தகிக்கும் மண்மேல் கோடையின் தீக்கொளுந்துகள் தணிந்து தனுமை பரவிற்று. கோணல் மாணலாய், குறுக்கு மறுக்காய் படுத்திருந்த மேகங்கள், நிலாவைக் கண்டதும் ஒதுங்கி நின்றன. ஆடாது அசையாது நின்றது நடுவில் ஆகாய நிலா.
ஊரில் பெரிய வீடு வடக்கு வீடு. அது அகன்ற பெரிய தெரு. வடக்குத் தெருவில் தொடங்கும் ஊர், தெற்கே போகப் போக அகலம் சுருங்கி கூம்பு போலானது.
நிலாவின் கீழ் வடக்கு முற்றத்தில் சின்னப்பிள்ளைகள் சோறு சாப்பிடக் கூடினர். அவரவர் வீடுகளிலிருந்து, தட்டிலும் வட்டிலிலும் கொண்டுவந்த உணவு. கும்மியடித்துக் குலவைபோட்டு, பாட்டுப்பாடி சாப்பிடவிருக்கும் கூட்டாஞ்சோறு.
வடக்கு வீட்டுச் செல்லப்பிள்ளை சிவகாமி; ‘செல்லம் சிணுங்கும்; வாசல் வழுக்கும்’ – கிராமியச் சொலவடை. இருக்கப்பட்ட காரவீடு. செல்வாக்குக் கூடுதல். பாவாடையைத் தூக்கி, இடுப்பில் செருகி, நெற்றியில் பறந்த தலைமயிரை ஒதுக்கி, எல்லோரையும் பார்த்த சிவகாமி,
“யாரும் சத்தம் போடக்கூடாது. இப்ப யாராரு என்ன சோறு, குழம்பு கொண்டு வந்திருக்கீங்க” கேட்டாள்.
“நா, கம்மஞ்சோறு, கீரைக் குழம்பு” ராசாமணி சொன்னான்.
வரிசையாகச் சொல்லத்தொடங்கினார்கள்:
“நா, கம்மஞ்சோறு, புளிக்குழம்பு” நொண்டி லட்சுமி சொன்னாள்.
“நா குதிரைவாலிச் சோறு, பருப்புக் குழம்பு” சின்னத்தம்பி கத்தினான்.
“கத்தாதடா, மெல்லச் சொன்னா என்ன, சத்தமா சொன்னா என்ன, எப்படீன்னாலும் கொண்டு வந்த சோறு குழம்பு அதுதான”. சிவகாமி அதட்டுப்போட்டாள்.
நான்காவதாய் லிங்கம்மா “கேப்பைக்களி, நல்லெண்ணை” என்றாள். கடித்துக்கொள்ள தட்டில் கொஞ்சம் கருப்பட்டித்துண்டும் கொண்டு வந்திருந்தாள்.
எல்லோரும் சொல்லி முடித்தபிறகு, கடைசியாய் சிவகாமி சொல்வாள்.
“எங்க வீட்ல நெல்லுச்சோறு; கத்தரிக்காய் சாம்பார், வாழைக்காய் பொரியல்.”
பிள்ளைகள் அவளைப் பெருமையோடு பார்த்தார்கள். அவள் ஒருத்தி நெல்லுச்சோறுக்காரி. மற்றப்பிள்ளைகள் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி சிறுதானியச்சோறு கொண்டுவருகிறார்கள்; சிவகாமி என்ற பெருந்தனக்காரி வீட்டில் நிறைய நெல்லிருக்கிறது. ரக, ரகமான அரிசி நிறைய வைத்திருக்கிறார்கள். புளி, கடுகு, சீரகம், பெருஞ்சீரகம், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் என நிறைந்த அஞ்சறைப் பெட்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவள் வீட்டில் காலையில் இட்லிக்குப் போடுவதாகக் கேள்விப்பட்டார்கள்.
“நல்லாருக்கு நீங்க பேசுறது, நா தினமும் பாக்கறன், செவகாமி இட்லி சாப்பிடுறதை” குறுக்குவெட்டாய்ப் பேசியவன் ஆண்டியப்பன்.
அந்த நேரம் விநோதமான ஒரு வாசனை பறந்து வந்து, எல்லோர் மூக்கையும் ஒரு சுண்டு சுண்டியது. வட்டமாய் உட்கார்ந்திருந்த கூட்டத்தில் ஒரு ’பொடிவட்டு’ கத்தினாள்;
“யே, இவன் கருவாட்டுக் குழம்பு கொண்டு வந்திருக்கான்.”
அவளுடைய கத்தல் – ஒரு மங்கல நிகழ்வைக் கலைக்கும் அபசுரமாக ஒலித்தது. பையன்களும் பெண் பிள்ளைகளும் அழகர்சாமியை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள்; அவர்கள் அத்தனை பேரும் அவன் தட்டில் மூடியிருந்ததைக் கண்டார்கள். கம்மஞ்சோறு கருவாட்டுக் குழம்பு. பிள்ளைகளுக்கு வருத்தமாய் இருந்தது.சோறு சரிதான்.
“டே கருவாட்டுக் குழம்பு சாமிக்கு ஆகாதுடா”
சிறுவன் அழகர்சாமி அழுவதுபோல் சொன்னான், “இதுதான் எங்க வீட்ல இன்னைக்கு.”
“இதையேன்டா கொண்டு வந்தே?”
எல்லோர் முகத்தையும் பயத்துடன் பார்த்தான்; சட்டாம்பிள்ளையாய் அதட்டிய சிவகாமியிடம், கண்களில் நீர்முட்ட, மன்றாட்டுப் போல் குரல் வந்தது.
“எங்க வீட்ல இதுதான் இருக்கு.”
“எல்லோரும் கேட்டுக்கோங்க.” பெரிய மனுசிக்குரிய தோரணையில் சிவகாமி கட்டளை போட்டாள்.
“இன்னையோட சரி, இனிமே அந்தச் சோறு, இந்தச் சோறுன்னு கொண்டுவரப்படாது. எல்லாரும் நெல்லுச்சோறுதான்; அந்த ஒத்தைச் சோறுதான் கொண்டுவரனும்.”
“ஒத்தைச் சோறுண்ணா, ஒத்தைக் குழம்பும் உண்டுதான?”
சந்தேகத்தில் நின்ற சின்னத்தம்பி கேட்டான்.
“ஆமா, அதுவுந்தான்.”
எல்லாரும் ’கப்சிப்’ ஆனார்கள். சாப்பிட வட்டிலில் கைவைத்த ஒரு பையன் சொன்னான், “அவனை வட்டிலை எடுத்திட்டுப் போகச்சொல்லு, இல்லேன்னா சாமி கோவிக்கும்.”
சிவகாமி அழகர்சாமியிடம் கத்தினாள், “நீ எடுத்திட்டுப் போடா, சாமிக்கு ஆகாததைக் கொண்டுவந்தா, சாமி எங்க கண்ணைக் கெடுத்திடும்.”
வடக்கு வீட்டு முற்றத்தின் மேல் நின்றிருந்த ஆகாயநிலா மங்கிற்று. மெல்லிய ஒளிக் கற்றைகளை மெல்ல மெல்ல உள்வாங்கிக் கொள்ள, யாமத்தின் கருநீலம் படர்ந்தது.
(ஆகஸ்டு 2019 – காலச்சுவடு இதழில் வெளியானது)