வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சி.!
எந்த நேரம் வெளியே சென்று திரும்பி வந்தாலும் முகம் மலர்ச்சியாக இருக்கும்.
இன்று எங்கு, என்ன நடந்தது…? – உள்ளுக்குள் கேள்வி எழ…
“சந்துரு…”மெல்ல அழைத்து அருகில் அமர்ந்தாள்.
பேசவில்லை. மெளனமாக இருந்தார்.
“ஏன் ஒரு உம்முன்னு இருக்கீங்க..? “வாஞ்சையாகக் கேட்டு முகத்தை உற்றுப் பார்த்தாள்.
“ஒ…. ஒன்னுமில்லே…”சந்துரு மெல்ல சொன்னார். குரலில் சுரத்தி இல்லை.
“விசயத்தைச் சொல்லுங்க….?”
“ரகுராமன் வீட்டுக்குப் போனேன்.”
ரகுராமன் சந்துருவின் ஆத்மார்த்த உயிர் நண்பர். தற்போது இவர்கள் நகரத்துப் பக்கம் நகர்ந்து அக்கம் பக்கம் குடியிருப்பு பகுதிகளில் மாடி வீடு கட்டி வாழ்வது போல் சிறு வயதில் ஒரே ஊர். பக்கத்துப் பக்கத்து தெருவில் வசிப்பு. தினம் பழக்கம். ஒரே பள்ளியில் படித்து, ஒரே கம்பெனியில் ஒன்றாக வேலை செய்து அவர் மூத்தவர் என்பதால் மூன்றாண்டுகளுக்கு முன் ஓய்வு. சந்துரு ஆறுமாதங்களுக்கு முன் ஓய்வு.
இருவருக்கும் இரண்டிரண்டு ஆண் பிள்ளைகள். வசதி, பொருளாதாரத்தில் குறைவில்லை. நினைத்தால் அவர் இங்கே வருவார். இவரும் அப்படி செல்வார். நண்பர்கள் சந்தித்தால் மனம் விட்டுப் பேசி நிறைவாக இருப்பார்கள். இன்று இப்படி குறையாகக் காரணம்…? – நினைத்த வைதேகி….
“அவருக்கு உடம்பு சரி இல்லையா..? “பரிவாகக் கேட்டாள்.
“இல்லே. நல்லா இருக்கார்.”
“பின்னே ஏன் வாட்டம்…?”
“அவர் தன் பழைய காரை விற்றுவிட்டு புதுக்கார் வாங்கி இருக்கார். புருசன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் வயசான காலத்துல ஏத்துக்குப் புதுக்கார் கேட்டேன்.”
“சரி.”
“பையன்கள் கனடாவில் குடும்பத்தோடு இருந்து லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறாங்க. வாராவாரம் வாட்ஸ் – அப்பில் பேசுறானுங்க. இருமல்ன்னு சொன்னா ஒன்னுக்குப் பத்தாய் பணம் அனுப்புறானுங்க. பழசு வேணாம். புதுசு வாங்கி அனுபவிங்கன்னு சொல்லி ஆன் லைனில் பணம் கட்டி வண்டியை அனுப்பிட்டானுங்க. நல்லா இருக்கா..? கேட்டார். இருபது லட்சம் கார். பளபளன்னு பார்க்க அழகாய் இருக்கு.”
“இதுல என்ன வருத்தம்..? முக வாட்டம்…?”
“அவர் பையனுங்க அப்படி பணத்துல மிதக்குறானுங்க. பெத்தவங்களைக் குளிப்பாட்டுறானுங்க. நம்ம பையன்கள் ஒருத்தன் மெடிகல் கடை வச்சிருக்கான். இன்னொருத்தன் கல்லூரி விரிவுரையாளராய் இருக்கான். குறை சம்பாதிப்பு “வருத்தத்தோடு சொல்லி நிறுத்தினார்.
வைதேகிக்கு அவர் வாட்டம் வருத்தம் புரிந்தது.
“குறைவாவே சம்பாதித்தாலும் நாமும் அவரைப் போல எந்த குறையும் இல்லாமல் நிறைவாத்தானே இருக்கோம். “என்றாள்.
“இருந்தாலும் பணம் நம்மைப் பொறுத்தவரையில் அவரைப் போலில்லாமல் ஒரு பற்றாக்குறை விசயம்தானே..!”
சந்துரு பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தார்.
“ஒன்னும் கவலைப் படாதீங்க. உங்க நண்பரை விட நாம ரொம்ப நிறைவாய் இருக்கோம்.” சொன்னாள்.
சந்துரு அதிர்ச்சியாகப் பார்த்தார்.
“எப்படி..? “கேட்டார்.
“அவர் பணத்தில் புரண்டு நல்ல வசதி வாய்ப்பாக வாழ்ந்தாலும் ஒரு தலை வலி, கால் வலி என்றால் கணவன் மனைவி ரெண்டு பேரும் தான் அனுபவிக்கனும். உதவிக்கு அடுத்தவங்களை எதிர்பார்க்கனும். செத்துக் கிடந்தால் அக்கம் பக்கம் சேதி சொல்லித்தான் மகன்கள் வந்து பார்க்கனும். அவர்கள் வரும்வரை பிணங்கள் ஐஸ் பெட்டிகளில் காத்திருக்கனும்.
நாம அப்படி இல்லே. மகன்கள் குறைவாய் சம்பாதித்தாலும் கூட்டுக் குடும்பமாய் நிறைவாய் இருக்கோம். பேரன், பேத்திகளைக் கொஞ்சி மகிழ்கிறோம். நம் உடம்புக்கு ஒன்னு என்றால் உடனே ஓடி வந்து தாங்க, பார்க்க மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகளெல்லாம் வீட்டிலேயே இருக்காங்க. செத்துப் போனால் உருண்டு புரண்டு அழுது உடனே தூக்கிப் போய் நல்லடக்கம் செய்திடுவார்கள். இதைவிட வேற என்ன கொடுப்பினை இருக்க வேணும். அவரை விட நாம ரொம்ப நிறைவாய் மகிழ்ச்சியாய் இருக்கோம் “சொன்னாள்.
புரிந்த சந்துரு….
“ஆமாம் வைதேகி!” மலர்ச்சியாக சொன்னார்.