குறுணைக் கஞ்சி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,576 
 
 

நண்பகல் தாண்டிய நேரம். குடிசை வாசலில் கால்களைப் பரக்க நீட்டியவாறு அமர்ந்திருந்தாள் குடிசைக் குரியவளான குள்ளம்மா பாட்டி. அவளின் மடியில் சாய்ந்தபடி பால்போத்தலில் ஊற்றிய வரத்தேநீரைச் சப்பிக் கொண்டிருந்தாள் கடைக்குட்டி யான மூன்று வயதுப் பேத்தி.

பாட்டியின் பக்கத்தில் அமர்ந்து மதிய உணவாகக் குறுணைக் கஞ்சியைப் பிஞ்சு விரல்களால் குழப்பிக் கொண்டிருந்தான் ஐந்து வயது பேரன்.

“அம்மா! நம்மப் போல ஏழை பாளைகளுக்கு அரிசிச் சோறுதான் உசிரைப் பிடிச்சு வச்சுக்கிட்டு இருக்கு. இப்ப அதுக்கும் பஞ்சம் வந்துடுச்சாம். அரிசி விலை ரொம்ப ரொம்ப ஏறிப்போச்சாம். அதுவும் கிடைக்க மாட்டேங்குதாம். சோற்றுக்குப் பதிலா கெலாடிக் கிழங்கைச் சாப்பிடுங்கன்னு யாரோ சொல்றாங்களாம்.

அது மட்டும் என்ன நம்ம கொல்லையிலா விளையுது! அரிசி விலையை விட கெலாடி விலை என்ன அவ்வளவு மலிவாவா இருக்கு!

அரிசிக் கடைக்குப் போனேன். போனமாசம் முப்பத்தாறு வெள்ளிக்கு இருபது கிலோ அரிசி வாங்கிட்டு வந்தேன். அதே இருபது கிலோ அரிசி இன்றைக்கு எழுபது வெள்ளி சொல்றான்! அப்புறம் என்ன பண்றது?

கையிலே இருந்த காசுக்கு ஏற்ற மாதிரி பத்துக் கிலோ குறுணை வாங்கிட்டு வந்துட்டேன்.

கேசு விலை கூட ஏறிப் போச்சாம். பசாருலே போயி நாம எல்லாம் ஒண்ணுமே வாங்கிச் சாப்பிடுற மாதிரி இல்லை. ஒரு பிடி தக்காளிக் கீரை மூணு வெள்ளி. கம்போங் மீனு ஒரு காலத்துலே கட்டி பதினைஞ்சு காசுக்கு வாங்குனோம். இன்றைக்கு கிலோ எட்டு வெள்ளி சொல்றான். நாற்பது காசுக்கு வாங்குன சுறா மீனு பன்னிரெண்டு வெள்ளி.

பச்சைப் புள்ளை களுக்கான எவரிடே பால் மாவைக் கண்ணாலே பார்க் கவே முடியலை. இப்ப வரத் தண்ணியைப் போத்தலுலே ஊற்றிக் குழந்தை ளை ஏமாத்திக்கிட்டு இருக்கி றோம். எல்லா விலையும் விசம் மாதிரி ஏறிக்கிட்டே இருக்கு. இந்த நிலை மையிலே நண்டும் சிண்டுமா இந்த அஞ்சு புள்ளைகளையும் நாம எப்படித் தான் வளர்த்து ஆளாக்கப் போறோம்ன்னு தெரியலைம்மா.

பத்து வருசத்துக்கு முன்னாலே ஐநூறு வெள்ளி சம்பளம் கொடுத்தான். இன்றைக்கும் அதே தான் கொடுத்துக்கிட்டு இருக்கான். ஆனால் நாம வாங்குற பொருளுங் களுக்கு மட்டும் ஒண்ணுக்குப் பத்தா விலை ஏறிக்கிட்டிருக்கு.

ஆளுக்கு ஆளு உழைக் கிற குடும்பமா இருந்தாலும் எப்படியோ சமாளிக்கலாம். இத்தனை புள்ளைகளும் என் ஒருத்தி கையைத்தான் நம்பியிருக்காக்க. பாழாப் போன இந்த எமனுக்கு என்ன அவசரமோ, அநியாயமா என் தாலியைப் புடுங்கிக்கிட்டுப் போயிட்டான். இப்பத் தலை இல்லாத முண்டமா நாம தவிச்சுக்கிட்டு இருக்கிறோம்.

வெள்ளம் தலைக்கு மேலே போயிடுச்சு. என்னாலெ சமாளிக்க முடியலைம்மா. அதனாலே கின்டக்கார்டனுக்குப் போற புள்ளையை தற்காலிகமா இந்த மாசத்தோடு நிப்பாட்டப் போறேன். பள்ளிக்கு வேனுலே போன மற்ற மூணு புள்ளைகளும் இனி நடந்து தான் போகணும். நினைச்சா வயிறு எரியுது, வேறே வழி தெரியலைம்மா. விரலுக்குத் தக்க வீக்கம் தானே இருக்கணும். ஐநூறு வெள்ளிக் காசை வச்சிக்கிட்டு நான் பெற்ற பிள்ளைகளை இப்படிக் கொடுமைப்படுத்துறது என்னாலே தாங்கிக்க முடியலை. அதனாலே கம்பெனி வேலை முடிஞ்சதும் அப்படியே இரவு பத்து மணி வரைக்கும் ஒரு கடையிலே வேலை செய் யப் போறேன். இல்லேன்னா சமாளிக்க முடியாதும்மா. நான் வரும் வரைக்கும் புள்ளை களைப் பத்திரமாப் பார்த் துக்குங்க.

அம்மா, இன்னொரு பேச்சும் அடிபடுதும்மா. இங்கே ரோட்டை அகலப் படுத்தப் போறாங்களாம். அதனாலே நம்ம குந்தியிருக்கிற குடிசைக் கும் ஆபத்து வரும் போல இருக்கு. அப்படி எதுவும் நடந் துட்டா நாம எல்லாம் என்ன பண்ணப் போறோம்ன்னே தெரியலைம்மா”.

அன்று வேலைக்குப் புறப் படும் போது மகள் சொல்லி விட்டுச் சென்ற தகவல்கள் பெற்றவளின் நெஞ்சுக்குள் வந்து வந்து முட்டி மோதி, கலக்கிக் கொண்டே இருந்தன. அக்கலக்கத்தின் ஊடே பத்து வயதுச் சிறுமியாய் இருக் கும் போது தான் கண்டி ருந்த சப்பானியர் காலத் துப் பஞ்ச வாழ்க்கை, பாட்டியின் அகக் கண்களில் நிழலாடத் தொடங்கின.

“பாண்டவர்கள் வனவாசம் போனமாதிரி எப்பவோ இந்த நாட்டுக்கு சஞ்சியிலே வந்தவுகளாம் என்னைப் பெத்தவுக. அப்ப இந்த மண்ணுலே பிறந்தவள் தான் நானும். காலம் எல்லாம் வெள்ளக்காரன் தோட்டத்துலேயே கழிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அப்பத்தான் இந்த நாட்டைச் சப்பான்காரன் புடிச்சுக்கிட்டான். வெள்ளக்காரன் ஓடிவிட்டான்.

சப்பான் வந்தபிறகு சனங்க வாழ்க்கையே ரொம்ப மாறிப்போச்சு. தோட்டத்துச் சனங்களுக்கு மாசா மாசம் வெள்ளக்காரன் தான் அரிசி கொண்டு வந்து கொடுப்பான். சம்பளமும் கொடுப்பான். அரிசிக்கான விலையைச் சம்பளத்துலே வெட்டிக்குவான்.

இப்ப வெள்ளக்காரனும் இல்லை. வேலையும் இல்லை. அதனாலே அரிசியும் சம்பளமும் கிடைக்காமல் சனங்க அல்லாடிப் போனாங்க. சாப்பாட்டுக்குப் பெரிய பஞ்சம் வந்திடுச்சு.

அன்றைக்கு இருந்த சனங்க, இன்றைக்கு இருக்கிறவுக மாதிரி இல்லை. நம்ம ஊருலே மண்ணுலே பாடுபட்டுப் பழகிப் போனவுக. அந்தப் பழக்கம் இந்தச் சமயத்துலே அவுகளுக்குள் கைகொடுத்திடுச்சு. எல்லாருமே விவசாயத்துலே இறங்கிட்டாங்க.

இன்றைக்கு ஒரு கத்தரிச்செடி நடக்கூட நிலம் கிடைக்க மாட்டேங்குது. அன்றைக்கு அப்படியில்லை. கும்பெனி நிலம் (T.O.L) வால்மாதிரி ஆங்காங்கே நீண்டு காடுமண்டிக் கிடக்கும். வெள்ளக்காரன் தோட்டத்துலே புதுசா நட்டிருந்த இளங்கன்னுங் காடுக பரந்து கிடக்கும் அதனாலே விவசாய நிலத்துக்குப் பஞ்சமே இல்லை.

ஊருலே ஏருபுடிச்சு, வரப்பு வெட்டி உழைச்ச கையிங்க. இங்கே மண் வெட்டியை எடுத்திடுச்சு. ஊருலே மாடுங்க உழைச்ச உழைப்பை இங்கே நம்மவுக செய்ய ஆரம்பிச்சிட்டாக.

நாலஞ்சு மாசத்துலே கேப்பை, சோளம், கம்பு, தினை- இப்படி நம்ம ஊரு தானியங்க எல்லாம் விளைஞ்சு கொழிச்சுப்போச்சு. மரவெள்ளி, சர்க்கரைவள்ளி, வாழைன்னு ஒரு பக்கம் வளர்ந்து கிடந்துச்சு.

ஆற்றங்கரை மேடு, நெருப்பு, எரிஞ்ச காடு எல்லாம் தக்காளிக் கீரை, வல்லாரைக் கீரை, குப்பைக்கீரை, பொன்னாங்கண்ணின்னு சும்மா மண்டிக் கிடக்கும். இதெல்லாம் போதாதுன்னு ஆடு தின்கிற மீனாக் கிரையைக் கூட சனங்க விட்டு வைக்கல.

விவசாய வேலைக இல்லாத சமயம் இந்த ஆம்பளைக எல்லாம் சும்மா இருக்க மாட்டாக. உப்புத்தண்ணிக் கானுலே வலைகட்டி வாளி வாளியா மீன்களை வாரிக்கிட்டு வருவாக. சேத்துக் காட்டுக்குப் போயி ஆமைக மாதிரி நண்டுகளைச் சாக்குச் சாக்காக கொண்டு வந்து கொட்டுவாங்க. வேட்டைக்குப் போயி பன்றிமரை, உடும்புகளையும் கொண்டு வருவாக.

இன்றைக்கு அந்த மாதிரி கொண்டு வருவதுக்கு ஆளுகளும் இல்லை. ஆற்றிலே காட்டுலே அந்த மாதிரி சீவன்களும் இல்லை. எல்லாமே போச்சு!

ஆக, சப்பான் காலத்துலே அரிசிச்சோறு கிடைக்கலையே என்ற குறையைத் தவிர வேறே எந்தக் குறையும் இல்லை.

சப்பான் காலம் சண்டைக்காலம் அதனாலே அரிசிப் பஞ்சம் வந்துச்சு. இன்றைக்கு அப்படி ஒண்ணும் இல்லியே. அப்புறம் ஏன் அரிசிக்குப் பஞ்சம் வந்துச்சு. மற்ற பொருளுக்கும் இப்படி விலை ஏறிப் போச்சு? ஒண்ணுமே புரியலியே!

அந்தக் காலத்துலே கித்தாக் காட்டுலே விறகு கிடைச்சுச்சு. ஆற்றுலே கிணற்றுலே தண்ணி கிடைச்சுச்சு. இன்றைக்கு எங்கும் ஈச்சங்காடாப் போச்சு. ஆறும் கிணறும் நாறிக்கிடக்கு. அதனாலே இப்ப எல்லாம் காசு கொடுத்தால் தானே கிடைக்குது.

நல்ல காலம். தோட்டம் துண்டாடிப் போனதும் மற்றவுங்க மாதிரி இந்தப் புறம்போக்கு நிலத்துலே எப்படியோ நமக்குன்னு ஒரு குடிசையைப் போட்டு வச்சுட்டுப் போய்ட்டாரு வீட்டுக்காரரு. இல்லேன்னா வீட்டுச் சேவா வேறே கட்ட வேண்டி வந்திருக்கும். இப்ப அந்தத் தொல்லை இல்லை. ஆனாலும் இதுக்கும் என்னவோ ஆபத்து வரப்போகுதுன்னு சொல்லி அழுதுட்டுப் போனாளே மகள்?

ஓட்டைச் சைக்கிள் கூட இல்லாத வீட்டுலே எல்லாம் இன்றைக்கு பல காடிகள் நிக்குது. பத்தடி அகலத் தார் ரோடு இன்றைக்கு அறுபதடியப் பரந்து கிடக்குது. மணிக்கு ஒரு காடி ஓடிக்கிட்டு இருந்த ரோட்டுல இன்றைக்கு நிமிடத்துக்கு ஆயிரம் காடிக ஓடுது.

கித்தாக் காடு எல்லாம் இன்றைக்கு மாடமாளிகையா, கம்பெனிகளா உயர்ந்து போச்சு.

இரவு நேரத்துலே மண்ணெண்ணெய் விளக்குலே சினுங்கிக்கிட்டு இருந்த இடம் எல்லாம் இன்றைக்கு கரன்ட் விளக்குலே செகசோதியா இரவைப் பகலாக்கிக்கிட்டு இருக்கு.

டிவி, ஆஸ்ட்ரோ, டெலிபோன் இல்லாத வீடுகள் எங்கே இருக்கு? அதுமட்டுமா! என்னவோ கைத்தொலை பேசின்னு சின்னஞ்சிறுசுக எல்லாம் கூட கையிலே வச்சுக்கிட்டு அலையுதுகளே. ஆக ஒட்டுமொத்தமாய் பார்த்தா நம்ம நாடு ரொம்ப வளர்ச்சி அடைந்த மாதிரிதான் தெரியுது. ஆனால் இந்த வளர்ச்சியிலே ஏழைகளுக்கு மட்டும் ஏன் பங்கு இல்லாமல் போச்சு?

நாங்க மட்டும் ஏன் குறுணைக் கஞ்சி குடிக்கிற நிலைக்கு வந்துட்டோம்?

பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டாள் பாட்டி. பள்ளியில் இருந்து திரும்பிய பேரன்கள் மூவரும் அவளை நோக்கி பரபரப்போடு ஓடிவந்து கொண் டிருந்தனர்.

“பாட்டி! பாட்டி! ரோட்டுல பெரிய புல்டோசர் வந்து நிக்குது. நம்ம வீடுங்களை எல்லாம் இடிச்சுத் தள்ளப் போறாங்களாம். நம்ம ஆளுங்க எல்லாம் அங்கே சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிறாங்க” மூத்த பேரன் ஓங்கி அலறினான்.

ஊமையாகிப் போனாள் குள்ளம்மா பாட்டி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *