பிரேமாவுக்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியைப் பணிக்காக நேர்முகத் தேர்வு கடிதம் வந்திருந்தது.
உற்சாகமாகக் கிளம்பினாள். வழியில் –
”ஏ. பிரேமா…”
யசோதா அத்தை. பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.
ஏண்டி பிரேமா, உன் கல்யாணம் நடந்து நாலு வருஷம் ஆச்சே? குழந்தைங்க…?
இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு இருக்கோம் அத்தை”
”ஏன்டி?”
”என் கணவரோட சம்பளம் குடும்பச் செலவுக்குப் போதாது. அதான் எனக்கும் ஒரு வேலை கிடைச்ச பிறகு குழந்தை பெத்துகலாம்னு..”
”கடவுள் புண்ணியத்திலே சீக்கிரம் உனக்கு வேலை கிடைச்சுடும்டி..”
நேர்முகத் தேர்வு முடிந்து பிரேமா திரும்பும்போது வழியில் மறுபடியும் அத்தையைச் சந்தித்தாள்.
“வேலை கிடைச்சிடிச்சி அத்தை…”
“சந்தோஷம்டி, இனிமேலாவது நீ ஒரு குழந்தைக்குத் தாயாகலாம்”
”இந்த ஸ்கூல்ல பிரசவத்துக்கு லீவு தரமாட்டாங்காம். இன்னும் மூணு வருஷத்துக்கு கர்ப்பம் ஆகக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டுதான் வேலை கொடுத்திருக்காங்க…” என்றாள் பிரேமா விரக்தியுடன்!
– சந்திரா தனபால் (ஆகஸ்ட் 2013)