கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 2,004 
 
 

(1957 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓர் இனம், எல் லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை’ என்று சமத்து வம் பாராட்டுவதில் எல்லாருமே சூரர்கள் தான். ஆனால் அதற்காக அவனவன் தன் குலாசாரத்தையும் சாதிப் பெருமையையும் விட்டுவிட வேண்டும் என்று எந்தச் சாஸ்திரத்தில் சொல்லி யிருக்கிறது? என்னைக் கேட்டால் அப்படிப் பெருமை பாராட்டிக் கொள்ளு வது குற்றமாகவே இருந்தாலும் கூடப் பாராட்ட வேண் டிய விஷயம். மாபெரும் மனித சமுதாயத்தின் கடைசிக் களங்கமா யிருந்தாலும் அதைப் பாராட்டா மல் இருக்கக் கூடாது என்றுதான் சொல்லுவேன். அப்படியிருக்கும்பொழுது சுமதி சங்கரின் குடும்பம் இந்தக் குற்றத்தைப் பூஷணமாக உடைத்தானதாக இருந்ததென்றால் அதில் தவறென்ன?

இன்று எங்கு பார்த்தாலும் நடப்பதென்ன? எல்லா ஜனங்களுமே தங்கள் இரண்டு மூன்று தலைமுறை களை எடுத்துச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளு கிறார்கள். சுமதி சங்கரோ சுத்த ருக்வேதி. ஆச்வலா யனி சாகையில் அஜேயஸ கோத்திரத்தில் உற்பத்தி யான உயர்ந்த:உந்நதமான பிராம்மணன். பூமியிலே ஓடும் நதிகள் மறைமுகமாக ‘அந்தர் வாஹினி’யாக ஓடினாலும் சரி, வெளிப்படையாக ‘பஹிர் வாஹினி’ யாக ஓடினாலும் சரி, அவற்றின் உற்பத்தி ஸ்தானம் மலைகள் என்னும் முடிவுக்கு வரத்தானே வேண்டும்? அதே போல சுமதி சங்கரின் வம்ச கௌரவத்தையும் குலப் பெருமையையும் ஆராயப் புகுந்தால், அவன் பிரதி தினமும் தன் பெயரையும் குலத்தையும் மறந்து விடாமல் இருப்பதற்காக, மூன்று வேளைகளும் ‘அத்ரேய ஸகோத்ரோத் பன்னோஹம்’ என்று சொல்லி ‘அபிவாதயே’ செய்யும்பொழுது அநுசூயாவின் வயிற்றி லிருந்துதான் அவனுடைய வம்சத்தார்கள் உண்டாகி யிருக்கிறார்கள் என்பது ருசுவாகிறது. அதுமட்டும் அல்ல; வம்ச விருக்ஷம் என்னும் வனத்தில் புகுந்து திரிந்து கடைசியில்

மூலபருஷரான அத்ரியையும் தேடிக் கண்டு பிடித்து விடுகிறோம். அந்த அத்ரி மகரிஷி என்ன சாமான்யப் பட்டவரா? பிரும்மா, விஷ்ணு, சிவன்-இம்மூவரையும் சீராட்டிப் பாராட்டி வளர்த்த வர். பிரும்மாவே தன் சூத்திரத்தின் மூலம் இதை நிர்வில்லங்கமாக ஒப்புக்கொள்கிறார் என்றால், சுமதி சங்கரின் குலகௌரவத்தைக் குறை கூற எவனுக்குத் தான் துணிவு உண்டாகும்? இழுக்குக் கற்பிக்க உரிமை தான் ஏது?

இந்த சுத்த வம்ச விருக்ஷத்துக் கெதிரே, சைனா வின் நிலைதவறிய அரசர்களின் வம்சப் பெருமையே விழலுக் கிறைத்த நீராகிவிடும் என்றால், சுமதி சங்க ரின் குலப் பெருமையை எவ்வாறு வர்ணிக்க முடியும்? அதுமட்டும் அல்ல; அத்ரி சம்பந்தமாகச் சுமதி சங்கர் பேசுவதை யாராவது கேட்க நேர்ந்து விட்டால், ‘பிரும்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரையும் அனுசூயை மடியில் வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக் கும்பொழுது, சுமதி சங்கரின் முன்னோர்களில் யாராவது ஒருவர் அவர்களுடைய பராக்கிரமச் செயல்களைத் தம் கண்களாலேயே கண்டிருக்க வேண்டும். இல்லா விட்டால் சுமதிசங்கர் இப்படிப் பேச முடியுமா? என்று தான் எண்ணுவார்கள். ஏதாவது விசேஷத்தையோ சுபகாரியத்தையோ முன்னிட்டு, யாராவது சப்த ரிஷி களுடன் அதாவது ஏழு பாக்குகளுடன் அழைத்துப் போக வந்தால் சுமதி சங்கரின் சித்தப்பா விமதி சங்க ருக்கு இதயம் பெருமையினால் பூரித்துவிடும். அத்ரி ரூபத்தில் வந்திருக்கும் பாக்குகளுக்கு-இல்லை, இல்லை, பாக்கின் உருவத்தில் வந்திருக்கும் அத்ரிக்கு நான்கு சொட்டுச் சந்தனம் அதிகமாக அபிஷேகம் செய்து பெரிய பெரிய பூவிதழ்களாகப் பார்த்து இரண்டு இதழ்கள் போட்டுப் பூஜை செய்யாமல் இருக்கமாட்டார். அதற்குப் பிறகு பக்கத்தில் உட்கார்ந்திருப்பவன் கொஞ்சம் கம்பீர புத்தியுள்ளவன் என்று தோன்றினால், அவனுக்கு அத்ரி-பாக்கைக் காண்பித்து, ‘இவர்கள் தான் எங்கள் முன்னோர்கள்!’ என்று சொல்லி மிகவும் மரியாதையோடு இரு கைகளாலும் எடுத்து இரு கண் களிலும் ஒற்றிக் கொள்ளுவார்.

ஆனால் குலத்தைப் பற்றி பெருமை பாராட்டிக் கொள்ளுவது இத்துடன் நின்றால் அதை ஒரு புதிய விஷயமாகவோ பெரிய விஷயமாகவோ நாம் எதற்காக எண்ணப் போகிறோம் ? ஏனெனில் பிரும்மாவின் ரிஷி புத்திரர்கள் மூலமாகத் தானே பாரத நாட்டின் பிராம் மணர்கள் உண்டாகியிருக்கிறார்கள்! மற்ற நாட்டவர்களோ பிரும்மாவின் விரல் வழியாக உண்டான புத்திரர்களுக்குப் பிறந்தவர்கள். நம் பூதேவர்களோ பிரும் மாவின் வாயிலிருந்தே உண்டானவர்கள் என்பது ஐயந் திரிபற சர்வ நிச்சயமாகிப் போய்விட்ட விஷயம்.

ஆனால் சுமதி சங்கரின் குலப் பெருமைக்கு வேறு பல காரணங்களும் இருந்தன. அவரும் அவர் குடும் பத்தாரும் அந்தப் பேருண்மையைப் பொதுவாக வெளி யிடுவதில்லை. மனத்துள்ளேயே மறைத்து வைத்திருந் தார்கள். நமக்கு வெளிப்படையாகத் தெரிந்த விஷயம் என்னவென்றால், அந்தக் குடும்பத்தார்களில் ஒவ் வொருவருடைய பெயருடனும் ‘மதி’ என்னும் சொல் சேர்ந்தே இருக்கும். ஒருவன் சுமதி என்றால் இன்னொருவன் விமதி. மற்றவன் தீரமதி. அவனுடைய அப்பாவின் பெயர் சங்கர்மதி.

இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்களு டைய முன்னோர்களில் கௌமதி என்ற பெயருடன் மிகமிகப் பிரதாபம் வாய்ந்த ஒருவர் இருந்திருக்கிறார். ஆகவே, அந்த வம்சத்தார்கள் மற்ற வம்சங்களைக் காட்டிலும் தங்களுடைய வம்சம்தான் மேலானது என்ற முறையில் நடந்து வந்திருக்கிறார்கள். பெருமை யுடனும் படாடோபத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள். சுமதி சங்கரின் சித்தப்பா ஜாதி-ஜனம், கல்யாணம்- கல்லெடுப்பு, ன்பம் – துன்பம், கஷ்டம் – சுகம் எல்லாவற்றிலும் முதன்மை ஸ்தானமே அதாவது அக்ர தாம்பூலமே பெற்றிருக்கிறார். எந்தக் காரியத்துக்கும் அவர்தான் முன் நின்று அதிகாரம் செய்வார். அவரு. டைய பெண்கள் மற்றப் பெண்களுடன் விளையாடக் கூடாது. பள்ளிக்கூடத்து உபாத்தியாயினி மார்களுக்குக்கூட, “ஜாக்கிரதை! என் பெண்களை மற்றப் பெண்களுடன் உட்காரவோ விளையாடவோ விடக் கூடாது!” என்று கடுமையாக உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கெல்லாம் காரணம், ‘நாங்கள் கௌமதி வம்சத்தில் பிறந்தவர்களாக்கும்!’ என்று சொல்லப் படடு வந்தது. அவருடைய நடை உடை, பாவனையும் மிடுக்குமே அலாதி!

‘நான் மட்டும் கௌமதி வம்சத்தில் பிறந்தவனா யிருந்தால் இந்தக் காரியத்தைச் செய்யாமல் இருக்க மாட்டேன்’ என்று மார்தட்டிக் கூறுவதில் தங்களுக்கு அலாதி கௌரவமும் மதிப்பும் ஏற்பட்டு விட்டதாகவே அந்தக் குடும்பத்தார்கள் எண்ணி வந்தார்கள். கௌமதி வம்சத்தாரின் செல்வாக்கு இம்மியளவுகூடக் குறையாமல் இருப்பதற்கும், அதன் மதிப்பு உயர்வதற் கும் வேண்டிய சகல விதமான முயற்சிகளையும் அக் குடும்பத்தினர் செய்து வந்தனர்.

சுமதி சின்னவன். கௌமதி வம்சத்தில் பிறந்தி ருந்தும்கூட அவனுக்கு அந்தக் குடும்பத்தின் கௌரவம் குறைந்திருப்பதாகவேதான் தோன்றியது. குறிப்பிட்ட பெண்ணுடன் விளையாடக்கூடாது. பள்ளிக்கூடத்தில் மற்ற வீட்டுப் பெண்களுடனோ பையன்களுடனோ சேர்ந்து உட்காராமல் தனித்தே உட்காரவேண்டும். அவர்களுடன் பட்டாணிக் கடலை, வேர்க்கடலை முதலி யவை சாப்பிடக் கூடாது. மழையில் அவர்களுடன் காகிதக் கப்பல் விட்டு விளையாடக்கூடாது-இவ்வா றெல்லாம் எதற்காகத்தான் தடை உத்தரவு போடு கிறார்கள் என்று அவனுக்கு விளங்கவே இல்லை. எப்பொழுதாவது இதைப்பற்றி அவன் யாரிடமாவது கேட்டுவிட்டால், ஹரமதியும் தீரமதியும் அவனுடைய இந்த வக்கிர புத்தியைக் கண்டு கடிந்து கொள்ளுவார் கள். கௌமதி குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக் காம்பு என்று சொல்லித் திட்டுவார்கள். ‘அறிவுள் ளவனாக இரு’ என்று உபதேசம் செய்வார்கள்.

அந்தக் குடும்பத்துப் பெண்களுக்குள்ளே அத்தை ஹரமதிக்குத்தான் தன் குடும்ப கெளரவத்தைப் பற்றிக் கவலை அதிகம். அவள் நல்ல தைரியசாலியும்கூட. ஏழு வருஷங்கள்வரை அவள் தன் மாமியாரிடமும் தன் புருஷனிடமும் தன் குலப்பெருமையை நிலை நாட்டுவ தற்காகக் கடுமையான வாய்ப்போர் புரிந்தாள். அப்படியும் அவர்களுடைய சின்ன புத்தியில் கௌமதி குடும்பத்தின் குலப் பெருமை பதியவில்லை. ஆகவே, குல விளக்கான ஹரமதி அத்தை, சின்னப் புத்தி படைத்த புக்ககத்தாருடன் குப்பை கொட்ட மனம் இல்லாமல், கணவன் உயிருடன் இருக்கும்பொழுதே கணவனை இழந்தவள்போல வாழாவெட்டியாக, தன் குல விளக்கை அணையாமல் பாதுகாக்கும் பரந்த நல்ல நோக்கத்துடன்தானோ என்னவோ, தான் பிறந்த வீட்டுக்கே வந்து சேர்ந்தாள்!

சுமதி அசட்டுப் பிசட்டு என்று ஏதாவது இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்டு விட்டால், ஹரமதி அத்தை ‘சள்ளுப் புள்ளு’ என்று எரிந்து விழுவாள். பிள்ளையாண்டானின் வக்கிர புத்தியைப் போக்க மாட் டாயா, பகவானே!’ என்று பெருமூச்சுடன் ஆகா யத்தை அண்ணாந்து பார்ப்பாள். அடுத்த நிமிஷம் அந்த இடத்தில் நிற்க மனம் இல்லாமல் பூஜை அறைக்குள்ளே புகுந்து கதவைத் தாளிட்டுக்கொண்டு விடு வாள். அவள் அப்படிச் செய்வதற்கு ஏதாவது ஒரு முக்கிய காரணம் இல்லாமல் இருக்குமா?

பூஜை அறைக்குள்ளே ஏதோ சிதம்பர ரகசியம் போன்ற அற்புத ரகசியம் இருக்கத்தான் இருந்தது. கௌமதி என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே எல்லோருடைய கண்களும் பூஜை அறைப் பக்கம் சென்றுவிடும். கௌமதி சங்கர் உயிருடன் அந்த அறைக்குள்ளே உட்கார்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்பட்டு எல்லோரும் பீதி உறுவார்கள். வருஷத்தில் ஒரு நாள், அதாவது வைகாசி மாதம் சுக்ல பக்ஷ சதுர்த் தசி அன்று வீட்டிலுள்ள பெரியவர்கள் எல்லோரும் ஒன்றுகூடிக் குழந்தைகளின் அறையிலே நெய் விளக்கு ஏற்றி வைத்துவிட்டுப் பூஜை அறையிலே சென்று ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்வது என்பது தொன்றுதொட்டு வந்த வழக்கம்.

சுமதிக்கு அந்தக் காட்சியையெல்லாம் காண வேண்டும் என்று ஆவலாயிருக்கும். ஆனால் சித்தப் பாவின் கட்டளையை மீறுவது என்றால் அவனுக்குச் சிம்ம சொப்பனம். பெரியவன் ஆனதும், அவனுக்குப் பூஜை அறைக்குள்ளே கெளமதி தாத்தா உடுத்தி வந்த ஆடை அலங்காராதிகளும் மகுடங்களும் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்த ஆபரணங்கள் கெடாமல் இருக்கும்வரை அந்தக் குடும்பத்தின் பெருமை கடுகள வும் குறையாது என்ற நம்பிக்கை அந்தக் குடும்பத்தார் களிடையே பரிபூரணமாக நிலவியிருந்தது. ஜாதி ஜனங் கள் என்னதான் சொன்னபொழுதிலும் அவர்களிடை யேயும் சில கட்டுக் கதைகள் பரவியிருந்தன. அந்தக் கதைகள் அனைத்தும் அக்குடும்பத்துக்குப் பெருமை அளிப்பதாக வேதான் அமைந்திருந்தன. சுமதி சங்கர் இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆனதும், இன்னொரு விஷயமும் அவனுக்குத் தெரியவந்தது. அது என்ன வென்றால், இருபத்திரண்டு வயது பூர்த்தி ஆனதும் கௌமதி தாத்தாவின் ஆடை ஆபரணாதிகளைப் பார்க்கும் பாக்கியம் அந்தக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கிடைக்கும் என்பதுதான்.

சுமதி பெரியவன் ஆக ஆக அவனும் அந்தக் குடும்பத்துக்குக் குலவிளக்காகவே விளங்குவான் என்றுதான் தோன்றியது. அவன் தலை கனத்தது. அவன் சுபாவத்தில் தானாகவே மிடுக்கு ஏறியது; மெரு கும் ஏறியது. அவனும் ‘தான் கௌமதி வம்சத்தில் பிறந்தவன்’ என்பதை அடிக்கடி சொல்லாலும் செய லாலும் நிரூபிக்கலானான். இருபத்திரண்டு வயது ஆவ தற்கு முன்னால் அவன் பூஜை அறைக்கு வேண்டு மானால் போக வேண்டாம். ஆனால் தன் கற்பனைக் குதிரையைக் கூடவா தட்டி ஓட்டக் கூடாது? அல்லது ஓட்டத்தான் முடியாதா? அவன் கற்பனைக் குதிரைக் கெதிரே வாயுவேகம், மனோவேகம் எல்லாம் தோற்றுத்தான் போக வேண்டும்!

எந்த எந்த மாதிரியான பகட்டான பட்டாடைகள் இருக்குமோ? ‘பள பள பப் பள பள வென்று கண் களைப் பறிக்கும் என்ன என்ன ஆபரணங்கள் எல்லாம் இருக்குமோ? கிரீடம் வைரம் வைத்து இழைத்ததாக இருக்கலாம். அவர் அணிந்து கொள்ளும் மாலைகளில் எத்தனை விதமோ? இவ்வாறெல்லாம் கற்பனையில் இறங்கி விடுவான். கற்பனையில் லயித்த பின் அவனுக்கு விக்ரமாதித்ய மகாராஜாவை எல்லாம் தன் கௌமதி தாத்தாவின் காலில் கட்டித்தான் அடிக்க வேண்டும், தாத்தா அவ்வளவு மேலானவராக இருப்பார் என்ற எண்ணம் எழும். ஆங்கிலம் படிக்க ஆரம்பித்ததும் அவன் முதல காரியமாக மெட்ரிகுலேஷன் வகுப்புக் கென்று ஏற்பட்டதான சரித்திர புஸ்தகங்களைப் புரட்டிக் கௌமதி தாத்தாவின் பெயர் எங்கேயாவது வந்திருக்கிறதா என்று துருவித் துருவித் தேடிப் பார்த்தான். ஏனெனில்

அவனுடைய அந்தக் காலத்து அறிவுக்கு அவைதானே பெரிய புஸ்தகங்கள்! அவற் றில் அகப்படாமற் போகவே, சிறிது சிரத்தை குறைந் தது. இருந்தாலும் பள்ளிக்கூடத்து லைப்ரரியிலிருந்து ‘மில்’ எழுதிய சரித்திரத்தை வாங்கிக் கௌமதி தாத்தாவின் பெயரை அதிலும் தேடிப் பார்த்து விட்டுத் தான் மறுகாரியம் பார்த்தான்.

யாரோ சொன்னார்கள் என்பதை வைத்துக் கொண்டு சுமதி சங்கரைக் காலேஜில் சேர்ப்பதாக நிச்சயித்து விட்டார்கள். போர்டிங்கில் வைத்தால் பையன் கெட்டு விடுவானோ என்று எண்ணிச் சுமதி யைத் தெரிந்தவர்கள் வீட்டில் வைத்தார்கள். குலப் பெருமையையும் ஆசாரத்தையும் பாதுகாத்தவாறே, இந்தப் பாழும் வயிற்றுப்பாட்டை உத்தேசித்துச் சுமதி சங்கர் மிலேச்ச பாஷையில் சொல்லித் தரப்படும் மேல் நாட்டுக் கல்வியைப் பயில ஆரம்பித்தான்.

ஆங்கிலக் கல்வியிலே உள்ள அசுத்தத் தன்மையும் ஆசாரக் குறைவும் சுமதி சங்கரின் பரிசுத்தமான கௌமதி சுபாவத்தைச் சிறுகச் சிறுக மாற்றி விட்டன. கொஞ்சங் கொஞ்சமாக அவன் ‘சுதந்திரம், மனிதனின் பிறப்புரிமை’ போன்ற மேல் நாட்டின் தொந்தரவு தரும் வார்த்தைகளைச் செவி மடுத்தான். கடைசியில் கங்கையைப் போலக் கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டான்.

மிக முக்கியமான, ஆனால் பரம ரகசியமான ஒரு விஷயம் என்ன வென்றால், அவன் ஒரு தடவை மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல சந்தியா வந்தனம் செய்ய வில்லை. ஒரு தடவை காலேஜ் ‘டிபேடிங் ஸொஸைட்டி’ யிலே ‘எல்லாரும் ஓர் இனம் என்பது பற்றிக் காரசார மாகப் பேசிக் கலக்கி விட்டான். ‘நாம் நம் முன்னோர் களின் பெருமையைச் சொல்லி அதன் பலத்தில் உயிர் வாழ்கிறோம்; இது நமக்கு மிக மிக இகழ்ச்சிதரும் விஷயமாகும் ‘ என்று சொல்லித் ‘தாழ்வுற்று நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை’ச் சுட்டிக் காட்டி ஏகமாகப் பொரிந்துதள்ளினான். இதைவிட அவன் தாழ்வுக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

சுமதிக்கு இதைவிட வேறு வீழ்ச்சி ஏது? கௌமதி குலத்துக்கு உலை வைக்க வந்த கொள்ளி என்றுதானே சுமதியைச் சொல்ல வேண்டும் ? கௌமதியின் ஆத்மா சொர்க்கத்திலிருந்ததோ, அல்லது வேறு எங்கு இருந் ததோ, இதைக் கேட்டுக் கதிகலங்கி நடுநடுங்கிப் போய்விட்டது. பிரும்மலோகத்தில் இருந்த அத்ரி ரிஷி யின் கையிலிருந்த கோமுகி கீழே நழுவி விழுந்துவிட் டது. அவருடைய அர்த்தாங்கினியான அனுசூயையின் கண்களிலிருந்து அத்யாத்மக் கண்ணீர் பெரும் வெள்ளக் காடாகப் பெருக்கெடுத்து ஓடியது.

பையன் கெட்டுப் போகக் கெட்டுப் போக, அவனுடைய உள்ளத்திலே பூஜை அறையின் சிதம்பர ரகசியத்தைக் காண வேண்டும் என்ற ஆசை நெய்யில் தீயாக வளர்ந்தது. ஏனெனில் எங்குமே சரித்திரச் சான்றுகள் கிடைக்க வில்லையாதலால் கௌமதி தாத்தா ஜமீன்தாராகவோ, ஜாகீர்தாராகவோதான் இருக்க. வேண்டும் என்று தோன்றியது. அதுமட்டும் அல்ல; இருபதுக்கும் இருபத்திரண்டுக்கும் நடுவே உள்ள நாட்கள் இருக்கின்றனவே, அவை அவன் பிராண னையே வாங்கிவிட்டன. கடைசியில் ஒரு விதமாக இரு பத்திரண்டாவது வயது பூர்த்தியாகும் காலமும் வந்தது. இதற்குள் சித்தப்பாவும் சிவலோகப் பிராப்தி அடைந்து விடவே, பெருமைக்கு ஆதாரமான அந்த ரகசியத் தைத் தனக்குக் காட்டுமாறு அவன் தன் அத்தையைக் கேட்டான். அந்த ரகசியத்தை அறிந்து கொள்ள அவன் உள்ளம் துடித்த துடிப்பை, இம்மாதிரி ரகசியத்தை அறிந்து கொள்ள ஆவலுள்ளவர்களைத் தவிர வேறு யாரால் உணர முடியும்?

குறிப்பிட்ட நாள் வந்ததும் சுமதி தன் கிராமத்தை அடைந்தான். வீட்டு மாட்டுப் பெண்கள் எல்லோரும் பிறந்தகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். குழந்தை கள் பக்கத்து வீட்டில் விளையாடுவதற்கென்று அனுப்பப் பட்டார்கள். இரண்டு அத்தைகளும் மருமானும் கெளமதி தாத்தாவின் பொருள்களைப் பார்ப்பதற்காகப் பூஜை அறைக்குச் சென்றார்கள். பயம், பக்தி-சிரத்தை. முதலியவை தாண்டவமாட அத்ரிக்கும் அநுசூயைக்கும் மானசீகமாகப் பூஜை செய்தார்கள். பிறகு கௌமதி தாத்தா உள்ளே உறங்கிக் கொண்டிருப்பதுபோலவும் அவரை எழுப்ப விருப்பமில்லாமல் பயந்துகொண்டு நுழைவது போலவும் மூவரும் மிகவும் மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து உள்ளேசென்றனர். ஒரு அத்தையின் கையில் நெய் விளக்கு இருந்தது. இன் னொருத்தியின் கையில் நைவேத்தியம் இருந்தது. பூஜை அறை கும்மிருட்டாக இருந்தது. ஆகவே, பற்பலவிதப் பூச்சிகள் அங்கே நித்திய வாசம் புரிந்துகொண் டிருந்தன. உயரத்தில் இருந்த மாடத்திலிருந்து ஒரு அத்தை பெட்டி ஒன்றை எடுத்தாள்.

அப்பொழுது சுமதியின் காதுகளில் கொம்பு ஊது வது போன்ற சத்தம் கேட்டது. இருபத்திரண்டு வருஷங்களாகக் கண்டு வந்த கனவு நனவாகும் நன் னாள் இன்றுதான் வந்தது. அவனுடைய கைகள் நடுங்கின. நா வறண்டது. உதடுகள் துடித்தன. ஒரு அத்தை பெட்டியைக் கீழே வைத்து அத்துடனேயே சேர்க்கப்பட்டிருந்த சாவியைக் கொண்டு அதைத் திறந்தாள். பிறகு இரண்டு அத்தைகளும் பெறுதற் கரிய பொக்கிஷம் கிடைத்துவிட்டது போன்ற பெருமையுடன் சுமதி சங்கரைப் பெட்டியைப் பார்க்குமாறு சொன்னார் கள். இருட்டில் சுமதி குனிந்து பார்த்தான். உண்மை யாகவே வெல்வெட்டு உடை ஒன்று காணப்பட்டது. அதில் பளபளவென்று வெள்ளிபோல ஒரு நாற்கோண முள்ள பொருள் மின்னிக்கொண்டிருந்தது. சுமதிக்குத் தான் கனவில் கண்டு கொண்டிருந்த ஜரிகை தலைப்பாக்களும் மகுடமும் பொய்த்துப் போவது போலத் தோன்றியது. அந்த வெள்ளிப் பதக்கத்தில் ஏதோ பொறித்திருப்பது போலத் தெரிந்தது. கண்களை அகல விரித்துக் கூர்ந்து கவனித்துப் பார்த்தான். அதில் ஆங்கிலத்தில் ‘சூரத்’ என்று எழுதப்பட்டிருப்பது தெரிந்தது.

“அத்தை! இதில் என்னவோ எழுதியிருக்கிறாற் போலிருக்கிறது. வெளியில் எடுத்து என்னவென்று பார்க்கலாமா?” என்று கேட்டான் சுமதி.

“அதெல்லாம் கூடாது. வெளியில் எடுப்பதாவது? நன்றாயிருக்கிறது!” என்றாள் ஒரு அத்தை.

“அது சரி, அத்தை! நமது இந்தக் கௌமதி தாத்தா யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண டாமா?” என்றான் சுமதி.

“பார்த்தாயோ, இல்லையோ? இது இங்கிலீஷ் படிப்புப் படித்ததனால் வந்த வினை! இல்லாவிட்டால் இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுமா?” என்றாள் இன்னொரு அத்தை.

அத்தைகள் ‘ஆஹாம்-ஊஹூம்’ என்று சொன்ன பிறகு கடைசியாகத் தங்கள் சம்மதத்தைத் தெரிவித் தனர். சுமதியின் மனத்தில் பலத்த யோசனை எழுந்தது. ஒரு வேளை கௌமதி தாத்தா சூரத்துக்குத் திவானாக இருந்திருக்கலாம் அல்லவா ? அல்லது அவருக்கு சூரத் ஜாகீராகக் கிடைத்திருக்கலாம். அப்படி யிருந்தால் அதற்குக் கோர்ட்டில் நடவடிக்கை எடுத்துத் திருப்பி வாங்கிவிடலாம். அதற்காக அயல்நாடு வரை போக நேர்ந்தாலும் சரி, ஒரு கை பார்த்துவிட வேண்டும். கை விட்டுப் போன உரிமை எப்படியும் திரும்ப நம் கைக்குக் கிடைத்துவிடும் அல்லவா?

இவ்விதம் யோசித்தவாறே அவன் பெட்டியிலிருந்த பொருள்களை வெளியே எடுக்கலானான். மிகவும் ஜாக் கிரதையாக வெல் வெட்டுக் கோட்டில் சூரத் என்று எழுதியிருக்கும் பதக்கத்தைப் பிடித்துத் தூக்கினான். அதில் எழுதியிருந்த எழுத்துக்கள் எல்லாமே தெரிந்தன. எழுதியிருந்தது இதுதான்:-

“பியூன் ஆவ் மிஸ்டர் ஹாவர்ட் ஹேமல், சூரத்.”

அதைப் படித்ததுதான் தாமதம்; சுமதிக்கு மூர்ச்சை போட்டுவிடும் போலத் தோன்றியது. அவன் கையிலிருந்து அந்தக் கோட்டு கீழே விழுந்துவிட்டது. கெளமதி தாத்தா என்ன செய்து வந்தார் என்பது தெரிந்துவிட்டது. மனம் ஒரு நிலைக்கு வந்ததும் அவன் ‘கட கட’ வென்று அட்டகாசச் சிரிப்புச் சிரித்தான்.

அத்தைகளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. ஆனால் மருமானின் பிரமை விலகிவிட்டது. இருவருடைய குலப் பெருமையும் ஆழக் குழிதோண்டி அதள பாதா ளத்துக்கும் அடியிலே புதைக்கப்பட்டு விட்டது!

இரவு இரண்டு மணி சுமாருக்கு இரண்டு அத்தைகளும் மருமானும் புழைக்கடை வழியாகப் புறப்பட்டனர். பிறகு பக்கத்து வீட்டிலிருந்த கிணற்றங்கரைக்குச் சென்று கையில் கொண்டு வந்திருந்த பொட்டணத்தைக் கிணற்றில் போட்டு விட்டுப் பேசாமல் திரும்பினர். கெளமதி தாத்தாவின் கௌரவம் கிணற்றிலே ‘விஸர்ஜனம்’ செய்யப்பட்டு விட்டது!

– குலப்பெருமை, கே.எம்.முன்ஷி, தமிழாக்கம்: ரா.வீழிநாதன், முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *