குழந்தைக் காதலர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2023
பார்வையிட்டோர்: 1,406 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“முன்பெல்லாம் காதற்கதைகளை விடாது எழுதி வருவீர்களே, இப்போது ஏன் எழுதுவதில்லை?” என்று என் கதைகளைப் படிக்கும் அன்பரொருவர் கேட்டார். உண்மைதான். காதற் கதைகளென்ன, காதல் என்பதிலேயே எனக்கு ஐயம் பிறந்துவிட்டது! இறை வன் திருவடிகளிற் காதலாகிக் கசிந்து கண்ணீருகுக்கும் செயலிலல்ல, ஆண் பெண் உறவில் தோன்றும் காதலில் தான். ஏனெனில் கற்புக்குக் கண்ணகியையும், பொய் சொல்லாமைக்கு அரிச்சந்திரனையும் காண்பிப்பதுபோல், காதலுக்கும் ரோமியோ ஜூலியட், லைலாமஜ்னு, தேவ தாஸ் போன்ற ஒரு சில காவியக் காதலர்களைத்தான் காண்பிக்க முடிகிறது. இதர பல்லாயிரக்கணக்கான மக்களின் காதல்? அது காதலில்லையா? அது போகட்டும்.

அழகிற் சிறந்த ஆடவனொருவன் தன்னை யொத்த அழகியைக் கண்டதுந்தான் காதல் கொள்கிறான், நமது காதற் கதைகளில். இதுவே விதியாயின் அழகில்லாதவன் அல்லது அழகில்லாதவள் தன்னையொத்த குரூபி யைத்தான் காதலிக்க வேண்டுமோ? சினிமா வசனங்கள் கூட, “பொன்னே, புதுமலரே, பொங்கிவரும் தண்ணிலவே” என்றுதான் புலம்புகின்றன.

சே! சே! உடலழகு எத்தனை நாட்களுக்கு இருக்கும்? உள்ளத்தழகன்றோ வேண்டற்பாலது. “காதலனும் காதலியும் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம்” என்கிறார்கள். சரி. ஒப்புக்கொள்கிறேன். இந்தத் தூய எண்ணம் எத்தனை பேரிடம் உண்டு?

இவைகளையெல்லாம் உத்தேசித்துத்தான் அந்தக் குழந்தைக் காதலர்களின் கதையைச் சொல்லப் போகிறேன்.

“குழந்தைக் காதலர்களா? தும்பைப்பூ போன்ற கள்ளமிலாக் குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் காதலா?” என்று கேட்கத் தோன்றுகிறதா? இந்தக் கதையைப் படித்துவிட்டுப் பிறகு கூறுங்கள்.

துரைசாமி கிராணியாருக்குச் சொந்தமான டொரியான் பழத்தோட்டத்திற்குப் பக்கத்தில் அந்த இரண்டு சிறுவர்களும் கோலி விளையாடினர். சிறுமி ஒருத்தி அவ்விளையாட்டை அக்கறையுடன் கவனித்துக்கொண்டிருந்தாள்.

“அடே, சோமு! இந்தத் தடவை உன்னைத்தோற் கடிக்கிறேன்.”

“ஏண்டா ராமு, வீண் பேச்சு பேசறே? இப்பத் தோத்துப் போனதுக்கு என்ன சொல்றே?” அதிகாரத் தோடு கேட்டான் சோமு.

சிறுமி கை கொட்டிச் சிரித்தாள்.

“காமு! நீ சிரிக்கிறாயா? வா வீட்டுக்கு. அப்பாகிட்ட சொல்லி, உனக்குச் செம்மையா உதை வாங்கித்தர்ரேன்,” என்று முகத்தைச் சுளித்து ஆத்திரத்துடன் கருவினான் ராமு என்ற ராமச்சந்திரன்,

“அண்ணா! அண்ணா! வேண்டாண்ணா! நான் தெரியாம சிரிச்சுட்டேண்ணா! அப்பாகிட்ட கோள் மூட்டி, எனக்கு அடி வாங்கி வைக்காதே. இனிமே நான் சிரிக்கவேமாட்டேன்,” என்று கெஞ்சினாள் காமு.

“சோதாப்பயலே! நீ தோத்துட்டு, ஏண்டா உன் தங்கையைக் கோவிச்சுக்கிறே?”

“நான் என் தங்கையை ஏசினா உனக்கு என்னடா? அனாவசியமா எங்க விஷயத்திலே தலையிட்டா உன்னை நொறுக்கித் தள்ளிடுவேன்.”

“அ! பெ…ரி…ய சூரப்புலி! நொறுக்கித் தள்ளு வாராம்ல, நொறுக்கி?”

அவ்வளவுதான். மறுநொடி. சோமுவின் முகத்தில் பலமான குத்து ஒன்று விழுந்தது. இதனைச் சிறிதும் எதிர்பாராத சோமு சமாளிப்பதற்குள், ராமு கீழே கிடந்த கம்பு ஒன்றால் சோமுவின் தலையில் அடித்து விட்டு, திரும்பிப் பாராமல் ஓடிவிட்டான்.

இதைவிட திடுக்கிடும் சம்பவமொன்று மறுகணம் நிகழ்ந்தது.

மின்வெட்டும் நேரத்திற்குள் காமு அதே கம்பை எடுத்துத் தன் அண்ணன்மேல் ஆத்திரத்துடன் வீசினாள். அது ராமச்சந்திரனின் மண்டையில் தாக்க, அவன் மயங்கி விழுந்தான்.

இதற்குள் நேயர்கள் இந்த இரண்டு சிறுவர்களையும் அந்தச் சிறுமியையும் பற்றி ஓரளவு யூகித்து அறிந்து கொண்டிருப்பார்கள்.

ராமச்சந்திரனும் காமு என்ற காமாட்சியும் துரை சாமி கிராணியாரின் செல்லப் பிள்ளைகள். சோமு என்ற சோமசுந்தரம் அவர்களுடன் சேர்ந்து விளையாடும் பக்கத்து வீட்டுக்காரரின் மகன். காமு எப்போதும் சோமுவின் கட்சி ராமு கருவுவான். அவளைப் பற்றித் தன் தந்தையிடம் ஏதாவது கோள் மூட்டிக் கொண்டே இருப்பான். அவரும் சிறிது முன்கோபி. தீர விசாரியாது தம் மகளைக் கண்டிப்பார்.

“ஆனால், இன்று உண்மையாகவே நான் தவறு செய்துவிட்டேனே! அந்தப் பாழும் கம்பு அவன்மேல் படாமல் இருந்திருக்கக் கூடாதா? அப்பா அறிந்தால் என்னை உயிருடன் விடமாட்டாரே.” என்று கேவிக்கேவி அழுதாள் காமு.

ராமுவால் அடிபட்ட சோமு சற்று நேரத்திற்குள் சமாளித்துக் கொண்டான்; நொடியில் நடந்தவைகளை அறிந்துகொண்டான்.

“காமு! நீ ஏன் அழறே? உன் அப்பா காதில் விழப் போவுது. வாயை மூடு.” – அவள் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு ராமு விழுந்த இடத்திற்குச் சென்றான். இதற்குள் ராமுவும் மயக்கம் தெளிந்து எழுந்தான்.

“ராமு! கோவிச்சுக்காதே. காமு தவறா செஞ்சுட்டா. மன்னிச்சுடு, உன் அப்பாகிட்டே சொல்லாதே” சோமு.

தன்னால் அடிபட்ட சோமு அதை மறந்து தன் தங் கைக்காகப் பரிந்து பேசுவது அவனுக்குப் புதிதல்ல. “ஆனால், நான் அடித்ததை இவன்… இவன்…”

“காமு என்னை அடிக்கலே. நீ தான் என்னை அடிச்சிருக்கே”

“இல்லை, அண்ணா! இல்லை. நான்தான் தெரியாத் தனமா உன்னை அடிச்சுட்டேன், என்னை மன்னிச்சுடு, அண்ணா!”

“சீ! கழுதை. வாயை மூடு, அவன் அடிவாங்கினா உனக்கென்ன? அவன்தான் என்னை அடிச்சான்னு நம்ம அப்பாகிட்ட சொல்லி, அவனுக்கு உதை வாங்கிக் கொடுப்போம்.”

“ஐயோ! அது பாவம் அண்ணா! அடிச்சது நான். அது உனக்குத் தெரியும். சோமு மேலே ஏன் பழியைப் போடறே?”

சோமு அச்சத்தால் நடுங்கினான். “நான் யாரையும் அடிக்கலே. நான் யாரையும் அடிக்கலே.” என்று பரிதாபமாகக் கூவி அழுதான்.

அவன் அழுவதைக் கண்டதும் காமு தன்னை மறந்து கூக்குரலிட்டு அழுதாள்.

2

துரைசாமி கிராணியாரின் டொரியான் பழத்தோட்டம் பெயருக்குத்தான் டொரியான் பழத்தோட்டமே தவிர, அங்கு எல்லா வகை பழச்செடிகளையும் பயிராக்கியிருந்தார் கிராணியார். இந்தியாவிலிருந்து தருவித்த ஒட்டுமாஞ்செடி பெரிய மரமாக வளர்ந்து காய்த்துக் குலுங்கியது. அதிலிருந்து ஒரு மாம்பழத்தைப் பறித்துக் கொடுக்கும்படி காமு சோமுவை நச்சரித்துக் கொண்டிருக்கிறாள்.

சோமுவுக்கு அப்படிச் செய்வதால் ஏற்படும் ஆபத்து நன்கு தெரியும். துரைசாமி அந்த மரத்தைப் பிறர் கையால் தொடக்கூட சம்மதிக்கமாட்டார். அதை மட்டும் தான் பெற்ற பிள்ளைகளைவிட அன்பாக ஆசையாக கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார். மேலும், அப்போதுதான் அந்த மரம் முதன் முறையாகக் காய்க் கத்தொடங்கியிருந்தது.

அதன் பழங்களைப் பறிப்பதற்கு முன்னர், அந்த மாமரத்தினடியில் தாம் வைத்து வணங்கும் முனியாண் டிக்குப் பூசை போட்டு, அதன் பிறகே பழங்களைப் பறிக்க வேண்டும் என்று எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மரத்து மாம்பழத்தையன்றோ காமு பறித்துத் தரும்படிக் கேட்கிறாள்! சோமு சில நொடியே தயங்கினான். மறு நொடி அவன் மரத்தின்மேல். அவன் “காதலி” காமுவுக்கு நாவில் நீர் சுரந்தது.

திடீரென்று காமு, “சோமு! சோமு! இறங்கு, இறங்கு, சுருக்கா இறங்கிடு. அப்பா! அப்பா!” என்று திகிலோடு கூவினாள்.

“அட! துஷ்டப் பயலே! என்ன துணிச்சல்! சாமிக்கு வேண்டி விட்ட மாமரத்திலே எந்தத் திருட்டுப் பய மகன் மாங்கா பறிக்கிறது?” என்று கூவிக்கொண்டு ஓடி வந்தார் துரைசாமி.

இக்கட்டான நிலையை உணர்ந்து கொண்டான் சோமு. மரத்திலிருந்து வெகு வேகமாகக் கீழே இறங்கிக் கொண்டே, “காமு! காமு! நீ ஓடிப் போயிடு. நான் சமாளிச்சுக்கிறேன். போ. போ. போயிடு.” என்று கூவினான்.

“நான் போகமாட்டேன். உன்னை விட்டுட்டு நான் போகமாட்டேன்.” அவனையே அண்ணாந்து பார்த்த வண்ணம் அசையாமல் நின்றுவிட்டாள் அவன்”காதலி”.

மரத்தின் உச்சிக்கிளையில் காய்த்திருந்த ஒரு கொத்து மாங்காய்களைப் பறித்துக்கொண்டு, அவசரம் அவசரமாகக் கீழிறங்கினான் சோமு.

காமு துடியாய்த் துடிக்கிறாள்.

“அதோ வந்துவிட்டார்! இதோ வந்துவிட்டார்! வா. வா. சீக்கிரம்.” என்று அலறுகிறாள்.

“அடே சோமு! நீ தானா? அந்த மரத்திலே மாங் காய் பறிக்க என்ன நெஞ்சழுத்தம்? இதோ வந்துட்டேண்டா, அயோக்கியப் பயலே!”

துரைசாமி கிராணியாரின் கூச்சலைக் கேட்ட சோமு கிலியால் கால்கள் தள்ளாட சரசர வென்று குரங்கு போல் ஒரு கிளை விட்டு மறு கிளைக்குத் தாவித் தாவி வந்தவன், அந்தோ! கை நழுவி, பரிதாபமாகக் கீழே விழுந்துவிட்டான்.

3

கல்லைப்போல் இறுகி, கரடு முரடான தரையில் விழுந்த வேகத்தில், சோமசுந்தரத்தின் மண்டை உடைந்து, இரத்தம் பீறிட்டு அடித்தது.

எதிர்பாராத இந்த அசம்பாவிதத்தைக் கண்ட துரைசாமி திடுக்கிட்டார். காமாட்சியின் கால்கள் ‘வெட வெட’ வென்று நடுங்குகின்றன. முகம் பேய் அறைந்தது’ போல் ஆகிவிட்டது. அளவு மீறிய திகிலால் அவளால் அழுவதற்குக்கூட முடியாமல் சிலைபோல் நின்றாள்.

இந்த நிலையிலும் சோமசுந்தரம் தன் கையில் இறு கப்பற்றியிருந்த மாங்காய் கொத்தை விடவேயில்லை. அவன் கீழே விழுந்த வேகத்தில் அதிலிருந்த இரண்டொரு மாங்காய்கள் மட்டும் சிதறிப் போயின. மற்றவை அவன் வலது கையில்.

இதற்குள் துரைசாமி போட்ட கூச்சலால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு ஓடிவந்தனர். சோமுவின் பெற்றோர்கள் தங்கள் மகனின் நிலைகண்டு அலறித் துடித்தனர். உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த அவனைத் தங்கள் இல்லத்திற்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், சோமுவின் உயிர் வீடு செல்வதற்குள் ளேயே பிரிந்து போயிற்று.

4

இந்தச் சம்பவம் நிகழ்ந்த மூன்றாம் நாள். இரவு பன்னிரண்டு மணி. காமு தன் படுக்கை அறையில் விழித்துக்கொண்டு படுத்திருக்கிறாள்.

அவள் ஆருயிர்த்தோழன் சோமு சிறிது தூரத்தில் நின்று அவளைத் தன்னுடன் வரும்படி கை காட்டி அழைக்கிறான்.

“மாங்காய்தானே வேணும்? வா, என் கூட, அதே மரத்தில் இந்தத் தடவை பறித்து உன் கையில் தருகிறேன்.” என்று அவளை அழைக்கிறான். கிள்ளிவிட்டு கிட்ட நின்றாலும் தெரிந்துகொள்ள இயலாத அந்த

மையிருட்டில் அவளுக்கு மட்டும் சோமுவின் உருவம் நன்கு தெரிகிறது. எள்ளளவு அச்சமின்றி சர்வ சாதாரணமாக யார் பின்னாலோ போவது போல காமாட்சி நடந்து செல்கிறாள்.

சோமு அடிபட்டு இறந்த அதே மாமரத்தின் அடிக்கு வந்து சேர்ந்தாள்.

அதோ! அதோ! சோமு திரும்பவும் அம் மாமரத் தில் ஏறுகிறாள். ஆம். ஆம். இந்தத் தடவை வெகு வேக மாக ஏறிப்போய் மாங்காய்களைப் பறித்துக்கொண்டு இறங்கி வருகிறான். ஐயையோ! அப்பா திரும்பவும் வந்துவிட்டாரே! இந்த இருட்டில் அவருக்கு எப்படி நாங்கள் இங்கு வந்தது தெரிந்தது? ஆ! சோமு! சோமு! இறங்கிவிடு. இறங்கிவிடு. அப்பா வந்துட்டார்! அப்பா வந்துட்டார்!.

5

மறுநாள் அதிகாலையில் அந்தக் கம்பத்து மக்கள் எல்லாரும் அம் மாமரத்தினடியில் குழுமியிருந்தார்கள்.

“முனியாண்டி, தனக்குப் பூசை போடாமல் தன் மாமரத்தில் மாம்பழம் பறித்ததால், முதலில் அந்தப் பையன் சோமுவையும், அந்தப் பழங்களைப் பறித்துக் கொடுக்கத் தூண்டிய காமுவையும் அடித்துக் கொன்று விட்டதே!” என்று அங்கலாய்த்தார்கள்.

இந்தப் பேச்சு எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அந்தச் சின்னஞ்சிறு வண்ணமலர் வாடி வதங்கிக் கிடந்தது.

– 1959, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

ந.பழநிவேலு (பிறப்பு: 20-6-1908) இந்தியாவில் தஞ்சை மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1930ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து சிங்கப்பூரிலே வசித்துவந்தார். இவரொரு வானொலி ஒலிபரப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், மொழிபெயர்ப்பாளரும், சிறுகதை, நாடக, புதின எழுத்தாளரும், கவிஞருமாவார். 1930களில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணியினைத் தொடங்கிய இவர் 1949ம் ஆண்டில் அப்போதைய 'ரேடியோ மலாயா' எனும் மலாயா வானொலி சேவையில் இணைந்தார். அங்கு ஒலிபரப்பாளராகவும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *