“எதிர்வீட்டில் குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப் போக ஆட்டோ ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அதற்கு மாதம் ரூ.1000 தருகிறார்களாம்’ என்றாள் சோனியா.
“சரி, தந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன’ என்றான் பிரபு.
“அதுமட்டுமில்லை பாத்திரம் துலக்க, வீடு கூட்ட, துணிமணி துவைக்க சமையல் செய்ய சமையல்காரி என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி வேலைக்காரிகள். மாதம் ரூ.5000-க்கு மேல் தருகிறார்கள்.’
“என்ன, அந்த வீட்டிலிருப்பவர்கள் வேலையில்லாமல் ஜாலியாக இருக்கிறார்கள். அதைச் சொல்ல இவ்வளவு பீடிகையா?’
“இல்லை, இங்கே இந்த வீட்டில் பையனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது முதல் எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன்.’
ஓஹோ! அப்படியா? உனக்கு மாதம் ரூ.5000 வேணும்னு மறைமுகமாகக் கேட்கிறாயா?
“இல்லை. ஒரு பைசாகூட வேண்டாம். “அயர்ன் செய்தது சரியில்லை. டிபன் சரியில்லை. பாத்ரூம் சுத்தமாக இல்லை’ என நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் குற்றம் சொல்லி என் மனதை நிரப்பி வைத்திருக்கிறீர்கள். அது போதும்!’ கண்கலங்க உள்ளே போனாள் சோனியா.
“ச்சே எவ்வளவு கேவலமாக நடந்து வருகிறேன்.’ முதன் முறையாக வருந்தினான் பிரபு.
– கஞ்சநாயக்கன்பட்டி மணியன்