குமர்ப் பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2024
பார்வையிட்டோர்: 442 
 
 

கீழே காணும் சம்பவத்தை படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை. நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து நான் நிறையச் சம்பாதித்தேன். மனைவி போன பின்னர் நாலு பிள்ளைகளும் நாலு நாடுகளில் தங்கிவிட்டார்கள். குளிர் கூடக்கூட பகல் குறையும் நாடு அது. என் பிறந்த ஊரில் மீதி வாழ்நாளைக் கழிக்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு. போர் முடிந்ததும் யாழ்ப்பாணத்துக்குப் போய் நான் பிறந்து வளர்ந்த வீட்டை திருத்தி எடுத்து தங்கினேன். 20 வருடங்களுக்குப் பின் என் சொந்த ஊரைப் பார்க்கிறேன். உடையாத ஒரு வீட்டைக்கூடக் காணமுடியவில்லை. கோயில்களின் நிலைதான் மோசம். பார்த்துப் பார்த்து, தேர்வு செய்து குண்டு போட்டது போலிருந்தது. எல்லாமே தரைமட்டாமாகிவிட்டன. என் அப்பா விட்டுப்போன சில காணிகளும் வீடுகளும் இருந்தன. ஒரு காணியை விற்று அந்தக் காசில் எங்கள் ஊர் கோயிலை திருத்தி கும்பாபிஷேகம் செய்வித்தேன். ஊர்ச் சனங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்ல முடியாது.

அடுத்த ஊரில் இருந்தும் ஆட்கள் வந்து என்னைப் பார்த்தார்கள். அவர்களுடைய கோயிலும் இடிந்துவிட்டது. ஒரு வீட்டை விற்று அந்தக் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்வித்தேன். இப்படித் தொடர்ந்து என் காணிகளையும் வீடுகளையும் விற்று நாலு கும்பாபிஷேகங்கள் நடத்தினேன். எனக்கு ஓர் உதவியாளர் இருந்தார். நாள் முழுக்க ஒரே வேலையை அலுப்பில்லாமல் செய்யக் கூடியவர். சண்முகம் என்று பெயர். அவர்தான் காரியதரிசி. அவர்தான் டிரைவர். ஒரு மனுசி தினமும் வந்து சமைத்துவிட்டு போகும். என் வாழ்வில் முன் ஒருபோதும் அனுபவித்திராத ஒருவித அமைதி நிலவியது. அப்படி நினைத்தேன். அடுத்த நாளே எல்லாம் மாறியது.

வாசல் கேட்டில் ஒருவர் வந்து நின்று ’ஐயா’ என்று அழைத்தார். சண்முகம் போய் ஏதோ பேசி அவரை அனுப்பிவிட்டு வந்தார். அடுத்த நாளும் அதே நேரம் வந்தார். சண்முகம் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. மூன்றாவது நாள் கேட்டிலே நின்று ‘ஐயா, என்னிடம் ஒரு குமர் இருக்கிறது’ என்று கத்தினார். நான் கையைக் காட்ட சண்முகம் அவரை உள்ளே அழைத்து வந்தார். அவருடைய மகளுடைய கல்யாணத்துக்கு பண உதவி கேட்டு வந்திருக்கிறார் என்று நினைத்தேன்.

அவருக்கு வயது 60 இருக்கும். வேட்டி உடுத்து மேல் சட்டை அணியாமல், தோய்த்து தோய்த்து பழுப்பாகிய ஒரு சால்வையால் காந்திபோல போர்த்தியிருந்தார். அவர் கழுத்திலே பதக்கம்போல ஒரு திறப்பு தொங்கியது. நெற்றி நிறைய விபூதி. இன்றைக்கோ, நாளைக்கோ முந்தாநாளோ செத்துப்போகத் திட்டமிட்டதுபோல எலும்பு தள்ளி மெலிந்து போயிருந்தார். ஆனால் அவர் முகத்தில் ஜொலித்த சாந்தமும் அமைதியும் புன்னகையும் அபூர்வமாகவிருந்தன. கைகூப்பி ’நமச்சிவாயம்’ என்றார். நானும் சொன்னேன். ’அமருங்கள்.’ நெஞ்சை வலது கையால் தொட்டு ‘நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்’ என்று சொல்லியவாறு உட்கார்ந்தார். மறுபடியும் ‘என்னிடம் ஒரு குமர் இருக்கிறது’ என்றார். ‘மகளுக்கு மணம் பேசுகிறீர்களா?’ என்றேன். ‘ஓ, அப்படி ஒன்றும் இல்லை. கும்பாபிஷேகம் செய்வதற்கு பழைய கோயில் ஒன்று உண்டு. மிகவும் விசேடமானது. 500 ஆண்டுகளுக்கு முன்னர் சண்பகப் பெருமாள் என்ற மன்னன் கட்டியது. போர்த்துக்கேயர் படையெடுப்பில் கோயிலை மறைத்து மூடிவிட்டார்கள். இந்தச் சரித்திரம், சிங்கள ராணுவம் உட்பட, ஒருத்தருக்கும் தெரியாது. அதனால்தான் அவர்கள் குண்டு போட்டு அழிக்கவில்லை. தானாகவே சிதிலமடைந்து கிடக்கிறது. நீங்கள் மனம் வைத்தால் கோயிலை புனருத்தாரணம் செய்யலாம். உங்களை நம்பி வந்திருக்கிறேன்’ என்றார். ‘இதோ பாருங்கள். சொத்து எல்லாவற்றையும் விற்று நாலு கும்பாபிஷேகம் செய்து முடித்துவிட்டேன். இனிமேல் விற்பதற்கு ஒன்றுமே இல்லை. மன்னித்துவிடுங்கள்’ என்றேன்.’ ’மன்னிப்பா?. நீங்கள் எனக்கு நன்றியல்லவா சொல்லவேண்டும்’ என்றார். பின்னர் சட்டென்று எழுந்து போய்விட்டார்.

அவருடன் என் நிம்மதியும் போனது. அன்று இரவு எனக்கு தூக்கம் இல்லை. எப்படியும் அவருடைய கோரிக்கையை நிறைவேற்றிவிடவேண்டும் என்று தோன்றியது. ஒரு குமரைக் கரைசேர்க்கப் பாடுபடுவதுபோல இவர் இதே சிந்தனையாக அலைந்தார் என்பது தெரிந்தது. நான் மறுப்பு தெரிவித்தபோதும் அவர் புன்னகை மாறவில்லை. ’நீங்கள் எனக்கு நன்றியல்லவா சொல்லவேண்டும்’ என்றார். அவரை மறுபடியும் தொர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தபடியே அன்றைய இரவைக் கழித்தேன்.

அடுத்தநாள் காலை சண்முகம் ஓடிவந்து கதவுக் குமிழைப் பிடித்துக்கொண்டு மூச்சுவாங்க நின்றார். ’என்ன?’ ‘நேற்று வந்தவர் மறுபடியும் வந்திருக்கிறார்.’ எனக்கு மகிழ்ச்சி. நான் அவரைத் தேடிப் போகத் தேவையில்லை. ’ஐயா, ஒரு வேண்டுகோள். நீங்கள் ஒருமுறை வந்து கோயிலைப் பாருங்கள். அதற்குப் பின்னர் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எனக்குச் சரி’ என்றார். நான் உடனேயே புறப்பட்டேன். சண்முகம் காரை வெளியே எடுத்தபோது ‘மன்னிக்கவேண்டும், ஐயா. நான் காரிலே பயணிப்பதில்லை. நடந்து வருகிறேன். நீங்கள் கோயிலுக்கு போங்கள்’ என்றார். நான் முதலில் அங்கே போய் என்ன செய்வது? நானும் அவருடன் நடப்பது என்று முடிவு செய்தேன். போகும்போது உரையாடி அவருடைய சரித்திரத்தையாவது தெரிந்து கொள்ளலாம். நடக்கத் தொடங்கிய பின்னர்தான் தெரிந்தது கோயிலின் தூரம் ஆறு மைல் என்று.

’நாவுக்கரசன்’ என்பது அவராகவே வைத்த பெயர். அவருடைய இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. திருநாவுக்கரசர் மேல் அவருக்கிருந்த பக்தியால் அப்படி பெயர் சூட்டிக் கொண்டாராம். நாவுக்கரசர் என்றால் அது ஒருவர்தான். அதனால் தன் பெயரை நாவுக்கரசன் என்று சற்று மாற்றி வைத்தார். அப்பருடைய தேவாரங்கள் 3000 அவருக்குப் பாடம். பதிகங்களை தினமும் தான் பாடுவதாகச் சொல்லி ’சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ என்ற தேவாரத்தை இனிய குரலில் நடந்துகொண்டே பாடினார்.

ஒரு மைல் தூரம் நடந்திருப்போம். எனக்கு இளைத்தது. ’கழுத்திலே என்ன திறப்பு?’ என்று கேட்டேன். ’அதுவா மடத்தின் திறப்பு’ என்றார். ’மடத்திலே நிறையப் பொருள்கள் இருக்குமா?’ ’வேறொன்றுமில்லை. மாடுகள் உள்ளே புகுந்து படுத்துவிடும்’ என்றார். மிகப்பெரிய வாழைத்தோட்டத்துக்கு ஒரு காலத்தில் சொந்தக்காரராக இருந்தார். மனைவியும் வசதியான இடத்திலிருந்து அவருக்கு வாய்த்திருந்தார். வாழைத்தோட்ட லாபத்தில் இரண்டு லாரிகள் வாங்கினார். அவையும் லாபம் கொடுக்க மேலும் மேலும் வாங்கி செல்வத்தைப் பெருக்கினார். ஒரு மகனும் பிறந்தான். பணம் சேரச்சேர மனைவி பித்துப் பிடித்தவள் போல ஆனாள். பணவெறியில் ஆடினாள். மகனும் வளர்ந்து அவனுக்கும் பேராசை உலுக்கியது. அவர் வாழ்க்கையில் பெரும் விரிசல் விழ ஆரம்பித்தது. எத்தனை செல்வம் இருந்தால் என்ன? நிம்மதி இல்லாவிட்டால் வாழ்க்கை ஏது?

அவர்களுடைய பிரிவுக்கான முதல் காரணம் அவர் மனைவியின் முகத்தில் வாய் இருந்ததுதான். இரண்டாவது காரணம் இந்தக் கோயில். இது பரம்பரையாக மனைவியின் குடும்பத்துக்குச் சொந்தமானது.. கோயிலை நிர்மாணிக்க அவர் முடிவெடுத்தபோது அவள் மறுத்து பத்திரகாளியாக மாறினாள். அவருடைய சொத்துக்கள் முழுவதையும் அவளுக்கும் மகனுக்கும் கொடுத்தார். கோயிலை தன் பெயருக்கு ஒரு கடுதாசியில் எழுதி வாங்கிக் கொண்டார். இப்பொழுது கோயில் இருக்கிறது, அதைப் புனரமைக்க பொருளில்லை. அன்றிலிருந்து அவர் சபதம் எடுத்தார். காசை கையினால் தொடுவதில்லை. காரில் பயணம் செய்வதில்லை. கோயில் மடத்திலே தங்கியிருக்கிறார். காலையில் ஒரு தேநீர், இரவு கோயில் பிரசாதம் என்று கடவுள் தொண்டில் கழிக்கிறார். ’ஐயா, கோயில் கும்பாபிஷேகத்தை மட்டும் நடத்திவிட்டால் நான் பிறந்ததற்கான பயன் கிட்டியதாக நினைப்பேன்’ என்றார்.

மிகப் பழமையான கோயில்தான். நாவுக்கரசன் சொன்ன சரித்திரத்தை நான் எங்கேயும் படித்ததில்லை. ஆனால் யாரோ வில்லும் அம்பும் ஆயுதங்களாக வைத்திருந்த ஓர் அரசன் ஒரு காலத்தில் தன் பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்று கோயிலை கட்டி எழுப்பியிருக்கிறான். வயதான பெரிய மாமரம் ஒன்று வாசலிலே பிஞ்சுகளுடன் நின்றது. தலவிருட்சமாக இருக்கலாம். 100, 200, 500 வருடங்களுக்கு முன் எப்படி காய்த்ததோ அப்படியே இன்றும் காய்த்தது. கோயில் தனக்கு மேலே தானே விழுந்து இடிந்து கொண்டிருந்தது. என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நாவுக்கரசன் அவசரமாக உள்ளே நுழைந்தார். கருவூலத்தை பார்வையிட்ட நான் திடுக்கிட்டு துள்ளி ஓர் அடி பின் நகர்ந்தேன். மீண்டும் கூர்ந்து பார்த்தேன். படங்களாகப் பார்த்திருக்கிறேன். முதன்முதல் நேரில் பார்க்கிறேன். ஸ்ரீசக்கரம், அதுவும் மூன்று பரிணாமத்தில்.

எனக்கு தெரிந்து ஸ்ரீசக்கரம் அமைந்த கோயில் நூறு மைல் சுற்று வட்டாரத்தில் எங்கும் கிடையாது. மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்வார்கள். யந்திரங்களின் ராஜாவென்றும் கேள்விப் பட்டிருந்தேன். யந்திரத்தின் ஒவ்வொரு கோணத்திலும் தேவதைகள் வீற்றிருக்க நடுவில் அம்பிகை எழுந்தருளியிருப்பதுதான் ஸ்ரீசக்கரத்தின் சிறப்பு என்பது நான் கேள்விப்பட்டது.

1990 களில் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் 13 மைல் நீளம், 13 மைல் அகலமான ஸ்ரீசக்கரத்தை வற்றிப்போன குளத்தின் கெட்டியான நிலத்தில் கண்டுபிடித்ததாக பேப்பர்களில் படித்தது நினைவுக்கு வந்தது. 9000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது விமானி ஒருவர் தற்செயலாகக் கண்டாராம். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. உடல் நடுக்கம் குறையும் வரைக்கும் கொஞ்சம் அமைதியாகக் காத்திருந்தேன். திரும்பி நாவுக்கரசனைப் பார்த்தேன். அவருக்கு யந்திரம் பற்றிய முழுப் பெருமையும் தெரியாது. என் மனதில் அந்தக் கணம் தீர்மானித்துவிட்டேன், எப்படியும் கோயில் கட்டுமானப் பணியை தொடங்கிவிடுவது என்று. அந்த நாளும் கணமும் இன்றும் மனதில் நிற்கிறது. சித்திரை மாதம், சுவாதி நட்சத்திரம். அற்புதங்கள் நடக்கத் தொடங்கிய தருணம்.

வீட்டுக்கு வந்தேன். என் மனம் அலைபோல எழுந்து எழுந்து விழுந்தது. இரண்டு மடங்கு உடம்பில் பலம் கூடியது. மனம் பளிங்குபோல துலக்கமாயிருந்தது. ஒரு பெரிய ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெறத் தயாராவதுபோல உடம்பு முறுக்கேறி பரபரத்தது. ஒரு மின்னஞ்சல் வந்து அங்கே எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அதை வாசித்தபோது மின்னலடித்ததுபோல ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை. முன்பு கோயில் கும்பாபிஷேகம் செய்தபோது ஒரு நண்பருக்கு உதவி கேட்டு எழுதியிருந்தேன். அவர் பதில் எழுதவே இல்லை. இப்பொழுது 10 லட்சம் ரூபா அனுப்பியிருந்தார் பயன்படுத்தச் சொல்லி.

அது ஆரம்பம்தான். அடுத்த நாள் காலை ஒருவரை சண்முகம் அழைத்து வந்திருந்தார். கும்பாபிஷேகம் செய்தி ஏற்கனவே பரவிவிட்டது. நாலாவது கோயில் திருப்பணியை செய்த எஞ்சினியர். கடுமையான நோயினால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் நீண்ட நாள் இருந்து பிழைத்தவர். ’நான் கோயில் நிர்மாணத்தை இலவசமாக முடித்து தருவேன்’ என்றார். எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் உதவிகள் கிடைத்தன. என்னுடன் படித்த கட்டிடக் கலைஞர் இலவசமாக திட்டம் வகுத்து தந்ததுடன் மேற்பார்வை செய்யவும் சம்மதித்தார்.

ஒவ்வொரு நாளும் காலை ஆறு மைல் தூரம் நடந்து நாவுக்கரசன் வீட்டுக்கு வந்துவிடுவார். தினம் அவரைப் பற்றிய ஒரு புது விசயம் தெரிய வந்து என்னை ஆச்சரியப்படுத்தும். சமையல்காரர் என்று சொல்ல மாட்டார்; அடிசில்காரர் என்பார். ஈசானிய மூலை, கன்னி மூலை என்பார். எனக்கு ஒன்றுமே புரியாது. மக்கள் அவரிடம் நிறைய மரியாதை வைத்திருந்தனர். அவர் தேவாரம் இசைப்பதைக் கேட்க ஒரு கும்பல் தினம் வந்தது. ’தலையே நீ வணங்காய்’ என்று தொடங்கும் பதிகத்தை மூச்சு விடாமல் பாடுவார். ’ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ’அதுவும் ஒரு மூச்சுப் பயிற்சிதான். ஆண்டவன் தந்த மூச்சை அவனுக்கே அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.

’நெஞ்சம் உனக்கே இடமாக வைத்தேன்’ என்று நெஞ்சைத் தொட்டுக்கொண்டு அமர்வார். அவர் கண்களைப் பார்ப்பேன். உள்ளுக்கு ஏதோ எரிவதுபோல அவை சுடர்விடும். அன்றைய திட்டங்களைச் சொல்லுவார். கணக்கு வழக்குகளைப் பார்ப்போம். தொற்று வியாதிக்காரனை தொட்டாலும் தொடுவார் ஆனால் காசைத் தொடமாட்டார். காரிலும் போக மாட்டார். நடந்தே செல்வார். சண்முகம் காரில் பணத்தைக் கொண்டுபோய் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டு திரும்புவார்.

நீண்ட மூங்கில் கம்புகளில் சாரம் கட்டி ஆட்கள் பரபரவென்று வேலை செய்தனர். கோயில் திருப்பணியில் முழுக்கிராமமும் ஈடுபட்டு ஒரு திருவிழா போலவே எல்லாம் நடந்தது. தொண்டர்கள் திரண்டு வந்தனர். பக்கத்து ஊர்களில் செய்தி பரவி கேட்க முன்னரே உதவி கிடைத்தது. இரண்டு ஸ்தபதிகள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். ஒரு செல்வந்தர் அவர்கள் முழுச்செலவுகளை ஏற்றுக்கொண்டார்.

ஒருநாள் செய்தி வந்தது. நாவுக்கரசன் உடல் நலமில்லாமல் மடத்தில் படுத்துக் கிடக்கிறார் என்று. உடனே மடத்துக்கு சென்று பார்த்தேன். சுருண்டுபோய் கிடந்தார். கழுத்தில் சாவி தொங்கியது. எலும்பும் தோலும் போர்வையில் சுற்றிக் காணப்பட்டது. அதே ஒரு நேரச் சாப்பாடுதான். ’இது என்ன பிடிவாதம். அம்பாளுக்காக உழைக்கிறீர். உண்பதினால் என்ன அபச்சாரம்’ என்றேன். வயிற்றைப் பிடித்துக்கொண்டு ‘ஆற்றேன், அடியேன்’ என்று உருண்டார். மருந்து எடுக்க மறுத்துவிட்டார். ’24 மணி நேரத்தில் இப்படி வயதாகிவிட்டீரே?’ ‘என் வாழ்நாளில் நான் ஆக இளமையாக இருக்கும் கணம் இதுதான். நாளை எனக்கு வயது ஒருநாள் மூப்பாகிவிடும்.’ தன் இளமையை நிரூபிப்பதுபோல படுக்கையில் கிடந்தவர் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கணீரென்று குரல் எடுத்துப் பாடினார்.

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்

தென் கடம்பை திருக்கரக் கோயிலான்

தன் கடன் அடியேனையும் தாங்குதல்

என் கடன் பணி செய்து கிடப்பதே

இரண்டு நாள் கழித்து நாவுக்கரசன் மறுபடியும் பணிசெய்ய வந்துவிட்டார்.

கும்பாபிஷேகம் தேதி குறிக்கப்பட்டு விட்டது. சுபவேளை காலை 6.50 – 7.25 என பத்திரிகைகள் எழுதின. ரேடியோக்கள் தொண்டர்களை பேட்டி கண்டு ஒலிபரப்பியது. 30,000 பேர்வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்தனை பேருக்கும் அன்னதானம் செய்யவேண்டும் என்று தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை நாவுக்கரசன் பார்த்தார். ஒருநாள் அவசரமாக ஓடி வந்தார். ’ஐயா, கணக்கீடுகள் பிழைத்துவிட்டன. 40,000 அடியார்கள் வரக்கூடும். இருப்பில் இருக்கும் அரிசி போதாது’ என்றார். கடைசி நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்றோம்.

அப்பொழுது இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. இப்பொழுது நினைத்தாலும் எனக்கு மயிர்கூச்செறிகிறது. ஒரு லாரி நிறைய அரிசி மூட்டைகள் வந்து இறங்கின. பேப்பரில் செய்தியை பார்த்துவிட்டு யாரோ அன்பர் கொழும்பிலிருந்து அனுப்பியிருந்தார். அவர் யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. இவை எல்லாம் எப்படி நடந்தன என்று இப்போது நினைக்கும்போது என்னாலேயே நம்பமுடியாமல் இருக்கிறது.

கும்பாபிஷேகத்தை ஆகம விதிகளின் பிரகாரம் நடத்த சாஸ்திர விற்பன்னர்களை அழைத்திருந்தோம். மேற்குப்பார்த்து அமைத்த யாகசாலைகளில் பூஜைகள் நடைபெற்றன. புனர் நிர்மாணம் தொடங்க முன்னரே மூல விக்கிரகத்தில் உள்ள சக்தியை கும்பத்துக்கு மாற்றும் பூசை நடைபெற்றிருந்தது. திருப்பணி முடிந்த பிறகு சக்தி மூலவிக்கிரகத்துக்கு சென்றுவிடும். அதற்கான பூஜைகள் விரைவில் ஆரம்பமாகிவிடும் என்றார்கள்.

முழுக்கிராமமும் ஒளி விளக்கில் ஜொலித்தது. மூங்கில் சாரம் இறங்கிவிட்டது; விழாவுக்கு வாழைமரம் கட்டியாகிவிட்டது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கோலாகலம். அன்று நடுச்சாமம் வாசல் கேட்டில் நின்று யாரோ அலறும் சத்தம் கேட்டது. விளக்கைப் போட்டு நாவுக்கரசனை உள்ளே அழைத்து வந்தார் சண்முகம். அவர் முகம் இருண்டுபோய் கிடந்தது. ஏதோ பேசினார். ஆனால் அவர் எண்ணுவது வார்த்தைகளாக மாறவில்லை. வழக்கத்தில் ’ஐயா, ஐயா’ என்று என்னை மரியாதையாக அழைப்பார். அன்று ஏதோ அந்நிய ஆளைப் பார்ப்பதுபோல கண்களை உருட்டி விழித்தார். சண்முகம் மூலையில் நடுங்கிக்கொண்டு நின்றார். ‘கும்பாபிஷேகத்தை நிறுத்து.’ இத்தனை நாளும் நான் பார்த்து பழகிய நாவுக்கரசன் அல்ல; இது வேறு ஆள்.

ஆறு வயது சிறுமியிடம் சொல்வதுபோல குரலை மாற்றி ‘அமருங்கள், பேசலாம்’ என்றேன். ‘நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்’ என்று இறுமாப்புடன் கூறியவாறே அமர்ந்தார். கையிலே வைத்திருந்த ஒரு மஞ்சள் நோட்டீசை நீட்டினார். மங்கலான எழுத்துக்கள். எக்ஸ்ரேயை பார்ப்பதுபோல மேலே பிடித்து விளக்கு வெளிச்சத்தில் படித்தேன். தலைப்பு ’கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்’ என்றிருந்தது. எந்த தேதி, எங்கே, என்ன நடக்கும் என்ற விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்ட கோயிலின் படம் மேலே அச்சடிக்கப்பட்டிருந்தது. கீழே இப்படி ஒரு வரி காணப்பட்டது. ’பக்தர்கள் அனைவரும் திரண்டு வந்து அம்பாளின் அனுக்கிரகம் பெற்று ஏகுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

இங்ஙனம்

பார்வதியம்மாள்

திருநீலகண்டன்

’யார் பார்வதியம்மாள்?’ என்று மெதுவாகக் கேட்டேன். ’பார்வதியம்மாள் இல்லை. பாதகத்தியம்மாள். என் மனைவி. அது என் மகன்.’

நான் திகைத்துப்போய் ஒரு நிமிடம் பேசமுடியாமல் நின்றேன். ‘அவளுக்கும் என் மகனுக்கும் இதில் சம்பந்தமே கிடையாது. அவள் எனக்கு எழுதித் தந்த கோயில் இது. அவர்கள் வரக்கூடாது. உடனே கும்பாபிஷேகத்தை நிறுத்து’ என்றார். ‘கோயில் கும்பாபிஷேகம் ஊருக்கு பொதுவானது. யாரும் வரலாம், போகலாம். இது கடவுளின் இடம். அதை தடுக்க யாருக்கும் உரிமையில்லை.’

‘உரிமை இல்லையா? அவள் எனக்கு எழுதித் தந்த கோயில். நான் இத்தனை பாடுபட்டேன். புகழ் எல்லாம் அவளுக்கா?’

‘புகழ் ஆருக்குப் போனால் என்ன? பலன் உங்களுக்குத்தானே.’

அமர்ந்திருந்தவர் பட்டென்று எழுந்தார். தூணைப் பிளந்து நரசிம்ம அவதாரம் புறப்பட்டது போல இருந்தது.

’இத்தனை நாள் கழித்தும் அவள் வன்மம் தீரவில்லை. என் நிம்மதியை கெடுக்க வந்துவிட்டாள். செட்டை முளைத்த புழு மறுபடியும் ஊராது.’

’நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே அப்பர் தேவாரம் ‘நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்’ அடுத்த அடியை நினையுங்கள். ’வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன்.’ ஆண்டவன் சந்நிதியில் வஞ்சம் வேண்டாம். இத்தனை பாடுபட்டு இறுதி நிலைக்கு வந்துவிட்ட கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாக செய்து முடிப்போம்’ என்றேன். வெளியே வரத்துடிக்கும் இருதயத்தை அதட்டுவதுபோல தன் நெஞ்சிலே கையினால் ஓங்கிக் குத்தினார்.

‘உடனே நிறுத்துவேன். நான் கோர்ட்டுக்குப் போவேன்.’ இப்படிச் சொல்லியபடி அவசரமாக எழுந்து கேட்டை நோக்கி ஓடினார். சண்முகம் அவர் பின்னாலே ஓடி கேட்டை மூடிவிட்டு வந்தார்.

அடுத்த நாள் அதிகாலை சண்முகம் செய்தியுடன் வந்தார். திருநாவுக்கரசன் கோர்ட்டுக்குப் போய்விட்டார். ’எப்படிப் போனார்?’ என்று கேட்டேன். ’நடந்துதான்’ என்றார் அவர்.

கும்பாபிஷேகம் கிரியைகள் தொடங்குவதற்கு ஒரு நாள்தான் இருந்தது. கோயில் அவர் பெயரில் இருந்தபடியால் தடை உத்தரவு பெறுவதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்றே தோன்றியது. விழாவுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அடியார்கள், பக்தர்கள், நன்கொடையாளர்கள் என கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. நீதியரசர் வருவதாக செய்தி கடைசி நேரத்தில் வந்தது. அவர் என்னுடைய தனிப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு வருகிறார். நூற்றுக் கணக்கான தொண்டர்கள் இரவு பகலாக உழைத்தனர். ஒலிபெருக்கிகள் பக்திப் பாடல்களை முழங்கின. பல ஊர்களில் இருந்து சனங்கள் வண்டி பிடித்து வந்து குழுமியிருந்தனர். விடிந்தால் கும்பாபிஷேகம். கடைசி நேரத்தில் தடையுத்தரவு வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது. ஒன்றுமே புரியாமல் நான் திணறினேன்.

அன்றிரவு நான் கோயிலுக்குள் புகுந்தேன். இரவு போனது இதுதான் முதல் தடவை. எனக்கு பிரார்த்தனை எப்படி செய்வது என்று தெரியாது. நாவுக்கரசன் போல 3000 தேவாரங்களையும் மனனம் செய்ததில்லை. உள் பிரகாரத்தில் அசையாமல் உட்கார்ந்திருந்தேன். ’அன்னையே, நான் இங்கு வந்த முதல்நாள் நீ செய்த அற்புதத்தினால் ஈர்க்கப்பட்டேன். தொடர்ந்து பல அற்புதங்கள் நிகழ்த்தினாய். இவையெல்லாம் செய்தது கோயிலை மறுபடியும் இழுத்து மூடவா? 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. நீ 500 வருட காலம் இருட்டிலே கிடந்தாய். மீண்டும் இருட்டில் மூழ்குவதுதான் உன் நோக்கமா?’

’பணத்தை தொடுவதில்லை. காரில் பயணம் செய்வதில்லை. நாள் முழுக்க விரதம். மூச்சு விடாமல் தேவாரம் பாடுவது. இதுதான் பக்தியா? ஆணவத்தை அடக்க முடியவில்லையே. சிறியன சிந்தியாதான் என்றல்லவா அவரை நினைத்திருந்தேன். இத்தனை அற்புதங்கள் நிகழ்த்தினாய். இன்னும் ஒன்று செய். இந்த கும்பாபிஷேகம் நடக்கவேண்டும்.’

அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. காலையில் என்ன செய்தி வரும்? இடைக்கால தடை உத்தரவு கிடைத்தால் எப்படி எதிர்கொள்வது?. ஒவ்வொரு நிமிடமும் நரகமாக இருந்ததால் எல்லா நேரமும் ஒன்றுபோலவே பட்டது. பொழுது விடிந்ததும் சண்முகம் ஓடி வந்தார். பாதி தூரம் வந்ததும் நின்றார். மீதியை கடக்க என் உத்தரவு தேவைப்பட்டதுபோல என் முகத்தைப் பார்த்தார். ’என்ன?’ என்றேன். உற்று நோக்கியபோது அவர் முகத்தில் காணப்பட்ட உணர்ச்சி சோகமா மகிழ்ச்சியா என்பது தெரியவில்லை. மேலும் ஓர் அடி முன்னே வைத்தார். ‘கோர்ட்டுக்குப் போகும் வழியில் நாவுக்கரசன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நின்றார். அப்படியே பின்பக்கமாக விழுந்தார். உடனேயே உயிர் பிரிந்துவிட்டது.’

இதுவா அற்புதம்? இதையா நான் யாசித்தேன்? ’எனக்கொரு குமர் இருக்கிறது’ என்று தினமும் அலைந்த உன் பக்தனைக் கொன்றுவிட்டாயே. ’ஐயோ நான் கொலைகாரன்’ என்று சொல்லி தலையில் அடித்தேன். சண்முகம் ‘ஆகும் நாளின்றி எதுவும் ஆகாது.’ காலம் வந்தது. அவர் போய்விட்டார். அவர் சாவுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே கிடையாது’ என்றார்.

நாவுக்கரசன் இறந்தது சண்முகத்துக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். பார்வதியம்மாள் பத்து அங்குலம் சரிகை வைத்த மாதுளம்பழ கலர் பட்டுப் புடவை அணிந்திருந்தார். நாலுவடம் சங்கிலி, வைர அட்டிகை, காசுமாலை, தங்க வளையல், முத்து தோடு என சகல அலங்காரங்களுக்கும் குறைவில்லை. அவர் பக்கத்திலே உட்கார்ந்திருந்த அவர் மகன் தர்ப்பை அணிந்து தலைப்பா தரித்து கையிலே கும்பத்தை பெற்றுக்கொண்டான். நானும் சண்முகமும் தூரத்தில் நின்று பார்த்தோம். கும்பாபிஷேகம் ஆரம்பித்துவிட்டது.

– December 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *