(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஊர்மிளாவிற்கு என்னமோ போலிருந்தது. இத்தனைக்கும் பார்த்து பழகியவன் தான் தினேஷ். ஏன் அப்படி சொல்லிவிட்டான்?
‘நமக்குள்ளே ஒத்து வராது ஊர்மி.. ஸேம் வேவ் லென்த்..’
‘எனக்குப் பிடித்ததெல்லாம் அவனுக்குப் பிடிக்கும். ஜெயகாந்தன், ரியலிஸ திரைப்படங்கள், டிராட்ஸ்கி மருது, மதன் ஜோக்ஸ்..’
அவனும் அவளும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். ஒரே ப்ராஜெக்ட்.. அவன் டீம் லீடர், அவள் டெவலெப்பர்..
முதல் வருடம் பேசவேயில்லை.. அது சரி.. ஆண் என்பதால் அல்ல.. அவள் பெண்களுடனேயே பேசவில்லை.
கோபிச்செட்டிப்பாளையத்தில் வாசம். ஏதோ டிப்ளமோ இன் ஸாப்ட்வேர் டெஸ்டிங் படித்து விட்டு சென்னைக் கம்பெனியில் வேலை என்றவுடன் தந்தையுடன் கிளம்பி வந்து விட்டாள். இருபது வயதுப் பெண்ணை தனியாக அனுப்ப அப்பாவுக்கு பயம். அம்மா இல்லை. கோபியில் பதிவாளராக இருந்து ஓய்வுக்கு ஒரு மாதம் முன் இறந்து போனாள்.
அம்மாவுக்கு இடுப்புக்குக் கீழே எதுவும் சொரணையில்லை. முப்பத்தி ஐந்து வயது வரை கலியாணமே பண்ணிக்கொள்ளவில்லை. பெருமாள் கோவிலில் யாரோ குப்புசாமியைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு நாற்பத்தி ஐந்து வயது. கலியாணம் ஆகவில்லை. அவருக்கு ஏதும் குறையில்லை. என்ன படிப்பில்லை. கோயிலில் எடுபிடி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு இஷ்டமில்லைதான்.. தொண்ணூறு வயது தாத்தா பிடிவாதமாக இருந்தார். ஆள் விட்டு குப்புவை வரச்சொல்லி பேசியே விட்டார். சக்கர நாற்காலியில் தான் அம்மாவையே பார்த்தாராம் அப்பா.
‘என் கிட்ட சைக்கிள் இருக்கு.. அதிலேயே கொண்டு விட்டுடுவேன்.. சரியா? ‘ அம்மாவுக்கு அந்தக் கணம் அப்பாவை பிடித்துப் போயிற்று. முதல் வார்த்தை முதல் சத்தியம் என்பது போல் கடைசி வரையில் அம்மாவை நடக்கவே விடவில்லை அப்பா. இத்தனைக்கும் யாராவது பிடித்துக் கொண்டால் நாலு தப்படி நடப்பாளாம் அம்மா. கொஞ்சம் வசதி வந்தவுடன் மூன்று சக்கர டிவியெஸ் 50 வாங்கிக் கொடுத்தாராம் அம்மா. அம்மா போனவுடன் அதையும் விற்று விட்டார் அப்பா. அம்மாகால்களை மடித்துக் கொண்டு இரண்டு கைகளால் உந்தியபடி நகர்ந்து வருவாராம். நிலை வாசல் படிமேல் உட்கார்ந்திருக்கும் அம்மாவை அக்குளில் இரண்டு கைகளை நுழைத்து அலாக்காக தூக்கிவிடுவாராம் அப்பா. அம்மா நல்ல ஆகிருதி. அப்படிப் பலரை ஊர்மிளா பார்த்திருக்கிறாள். கால்கள் சூம்பிப் போனதால் உடலின் மேல் பகுதி அபரிமிதமாக வளர்ந்திருக்கும். முன்வாசல் ஒட்டிய திண்ணை. அதன் மேல் அம்மாவை உட்கார வைத்து விடுவாராம் அப்பா. சைக்கிள் கேரியரை அம்மாவுக்காகவே பலசரக்குக் கடை சைக்கிள் கேரியர் போல அகலமாக மாற்றியிருந்தார் அப்பா. அதில் அம்மா உட்கார அடியில் நாடா தைத்த ஸாட்டின் தலையணை. தலையணையை இறுக்கமாக கேரியரில் கட்டியிருப்பாராம் அப்பா. தெருவை ஒட்டிய வீடு. நடைபாதையிலேயே திண்ணை. சைக்கிளை ஓரமாக நிறுத்தி பிடித்துக் கொண்டு நிற்பாராம் அப்பா. அம்மா திண்ணையிலிருந்து கேரியருக்கு நகர்ந்து கொள்வார். வசதியாக அம்மா உட்கார்ந்த பிறகுதான் அப்பா சைக்கிளையே நகர்த்துவார்.
ஒரு தடவை அப்பா சொல்லியிருக்கிறார்: ‘அம்மாவைத் தூக்கற போது மட்டும் ராமாயண வாலி மாதிரி ஆயிருவேன். அவ பலம் எனக்கு வந்துரும். அவ பஞ்சு மாதிரி லேசா ஆயிருவா’
அந்த நேசத்தில் பிறந்தவள் தான் ஊர்மிளா. சென்னை வந்த கொஞ்ச நாட்களிலேயே தாத்தாவும் சென்னை வந்து விட்டார். அவருக்கு மட்டும் என்ன இருக்கிறது கோபியில்.
முதலெல்லாம், ராத்திரி பத்து மணிக்கு ஊர்மிளா வரும்போதெல்லாம், தெருமுனையில், டார்ச் லைட்டுடன் அப்பா காத்திருப்பார். இப்போதெல்லாம் அவர் அப்படிக் காத்திருப்பதில்லை. ஒரு வருடமாக தினேஷ் கொண்டு விடுகிறான் பைக்கில். அப்பாவுக்கும் அவனை பிடித்து விட்டது. வசதியான குடும்பமில்லை தினேஷ்.. அவனும் வாடகை வீடுதான். அம்மா அப்பா இல்லை. ஒரு அண்ணன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான். கண்டு கொள்வது கூட இல்லை. எவ்வளவு சொல்லியிருக்கிறான்!
‘ஏன் இன்னும் வீடு வாங்கல தினேஷ்?’
‘வாங்கினா மூணு பெட்ரூம் வாங்கணும்.. அதுக்கு ரெண்டு சம்பளம் வேணும்’.
‘ஓ கல்யாணத்துக்கு அப்புறமா? அதுக்குக் கூட எதுக்கு மூணு பெட்ரூம்?’
‘ஒண்ணு அப்பாவுக்கு, ஒண்ணு தாத்தாவுக்கு, ஒண்ணு.. நமக்கு அடுத்த வாரமே’ அமெரிக்காவில் இருக்கும் அண்ணனுடன் கணினி உரையாடல்.
‘யுவர் லைப்! யுவர் சாய்ஸ்! ‘ என்று முடித்துக் கொண்டான் அண்ணன்.
அண்ணன் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை என்பதும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. அம்மா இருக்கும்போது வருடத்திற்கு ஒரு முறை இந்தியா வருவான். அப்போதெல்லாம் அம்மா தவறாமல் கேட்கும் கேள்வி “ ஏண்டா! எப்படா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கே? ‘ தினேஷுக்கு சட்டென்று சர்வர் சுந்தரம் நாகேஷ் ஞாபகம் வந்து, சிரிக்க ஆரம்பித்து விடுவான். அம்மா அவனை முறைப்பாள். ஆனால் அதுவரை இறுக்கமாக இருந்த அண்ணனின் முகம் லேசாக உடைபடும். சிரிப்பு எட்டிப் பார்க்கும். அவனும் நாகேஷ் ரசிகன்.
ஆனால் அவன் நாகேஷ் போல “இப்ப என்னம்மா அவசரம்? அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்ல மாட்டான். சொன்னாலும் திரைப்பட அம்மா போல “ சரி விடு” என்று சொல்லுகிற அம்மா இல்லை அவர்களது அம்மா!
“அம்மா! நான் சம்பாதிக்கற ரெண்டு லட்சத்துல வாடகையே ஒரு லட்சம் தரேன். வரி நாற்பதாயிரம். என் செலவு போக கையிலே ஏதும் மிஞ்சரதில்லே! இதுல கூட ஒருத்தியை சேர்த்துக்கிட்டு, அவளுக்கு செலவு பண்ண பணத்துக்கு நான் எங்கே போவேன்?”
அம்மா விடமாட்டாள். தொடர்ந்து தொணப்பாள்.
“வேலைக்கு போற பொண்ணா கட்டிக்க.. இங்கே கூட வேணாம். அந்த ஊர்லயே பாரு. நம்ம சாதி கூட வேணாம். நம்ம நாட்டு பொண்ணா, படிச்ச, வேலைக்கு போற பொண்ணா பாரு.”
கடைசி தடவை வந்தபோது அண்ணன் முடிவாக சொல்லி விட்டான்.
“அம்மா! இனிமே கல்யாணப் பேச்சை எடுக்காதே! நம்ம நாட்டுல தான் இருபத்தி அஞ்சு வயசு ஆன உடனே, ஒரு பதினெட்டு வயசு பள்ளிக்கூட பிள்ளையை கட்டி வைக்கிறாங்க. அங்கெல்லாம் அப்படி இல்லே. பொண்ணுங்களே முப்பத்தி அஞ்சு வயசுக்கப்புறம் தான் கல்யாணம் பத்தியே யோசிக்க ஆரம்பிக்கறாங்க. என்னை மாதிரி பசங்களுக்கு வாழ்க்கையே நாப்பதுக்கப்புறம்தான் ஆரம்பிக்குது. அந்த வயசு வரட்டும். நானே பார்த்து பண்ணிக்கிறேன்”
வம்ச விருத்தி இல்லாத கவலையோடே அம்மா போய் சேர்ந்து விட்டாள்.
ஊர்மிளாவிற்கு யோசனையாக இருந்தது. வெண்ணை திரண்டு வரும்போது இப்படி சொல்லிவிட்டான். இதில் ஏதாவது ஜாதகம், சோசியம் என்று ஏதாவது இருக்குமோ? ஆனால் அதிலெல்லாம் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருக்கிறானே?
அப்பாவுக்குத்தான் ஏமாற்றமாக இருக்கும். பேச்சோடு பேச்சாக ராசி, நட்சத்திரம் என்று சாமர்த்தியமாக விசாரித்து பொருத்தம் கூட பார்த்து விட்டார்.
எதனால் இப்படி மாறிப்போனான்?
அடுத்த வாரமே வேலையை ராஜினாமா செய்து விட்டு பெல்ஜியம் போய்விட்டான் தினேஷ். பெல்ஜியத்தில் அவனது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி எல்லாமே மாறிப் போயிருந்தது. அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. மொத்தமாக தொடர்பையும், அவள் உறவையும் அறுத்துக் கொண்டு போயிருந்தான்!
ஒரு மாதம் முன்பு, அந்த ரத்தவங்கிக்க்காரர்கள் ரத்த தானத்திற்காக இவள் அலுவலகம் வந்திருந்தார்கள். தினேஷுக்கு இதிலெல்லாம் ஆர்வம் அதிகம். ஓடி ஓடி அவர்களுக்கு வேண்டியதைச் செய்தான். வேலை கெட்டுப்போகாமல் அட்டவணை போட்டு ஒவ்வொருவராக அனுப்பி வைத்தான்.
‘ரத்தம் கொடுத்தா பதினைஞ்சு நாள்ல திரும்பவும் உற்பத்தியாயிடும். நஷ்டமில்லை. ஆனா நாம கொடுக்கற ரத்தம் ஏதோ ஒரு உயிரை காப்பாத்திரும். ரத்த அழுத்தக்காரனும் சர்க்கரை வியாதிக்காரனும் கொடுக்க முடியாது. நாம அப்படி இல்லையே..அப்புறம் கர்ப்பிணி பெண்கள் கொடுக்க முடியாது! இங்க அப்படி யாரும் இல்லையே ‘என்று கண் சிமிட்டினான்.
‘சீ போடா! ‘
ஒரு வாரத்தில் ரத்தம் கொடுத்தவர்களுக்கெல்லாம் அவனே வங்கியிலிருந்து குறிப்புகள் அடங்கிய அட்டை வாங்கி வந்து கொடுத்தான். பெயர், ரத்தப்பிரிவு என்று சகலமும் இருந்தது அதில். ஒவ்வொருவரிடம் கொடுக்கும்போதும் ஏதோ நகைச்சுவையாக சொல்லி, கொடுத்துக் கொண்டே வந்தான். ஊர்மிளாவிடம் கொடுக்கும்போது மட்டும் எதுவும் பேசவில்லை. கொடுத்து விட்டு போயே விட்டான்.
ஒரு நாள் தினேஷ் வேலை செய்து கொண்டிருந்த கணினியைத் தட்டி, அவன் சமீபத்தில் எந்த வலைப்பூவைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்று ஆராய்ந்தாள் ஊர்மிளா. அதில் ஏதாவது காரணம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு.
ரத்தக் கூறுகள் என்கிற வலைப்பக்கத்தை அவன் அடிக்கடி பார்த்திருப்பது தெரிந்தது. அவளும் கூகுளில் அதைத் தேடிப் படித்தாள்.
‘ஆர் ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவு கொண்ட பெண்களுக்கு, அதே வகை ஆண்களுடன் திருமணம் நடந்தால், பிறக்கும் குழந்தை ஊனமின்றி பிறக்கும். இல்லையெனில் ஊனக் குழந்தை பிறக்க எழுபது விழுக்காடு வாய்ப்புண்டு என்று ஆய்வு சொல்கிறது.
ஊர்மிளாவிற்கு மனம் பரபரத்தது. எப்படி தினேஷ் ரத்தப் பிரிவை சோதிப்பது? ரத்த வங்கியின் வலைத் தளம் இருக்கிறதா என்று பார்த்தாள். இருந்தது.
தேடு குறியீடை அழுத்தி “தினேஷ் கருணாகரன் “ என்று போட்டு தேடினாள். 108 இருந்தது. இது என்ன வேண்டுதலா? வேண்டுதல் தான். அவன் தனக்கு கிடைக்க வேண்டும் என்கிற வேண்டுதல்.
வடிக்கட்டியதில் ஆறு தேறியது ஆறுதலாக இருந்தது. இன்னும் சில தகவல்களை சேர்த்தால் அவனைப் பிடித்து விடலாம்.
சொந்த ஊர், படித்த கல்லூரி, வயது, பிறந்த நாள் என்று மெனக்கெட்டதில் அவன் சிக்கி விட்டான். அவனைப் பற்றிய விவரங்கள் இருந்தன. ஆனால் அவள் தேடியது ஒன்றே ஒன்று தான். அவனது ரத்தப் பிரிவு. இதோ அதுவும் பதிவாகி இருக்கிறது.
தினேஷ் கருணாகரன் – ஆர் எச் பாசிட்டிவ்!
அவளது அந்த ரத்த வங்கி அட்டை அவள் முகத்தில் அறையாத குறையாகச் சொன்னது: ஆர் ஹெச் நெகட்டிவ்.
– ஏப்ரல் 2015
– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.