நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தை தாண்டி வந்திருக்கிறோம் என்றாலும் தற்போதைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விகள் அவர்களிடம் ஏராளம்.
அவர்களுக்குப் புரியும்படி பதில் சொல்ல நமக்குத்தான் புத்திசாலித்தனமும் பொறுமையும் வேண்டும். அது நம்மில் பலருக்கு இருப்பதில்லை.
என் தாத்தாவைவிட என் அப்பா புத்திசாலி. என் அப்பாவைவிட நான் புத்திசாலி. என்னைவிட என் மகன் கண்டிப்பாக புத்திசாலி. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் என் பேரக் குழந்தை நிக்கில் பரத்வாஜ் என் மகனைவிட அதி புத்திசாலி என்பது அவனது பேச்சிலும், கேள்விகளிலும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதுதான் இயற்கையின் நியதி.
எனக்கு தற்போது வயது அறுபத்திமூன்று. என்னுடைய ஒரே சுவாரசியம் ஏழு அல்லது எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேசுவதையும், விளையாடுவதையும் அவர்களுக்குத் தெரியாமல் கூர்ந்து கவனிப்பது. விளையாட்டாக ஆரம்பித்த இந்தப் பழக்கம் இப்போது ஒரு முழுநேர ஈடுபாடாகவே எனக்கு ஆகிவிட்டது.
குழந்தைகளுக்கு அனேகமாக மூன்று அல்லது நான்கு வயதிலிருந்தே அவர்களையறியாமல் மனதில் சில கல்மிஷங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதை நாம் அவ்வப்போது பார்த்திருக்கலாம். உதாரணமாக ஒருநாள் என் வீட்டில் நான்கு வயதில் இரண்டு பெண்குழந்தைகள் கூடத்தில் சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். நான் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற சாக்கில் அவர்களின் விளையாட்டையும், பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு குழந்தை அங்கு அடுக்கியிருந்த சொப்புகளை புறங்கையால் தள்ளிவிட, அடுத்த குழந்தை அவளை ஓங்கி அடிக்க, அடிவாங்கிய குழந்தை முகம் சுழித்து “அம்மா” என்று அழத் தயாரானது. சமையலறையில் வேலையாக இருந்த அதன் அம்மா, “என்ன சத்தம் அங்க?” என்று குரல் கொடுத்தாள். உடனே இந்தக் குழந்தை சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு, தன்னை எவரும் கவனிக்கவில்லை என்கிற தைரியத்தில், அழ ஆரம்பித்த குழந்தையை மேலும் நான்கு அடிகள் அடித்துவிட்டு அங்கிருந்து அடுத்த அறைக்கு ஓடி விட்டது. அடிவாங்கிய குழந்தை இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் பெரிதாக அழ ஆரம்பித்தது.
அடிகொடுத்த குழந்தையின் சைக்காலஜி என்னவென்றால், எப்படி இருந்தாலும் இவள் அழுது ஊரை கூட்டப் போகிறாள். அதற்குமுன் இன்னும் நாலு போடு போட்டு விட்டுப் போகலாமே என்பதுதான். நான் போடும் அடி ஒன்றாக இருந்தாலும் நான்காக இருந்தாலும், அழுகை ஒரே அழுகைதான் என்பது அந்தக் குழந்தையின் எண்ணம். இந்தச் சின்ன வயதில் அதற்கு எவ்வளவு கல்மிஷம் பாருங்கள்?
அதேமாதிரி, குழந்தைகள் பொய் சொல்ல ஆரம்பிப்பதற்கு அந்த வீட்டின் பெரியவர்களே முழுமுதல் காரணமாகிவிடுகின்றனர்.
என் விஷயத்தில் அது என் பாட்டியும், அப்பாவும்.
எனக்கு ஆறு வயது என்று ஞாபகம். என் அம்மாவும், பாட்டியும் வீட்டில் ஒருநாள் சர்க்கரைப் பொங்கல் செய்ய திடீரென முடிவு செய்தனர். ஆனால் அதற்கு வெல்லம் கம்மியாக இருந்தது. எனவே பாட்டி என்னிடம்,
“டே கண்ணா, நம்ம சம்சுதீன் கடைக்கிபோய் ஒரு அரைகிலோ அச்சுவெல்லம் வாங்கிண்டு வா” என்று சொல்லி என்னை கடைக்கு அனுப்பினாள். நான் ஆசையுடன் “சரி, பாட்டி” என்றேன்.
என் ஆசை என்னவென்றால் நான் மானசீகமா தெருவில் பீ பீ என்று பஸ் ஓட்டிச் செல்வேன். என் பஸ் வேகமாகச் செல்லும் எக்ஸ்பிரஸ். நான் பெரியவனானதும் ஒரு எக்ஸ்பிரஸ் பஸ் டிரைவராக வேலை பார்க்க வேண்டும் என்பது என் சிறியவயது கனவு. அதற்காக சில வருடங்கள் தொடர்ந்து ஏங்கியிருக்கிறேன்.
நான் பஸ் ஓட்டிக்கொண்டு கிளம்ப எத்தனிக்கையில் பாட்டி, “வெல்லத்த திங்காம எடுத்துண்டு வா” என்றாள். எனக்கு அப்போதுதான் ‘வெல்லத்த திங்கலாம் போல’ என்கிற எண்ணமே பளிச்சிட்டது.
அப்புறம் என்ன, வெல்லம் வாங்கி வரும்போது எக்ஸ்பிரஸ் பஸ்ஸை சிறிது நேரம் நிழலில் நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் பொட்டலத்தைப் பிரித்து ஒரு அச்சுவெல்லம் எடுத்துச் சாப்பிட்டார்.
வீடு திரும்பியதும் “வெல்லம் எடுத்து சாப்பிட்டாயா?” என்று பாட்டி கேட்டாள். “இல்லையே பாட்டி” என்றேன் நாக்கை ஒருமுறை சப்பிக்கொண்டு. அதுதான் என்னுடைய முதல் பொய் !
என்னுடைய ஏழு வயதில் ஒரு ஞாயிறன்று என் அப்பா எங்களை மதுரை தங்கம் தியட்டரில் ஓடிக் கொண்டிருந்த ‘பணமா பாசமா’ படத்திற்கு மாலை காட்சிக்கு அழைத்துச் சென்றார். ஒரே கூட்டம். அதனால் டிக்கெட் கிடைக்கவில்லை. அப்படியே வீடு திரும்ப மனமில்லாமல் அப்பா அருகிலிருந்த அவருடைய பெரியம்மா வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார். போகும்போது எங்களிடம் “அங்கபோய் சினிமாக்கு வந்தோம், டிக்கெட் கிடைக்கவில்லை என்று யாரும் உளறிக்கொட்ட வேண்டாம்…அவா கேட்டா, உங்களைப் பார்க்கத்தான் கிளம்பி வந்தோம்னு சொல்லுங்க….என்ன புரிஞ்சுதா? கண்ணா உனக்குத்தான் ஸ்பெஷலா சொல்றேன், உன் வாய வச்சிண்டு சும்மா இரு, அது போதும்” என்றார்.
அது அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்த முதல் பொய்.
அதுக்கு அப்புறம் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே நான் பொய்யில் வித்தகனாகிவிட்டேன் என்பது வேறு விஷயம்.
சமீபத்தில் காஷ்மீர் செல்வதற்காக நான், என் மனைவி சரஸ்வதி, மகன் ராகுல், மருமகள் ஜனனி, ஐந்து வயது பேரன் நிக்கிலுடன் டெல்லிவரை ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தோம்.
ராகுல் ஜனனியிடம் “நாம கடைசியா ஆறு வருடங்களுக்கு முன் நம்முடைய ஹனிமூனுக்கு காஷ்மீர் சென்றோம். அதுக்கப்புறம் இப்பதான் மறுபடியும் போறோம்” என்றான்.
இதைக் கவனித்த நிக்கில் “அப்ப நானும் உங்களோட வந்தேனாப்பா?” என்றான். ராகுல் சற்று யோசித்து, பிறகு சிரித்துக்கொண்டே “ஆமா நீயும் வந்த, போகும்போது என்னோட வந்த, திரும்பி வரும்போது அம்மாவோட வந்த” என்றான். ஜனனி அவனிடம் “குழந்தைகிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தை கிடையாதா?” என்றாள்.
ஒருமுறை ராகுல் நான் எழுதிய கதையின் பிரிண்ட்அவுட் ஒன்றை அவன் அலுவலகத்திலிருந்து எடுத்துவந்து என்னிடம் கொடுத்தான். அதைப்பார்த்த நிக்கில், “உங்க ஆபீஸ்ல தமிழ் பிரிண்டர் இருக்காப்பா?” என்றான்.
எங்கள் தெருவில் ஒரு அழகிய வெள்ளைநிற நாய் இருக்கிறது. நிக்கில் தான் எது சாப்பிட்டாலும் அதற்கும் கொஞ்சம் போடுவான். அதனால் அது எங்கள் வீட்டின் வாசலிலேயே படுத்திருக்கும். அந்த நாயைக்காட்டி காட்டியே நாங்கள் நிக்கிலை நன்றாகச் சாப்பிட வைத்துவிடுவோம்.
ஒருமுறை நான் அவனை தோளில் தூக்கிவைத்துக்கொண்டு அந்த நாய்க்கு பிஸ்கெட் போடச் செய்தேன். அவன் போடுவதை வாலை வேகமாக ஆட்டியபடி அந்தநாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அவன் அதற்கு பிஸ்கெட் போடுவதை நிறுத்தினால், அது வால் ஆட்டுவதை நிறுத்திவிட்டு, தலையை சாய்த்துக்கொண்டு தன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, தன் பளிங்கு கண்களால் ‘அவ்வளவுதானா எனக்கு !’ என்று பரிதாபமாக நிக்கிலைப் பார்க்கும்.
நிக்கில் அதனிடம் நிறைய பேசுவான். நாயும் அதைக்கேட்டபடி நின்று கொண்டிருக்கும். அவன் திடீரென்று என்னிடம், “ஏன் தாத்தா நாய்க்கு மம்மம் சாப்பிட கையே இல்லை?” என்றான். பதில் சொல்ல நான் திணறித்தான் போனேன்.
நிறைய பிஸ்கெட் போட்டுவிட்டு அந்த நாயைப்பார்த்து அன்புடன் சிரித்தான். அதுவும் அதனுடைய ஸ்டைலில் வாலை வேகமாக ஆட்டியது. நிக்கிலுக்கு அது போதவில்லை போலும். மறுபடியும் என்னிடம் “ஏன் தாத்தா நாய் என்னைப் பார்த்து சிரிக்கவே மாட்டேங்குது?”
போனவாரம் எங்கள் குல தெய்வமான வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். அங்கு நின்றிருந்த பெரிய யானையின் மீது நிக்கிலை சிறிதுநேரம் அமர வைத்தோம். யானையின் வசீகரம் பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றுதான். நிக்கில் சிறிதுநேரம் அமைதியாக யானையை பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு அதை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்க, அதன் பாகன் யானையின் தும்பிக்கையை நீட்டச் செய்தான். தும்பிக்கையைத் தொட்டுவிட்டு தன் கையை உடனே இழுத்துக்கொண்டவன் ஜனனியிடம் “ஏம்மா யானைக்கு மட்டும் பின்னாடி ஒண்ணு, முன்னாடி ஒண்ணுன்னு ரெண்டு வால் இருக்கு?” என்றான்.
குழந்தைகளின் சின்ன உலகத்தில் அறியாமை என்று ஒன்று இருக்கிறதே, நம் மனதைத் தொடுகிற எழிலான அந்த அறியாமைதான் குழந்தைகள் உலகத்தின் மிகப்பெரிய சிறப்பென்று நான் நினைக்கிறேன்.
அந்த அறியாமை மிகவும் சுவாரசியமான உலகம்.