குறையும், நிறையும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,658 
 
 

தாழ்ப்பாள் போடாமல் கதவு மூடியிருக்க, கதவைத் திறந்து உள்ளே வந்தாள் அனு. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவகி மகளைப் பார்த்தாள்…
“”அனு… பஸ்சிலே வர்றதாலே எப்படி வரப் போறீயோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன்; நல்லவேளை, சீக்கிரமாக வந்துட்டே.”
“”என்னம்மா, நான் என்ன சின்ன குழந்தையா… ஸ்கூட்டியை சர்வீசுக்கு விட்டிருக்கேன். ஒரு நாள் தானே, பஸ்சில் அதிகம் கூட்டமில்லை. ஆபீசிலும் இன்னிக்கு சீக்கிரம் வேலை முடிஞ்சதாலே, மானேஜர் கிளம்பச் சொன்னது நல்லதாப் போச்சு.”
“”சரிம்மா… போய் டிரஸ் மாத்திட்டு வா. காபி, டிபன் எடுத்துட்டு வர்றேன். அபியும் இப்பதான் காலேஜிலிருந்து வந்தா. நீ வந்ததும் காபி குடிக்கிறேன்னு சொல்லிட்டா.”
குறையும், நிறையும்!கண்ணாடி முன் நின்றாள் அனு. சுண்டினால் ரத்தம் தெரியும் ரோஜா நிறம். நீண்ட விழிகள், எடுப்பான மூக்கு, புன்னகை தவழும் உதடு. அளவெடுத்து செதுக்கியது போன்ற உடலமைப்பு. பார்ப்பவர் யாருக்கும் முதல் பார்வையிலேயே அனுவின் அழகு கவர்ந்து விடும். அவள் அழகை ரசிப்பவர்கள், அவள் நடையழகைப் பார்த்து, பரிதாபப்படுவர். அனுவிற்கு, இரண்டு கால்களும் ஒரே நீளத்தில் இல்லாமல் குட்டையும், நெட்டையுமாக பிறவியிலேயே அமைந்து விட்டது. அதனால், குடை சாய்ந்தது போல், ஒரு புறமாக சாய்ந்துதான், அனுவால் நடக்க இயலும்.
திருமண வயதை நெருங்கிவிட்ட மகளின் இந்தக் குறை, தேவகியை பெரிதும் வாட்டியது.
“”அக்கா, வாக்கா… அம்மா சூடா பஜ்ஜி போட்டிருக்காங்க,” அக்காவை அழைத்தபடி வந்த அபி, அனுவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
கையில் வைத்திருந்த பார்சலை அக்காவிடம் கொடுத்தாள்.
“”என்னடி இது?”
“”பிரிச்சு பாரு, தெரியும்.”
ஆழ்ந்த சிகப்பு வண்ணத்தில், இளம் மஞ்சள் நிறப் பூக்கள் போட்ட பட்டர் சில்க் புடவை, அழகாக இருந்தது.
“”உனக்குத்தான். என் பிரண்டோட அம்மா, வீட்டில் புடவை பிசினஸ் பண்றாங்களாம். பிரண்ட்ஸ் கேட்டாங்கன்னு, நாலைந்து புடவை கொண்டு வந்தா. இதைப் பார்த்ததும் எனக்கு பிடிச்சிருச்சு. உனக்கு இது ரொம்ப அழகா இருக்கும்ன்னு, நான் வாங்கிட்டு வந்துட்டேன். விலை, ஐநூறு ரூபா. நல்லா இருக்கா.”
“”எனக்கு எதுக்குடி… நீ எடுத்துக்க.”
“”ம்ஹும்… எங்க அக்காவுக்காக நான் செலக்ட் செய்தது. நீதான் கட்டிக்கணும். உன் கலருக்கு இதைக் கட்டினா, தேவதை மாதிரி ஜொலிப்பே.”
சொல்லும் தங்கையை அன்புடன் பார்த்தாள்.
சொந்த வீடு, தேவையான அளவு சொத்து, சுகத்தை வைத்துவிட்டு தான், தேவகியின் கணவர், இறந்து போனார். அனு, அபியை சிறு வயதிலிருந்தே தேவகி தான், தனி மனுஷியாய் வளர்த்து ஆளாக்கினாள். மகள்களை வளர்ப்பதில் அவளுக்கு சிரமம் இருக்கவில்லை; மகளின் குறைதான் அவளுக்குக் கவலையைக் கொடுத்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கையுடன், “டிவி’ பார்த்துக் கொண்டிருந்த அனுவிடம் வந்தாள், வீட்டு வேலை செய்யும் ராசாத்தி.
“”அனும்மா… உன் துணிமணி இருந்தா எடுத்துப் போடு. துவைச்சுப் போட்டு, அயர்ன் செய்து தரேன். உனக்கு பிடிக்கும்ன்னு, சோள கதிரு, சந்தையிலே பிஞ்சாக பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன். அம்மாவை அவிச்சுத் தரச் சொல்லி சாப்பிடும்மா.”
“”ரொம்ப தாங்க்ஸ் ராசாத்தி. துணி துவைக்க ஏதுமில்லை; எல்லாத்தையும் லாண்டரிக்குப் போட்டுட்டேன். நீ சிரமப்பட வேண்டாம். மத்த வேலைகளைப் பாரு.”
வேலைக்காரியாக இருந்தாலும், தன் மீது பிரியமாக இருக்கும் ராசாத்தியிடம் அன்புடன் பழகுவாள் அனு.
ஹாலில் பேச்சு சப்தம் கேட்க, தங்கையிடம், “”அபி… அம்மா யாரோடு பேசிட்டு இருக்காங்க.”
“”அம்மாவோட பிரண்ட் அகிலா ஆன்ட்டி வந்திருக்காங்க.”
அவர்கள் பேசுவது உள்ளே இருக்கும் அனுவின் காதில் தெளிவாக விழுந்தது.
“”அகிலா… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்ன சொன்னாங்க; அனுவின் ஜாகதம் பொருந்தியிருக்கா?”
“”ம்… ஜாதகப் பொருத்தம் நல்லா இருக்கு.”
“”அப்புறம் என்ன அகிலா. அவங்க எதிர்பார்க்கிற அளவு சீரெல்லாம் செய்திடுவோம். எல்லா சொத்துக்களும் இவங்க ரெண்டு பேருக்குத்தானே.”
“”அதெல்லாம் ஒண்ணும் பிரச்னையில்லை தேவகி. நான் அனுவோட போட்டோவை காண்பிச்சேன்; அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. நம்ப அனு கால்கள் சற்று சிறிது, பெரிதாக இருப்பதாலே சற்று சாய்ந்து நடப்பதைச் சொன்னேன்.”
மவுனமாக அவளையே பார்த்தாள் தேவகி.
“”அவங்களுக்கு அதில் அவ்வளவாக சம்மதமில்லை தேவகி. “எங்க பையன் ராஜாவாட்டம் இருப்பான். வேறு இடம் இருந்தா சொல்லுங்க…’ன்னு சொல்லிட்டாங்க. நானும், அனுவின் நல்ல குணத்தை எடுத்துச் சொல்லி, குடும்பப்பாங்காக, நல்லவிதமா இருப்பாள்ன்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்; அவங்க கேட்கலை. சரி விடு தேவகி. வேறு ஏதும் நல்ல இடம் வந்தா சொல்றேன். அப்ப நான் கிளம்பட்டுமா?”
அவள் விடைபெற்று செல்ல, பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல், அமர்ந்திருக்கும் அம்மாவிடம் வந்தாள் அனு.
“”அம்மா, என்னம்மா… ஏன் என்னவோ போல் இருக்கே,” என்ற மகளை, கண்கலங்க பார்த்தாள்.
“”உன் எதிர்காலத்தை நினைச்சு எனக்கு கவலையாக இருக்கு அனு. கடவுள் ஏன் இப்படி நமக்கு குறையை வச்சு சோதிக்கிறான்னு புரியலை. உனக்கிருக்கிற அழகுக்கு, உன் கால்களை இப்படி படைச்சு, நம்மை பழி வாங்கிட்டானே. உனக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து, உன் சந்தோஷ வாழ்க்கையை பார்க்கணும்ன்னு நினைக்கிற என் ஆசை, நிராசையாக போயிடுமோன்னு கவலையாக இருக்கு.”
அம்மாவைப் பார்த்து புன்னகைத்தாள் அனு.
“”என்ன… உன் குறையை நினைச்சு, உன் வாழ்க்கை என்ன ஆகுமோன்னு பரிதவிச்சு பேசறேன். என் கவலை உனக்கு சிரிப்பை வரவழைக்குதா?”
“”என் செல்ல அம்மா, நீ ஏன் இப்படி நிறைகளை விட்டுட்டு, குறைகளையே பார்த்துட்டிருக்கே. எனக்கான வாழ்க்கை நிச்சயம் அமையும்; கவலைப்படாதே.”
பேசும் மகளைப் புரியாமல் பார்த்தாள்.
“”அம்மா… நான் சொல்றது உனக்கு புரியலையா? என்னை பொறுத்தவரைக்கும், நான் கடவுளுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்றேன். ஏன் தெரியுமா? அவர் எனக்கு கொடுத்த நிறைகளுக்காக.
“”என் மீது பாசத்தைப் பொழியும் இந்த அன்பான அம்மா எனக்குக் கிடைச்சதுக்கு, என் மீது உயிராக இருக்கும் என் அருமை தங்கை, நாம் நிறைவாக வாழ சொந்தமாக வீடு, என் மீது உண்மையான அன்பு செலுத்தும் வேலைக்காரி, என் உணர்வுகளை புரிந்து கொண்ட நல்ல தோழிகள், கனிவான அணுகுமுறை கொண்ட, என் உயர் அதிகாரி, எந்த வேலையும் உன்னால் முடியும்ன்னு உற்சாகப்படுத்தும் என்னுடன் வேலை பார்க்கும் என் சக பணியாளர்கள், மன நிறைவளிக்கும் நல்ல வேலை, பணத்துக்குக் கஷ்டப்படாமல் நிறைவான பொருளாதாரம், நல்ல உடல் ஆரோக்கியம், இவ்வளவு நிறைகளை கடவுள் எனக்குக் கொடுத்திருக்காரும்மா.
“”இவ்வளவு நிறைகளை எனக்குக் கொடுத்த கடவுளுக்கு நான் நன்றி சொல்வேன். என்னோட இந்த குறையை பெரிசா நினைக்காத நல்ல மனம் படைத்த ஒருவர் வந்து, என்னை துணையாக ஏற்றுக் கொள்ளும் போது, அதற்காக நன்றி செலுத்தக்கூடிய நாளும் வரலாம். அதனால, நம்மகிட்டே இருக்கிற நிறைகளை நினைச்சு பார்த்து, கிடைச்சிருக்கிற வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வோம். சரியாம்மா. இனி, நீ இப்படி கவலைப்பட்டு உட்கார மாட்டியே.”
ஆழ்ந்த சிந்தனையோடு தெளிவாகப் பேசும் மகளை பார்த்து, புத்துணர்வு பெற்றவளாக புன்னகைத்தாள் தேவகி.

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *