(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சோழ மன்னர்கள் நம் செந்தமிழ் நாட்டை ஆண்டு வந்த அந்த மிகப் பழைய காலம். காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து கட்டை வண்டியில் சென்றால் பத்து மணி நேரப் பிரயாணத்தில் அவிநாசிக் கிராமத்தை அடையலாம். குடியானவர்களால் நிறைந்து, காவிரி யாற்றின் கிளை நதி யொன்றால் வளம் பெற்று நான்கு பக்கங்களிலும் வயல்களால் சூழப்பெற்ற கிராமம்.
அக்கிரகாரத்தை விட்டு இரண்டு மூன்று வீதிகள் கடந்து சென்றால் அதோ சூளைகளிலிருந்து எழும் புகையால் மூடப்பட்டு இருட்டாகக் காணப்படு கிறதே, அதுதான் குயவர் வாழும் வீதி. பனை ஓலை வேய்ந்த ஒரு சிறு குடிசைக்கு முன்னால் வேப்ப மரத்து நிழலில் தன் சக்கரத்துக்கெதிரில் உட்கார்ந்து வேலை செய்யும் குயவனின் உருவம் அந்த வீதியின் வழியாகச் செல்லுகிறவர் ஒவ்வொருவர் கண்ணிலும் படாமல் போகாது. உருவமற்ற களிமண்ணை இந்திர ஜாலம்போல் பலவிதமான பாத்திரங்களாகச் செய்து அடுக்கிக் கொண்டே போகிற அவன் கைத்திறமை யைக் கண்டு மயங்கத்தான் நேரிடும். இவ்விதமான கைத்திறமை படைத்தவன்தான் நல்லண்ணன் என்ற குயவன். புழுதி படிந்திருந்த அவனது உடம்பையும் சடை போட்டிருந்த தலையையும் பார்த்தவர்கள் முதலில் அவனிடம் அருவருப்புக் கொள்வார்கள். ஆனால் அவிநாசிக் கிராமத்திலேயே நல்லண்ணனைப் போன்ற உத்தம குணமுடைய வேறொருவரைக் காண முடியாது.
அவிநாசிக் கிராமவாசிகள் நல்லண்ணனின் தாய் தந்தையரைப்பற்றி ஒன்றும் அறியார். பதினைந்து வருஷங்களுக்கு முன் அவன் சிறு பையனாய்த் தன்னந் தனியனாக அவிநாசிக் கிராமத்திற்கு வந்தான். குயவன் பொன்னனிடத்தில் ஏரிகரையிலிருந்து களிமண் கொண்டுவந்து கொட்டும் வேலையில் அமர்ந்தான். பொன்னன் காலமானபின், தான் சேர்த்துவைத் திருந்த பணத்தைக் கொண்டு தானே குசத்தொழில் செய்ய ஆரம்பித்தான்.
இப்போது நல்லண்ணனுக்கு இருபத்தைந்து வயசாகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. சூரிய வெளிச்சம் சிறிது தெரிந்தவுடனேயே நல்லண்ணனின் குடிசைவாசலில் சக்கரம் சுற்ற ஆரம்பிக்கும். பானை பானையாகச் செய்து குடிசை முழுவதும் நிரப்பி விடுவான். சாப்பாட்டு நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் அவன் சுறுசுறுப்புடன் உழைப்பதைப் பார்க்கலாம்.
“தினம் கூழே குடிக்கிறான்; ஒருவருக்கும் ஒரு பைசாக்கூடக் கொடுப்பதில்லை ; வருகி கிற பணத்தை யெல்லாம் என்னதான் செய்வானோ?” என்று அவ னிடம் பொறாமை கொண்டவர்கள் பேசலானார்கள்.
நல்லண்ணனுக்கு அவிநாசிக் கிராமத்தில் நண்பர் களே இல்லாமலும் போகவில்லை. அவனும் அடுத்த வீட்டுக் கந்தசாமி என்ற கொல்லனும் நீண்ட நாள் நண்பர்கள். கந்தசாமிக்கும், நல்லண்ணன் வயசுதான் இருக்கும்; இரண்டு மூன்று வருஷங்கள் சிறியவ னாகவே இருப்பான். கிராமவாசிகளிடையில் கந்த சாமியைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது வாஸ்தவந்தான். இருந்தாலும் நல்லண்ணனைப் பொறுத்த வரையில் கந்தசாமியின் நடத்தை குற்றங்கூற இடமில்லாததாகவே இருந்தது.
நாளடைவில் நல்லண்ணன் வேறோர் இடத்தில் வைத்த அன்பு அவனுக்கும் கந்தசாமிக்கும் இடையிலிருந்த நட்பைச் சிறிதும் குறைவுபடுத்த வில்லை. இந்தப் புது அன்புக்குப் பாத்திரமானவள் பார்வதி என்ற பெண் தெய்வம். அவள் குப்பன் என்ற கிழக் குயவனின் மூத்த மகள். அவளுக்குப் பதினெட்டு வயசு இருக்கும். உத்தம குணங்களுக்கு உறைவிடமானவள் என்று அவளை அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
என்றைக்கும் வெளியே வராத பார்வதி ஒரு நாள் வீட்டில் வேறு யாரும் இல்லாததால் தானே பானை வாங்க நல்லண்ணனிடம் வந்தாள். அவளைப் பார்த்ததுமே நல்லண்ணன் மனம் பூரித்தது. நல்ல பானையாகத் தட்டிப் பார்த்துக்கொண்டே, “கண் ணாலம் ஆயிடுத்தா, அம்மா?” என்று கேட்டான்.
“இல்லை” என்று பார்வதி சிரித்துக்கொண்டே கூறினாள்.
“எனக்குக் கூடத்தான் ஆகல்லை ; ஆனால் நீங்களெல்லாம் என்னைக் கட்டிப்பீங்களா ?” என்று நல்லண்ணன் ஒரு போடு போட்டான்.
பார்வதி பதில் கூறாமல் வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டே பானையை வாங்கிக்கொண்டு போய்விட்டாள்.
‘குப்பன் பானை செய்வதையே விட்டு விட்டானே, எப்படி ஜீவனம் பண்ணுகிறான்?’ என்று நல்லண்ணன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
ஒரு மாசத்திற்குப் பிறகு நல்லண்ணன் குப்பன் வீட்டிற்குப் போய் அவன் பெண்ணைத் தனக்குக் கட்டிக் கொடுக்கும்படிக் கேட்டான். குப்பனுக்கு முதலில் இஷ்டமில்லை. ஆனால் நல்லண்ணன் அதிகப் பணம் சேர்த்து வைத்திருந்ததாக அவன் கேள்விப் பட்டிருந்தது அவனைக் கடைசியில் இசையச் செய்தது.
“பார்வதிக்கு எது இஷ்டமோ அதுவே எனக்கும் இஷ்டம். அவளைக் கேட்காமல் ஒண்ணும் செய்ய மாட்டேன்” என்றான்.
“என்னெதிரிலேயே கூப்பிட்டுக் கேட்டு விடுங்கள்” என்று நல்லண்ணன் கூறினான்.
பார்வதி வந்ததும், ‘இவனைக் கல்யாணம் பண்ணிக்கிறாயா?” என்று குப்பன் கேட்டான். பார்வதியின் முகம் வெட்கத்தால் சிவந்துவிட்டது.
“ஒனக்குப் புடிச்சாப் போதும்” என்று சொல்லிக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.
நல்லண்ணனுக்கு உடனே கல்யாணத்தை முடித்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைதான். ஆனால் அவன் சேர்த்து வைத்திருந்த பணம் ஊரார் சொல்லிக் கொண்டதுபோல் அவ்வளவு
பால் அவ்வளவு அதிகமாக இல்லை. ஆகவே, இன்னும் கொஞ்சம் காசு சேரட்டும். ரண்டு மூன்று மாசங்கள் கழித்துப் பண்ணிக் கொள்ளலாம்’ என்று எண்ணிக்கொண்டு சுறுசுறுப்புடன் உழைத்துப் பணம் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
அவிநாசிக் கிராமத்திலிருந்த சிவன் கோவிலில் பிரம்மோத்ஸவம் ஆரம்பமாயிற்று. கோவில் செல விற்காகச் சோழ அரசர்கள் பல விளை நிலங்களை விட்டிருந்தார்கள். கோவில் காரியங்கள் அனைத் தையும் கிராமத்தை ஆண்டு வந்த கிராம சபையாரே கவனித்து வந்தார்கள். கோவிலுக்குச் சொந்தமான நகைகளும் ஏராளமாக இருந்தன. சாதாரண நாட்களில் அவை கிராம சபையார் பாதுகாப்பில் ருக்கும். உத்ஸவம் நடைபெறும்போது அவற்றைப் பெட்டியுடன் கோவிலிலேயே வைத்திருப்பார்கள். உத்ஸவம் ஆரம்பித்தவுடன் காவலுக்காக ஊரிலுள்ள இளைஞர்களை ஏற்படுத்துவது வழக்கம். இந்தத் தொண்டைச் செய்வதற்கு ‘நான் முன், நீ முன்’ என்று இளைஞர்கள் வருவது வழக்கம். இந்த வருஷத்தில் நல்லண்ணன் மூன்றாம் நாள் இரவு தானே காவல் செய்வதாக ஒப்புக்கொண்டான். அவன் நண்பன் கந்தசாமி தானும் அவனுடன் காவல் இருப்ப தாகக் கேட்டுக்கொண்டான்.
மூன்றாம் நாள் வந்தது. நல்லண்ணன் இரவு பத்து மணியிலிருந்து ரண்டு மணி வரையில் காவலிருக்க வேண்டுமென்றும், பிறகு தான் வந்து அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டுக் காவல் செய்வ தாகவும் இப்படிச் செய்தால் இருவருக்கும் சிறிது தூங்குவதற்கு ஓய்வு கிடைக்கும் என்றும் கந்தசாமி நல்லண்ணனிடம் கூறினான். நல்லண்ணனும் இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதித்தான்.
இரவு பத்து மணி சுமாருக்கு நல்லண்ணன் நன்றாகப் போர்த்திக்கொண்டு கையில் தடியுடன் கோவில் வாசற்படியில் வந்து உட்கார்ந்துகொண்டே இருந்தான். சந்திரன் நடு வானத்துக்கு வந்து விட் டான். மணி
இரண்டுக்கு மேலிருக்கும் என்று தோன்றிற்று. கந்தசாமியைக் காணவில்லை. தூக்கத் தால் நல்லண்ணன் தலை ஆட ஆரம்பித்தது. உட்கார்ந்தபடியே நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்.
மறுபடியும் அவன் கண் விழித்தபோது சூரியனது செந்நிறக் கிரணங்கள் கிழக்கே தோன்றிக் கொண்டிருந்தன. சுற்றிலும் பார்த்தான். கந்தசாமி வந்ததாகவே தோன்றவில்லை. கோவில் தர்மகர்த்தர் வந்ததும் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குப் போனான். சிறிது நேரத்திற்குப் பிறகுகோவிலில் பெரிய பரபரப்பு உண்டாயிற்று. ஸ்வாமியின் நகைப் பெட்டியிலிருந்த சில நகைகள் காணப்படவில்லை. அவைகள் இருந்த இடத்தில் தேய்ந்துபோன ஒரு பழைய வெள்ளி மோதிரம் கிடந்தது.
கிராம சபையார் கோவிலில் கூடினார்கள். ஊர் ஜனங்களும் கோவிலுக்கு வந்து கூட்டம் கூடி விட்டார்கள். நகைப் பெட்டியிலிருந்த வெள்ளி மோதிரத்தை நல்லண்ணனின் டது கைவிரலில் தான் பலமுறை பார்த்திருப்பதாகக் கந்தசாமி கூறினான்.
நல்லண்ணன் அழைக்கப் பெற்றான். கிராம சபைத் தலைவர் அவனிடம் மோதிரத்தைக் காட்டி, “இது யாருடையது ?” என்று கேட்டார்.
“என்னுடையதுதான்” என்றான் நல்லண்ணன். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“நகைகளை எடுத்தது நீதானா?” என்று மறுபடியும் கேள்வி பிறந்தது. நல்லண்ணனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
“கடவுளறியச் சொல்லுகிறேன், நான் எடுக்க வில்லை. இரண்டு மணிக்கு வருகிறேன் என்று சொன்ன கந்தசாமி வரவில்லை. பிறகு நான் தூங்கி விட்டேன். அப்போது எவனாவது வந்து எடுத்திருப்பான்” என்று நாக்குழறக் கூறினான்.
கந்தசாமி எழுந்திருந்து, “நான் இரண்டு மணிக்கு வருவதாகச் சொன்னது வாஸ்தவந்தான். ஆனால் தலைவலி அதிகமாக இருந்தது; வரமுடியவில்லை” என்றான்.
“நீ நகைகளைத் திருடவில்லை என்றால் உன் கைவிரல் மோதிரம் அங்கே எப்படி வந்தது ?” என்று கிராமசபைத் தலைவர் மறுபடியும் நல்லண்ணனைக் கேட்டார்.
“எனக்குத் தெரியாது. மோதிரம் என்டையதுதான்; ஆனால், நான் நேற்றுக் கோவிலுக்கு வந்தபோது அது என் கையில் இல்லை” என்று நல்லண்ணன் கூறினான்.
“பின் எங்கே இருந்தது?” என்ற கேள்விக்கு நல்லண்ணன் பதில் கூறவில்லை.
நல்லண்ணனுக்குச் சட்டென்று நினைவு வந்தது. சுமார் இரண்டு மாசங்களுக்கு முன் ஒரு நாள் பார்வதியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவள் அந்த மோதிரத்தைத் தன் விரலில் கண்டு, “நன்றாயிருக்கிறது” என்று சொன்னதும், “நன்றாயிருந்தால் நீதான் எடுத்துக் கொள்ளேன்” என்று அவன் கழற்றிக்கொடுத்ததும் அவன் மனக்கண்முன் வந்தன. பார்வதியும் அவ்வாறு செய்வாளா என்று ஒரு கணம் யோசித்தான். ஆனால் அவளையும் அறியாமல் அவள் தகப்பன் செய்திருந்தாலும் இருக்கலாம் என்று தோன்றிற்று. ஒரே நிமிஷத்தில் நல்லண்ணன் மனசைத் திடம் செய்து கொண்டான். மோதிரத்தைப் பார்வதியிடம் கொடுத்திருந்ததை வெளியிடுவதைவிடக் குற்றத்தைத் தானே சுமப்பதென்று தீர்மானித்தான்.
நல்லண்ணன் மௌனமாய் நின்றதிலிருந்து, அவன் குற்றவாளியென்றே எல்லோரும் நினைத்தார்கள். அவன் வீடும், சொத்துக்களும் கிராம சபையாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அவன் பார்வதியின் வீட்டு வாசலில் போய் நின்றான். அப்போது உள்ளிருந்து வெளியே வந்த குப்பன் தலையை ஆட்டிக்கொண்டு, “என் மகள் திருடனைக் கட்டிக் கொள்ள மாட்டாள். நீ இங்கே இனிமேல் வராதே!” என்று கடுமையாகப் பேசினான். நல்லண்ணன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு பதில் பேசாமல் வெளியேறினான்.
மறுநாள் முதல் அவிநாசிக் கிராமத்தில் அவனை எவரும் காணவில்லை. அவன் எங்கே சென்றான் என்பதும் எவருக்கும் தெரியாது.
நான்கு வருஷங்கள் கடந்தன. நல்லண்ணன் திரும்பி வரவில்லை.
கந்தசாமியின் குடும்பத்திலும் எதிர்பாராத கஷ்டங்கள் பல ஏற்பட்டன. ஒரு நாள் அவன் பனங்காய் வெட்டுவதற்காகப் பனை மரத்தில் ஏறியபோது கால் தவறிக் கீழே விழுந்ததில், பலத்த காயம் அடைந்தான். அத்துடன் ஜுரம் கண்டு, ஜன்னியும் பிறந்து விட்டது. சாகுந் தறுவாயில், அவனுக்குச் சற்றுப் புத்திசுவாதீனம் ஏற்பட்டது. அவன் கிராம சபை யார்களுக்குச் சொல்லி அனுப்பி, தானே சிவன் கோவில் நகைகளைத் திருடியதாக ஒப்புக்கொண்டான். தனக்குப் பார்வதியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற விருப்பமென்றும், அவள் நல்லண்ணன் மீதே காதல்கொண்டு தன்னை நிராகரித்தா ளென்றும், அது முதல் நல்லண்ணனையும் பார்வதியையும் பிரித்துவைக்க நீண்ட நாட்களாகத் தனக்கு யோசனை உண்டென்றும் கூறினான். ஒரு சமயம் குப்பன் வீட்டிற்குப் போயிருந்தபோது, நல்லண்ணன் மோதிரம் மாடத்தில் வைத்திருந்ததைப் பார்த்து அதை எடுத்து வைத்துக்கொண்டதாகவும், கொஞ்ச காலத்திற்கெல்லாம் நல்லண்ணன் பிரம்மோத்ஸவத்தில் கோவில் நகைகளுக்குக் காவலிருந்தபோது, நல்லண்ணன் தூங்குகையில் கோவிலுக்குள் சென்று நகைகளைத் திருடிக்கொண்டு வேண்டுமென்றே மோதிரத்தைப் பெட்டியில் போட்டுவிட்டதாகவும் ஒப்புக்கொண்டான். “தெய்வ சொத்தைத் திருடினேன்; என் குடும்பம் உருப்படாமல் போய்விட்டது. உத்தமன்மேல் பழி சுமத்தினேன்; இப்படித் துர்மரணமாய்ப் போகிறேனே!” என்று ஓவென்று அலறினான் கந்தசாமி.
இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது. குயவன் குப்பனுக்கும் பார்வதிக்குங்கூடத் தெரிந்து விட்டது.
அப்போதுதான் பார்வதிக்கு உண்மை விளங்கிற்று; பதைபதைத்தாள். நல்லண்ணன் மோதிரத்தைத் தனக்குக் கொடுத்ததாக வெளியில் சொல்லக்கூடாது என்றே இவ்வளவு காலம் மௌனமாய்க் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறானென்று தெரிந்ததும் துக்கம் பொங்கி வந்தது.
குப்பனும் நல்லண்ணனின் பெருந்தன்மையைக் கண்டு வியந்தான். தானும் எல்லோருடனும் சேர்ந்து அவனைக் குற்றவாளி யென்றே அதுவரையில் நினைத்ததற்கு மனம் நொந்துபோனான். பார்வதி அவனைச் சும்மா விடவில்லை. அவன் எங்கிருந்தாலும் கண்டு பிடித்துவிட வேண்டுமென்று அவனைத் தூண்டலானாள்.
மாயவரத்தில் மாயூரநாதர் உத்ஸவத்திற்கு ஏராளமான கூட்டம். கடைகள் கணக்கின்றி வைத்திருக்கிறார்கள். ஒரு பானைக்கடை வாசலில் குப்பனும் பார்வதியும் நிற்கிறார்கள். பார்வதி ஒரு பானையை எடுத்து, திருப்பித் திருப்பி விரலால் தட்டினாள். பானை செய்திருக்கும் விதம் அவளுக்கு மனசில் ஒருவிதக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று.
பானைக் குவியல்களுக்கு நடுவில் உட்கார்ந்திருக்கும் பானைக்கடைக்காரனை உற்று நோக்கினாள். அவளை அறியாமல், “ஆ!” என்றாள்.
நல்லண்ணன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் நீர் நிரம்பிற்று. தலையைக் குனிந்து கொண்டான்.
“நீங்க செய்தது நல்லா யிருக்கா ?” என்று கேட்டாள் பார்வதி.
“நீ திருடனைக் கட்டிக் கொள்ளக் கூடாதென்று தான் ஓடி வந்துவிட்டேன்” என்றான் நல்லண்ணன்.
“யார் திருடன்? அதுதான் எல்லாம் தெரிந்து போய்விட்டதே!” என்று கந்தசாமி வெளியிட்ட விவரங்களைச் சொல்லி, அவன் வீடு, சொத்துக்களை யெல்லாம் திருப்பிக் கொடுக்கக் கிராம சபையார் காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தாள்; பிறகு, “எழுந்திருங்க; ஊருக்குக் கிளம்புங்க” என்றாள்.
நல்லண்ணன் பிற்காலத்தில் கணவன் என்ற முறையில் கீழ்ப்படிய வேண்டியிருந்தவன், இப்போதே அடங்கிப் போய்ப் பார்வதி சொன்னவாறே கேட்கலானான். மறுநாள் நல்லண்ணன் அவிநாசிக் கிராமத்தில் குப்பன் வீட்டிற்கு வந்துவிட்டான்.
நல்லண்ணனும் பார்வதியும் அந்தக் கிராமத்திலேயே குடித்தனம் செய்தார்கள். அங்கே நல்லண்ணன் பானைக் கடை வைத்த பிறகு ஊரில் எல்லாரும் அவனிடமே பானை வாங்கினார்கள். ஒருகால் அவன் கையினால் செய்த பானையில் சாப்பிட்டால்கூட நாணயமும் பெருந்தன்மையும் உண்டாகும் என்று அவர்களுக்கு எண்ணமா யிருக்கலாம்.
– காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.