(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஆக்…. ஹாய்… ஹாய் – ஆக் ஹாய்”
கொழுத்து ஜதை பிடித்திருந்த காளைகளின் முதுகில் கை களை வைத்து முனியன் உல்லாசமாக அதட்டினான். காளை களும் வால்களை சுழற்றியடித்துக் கொண்டு-ஓட ஆரம்பித்தன. அந்த ஒட்டத்திற்கேற்ற பிசகாத தாளமாய் கழுத்து மணிகள் ‘ஜல்ஜல்…ஜல்ஜல்’ ஒசை ரம்மியமாக ஒலித்தது.
வில் வண்டிக்கூட்டின் அசைவுகளால் பாதிக்கப்படாதவர் போல… எங்கோ சிந்தனை சுற்றித் திரிய அமர்ந்திருந்தார் ‘வடக்குப்பண்ணை’ வடிவேலு நாடார். தூய வெண்ணிறச் சட்டைக்கு மேல், சிவபெருமானின் நாகமாக சுருண்டு கிடந்த விசிறிமடிப்புத் துணியின் முனையை கையிலெடுத்து வீசிக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரமாக தொடர்ந்து சுமையாக அழுத்தும் மௌ னத்தை சகிக்க மாட்டாதவன் போல், முனியன் மீண்டும் ஒரு முறை காளைகளை அதட்டி சுதாரிப்பு காட்டிவிட்டு, எஜமான் சாமியுடன் வாய் கொடுக்க ஆரம்பித்தான்.
‘என்ன எஜமான்… போன காரியம் ஜெயந்தானே?’ என்று விசாரித்தவாறே கழுத்தைத் திரும்பியவன், வாயில் ஊறிய மட்ரக பொடி கலந்த எச்சிலைத் துப்பிக்கொண்டான். இடத்தை மாட்டின் மீது விழுந்த எச்சில் துளியை மரியாதையுடன் துடைத்துக் கொண்டான்.
பதில் வராததால் கூண்டுக்குள் திரும்பியவாறே பொய் யான பெருமையில் சொன்னான் ‘எஜமா அவுக… போய் முடியாத காரியமா!
‘கம்பெர்ஸென் வர்ரததுக்கு சம்மதிச்சாங்க. ரேட்லேதான் கொஞ்சம் ட்ரபிள் இருந்துச்சு. ‘அதையும்கூட ஒரு மாதிரியா ‘பைசல்’ பண்ணியாச்சு”
‘அதென்ன மகா பொல்லா ரேட்டு! இப்ப எவன் கம்பெர் ஸென் வைச்சு கிணறு வெட்றான்? சீந்த நாதியில்லாத ‘சீப்பட்ட கழுதைக்கு, செருக்கென்ன வேண்டிக்கெடக்கு?’
‘அதெல்லாம் அவனுக்கும் தெரியும். ஆனாலும் ‘கொக்கி’ பண்ணிக்கிடுறதுதானே அவங்க கொணமே.’
‘அதுதானே! நாட்லே மழை தண்ணி யில்லாமெ போனாலும் போச்சு… இவங்கபாடு கொண்டாட்டந்தான். அவனவன் கைத்துட்டையெல்லாம் கெணத்துலே கொட்டிட்டு வெறுங் கிணத்தை கவுந்து கவுந்து பார்த்துக்கிட்டிருக்கிறான். இவங்க என்னமோ…பெரிய… ‘இவங்க’ மாதித்தான்.” அவனது அங்காலாய்ப்பில் இயல்பான ஆத்திரம் இல்லை.
முனியன்…அவனுக்கே உரிய பாணியில் இடையிடையே எச்சிலைத் துப்பிக்கொண்டே பேசிக் கொண்டே போனான். ஆனால் வடிவேலு வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டார்.
இரண்டு வருஷமாக வானம் கருமைத் திரைபடியாமல் கருணை காட்ட மறுத்துவிட்டது. மழையேயில்லை. ஏழை விவ சாயிகள் தமது எஞ்சிய’ குருதியை வாழ்க்கைப் போர்களத்தில் கொட்டித் தீர்க்க வேண்டியதாயிற்று.
கடன் உடன் வாங்கி…நகை நட்டுகளை விற்றும், அடகு போட்டும், எல்லாப் பணத்தையும் நீராக இறைத்து கிணறு வெட்டினர். கிணற்றோரத்தில் மலையாக பாறைகளும், கருங் கல்லும் குவிந்ததுதான் மிச்சம். தண்ணீர் முகம் காணமுடிய வில்லை. விவசாயம் நஷ்டத்தின் விளை நிலமாக-நரகத்தின் தலைவாசலாக மாறிவிட்டது. எல்லாரும் ஒய்ந்துபோன நேரத் தில்தான் வடிவேலுக்கு, நகரிலிருந்து வந்திருந்த ஒரு நில வள வங்கி அதிகாரி இந்த ‘கம்பர்ஸென்’ யோசனையைச் சொன்னார்.
இந்த ராட்சஸ இயந்திரத்தைப் பயன்படுத்தினால் வெகு வேகமாகவும், குறைந்த செலவிலும் கிணறை பிரம்மாண்டமாக ஆழப்படுத்தி நீர் வளத்தைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக் கையை விதைத்தார்.
அந்த ‘விதைப்பு’… வளமாக அறுவடையாகி… இதோ
கம்பர்ஸென் வரப்போகிறது. ஊரையே வியப்பிலும் பயத் திலும் வாயைப்பிளக்க வைக்கப் போகிறது.
ஏழை பத்தியதர விவசாயிகள் முண்டிமுண்டி நொறுங்கிப் போன இந்த அக்கினி வறட்சியிலும்…இவர் புஞ்சைதான் ‘பச பச’வென்றிருக்கிறது.
‘எதை எதையோ’ மேய்ந்து திரிந்த அவரது சிந்தனை… அவரை உள்ளூர புளகிக்க வைத்து விட்டது போலும்! கனத்து வெளுத்த மீசைக்கடியிலுள்ள கருமைப் படிந்த உதடுகளில் புன் னகை மின்னல்கள் நெளிந்தோடுகின்றன.
பணமிருந்தால் போதும் – விஞ்ஞானமென்ன…… உலகத்தையே வாலாட்ட வைக்க முடியுமே’ என அலட்சியமாக நினை த்து உள்ளுக்குள் வியந்து கொண்ட வடிவேலு சமீபித்து வரும் பிரச்சனைகள் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.
‘கம்பர்’ஸன் டிரைவர்… அவர் ஜாதி… அவரை நடத்த வேண்டிய முறை… “கடன் கடன்” என்று சுற்றித் திரியும் ஜனங்கள்…அவங்க நிலம் என்ன பெறும்…? என்ன வெலைக்கு ‘வளைச்சுப்’ போடலாம்…’
எண்ணம் வில்வண்டியின் தடம்போல் முடிவின்றி தொடர்ந் தது. இலேசாக வீசிய காற்று அவர் முகத்தில் மோதி விலகி யது. அதனால் சலனமுற்று கண்களை விரித்தார். ‘சே’ என்று வெறுப்புடன் கூறிக் கொண்டார்… இந்தச் சலனத்தினால் சலன முற்று முனியன் திரும்பினான்.
‘என்ன எசமா…”
‘அடிக்கிற காத்துகூட அனலா அடிக்குதே’
‘என்ன செய்றது எசமா,..ரெண்டு வருஷமா பூமியிலே சொட்டுத் தண்ணிவுழலே… வெக்கரிச்சுப்போய்க் கெடக்குது. ஒரு நொண்டி மேகம் மழையைப் பொழிஞ்சாக் கூட போதும்.. கொஞ்சமாச்சும் குளுந்த காத்து வூசும்…’
வடிவேலு வெறுப்புடன் முகத்தைச் சுளித்தார். கண்களை இடுக்கிக் கொண்டு பேசினார்.
‘மழை எப்படி பெய்யும்? ஏண்டா…தர்ம ஞாயம் செத்துப் போன நாட்லே எப்படி பேயும்ங்கிறேன்; எவனாவது பெரிய மனுஷனை மதிக்கிறானா? முளைச்சு முணு எலை விடறதுக் குள்ளே கட்சிங்கிறான்.. தத்துவங்கிறான் … சங்கம்கிறான் …காலங் காலமா பெரியவங்க காத்துவச்ச ஜாதிக் கட்டுப்பாட்டையெல் லாம் ‘ப்பூ’ன்னு ஒதறித் தள்றான். இவங்கல்லாம் உருப்படு வானுங்களா? இவங்க இருக்கிற வரைக்கும் மழைதான் எட்டிப் பார்க்குமா?’ சீற்றத்தில் அவரது குரல் கிழட்டு நாயின் உயிரற்ற உறுமலாக கரகரத்து மெலிந்தது.
”நெஜந்தா எசமான் நீங்க சொல்றதுதான் நூத்துலே ஒரு வார்த்தை, நேத்துக்கூட பாருங்க நா சாமி கும்பிட்டுட்டு ‘துருநூரை” எம் பயலுகிட்டே குடுத்தேன். ‘போயா சாமியா வது பூதமாவது….’ன்னு ஒதறித் தள்ளிட்டான். காலம் முத்திப் போச்சு எசமா…”
சோர்வுடன் ஆமோதித்தான். தலையை உலுக்கினான். சொன்ன பொய்க்காகவும் போடும் வேஷத்திற்காகவும் அவனது உள் மனம் சபித்துக் கொண்டிருந்தது. மனச்சாட்சி யின் திரைகளாக நாவின் சுழற்சியிருந்தது.
காளைகள் ஜல்ஜல்’ ஓசையை நாதத்துடன் வரிசை தப்பாமல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தன. காளைகளின் வாயில் சோப்பு நுரை போன்ற எச்சில் வடிந்து கொண்டிருந்தது.
ஊர் சமீபித்துவிட்டது.
ஊருக்குள் வண்டி நுழைந்தவுடன் காளைகளை ‘துடி’யாய் பத்தினான், முனியன். மணியோசையின் சலசலப்பு. வேகத் தின் அதிகரிப்பை பறையறிவித்தது. ‘நிகருண்டா எனக்கு’ என ஊரையே வினவுவது போலிருந்தது.
முனியனின் இந்த கர்வமிக்க உல்லாசத்தை ஆட்சேபிப்பது போல காளைகள், எரிச்சலுடன் தலையை உலுக்கின. சாட்டை யாக வால்கள் மேலும் கீழுமாய் சுழன்றன.
வீட்டின் முன்பு வண்டி நின்றது. இறங்கி, வண்டியின் பின்புறம் ஓடிவந்து குறுக்குக் கம்பியை எடுத்துவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்றான் முனியன்.
கால்களில் செருப்பை மாட்டிக் கொண்டு மெதுவாக இறங் கிய வடிவேலு…தனது வீட்டிற்கு எதிர்ப்பில் இருந்த வீட்டடி நிலத்தைப் பார்த்தார். அவர் மனதில் இனம் புரியாத ஏக்கம் சூழ்ந்து மனமே வெறுவையுற்றுவிட்டது போலிருந்தது.
முகத்தில் படிந்த இருளை விசிறி படிப்பால் துடைத்துக் கொண்டு வீட்டுப்படி ஏறினார். நட்சத்திரக் கூட்டத்திடையே பிரமாண்ட தோற்றத்துடன் நகன்றுவரும் வட்ட நிலாவைப் போல…அந்தக் கிராமத்து குடிசைகளுக்கு மத்தியில்…வடிவேலுவின் மஞ்சள் நிற வீடு, கம்பீரமாக நிமிர்ந்து, கடலாக விரிந்திருந்தது.
வீட்டுக்குள் நுழைந்து ஈஸிசேரில் அமர்ந்தவுடன், இளைய மகள் எல்லம்மா கொண்டு வந்து தந்த ‘நீச்சுத் தண்ணீ’யை ஆர்வத்துடன் பருகினார். புளிப்பான மணத்துடன் உள்ளிறங்கிய அந்த நீர், உடலுக்கும், மனதுக்கும் புதிய தெம் பையே தருவது போலிருந்தது.
அவர்… எதிர்வரிசையில் கிடக்கும் வீட்டடி நிலத்தை மீண்டும் ஆவலுடன் நோக்கினார். நெஞ்சினுள் ஒரு தாகம்! தண்ணீரால் தணிக்கமுடியாத ஒரு பைசாச தாகம்!
சமுத்திரமாய் விரிந்து கிடக்கும் அந்த நிலத்தை வடிவேலு எத்தனை நாட்களாய்ப் பரர்த்திருக்கிறார்?. எத்தனை மாதங்களாய் முயற்சித்திருக்கிறார்? எத்தனை வருஷங்களாய், அதை வாங்கி வசப்படுத்தி விடும் லட்சியத்தை மனதுள் வளர்த்து வந்துள்ளார்?… அடேயப்பா!…
நாலாவது பெண்பிள்ளை எல்லம்மாவுக்கு பிறகு ஐந்தாவது குழந்தை – நான்காவது ஆண் குழந்தை – பிறந்த சில நாட் களிலேயே, இந்த லட்சியம் சூல் கொள்ள ஆரம்பித்து விட்டதே!
இருக்கிற வீடு பெரிய வீடுதான்… இப்போதைக்கு போது மானதுதான். ஆனால் நான்கு மகன்களும் வளர்ந்து, கிளை பிரியும் காலத்தில் ஆளுக்கொரு குடும்பமாக வாழ…நாலு வீடு கள் வேண்டுமே! அதுவும் வடக்குப் பண்ணை வடிவேலு’வின் அந்தஸ்துக்கேற்ற நான்கு வீடுகள் வேண்டுமே! அதற்கு பொருத்தமான – விரிவான – நிலம் தேவையே!
வருடாவருடம் நஞ்சையும் புஞ்சையும் வாங்கத்தான் செய் கிறார், ஆனால் அதைவிட இது, முக்கியமல்லவா? காசை வீசி யெறிந்தால் அவருக்கு கிடைக்காத வீட்டடி நிலமாக ஆனால் அவரது குறி, இந்த எதிர் வீட்டடி நிலத்தின்மேல் விழுந்திருப் பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது, வடிவேலு வின் பாட்டனாருக்குப் பாட்டனாரின் வீடாம், அது! ஏதோ ஒரு பஞ்சத்தில் நாலு மரக்கால் குதிரை வாலி தான்யத்துக்காக, அந்தக் காலத்தில் கைமாறிப் போன பூர்வீக ஆஸ்தியாம் அந்தப் பூர்வீகப் பாசமும், வடிவேலுவின் நெஞ்சில் ஏதோ ஒரு பசையாக ஒட்டிக்கொண்டிருந்தது.
இப்போது, ‘அந்த வீட்டடி நிலம்’ பொன்னையா கையிலி ருக்கிறது. அவரோ மத்தியதர விவசாயி. ஒரு சொந்த பம்செட் கிணறு, அதைச் சுற்றி ஐந்து ஏக்கர் நாற்பது சென்ட் புஞ்சை யும் வேறு இரண்டு பம்ப்செட் கிணறுகளில் பாதி பாதி பங்கும், அதற்கான ஆறு ஏக்கர் நிலமும் உள்ள பசையான புள்ளி.
மண்ணோடு வாழ்க்கையை பிணைத்தே ஜீவிக்கும் கிராம மனிதர்கள், ஒரு நிலத்தை துண்டு நிலமாயிருந்தாலும் சரி – அதை விலை சொல்லி விற்பது விபச்சாரத்தைவிட மிக கேவல மாக- அபச்சாரமாக நினைப்பார்கள். அது வீழ்ச்சியைக் குறிக்கும் அவக்கேடு எனக் கருதுபவர்கள். சாதாரண ஏழை விவசாயிகூட நிலத்தை இழப்பதென்றால்…மனதறிந்து மனைவியை அடகு வைப்பதுபோல் அவமானப்படுவான் அப்படியிருக்க … பசையுள்ள பொன்னையாவிடம் நிலத்தை வாங்குவது லேசான காரியமா? வறட்சிக் காலத்தில் மூன்று போக விளைச்சல் எடுப்பது போலல்லவா! சாத்தியமாகக் கூடிய விஷயமா, என்ன !
நம்பிக்கை வறட்சியினால் மனம் குமைந்து தவித்தார் வடிவேலு. என்னென்னவோ பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்து பார்த்தும். தோல்விச்சேற்றிலியே வழுக்கி வழுக்கி விழுந்தார்.
தன்னுடைய கையாட்களை கிளப்பிவிட்டு… சில சமயம் பொன்னையாவின் வைக்கோற் படப்பில் தீயை வைத்து சாம்ப லாக்குவார், இன்னும் சில நேரத்தில் காய்த்து குலுங்கும் மிளகாய்த் தோட்டத்திற்குள் புகுந்து… செடிகளை வேருடன் பிடுங்கி பிடுங்கிப் போட, ‘கள்ளு’ பக்தர்களை அனுப்பி வைப்பார்.
பொன்னையாவிடம் நன்றாகப் பழகி, அவர்களது விரோதி களைப் பற்றி ‘கன்னாபின்னா’வென்று பேசி கலகத்தை மூட்டி விடுவார். போலீஸ் கேசாக்குவார். விரோதிகள் போர்வையில் அழிவுப் படலத்தை நடத்துவார்.
இந்த சதிப்பணிகளை எப்படியோ அறிந்துகொண்ட பொன்னையா ஒருநாள் வீடேறி வந்து — நாக்கில் வராத அசிங் கத்தினால் திட்டிவிட்டு “ச்சீ…நீயும் மனுஷந்தானா? ஒருத்தனுக் குப் பொறிந்தீயா…இல்லே சாதி கெட்டு தப்பிப் பொறந்தியா? சே!” என்று காறி, எச்சிலாக வார்த்தைகளைத் துப்பிவிட்டுப் போய்விட்டார். அத்தோடு அந்த இரண்டு குடும்பத்துக்கும் ஆகாமல் போய்விட்டது.
கடந்து சென்ற ஆறு ஆண்டுகள், பகை உஷ்ணத் தையும், கொஞ்சங் கொஞ்சமாகக் கரைத்துக்கொண்டு சென்று விட்டன. மறுபடியும் நம்பிக்கை ஜீவன் பெற்று, துளிர்விட்டு வளர ஆரம்பித்துவிட்டது.
“அப்பா…சாப்ட வருவீகளாம்…” எல்லம்மாவின் குரல் வேலுவடிவின் உள் மனச் சலனத்தை ஸ்தம்பிக்க வைத்தது. நிமிர்ந்து மகளைப் பார்த்தார். அவர் முகத்தில் படிந்திருந்த விசன ரேகைகள்…எங்கோ ஓடிப் பதுங்கிக் கொண்டன. எழுந்து சட்டையைக் சுழற்றி… கால் கையை கழுவிவிட்டு சாப் பிடும் அறைக்குப் போனார். மகன்கள் சாப்பிட்டுப் போய் விட்டிருந்தனர். மனைவி தான் எதிர் கொண்டழைத்தான்.
“என்ன போன காரியம் என்ன ஆச்சு?”
“எல்லாம் முடிஞ்சது. நாளைக் கழிச்சு வேலைக்கு வர்றாங்க” எல்லம்மா உணவைப் பரிமாறினாள். சோற்றில் பருப்புக் குழம்பைவிட்டு நெய்யை வார்த்த எல்லம்மா…
“அப்பா….பெ ன்னையா மாமா உங்களைத் தேடி வந்துட்டுப் போனாரு…” என்று தகவல் கூறினாள்.
“பொன்னையாவா? என்னவாம்?”
ஆனந்த அதிர்ச்சி அவர் குரலில் துல்லியமாக ஒலித்தது. ‘“என்னமோ…அம்மாகிட்டேதா ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந் துட்டு போனாரு…”
“என்ன பாருவதி… என்னவாம்?” மனைவியிடம் அவசரமாகக் கேட்டார். நிதானம் தவறிய ஒரு இனம் விளங்காத பரபரப்பு, அவரது நெஞ்சை அலைக்கழித்தது. வலையில் ஒரு வகையான பிராணி சிக்கப் போகிறது என்றால் வேட்டைக் காரன் உள்ளம் துள்ளத்தானே செய்யும்?
“வேறொன்னுமில்லே…” என்ற முன்னுரையுடன் ஆரம் பித்த பார்வதி… மெல்ல விஷயத்தை கூற ஆரம்பித்தான்.
போன நாலு வருஷமா மாறி மாறி சடங்கு, கல்யாணம் எழவுன்னு வந்து கையிருப்புக் காசெல்லாம் கரைஞ்சிடுச்சாம் அவருக்கு. இந்த ரெண்டு வருஷமா அவருக்கு மழையில் லியா? அவர் கெணறும் உச்சிமேட்லே இருக்கா ?”
”ஆமா…”அவர் தலை ஆர்வத்துடன் ஆடியது. முகத்தில் ஒரு குரூர ஒளி !
“தண்ணியில்லே. எங்கெங்கு முடியுமோ அங்கெயெல் லாம் கடன் உடனை வாங்கி கெணத்தை வெட்டியிருக்கிறாரு. இதுலே பங்குக் கிணறுக வேறே. இது போக… பம்ப்ஷெட் வேறே ஒரு ஏதோ தீ பிடிச்சிருச்சாம். கடன் வாங்க வேறெ வழியில்லே…”
பொறுமையிழந்துவிட்ட வடிவேலுக்கு கோபம் ‘சுள்’ ளென்று வந்துவிட்டது. “ஓம்புத்திபடியே பேசாதே…கழுதை! விஷயம் என்னன்னு சுருக்கா சொல்லேன்…? மூதி”
“சொல்லிக்கிட்டுத் தான் வாறேன்லே? அதுக்குள்ளே என்னவாம்?” என்று பதற்றப்படாமல் சீறிய பார்வதி, தொடர்ந்தாள் ;
“உங்ககிட்டே கேக்கவரணும்னு மனசுக்குள்ளே ஆசையாம். பெறகும்… ‘அப்போ நாக்குலே நரம்புல்லாமே பேசிட் டுப் போனோமே, இப்ப எந்த மூஞ்சியோட போய் கடன் கேக் கிறது’ன்னு மனவாதனையாம்! அதனாலே ஏங்கிட்டு சொல் லிட்டுப் போயிருக்காரு..’
‘என்ன சொல்லியிருக்காரு?’
நாலாயிர ரூபா தரணுமாம்.அடுத்த வருஷ வெள்ளா மையிலே அட்டியில்லாமெ வட்டியோட தந்துடுவாரம்.
‘என்னமாய் வாழ்ந்த மனுஷன், ரெண்டு வருஷ வறட்சி இவரோட இடுப்பையே ஒடிச்சிடுச்சே…! இவர் பாடே இப்பு டின்னா… பாவம். ஒழைச்சுக்கஞ்சி குடிக்கிறாங்களே… அவங்க எல்லாம்…ச்சூச்சூச்சூம்… சவப் பொழைப்புதான்…’
சம்பந்தமில்லாமல் கருணை வடிக்கும் அவரது பேச்சு பார் வதிக்கும் சந்தேகத்தை கிளப்பிவிட்டது. இரக்கப்படுகிறாரா, ஏளனப்படுத்துகிறாரா, சந்தோஷப்படறாரா,… இந்த குள்ளநரி மனசை புரிஞ்சுக்க முடியலியே…
நாற்பது வருஷங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் இணைந்து பிணைந்து பழகி பரிச்சயமான பார்வதிக்கே… இப்படி மர்மமாக இருந்தது.
திடுமென கூறினார்: ‘இங்கே ஒன்னும் வட்டிக்குப் பணம் கெடையாதுன்னு ‘கட்டன்ரைட்டாக சொல்லிப்போடு. அவர் குரலில் கண்டிப்பும், நிர்த்தாட்சண்பமும் நிர்வாணமாக ஒலித்தன. ஏதோ நினைத்துக் கொண்டவராக ‘நாளைக்கே சொல்லிப்போடு ஆமாமம்…’ என்று உத்தரவு போட்டார். அவர் சொல்லும் போதே… அவர் மனத்துக்குள் புதிய திட்டம் ஒன்றுக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்வதி பூடகமாக புரிந்து கொண்டாள்…
இரண்டு நாட்கள் சுறுசுறுப்பாக ஒடின. வடிவேலு வேக மாக நுண்ணியமாக இயங்கினார். அவரது மூளை சாணக்கியத் தனமான சாமர்த்தியத்துடன் சிந்தித்தது.
முனியனைவிட்டு ரெங்கசாமி கூட்டிவரச் சொன்னார்.ரெங்க சாமி… ஊரிலேயே பொதுவான ஆசாமி போல தோன்றுவா ர் ஆனால் சரியான நரி. லாபம் வரும் திக்கைப் புரிந்து கொண்டு ஏதாவது ஒரு கோஷ்டியில் ரகசியமாக இணைந்து கொள்வார். இணைவும் லாபமும் ரகசியம். பொதுவாள்’ என்ற பெயர் மட்டும் பரசியம் இப்படியோர் ‘கேரக்டர்’ அவர். வாழ்க் கைபின் நடப்பைப் புரிந்து அதற்கேற்ப தண்னை தயாரித்துக் கொண்ட சாமர்த்தியசாலி.
ஈஸீச்சேரில் சாய்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த வடிவேலு, ரெங்கசாமியின் தலையைப் பார்த்ததும்.,. ‘வாரும் வாருமாய்யா… என்ன ஆளைப்பாக்குறது… காத்திகைப் பிறை யைப் போலப் போச்சுது’ என்று வெகுபலமாக வரவேற்றார். முகமெல்லாம் ஆனந்த ஜொலிப்பு!
‘எதற்காக வரச்சொன்னாரோ ..’என்ற காரணமற்ற மர்ம மான பயம் மனதை வதைத்தாலும், வெளிப்பார்வைக்கு சர்வ சாதாரணமாக சிரித்துக் கொண்ட ரெங்கசாமி பவ்யமாக சொன்னார்!
‘அதெல்லாமில்லே மாமா. நீங்கதான் பெரிய பார்ட்டி. உங்களை பாக்குறதுதான் குருதெக் கொம்பாயுருக்கு’
‘சரியான ஆளய்யா… நீர், ஒம்மோட பேசிக் ஜெயிக்க முடி யுமா? என்று கள்ளத்தனமாக சிரித்துக்கொண்டே சரணாகதி. அடைத்தார் வடிவேலு.
எல்லம்மாவைக் கூட்பிட்டு காப்பி போடச் சொன்னார்.வர வேற்பு, உபச்சாரம் எல்லாம் பலமாயிருந்தது. அது ரெங்க சாமிக்கு பயத்தை ஏனோ வளர்த்தது.
பேச்சு, குருட்டு ஈயைப்போல எங்கெங்கோ அர்த்தமின்றி சுற்றித்திரிந்த பிறகு… மெல்ல விஷயத்துக்கு வந்துநின்றது.
‘ஒம்மை எதுக்குவரச் சொன்னேன்ன? என்று ஆரம்பித் தார். வடிவேலு ஜாக்கிறதை உணர்ச்சியுடன் தலையை அசைத் தார் ரெங்கசாமி.
‘….எனக்கு வயசாகிக்கிட்டுப் போகுது, நம்ம பயகளுக்கு ஒரு வழியெ அதுக்குள்ள ஏற்படுத்திட்டுப் போயிடனும்னு நெனைக்கிறேன். நம்ம ஓலை எப்போ கிழியும்னு,நமக்குத் தெரி யுமா, என்ன? அதுதான்… நாலு பயகளுக்கும் போதுங்கிற மாதிரி இன்னும் ரெண்டு வீடெ கட்டிப் போடலாம்னு ஆசை…. என்ன சொல்றீர்?’
‘பேஷா…கண்டிப்பா செய்யனும்….’
‘ஆமாமம். அதுதான் ….ஒம் பார்வையிலே ஏதாச்சும் வீட் டடி நிலம் இருந்தா சொல்லும்…. வாங்கிப்போடுவோம்… ஒமக் குரிய கமிஷனை தாராளமாகவே தாரேன்…. என்ன சொல்றீரு?’
வடிவேலு நிறுத்தவும், ரெங்கசாமி ‘கபகபா’வென சிரித்தார். சிரிப்பிற்கிடையே வார்த்தைகளைர் சிதறினார்.
‘தோளுலே போட்டுகிட்டு காடெல்லாம் குட்டியைத் தேடுனானாம் இடையன் அது மாதிரியில்லே இருக்கு ஒங்க கதை! எதுத்தாப்புலே கெடக்குது வீட்டடி நிலம்….நீங்க எங்கேயோ தேடச் சொல்றீகளே’
‘அது எனக்கு தெரியுதையா? பொன்னையா வுடமாட்டாரே. ‘அதெல்லாம் பழைய கதை. இப்ப அவருபாவம். ஆடிக் காத்து துரும்பாதிரியுறாரு. இந்த வறட்சித்தீயிலே…ஜீவனத்துப் போய்க்கெடக்காரு…
‘அப்ப….சரிதான்….முடிஞ்சா நைசாக் கேட்டுப்பாருமே’
‘முடிஞ்சா கேக்குறதென்ன, கேக்குறது? முடிச்சே காட்டுறேன் போதுமா….?’
ரெங்கசாமி அடித்துப் பேசினார்.வடிவேலு, தயங்கியவாறே அனுமதித்தார். முடிந்தால் சரிதான்’ என்னும் பெருமூச்சும் விட்டுக் கொண்டார். ரெங்கசாமி லாபம் கிடைக்கிற மகிழ்ச்சி யின் மிதப்பில் வெளியேறினார்.
வடிவேலுவின் உதடுகளில் தந்திரப்புன்னகை அரும்பி மலர்ந்தது. கோழிக்குஞ்சை தின்று முடித்த பருந்தின் கண்ணைப்போல அவரது கண்கள், குரூர நிறைவில் ஜொலித்தன.
இருக்காதா பின்னே! நீண்டகால வெறியைத் தணிக்க வறட்சியே ஆயுதமாக பயன்படுகிறது.
– மேலாண்மை பொன்னுச்சாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.
– மானுடம் வெல்லும் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1981, கரிகாலன் பதிப்பகம், மேலாண்மறைநாடு, இரமநாதபுரம் மாவட்டம்.