கூண்டில் ஒரு கிளி

1
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 10,923 
 

“”எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு… உங்களுக்கு சம்மதம்னா… நாம மேற்கொண்டு பேச வேண்டியதை பேசலாம்.”

மாப்பிள்ளையின் தாய் மீனாட்சி சொல்லியதும் மிகவும் சந்தோஷப்பட்டனர் நிஷாவின் பெற்றோர்..

ஒரே பையன்…

கம்ப்யூட்டர் இன்ஜினீயர்… சென்னையில் வேலை… லட்சத்தில் சம்பளம்… சொந்த பிளாட்… சொந்தமாய் கார்… பையனும் லட்சணமாய்…

கூண்டில் ஒரு கிளி

இதைவிட வேறு என்ன வேண்டும் என்ற உணர்வில் மகிழ்ச்சி…

“”நிஷாந்தி எங்களுக்கு ஒரே பொண்ணு… நீங்க கேட்கிறதைவிட கூடுதலாகவே செய்வோம்… கல்யாணத்தையும் நாங்களே செய்துடுறோம்… நகை… சீர்… கேட்டதை குறைக்காம செய்துடுறோம்…”

நிஷாவின் அப்பா… வாய் முழுதும் சிரிப்பாக சொல்ல..

அந்தப் பிரச்னையும் தீர்ந்தது…

“”அப்பறம்.. கல்யாணத்தை சீக்கிரமே… வச்சிடுங்க… இந்த கிராமத்துல வசதிபடாது… பக்கத்து டவுன்ல வச்சிருங்க… சொந்தக்காரங்க… பிரண்ட்ஸ் நிறைய பேர் வருவாங்க…”

எல்லா கோரிக்கையும் ஏற்கப்பட்ட அன்றே திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டது. அதுவும் அடுத்த மாதத்தில் முதல் வாரம்…

நிஷாவிற்கு மட்டும் உள்ளுக்குள் குழப்பம்… ஒரு கவலை… லேசாய் வருத்தமும் கூட…

இந்த கிராமத்து வாழ்க்கையில் பழக்கப்பட்ட நம்மால்… இவ்வளவு படித்த வசதியானவரின் சென்னை நகர வாழ்க்கை ஒத்துப் போகுமா என்கிற கவலைதான் அது.

“”நிஷா நீ ரொம்ப கொடுத்து வச்சவடி… அழகான மெட்ராஸ் மாப்பிள்ளை…” தோழிகள் சிரித்து கேலி பேசும் போது உள்மனது அதை ரசிக்க முடியாது கவலைப்பட்டது…

“”நம்ம நிஷாவுக்கு ஏத்த இடம்…” அவள் அம்மா சொல்லிச் சொல்லி உறவினர்களிடம் மகிழ்வாள்…

“”கல்யாணத்தை ரொம்ப கிராண்டா செய்யணும்” மறுநாளே அவள் அப்பா திருமண வேலைகளில் இறங்கினார்…

மண்டபம்… மேளம்… சமையல்… என்று அட்வான்ஸ் கொடுத்தார்கள்…

நிஷாவிற்கு மட்டும் இரவில் சரியாய் தூக்கம் இல்லை…. புரண்டு புரண்டு படுக்க.. வரிசையாய் இந்த இதமான கிராமத்து வாழ்க்கையின் சுகத்தை இழக்க அவள் மனம் வருத்தப்படவே செய்தது…

பெரிய இடம்… தோட்டம்… கேணி… சுற்றிலும் விதவிதமான மரங்கள்… பறவைகள்… நாட்டு ஓடு வேய்ந்த… உள்முற்றம் வைத்த சுற்றுக் கட்டு வீடு… இயற்கை காற்று… எல்லாம் கனவாகி…. கோலம் போட முற்றமில்லை….

புறாக்கூண்டு மாதிரி… பயந்து பயந்து வீட்டைப்பூட்டி… மூன்றாவது நான்காவது மாடியில் ப்ளாட் வாழ்க்கை…

அவசர வாழ்க்கை…

சாலையில் நடக்கும்போது பயம்…

வீட்டில் தனியாய் இருக்கும்போது பயம்… குற்றங்கள்… திருட்டு… கற்பழிப்பு என டி.வியில் வரும் செய்திகள் அவளை மனதளவில் பெரிதும் பயமுறுத்தும்…

பாவாடை தாவணியில்… பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்து…

தோழிகளிடம் கதை… பாண்டியாட்டம்… குளத்தில் நீச்சல்…

வீட்டுப்பசுவின் இளம் கன்றோடு கட்டிப்பிடித்து ஓட்டம்…

தோட்டத்து தேன்சிட்டுகளை ரசித்து… வரும் வண்ணத்து பூச்சிகளை பிடித்து விளையாடும் இந்த சுதந்திரம் இனி கனவாகிவிடுமோ என்கிற அச்ச உணர்வே அடி மனதை அலைக்கழித்தது…

“”நிஷா… நிஷா…”

கூண்டில் சிறகை விரித்து பறந்து அந்த பச்சைக்கிளி அவள் பெயரை சொல்லி அழைத்த போது…

“”ஏன்டி… உனக்கும் தூக்கம் வரலையா…? பசியா….?”

என்று கொஞ்சி குழந்தையாய் மகிழ்ந்த நிஷா… ஓடிப்போய் ஒரு வாழைப்பழம் எடுத்து உரித்து கூண்டுக்குள் வைத்தாள்… உள்ளே இருந்த சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றிவைத்து, “”பாரு… சாப்பிடும்மா’ என்றாள்.. பார்வதி என்று அவளது பாட்டியின் பெயரை கிளிக்கு வைத்து… “பாரு’ என்று செல்லமாய் அதை அழைப்பாள்…

இப்போது பேசக் கற்றுக்கொண்ட கிளி சொல்லும் ஒரே வார்த்தை…

நிஷா…

நிஷா…

கிளிக்கும் இவளைப் பிரிகிற கவலை போலும். வாழைப்பழத்தை ஏறிடாது… மீண்டும் நிஷா என்றது…

“ஏன்டி செல்லம்’… என்ற நிஷாந்தி கூண்டு திறந்து வெளியில் எடுத்து தடவிக் கொடுத்தாள்…

கிளி அவள் நெஞ்சில் சாய்ந்தது…

இப்படித்தான் ஆறு மாதத்திற்கு முன்பு… கிளி அவள் நெஞ்சில் வந்து விழுந்தது…

நிஷா தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டு இருந்தபோது… காலில் அடிபட்டு ரத்தம் கசிய அந்த குஞ்சுக்கிளி மரத்தில் இருந்து அவள் மீது விழுந்தது…

பறக்க முடியாது தவித்த கிளியை தூக்கிவந்து காலுக்கு மருந்திட்டு… கொஞ்சம் சிறகுகளை கட் செய்து பறக்க முடியாது செய்து.. அழகான கூண்டு வாங்கி அதில் வைத்து… தன் அறையில் தோழியாய்… குழந்தையாய்…

கிளியை மீண்டும் கூண்டில் வைத்துவிட்டு படுத்தாள்…

மாறணும்…

மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்…

மனதை தேற்றிக் கொள்ள சொல்லிக் கொள்வாள்… நாட்கள் விரைந்தன…

பட்டுப்புடவை.. பத்திரிகை… நகை… சீர்வரிசை… என்று வீடுமுழுதும் கல்யாணப் பொருள்கள் நிறைந்திருந்தன…

அவள் மனதிலும் கவலையும் வருத்தமும் பெற்றோர்களைப் பிரியும் ஏக்கமும்…

புதுக் கணவன்… புதிய ஊர்… புது வாழ்க்கை எப்படி இருக்குமோ என்கிற அச்சமும் நிறைந்தன…

யாரிடமும் சொல்ல முடியாத கவலை… சொன்னாலும்…

“”ச்சீ… இது என்னடி கவலை” என்கிற அலட்சியமும்…

ஆயிற்று…

திருமணம் முடிந்து… மறு வாரமே சென்னை வாழ்க்கை…

ஓரிரு நாளில் அப்பா அம்மா ஊருக்குப் புறப்பட விழியில் நீரோடு விடை கொடுத்தார்கள்…

ஆபிஸில் வேலை… லீவு அதிகம் இல்லை என்று அடுத்த வாரமே கணவன் ஆபிஸ் செல்ல…

தனிமை… வெறுமை…

பதினோரு பிளாட் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது ப்ளாட்.

“”கீழே என்றால் திருட்டுப்பயம் ஜாஸ்தி நிஷா… இதுதான் சேஃப்டி” என்றான் கணவன்…

இது என்ன வீடா… சிறையா… என்று புரியாது… பூட்டிய வீட்டிற்குள் தனிமை…

“”நல்லா பூட்டிக்க… யாரும் வந்தா கேட்டை திறக்காதே… கதவு கண்ணாடி வழியே பார்த்து தெரிந்தவராய் இருந்தால் மட்டும் கதவை திற…”

கணவன் சொல்லியபோது அவளது கிராமத்து வீடு கண்முன் வந்தது…

எப்போதும் பூட்டாத வீடு…

திண்ணையில் வெற்றிலைப் பெட்டியோடு அப்பா… கதை பேச யார் யாரோ வருவார்கள்…

எல்லாருக்கும் காப்பி… மோர்… இந்த கான்கீரிட் நான்கு சுவர்வீடு… சிறையாகவே பட்டது நிஷாவிற்கு…

இரவு ஷிப்ட்.. என்று வரும்போது இரவெல்லாம் தூக்கமில்லாத சிவராத்திரியாய்…

அதுவும் சமீபத்தில் நடந்த அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும்… உயிர்ப்பலியும்…

டி.வி.யில் பார்த்தபோது பயம்…

கத்தும் பறவை எதுவுமில்லை… கிளி இல்லை. சிட்டுக்குருவி… தவிட்டுக்குருவி… எதுவும் இல்லை… அவையெல்லாம் நகர வாழ்க்கை பிடிக்காது விலக… நாம் இங்கே…

பாடிப்பறந்த கிளியாய் இருந்த நாம் கூண்டில் அடைபட்டு விட்டோமோ…?

திடீர் என்று ஒரு சிந்தனை மனதில் மின்னலாய்… அதேசமயம்… அந்த சிந்தனை அம்பாய் தைத்திட வலித்தது…

“ஐயோ… பாருவை… கூண்டில் அடைத்து வைத்தோமோ… அதுவும் இப்படித்தானே கவலைபட்டிருக்கும்… ஏக்கம் கொண்டு வாடியிருக்கும்…”

திடீர் என்று தனது கிளியின் நினைவு வந்ததும்.. அவசரமாய் வீட்டுக்கு போன் செய்ய,

“”என்னடி… இந்த நேரத்துல…” என்றாள் அம்மா.

“”அம்மா… நம்ம பாரு எப்படி இருக்கும்மா… என்னமோ… திடீர்ன்னு நினைப்பு வந்திருச்சி… அதுதான்…”

“” நீ போனதில் இருந்து சரியா சாப்பிடறதே இல்லே… எளச்சுப் போயிட்டது… சதா… நிஷா… நிஷான்னு கத்துது… வெட்டிவிடாம ரெக்கை வளர்ந்திருச்சி… பறக்கத் துடிக்குது நிஷா…” என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, நிஷாவின் இதயத்துடிப்பு அதிகமாகியது. கண்களில் நீர்.

“”சரிம்மா.. உடனே கூண்டைத் திறந்து வெளியில விட்டுடும்மா… அது சுதந்திரமா இருக்கட்டும்…”

“”என்னடி சொல்றே?” அவள் அம்மா புரியாது கேட்க…

“”சொன்னதை செய்யும்மா…” என்ற நிஷா போனைக் கட் செய்து படுத்து கண்மூடி…

“”பாரு… நீயாவது சுதந்திரமா இரும்மா…”என்று சொல்லிக் கொண்டாள்.

– கமலா கந்தசாமி (ஆகஸ்ட் 2014)

Print Friendly, PDF & Email

1 thought on “கூண்டில் ஒரு கிளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *