உள்ளே போக ஆயத்தமானார்.

அப்பொழுது அண்ணாவியார் தன் கைலேஞ்சியில் முடிந்து வைத்திருந்த பணத்தில் நூறு ரூபாவை எடுத்து என்னிடம் நீட்டி, “முருகேசு, இந்தா இதைப்பிடி. சும்மா தலையை ஆட்டாதே. உன் குருவான நான் உனக்கு-உன் நடிப்புக்கு- தரும் சன்மானம் என்று வைத்துக் கொள் என்றார்.

“குருவுக்குத்தான் சீஷன் தட்சணையாக ஏதாவது கொடுக்க வேணும். அதைவிட்டுத் தங்களிடம் கைநீட்டி வாங்க” என்று நான் சொல்லி முடிப்பதற்குள், “பரவாயில்லை, முருகேசு எடுத்துக் கொள். நீ நல்லாக வந்த பின் இரண்டு மடங்காகத்தாவேன்” என்று அவர் சொன்னார். இந்தக் காட்சியை நல்ல தம்பி மனேஜரும் பார்த்துக் கொண்டு நின்றார்.

“இந்தா, முருகேசு! நான் சொல்வதைக்கேள். இந்த உடுப்புகளை நான் அண்ணாவியாரிடமே கொடுக்கிறேன். அவருக்கு வேறு கூத்துகளுக்கும் உதவும். அதற்காக அவரிடமிருந்து நூறு ரூபாவைப் பெற்றுக் கொள். அடமானம் என்ற கதையே வேண்டாம்” என்றார் மனேஜர்.

விஷயம் அவ்வளவோடு முடிந்தது. நான் பணத்தைப் பெற்றுக் கொண்டு. கண்களிலே துளிர்த்த நீரை மறைத்துத் திரும்பும் பொழுது, “முருகேசு, இதை நீயே கொண்டு போ. உன் நடிப்புத் திறமைக்காக நான் தரும்பரிசு” என்று கூறி அண்ணாவியார் செங்கோலை என்னிடம் நீட்டினார். அதைப் பெற்று நான் கண்களிலே ஒற்றிக் கொண்டேன்.

இந்தக் காலத்தில் ஒரு பரப்புக் காணி என்ன விலை விற்குது? அந்தக் காலத்தில் எழுபது ரூபாவுக்கும் ஏழு பரப்புக் கலட்டி நிலம் வாங்கினேன். என் சலியாத உழைப்பும் முயற்சியுமே அதைத் தோட்ட மாக்கியது.

“அப்ப நான் போயிட்டு வாறேன் அத்தை….” திலகவதி என்னைத் தாண்டி, படலையைத் திறந்து செல்கிறாள்.

நான் என் கலட்டி நிலத்தைப் பண்படுத்தப் பெருமுயற்சி செய்து கொண்டிருக்க, தன் காணியை விற்றாவது நான் கூத்தாட வேண்டுமென்று ஆசை காட்டிய என் மச்சாள் சின்னம்மை அந்தக் காணியையே சீதனமாகக் கொண்டு இன்னொருவனுக்கு வாழ்க்கைப் பட்டு விட்டாள். எல்லாம் அளந்த படியே நடக்கும். நகன் கூத்தாடி புகழையும் இகழையும் பெற்றேன். விதி தன் கூத்தை ….. உம்…. உலகமாகிய மேடையில், ஆடி விட்டது. விதியாகிய அண்ணாவி நடத்தும் கூத்தும்…. நாங்களும்… பல பேரப்பிள்ளைகளைக் கண்டு விட்டேன் நான்.

சச்சி தன் கையில் பத்திரிகையுடன் நான் இருக்கும் இடத்துக்கு வருகின்றான். அந்தப் புதினத்தை எனக்கும் வாசித்துக் காட்ட அவனுக்கு விருப்பம் போலும், பெரிய அறையில் பெட்டகத்துக்கும் பின்னால் இன்னும் நான் பத்திரப்படுத்தி

வைத்திருக்கும் செங்கோலைப் பார்க்கும் ஆசை என் உள்ளத்தில் எழுகிறது.

– 1967, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

1 thought on “கூத்து

  1. நல்ல கதை. இலங்கை தமிழ் புரிய சற்று சிரமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *