குளியலறை விபத்துகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2024
பார்வையிட்டோர்: 1,234 
 
 

“ஐயோ ஆபத்து. நம்மிடத்தில் அந்நியர்கள் வந்ததுபோல் தெரிகிறது” என்றலறினாள் சிவப்பி. அதைக் கேட்டவுடன் வீட்டிலிருந்த அவள் குழந்தைகளும்,

“ஆ! காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்”

என்று அலறினர். சிவப்பி தனது குழந்தைகளின் அழுகுரல் கேட்டவுடன் இன்னமும் கலங்கி, அந்நியரைத் தாக்கும் நோக்கத்துடன் பலமாகத் தாக்குவதற்கு ஆயத்தமாகி, விர் விர்றென தனது கைகளை விரித்துக் கொண்டு சென்று தாக்குவதாக நினைத்துச் சுவற்றில் மோதி ஒரு வழியாக நிலைதடுமாறி எழுந்தாள். தாய் தடுமாறியதைக் கண்டதும் வீட்டிலிருந்த குழந்தைகள் எல்லாம் அமளிதுமளிப் பட்டனர். மீண்டும் தாக்க முயன்ற சிவப்பியைப் பலமான போர்வை ஒன்று தாக்க, அடிபட்டு விடுமோ என்ற பயத்தில் அஞ்சிய அவள் ஜன்னல் வழியே வெளியேறிப் போனாள். குழந்தைகள் எல்லாம் பயத்தில் “அம்மா” என்று அலறினர். கன்னங்களில் கண்ணீர்த்துளிகள் பெருக்கெடுக்க சிவப்பிக்குக் குழந்தைகளின் அழுகுரல் அவள் காதுகளில் ரீங்காரமிட்டது.

சூரியனின் வெளிச்சம் மஞ்சளாகத் தங்கம்போல் தகித்துக்கொண்டிருந்தது. பரிமளா சமையலறையில் மும்முரமாகச் சமைத்துக்கொண்டிருந்தாள். திடீரெனக் குளியலறையின் உள்ளிருந்து “அம்மா” என்று வந்த அலறலில் திடுக்கிட்டுப் போனாள் பரிமளா.

“ஏண்டி இப்படிக் கத்துற. பயந்து போனேன். என்னாச்சு”

“அம்மா பாத்ரூம்ல குளவி ஒன்னு என்னையே சுத்தி சுத்தி வருதும்மா. ரொம்ப பயம்மாயிருக்கு” என்றாள் வான்மதி.

“நீ ரொம்ப அழகாயிருக்கன்னு உன்னையே சுத்துதோ என்னமோ”

“ஜோக்கடிக்கிற நேரமாயிது. கொன்றுவேன் உன்னைய. அத வெரட்டுறதுக்கு வழி சொல்லு” என்றாள் வான்மதி.

“சும்மா துணிய வச்சு வெரட்டு போயிரும்” என்ற பரிமளாவின் பதிலுக்குச் “சரி” என்று சொல்லி சற்று நேரம் கழித்துக் குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வந்த வான்மதிக்கு இருபத்தொன்பது வயதுதான் ஆகிறது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. கரப்பான்பூச்சியைக் கண்டாலே பயப்படும் வான்மதிக்குக் குளவியைப் பார்த்ததும் குலைநடுங்கிப் போயிற்று.

“அம்மா இந்தக் குளவி பாத்ரூம்ல மேல கூடு கட்டியிருக்கு போல. அதான் வாயில எதையோ எடுத்துட்டு வருது”

“எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே தெரியும்டீ. சொல்ல மறந்துட்டேன்”

“நான் பயப்படுவேன்னு தெரிஞ்சும் சொல்லாம இருந்திருக்க. முதல்ல அந்தக் கூட்ட கலைச்சு வெளிய தூக்கிப் போடனும். இல்லாட்டி நிம்மதியா குளிக்க முடியாது. இந்தக் குளவி வந்து தொல்லை பண்ணும். கொட்டிருமோன்னு பயம்மாயிருக்கு” என்றாள் மதி.

“குளவிக்கூட்ட கலைக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க பெரியவங்க. குளவி கூடு கட்டுனா குழந்தை பிறக்கும்னு சொல்லுவாங்கடீ. எவ்வளவு அழகா ரெண்டு நாள்ல கூடு கட்டியிருக்கு. இப்ப உள்ள கொத்தனாரு கட்டுற வீடுகள் எப்ப இடியுமோன்னு பயமாயிருக்கு” என்ற பரிமளாவுக்கு,

“அம்மா என்னைய டென்சனாக்காத. அந்தக் காலத்து ஆளுங்க மாதிரி பேசுறம்மா. நான் அந்த செங்குளவி பெரிசா இருக்கு, கொட்டிருமோன்னு பயந்தா. நீ என்னடான்னா வீட்டப்பத்தி பேசிட்டுருக்க. விளக்குமாற்றை எடுத்துக் கூட்டைக்கலைச்சு எடுத்தாதான் நிம்மதி எனக்கு”

என்றவளை அவசரமாகத் தடுத்த பரிமளா,

“இருடீ அவசரப்படாதே. நாலு வருசமா குழந்தையில்லாம இருக்க. எனக்கென்னமோ இந்த வருசம் குழந்தை உண்டாயிருவன்னு தோணுது”

“இப்படி சொல்லி சொல்லியே நாலு வருசம் போச்சு. என் மாமியார் என்னவோ யார் மேல குறையிருக்குன்னு தெரியாமலே என்னை வர்றவங்க போறவங்க எல்லார்கிட்டயும் திட்டிட்டு இருக்காங்க. மகனுக்கு வேற கல்யாணம் பண்ணப்போறதா வேற மிரட்டுறாங்க. என் வீட்டுக்காரர் மாறமா இருந்தா சரிதான்”

என்று வேதனைப் பெருமூச்சு விட்டாள். வான்மதிக்கு எதைப் பற்றியும் கவலையில்லை, தனக்கென்று குழந்தைபாக்கியம் இல்லாமல் போய்விடுமோ என்ற ஒரு குறையைத் தவிர, நன்றாகப் படித்து, கைநிறையச் சம்பாதிக்கிறாள். வீட்டுக்காரன் அவ்வப்போது அம்மாவின் பேச்சைக் கேட்டு படுத்துவான். அவ்வப்போது அவனுக்குப் பதிலடி கொடுப்பாள்.

“ஆஸ்பிடல் வாங்க யாருக்குக் குறையிருக்குன்னு செக் பண்ணிப் பார்ப்போம். எப்பவும் அம்மாவும் மகனும் என்னைத்தானே குறை சொல்றீங்க” என்றவுடன் கப்சிப்பென்று வாயை மூடிவிடுவான். மருத்துவமனைக்குச் சென்று பார்ப்போம் என்றால் மனபயத்திலேயே வரமாட்டான். எங்கே தனக்குக் குறையிருக்கிறதென்று டாக்டர் சொல்லிவிட்டாள் வெறுத்துவிடுவாளோ என்று உள்ளுக்குள் குமைந்தான்.

வான்மதி தனது கணவன் தன்னை விரட்டினாலும் தான் சம்பாதிக்கிறோம் இவர்கள் துணையில்லாது வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையை மனதில் சுமந்திருந்தாள். ரொம்ப போர் அடிக்கிறதென்று விடுமுறை நாளில் அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். ஆனால் வந்ததிலிருந்து உடம்பு என்னமோ செய்தது. மாலை சாப்பிட்டது ஒத்துக்கொள்ளாமல் ஒரே வாந்தியெடுத்தாள். மறுநாள் காலை ஒரே தலைசுற்றலாக இருந்தது. தனது கணவன் முகிலனுக்குப் போன் பண்ணிச் சொன்னபோது,

“அம்மா வீட்ல ரெண்டு நாள் இருக்கணும்கிறதுக்காகப் பொய் சொல்லாத” என்றான். இவனை என்ன சொல்லித்தான் புரியவைப்பது. உண்மையில் உடம்பில் புதிதாக நோய் எதுவும் வந்திருக்குமோ, கடவுளே ஏற்கனவே எனக்கு இருக்கிற பிரச்சினைகள் போதாதா? என மனதிற்குள் மறுகினாள் வான்மதி.

“அம்மா எனக்கு உடம்பு ரெண்டு நாளாவே என்னவோ பண்ணுது. பயமாயிருக்கு” என்றாள் வான்மதி.

“நாள் எதுவும் தள்ளிப்போயிருச்சாடீ” என்றாள் பரிமளா.

அம்மா சொன்னபிறகுதான் யோசித்தாள் வான்மதி. ஆமாம் குளித்து நாற்பது நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஒரு வேளை அம்மா சொன்னது போல என் வயித்தில் குழந்தை உண்டாயிருக்குமோ? நினைக்கவே ஆனந்தமாயிருக்கே,

“ஆமாம்மா. குளிச்சு நாற்பது நாளைக்கு மேலாயிருச்சு” என்றாள் மகிழ்ச்சியோடு,

“அப்ப கிளம்பு. இன்னிக்கு மாலையே போய் டாக்டர பார்த்துட்டு வரலாம்” என்றாள்.

“அவர்ட்ட சொல்ல வேணாமா?” என்றாள்.

“வேணாம். கன்பர்ம் பண்ணிட்டு சொல்லலாம். உன் வீட்டாளுங்க குழந்தை இல்லன்னா எகத்தாளம் பேசுவாங்க” என்றாள். அதுவும் சரிதான். போனதடவை நாள் தள்ளிப்போன போது குழந்தையில்லை என்றதும் மாமியார் ஜாடைமாடையாய்ப் பேசினாள். மாலையில் தாயோடு கடவுளை மனதார வேண்டிக்கொண்டு மருத்துவமனை சென்றாள். டாக்டர் செக்கப் செய்து ரிசல்ட் சொல்லும் வரை நிம்மதியின்றித் தவித்தாள். டாக்டர் குழந்தைதான் என உறுதிசெய்தபோது வான்மதிக்குக் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து, கன்னங்களில் வழிந்தோடியது. முகிலனுக்குப் போன் பண்ணிச் சொன்னபோது,

“உண்மையாவா சொல்ற. உண்மையாவா சொல்ற” என சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான். அன்று இரவே அம்மாளுடன் இனிப்போடு வீட்டிற்கு வந்து பார்த்தான். மாமியாரும் பழைய சுணக்கம் மறைந்து மருமகளை,

“உடம்ப பார்த்துக்கோ. ஒரு வாரம் இங்கேயே ரெஸ்ட் எடு. வீட்டுக்கு வரவேணாம். வேலைக்கும் லீவு போடு. ஒழுங்கா சாப்பிடு” என்று சொன்னபோது வான்மதிக்கு மகிழ்ச்சியில் தன் கண்களைத் தன்னாலேயே நம்பமுடியவில்லை. உண்மையில் அம்மா சொன்னது உண்மைதான் போல. குளவி கூடுகட்டினால் குழந்தை பிறக்கும் என்றாளே, அதை மூடநம்பிக்கை என்று நினைத்தேனே என ஆச்சரியப்பட்டாள். நம் முன்னோரின் நம்பிக்கைகள் உண்மைதான் போல என நினைத்துக்கொண்டாள்.  

சுந்தரிமணியன் அவர்கள் மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சோமசுந்தரி. தமிழில் முதுகலைப்பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர். கல்லூரியில் பேராசிரியராக மூன்றரை ஆண்டுகள் பணியனுபவம் பெற்றவர். தற்போது ஒரு நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றி வருகிறார். முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தவர் பிறகு சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார். உலகத் தமிழ் என்ற இணைய இதழின் துணைஆசிரியராகவும் பணியாற்றியவர். இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்த சிறுகதைகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *