கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 20,428 
 
 

சாந்தி அடுப்பில் வேலையாக இருந்தாள். அவள் ஒரு வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு, கையைத் துண்டில் துடைத்துக்கொண்டே வந்து கதவு துவாரத்தின் வழியே வெளியே யார் நிற்பது என்று பார்த்தாள். மாடி வீட்டில் குடியிருப்பவளின் அம்மா குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள்.

கதவைத் திறந்து “வாங்க, எப்படி இருக்கீங்க” என்றாள் சாந்தி.

உள்ளே சிரித்துக் கொண்டே வந்த அந்த அம்மாளுக்கு 50 அல்லது 52 வயது இருக்கலாம். பாதி நரைத்து பாதி நரைக்காத தலை. நெற்றியில் பெரிய பொட்டு, கைகளில் வளையல், காலில் மெட்டி, முகத்தில் மஞ்சள் பூசியிருந்த சுவடு. அழகான காட்டன் புடவை உடுத்தியிருந்தார். பார்க்க லட்சணமாக இருந்தார். கையில் நாலுமாதக் குழந்தையை வைத்திருந்தார்.

தினமும் இந்த நேரத்தில் அவர் சாந்தி வீட்டிற்கு வருவது வழக்கமாகி விட்டது. ஒரு நாள் இருவரும் கடிதம் எடுக்க மெயில் பாக்சிற்குச் சென்றபோது சந்தித்தார்கள். சாந்தி தன் மகளிடம் தமிழில் பேசுவதைக் கேட்ட அந்த அம்மாள் சாந்தியிடம் வந்து “நீங்க தமிழா? எந்த ஊரு? நானும் தமிழ்தான். இங்க என் பெண் வீட்டிற்கு வந்திருக்கேன். அவள் கர்ப்பமாக இருக்கிறாள், பிரசவத்திற்காக வந்திருக்கேன்” என்று தன்னையே அறிமுகப்படுத்திக்கொண்டார் அந்த அம்மாள்.

அவர் தன் வீட்டு மாடியில்தான் குடியிருக்கிறார் என்பதை அறிந்தாள் சாந்தி. ஒவ்வொரு நாளும் அந்த அம்மாள் சாந்தி வீட்டிற்கு வந்து குழந்தையுடன் விளையாடி விட்டுச் சென்றார்.

“என் பொண்ணு வேலைக்குப் போறாள். இன்னும் குழந்தை பிறக்க ஒரு மாதம் இருக்கு, அதனால நான் அதுவரைக்கும் வேலைக்குப் போறேங்கறா. நானும் ஒண்ணும் சொல்லலை. அவளுக்கு ஒத்தாசையா இருக்கலாம்னுதான் நான் ஒரு மாசம் முன்னாடியே வந்துட்டேன். ஆனா ஒரே போர் அடிக்குதும்மா. எங்க ஊர்ல இதுவரைக்கும் ஒரு நாள் கூட நான் சும்மா இருந்ததே இல்லை. இங்கே காலைலே மாப்பிள்ளையும் பொண்ணும் கிளம்பி வேலைக்கு போயிடறாங்க. நான் மட்டும் தனியா கொட்டு கொட்டுன்னு உட்கார்ந்திருக்கேன். குழந்தை பிறந்திடுச்சின்னா கொஞ்சம் வேலையிருக்கும். அதான் பொழுது போக்கறதுக்காக இங்கே வரேன். உனக்கு ஒண்ணும் கஷ்டமில்லையே?” என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா, நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம்” என்றாள் சாந்தி.

இப்போது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்து நாலு மாதம் ஆகிவிட்டது. முதலில் மூணு மாதங்கள் அந்த அம்மாளை வெளியில் காணவில்லை. சாந்தியும் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது விசாரித்தாள். தான் குழந்தையுடன் நேரம் போவதே தெரியாமல் இருப்பதாகக் கூறினார் அந்த அம்மாள். பெண்ணும் வீட்டில் இருந்ததால் அவர் சாந்தி வீட்டிற்கு வரவில்லை. சில நாட்களாக மீண்டும் வர ஆரம்பித்திருக்கிறார்.

இன்று எப்போதும் போல கலகலவென்று இல்லாமல் சிறிது பதட்டமாகக் காணப்பட்டார்.

“உட்காருங்கம்மா, ஏதாவது குடிக்கிறீங்களர?”
“இல்லேம்மா ஒண்ணும் வேண்டாம். சமைச்சிட்டியா? என்ன சமையல் இன்னிக்கு?”

“சமையல் ஆகிக்கிட்டேயிருக்கு வெண்டைக் காய் சாம்பார், முட்டைகோஸ் பொரியல், ரசம். நீங்க என்ன சமைச்சீங்க?”

“இன்னிக்கு அமாவாசை, நான் ஒரு பொழுது. அதனால் இப்ப ஒண்ணும் சாப்பிட மாட்டேன். ராத்திரிக்கு தோசை”

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்புக்கு ஏதாவது செய்யுதா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா. இன்னும் பத்து நாள்ல ஊருக்கு போகணும். இந்தக் குழந்தையை நினைச்சாத்தான் மனசுக்குக் கஷ்டமாயிருக்கு. யாரோ ஒரு பிலிப்பினோ காரிகிட்டே விடப்போறாங்களாம். அவ என்ன பேசுவாளோ? என்னத்த பார்த்துக்கப் போறாளோ? நினைச்சாலே வயித்தைக் கலக்குது. நான் ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போய் வளர்க்கறேங்கறேன், அதுக்கும் ஒத்துக்க மாட்டேன்கறாங்க. மாமியாரை கூட்டிக்கிட்டு வந்து வச்சிக்கோங்கறேன். “அவங்களாலே முடியாதும்மா, அவங்களுக்கு வயசாயிடுச்சில்லே”ங்கறா என் பொண்ணு. ஏம்மா நீயே சொல்லு, சம்பந்தியம்மா என்னைவிட மூணு வயசு சின்னவங்க என்னால முடியறப்போ அவங்களாலே முடியாதா? அவங்கள மட்டும் ரத்தமும் சதையுமா படைச்சிட்டு என்னை மட்டும் கல்லாலே செஞ்சு சாந்தாலயா பூசியிருக்கான் ஆண்டவன்?”

“ஏம்மா இவ்வளவு கோபப்படறீங்க? அவங்க குழந்தையை அவங்க நல்லா பார்த்துப் பாங்கம்மா, நீங்க கவலைப்படாமே ஊருக்குப் போய்ட்டு வாங்க.”

“என்னமோம்மா, அவங்க குழந்தையா இருந்தாலும் எம் பேரனாச்சே, அதான் மனசு துடிக்குது. இந்தச் சின்ன வயசுல குழந்தைக்கு நம்ப பாத்து பண்றாப்போல மத்தவங்களாலே முடியுமா சொல்லு. குழந்தைக்கு இரண்டு வயசு ஆகறவரைக்கும் வேலைக்குப் போகாம இருன்னா அதையும் கேக்க மாட்டேங்கறா. குழந்தையோட முதல் பேச்சு, முதல்ல எழுந்து நிக்கறது, முதல் அடி எடுத்து வைக்கறது இதையெல்லாம் பார்த்து ரசிக்கக் கொடுத்து வச்சிருக்கணும். ம்ம்ம்… நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கறா. நம்ம சொல்லு எடுபடாத போது நம்மள கட்டிப்போட்டு கூண்டுல அடைச்சாப்பல ஆயுடுது. அடைபட்டிருக்கிறது தங்கக் கூண்டா இருந்தாலும் கூண்டு கூண்டுதானேம்மா?”

பதில் ஒன்றும் சொல்லத் தெரியாமல் நின்றாள் சாந்தி.

– நவம்பர் 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *