கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 2,302 
 
 

இந்த முறையும் தோல்வியில்தான் முடிந்தது, கணபதி, லட்சுமி இவர்களின் குழந்தை கனவு. கணேசன் மனசை தேற்றிக்கொண்டாலும், லட்சுமியால் அப்படி இருக்க முடியவில்லை. டாக்டரிடம் இவர்களின் இரண்டாவது முயற்சி இது. பல லட்சங்கள் செலவானதுதான் மிச்சம், கடைசியில் வயிற்றில் குழந்தை தங்கவில்லை, என்ற செய்தி இடி போல் விழ அதை மனத்தை பாறாங்கல்லாக்கிக் கொண்டு தாங்க வேண்டியிருந்தது.

டாக்டர் மிக பிரபலமானவர்தான். இவர்களோடு சேர்ந்து இந்த சிகிச்சை எடுத்தவர்களுக்கு குழந்தை கிடைத்து விட்டது. ஆனால் இவர்களுக்கு மட்டும் இறைவன் ஏன் இந்த சோதனை செய்கிறான்?

திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது, ஏழு வருடங்கள் உறவினர்களின் கிண்டல்களையும், கேலிகளையும் பொறுத்து கொண்டுதான் இருந்தனர். நண்பன் ஒருவனுக்கு இந்த டாக்டரிடம் காண்பித்து குழந்தை பாக்கியம் கிடைக்கவும் அவன் கணேசனிடம் இதை பற்றி பிரஸ்தாபித்தான். கணேசன் இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் ஜோசியக்காரர் ஒருவரை பார்த்திருந்தான். அவர் உறுதியாய் சொன்னார், இருவரும் தாய் தகப்பனாய் உங்கள் பொண்ணை கன்னி தானம் செஞ்சு கொடுக்கற பாக்கியம் இருக்கு என்று சொல்லியிருந்தார். அந்த வேளையில் நண்பன் இதை பற்றி சொல்லவும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை முயற்சிக்கலாம் என்று முடிவு செய்தான். இதை பற்றி மனைவியிடமும் பிரஸ்தாபித்தான்.

லட்சுமி நன்கு படித்தவள், செவிலியர் அடிமட்ட பயிற்சியும் பெற்றவள். அதே நேரத்தில் கொஞ்சம் பாரம்பர்யம், சாமி பக்தி போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவள். கணேசன் இவளிடம் இந்த விசயத்தை பற்றி சொல்லவும், ஏற்கனவே ஜோசியக்காரர் சொன்னதையும் சொல்லியிருக்கிறான், அவளுக்கும் நமக்கு நேரம் வந்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் இந்த சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டாள்.

முதல் முயற்சி நான்கு மாதத்திலேயே தோல்வியில் முடிந்தாலும், டாக்டர் அவர்களை ஆறுதல் படுத்தி மீண்டும் ஆறு மாதம் கழித்து முயற்சிக்கலாம், என்று சொல்லியிருந்தார். அதன் படி ஆறு மாதம் கழித்து மீண்டும் முயற்சி செய்தனர். அதுவும் தோல்வியில் முடிந்ததை லட்சுமியால் தாங்க முடியவில்லை.

தோல்வி தந்த விரக்தியில் மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆகி வருமுன், டாக்டர் கணேசனை மட்டும் தனியாக கூப்பிட்டு லட்சுமியின் கருப்பை மிக சிக்கலாக இருப்பதால் இனி வரக்கூடிய காலங்களில் குழந்தைப்பேற்றை தாங்குமா? என்று தெரியவில்லை. இந்த செய்தி இவனுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது. லட்சுமியிடம் இதை பற்றி சொல்ல வேண்டாம், ஏற்கனவே அவள் மனம் ஒடிந்து கிடக்கிறாள், டாக்டர் அவனை எச்சரித்தார்.

கணேசனுக்கு இவ்வளவு செலவுகள் செய்து இப்படி ஆகி விட்டதே என்பது கூட அதிகளவு வருத்தப்பட வைக்கவில்லை.தன் மனைவி லட்சுமி இந்த துயரத்திலிருந்து வெளியே வந்தால் போதுமென்றிருந்தது.

மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்தன. லட்சுமி கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாக ஆரம்பித்தாலும் அவள் மனசு மட்டும் அப்படியே ஆழ்ந்த துக்கத்துக்குள் ஒளிந்து கிடந்தது.

இந்த துன்பங்களிலிருந்து வெளி வர எங்காவது ஆன்மீக சுற்றுலா கிளம்பலாம் என்று கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அதுவும் குருவாயூர் சென்று கிருஷ்ணனிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு சொன்னாள். .கணேசனுக்கோ குருவாயூர் மட்டுமில்லாமல், கேரளா, தமிழ்நாடு, இரண்டிலும் உள்ள கோயில்களுக்கு போய் வரலாம் என்று முடிவு செய்து அலுவலகத்துக்கு ஒரு வாரம் விடுமுறை போட்டான். மறு நாள் பேருந்தில் குருவாயூர் கோயிலுக்கு போய்விட்டு, அடுத்து பகவதி அம்மன், அடுத்து பக்கத்துல இருக்கற எல்லா கோயிலுக்கும் போய்விட்டு, அப்படியே பழனி, திருச்செந்தூரும் பாத்து விட்டு வந்துடலாம், முடிவு செய்து கொண்டு கிளம்பினார்கள்.

கிளம்பும்போதே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது, மழை வருமோ? இந்த சந்தேகத்துடன் குருவாயூருக்கு பஸ் ஏறியவர்கள், குருவாயூர் போய் சேரும்போது கடுமையான மழை. இரண்டு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறதாம். வெளியே வந்தவர்களுக்கு எங்கும் செல்ல முடியவில்லை. எப்படியோ தட்டு தடுமாறி ஓர் அறை எடுத்து தங்கினார்கள். மறு நாள் வெளியே வரவே முடியவில்லை. இதற்குள் அங்கு பெரும் பீதியும் ஏற்பட்டு விட்டது. எப்பொழுது வேண்டுமானாலும் தண்ணீர் ஊருக்குள் வந்து விடும். என்ன செய்வது என்று கணேசனுக்கும் லட்சுமிக்கும் புரியவில்லை. திரும்பியும் வர வாய்ப்பும் இல்லை. அனைத்து பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. திருச்சூர் வரை போய்விட்டாலும், அங்கு டிரெயின் பிடித்து விடலாம் என்று நினைத்தால், டாக்சி கூட கிடைப்பதாக தெரியவில்லை..

எப்படியோ ஒரு ஆட்டோவை பிடித்து விட்டான், லட்சுமியையும் கூட்டிக்கொண்டு எங்காவது நம் ஊர் பக்கம் வரும் பஸ் கிடைக்குமா என்று தேடினர். ஹூஹூம்..பாதி தூரம் போவதற்குள் எங்கும் வாகன்ங்கள் செல்ல முடியாது என்று தடுத்து விட்டார்கள். இவர்கள் என்ன செய்வது என்று விழித்தார்கள். அந்த மழையில் கையில் இரண்டு கைப்பையுடன் ஒதுங்குவதற்கு ஒரு இடம் தேடி ஓடினார்கள். எங்குமே நிற்க முடியவில்லை. ஆட்கள் யாருமே கண்ணில் தட்டுப்படவில்லை. எல்லா இடங்களிலும் தண்ணீர் கடல் போல் சூழ்ந்திருந்தது. கொஞ்சம் ஏமாந்தாலும் ஆளை இழுத்துக்கொண்டு ஓடி விடும், லட்சுமியின் கையை இறுகிப் பிடித்துக்கொண்டு மெதுவாக நனைந்து கொண்டே வந்தார்கள். அப்பொழுது ஒரு கட்டிடத்தில் பாதி அளவு தண்ணீர் சூழ்ந்திருந்தது. மாடி படியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் இவர்களை கை காட்டி சத்தமிட்டு அழைப்பது தெரிந்தது. இவர்கள் திரும்பி பார்த்தனர், அவள் இவர்களை கை காட்டி அழைத்தாள். கணேசன் மெதுவாக இடுப்பளவு ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் லட்சுமியை இழுத்துக்கொண்டு அந்த வீட்டை அடைந்து படியில் மெல்ல லட்சுமியை ஏற்றி விட்டு இவனும் கொண்டு வந்த கைப்பைகளையும் இழுத்துக்கொண்டு மெதுவாக ஏறினான்.

அங்கே மொட்டை மாடியில் இருந்து அழைத்த பெண்ணை அப்பொழுதுதான் கவனித்தார்கள், அவள் நிறை மாதமாய் இருந்தாள், அவள் லட்சுமியின் கையை பிடித்து ஏதேதோ சொன்னாள். மொழி புரியாவிட்டாலும், அவளுக்கு பிரசவ வேதனை வந்து விட்டது என்பது இவர்களுக்கு புரிந்தது. பக்கத்தில் சுற்றும் முற்றும் பார்க்க யாரும் கண்ணுக்கு தென்படவில்லை, எங்கு பார்த்தாலும் தண்ணீர்தான் நின்றது.

லட்சுமிக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரிந்தது, அந்த மழையிலும் மெல்ல தன் கைப்பையை திறந்து கொண்டு வந்திருந்த ஒரு வேட்டியை எடுத்தவள், அந்த பெண்ணை கொஞ்சம் மழை சாரல் அடிக்காத தூரத்திற்கு கூட்டி சென்று படுக்க வைத்தாள். அந்த பெண்ணோ வலி பொறுக்க முடியாமல் கதறிக்கொண்டிருந்தாள்.

கணேசனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை, சரளமாய் மொழி பேச தெரியாத ஊர், மனித நடமாட்டத்தையும் காணோம். மழையின் சத்தமும், காற்றின் இரைச்சலுமே கேட்டுக்கொண்டிருந்தது. சுற்று முற்றும் அந்த தளத்தை சுற்றி சுற்றி ஒடினான், சத்தம் போட்டு கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தான். அவன் சத்தம் அந்த காற்றின் இரைச்சலில் கரைந்து மறைந்து போயிற்று.

அதற்குள் அந்த பெண்ணின் “வீல்”..என்ற சத்தம், திரும்பி ஓடி வந்தான். கீழே இரத்த பெருக்கில் குழந்தை வெளி வந்தது. லட்சுமி சட்டென குழந்தையை கையில் ஏந்திக்கொண்டாள். அந்த பெண் மயக்க நிலைக்கு சென்றிருந்தாள். இவர்கள் மெதுவாய் அவள் கன்னத்தை தட்டி பிரக்ஞை கொண்டு வர முயற்சி செய்தார்கள். மறுபடி அவளுக்கு நினைவே வரவில்லை. இவர்கள் இருவரும் அப்படியே பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தவர்கள், குழந்தையின் வீறிட்ட குரலால் நினைவுக்கு வந்தனர் குழந்தையை தன்னுடைய புடவையால் மழைச்சாரலில் இருந்து மறைத்துக்கொண்டாள் லட்சுமி.

மறு நாள் மதியம் மேல் இவன் மாடியில் இருந்து கை காட்டியதை கண்டு இவர்களை காப்பாற்ற ஒரு படகில் வந்தவர்கள் கைக்குழந்தையுடன் இருந்த இவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டனர்., இறந்து விட்ட அந்த பெண்ணை தனியாக அடுத்து வந்த படகில் கொண்டு செல்லலாம், முதலில் குழந்தையை காப்பாற்றவேண்டும், என்று கிளம்பினார்கள்.

மீட்கப்பட்ட இடத்தில் இவர்களைப்போல் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரிடம் விசாரித்து அவரவர்கள் இருப்பிடத்துக்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தார்கள். கணேசன் தனக்கு தெரிந்த விவரங்களை சொல்லி குழந்தைக்கு அங்கிருந்த டாக்டர் வைத்தியம் பார்த்தனர். கணேசன் அந்த குழந்தையை நாங்களே வைத்திருக்கிறோம், நீங்கள் எப்பொழுது வர சொன்னாலும் வந்து விடுகிறோம், காவல்துறையிடம் சொன்னான். எல்லா விவரங்களையும் பெற்றுக்கொண்டு, எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தையுடன் கூப்பிடும்போது வரவேண்டும் என்று சொல்லி அவர்களை காவல் துறை ஊருக்கு அனுப்பி வைத்தது.

அந்த குழந்தை இப்பொழுது வைஷ்ணவி என்ற பெயருடன் கணேசன் லட்சுமி தம்பதியிடம், கொஞ்சி கொண்டிருக்கிறாள். அங்கிருந்து காவல்துறை அந்த குழந்தையின் தாயை பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை, நீங்கள் சட்டப்படி அந்த குழந்தையை தத்து எடுத்து கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டது.

எல்லாம் முடித்து அடுத்த மாதம் உறவினர்களை அழைத்து பெரும் விழா ஒன்று நடத்த இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *