குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 8,987 
 
 

முதலாம் திருமணநாளின் போது தான் இளவரசியோடு அம்மா, அப்பா காலில் விழுந்து எழுந்தபோது அம்மா சொன்னாள்.

“யாராவது நல்ல டாக்டரா பாரு குமரா!”

“எதுக்கும்மா?”

“உங்களுக்கு அப்புறமா கல்யாணம் ஆன பாங்க்காரம்மா மருமவ கூட ஆறுமாசம்”

“……..”

“எங்கே போனாலும் ‘மருமவளுக்கு விசேஷமா?’ன்னு கேட்குறாங்க. பதில் சொல்லி மாளலை!”

“சரிம்மா. பார்க்குறேன்!”

டாக்டரம்மாவுக்கு வயது 30களின் மத்தியில் இருந்தது. சினிமாவில் வரும் டாக்டர்களைப் போலவே கோல்ட் ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். ஆனால் வெள்ளை அங்கி எதுவுமில்லாமல் நார்மலாக புடவையில் இருந்தார்.

“ஜெனரலா இன்வெஸ்டிகேட் பண்ணதுலே ரெண்டு பேருக்கும் ப்ராப்ளம் ஒண்ணும் இருக்குறதா தெரியலை. ரெண்டு பேருக்கும் சின்ன வயசு. மேரேஜ் ஆன ஒன் இயர்க்கெல்லாம் பிரெக்னன்ஸி இல்லைன்னு டாக்டரை யாரு கன்சல்ட் பண்ண சொன்னது?”

“வீட்லே பெரியவங்க சொன்னாங்க டாக்டர்!”

“பெரியவங்களுக்கு வேற வேலையே இல்லை. கல்யாணம் ஆனதுமே பேரன், பேத்தி வந்துடணும் அவங்களுக்கு. இன்னும் ரெண்டு வருஷம் ஜாலியா இருங்களேன். கொழந்தைக்கு ஏன் அவ்வளவு அர்ஜண்ட்?”

“எங்க ஃபேமிலியிலே யாருக்குமே இவ்வளவு டிலே ஆனதில்லைன்னு சொல்றாங்க டாக்டர்!”

“ஓக்கே. நோ ப்ராப்ளம். நீ ஃபோலிக் ஆசிட் டேப்ளட்ஸ் டெய்லி எடுத்துக்கம்மா. நீங்க எச்.சி.க்யூ.எஸ்.சும், லைக்கோரெட்டும் டெய்லி எடுத்துக்குங்க. ஒரு மூணு மாசம் வெயிட் பண்ணலாமே? சொந்த பந்தங்க, ஃப்ரண்ட்ஸ் யாராவது கேட்டா தள்ளிப்போட்டிருக்கோம்னு சொல்லுங்க”

மூணுமாசம் கழிச்சி…

“ஓக்கே. நான் இப்போ ஒரு சார்ட் போடுறேன். இந்த சார்ட்லே சொன்னமாதிரி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம்”

“நங்கநல்லூர் ஆஞ்சநேயருக்கு 101 வடைமாலை சாத்துறேன்னு வேண்டிக்க”

“மென்சஸ் ஆனதிலேருந்து சரியா 14ஆம் நாள்லேருந்து ஸ்கேன் எடுத்து எக் சரியா ஃபார்ம் ஆவுதான்னு பார்க்கணும். சரியா ஃபார்ம் ஆச்சின்னா நோ ப்ராப்ளம். இல்லேன்னா அதுக்கேத்தமாதிரி ட்ரீட்மெண்டை மாத்திக்கலாம்.

“புட்டலூரு புள்ளத்தாச்சியம்மனை பார்த்து வளையல் கொடுத்துட்டு வந்துடுங்க”

“எக் ஃபார்ம் ஆவுறதுலே கொஞ்சம் ப்ராப்ளம் இருந்தது. நோ ப்ராப்ளம். மெடிசின் மூலமாவே சரிபண்ணிடலாம்”

“இன்னுமா விசேஷமில்லை. எங்க ஓரவத்தி பொண்ணு கல்யாணம் ஆயி மொத மாசமே நின்னுருச்சி!”

“இப்போ எல்லாம் சரியாதான் இருக்கு. ஏன் ப்ரெக்னன்ஸி ஆவலைன்னு தெரியலை. 15% பேருக்கு ஏன் இன்ஃபெர்ட்டிலிட்டின்னு ரீசன்னே கண்டுபிடிக்க முடியாது”

“குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வெச்சுடுங்க”

“சாரி. ஐ திங்க் ப்ராப்ளம் வித் யுவர் சைட் மிஸ்டர் குமரன். தப்பா எடுத்துக்க மாட்டீண்க்களே? ஒரு சீமென் கவுண்டிங் எடுத்து பார்த்துடலாமா? மார்க் தான் சென்னையில் பெஸ்ட் லேப். அங்கே ரிப்போர்ட் எடுத்துடுங்க. அப்படியே டெஸ்டிசைட்ஸும் ஸ்கேன் பண்ணனும். ப்ரிசிஸனுக்கு எழுதித்தர்றேன்”

“ஐயப்பன் கோயில் ஜோசியருகிட்டே ஜோசியம் பார்த்தீங்களா?”

“உங்க கவுண்டிங்க்ஸ் பக்காவா இருக்கு. இளவரசிக்கு ஒரு எச்.எஸ்.ஜி டெஸ்ட் பண்ணி பார்த்துடலாமா?”

“கருமாரியம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. எலுமிச்சைப்பழம் கொடுப்பாங்க. வெறும் வயித்துலே சாப்பிட்டா அப்படியே நிக்குமாம்”

“ரெண்டு ட்யூப்லயும் ப்ராப்ளம்னு நெனைக்கிறேன். அடுத்த வாரம் அட்மிட் பண்ணுங்க. லேப்ராஸ்கோபி பண்ணி சரிபண்ணிடலாம்”

“இதுக்கெல்லாம் சித்தவைத்தியம் தான் கரெக்ட். டாக்டர் ஜமுனா எனக்கு தெரிஞ்சவங்க தான். போயி பார்க்குறீங்களா?”

“லேப்ராஸ்கோபில சரியாகலை. டயக்னாஸ்டிக் சென்டருக்கு எழுதித்தர்றேன். டயக்னாஸ்டிக் பண்ணா சரியாக சான்ஸ் இருக்கு!”

“மாசத்துக்கு ஒருமுறை மலைவேம்பு அரைச்சிக் கொடுங்க!”

“டயக்னாஸ்டிக் பண்ணதுலே ஒரு ட்யூப் ப்லாக் க்ளியர் ஆயிடிச்சி. சோ, ப்ரெக்னன்ஸிக்கு நெறைய சான்ஸ் இருக்கு!”

“ஷாலினி டாக்டரை பாருங்க. எம்.டி. டி.ஜி.ஓ.வெல்லாம் படிச்சிருக்காங்க. கைராசி டாக்டர்!”

“இன்னும் ஒரு மூணுமாசம் பார்ப்போம். அதுக்கப்புறமா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம்!”

“நான் கல்யாணத்துக்கு வரலை. யாராவது எத்தனை குழந்தைன்னு கேட்பாங்க!”

“ஆறு மாசத்துக்கு ரெகுலரா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம். உங்க ஸ்பெர்ம்ஸை எடுத்து காண்சண்ட்ரேட் பண்ணி உங்க வைஃபோட எக்லே இன்ஜெக்ட் பண்ணிடுவோம். கண்டிப்பா சக்சஸ் ஆகும். இதுவும் சரிபடலைன்னா டெஸ்ட் ட்யூப்….”

“எனக்கு தான் ப்ராப்ளம்ங்கிற மாதிரி டாக்டர் சொல்றாங்களே? நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?

“என்னன்னே புரியலை. இதுவரைக்கும் என்னோட பேஷண்ட்கள்லே யாருக்கும் மூணுவாட்டிக்கும் மேலே ஐ.யூ.ஐ. பண்ணதில்லை”

ஒரு குழந்தையை தத்தெடுக்கும் மனநிலைக்கு குமரன் வந்துவிட்டிருந்தான். இளவரசி மனரீதியாக அதற்கு தயாராக இல்லை. இளவரசியே தயாராக இல்லாதபோது அம்மாவிடம் இதைப்பற்றி பேசக்கூட முடியாது. “வேண்டாம்னு சொல்றவங்களுக்கெல்லாம் பொறக்குது. இவளுக்கு ஒண்ணே ஒண்ணு பொறந்துடக் கூடாதா?”

லட்சங்களும், நாட்களும் இளவரசியின் கண்ணீரைப் போலவே கரைந்தது. இடைவிடாத மருத்துவத்தையும், மருந்தையும் கண்டு சோர்வடைந்து ஒரு ஆறுமாதம் இடைவெளி விட்டார்கள். பிறகு சித்தமருத்துவத்துக்கு போகலாம் என்று நினைத்திருந்த வேளையில்…

“ஹலோ. இளவரசி பேசுறேங்க. லேப் ரிப்போர்ட் பாசிட்டிவ்வாம். ஈவ்னிங் டாக்டரை பார்த்து கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்”

அக்கடாவென்றிருந்தது குமரனுக்கு. மகிழ்ச்சி என்று சொல்லுவதைக் காட்டிலும் நிம்மதி என்று சொல்லலம். என்றாவது ஏற்படும் நடுராத்திரி விழிப்புகளில் கேட்கும் மனசையறுக்கும் விசும்பல் இனி கேட்காது. ஆஞ்சநேயருக்கு வடமாலை, புட்டலூரு நேர்த்தி, குலதெய்வத்துக்கு பொங்கல், திருப்பதி வேண்டுதல் என்று ஏராளமான நேர்த்திக்கடன் அம்மாவுக்கு பாக்கியிருக்கிறது. ‘குழந்தை வளர்ப்பது எப்படி?’ புத்தகம் கிழக்கில் கிடைக்குமா? இல்லையென்றால் பரவாயில்லை, மணிமேகலையில் கண்டிப்பாக கிடைக்கும்.

– மே 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *