குழந்தை எப்படிப் பிறக்கிறது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,779 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விளையாடச் சென்றிருந்த இடத்திலே புதிய பிரச்சினை ஒன்று அவனுக்கு உதயமாகிவிட்டது. விளையாட்டையும் நிறுத்தி விட்டுத் திரும்பி வந்து சேர்ந்தான். அப்பொழுது நான் விறாந்தையிலிருந்து வாசித்துக் கொண்டிருந்தேன். மனைவி அடுப்படியிலே சமையல் செய்து கொண்டிருந்தாள். அவன் என்னிடம் வரவில்லை; நேரே தாயிடஞ் சென்றான். “அம்மா. நடராசனுக்கு ஒரு தங்கச்சி இருக்கிறள். ஏனம்மா எனக்கில்லை?” என்று கேட்டான்.

பொறுத்த தருணத்திலேதான் இந்தக் கேள்வியைக் கேட்டான். நேற்று எதிர்பாராத வகையிலே மழை பெய்து விறகு நனைந்திருந்தது. அதை எடுத்து வந்து அடுப்பிலே வைத்து ஊதுகிறாள். ஊதுகிறாள் பற்றியபாடில்லை . ஒரே புகைமயம். புகை குடித்து அவளிரு கண்களில் ருந்தும் நீர் பெருகிக்கொண்டிருந்தது. மூச்சு விடுவதே கஷ்டமாக இருந்தது. இந்த நிலைமையிலேதான் அவன் அலட்டுவதற்கு வந்திருக்கிறான்!

விழுந்து விழுந்து அடுப்பை ஊதிக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்துப் “போடா அங்காலே!” என்று சீறினாள். புகையின் அகோரத்தால் பெற்ற பிள்ளை என்று கூடக் கவனிக்க வில்லை. அடுப்புப் பற்றாமலிருந்தால் அம்மாவுக்குக் கோபம் வருமென்பதை அவன் முன் கூட்டியே அறிவான். ஆகையால் இப்பொழுது அவள் கோபத்தைக் கண்டு அவன் வெருண்டு விடவில்லை. அம்மாவுக்கு உதவி செய்து அடுப்பைப் பற்றவைத்து விட்டால், அதன்பின் அவள் கோபம் தணிந்துவிடும். பின்பு எது வேண்டுமானாலும் அவளிடம் கேட்கலாம் என்று எண்ணியவனாய் வெளியே சென்று அங்குமிங்குமாகக் கண்ணைச் செலுத்திக் கவனித்தான். கோடித் தாழ்வாரத்திலே ஒரு பன்னாடை மழையிலே நனையாது தப்பியிருந்தது. அவனுக்கு அதைக் கண்டதும் பெருஞ் சந்தோஷம் வந்துவிட்டது. ஓடிச்சென்று அதை எடுத்து வந்துதாயிடம் கொடுத்தான்.

“ஏனம்மா, அடுப்புப் பற்றமாட்டேனென்கிறதோ? இந்தா, காய்ந்த பன்னாடை; இதை வைத்து ஊது” என்றான். அவளுக்கு அப்பன்னாடையைக் கண்டு அளவற்ற ஆனந்தம் வந்து விட்டது. அடுப்பிலே வைத்து ஊதினாள். ஒரே முறையில் நெருப்புப் பிரகாசமாகப் பற்றி எரியத் தொடங்கியது. அவள் சிறிது நிம்மதியாக மூச்சு விட எண்ணி வாசற்புறமாக வந்தாள். இனி மேற் கேட்டால் அம்மா கோபிக்க மாட்டாள் என்ற துணிவு அவனுக்கு வந்து விட்டது.

“நடராசனுடைய தங்கச்சி சிரிக்கிறாள், அம்மா!” என்றான். இதைச் சொல்லிக் கொண்டு அவன், அவள் காலோடு சாயந்து விட்டான். அவனுடைய சாதுரியத்தைக் கண்டு ஆனந்தமுங் கொண்டான்.

“சிரிக்கத்தானே வேணும். சிரிக்கட்டுமேன்; அதற்கென்ன?”

“இல்லையம்மா, நடராசன் தான் அவளுக்குச் சிரிப்புக் காட்டுகிறான். அவன் விளை யாட விளையாட அவள் பார்த்துச் சிரிக்கிறாள்!”

“சரி; அவன் விளையாட்டுக் காட்டினால் நீயும் போய்க் கூட விளையாட்டுக் காட்டு. அவள் நன்றாகச் சிரிக்கட்டும்” என்று தாய் கூறினாள். உடனே அவன் தன் முகத்தைத் தொங் கப் போட்ட படி, “அவன் என்னை விடுகிறானில்லை” என்றான்.

“ஏன்?”

“தன்னுடைய தங்கச்சியாம்; நான் அவளுக்கு விளையாட்டுக் காட்டக்கூடாதாம்”

“அவனுக்குத்தான் ஒரு தங்கச்சி. விடமுடியாதென்றால் இருக்கட்டும். நீ போய்ப் பம்ப ரத்தை எடுத்து வைத்து விளையாடு!”

இப்படிக் கூறினால் அவன் சென்று விடுவான்: அப்பால் தன் காரியங்களைக் கவனிக் கலாம் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவனா இதற்கெல்லாம் எடுபடுபவன்? தான் கேட்க வேண்டி வந்த முதற் கேள்வியை இப்போது கேட்டான்.

“நடராஜனுக்குத் தங்கச்சி இருக்கிறாள்; பத்மநாதனுக்குக் கூட ஒரு தங்கச்சி இருக் கிறாள்; ஏன் எனக்கில்லை?”

இதற்கென்ன பதில் கூறுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. பதில் கூறாவிட்டால் அவன் விடப்போவதுமில்லை. “அப்படித்தானடா, அவர்களுக்கெல்லாம் தங்கச்சிமார் பிறந்தார்கள். உனக்கு அப்படிக் கிடைக்கவில்லை” என்றாள்.

“அதுதானம்மா நான் “ஏனென்று” கேட்கிறேன்”

“அப்படித்தானடா!” என்று கூறி மழுப்பினாள் தாய்.

“நடராசனுடைய தங்கச்சியை அவனுடைய அம்மா பெற்றா என்று சொல்லுகிறான். அப்போது நீ ஏன் எனக்கொரு தங்கச்சி பெற்றுத்தரக் கூடாது?

இதுவரை ஒருவாறு சமாளித்துக் கொண்டு வந்துவிட்டாள். ஆனால் இது மிகவும் கஷ்டமான ஒரு சந்தர்ப்பம். இக்கேள்விக்கு என்ன விடையளிப்பதென்பது அவளுக்குப் புலனாகவில்லை. “அடுப்பு அணைந்து விட்டது; பற்றவைத்துவிட்டு வருகிறேன்” என்று கூறி அப்பாலே சென்றாள். தான் சென்றவுடன் அவன் அதை மறந்து விடுவான் என்று எண்ணி னாள். ஆனால் அவனோ அவள் மீண்டு வரும் வரை அங்கேயே நின்று அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டான்.

“அதற்கென்ன. அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போ நீ போய் விளையாடு; சமைக்க வேணும்; நேரம் போய் விட்டது. அப்பா கோபிக்கப்போகிறார்!”

“எப்போ அம்மா பெற்றுத் தருவாய்” – இன்னோர் உபவினாவையும் வினவினான். நடராசன் தன் தங்கச்சியுடன் விடாது தடுத்ததிலே அவனுக்கு அவ்வளவு கோபம். விரைவாக தனக்கொரு தங்கச்சி கிடைத்து விட்டால் அவனுக்கு ஒரு நல்ல பாடம் படிப்பித்து அவனை வெட்க வைக்கலாம் அல்லவா?

ஆனால் அவனுடைய கேள்வியைப் பார்க்க அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவ னுடைய கேள்வியைப் பொருட்படுத்தாதவள் போல வேறு பக்கம் புலனைச் செலுத்துவதாகப் பாசாங்கு செய்தாள். அவன் விடவில்லை. அவளைச் சுரண்டிச் சுரண்டிக் கேட்டான்.

“எப்போ அம்மா பெற்றுத் தருவாய்?”

“இப்போ நீ போய் விளையாடு. பெரியம்மாவினுடைய தங்கச்சியை வாங்கிக் கொண்டு வந்து தருகிறேன். நீ அவளுடன் விளையாடலாம்”

“நீ சும்மா?”

“இல்லை, உண்மையாக!”

