குற்றமொன்றும் இல்லை

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 8,882 
 
 

சித்தி கடைசிவரை என்னுடன் வந்து இருப்பதற்கு ஏன் மறுத்துவிட்டாள் என்பதற்குத்தான் காரணமே புரியவில்லை.

ஆயாவிடம் பையனுக்கு சாப்பாடு கொடுத்தனுப்பிவிட்டு, பின்னர் வந்த ஆபீஸ் பியூனிடம் கேரியரைக்கொடுத்துவிட்டு, சற்று ஆசுவாசமாக ஈஸிசேரில் அமர்ந்தவுடன் இந்தக்கேள்விதான் இன்னும் பூதாகாரமாக நின்றது. பலமுறை இதைப்பற்றி யோசித்திருக்கிறேன் நான். பின்னால் அவளுக்கென்று மனதில் தோன்றும்போது வருவாள் என்று ஒரு நம்பிக்கை: அதுவே இதுநாள்வரை மனதில் உறுத்தும் கேள்விக்கும் பதில். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவள் காலம் முடிந்துவிடும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள்.

நேற்று அவளது காரியங்களை முடித்துவிட்டு, இரவு ரயிலில் திரும்பியதிலிருந்து இனம்தெரியாததொரு பாரம். அன்பானவர்களை இழப்பதில் உள்ள கொடுமை. என்னுடனேயே தங்கவைத்துக் கொள்வதற்கு, ஆனமட்டும் முயற்சி செய்தேன். அவளோ சாதாரணமாக ஒருமுறைகூட என்னைப்பார்ப்பதற்காக வந்து சென்றதில்லை

சித்தியின் அன்பெல்லாம் மற்றவர்கள் சொல்வதுபோல் வெளிவேஷம்தானோ?. இல்லை. என் சித்தி அப்படிப்பட்டவள் இல்லை. எனக்குத்தெரியாதா என் அன்பான சித்தியைப்பற்றி. ஏதாவது என்மேல் வெறுப்பு ஏற்பட்டதென்றால், நான் செய்த குற்றம்தான் என்ன?

இத்தனைக்கும் என்னைவிட ஐந்து வயது பெரியவள்தான் சித்தி. மகள் வயதில் ஒருபெண்ணைக்கட்டிக்கொள்ள என்ன அவசியம் என்று பலர் அப்பாவுக்குப் பின்னால் பேசிக்கொள்வார்கள். இன்று நடந்ததுபோல் நன்றாக நினைவிலிருக்கிறது எனக்கு.

மணவறையில் சித்தி.

சாந்தமான அவள்முகத்தில் லயித்தது என் உள்ளம்.

கோயிலுக்குச்சென்றுவிட்டு பின்னர் அப்பாவும் சித்தியும், வில்வண்டியில் வந்து இறங்கும்போது, காமுப்பாட்டி பயமுறுத்தியதுதான் நினைவுக்குவந்தது.

‘இனிமேல் ரொம்ப துள்ளாதே. ஓட்ட நறுக்கிடுவாள் உன் சித்தி’ பயந்துகொண்டிருந்த எனக்கு ஆதரவாக என்கையைப்பிடித்து உள்ளே அழைத்துவந்தாள் சித்தி.

‘ஏன் உன் கை நடுங்கிறது?’ என்று என்னை அணைத்துக்கொள்ள, ஏழுவயதில் தாயை இழந்த எனக்கு இதுபோன்ற ஆதரவு தேவையாக இருக்க, அப்புறம் என்ன? அவள் எனக்கு தாய்க்குத்தாயாக, தமக்கையாக, தோழியாக என் பிரியத்தை முழுவதுமாக சம்பாதித்துக் கொண்டுவிட்டாள்.

என்ன பேசுவோமென்று எங்களுக்கே தெரியாது: நாள் முழுவதும் பேச்சுதான். நானோ தத்துபித்து. அவளிடம் பார்வையில், பேச்சில், செயலில் ஒரு முதிர்ச்சி. எனக்குப்பிடித்ததும் அதுதான். ஒருநாள் பிரிந்தால்கூட ஒருயுகமாகத்தோன்றும்.

அதன்பிறகு நான்கு வருடங்கள்கழித்து என் திருமணம். சித்தியைப்பிரிந்து எப்படி இருப்பது? இதுதான் என் பிரச்சினை. பிடிவாதமாக வேண்டாம் என்ற என்னிடம், சித்தி ‘எங்களுக்குத்தான் வேறு என்ன இருக்கிறது? வருடம் முழுவதும் வந்துவந்து பார்த்துக்கொள்ளமாட்டோமா என்ன?’ என்று ஆறுதலாகச் சொன்னாள்.

எப்படியோ திருமணம் முடிந்து நானும் அவரும் பூனாவில் இருந்தபோது அப்பாதான் சிலமுறை வந்திருக்கிறார்.

பையன் பிறந்த ஒருவருடத்திற் கெல்லாம் அப்பா போய் சேர்ந்துவிட்டார்.

வருடம் கழித்தபின்னர் கிராமத்திற்குச்சென்ற போது, இது சித்திதானா என்ற சந்தேகம் ஏற்படும் அளவிற்கு , ஆளே அரை உடம்பாக மாறி, திடீரென்று ஒரு இருபது வயது அதிகமானாற்போல. அப்போதும் எங்களது அழைப்பிற்கிணங்கி வரவில்லை. சில வருடங்கள் கழித்து அவருக்கு சென்னைக்கு மாற்றலானாலும், ஏதாவது காரணங்களினால், கிராமத்திற்கு செல்வது குறைந்துகொண்டே வந்தது.

ஒருநாள் அங்கிருந்து செய்திவந்தது, அவள் மிகவும் சீரியஸ் என்று. சென்று பார்த்தோம். பாயில் துணியாகத் துவண்டு கிடந்தாள். ‘இப்போதும் ஒன்றும் வீணாகிவிடவில்லை: பட்டணத்தில் ஒருநல்ல ஸ்பெஷலிஸ்ட்டிடம் காண்பித்தால் உனக்கு பூரணமாக குணமாகிவிடும்’ என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன்

‘இனிமேல் நானிருந்து என்ன பிரயோஜனம். பாதி போன உயிரைத் தடுத்து நிறுத்தி இனி ஆகப்போவது என்ன?’ என்று சொல்லி பிடிவாதமாக அவளிஷ்டப்படி அந்த வீட்டிலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்டாள்.

‘என்னம்மா? உடம்பு சரியில்லையா?’ முத்தம்மா கேட்டவுடன் சட்டென்று விழித்துக்கொண்டேன்.

‘அதெல்லாம் ஒன்றும் இல்லை. நேற்றிரவு ரயிலில் வந்த களைப்பு. அப்படியே கண்ணசந்து விட்டேன்’.

பள்ளி முடிந்து அவன் வந்தது கூடத்தெரியாமல் கிடந்திருக்கிறேன். எட்டுமணிக்கு அவரும் வந்தார். தலைவலியென்று மாத்திரை போட்டுக்கொண்டு, பால்மட்டும் குடித்துவிட்டு படுத்துவிட்டார். எல்லாவேலைகளையும் முடித்துவிட்டு படுக்கப்போகும்போது மணி பத்து.

நினைவு முழுவதும் சித்தியைச்சுற்றியே வந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் சித்தியைக்கட்டிக்கொண்டுதான் படுப்பேன். என் கையை வெடுக்கென்று உதறினாள்.

‘மூச்சுமுட்டறமாதிரி அப்படியென்ன இறுக்கிக் கொண்டு, கையை எடு சனியனே!’ என்றாள்.

அம்மா என்று அழுதுகொண்டே, தாழ்வாரத்தில் வந்து படுத்தேன். சிலுசிலுவென்று காற்று அடித்தது. சற்று நேரத்தில் என் அருகில் வந்தமர்ந்து ‘கோபித்துக்கொள்ளாதே கல்யாணி! உன்மேல் எனக்கென்ன வெறுப்பு?’ என்று என்னை இழுத்துக்கொண்டாள் . அவள் மடியில் முகம்புதைத்து கோவென்று நான் அழ.

விசும்பல் சத்தத்தைக்கேட்ட அவர் ‘கல்யாணி! தூங்கவில்லையா நீ இன்னும்?’ என்றபடி எழுப்பினார்.

‘என்னங்க! சித்தியை முன்னமேயே இங்கு அழைத்துவந்து கவனித்திருந்தால், குணப்படுத்தியிருக்கலாமல்லவா? அவளுக்கு நானென்ன கெடுதல் செய்தேன்? என்ன சொல்லியும் வரமாட்டேனென்றாளே?’

சற்றுநேரம் மௌனமாக அமர்ந்திருந்த அவர் ‘கெடுதல் செய்தது நீ இல்லை:நான்’ என்றார். அதிர்ச்சியுடன் நான் அவரை நோக்க, எங்கோ பார்த்துக்கொண்டே சொன்னார்.

‘அப்போது அவளை எனக்குப்பார்த்து நிச்சயம் செய்திருந்தார்கள். நானோ அப்போதுதான் பிஏ படித்துக்கொண்டிருந்தேன், அவளுடைய அப்பாவுக்கு வருவதாக இருந்த பணம், ஏதோ காரணத்தினால் வராமல்போக, சீர்வரிசை சொன்னபடி செய்ய இயலாதிருக்கிறது என்று எங்கள் வீட்டிற்கு வந்து சொன்னார். ஆனால் அப்பாவும், மாமாவும் சேர்ந்து என்னென்னவோ பேசி மிகவும் அவமானப் படுத்தி விட்டார்கள். பாவம், அவர் மானஸ்தர்.

அம்மாவோ உள்ளே புலம்பிக்கொண்டிருந்தாள் பலவாறாக – குடும்பத்திற்கு கெட்டபெயர் ஏற்படுமே என்று, பெண்பாவம் பொல்லாதது என்று, முதன்முதலில் வந்த பொருத்தமான வரன் தட்டிப்போகிறதே என்று – இன்னும் இதுபோல். ஆனால் அப்பா இதையெல்லாம் கேட்டபாடில்லை. அவரை எதிர்த்துப்பேச குடும்பத்தில் ஒருவருக்கும் தைரியமும் இல்லை. அடுத்த நாள்காலை தரகர் வந்து சொன்னார், அவள் அப்பா மாரடைப்பினால் இறந்துவிட்டதாக. அப்பா சொல்லிக் கொண்டிருந்தார் பெண்ணினுடையது தரித்திரம் பிடித்த ஜாதகமென்று

பின்னர் பூனாவில் அத்தை வீட்டில் தங்கி மேலே படித்துமுடித்துவிட்டு வேலை யில் சேர்ந்தேன். உன் சித்தி குடும்பம் மிகவும் நொடித்துப் போய் சிரமப் பட்டது என்றும் பின்னர் உன் தந்தை அவளை இரண்டாம் தாரமாய் ஏற்றுக் கொண்டார் என்பதையும், நம் திருமணத்தின் போதுதான் தெரிந்து கொண்டேன். அப்போது தான் அவளை நேரிலும் பார்த்தேன்.

அப்பாவை எதிர்த்துப் பேச இயலாத என்னைக் குற்ற உணர்வு மிகவும் வாட்டியது.

அப்பாவும் ஓரிரு வருடங்களில் இறந்து விட்டதால் பெரும்பாலானவர்களுக்கு இந்த விஷயம் தெரியாமலே இருந்தது. ஒருமுறை தனியே அவளை சந்தித்தபோது என்னை மன்னிக்கும்படி கேட்டேன்.

அவள் ‘அவரவர் விதிப்படிதானே எல்லாம் நடக்கும். நீங்கள் எப்படி அதற்குப் பொறுப்பாக முடியும்? என்னிடம் மன்னிப்பு கேட்குமளவிற்கு, நீங்கள் செய்த குற்றம் ஒன்றுமில்லை கல்யாணியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தினால் அதுவே எனக்கு போதும். அவளிடமும் இதைப்பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கவேண்டாம்’ என்றாள்.

‘இப்போது சொல்! கெடுதல் யார் செய்தது என்று. அவள் உடல்நலம் குன்றியபோது அழைத்துவந்து தகுந்த சிகிச்சை அளித்து எல்லா உதவிகளையும் செய்வது, ஓரளவேனும் எங்கள் குடும்பம் இழைத்த தீங்கிற்கான பிராயச்சித்தமாக இருக்குமென எண்ணினேன். அவளும் மறுத்தாள். இவ்வளவு விரைவில் எமன் கொண்டுசெல்வான் என்று யார் நினைத்தார்கள்?

அவள் கேட்டுக்கொண்டதால் இவ்வளவு நாள் உன்னிடம் சொல்லாமலும் குற்றமனப்பான்மையால் புழுங்கிக்கொண்டும் தான் இருந்தேன். அதற்காக என்னை மன்னித்துவிடு ‘ என்றவர் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் என்மேல் தெறித்து விழுந்தது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “குற்றமொன்றும் இல்லை

  1. முந்தைய தலைமுறை கதைக்களம். தந்தைசொல் மீறாத
    தனயன். அதன் விளைவாக ஏற்படும் இயலாமையை இயல்பாக இயம்பும் கதை. பாதிக்கப்படுவது எப்போதும் பெண்தானே! இருப்பினும் பெருந்தன்மையின் இலக்கணமாய் அவள். எப்படிப்பட்ட இன்னலாயினும் அதை ஏற்று விதியின்மேல் பாரத்தைப் போடும் மனமுதிர்ச்சி. அக்கால சூழ்நிலையில் அவன்மேல் குற்றமொன்றுமில்லை என்று கணிக்கும் பக்குவம். பொருத்தமான தலைப்பு. வர்ணனையில்லாத நடை. இக்கால அவசரயுகத்தில், சற்று நின்று நிதானித்து கவனிக்கத்தக்க பாத்திரங்கள். நல்ல சிறுகதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *