குரு தட்சணை…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 5,708 
 
 

கவிதாவால் எப்படி யோசித்தும் ஜீரணிக்க முடியவில்லை.

காலை வகுப்புகள் முடிந்து ஒய்வு நேரம். ஆனாலும்… அந்த ஓய்வறையில் மூச்சு விட முடியாதவள் போல் தவித்தாள்.

எதிரில் அமர்ந்து அவளைக் கவனித்த சுகுணா. ..

” என்ன கவிதா ஒரு மாதிரியா இருக்கே. ..” சக ஆசிரியைக் கேட்டாள்.

” நம்ம தேன்மொழி பத்து நாளா பள்ளிக்கூடத்துக்கு வரல. ” மெல்ல சொன்னாள்.

” அதுக்கென்ன. .? ”

” அவ நல்ல படிக்கிற பொண்ணு. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு. கண்டிப்பா முதல் இடத்துல வருவாள். அப்பன்காரன் படிக்க போக வேணாம். வேலைக்குப் போன்னு வீட்டு வேலைக்கு அனுப்பிட்டானாம்…!” சொல்லும்போதே கவிதாவுக்கு குரல் தழு தழுத்து தொண்டைக் கமறியது.

சுகுணாவிற்கு அவள் நிலை புரிந்து விட்டது.

” உன் ஆதங்கம் சரி. அவள் தாயில்லா ஏழைப் பெண். படிப்பு வீணான எதிர்காலம் பாதிக்கும் என்கிறது உண்மைதான். இது மாதிரி ஏழை புள்ளைங்க எதிர்காலம் வீணாகக்கூடாதுன்னுதான் அரசாங்கம் உதவு செய்யுது. இதையும் மீறி பெத்தவங்க புள்ளைங்களை வேலைக்கு அனுப்பினா என்ன பண்ண முடியும். ..? ! ” சொல்லி பெருமூச்சு விட்டாள்.

” இந்தப் போக்கை மாத்தணும் சுகுணா. ..? ”

” மாத்தணும்தான். ! அதுக்கு என்ன பண்ணப்போறே. ..? ”

” தேன்மொழியின் தகப்பனைப் பார்த்து, நல்லது கேட்டது சொல்லி, அவளை பள்ளிக்கூடத்து கூட்டிவரலாம்னு. ..” இழுத்தாள்.

” செய்யலாம். ஆனா. ..இடம், பொருள், ஏவல் பார்த்து நாம காரியத்தில் இறங்கணும். தேன்மொழியின் தகப்பன் வீரன் ஒரு மாதிரி ஆள்னு சொல்வாங்க. சுருக்கமா சொன்னா….முரடன், குடிகாரன்.! அவன்கிட்ட போய் நல்லது கேட்டது பேசமுடியாது. அப்படிப் பேசினாலும் அவன் மதிச்சு கேட்பான் என்கிறது சந்தேகம். ”

” கேட்பான்னு என் மனசுல படுது. காரணம், அவனும் ஒரு பெண்ணுக்குக் கணவனா இருந்திருக்கான். புள்ளைக்குட்டி பெத்திருக்கான். கேட்பான். யாரையும் கெட்டவன்னு முடிவெடுத்து ஒதுக்கிறது தப்பு. எந்த ஒரு மனிதனுக்குள்ளேயும் ஒரு நல்லது இருக்கும். நாம பேசுற விதத்துல பேசினா வழிக்கு கொண்டு வந்திடலாம்னு என் மனசுக்குப் படுத்து. ”

” இந்த விபரீத விளையாட்டு எனக்குச் சரியாய் படலை. வேணும்ன்னா நீ முயற்சி செய் ! ” சொன்னாள்.

கவிதா வீரனைச் சந்தித்தே ஆகவேண்டும் ! என்கிற முடிவிற்கு வந்துவிட்டாள்.

பள்ளிக்கூடம் விட்டதும் நடந்தாள். பக்கத்து கிராமத்திற்குள் நுழைந்தாள்.

தேன்மொழி வீட்டைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாகப் படவில்லை.

” நீங்க டீச்சரா. ..! தேன்மொழி வீடு இதோ இருக்கு. ” எதிரில் தண்ணீர் குடத்துடன் வந்த ஒருத்தி கை காட்டினாள்.

அவள் காட்டிய அந்த குடிசை வீடு நைந்து போய்க் கிடந்தது.

தேன்மொழி அப்போதுதான்.. அப்பனுக்கு நேரத்தோடு சமையல் வேலையை முடித்துவிட்டு வாசலுக்குத் தண்ணீர் தெளித்து கொண்டிருந்தாள்.

தன் வீட்டை நோக்கி வரும் ஆசிரியைக் கவிதாவைப் பார்த்ததும் அவளுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

” வாங்க டீச்சர் ” வாய் நிறைய அழைத்தாள்.

கையிலிருந்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு வந்து பூரிப்போடு வரவேற்றாள்.

அவளது தலையையும் துணியையும் பார்த்ததும் கவிதாவிற்கு இன்னும் பாவமாக இருந்தது.

” ஏம்மா. . பத்து நாளா பள்ளிக்கூடத்துக்கு வரலை….? ” அவளை அன்பு , பாசமாய்க் கேட்டாள்.

தேன்மொழி பதில் பேசவில்லை.

உற்சாகமாய் உள்ளே ஓடிப்போய் அவளது உடையைவிட அதிகமாக கிழிந்த பாயை எடுத்து வந்து தரையில் விரித்தாள்.

” உட்காருங்க டீச்சர் ” உபசரித்தாள் .

” நான் கேட்டத்துக்குப் பதில் சொல்லலையே. .??!! ” கவிதா பாயில் அமர்ந்தபடியே கேட்டாள்.

” நான் பள்ளிக்கூடம் வந்தா என் அப்பாவுக்குச் சோறாக்கிப் போடா யாருமில்லே டீச்சர். மீதி நேரம் வீட்டு வேலைக்குப் போன்னு அப்பா சொல்லியிருக்கு டீச்சர். ” என்றாள்.

” வீட்ல.. நீயும் உன் அப்பாவும் மட்டும்தான் இருக்கீங்களா. .? ”

” ஆமாம் டீச்சர் ”

” மதியத்துக்கும் சேர்த்து ஆக்கி வச்சுட்டு பள்ளிக்கூடம் வரலாமே. ?! .”

” செய்யலாம் டீச்சர். ஆனா அப்பா சொன்னதை மீறினேன்னா அடி விழும்.” சொல்லும்போதே தேன்மொழிக்கு பயத்தில் குரல் நடுங்கியது.

” இனி அடி விழாது. உன் அப்பாகிட்ட நான் பேசுறேன். சரியா. .? ”

” சரி டீச்சர். ” தேன்மொழி தலையாட்டவும்…..

வீரன் வரவும் சரியாக இருந்தது.

முகத்தை மறைக்கும் முரட்டு மீசை. அஜானுபாகவானாக தோற்றம். தூக்கி கட்டிய லுங்கி. குடித்திருப்பதற்கு அடையாளமாக கண்கள் சிவந்து…. நடை தள்ளாட்டம்.

” தேன்மொழி. . இது யாரு புள்ள. .? ” தடுமாற்றத்துடன் வந்து கேட்டான்.

” என் டீச்சருப்பா. ..”

” அடடே. .. டீச்சரா. .. ? ” கவிதா எதிரில் வந்து குழறினான்.

கவிதாவிற்கு குமட்டியது . மூக்கைப் பொத்திக் கொண்டாள்.

” ஆமா. . வணக்கம். ” வாடையைப் பொறுத்துக்கொண்டு சொன்னாள்.

வீரனுக்கு அப்படி வணக்கம் சொல்லத் தெரியவில்லை.

” வ. .வணக்கம் …” சொன்னவன் பொத்தென்று அமர்ந்தான்.

‘ இந்த நிலையில் நாம் சொல்வதைக் கேட்பானா. .??! ‘ கவிதாவிற்குள் சின்ன தடுமாற்றம்.

” சொ. .. சொல்லுங்க. . டீச்சர். ” வீரன் உட்கார்ந்திருந்தாலும் ஆடினான்.

” தேன்மொழி நல்ல படிக்கிற பொண்ணு. அவ படிக்க வரனும். .. ”

” அது முடியாது. …”

” ஏன். …?”

” எனக்குப் பொங்கிப் போட ஆள் வேணும். .”

” அது மட்டுமில்லே. உங்களுக்குக் குடிக்க காசு வேணும். அதுக்கு அவ வேலைக்குப் போகணும்ன்னு நினைக்கிறீங்க. ” கவிதா நிறுத்தி நிநாதனமாக சொன்னாள்.

அதைக் கேட்டதும் வீரன் தலை முதல் முறையாக கவிழ்ந்தது.

” நீங்க குடியை நிறுத்துனீங்கன்னா தேன்மொழிய நல்லா படிக்க வைக்கலாம். ” கவிதா விடாமல் சொன்னாள்.

வீரன் பேசவில்லை. டீச்சர் சொல்வது அவனுக்குக் காதில் ஏறியது. நியாயமாகப் பட்டது.

கவிதாவிற்கு… தான் அதிகம் பேசிவிட்டோமோ, வீரன் கோபப்பட்டு விடுவானோ.. என்று பயம் எழுந்தது. அதே நேரம் தேன்மொழியின் படிப்பு பாழாவதையும் அவள் மனம் விரும்பவில்லை. .

வீரன் தலை இன்னும் தாழ்ந்திருந்தது. அது அவளுக்குச் சாதகமாக இருந்தது.

துணிந்தாள். தொடர்ந்தாள். ….

” இவ்வளவு சொல்லியும் கேட்கலைன்னா…. இப்போ என்ன சம்பளத்துக்குத் தேன்மொழிய வேலைக்கு அனுப்புறீங்களோ… அந்தப் பணத்தை நான் தரேன். நீங்க சாப்பிட காலையிலேயே ஆக்கி வைக்கச் சொல்றேன். பள்ளிக்கூடம் விட்டு வந்து ராத்தரிக்கு சமைக்கச் சொல்றேன். தேன்மொழியைப் பள்ளிக்கூடம் அனுப்புங்க.” என்றாள்.

இந்த.. நியாய ஆறுதலான வார்த்தைகள் வீரனை அசைத்தன.

அவனுக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.

‘ தனக்கு இல்லாத அக்கறை. யாரோ…. இந்த டீச்சருக்கு எப்படி வந்தது.? ! ‘ நினைத்தவனுக்குள் மனசாட்சி சுட்டது.

இதனால் போதை சற்று தணிந்து…. இறங்கியது. நிதானத்திற்கு வந்தான்.

” தாயி. .! மாதா, பிதா, குரு தெய்வம்ன்னு சொல்லுவாங்க. தேன்மொழியின் மாதா இல்லே. பிதா இருந்தும் சரி இல்லே. அடுத்து இருக்கிறது குரு ! நீங்க சரியா இருக்கீங்க. இதுக்கு மேலும் என் பொண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி படிக்க வைக்கலேன்னா நான் பெத்தவனே இல்லே . அது மட்டுமில்லே. .. இன்னையிலிருந்து, இந்த நிமிடத்திலிருந்து, நான் குடிக்க மாட்டேன்.! என் பெண்ணைப் பள்ளிக்கூடம் அனுப்பறேன். உங்க விருப்பப்படி அவ நல்லா படிக்கட்டும் ” தழு தழுத்து சொன்னான்.

இது குழறல் இல்லை ! என்பதைப் புரிந்த கவிதா. .. தேன்மொழியைப் பார்த்தாள் .

சோம்பிக்கிடந்த அந்தப் பிஞ்சு முகம் மலர்ந்தது.

கவிதாவுக்கு அவளின் ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது.!

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *