கான்ஃபரன்ஸ் அறையில் இருந்து என் மேஜைக்குத் திரும்பி சார்ஜில் போட்டிருந்த போனை எடுத்துப் பார்த்தபோது, ‘தவறிய அழைப்புகள் மூன்று’ என அறிவிப்பு இருந்தது. மூன்றுமே குரு மாமாதான்… இரண்டு நிமிட இடைவெளிகளில். காத்திருக்காமல் உடனே உடனே அழைக்கிறார் என்றால், அத்தைக்கு வேறு போன வருடம் இதய ஆபரேஷன் நடந்ததே… நான் பதைபதைப்புடன் அழைத்தேன்.
”மாமா… சுதாகர்… என்ன மாமா?”
”ஞாயிற்றுக்கிழமை சென்னை வர்றேன். ஒருத்தரைப் பார்க்கணும். நீ ஊர்ல இருக்கேதானே…”
”இருக்கேன் மாமா. எதுல வர்றீங்க?”
”ராக்ஃபோர்ட்ல போட்ருக்கேன் சுதா. வெயிட்டிங் லிஸ்ட் ஆறு. கன்ஃபர்ம் ஆயிடும். அன்னிக்கு நைட்டே ரிட்டர்ன் டிக்கெட் போட்டுட்டேன்.”
”ஏன் மாமா? எப்பவோ வர்றீங்க… ரெண்டு நாள் தங்கிட்டுப் போலாம் இல்ல…”
”இல்லப்பா… வேலை இருக்கு…
நீ ஸ்டேஷனுக்கு வர வேணாம். ப்ரீபெய்டு ஆட்டோல வந்துடுவேன். ஆனந்திகிட்ட சொல்லு. விசேஷமா எதுவும் சமைக்க வேணாம். ஜீரணமாக மாட்டேங்குது. காலையில இட்லியும், மதியத்துக்கு ரசமும் இருந்தால் போதும். வெச்சுடுறேன். உன் வேலை கெட்டுடும்.”
குரு மாமா போனை வைத்ததும் அவரைப் பற்றிய நினைவுகள் சூழ்ந்துகொண்டு வேலையைக் கெடுக்கத்தான் செய்தன.
குரு மாமா, என் அம்மாவின் தம்பி. திருச்சியில் பாதி ஜனத்தொகைக்கு அவரைத் தெரியும். கால்பந்தாட்ட மைதானத்தில் விசில் அடிப்பார். இசைக் கச்சேரிகளில் முன் வரிசையில் அமர்ந்து ‘ஆகா!’ என்பார். பட்டிமன்றம் என்றால் 103 டிகிரி ஜுரமாக இருந்தாலும் கம்பளி சுற்றிக்கொண்டு போய்விடுவார். கல்யாண வீட்டில் ஒரு அயிட்டம் சுவையாக இருந்தால் சமையல்காரரின் கைபிடித்துப் பாராட்டி ரெசிப்பி எழுதிக்கொள்வார். பிரதமரின் பேச்சில் இவருக்கு கருத்து வேறுபாடு இருந்தால், உடன் டைப்ரைட்டரில் அமர்ந்து ‘ஜிஷீ… ஜிலீமீ பிஷீஸீஷீuக்ஷீணீதீறீமீ றிக்ஷீவீனீமீ விவீஸீவீstமீக்ஷீ…’ எனக் கடிதம் டைப்செய்வார். தேரோட்டம் என்றால் வீட்டு வாசலில் சொந்தச் செலவில் நிழல் பந்தல் அமைத்து மோர் கொடுப்பார். பல தொழில்கள் செய்தார். எதுவும் உருப்படவில்லை. ஒன்று, எல்லோரையும் அளவுக்கு அதிகமாக நம்பி மோசம்போவார். இல்லை, தனக்குத் தெரியாத தொழில்களைத் தொடங்கி மாட்டிக்கொள்வார். ஒரு பெண் – ஒரு பையன். பெண் திருமணமாகி கூர்கானில் குடித்தனம். தினம் இரண்டு முறை அம்மாவுக்கு போன்செய்து, ‘இங்க வேலைக்காரியே கிடைக்க மாட்டேங்குறாம்மா… நீயும் அப்பாவும் இங்கயே வந்துருங்க’ என்கிறாள். ‘பையன் எந்த நாட்டில் வேலைபார்க்கிறான்?’ எனக் கேட்டால் அவருக்கே மறந்துவிடும். செல்போனில் தகவல் தேடி உச்சரிக்க சிரமப்பட்டு, நாட்டின் பெயர் சொல்வார். கேட்டதுமே நட்சத்திர ஹோட்டல் மெனுபோல உடனே புரியாது. அது எந்தக் கண்டத்தில் இருக்கிறது, எந்த நாட்டில் இருந்து பிரிந்தது, எத்தனை ஃப்ளைட் மாறிப் போக வேண்டும் எனச் சொல்வார். அந்த அன்பு மகன் மின்னஞ்சலிலும் வாட்ஸ்அப்பிலும் நேரா நேரத்துக்கு மாத்திரை சாப்பிடச் சொல்கிறான்.
குரு மாமா என்றால், சில உறவினர்களுக்கு இஷ்டம்; சில உறவினர்களுக்குக் கஷ்டம். எல்லோரின் குடும்ப விஷயங்களிலும் அதீத உரிமையுடன் மூக்கை மட்டும் அல்ல… மொத்த முகத்தையும் நுழைப்பார்.
‘மாதவா… வீட்டை ஏன்டா இப்படி பேய் பங்களா மாதிரி வெச்சிருக்கே? மெயின் இடம். பில்டரைக் கூப்பிட்டு ஜே.வி போட்டு ஃப்ளாட்ஸ் கட்டினேனு வெய்யி… வீடும் கிடைக்கும்; ஹார்லிக்ஸ் அட்டைப் பொட்டி நிறைய பணமும் கிடைக்கும். நீ ‘சரி’னு சொல்லு. நானே மெனக்கெடுறேன்.’
இவர் சொல்லிவிட்டுப் போய்விடுவார். அடுத்த ஆறாவது மாதம் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் கோர்ட்டில் நிற்பார்கள்.
‘திருவாரூர்ல வளைகாப்புக்குப் போன இடத்துல ஒரு பொண்ணைப் பார்த்தேன் கோபாலா. உன் பையன் விஷ்ணுதான் ஞாபகத்துக்கு வந்தான். ஜாதகம் வாங்கிட்டேன். பொருத்தமும் பார்த்துட்டேன். ஒம்போது பொருத்தம்! என்ன பேசலாமா?’
‘கரியர்தான் முக்கியம்; இரண்டு வருடங்கள் கழித்துத்தான் திருமணம்’ என்ற விஷ்ணுவின் கொள்கையைப் பேசிப் பேசி கற்பூரமாகக் கரைத்துவிடுவார். போன வாரம் விஷ்ணு பெங்களூரில் இருந்து போன் செய்தான், ‘சுதா… குரு மாமாவைப் பார்த்தா, ‘பெங்களூர் பக்கம் வந்துட வேணாம்’னு சொல்லு. கண்டிப்பா சட்டையைப் பிடிப்பேன். பொண்ணாடா அது? அழகான ராட்சசியை வைரமுத்து வரியிலதான்டா ரசிக்க முடியும்; கூட வாழ முடியாது’ என்றான்.
ஆனால், எனக்கு குரு மாமாவைப் பிடிக்கும். பிரம்மாவின் வித்தியாசமான பாத்திரப் படைப்பாக அவரைப் பார்ப்பேன். சராசரி அல்ல அவர். அடிப்படையில் நல்ல மனசு. நோக்கத்தில் பழுது இருக்காது. பல விஷயங்கள் சொல்லிவைத்ததுபோல சொதப்பியதால், கொஞ்சம் கெட்ட பெயர். தன் குடும்பத்துக்கு அவர் செய்யவேண்டிய கடமைகளில் தவறியது இல்லை. பீட்சா கேட்ட பிள்ளைகளுக்கு பாப்கார்ன் வாங்கித் தந்திருக்கிறார். தாஜ்மஹால் பார்க்க ஆசைப்பட்டவர்களுக்கு, தஞ்சாவூர் கோயிலைக் காட்டியிருக்கிறார்.
என் அப்பாவுக்கு புதுக்கோட்டையில் மின்சார வாரியத்தில் வேலை. அதனால் என் வளர்ப்பு, படிப்பு எல்லாம் அங்கேதான். வருடாவருடம் முழு ஆண்டு விடுமுறைகளின் போது, திருச்சியில் குரு மாமா வீட்டுக்கு வந்து பதினைந்து நாட்கள் இருப்பேன். அடுத்த விடுமுறைக்காக ஏங்கவைத்துவிடுவார்.
‘என்னடா இப்படித் தேய்க்கிற?’ என எனக்கு ஒழுங்காக பல் தேய்க்கக் கற்றுத்தந்ததே அவர்தான். புல்லட் பைக் வைத்திருந்தார். எங்கே போனாலும் என்னையும் பின்னால் உட்காரவைத்து அழைத்துச் செல்வார். கோயிலுக்குச் சென்றால் கால் கழுவ வேண்டும், முதலில் பிள்ளையாரை வணங்க வேண்டும், கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வரவேண்டும் எனக் கற்பிப்பார். அதற்கான காரணங்களையும் சொல்வார். பீத்தோவன் என்கிற இசை அசுரனை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தினார்; உலக சினிமாவை ரசிக்கக் கற்றுக்கொடுத்தவர். சினிமா பற்றி நிறையப் பேசுவார்.
‘கேமரா மூவ்மென்ட்ஸ் கவனிக்கணும்னா படத்தை ம்யூட் பண்ணிப் பாரு. உலகம் முழுக்க ஃபீலிங்ஸ் ஒண்ணுதான்டா. நம்ம பாலுமகேந்திரா 30 வருஷம் முன்னாடி எடுத்த ‘அழியாத கோலங்கள்’ல உள்ள அதே ஃபீல், 15 வருஷம் முன்னாடி வந்த ‘மெலினா’வுலயும் இருக்கு!’
காவிரி ஆற்றுக்கு அழைத்துச் செல்வார். நீச்சல் கற்றுக்கொடுப்பார். மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குக் கூட்டிப்போய் நகரத்தை டாப் ஆங்கிளில் காட்டுவார்… அர்ச்சனை தேங்காயை உடைத்துத் தந்தபடி.
”சாமி… கறுப்பா – சிவப்பா?” என்றார்ஒருநாள்.
”என்ன மாமா… நல்லவரா, கெட்டவரான்னு கேட்டா யோசிக்கலாம்.”
”இல்லடா… சொல்லேன்…”
”சிலை எல்லாம் கறுப்பு! அதனால கறுப்போ?”
”வடக்குல மார்பிள்லதான் கிருஷ்ணன் செய்றான். அதனால ‘வெள்ளை’னும் சொல்லலாமே!”
”நீங்க ஒரு லாஜிக் வெச்சிருப்பீங்க. சொல்லிடுங்க.”
”உருவமே இல்லன்றப்ப நிறம் எப்படிடா வரும்? உனக்கு கறுப்பு பிடிச்சா கறுப்பா சிலை வெய்யி. வெள்ளை பிடிச்சா வெள்ளையா சிலை வெய்யி. மனுஷனைப் படைச்சது கடவுள். கடவுள் சிலையை வடிச்சது மனுஷன். உருவம் கொடுத்தவனுக்கே, உருவம் கொடுக்கிற மனுஷன்தானே அப்ப பெரிய படைப்பாளி?”
”உங்களுக்கு பெரியாரைப் பிடிக்குமோ?”
”பெரியாரோட கேள்விகள் பிடிக்கும். அவரோட சிஷ்யர்
எம்.ஆர்.ராதா ஒருதடவை கேட்ட கேள்விக்கு எனக்குத் தெரிஞ்சு, இன்னவரைக்கும் ஆன்மிகத்துல இருக்கிற யாரும் பதில் சொல்லலை.”
”அப்படி என்ன கேட்டார்?”
” ‘ஏம்ப்பா… சாமிக்குப் பசிக்கும்னு சாப்பாடு வைக்கிறீங்க; சாமிக்கு தூக்கம் வரும்னு விசிறிவிடுறீங்க; சாமிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க; குளிப்பாட்றீங்க; ட்ரெஸ் பண்றீங்க; சாமிக்கு ஏன்டா எவனும் கோயிலுக்குள்ள கக்கூஸ் கட்ட மாட்டேங்குறீங்க… பசிக்கும், தூக்கம் வரும்னா அதுவும்தானே வரும்?’ ”
”அய்யோ! இப்படியே கேட்டாரா?”
”நான் கொஞ்சம் கூட்டிக் குறைச்சு சொல்லியிருப்பேன். ஆனா, மேட்டர் இதுதான்.”
”சாமிக்கு முன்னாடி எல்லாத்தையும் வெச்சுட்டு, அப்புறம் நாமதானே சாப்பிடுறோம்…சாமி சாப்பிடுறது இல்லையே. அப்ப… கக்கூஸ் தேவைப்படாதே” என்ற என் முதுகில் தட்டிக்கொடுத்தார்.
”இந்த விஷயத்துல நீ கமல்ஹாசனை ஃபாலோ பண்ணாதே. ரஜினியை ஃபாலோ பண்ணு. கொஞ்சம் கேள்வியும் கேட்டுக்கோ. உலகத்துல சந்தேகப்பட முடியாத ஒரே விஷயம் தாய்ப்பால்தான்.”
இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு வங்கியில் பணம் எடுக்க டோக்கனுடன் காத்திருந்தபோது, ”இந்த கேஷியர் வேலையே ஒரு வகை தியானம்டா” என்றார்.
”எப்படி மாமா?”
”தினம் லட்சம் லட்சமா எண்ணி எடுத்து வைப்பான். ஆனா, அதுல ஒத்தை ரூபாயைக்கூட அவன் சொந்தம் கொண்டாட முடியாது! இதே மாதிரிதான் நகைக் கடையில வேலைபார்க்கிற பொண்ணுங்களும். அஞ்சி பவுன் போட முடியாம கல்யாணம் தள்ளிப்போகும். கடையில அவளைச் சுத்தி கோடிக்கணக்குல நகை!”
ஒருநாள் நான் கேட்டேன், ”மாமா… ஒரு கேள்வி. புக்ல படிச்சது. ‘ஒரே ஓர் ஆளை நீங்க சுடலாம். உங்களுக்குத் தண்டனை இல்லை’னு சொல்லி ஒரு துப்பாக்கி குடுக்கிறாங்க. நீங்க யாரைச் சுடுவீங்க?”
கொஞ்ச நேரம் யோசித்தார்.
”யாரையும் சுட மாட்டேன். அனுமதி இருக்கிறதால சுடணுமா என்ன? ஆனா, இப்படி ஓர் அனுமதி எங்கிட்ட இருக்குன்னு சொல்லி மிரட்டி, பெரிய பெரிய ஊழல்
செஞ்சவன்கிட்ட இருந்து, கறுப்புப் பணத்தைத் திருப்பிக் கட்ட வைக்க முடியுமானு பார்ப்பேன்.”
நான் கை தட்டினேன்.
”மாமா… இது ஒரு இன்டர்வியூல கேட்ட கேள்வி. பதில் கிட்டத்தட்ட இதேதான். உங்க அறிவுக்கும் திறமைக்கும் நீங்க எவ்வளவோ சாதிச்சிருக்கணும்.”
குரு மாமா சிரித்தபடி, ”நீ சாதனைனு சொல்லிட்டு இருக்கிற நிமிஷத்துலயே அந்தச் சாதனையை இன்னொருத்தன் முறியடிச்சிருப்பான். மனசுக்கு நேர்மையா, சந்தோஷமா வாழ்ந்துட்டுப்போனா போதும். போடா” என்றார்.
வரும் ஞாயிறு, குரு மாமா வருவதை நினைக்க உற்சாகமாக இருந்தது.
வீட்டுக்கு வந்து பைக்கை கவர் போட்டு மூடிவிட்டு, உள்ளே வந்து ஆர்வமாக விஷயத்தைச் சொன்னேன். சீரியலில் இருந்து கண்களைத் திருப்பாமல் ஆனந்தி சொன்ன உப்புச்சப்பு இல்லாத ‘அப்படியா?’வில் என் உற்சாகம் பஞ்சர் ஆனது.
”அதைக் கொஞ்சம் அணைச்சுட்டுக் கேட்கிறியா?”
”இதோ முடியப்போவுது. நீங்க லுங்கி மாத்திட்டு, முகம் கழுவிட்டு வந்து பேசுங்களேன். உங்க மாமாதானே வர்றாரு… ஒபாமாவா வர்றார்?”
நான் முகம் கழுவி, டிபன் சாப்பிட்டுவிட்டு, அவள் சமையல் அறையை ஒழுங்குபடுத்தி, முகமூடிக் கொள்ளைக்காரி மாதிரி துணி கட்டிக்கொண்டு ஹிட் அடித்து, சில கரப்பான்பூச்சிகளைக் கொன்றுவிட்டு வரும்வரை நேரத்தைக் கொல்வதற்காக வாட்ஸ்அப்பில் மேய்ந்தேன். அவள் வந்து அமர்ந்து ரிமோட்டை எடுக்கப் போக… தள்ளி வைத்தேன்.
”அவர் மேல உனக்கு என்ன கோபம் ஆனந்தி?”
”எனக்கு என்ன கோபம்?”
” ‘சுடிதார் உனக்கு சூட் ஆகலை’னு மூஞ்சிக்கு நேரா சொல்லித் தொலைச்சுட்டார். அதானே?”
”அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன். சரி… இப்ப எதுக்கு வர்றாராம்?”
”யாரையோ பார்க்கணுமாம்.”
”யாரையோ இல்ல… உங்களைத்தான் பார்க்கணும். போன் பண்ணி, ‘திடீர்னு வேலை சொல்லிட்டாங்க. ஆபீஸ் விஷயமா வெளியூர் போறேன்’னு சொல்லுங்க.”
”என்னடி இது? என் மாமா அவர்.”
”மாமாதான். இப்ப எதுக்கு வர்றார்னு உங்களுக்குத் தெரியலை? அவர் நிலைமையைப் பத்தி அகிலா புட்டுப்புட்டு வெச்சா. எக்கச்சக்க கடன். வீட்டை வித்தாலும் சமாளிக்க முடியாதாம். உங்ககிட்ட பணம் கேட்கப்போறார். குடுத்தா திரும்பி வராது! கடல்ல போட்ட பிள்ளையார் மாதிரி காணாமப்போயிடும்… சொல்லிட்டேன்.”
”சீச்சீ! எல்லாம் புரளி. அவருக்கு நெருக்கடியா இருந்தாலும் சமாளிக்கத்தெரியும். என்னைக் கேட்க மாட்டார்; கேட்டதே இல்லை.”
”மன்னார்குடியில இருக்காரே உங்க மாமாவோட சித்தப்பா… உங்களுக்கும் பழக்கம்தானே! போன் போட்டுக் கேளுங்க. நிஜமா, பொய்யானு தெரியும்.”
ஆனந்தியின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக அந்த உறவினருக்கு போன் போட்டு, சிக்னல் வீக்காக இருந்ததால் பால்கனிக்குப் போனேன். அதற்குள் ஆனந்தி டி.வி-யைப் போட்டுவிட்டதால் ஒரு காதை விரலால் அடைத்துக்கொண்டு பேசிவிட்டு வந்தேன்.
”என்ன?” என்றாள் என்னைப் பார்க்காமல்.
”பத்து நாள்ல தர்றேன்னு இருபதாயிரம் வாங்கினாராம். ஆறு மாசம் ஆச்சாம். போன் செஞ்சா எடுக்கவே மாட்டேங்கிறாராம்.”
”நான் சொல்லலை?”
”என்னால நம்பவே முடியலை ஆனந்தி. குரு மாமாவா?”
”அதனாலதான் சொல்றேன். அவாய்டு பண்ணுங்க.”
”எப்படி ஆனந்தி? சின்ன வயசுலேர்ந்து…”
”சென்டிமென்ட் எல்லாம் பார்த்தா மாட்டிக்குவீங்க. அவருக்குப் பேச கத்துக்கொடுக்கணுமா என்ன… நீங்க கவுந்துடுவீங்க.”
”சீச்சீ… அப்படியே கேட்டார்னு வெச்சுக்க…”
” ‘எனக்கு நிலைமை சரியில்லை… கையில காசு இல்லை’னு தைரியமா சொல்வீங்களா? அப்படின்னா வரட்டும்” என நிபந்தனையுடன் சம்மதித்தாள் ஆனந்தி.
ஞாயிறு… ஆட்டோவில் வந்து இறங்கிய குரு மாமா, பயணக் களைப்பு தாண்டி டல்லாகத்தான் இருந்தார். பழங்கள் கவரை நீட்டினார். ஹாலில் மாட்டியிருந்த சொகுசு ஊஞ்சல், 50 இன்ச் 3டி டி.வி., கிச்சனில் புதிதாகப் பொருத்தியிருந்த சிம்னி எல்லாவற்றையும் பற்றி, காபி குடித்தபடி விசாரித்துவிட்டு குளிக்கச் சென்றார்.
”என்னடா சுதாகர், இப்படி வேகுது… பக்கத்து பார்க்ல ஜில்லுனு காத்து வரும்ல? வாயேன்… போயிட்டு வரலாம்” என்றார் டிபன் சாப்பிட்டு கை துடைத்தபடி.
”ஏங்க.. வெளியில போறீங்கன்னா ஏ.டி.எம்-ல ஆயிரம் ரூபா எடுத்துட்டு வாங்க. பேப்பர்காரனை ரெண்டு தடவை திருப்பி அனுப்பிட்டேன். இன்னிக்காச்சும் குடுத்தாகணும்” என ஆனந்தி, ஒரு கற்பனை சிச்சுவேஷனை உருவாக்கி அனுப்பிவைத்தாள்.
பூங்காவில் கூட்டம் இல்லை. நிழலில் இருந்த பிளாஸ்டிக்
பெஞ்சில் அமர்ந்ததும் வேட்டி முனையைத் தூக்கி, கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டார்.
”சுதாகர், உனக்கு ஒரே பையன்… அவனை வெளியூர்ல படிக்கவைக்கணுமா… சென்னையில இல்லாத படிப்பா?”
”இதெல்லாம் இப்ப பேரன்ட்ஸ் முடிவுபண்றது இல்லை மாமா. அவனே அப்ளிகேஷன் டௌன்லோடு பண்ணான்; அப்ளை பண்ணான். ‘புனேவுல ஸீட் கிடைச்சிருக்கு டாடி’னு பணம் கட்டுறதுக்கு அக்கவுன்ட் நம்பர் குடுக்கிறான். என்ன பண்ணச் சொல்றீங்க? ரகு, இந்தியா வர்றானா?”
”தீபாவளிக்கு வர்றதா சொல்லியிருக்கான். இன்னும் டிக்கெட் போடலை.”
”அதில்லை… ‘பெர்மனென்ட்டா வர்றானா?’னு கேட்டேன்.”
”அடிக்கடி சொல்றான். ஆனா, அப்படி ஒரு ஐடியா இருக்கிற மாதிரி தெரியலை.”
”யாழினி எப்படி இருக்கா?”
”எங்களை கூர்கானுக்குக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கா. அது எப்படி வாழ்ந்த ஊரை விட்டுட்டு, மாப்பிள்ளை வீட்டுக்குப் போயி… எங்களுக்குப் பிடிக்கலைப்பா…”
”அத்தைக்கு ஹெல்த் எப்படி இருக்கு மாமா?”
”ரெகுலரா செக்கப் போறோம். நல்லாத்தான் இருக்கா.”
”நீங்க?”
”முழங்கால்தான் மக்கர் பண்ணிட்டு இருக்கு. கோயிலுக்குப் போனா பிராகாரம் சுத்தாம வந்துடுறேன். வாக்கிங் கட் பண்ணிட்டேன். மாடி ஏறணும்னா மலைப்பா இருக்கு. வயசானா தேய்மானம் ஆகத்தானே செய்யும்!”
”சந்தோஷமா இருக்கீங்களா மாமா?”
”இல்லடா சுதா! உன்கிட்ட சொல்றதுக்கு என்ன? தொழிலுக்கு வாங்கினது, யாழினி கல்யாணத்துக்கு வாங்கினதுனு கடன் ஏறிடுச்சு. வீட்டை வித்துடலாம்னு முடிவுபண்ணி புரோக்கர்கிட்ட சொல்லிட்டேன். நிலைமை தெரிஞ்சிப்போனதால விலை குறைச்சுக் கேட்கிறானுங்க. சரியான பார்ட்டி அமையணும். நியாயமான விலை வராம எப்படி விக்கிறது சொல்லு?”
”கரெக்ட்டுத்தான் மாமா.”
”பளிச்சுனு கேட்டுடறேன். உனக்கு ஏதாச்சும் இன்வெஸ்ட்மென்ட் ஐடியா இருக்கா?”
”எனக்கா… என்ன விலை மாமா?”
”முப்பத்தஞ்சி போகும். உனக்குன்னா குறைச்சுக்கலாம்.”
”அவ்வளவு பணம் எங்கிட்ட இல்லையே மாமா.”
”அதான் கூப்புட்டு கூப்புட்டு லோன் குடுக்கிறானே!”
”திருப்பிக் கட்டலைன்னா கூப்புட்டு கூப்புட்டுத் திட்டுவான். எனக்கு இந்தக் கடனே பிடிக்கிறது இல்லை. நான் டெபிட் கார்டுதான் வெச்சிருக்கேன்.”
”நல்ல பாலிசிடா. இதை நான் கடைப்பிடிக்காம போயிட்டேன். சுதாகர்… ஒரு சில்லறைக் கடன். ரொம்ப நெருக்குறான். ஒரு தர்ட்டி தௌசண்டு கிடைக்குமா? எப்படியும் ஒரு மாசத்துல வீட்டை வித்துருவேன். முதல்ல உனக்கு செட்டில் பண்ணிடுறேன். வட்டி வேணாலும் போட்டுக்கலாம்!”
எனக்கு ‘ச்சே’ என இருந்தது. என் மனதில் மலை உச்சியில் கம்பீரமாக நின்ற குரு மாமா அடிவாரத்துக்கு வந்து விட்டார். ஆனந்தி ரொம்பச் சரியாக எப்படிக் கணித்தாள்?
என்னதான் நிலைமை சரியில்லை என்றாலும், நெருங்கிய உறவினர்களிடம் பணம் கேட்பது மரியாதையைக் குறைக்கும் என்பது மாமாவுக்குத் தெரியாதா என்ன? முன்னே-பின்னே ஒரு விலைக்கு வீட்டை விற்று, கடனை அடைத்துவிட்டு கௌரவமாக இருக்க வேண்டாமா?
என்ன பதில் சொல்வது, எப்படிச் சொல்வது?
மாமாவை ரயில் ஏற்றி விட்டுவிட்டு, நானும் ஆனந்தியும் ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு டின்னர் சாப்பிட வந்து அமர்ந்தோம்.
”ம்… இப்ப சொல்லுங்க. என்ன சொல்லி சமாளிச்சீங்க?” என்றாள் ஆனந்தி.
” ‘பையன் படிப்புக்கே எக்கச்சக்கமா ஆகுது; ஒரு லேண்டுல வேற இன்வெஸ்ட் பண்ணிட்டேன்; இப்ப ரொம்ப டைட் மாமா’னு பளிச்சுனு சொல்லிட்டேன்.”
”நான் மட்டும் முன்கூட்டி எச்சரிக்கலைன்னா ஏமாந்திருப்பீங்க.”
”ஆனா, வருத்தப்பட்டிருப்பார் ஆனந்தி.”
”கொடுத்தா அப்புறம் நாம வருத்தப்படணுங்க.”
நான் முதலில் கை கழுவிவிட்டுத் திரும்பி வந்தபோது, என் செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தி கோபமாக நிமிர்ந்தாள்.
”என்னங்க இது?”
”என்ன?”
”ஏ.டி.எம்-ல முப்பது ஆயிரம் எடுத்திருக்கீங்க! அப்படின்னா… குடுத்தீங்களா? அப்ப என்கிட்ட டிராமா ஆடுறீங்களா? உங்களுக்கு என்ன பைத்தியமா? அவ்வளவு தூரம் சொல்லியும் திரும்ப வராதுனு தெரிஞ்சும் முப்பது ஆயிரத்தைத் தூக்கிக் குடுத்திருக்கீங்களே..!”
”ஆனந்தி… வீட்டுக்குப் போய்ப் பேசலாம்” என அதட்டலாகச் சொன்னேன்.
வீட்டுக்கு வந்து கட்டிலில் முதுகு காட்டிப் படுத்திருந்த ஆனந்தியைத் தொட்டபோது வெடுக்கெனக் கையை எடுத்துவிட்டாள்.
”ஆனந்தி… அவரு பேர்ல மட்டும் குரு மாமா இல்ல; எனக்கு ஒருவகையில குரு மாதிரி. நிறையக் கத்துக்கிட்டிருக்கேன் அவர்கிட்டே. இப்ப இருக்கிற நான், என் ஐடியாலஜி முக்கால்வாசி அவர் பாதிப்புல ஏற்பட்டதுதான். எனக்கு ரோல்மாடலா இருந்தவர். அவருக்கு நான் எதுவுமே செஞ்சது இல்லை. இப்படி அவர் கேட்கிறதுக்கு முன்னாடி நான் போய் நின்னு அவர் பிரச்னையைச் சரிசெய்ய ஏதாச்சும்
செஞ்சிருக்கணும். அவர் தண்ணியடிக்கவோ, சூதாடவோ கேட்கலை. இது உதவவேண்டிய சமயம். கடனா நினைச்சுத் தரலை… குருதட்சணை மாதிரி நினைச்சுத்தான் குடுத்தேன். உனக்கு நான் ஏமாளியாத் தெரியலாம். என் மனசுக்குத் திருப்தியா இருக்கு” என்றேன் நான்.
வெடுக்கெனத் திரும்பிய ஆனந்தி, ”உங்களுக்கு என்னமோ ஆகிடுச்சு! முட்டாள்தனம் செஞ்சுட்டு அதுக்கு வியாக்கியானம் வேறயா?” என ஆரம்பிக்க, நான் ரிமோட் எடுத்து டி.வி-யை ஆன் செய்து வால்யூமைக் கூட்டிக்கொண்டேன்!
– அக்டோபர் 2015