அவனுக்கு இந்தப்பதில் சற்றே ஆறுதலளித்தது. உடனே இந்தச் சந்தோஷ செய்தியை நடராசனுக்குக் கூறிப் பெருமை கொள்வதற்காக அங்கே ஓடி விட்டான்.

மனைவியின் சங்கடமான நிலைமையைக் கண்டு எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவன் வெளியில் சென்றதும் அவன் அவன் முகத்தைத் திரும்பிப்பார்த்தேன். துக கம் பொங்கி வந்து கொண்டிருந்தது. “கண் கெட்ட கடவுள்” என்று கடவுளைச் சபித்துக் கொண் டிருந்திருப்பாள் போலவுந் தோன்றியது. இன்று அவன் கேட்ட கேள்விகள் அவளுள்ளத்தில் பழைய நினைவுகளைத் தூண்டி விட்டிருக்கும். ஒரு பெண்குழந்தை இல்லாத துக்கத்தையும் கிளறி விட்டிருக்கும். அவனைப் பெறுவதற்கு அவள் கிடந்த தவம் பெரிது. அங்ஙனம் அருமை யாகப் பெற்ற குழந்தைக்கு இன்று ஒரு தங்கச்சி வேண்டி யிருக்கிறது. அவள் என்ன செய வாள்? இவற்றையெல்லாம் யோசிக்கப் பழைய நினைவுகள் எனக்குத் தொடர்ச்சியாகப் புரண்டு வந்தன.

விவாகஞ் செய்து பல வருடங்களாகிவிட்டன. தான் தாயாவதற்கான தன்மை தன்னிடம் காணப்படும் என்று மாதந்தோறும் எதிர்பார்த்துப் பார்த்து அலுப்படைந்துவிட்டாள் என் மனைவி. வருஷக் கணக்கிலே நாட்கள் ஓடிய பின்பு அவன் துன்பம் இன்னும் பெருகி விட்டது. மனோன் மணிக்கு நாங்கள் விவாகஞ் செய்த மறு வருஷமே விவாகம் நடைபெற்ற து. அவளும் நாலு குழந்தைக்குத் தாயாகி விட்டாள். அவள் என் மனைவியைக் காணும் போது, “என்னடி. நான் உனக்கடுத்து வருஷம் தானே கலியாணஞ் செய்து கொண்டேன். இப்பொழுதெல்லாம் நாலு குழந்தைக்குத் தாயாகி விட்டேன்” என்று நோகாமற் குத்துவாள். இப்படியே அவள் தோழியர் ஒவ்வொரு வரும் பகிடி” பண்ணிக் கொண்டிருக்க அவள் துன்பம் கங்கு கரையின்றிப் பெருகி விட்டது.

மருதடிப் பிள்ளையாருக்கும், ஆலடி விநாயகருக்கும். உள்ளூர்க் கணேஸ்வரனுக்கும் – இன்னும் இல்லாத பொல்லாத தெய்வங்களுக்கெல்லாம் விண்ணப்பங்கள் செய்தாள். பூஜைகள், அபிஷேகங்கள், குளிரச் குளிரச் செய்வித்தாள். பிள்ளை பிறந்தால் எல்லாம் தரு வதாக ஆசை காட்டினாள். ஒன்றிலும் பிரயோசனத்தைக் காணோம். எத்தனையோ “சாமி”க ளும், சந்நியாசிகளும், சாத்திரம் சொல்லியும், ஆசீர்வாதம் புரிந்தும் ஆளுக்கு இரண்டும் மூன்றுந் தட்டிக்கொண்டு போய்விட்டார்கள்! ஒரு நேரம் பசிகிடக்கமாட்டாதவள். எத்தனை எத்தனை விரதங்களெல்லாம் பிடித்தாள்! என்ன செய்தபோதும் அந்தக் “கண் கெட்ட தெய்வம்” கண் திறந்து பார்க்க வில்லை!

கதிர்காமக்ஷேத்திரத்தைப் பற்றி யாரோ அவளுக்குக் கூறிவிட்டார்கள். என்னிடம் வந்து கதிர்காமம் ஒரு புதுமையுள்ள ஷேத்திரம் என்றும், அங்கே சென்று வணங்கினால், நிச்சயம் பலன் கிடைக்கும் என்றும் கூறினாள். அவள் விருப்பத்தைத் தடைசெய்ய நான் விரும்ப வில்லை. ஒரு முறை அப்புண்ணிய தலத்தின் மகிமையையும் பரிசோதித்து விடுவது என்ற நோக்கத்துடன் புறப்பட்டோம்.

அங்கே போய்த் தரிசித்து வந்த பலனும் ஏமாற்றந்தான். ஆனால் ஆறு மாதங்கழித்து சில மாற்றங்கள் மனைவியிடத்திலே தோன்றின. “ஆறுமாதஞ் சென்றாலும் காரியமில்லை;

அது கதிர்காமத்தையன் கிருபைதான்” என்பது மனைவியின் அபிப்பிராயம்.

ஓங்காளம், புரட்டல், உணவுக்கு மனமின்மை இப்படியாகத் தொடர்ந்தது. பத்துமாத இறுதியிலே மருத்துவப் பெண் “யார் வெளியிலே; கூரையிலே தட்டு” என்றாள். ஆண் பிள் ளையல்லவா! அதற்குத் தந்தையாகிவிட்ட உசாரிலே கூரையிலே பெருமையுடன் தட்டினேன்.

இன்றைக்கு அவனுக்கொரு தங்கச்சி வேண்டுமாம்!

“எப்போ அம்மா பெற்றுத் தருவாய்?” என்ற கேள்விக்குத் தாய் சரியான பதில் கொடாது, “பெரியம்மாவின் தங்கச்சியை வாங்கித் தருகிறேன்” என்று கூறியது அவனுக்குத் திருப்தியா யிருந்தது. போனான். ஆனால் அங்கே நடராசன் சும்மாவிட்டானா? “பெரியம்மாவினுடைய தங்கச்சியை, அவளண்ணன் சிவபாலன் விடுவானா? விடமாட்டான். உன் அம்மா, உன்னை அணாப்பி இருக்கிறாளடா!” என்று சொல்லி விட்டான். அவனுக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவமானமாயும் இருந்தது. மனம் போனபடியே ஏதேதோ எல்லாம் சிந்தித்துப் பார்த்தாள்.

“என்னைப் பெற்றது யார்? அம்மாதானே பெற்றாள்? அப்படியானால், அவள் என்னை தங்கச்சியும் பெறக்கூடாது?மீண்டும் மீண்டும் இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தான். அப்ப ழுது “என்னை எப்படி அம்மா பெற்றாள்?” என்ற எண்ணம் உதயமாகி விட்டது. திரும்பி வந்தான்.

“அம்மா, என்னை நீதானே பெற்றாய்?”

“ஆமாம்”

“எப்படியம்மா பெற்றாய்?”

மீண்டும் ஒரு கஷ்டமான சந்தர்ப்பம் வந்துவிட்டது. முன் போலவே, ஏதோ சிந் தனையிலிருப்பவள் போலக்காட்டி அதைக் கவனியாதவள் போலப் பாசாங்கு செய்தாள்.

“சொல்லேன், நான் எப்படிப் பிறந்தேன்?” என்று மீண்டும் கேட்டான்.

அப்பொழுது அயல் வீட்டுக் கிழவி ஏதோ பொருள் இரவல் கேட்டு வந்தாள். அவள் முன் னிலையில் இதே கேள்வியைக் கேட்டால் அவள் பரிகசிப்பாளே என்ற எண்ணம் தாய்க்கு வந்தது. உடனே வீட்டுக்குள்ளே வடை இருக்கிறது; அதை எடுத்துச் சாப்பிடு!” என்று கூறி னாள். அவன் வடையை எடுப்பதற்காகப் பறந்து சென்றான். இதற்கிடையில் அயல் வீட்டுக் கிழவி வந்த காரியத்தை முடித்து விரைவாக அனுப்பி விட்டாள்.

“அம்மா. வடை சாப்பிட்டு விட்டேன்….எப்படியம்மா என்னைப் பெற்றாய்?” என்று கேட்டுக்கொண்டே வந்தான்.

“கத்தியைக் காணவில்லை. வீட்டுக்குள்ளே சென்று அதைத் தேடி எடுத்துக் கொண்டுவா” என்று கூறினாள். அதை அவள் உயரத்திலே வைத்திருந்தாள். அவனுக்கு எட்டாது. அதை எடாது வந்தால் மீண்டும் கத்தியை எடுத்து வரும்படி அனுப்பலாம். இப்படியாகக் கடத்தி விட எண்ணினாள். ஆனால் ஏதோ உபாயமாக உயரம் வைத்து கத்தியை எடுத்து வந்து தாயிடம் கொடுத்து விட்டு, “எப்படியம்மா பிறந்தேன்” என்று மீண்டும் கேட்டான்.

வேறு வழியின்றி “அப்படிக் கேட்கக்கூடாது ராசா!” என்று தாய் கூறினாள்.

“ஏனம்மா?”

“சீ அது கூடாது?”

“ஏனம்மா அது கூடாது?”

“அப்படித்தான்: அது கேட்கக் கூடாது”

“ஏனம்மா… நீ சும்மா சொல்லுறாய்….நான் எப்படிப் பிறந்தேன்?…சொல்லு!”

“அப்பாவிடம் போய்க்கேள்; அவர் சொல்லுவார்”.

“ஏனம்மா உனக்குத் தெரியாதா?”

“நான் சமைக்க வேணும், நீ அப்பாவிடம் போய்க் கேள்!”

கடைசியாக என்னிடம் வந்தான்.

“அப்பா, நான் எப்படியப்பா பிறந்தேன்?”

“எனக்குத் தெரியாது. அம்மாவிடம் போய்க் கேள்!”

“அவ உங்களிடம்தான் கேட்கச் சொன்னா”

“இல்லை, அவளிடம் தான் போய்க்கேள், அவள்தான் உன்னைப் பெற்றவள்”

மீண்டும் தாயிடம் போய் “நீதான் என்னைப் பெற்றாயாம். அப்பா அப்படித்தான் சொல்லுகிறார்…நான் எப்படிப் பிறந்தேன். சொல்லம்மா!” என்றான்.

அவள் வெளியே பார்த்துச் சற்றுப் பலமாக, “என்னவாம் உங்கள் குழந்தை!” என்றாள்.

“ஏன்?” என்று கேட்டேன்.

“அப்பரைப்போல, மகனும் விடுப்புப்பிடுங்கி” என்றாள்.

“ஏன் சொல்லிவிடேன்; நீதானே பெற்றாய்!”

நான் இப்படிக் கூறியதும் அவளுக்குக் கோபம் வந்து விட்டது. நான் ஏதாவது உபா யமாக அவனைச் சமாளித்து விடுவேன் என அவள் எண்ணினாள். அவ்வெண்ணமும் வீணாகப்போகவே அவளுக்கு அவன் மீது கோபம் வந்து விட்டது.

“போடா, போய் வெளியே விளையாடு!” என்றாள். “சொன்னால்தான் போவேன்” என்றான், தீர்மானமாகத் தலையை ஆட்டிக் கொண்டே. “கோபம் வந்தால் தெரியுமா?” என்றான்.

நான் இன்னும் தாமதித்தால் அவனுக்கு அடி விழுந்து விடும். அந்த அடி அவனுக்கு மாத்திரம் அடித்த அடியாக இராது; எனக்கும் சேர்த்து அடித்த அடியாகவே ஆகும். அதற்கு முன், “தம்பி, இங்கே வாடா! நான் சொல்லுகிறேன்” என்றேன். ஓடி வந்து “சொல்லுங்கோ, சொல்லுங்கோ” என்றான்.

“உன்னை அம்மா பெற்றது என்று கூறியதெல்லாம் சும்மா”

“அப்போ?”

“விலைக்கு வாங்கினோம்”

“எங்கே?”

“கோவிலிலே!”

“எந்தக் கோவிலிலே அப்பா?”

“கதிர்காமத்தில்”

“பொய்”

“இல்லை, உண்மையாய்!”

“அப்போ ஒரு தங்கச்சியும் வாங்கித் தருகிறீர்களா?” என்று கேட்டான்.

“ஓ” என்றேன்

“எப்போ?”

“திருவிழாவுக்கு இன்னும் காலமிருக்கிறது; அப்போது வாங்கித் தருகிறேன்” என்றேன். உடனே “நடராஜனுக்குச் சொல்லப் போகிறேன்” என்று கூறியவாறே கையில் தட்டிக் கொண்டு ஓடினான். அடுக்களைப் பக்கம் திரும்பிப் பார்த்தேன்.

அவள் முகம் மலர்ந்தது!

– மறுமலர்ச்சி கார்த்திகை – 1947.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *