(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சற்று முன்புதான் குற்றாலத்தில் ஒரு சிநேகிதருடைய பங்களாவில் வந்து இறங்கினேன். காலை சுமார் எட்டு மணி இருக்கும். வெயில் கிளம்புவதற்கு முன்பாகவே அருவியைச் சேரவேண்டுமென்கிற எண்ணத்துடன், மேல்துண்டும் சோப்புப் பெட்டி யுமாக ரஸ்தா வழியாக நடந்துகொண்டிருந்தேன். ரஸ்தா முடிவுக்கு வருகிற இடத்தில் கற்படிகள் உள்ள புல்முளைத்த ஒரு சிறு மேடு இருக்கிறதல் லவா; அங்கேதானே தெருவும் வந்து சேருகிறது? நான் அந்த மேடை அடையும் சமயத்தில் தெரு வழியாக நடந்துவந்த ஒரு கட்டழகியும் அங்கு வந்து சேர நேரிட்டது.
“பரிசயம் இல்லாத ஸ்திரீகளுடன் வலுவில் பேசுகிற அதிகப்பிரசங்கி என்று என்னை எண்ணி விடக்கூடாது” என்று தொடங்கினேன். விதம் நான் பேசத் துணிவதற்குக் காரணம் உங் களை முன்பே அறிந்திருப்பதாக ஒரு பலத்த எண் ணம் என் மனசில் ஜனிக்கிறது. இருந்தாலும் ஸ்நா னத்திற்குப் போவதற்காக நான் மூக்குக் கண்ணா டியைக் கழற்றிவிட்டு வந்திருப்பதால் தைரியமாகச் சொல்லமுடியவில்லை-”
“என்ன ஆச்சரியம்!” என்று அவள் முறுவலித்தாள். “உங்களைத் தூரத்தில் கண்டவுடனே எனக்கும் உங்களைக் குறித்து அதேமாதிரி நம் பிக்கைதான் கிளம்பியது. ஆனால் இச்சமயம் உங்களுடைய பெயரைச் சொல்லி அழைக்க முடியவில்லை” என்று இழுத்தாற்போல் சொன்னாள்.
(என்ன சாமர்த்தியம்! தன்னுடைய பெயரை வெளியிடாமலே, என்னுடைய பெயரை மாத்திரம் கிரகிக்கப் பார்க்கிறாள்! ஆகட்டும்! இந்த ஆட்டத்தில் இவளுக்கு நான் சளைக்கிறேனா, பார்க்கலாம்!)
“ஒருவருடைய பெயர் எதுவாக இருந்தால் என்ன?” என்றேன். “வாஸ்தவத்தில், இனிய ஓர் ஸ்திரீயைக் கண்டால் அவளுடைய பெயரை அறிந்து கொள்ளாமலிருக்கும்படியே நான் முயற்சி செய்பவன். ஏனென்றால் அவ்விதம் உள்ள வரைக்கும், பெற்றோர் இட்ட பெயரைக் காட்டிலும் அழகாய் அவளுக்குப் பொருந்தக்கூடிய பெயர்களாக நான் ஒவ்வொன்றாய் இட்டுப் பார்க்கலாமல்லவா? இவ்விதம் நீங்கள் தனியாகப் போய்க்கொண்டிருப்பதைக் காணும்போது இப்பொழுதுதான் நளனை விட்டுப் பிரிந்த தமயந்தியோ என்று ஆலோசித்தேன்-”
“நீங்கள் வாசித்த கதையில் தமயந்தி கொள்ளே காலத்துச் சேலையை அணிந்து புறப்பட்டாளோ?” என்று சிரித்தாள்.
“இல்லை, ஆனாலும் நீங்கள் கணவனோடு கூட இல்லாமல் தனிமையாகப் போவதையும், என் கண்ணில் தென்பட்ட சமயம் நெற்றியைச் சிணுக் கிக்கொண்டிருந்ததையும் சேர்த்துப் பார்த்தால், பிரிந்திருக்கும் பர்த்தாவின்மேல் கோபித்திருக்கும் மற்றொரு தமயந்தி என்று ஏன் உங்களை வர்ணிக் கக்கூடாது? நீங்கள் என்ன, அழகில் அவளுக்குக் குறைந்தவளா? அல்லது அவள் மாதிரி சாமர்த்திய மாய்ப் புருஷனைக் கண்டுபிடித்துவிடமாட்டீர்களா, சொல்லுங்கள்”.
(இந்த ஆட்டம் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. கூடிய மட்டும் சாதுரியமாகத்தான் பேசிக்கொண்டு வருகிறேனென்று எனக்குத்தோன்றுகிறது. ஆகையால் ஏதத்சமயம் எனக்கு ஐந்து மார்க்கு கொடுத்துக்கொள்ளுகிறேன்.)
“நான் முகவருத்தத்துடன் தனியாக வந்த தற்குக் காரணம் வேண்டுமா? இந்தக் கஷ்டத்தைக் கேளுங்கள். என் புருஷர் இரண்டு நாட்களுக்கு முன்பே என்னை இந்த ஊருக்குச் சில பந்துக் களுடன் அனுப்பினார். தாம் அடுத்தாற்போலே, சிநேகிதர்களுடன் மோட்டார்காரில் வருவதாகச் சொன்னார். ஆனால் இரண்டு நாளாகியும் வந்துசேர வில்லை. எனக்கு என்ன வேதனையாயிருக்கும், நீங் களே சொல்லுங்கள். ஊருக்கு வந்தது முதல் நானும் தெருவையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இன்றைக்குத்தான் அருவியில் ஸ்நானம் செய்யலாமென்று புறப்பட்டேன். ஆனது ஆகட்டு மென்று தனியாகப் புறப்பட்டேன்.”
“ஒருவேளை மோட்டார் வண்டியில் தப்பு ஏற் பட்டுத் தவக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் இறங்கி யிருக்கும் ஜாகை தெரியாததால், தந்தியும் அடிக்க முடியாமலிருந்து இப்பொழுது அவர் உங்களைத் தேடிக்கொண்டிருக்கலாம்.”
“அதிசயந்தான்! புருஷர்களுக்குப் புருஷர் களாகப் பரிந்து பேசவேண்டாம். இந்தக் குற்ற லத்திற்குள்ளே தேடுவதற்கு எத்தனை நாழிகை பிடிக்கும்? என்ன கஷ்டம்? லங்கையில் அடைபட்ட ஸீதையைக்கூட ராமர் கண்டுபிடித்துவிடவில்லையா?”
“பார்த்தீர்களா! இந்தக் காரணங்களினால் சீதாதேவி என்று இன்னொரு பெயர்கூட உங்க ளுக்கு என் மனசுக்குள் வைக்கலாம்!”
“ஏன்? முன்பின் தெரியாத ஹநுமான் வந்த வுடன் ஸீதை அவரோடு விசுவாசமாய்ப் பேசின மாதிரி நான் உங்களுடன் ஸங்கோசமில்லாமல் பேசுகிறேனே, என்றா? இது ஸீதைக்காவது எனக்காவது ஒரு வழக்கமென்று எண்ணிவிடக் கூடாது.”
(ஏதடா இது! இந்த ஆட்டம் கோணிக் கொண்டு போகிறதே! இவ்வளவு சுலபமாக என்னை ஒரு ஹநுமானாக்கிவிட்டாளே! இவளுக்குப் பதினைந்து மார்க்கு. இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம், முதுகில் அடிபடவில்லை போலவே நடித்துப் பேசுகிறேன்.)
“அப்படி வழக்கமாய்த்தான் இருக்கட்டுமே ! போயும் போயும் நான் ஏன் அதை நிந்திக்கப் போகிறேன்? அதனால்தானே உங்களுடைய இனிய மொழிகளைக் கேட்கும் ஆனந்தத்தை நான் அனுபவிக்கிறேன்”
(போகிறது. ஒரு ஸ்தோத்திரத்தைக் கொடுத் தாவது எப்படியோ தப்பித்துகொண்டுவிட்டேன். எனக்கு இன்னும் ஐந்து மார்க்கு. இருந்தாலும் பேச்சை மாற்றிவிடுவதே நல்லது.)
“நீங்கள் இதற்குமுன் இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்களோ?”
“வந்ததில்லை. சரியான காலத்தில் இங்கே வெகு இன்பமாய் இருக்குமென்று சொல்லுகிறார்களே?”
“இன்பமா? அந்த ஒரு வார்த்தைதானா உங்களுக்குச் சொன்னார்கள்? இது சாதாரண ஓர் இடமா? அருவியையும் தூவானத்தையும் தேவேந் திரன் தன்னுடைய ஸ்டாக்கிலிருந்து இந்த ஊருக்காகப் பொறுக்கி அனுப்புகிறானாம்.”
“அப்படியா!”
“ஆமாம், இந்த இரண்டும் சம்பந்தப்பட்ட வரையில் இவ்விடத்தை இந்திரலோகத்திற்கு ஒரு ப்ராஞ்சு ஆபீஸு-” என்றே சொல்லுவேன்.’
“இதைக் கேட்க எனக்கு வெகு சந்தோஷ மாக இருக்கிறது. அருவிக்கு இப்பொழுதே போகிறேன்-”
” அவசரப்படாதேயுங்கள். என்னைவிட்டு ஓடிப்போவதற்காகவா குற்றாலத்தின் மகிமையை உங்களுக்குச் சொல்லுகிறேன்”. இந்த ப்ராஞ்சில் வியாபாரம் செய்ய வேண்டுமானால் ஒரு கண்டிஷன் உண்டு.”
“அதென்ன கண்டிஷன்?”
“மிகவும் கடினமானது”.
“இருக்கட்டும், சொல்லுங்களேன்.”
“இங்கே தனிமையாக வசிப்பதில் யாதொரு பயனுமில்லை. ஒவ்வொருவரும் தகுந்த பர்த்தாவுடனோ, அல்லது ஏற்ற மனைவியுடனோ இருந்தால் மட்டுமே இங்கே இன்பமாக இருக்கும்.”
“-பேச்சைச் சரியான வழிக்குத் திருப்பி விட்டேன். எனக்கு இன்னும் ஐந்து மார்க்கு. ஆக இருவருக்கும் மார்க்குகள் சரி.”
“பேச்சைத் திருப்பவாவது, மார்க்காவது, எனக்கு ஒன்றும் புரியவில்லையே?”
“அது என்னவோ மனசுக்குள் பேசிக்கொள் ளுவதை அவசரத்தில் வெளிப்படையாய்ச் சொல்லி விட்டேன். அதைக் கவனிக்க வேண்டாம். பாஷணையின் ரூல்படி நீங்கள் இப்பொழுது என் னைக் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் என்னுடைய அபிப்பிராயத்தில் ஒரு சரியான மனைவி எப்படி இருப்பாள் என்பதே.”
“அது ஒன்றும் எனக்கு வேண்டாம். சரியான கணவன் எப்படியெல்லாம் இருக்கவேண்டு மென்பதை-”
“ஓர் உயர்ந்த மனைவியானவள் சில சமயம் தமயந்தியைப்போல் நடப்பாள்; சில சமயம் ஸீதை யைப்போல் பேசுவாள். புருஷனுடைய அற்பப் பிழைகளைக் கவனிக்காமலே மன்னித்துவிடுவாள். உருவத்தில்”
“இது எனக்கு வேண்டாம். பர்த்தாவுக்கு இருக்கவேண்டிய விசேஷங்களை வர்ணியுங்களேன். ஏன் தயங்குகிறீர்கள்? அது வெகு கஷ்டமோ?”
“ஹும்! ஒரு கஷ்டமும் இல்லை.”
“அப்படியானால் சொல்லுங்களேன்.”
“ஒரு க்ஷணத்தில் சொல்லுவேன், திருஷ்டாந் தமும் காண்பித்துவிடுவேன். ஆனால் என் விநய சுபாவம் குறுக்கே கிடக்கிறது.”
“ஐயோ, பாவம்! உங்களுடைய விநயத்தைத் தட்டி எழுப்பவேண்டாம். என்னுடைய வெகுளித்தனத்தை நீங்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தா லும் சரி, மனசிலுள்ளதை நானாகவே சொல்லிவிடுகிறேன். எனக்கு மாத்திரம் ஏற்கனவே விவாகம் ஆகாமலிருந்தால், நான் உங்களைத்தான் மணம் புரிவேன். போதுமா?”
“உங்களை நான் இன்றைக்குப் பார்த்தவுடன் என்ன நிச்சயம் செய்தேன், தெரியுமோ? எனக்கு மாத்திரம் ஏற்கனவே ஒரு பார்வை இல்லாது போனால், நான் இன்றைக்கே உங்களைக் கல்யாணம் செய்துகொண்டுதான் மறுகாரியம் பார்ப்பேன்.”
“சரி. அந்யோந்ய ஸ்தோத்திர பாடமெல்லாம் திருப்தியாய் முடிந்துவிட்டதே ? இனி அவரவர் காரியத்தைப் பார்க்கச் செல்லலாமல்லவா?”
“எல்லாம் முடியவாவது! அவரவர் காரியமாவது! இனிமேல்தானே நம்முடைய காரியத்தை ஆரம்பிக்கவேண்டும். நமக்கு முகூர்த்தம் பார்க்கச் சொல்லவேண்டாமா?”
“முகூர்த்தம் எதற்காக?”
“நமக்கு ஏற்கனவே பிறருடன் கல்யாணம் ஆயிராதபோனால், ஒருவரை ஒருவர் இப்பொழுது விவாகம் செய்துகொள்ளத்தான்.”
“அழகாய் இருக்கிறது? இப்படிப் போய் ஒரு முகூர்த்தம் பார்க்க யாராவது சொல்லுவார்களா? சொன்னாலும் ஜோசியர்கள் சிரிக்கமாட்டார்களா?”
“சிரிப்பார்களென்றா உங்களுக்குத் தோன்றுகிறது?”
“சந்தேகமில்லை.”
“போகட்டும். அப்படியானால் அவர்களுக்கு நம்முடைய பணத்தைக் கொடுக்க வேண்டாம். நாமே முகூர்த்தம் பார்த்துக்கொள்ளலாம்.”
“நாம் எப்படிப் பார்க்கிறது? உங்களு ஜோசியம் தெரியுமா?”
“ஜோசியம் எதற்காக? நூற்றெட்டுக்குள் ஒரு தொகையைப் பொறுக்கி, பன்னிரண்டினால் வகுத்து வழக்கப்படிக் கணக்குப் போடவேண்டியதுதானே ?”
“சரி, நீங்கள் ஒரு தொகையைச் சொல்லுங்கள்.”
“நூற்றொன்பது.”
“நூற்றெட்டுக்கு உள்ளே அல்லவா சொல்ல வேண்டியது?”
“ஆமாம். இருந்தாலும், ஜோசியர்களாகட்டும், சிநேகிதர்களாகட்டும், நூற்றெட்டுக்குள்ளே ஒரு தொகை சொல்லு என்று எப்பொழுது என்னைக் கேட்டாலும், நூற்றொன்பது என்றே சொல்லி அவர்களுடைய கணக்கைப் பாழாக்குவது எனக்கு வழக்கமாய்விட்டது. இனிமேல் திடீரென்று அதை எப்படி மாற்றுகிறது?”
“இப்படி ஒரு வழக்கமா ? அப்படியானால் நீங் கள்தாம் கொனஷ்டையாக இருக்கவேண்டும்! உங்களுடைய பெயரைக் கண்டுபிடித்துவிட்டேன் அல்லவா? எனக்கு எத்தனை மார்க்கு? நூற்றுக்கு நூறுதானே!”
“நான்தான் அப்பொழுதே சொல்லிவிட்டேனே, நீங்கள் தமயந்தியைக் காட்டிலும் சாமர்த்தியசாலி என்று! இப்பொழுது நீங்கள் ஒரு தொகை சொல்லுங்கள்.”
“இருநூற்றுப் பதினெட்டு.”
“இதுமாத்திரம் நூற்றெட்டுக்கு உள்ளே ஒரு எண்ணோ?”
“இல்லை. ஆனால் நான் எப்பொழுதும் நீங்கள் காட்டும் வழியிலேயே போவது, முடியுமானால் இரண்டு பங்கு தூரம் போவது வழக்கம்.”
“அப்படியானால் நானும் கண்டுபிடித்துவிட் டேன். மூக்குக்கண்ணாடி இல்லாமலே கண்டுபிடித்து விட்டேன். நீதான் ஏற்கனவே மேளதாளத்துடன் நான் திருமங்கல்யம் கட்டின என் பாரியை லலிதா. அடாடா! இத்தனை நாழியாக, உன்னை ‘நீ’ என்று ஏகவசனமாகப் பேசாமல் ‘நீங்கள்’ ‘நீங்கள்’ என்று பேசி ஊரிலுள்ள பன்மைச் சொற்களை யெல்லாம் வீணாக்கினேனே! அதற்கு என்ன செய்வது? அதை முதலில் சொல்லு!”
“அது போனால் போகட்டும். நாம் இன்னொரு தடவை கல்யாணம் செய்துகொள்ளுகிற செலவுக்கு வழிவைக்காமல் சகுந்தலையின் மோதிரம் திரும்பிக் கிடைத்த மாதிரி நாம் ஞாபகமாய் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்துவிட்டோம் அல்லவா? அது ஒரு லாபந்தானே!”
வாஸ்தவம். ஆகையால் அந்த லாபத்தை நினைத்துக்கொண்டு, அந்தச் சந்தோஷத்தினால் கை கோத்தபடியே அருவிக்குச் சென்றோம்.
– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.