கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 9,978 
 
 

பெர்சனல் செக்ஷன் புஷ்பா பரபரப்பாகப் பஞ்சமியின் ஸீட்டுக்கு அருகில் வந்தாள். “ஏய், பஞ்சமி, உனக்கு போன் வந்திருக்கு, கால் மணி நேரத்திலே மூணு கால் ஆச்சு ஆபீஸ் பூராவும் தேடறோம். எங்குமே அகப்படாத நீ எப்படி ஸீட்டிலே இப்ப… க்வீக் போ, போ!” என்று அவசரப்படுத்தினாள்.

“கான்டீனுக்குப் போயிட்டு வரேன் புஷ்பா அது சரி போன்ல யாருன்னு கேட்கலையா நீ?”

“யாரோ செல்வரத்தினம்னு சொன்னார்.”

“ஓ! எதற்காக என்னை அழைக்கிறார். ஒரு வேளை அவர் மகனை விட்டு விலகிப் போயிருன்னு சொல்லவோ?” சிந்தித்தபடியே போனை எடுத்தாள்.

“ஹலோ நான் பஞ்சமி பேசறேன்.”

“என்னம்மா சௌக்யமா இருக்கியா? நான் உன்கிட்டே முக்கியமான விஷயம் பேசணும். சாயந்திரம் ஆறுமணிக்குப் பெரிய கோவிலில் காத்திருக்கிறேன். உன்னால வர முடியுமா!”

“ஷ்யூரா வரேன் சார் வைச்சுடவா?”

“மறந்துடாதே முக்கியமான விஷயம்.”

மாலை பரபரப்புடன் ஆபிஸ் விட்டுப்பெரிய கோவிலை நோக்கி நடந்தாள் குழப்பத்தோடு.

கோவில் வாசலிலேயே எதிர்கொண்டார், செல்வரத்தினம்

“என்ன சார் விஷயம்?” பதற்றத்தோடு கேட்டாள், பஞ்சமி.

அம்மா பஞ்சமி நீ என் மகன் ரவியைக் காதலிக்கிற விஷயம் எனக்குச் சில நாட்கள் முன்புதான் தெரிந்தது. உன் அப்பா என்னோட நண்பர். நண்பனுடைய மகளை நான் மருமகளா அடையறதிலே எனக்கும் சந்தோஷம்தான் ஆனால்…”

“ஆனால் என்ன சார்?”

“நீயோ ஆசாரமான குடும்பத்திலே பிறந்தவள் என் மகனோ கடவுளை நம்பாதவன் நாத்திகம் பேசறவன் நீ எதையெல்லாம் பெரிசா கருதுகிறாயோ அதையெல்லாம் அவன் மூட நம்பிக்கைன்னு பேசுவான். ஒத்துப்போகுமா வாழ்க்கை? இதையெல்லாம் நீ யோசித்தாயா? நீ சின்னஞ்சிறியவள் நல்லது கெட்டதை நான் எடுத்துச் சொல்வது என் கடமையல்லவா? கட்சி கட்சின்னும் என்றும் அலையறவன் மண வாழ்க்கையிலே நிறைவைத் தருவானா? நல்லா யோசிச்சுப்பாரும்மா.”

“சார், நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். நீங்க உங்க கடமையைச் செஞ்சுட்டீங்க கவலையை விடுங்க. என்னோட ஆன்ம பலத்தால் அவரை என் வழிக்குக் கொண்டு வரமுடியும்னு நான் நம்பறேன். அப்படி முடியாத பட்சத்தில்… நான் சுமுகமாகவே விலகிவிடுகிறேன். உங்க கவுரவத்துக்கும், நல்ல மனசுக்கும் களங்கம் வரும்படி நடக்கமாட்டேன். என்னை நீங்கள் நம்பலாம்.”

“அவனைத் திருத்த முடியுங்கிற உன் நம்பிக்கையை, திடத்தை நான் பாராட்டுகிறேன். அப்படி அவன் திருந்திட்டா என்னைவிடச் சந்தோஷப்படுபவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்ப நான் வரேம்மா! உனக்கு என் வாழ்த்துக்கள்.” விடைபெற்றுக்கொண்டார் செல்வரத்தினம்.
பஞ்சமிக்குள் ரத்த ஓட்டமே நின்று உடம்பே மரத்துவிட்டாற்போல் பிரமை தோன்றியது. சொல்லிவிட்டாளே தவிர ரவியை எப்படி மாற்றுவது என்ற கவலையும் பிறந்தது.

பஞ்சமியின் வருகைக்காக காத்து நின்ற ரவி பொறுமையிழந்தான்.
‘இத்தனை நாழி என்ன செய்கிறாள்? ஒரு வேளை வீட்டில் யாராவது விருந்தாளி வந்து விட்டார்களோ? இல்லை. நான் இங்கே காத்திருப்பேன் என்பதையே மறந்திருப்பாளோ?

என்ன இருந்தாலும் இந்த பெண்களே சுத்த மோசம். தன்னை ஒருவன் விரும்புகிறான் என்றால் அவனை எப்படியெல்லாம் அலைக் கழிக்கிறார்கள்? என் துடிப்பும், ஆவலும் அவளுக்கு வேடிக்கையாகப் போய்விட்டனவா என்ன?

முதல் சந்திப்பிலேயே இப்படியொரு அழுத்தமான பாதிப்புகளை உண்டாக்கி இன்று அவளுக்காக மணிக்கணக்காகக் காத்திருக்க வைக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை.

எத்தனை நாழிதான் இப்படி கொக்கு போல் நிற்பது? எரிச்சலடைந்த ரவி எதிர்த்தாற் போலிருந்த கடைக்குச் சென்று நிஜாம்பாக்குப் பொட்டலம் வாங்கி வாயில் போட்டுக் கொண்டான். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு –
துhரத்தில் பஞ்சமி வருவது லேசாகத் தெரிந்தது. என்ன அசமந்தத்தனம்? ஆடி அசைந்து கொண்டு, வரட்டும் என்று அலட்சியமாக நின்றான்.
அருகில் வந்த பஞ்சமி, “ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா ரவி, ஐயம் சாரி.”

“சாரின்னு சொல்லிட்டா ஆச்சா? எத்தனை நாழியா காத்துகிட்டிருக்கிறது?” எரிச்சலுடன் பொருமினான் ரவி.

மௌனமாக அவனை ஏறிட்டாள் பஞ்சமி. சரி, சரி முறைக்காதே, படத்துக்கு நேரமாயிடும் கிளம்பு.” உத்தரவிட்டான் ரவி.

“சாரி ரவி. இன்னைக்கு படத்துக்கு என்னால வர முடியாது.”

“ஓஹோ, என்ன விஷயம் மகாராணி?”

‘எங்க அம்மாவுக்கு இன்னைக்குப் பிறந்த நாள். கோவிவிக்குப் போய் அர்ச்சனை பண்ணனும்.”

“கோவிலுக்கா?” அதிர்ந்தான் ரவி. “ஆமாம் ரவி, வாங்களேன் பேசிக் கிட்டேப்போகலாம்.”

“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நான் இந்த மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று தெரிஞ்சுமா என்னைக் கோவிலுக்குக் கூப்பிடுறே?”

“அடேயப்பா. கோவில் என்ன நீங்க நுழையக் கூடாத பாவமான இடமா என்ன? நீங்க சுவாமி கும்பிட வேணாம். எனக்குத் துணையா வந்தா போதும்.”

“நோ பஞ்சமி, நோ! என்னால கோவிலுக்கு வர முடியாது. மூட நம்பிக்கைகள் வளருவதுக்குக் காரணமே பெண்கள்தான். அதுல நீயும் சேர்ந்துட்டியோன்னுதான் எனக்கு வருத்தமா இருக்கு என்ன படித்து என்ன, வேலை பார்த்து என்ன பயன்?

பத்தாம் பசலியா இருக்கிறாயே! அந்தக் கல்லுக்குப் போய்ப் பூசை செய்யாவிட்டால் உங்கம்மாவுக்கு ஆயுசு குறைஞ்சுடுமா என்ன? இல்லை பூசை செய்யறதினாலே ஆயுள் கூடிடுமா?”

“ஸ்டாப்பிட் நான்சென்ஸ்! இப்ப நீங்க என்ன சொல்றீங்க கடவுள் என்று ஒன்று இல்லேன்னா?” காரமாகக் கேட்டாள் பஞ்சமி.

ஓர் இனிமையான மாலையாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஓர் இறுக்கமான மாலையாக மாறிக் கொண்டிருந்தது.

உணர்ச்சிகளின் பிடியிலிருந்து இருவருமே விடுபடமுடியாமல் மேலும் மேலும் அதிலேயே அமிழ்ந்து கொண்டிருந்தனர்.

‘கடவுள் என்று ஒருவர் இல்லை. அது மூட நம்பிக்கைதான்’ அழுத்தமாக அடித்துச் சொன்னான் ரவி.

“அது மூடநம்பிக்கை இல்லை ஆரோக்கியமான நம்பிக்கை” அவளும் உறுதியாகச் சொன்னாள்.

“என்ன உளறுறே? ஆயிரம் பேர் உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாம கஷ்டப் படறப்ப ஒரு கல்லுக்குத் தேனையும், பாலையும் அபிஷேகம் செய்யறது ஆரோக்கியமான நம்பிக்கையா?”

“நானும் அதையேதான் கேட்கிறேன். மக்களின் அன்றாடப் பிரச்னைகளே தீர்க்கப் படாமல் இருக்கையில் ஒரு தனிமனிதனுக்குப் பொன்னாடைகளும் பூமாலைகளும் எடைக்கு எடை வெள்ளியும், தங்கமுமா கொடுக்கறீங்களே அது மூட நம்பிக்கையில்லையா?”

“முட்டாள்தனமா பேசாதே பஞ்சமி. நாங்க அப்படி கொடுக்கிறது ஒரு மனிதரிடமாவது சேருது நீங்க கொட்டறது வீணாக அல்லவா போகிறது?”

“மனிதன் கிட்டே போறது கருப்புப்பணமா மாறி பெட்டியிலே துhங்குது. எந்த வகையிலே மற்றவர்களுக்குப் பயன் படுது சொல்லுங்க பார்ப்போம்.”

“பஞ்சமி நீ சொல்றது எல்லாம்…”

“நம்ப மாட்டீங்க, ஏத்துக்க மாட்டீங்க’ ஏன்னா அப்படியொரு விதண்டாவாதத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கீங்க மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கீங்க. இன்னைக்கு ஏராளமான இளைஞர்களின் சீரழிவுக்கும் நாட்டில் கொலை கொள்ளை நடக்கிறதுக்கும் இந்த மனப்பான்மை தான் காரணம். மனிதனுக்கு இன்பம் வருகிற நேரத்துக்கு ஒரு பற்றுக்கோடு தேவைப்படுது நம்ப சமூக அமைப்பிலே யாரையாவது நம்பித்தான் ஆக வேண்டியிருக்கு மனிதனர்களும் யார் மீதாவது நம்பிக்கை வைத்துப் பழக்கப்பட்டு விட்டார்கள்.

அதனால்தான் கடவுள் என்கிற பேரிலே நம்பிக்கையை உருவாக்கினாங்க நாமும் நம் மனசிலே விரக்தியோ, வேதனையோ ஏற்படறப்ப கடவுள்கிட்ட புலம்பறோம். மனசு சமாதானமாகிச் சொச்ச காலத்தை தொடருவோம். ஆனால் சமீப காலங்களில் உங்களை மாதிரி ஒரு கூட்டம் சேர்ந்து கடவுள் இல்லேன்னு சொல்லிகிட்டு அலைய ஆரம்பிச்சிட்டாங்க.

மக்களுடைய ஒரே நம்பிக்கையும் ஆட்டம் கண்டு அதனால் வேதனையும், விரக்தியும் ஏற்படறப்ப ஒண்ணும் செய்யத் தோணாம வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்.’

“நீதான் புரியாம பேசறே பஞ்சமி கடவுள் தான் இல்லைன்னு சொல்றோமேத்தவிர மனிதாபிமானம் வேணாம்னு சொல்லலே. என் கடவுள் உன் கடவுள் என்கிற மத நம்பிக்கையாலேதான் இப்ப கொலைகள் நடக்குது.”

“அதைத்தான் நானும் சொல்லவரேன் நல்லவங்களுக்குக் கடவுள்கிட்டே நம்பிக்கை இருந்தது. முரடர்களுக்குப் பயம் இருந்தது. நீங்க அந்த பயத்தைப் போக்கிட்டீங்க. விளைவு யாரோ ஒரு மனிதனை சப்டியூட்டா வெச்சு தலைவன் என்கிற பேரிலே அவனுக்குப் பாதபூசையும், புகழ்மாலை பாடறதும் அவனுக்காகத் தீக்குளிக்கிறதும் சகஜமாயிடுச்சு. கடவுளைக் கல்லுன்னு சொல்ற நீங்க உங்கத் தலைவர்களை ஏன் கல்லால் கட்டி வைக்கிறீங்க மூலைக்கு மூலை?”

“நீங்க கோபப்படாம சிந்திச்சுப்பாருங்க நம்ம மாதிரி உள்ள சாதாரண மனுஷங்க கிட்டே நம்முடைய தன்மானத்தை விட்டுட்டு வாழ்க என்று கோஷம் போடறதை விட இந்த அகண்ட பெருவெளியில் எல்லாவற்றையும் இயக்குகிற, உங்க வார்த்தையில் சொன்னா அந்த இயற்கையை கடவுள் கொண்டாடறது மேலில்லையா? இது மூட நம்பிக்கையில்லேங்க உயர்ந்த வாழ்க்கைத் தத்துவம்”

“பஞ்சமி நான் உன்னோட கோவிலுக்கு வரத் தயாரா இல்லே நீ போறதையும் நான் விரும்பலே.”

‘இதப்பாருங்க ரவி கடவுள் இருக்கிறார் என்கிறது என் நம்பிக்கை; இல்லேங்கிறது உங்க நம்பிக்கை மொத்தத்திலே நம்பிக்கையை அடிப்படையா வைச்சுத்தான் இந்த உலகமே இயங்குது.

அதை நீங்க மறுக்க முடியாது. அதேபோல தெய்வ நம்பிக்கையை மூடநம்பிக்கைன்னு நீங்க சொல்வதைப் பற்றி நான் வருந்தவில்லை. எந்த மூடனும் எந்த அறிவாளியும் நம்மிடம்தானே வரப்போகிறான் என்ற நம்பிக்கை அந்தத் தெய்வத்துக்கு இருக்கே. யார் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். ஏதோ என் கடவுள் நம்பிக்கையைப் பழித்ததால் நானும் சூடாகி விவாதம் செய்ய வேண்டியதாகிவிட்டது.

என்னைப் பெற்றவளுக்கு அர்ச்சனை பண்ற இந்த சின்ன விஷயத்திலேயே நமக்குள் எப்படி பேதம் வந்து விட்டது பார்த்தீர்களா? காலம்பூரா நாம் எப்படி மனம் ஒத்து வாழப் போறோம். வேண்டாம் உங்க நம்பிக்கையை நான் தகர்க்க விரும்பலே. என் நம்பிக்கையையும் நான் விட்டுக் கொடுக்க தயாரா இல்லே. நாம் நல்ல நண்பர்களாகவே பிரிவோம். நீங்க உங்க பாதையிலும் நான் என் பாதையிலும் போவோம். அனாவசிய குறுக்கீடுகள் இருவருக்குமே வேண்டாம். அது தான் நிம்மதியான ஆரோக்கியமான வாழ்க்கை. நான் வரேன், குட்பை!”

அவள் நடந்தான் அவள் சொன்ன தெய்வ நம்பிக்கைப் பற்றிய கடைசி வரிகள் அவனுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது புரியாமல் நடந்தாள்.

அவன் இப்போது அவளைத் தொடர்ந்தான். பஞ்சமியின் ஆன்ம பலம் அவனை எப்படியெல்hம் மாற்றிவிட்டது என்பதை எண்ணியெண்ணி ஊரும் உறவும் பெருமிதப்பட்டன.

– கலைமகள்

Print Friendly, PDF & Email

1 thought on “குறுக்கீடுகள்

  1. அருமையான கதை. கடவுள் மீது இர்க்க வேண்டிய பக்தியைத் தனி மனிதனுக்கு மடைமாற்றி விட்டார்கள் நாத்திக அரசியல்வாதிகள். இளிச்சவாய் மக்கள் ஏமாந்து போனார்கள். இனிமேலாவது நாத்திகக் கட்சிகளை விட்டு விலகி மக்கள் இறைவனை நாடவேண்டும். அதற்குக் கடவுள்தான் கண் திறக்க வேண்டும். ஓம் சக்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *