குதம்பேயின் தந்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 22,011 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாங்கள் நாலு பேரும் வந்து இறங்கினோம். நான், மனைவி, என் ஆறுவயது மகன், என் இரண்டு வயது மகள். மேற்கு ஆபிரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு சேதமின்றி வந்து சேர்ந்து விட்டோம். அங்கே நூற்றுக்கணக்கான குடியிருப்புக்கள்; எல்லாம் கம்பனி வீடுகள் தான்.

காடுகள் வெட்டும் பகுதிக்கு நான் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தேன்; ஒரு வருட ஒப்பந்தம். என் மகன் அடிக்கடி வந்து என்னைக் கேட்பான் “அப்பா, உங்களுக்கு என்ன வேலை?” என்று. நான் ‘வெட்டி விழுத்திற வேலை’ என்று சொல்வேன். அவனும் விளங்கியது போல சிரித்துக் கொண்டே ஓடி விடுவான்.

என் மனைவி, எவ்வளவு சொல்லியும் கேளாமல், பிடிவாதமாக தொடர்ந்து வந்து விட்டாள்; ராமனுடன் போன சீதை மாதிரி.

இது தான் எனக்கு ஆபிரிக்காவில் முதல் அனுபவம். அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது; புத்தகங்களில் படித்தது தான்.

மாமியார் மாத்திரம் என் மனைவிக்கு, ஓர் அரிய அறிவுரை கூறி அனுப்பியிருந்தார். “அங்கேயெல்லாம் ஆட்களை முழுசாக விழுங்கி விடுவார்; நீ கவனமாயிரு. பிள்ளைகளை மாத்திரம் தனிய விட்டு விடாதே?” என்று என் மனைவியும் அந்த புத்திமதியை சிரமேற்கொண்டு மகளை இடுப்பில் காவிய படியும், மகனைக் கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டும் வந்து சேர்ந்து விட்டாள்.

என்னுடைய மேலதிகாரியின் பேர் ‘லமபோ லெவாலி’ பெயரைப் போலவே அவரும் ஆடம்பரமாகவே இருந்தார். சிறுவயது முதல் இங்கிலாந்திலேயே படித்தவர். ஆறடிக்கும் மேலான உயரம்; ஆஜானுபாகுவான தோற்றம். இங்கிலீஸ் கதைத்தால் ஆங்கிலேயர் தோற்றார். பழக்க வழக்கங்களம் அப்படித் தான். அவர் நடக்கும் விதமும், இருக்கும் கம்பீரமும், பேசும் தோரணையும் அப்படி ஒரு பதவிசாக இருக்கும்.

என்னை எழும்பி நின்று வரவேற்று, வசதிகள் சரியாக இருக்கின்றனவா என்று விசாரித்து விட்டு, வேலை விஷயமாக சுருக்கமாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். அன்றிரவு அவர் எங்களுக்காக ஏற்பாடு செய்த விருந்திற்கு கட்டாயம் வரும்படி நினைவூட்டினார்.


நான் வெளியே வரும் போது “ஆஹா! இப்படியான மேலதிகாரியுடன் அல்லவா வேலை செய்ய வேண்டும்!” என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று பின்னேரம் மனைவி துள்ளிக் குதித்துக் கொண்டு வெளிக்கிட்டாள். அவளுக்கு விருந்துகள், கேளிக்கைகள் என்றால் அப்படி ஒரு குதூகலம்.

லெவாலியின் வீடு இங்கிலாந்தில் பார்க்கும் ஒரு வீடு போலவே இருந்தது. காட்டுக்குள்ளே இப்படி வசதிகளுடன் வீடு கட்ட முடியுமா? வாசலிலே ஆள் உயரமான இரண்டு யானைத் தந்தங்கள் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றன. வெண்மையாகவும், வழவழவென்றும் பார்க்க அழகாக இருந்தது.

குடிவகைகள் எல்லாம் அடுக்கியபடி ஒரு ‘பார்’. அதிலே ஒருத்தன் நின்று வேண்டியவற்றை ஊத்திக் கொடுத்துக் கொண்டிருந்தான். முப்பது விருந்தினர்கள் மட்டில் வந்திருந்தார்கள்; முக்கியமான அரசாங்க அதிகாரிகள், குடிகள் தலைவர் (Paramount Chief) கந்தோரில் வேலை செய்பவர்கள், இப்படி.

வாசலிலே நின்ற லெவாலி, “வாருங்கள், ரி.சீ.வாருங்கள்” என்றார். என் மனைவியிடமும் கை கொடுத்து வரவேற்றார்.

பேயாட்டம் (devil dancing) என்று ஓரு ஆட்டம். முடிவே இல்லாமல் இது நடந்து கொண்டிருந்தது. விருந்தினர்கள் எல்லாம் பங்கெடுத்துக் கொண்டார்கள். பார்க்க பயங்கரமாக, ஆனால் உற்சாகமாக இருக்கும்.

லெவாலியின் இரண்டாவது மனைவி, கட்டிளம் பெண், என் மனைவியிடம் வந்து பேசிக் கொண்டிருந்தாள். (இந்த இரண்டாவது மனைவி விஷயத்தில் மாத்திரம் லெவாலி ஆங்கிலேயரைப் பின்பற்றவில்லை; ஆபிரிக்கப் பழக்கத்தையே கைக் கொண்டார்).

அவள் என் மனைவியின் நெற்றியிலே இருந்த பச்சை நிறப் பொட்டைப் பார்த்துவிட்டு ‘இது எந்த இனத்தைக் குறிக்கிறது’ என்று கேட்டாள். என் மனைவிக்கு இது சட்டென்று புரியவில்லை. பின்னால் போகப் போகத்தான் நாங்கள் இதைப் புரிந்து கொண்டோம்.

அங்கே குழந்தைகள் பிறந்தவுடனேயே அந்த அந்த இனம் (Tribe) தங்கள் சின்னத்தை குழந்தையின் முகத்திலேயும், மார்பிலேயும் பொறித்து விடுவார்கள்.

ஒரு கூரிய கண்ணாடித்துண்டினால் இப்படிக் கீறிக்கொள்வார்கள். இந்த வடு இறக்கும் வரை அழியாது. இதன்படி ஒரு இனத்தவர் தங்கள் இனத்தாரை உடனே அடையாளம் கண்டு கொள்வார்கள்.

என் மனைவி “இது இனத்தைக் குறிப்பதல்ல; அழகுக்காகத் தான் வைக்கிறோம்” என்று சொல்லியும் அவள் நம்பியதாகத் தெரியவில்லை.

இன்னும் ஒரு நங்கை, அவளுக்கு வயது பதினாறு இருக்கும், வந்து மனைவியுடன் ஒட்டிக் கொண்டாள். அவள் ஒரு ‘லெபனிஸ்’ கன்னி. உயர்ந்த குதிகால் ஆணி; தொடை தெரியும் ஸ்கர்ட், நீண்ட கழுத்து வைத்த இறுக்கமான மேல் சட்டையுடன் வெள்ளை வெளேர் என்று இருந்தாள். எல்லோருடைய கண்களும் அவள் மேல் தாவிய படியே இருந்தன.

அவள் என் மனைவியின் சேலையைத் தொட்டு தொட்டுப் பார்த்தாள்; பிறகு தடவிப் பார்த்தாள். அவளுக்கு அதில் அப்படி ஒரு மோகம் தனக்க வெக காலமாகவே சேலை உடுக்க ஆசையென்று சொன்னாள். அதற்கு மனைவி, “அதற்கென்ன நான் கட்டி விடுகிறேனே! இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே?” என்று சொன்னாள்.

ஆனால் அந்த இளம் பெண் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கூறினாள்; “இது எங்கள் வீட்டில் நடக்காத காரியம். எனக்கு எவ்வளவோ விருப்பம் தான்; ஆனால் ‘அசிங்கம்’ என்று வீட்டிலே தடை போட்டு விடுவார்கள்.

என் மனைவி ஆடிவிட்டாள். “என்ன, அசிங்கமா? சேலையா?” என்று கேட்டாள். அதற்கு அந்த நங்கை கண்களை அகலவிரித்து, முக்கால் வாசி மார்புகளைக் காட்டிய படியே, சொல்கிறாள்;

“ஆமாம்; இடையைக் காட்டி சேலை உடுப்பதை எங்கள் வீட்டில் செக்ஸ’யாகக் கருதுகிறார்கள். இது நடக்காத காரியம்.”

என் மனைவி திகைத்து விட்டாள். இந்தக் கதையை பின்னர் அவள் என்னிடம் விபரித்த போது நானும் தான் அதிர்ந்து விட்டேன்.


நான் லெவாலியையே அவதானித்துக் கொண்டிருந்தேன். அவர் ஒவ்வொருவராகப் போய் சந்தித்து, கை கொடுத்து, உரையாடிக் கொண்டே வருகிறார். அவர் குடிப்பது என்றால் பிராந்தி தான் குடிப்பார். அதுவும் சாதாரண பிராந்தி அல்ல; ‘ரெமி மார்டின்’. அந்தக் காலத்திலேயே அதன் விலை 80 டொலர்.

அவர் குடிப்பதை அன்று பார்த்தேன்; பிறகும் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு பொருளின் மதிப்பு அறிந்து ஒருவர் அனுபவிக்கும் போது அது ஒரு கலையாகவே உயர்ந்து விடுகிறது.

எங்கள் ஊரில் ஆட்கள் பத்து சதம் கொடுத்து விட்டு ‘பிளாவிலே’ பனங்களை ‘மடக் மடக்’ கென்று குடிப்பது போன்ற விஷயம் அல்ல அது. லெவாலி ஆற அமரத்தான் அந்த சுவையை அனுபவிப்பார்.

முதலில் பிராந்தி கிளாஸை எடுப்பார். அது மேற்பக்கம் சுருங்கி, கீழ்பக்கம் அகன்று ஒரு நீண்ட காம்பின் மேல் நிற்கும். அதை இடது கையில் நடு விரலுக்கும், ஆள் காட்டி விரலுக்குமிடையிலே வைப்பார். பிறகு போத்தலை ‘டங்’ என்ற சத்தத்துடன் திறந்து பிராந்தியை கால்பாகம் ஊற்றுவார். அது விழும் சத்தம் ‘கிளிங், கிளிங், கிளிங்’ என்று கேட்க இதமாக இருக்கும்.

திராட்சை ரசத்தில் சூரிய ஒளியைக் கலந்தது போல ஒரு மின்னும் அழகு. அதையே கண்களால் சிறிது நேரம் பருகிக் கொண்டு இருக்கலாம். இப்போது உள்ளங்கையால் கிளாஸ’ன் அடிப்பாகத்தை தழுவ கையின் சூடு பிராந்தியை கொஞ்சம் வெது வெதுப்படைய வைக்கும். அப்போது பிராந்தி கிளாஸை மூக்கின் கீழ் கொண்டு வந்து அங்கும், இங்கும் அசைத்து அதை முகர்ந்து அதிலேயே கொஞ்ச நேரம் கிறங்கி நின்று பிறக மெள்ளச் சரித்து சிறிது பிராந்தியை வாயின் உள்ளிழுத்து, சுவைத்துப் பருக வேண்டும்.

எது காரணம் கொண்டும் பிராந்தியை ‘மடக் மடக்’ என்று குடிக்கக் கூடாது. அது பிராந்தி தேவதைக்கு செய்யும் மகா அவமரியாதை. இதனிலும் மிக முக்கிய விதி; பிராந்திக்க ஐஸ் காட்டவே கூடாது. அது பிராந்தியின் பவித்திரத்தை கெடுத்து விடுமாம்.

“ஐம்புலன்களையும் ஒருங்கே ஆக்கிரமிக்கிறது இந்த பிராந்தி ஒன்றுதான்” என்று லெவாலி அடிக்கடி கூறுவார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவருடைய உற்சாகமும் வாழ்க்கையை அனுபவிக்கின்ற ருசியும் எங்களிடமும் ஓடி வந்து விடும்.

இப்படியாகத்தான் எங்களுடைய ஆபிரிக்க வாழ்க்கையின் முதல் நாள் குதூகலத்துடனும், ஆச்சரியம் தரும் வகையிலும் தொடங்கியது.


நாங்கள் வெளியே வரும் போது என் மனைவி “நீங்கள் என்ன? அவர் உங்களை ‘ரி.சீ, ரி.சீ’ என்று கூப்பிடுகிறாரே? இது என்ன புதுப்பேரா? ‘ரவாலர்ஸ் செக்’ என்று சொல்வது போலிருக்கிறதே” என்றாள்.

“என்னுடைய முழுப் பெயரையும் – ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்வதற்கிடையில் அவருடைய பல் எல்லாம் உடைந்து விடுகிறதாம். நான் தான் மனமிரங்கி ‘ரி.சீ’ என்று கூப்பிடலாம் என்று சொல்லி விட்டேன்” என்றேன்.

“அவருடைய பேரைப் பாடமாக்க எங்களுக்கு மூன்று நாள் எடுத்ததே? ‘லம்போ லெவாலி’ என்று சொல்ல எவ்வளவு கஷ்டமாயிருக்கு; மூச்சு எடுக்குது. ‘உங்கள் பேரை சக்கிரீவன் என்று மாத்துவோமா?’ என்று கேட்டோமே? இல்லையே? ஒருத்தரில் உண்மையான மதிப்பு இருக்குமெண்டால் நாங்கள் கொஞ்ச நேரம் செலவழித்து அவருடைய பேரைச் சரியாக உச்சரிக்கப் பழக வேணும். இது அவருக்குக் காட்டும் மரியாதை” என்றாள் என் மனைவி.

நான் “நீ சொல்வது உண்மை; முற்றிலும் உண்மை; உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் அவர் எனக்கு சம்பளம் கொடுக்கிறாரே! நீ கொடுக்கிறாயா? இல்லை. அவர் நாளைக்கு களைத்துப் போய் இனிமேல் ‘ரீ’ என்று கூப்பிடுவதென்றாலும் ‘ஆஹா’! என்பேன்; இல்லை ‘கோப்பி’ என்றாலும் ‘சரி’ என்பேன்”, என்றேன்.

என் மனைவி “உங்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டிய இடத்தில் கடவுள் ஈக்கு குச்சியை வைத்து விட்டார்” என்றாள்.

நான் “அது உனக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு! தயவு செய்து மற்றவைக்கு சொல்லி விடாதே!” என்றேன்.


இரண்டு நாள் போனது. மூன்றாம் நாள்தான் இந்த பேச்சு வந்தது.

“அந்த யானைத் தந்தம் என்ன மாதிரி இருக்கு! எவ்வளவு உசரம்! என்ன வடிவு! எங்களுக்கும் அது மாதிரி இஞ்ச வாங்க ஏலாதோ? என்றாள் என் மனைவி.

“எங்கடை பக்கத்து நாட்டுக்கு பேர் ‘ஐவரிகோஸ்ட்’ அதாவது ‘தந்தங்கள் ஏற்றுமதி செய்யும் நாடு’. ஒரு காலத்திலை அங்கையிருந்து ஆயிரக் கணக்கான தந்தங்களை உலகம் எங்கும் ஏற்றுமதி செய்தார்களாம். இந்த ஊர்தான் யானைகளுக்கு பேர் போனதாச்சே!” என்றேன்.

“லெவாலி வீட்டிலை நாங்கள் பார்த்த தந்தம் என்ன உயரமிருக்கும்? இதைக் தூக்குறதெண்டால் அந்த யானை இன்னும் எவ்வளவு பெரிசாயிருக்க வேணும்?”

“இந்த யானைகள் பன்னிரெண்டு அடி உயரம் வரைக்கும் வளரும்; எடை ஒரு ஏழு டன் ஆவது இருக்கும். ஒன்பது அடி நீளத் தந்தங்கள் கூட இருக்கு, ஒவ்வொரு தந்தமும் 100 கிலோ எடை தேறும். ஆனால் இஞ்ச ஆபிரிக்காவிலை யானைகள் இந்திய யானைகளைப் போல இல்லை. வேற மாதிரி” என்றேன்.

“என்ன மாதிரி?”

“இந்தியாவில் ஆண் யானைக்கு மாத்திரம் தான் தந்தம் இருக்கும். இஞ்சயோ ஆண், பெண் இரண்டுக்குமே தந்தம்; சம உரிமை” என்றேன்.

“வேற”

“மற்றம்படிக்கு ஆபிரிக்க யானை சரியான பெரிசு; பெரிய காதுகள், பெரிய தந்தங்கள் இப்படியாய் இருக்கும்.”

“இந்த தந்தங்கள் யானை இளமையாயும், பலமாயும் இருக்கும் வரை யானைக்கு பெரிய பாதுகாப்பாக இருக்கும். ஆனால் வயது போய் உடல் தள்ளாடத் தொடங்கினாலும் தந்தம் மாத்திரம் மெலியாமல் அப்படியே இருக்கும். யானை இந்த தந்தத்தை தூக்கிக் கொண்டு அலைஞ்சு சரியாய் அல்லல்படும், பாவம்” என்றேன்.

“அப்ப நாளைக்கு ஒருக்கா விசாரிச்சுப் பாருங்கோ. இதை எங்கடை ஊருக்கு கொண்டு போனால் என்ன மதிப்பாயிருக்கும்” என்றாள்.


அடுத்த நாள் வேலையிலிருந்து வந்தவுடன் “என்ன, என்ன?” என்றாள் மனைவி; நான் முற்றிலும் மறந்து விட்டேன். “என்ன விஷயம்?” என்று திருப்பிக் கேட்டேன்.

“இல்லை, யானைத் தந்தம் பற்றி கேட்கிறேன் எண்டு சொன்னீங்கள்” என்றாள்.

“இது என்ன அறுகம்புல்லா, போய் படக்கென்று பிடுங்கிக் கொண்டு வர? மயிலிறகு பிடுங்கிறதுக்குக் கூட மயிலைத் தேடிப் போக வேணும். இது யானைத்தந்தம். யானையீட்டை போய்ப் பிடுங்க ஏலுமா, எங்கடை அவசரத்துக்கு?”

“ஒன்றில் யானை சாகும் வரை காத்திருக்க வேணும்; இல்லை ஒரு யானையைக் கொல்ல வேணும். எது வசதி?” என்று சொல்லித் தப்பிக் கொண்டேன்.


எங்கள் ஊரில் ‘தொட்டாட்டு வேலை’ என்று ஒன்றிருக்கு. ஆங்கிலத்தில் handy man என்று சொல்வார்கள். குதம்பே எனக்காக ஏற்படுத்தப்பட்ட தொட்டாட்டு வேலையாள். எனது பலவித சௌகரியங்களையும் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவன்.

அவனைப் போன்ற மகா முட்டாளை நான் பார்த்ததே இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுத் தான் அவனை எனக்காகத் தேடிப் பிடித்திருப்பார்கள் போலும். ஆனாலும், ஒரு சௌகரியம். உள்ள தாபங்களையெல்லாம் அவன் மேல் கொட்டலாம்.

குதம்பேயிடம் தான் இந்த யானைத் தந்தம் வாங்கும் பொறுப்பைக் கொடுத்தேன். அவன் இதுவரை இருநூறு தந்தங்கள் வாங்கிப் பழகியவன் போல மிகச் சாதாரணமாக அந்த வேலையை ஒப்புக் கொண்டான்.

‘இந்தா வருது’, ‘இந்தா வருது’ என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை விட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

இதற்கிடையில் குதம்பே கம்பனயில் ஒரு ‘லோன்’ கேட்டிருந்தான். நானும் அதை ‘சாங்ஷன்’ பண்ணிக் கொடுத்தேன். அதோடு நிற்கவில்லை. ஒரு நாள் தன் கடைக்குட்டி மகனை பள்ளியில் சேர்க்க வேணும் ‘இடமில்லையாம்’ என்று அழுது கொண்டு வந்தான். அந்தப் பள்ளிக்கூட, தலைமையாசிரியர் எனக்குத் தெரிந்தவர் தான்; ஒரு கடிதத்துடன் விஷயம் முடிந்த விட்டது.

ஆனால் என்னுடைய தந்தம் மாத்திரம் தரித்திரம் போல இழுத்துக்கொண்டே போனது. வீட்டிலேயும் இந்த விசர் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. என் மனைவி இரவும் பகலும் இது பற்றியே சிந்திக்கத் தொடங்கினாள். கனவு கூடக் கண்டிருப்பாள் போலும். என்னை ஞாபகப்படுத்தாக நாளே இல்லை. இந்த ஞாபகமூட்டல் பிறகு கரைச்சலாக மாறி அதற்கும் பின் எரிச்சலூட்டத் தொடங்கியது. இதிலிருந்து தப்ப முடியாது போல எனக்குப்பட்டது.


குதம்பே வழக்கம் போல வாராந்திர அறிக்கையை கொண்டு வந்து என் முன் வைத்தான். நான் முதல் இரண்டு வரியை மட்டுமே படித்தேன். ‘இதென்ன அறிக்கை இது? குப்பை! இதை ஆர் வாசிக்க போறான்; நீரே கொண்டு போம்’ என்று முகத்திலடிச்சது போலச் சொல்லிவிட்டு திரும்பவும் என் வேலையில் மூழ்கினேன்.

குதம்பே முனகிக் கொண்டு சிறிது நேரம் நின்றான். பிறகு அறிக்கையை எடுத்துக்கொண்டு போய் விட்டான்.

குதம்பே ஒரு பஞ்சுப் பொதி. திட்டு வாங்குவதற்கென்றே பிறந்தவன். எவ்வளவு தான் திட்டினாலும் அவ்வளவையும் உள்ளுக்கு வாங்கி வைத்துக் கொள்வான். கொஞ்சமாவது முகம் சுருங்க வேண்டுமே? கிடையாது. திட்டுபவர் தான் களைத்துப் போய் ஓய்வெடுக்க வேணும்.

கந்தோர் எனக்கு நரகமாகி விட்டது. வீட்டிலேயோ இன்னும் மோசம். போதாக் குறைக்கு, இப்ப இரண்டு நாளாக என் மனைவி கதைப்பது கூட இல்லை.


ஒருநாள் சனிக்கிழமை மத்தியானம் போல குதம்பே வீடு தேடி வந்தான். அவன் வீட்டுக்கு வருவது இது தான் முதல் தடவை. வெய்யிலில் வேர்க்க விறு விறுக்க நடந்து வந்திருந்தான். எனக்கு பார்க்க என்னவோ போலிருந்தது. வெளி விறாந்தையையில் உட்காரச் சொல்லி “என்ன விஷயம்” என்றேன்.

“நைஜ“ரியாவிலே இருந்து ஒருத்தன் நாலு ஜோடி தந்தம் கொண்டு வந்திருக்கிறான். உங்களுக்கு சௌகரியமென்றால் நாளைக்கே அவன் கந்தோருக்கு வருவான். நீங்களே விலை பேசி வாங்கலாம்” என்றான்.

எனக்கு மட்டில்லாத சந்தோஷம். தந்த வேட்டைக்கு ஒரு முடிவு கிடைத்து விட்டது போலத்தான் பட்டது. குதம்பேக்கு குடிக்க ‘என்ன வேண்டும்’ என்று கேட்டேன். அந்த வெயிலில் வேறு என்ன கேட்பான். பீர் தான் கேட்டான்.

என்னுடைய ஆறு வயது மகன் ஒரு போத்தல் பீரையும் ஒரு கிளாசையும் கொண்டு வந்து வைத்துவிட்டு ஓடி விட்டான். கும்பே மடமடவென்று அதை இளநீர் குடிப்பது போல குடித்து முடித்தான். மேற்கு ஆபிரிக்காவில் பீரும் ஒன்று தான் மோரும் ஒன்று தான்.

என் மகன் வெளியிலே விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து விட்டு குதம்பே சொன்னான்: “இந்த ஊர்களிலே ‘துப்பும் பாம்பு’ (Spittling Cobra) என்று ஒன்று இருக்கிறது. சிறு பிராணிகளை பார்த்து எட்டத்தில் இருந்தே ஒரு வித நஞ்சைத் துப்பி விடும். அதன் கண்களைப் பார்த்துத் தான் துப்பும். அந்தப் பிராணி ஓட முடியாது தவிக்கும் போது இந்தப் பாம்பு போய் பிடித்து விழுங்கி விடும்.”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி பாய்ந்து போய் வெளியிலே விளையாடிக் கொண்டிருந்த எங்கள் மகனை ‘பிராந்து’ தூக்குவது போல் தூக்கிக் கொண்டு உள்ளே வந்து விட்டாள்.

இது என் மனைவி என்னுடன் ‘டூ’ விட்ட நாள். பேசா மடந்தையாக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக வேலை இருப்பது போல் நடந்தபடியே இருந்தாள். அவளுக்கு ‘குதம்பே என்ன சொல்லுறான்? தந்தம் கிடைக்குமா? என்று அறிய ஆவல்.

கடைசியில் அவளுடைய ஆசை கட்டுக் கடங்காமல் போகவே சமையல் அறையில் இருந்து மெள்ள வெளியே வந்து ஓரமாக நின்று கொண்டு ‘இஞ்சருங்கோ’ என்று கூப்பிட்டாள்.

நான் வெளியே வந்து ‘என்ன?’ என்று கேட்டேன். “முருங்கைக்காய்க்கு என்ன புளி போடிறது? பழப்புளியா? தேசிக்காய் புளியா?” என்றாள்.

எனக்கு மனத்தை வருத்தியது. படிப்பை பாதியிலேயே எனக்காக நிறுத்தியவள். பெற்றோரையும், சுற்றத்தாரையும் துறந்து என்னையே கதியென்று வந்தவள். பெரிய வீடும் நாலு சமையல்காரருமாகச் செல்லமாக வளர்ந்தவள். முதன் முதலாக சமையல் அறையைப் பார்த்ததே இங்கே தான்; நான் இப்படிக் கருணையில்லாமல் இருக்கலாமா?

அவள் என்ன, சீதையைப் போல ‘மாயமானைப் பிடித்துத் தா?’ என்று கேட்டாளா? இல்லை, யானையைத் தான் கேட்டாளா? யானைத் தந்தம் தானே வேண்டுமென்றாள். கேவலம், இதைக்கூட என்னால் செய்ய முடியாதா?

அன்று முருங்கைக்காயுடன் நல்ல சாப்பாடு. ஆபிரிக்காவில் முருங்கைக்காய் என்ன சும்மா கிடைத்து விடுமா? நாலு மைல் தூரம் காட்டிலே போய் அல்லது தேடி ஆய வேண்டும். இதை ‘பேய்க்காய்’ (Devil stick) என்று தான் அங்கே சொல்லுவார்கள்; தொடவே மாட்டார்கள். இப்படி அருமையாகக் கிடைக்கும் காய்க்கு ருசியே தனி. அது மாத்திரமல்ல, என் மனமும் அன்று வெகு சந்தோஷமாக இருந்தது.


அடுத்த நாள் கந்தோரில் தந்தம் வந்து விடும் என்று எதிர்பார்த்தேன். வரவே இல்லை. குதம்பேயைக் கூப்பிட்டு விசாரித்தேன். அவன் கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.

நான் வீடு திரும்பிய போது என் மனைவி மந்தகாசமாக ஒரு புன்னகையோடு என்னை வரவேற்றாள். இந்த புன்னகையை விசேஷமான ஒரு சில நாட்களுக்கு மாத்திரமே அவள் ஒதுக்கி வைத்திருந்தாள்.

எனக்கு அந்த முகத்தைப் பார்க்கவே குற்ற உணர்வாக இருந்தது. நான் நடந்ததைச் சொன்னேன். அவள் முகம் வாடி விட்டது. கண நேரத்தில், தாமரைப் பூப் போல விகஸ’த்து இருந்த முகம் இப்படி வாழைப் பூ போல கூம்பி விட்டதே! இது எப்படி நடந்தது?

மறுநாள் குதம்பே நடந்ததைச் சொன்னான். அந்த நைஜ“ரிய வியாபாரி நல்ல விலை கிடைத்ததால் அந்த தந்தங்களை ஒரு லெபனிஸ் கடைக்காரருக்கு விற்று விட்டானாம். மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக் கணக்கான லெபனிஸ்காரர்கள் மடியிலே பணத்தைக் கட்டிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் அவர்களோடு போட்டி போட முடியுமா?

இன்னும் இரண்டு மாதங்கள் இப்படியே ஓடி விட்டன. என்னுடைய ஒரு வருட ஒப்பந்தத்தில் நாலே நாலு மாதங்கள் தான் மீதி இருந்தன. தந்தம் கிடைப்பது கனவாகி விடும் போலிருந்தது.

ஒரு நாள் மாலை. நான் கந்தோரில் நேரம் போவது தெரியாமல் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது குதம்பே அவசரமாக வந்தான். ‘என்ன விஷயம்?’ என்பது போலப் பார்த்தேன். அங்கே காட்டில் மரம் வெட்டும் குழுவோடு இவன் ரேடியோவில் தொடர்பு கொண்டானாம். வேலை இரண்டு நாள் அங்கே தடைப்பட்டு விட்டதாம். ஒரு யானைக் கூட்டம் வேலை செய்ய விடாமல் அந்த இடத்தில் உலாவுகிறதாம். பிறகு மெல்லக் கீழே குனிந்து “அதிலே ஒரு யானைக்கு தந்தம் இருக்கு” என்றான்.

“அதுக்கு நான் என்னய்யா செய்ய வேணும்” என்றேன்.

“இந்த மாதத்து மரங்கள் வருமதி வெகு சொற்பம். எங்களுடைய இலக்கில் (target) நாங்கள் அரைவாசி கூடத் தாண்டவில்லை. இது இப்படியே போனால் இந்த மாதம் முற்றிலும் பெரிய நஷ்டம் காட்ட வேண்டிவரும். யானைகளின் தொல்லை பொறுக்க முடியாதென்றால் அவற்றைச் சுட அதிகாரமிருக்கிறது. சென்ற வருடம் இப்படி இரண்டு முறை செய்திருக்கிறோம். நீங்கள் தான் உத்தரவு போட வேண்டும்” என்றான்.

“பாப்பம், பாப்பம்” என்று இருந்து விட்டேன்.


அடுத்த நாள் காலை முடிவு கேட்டு என்னை ரேடியோவில் கூப்பிட்டார்கள்.

“பிரவோ சார்லி, பிரவோ சார்லி”

“யானைகள் தொந்தரவு தாங்க முடியவில்லை. வேலைக்கு இடைஞ்சல்; என்ன செய்வது?” என்று கேட்டார்கள்.

“ஒரேயொரு யானையை வெடி வையுங்கள்; கூட்டத்தைக் கலைத்து விட்டு வேலையை கெதிப் படுத்தப் பாருங்கள்” என்று உத்தரவு கொடுத்தேன்.

ரேடியோ புத்தகத்தில் கையெழுத்தையும் இட்டு, தேதியையும் போட்டேன்.

அன்றிரவு என் மகன் கேட்டான்:

“அப்பா, யானை எவ்வளவு காலம் சீவிக்கும்?”

“நூறு, இருநூறு என்று எங்கள் ஊர்களில் சொல்வதெல்லாம் பொய், யானை 60, 70 வருடம் வரை தான் உயிர் வாழும்” என்றேன்.

“இந்த யானைத் தந்தம் எப்பிடிக் கிடைக்கும்?” என்றான் மனைவி.

“நிட்சயமாக ‘பாக்டரியில்’ கிடைக்காது. யானையிடமிருந்து தான் கிடைக்கம். ஒன்றில் யானை சாக வேணும்; அல்லது அதைக் கொல்ல வேணும்”

“வேறு வழியே இல்லையா?”

“இல்லையே. அதிலும் 99 வீதம் தந்தங்கள் யானையைக் கொலை செய்தே கிடைக்கிறது.”

“அப்பா, எங்கடை வாத்தியார் சொல்லுறார் யானைகளின் எண்ணிக்கை சரியாய்க் குறைஞ்சு போச்சுதாமே? உண்மையா?”

“டோடா, டோடா’ என்று ஒரு சாதிப் பறவை. உருண்டையான உடம்பும் சின்னக் கால்களுமாய் அந்தப் பறவை லட்சக்கணக்காய் ஒரு காலத்தில் இருந்தது. பறக்கக்கூடத் தெரியாது அந்த அப்பாவிப் பறவைக்கு. அதை மனுசன் விளையாட்டுக்காகச் சுட்டு சுட்டே கொண்று விட்டான். அந்த பறவை இனமே இப்ப உலகத்திலை இருந்து மறைஞ்சுப் போச்சுது. ஒரு பறவை கூட இல்லை. படங்களில் பார்த்தால் தான் உண்டு. இந்த யானைக்கும் அந்தக் கதி வந்து விடுமோ என்று சிலர் பயப்படுகினம்” என்றேன்.

“அது உண்மையாகி விடுமா? என்றாள் மனைவி.

“யானைகள் எப்பவும் கூட்டமாகத் தான் திரியும். ஏழு, எட்டு யானைகள் கொண்ட கூட்டம். ஒண்டுக்கொண்டு நல்ல ஒற்றுமையாயும், விசுவாசமாயும் நடந்து கொள்ளும். இந்தக் கூட்டத்துக்கு தலைவி பெண் யானை தான்.”

“நான் சொல்லுறது உண்மையாய் நடந்த ஒரு கதை. ஒரு சமயம் வேட்டைக்காரன் ஒருத்தன் தந்தத்துக்காக ஒரு யானையைச் சுட்டு விட்டான். அது சுருண்டு விழுந்தது, ஆனால் முழுவதும் சாகவில்லை. கூட்டத்திலிருந்த மற்ற யானைகள் அவனை துரத்திக் கொண்டு வர அவன் ஓடித்தப்பி விட்டான்.”

“ஒரு மாசம் கழிச்சு அவன் திரும்ப அதே இடத்துக்குப் போனான். யானை செத்துக் போயிருக்கும் அந்தத் தந்தத்தை எடுக்க. ஆனால் அந்த யானை விழுந்த இடத்திலே அப்பிடியே உயிரோடு கிடந்ததாம். மற்ற யானைகள் அதை விட்டுப் போகவே இல்லை. சாப்பாடும் தண்ணியும் கொண்டு வந்து கொடுத்து எப்படியோ ஒரு மாசம் வரை அதைச் சாக விடவில்லையாம்.”

“மனிதனுக்கு எவ்வளவு அழிவுபுத்தி இருக்குதோ அவ்வளவுக்கு யானைகளுக்கு சினேக புத்தியும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுற உணர்வும் இருக்குது. இந்த விஷயத்தில் யானையின் சாதகம் பலமாக இருக்குமெண்டுதான் நான் நிணைக்கிறேன்.”


அன்று பின்னேரம் நான் வீடு திரும்பும் போது எங்கள் கம்பனி வாசலிலிருந்து ஒரு கால் மைல் தூரத்தில் மரங்கள் கொண்டு வரும் பெரிய ‘லொறி’ ஒன்று நின்று கொண்டிருந்தது. அதைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கானவர்கள் ஆரவாரம் செய்து கொண்டும் சத்தம் போட்டு சிரித்துப் பேசிக் கொண்டும் நின்றார்கள். கார் அந்த லொறியின் சமீபத்தில் போன பின்தான் எனக்கு விஷயம் புரிந்தது.

அந்த லொறியின் மீது மல்லாக்காக மலைபோல ஒரு யானை செத்துப்போய் கிடந்தது. அதில் இருந்து பாய்ந்தரத்தம் திட்டுத்திட்டாக ஒரு இஞ்சு உயரத்துக்கு காய்ந்திருந்தது. யானையின் வாயும், துதிக்கைப் பாகமும் சிதிலமடைந்து ரத்தகளரியாக இருந்தது. யானையின் கால்கள் ‘ஓ’ வென்று மேலே ஆகாயத்தைப் பார்த்தபடி தூக்கி நின்றன. ஏசுநாதா கைகள் இரண்டையும் மேலே தூக்கி ஆகாயத்தை பார்த்து கதறியது போல இருந்தது எனக்கு.

காரை ஓட்டிய சாரதி சொன்னான்: “மாஸ்ட, இன்றைக்கு இரவு முழுக்க நல்ல விருந்தும் கும்மாளமுமாக இருக்கும் இந்த யானையைத் தின்று தீர்ப்பதற்கு மூன்று நாள் பிடிக்கும். இது தவிர, இன்றைக்கு எங்கள் குடிகள் தலைவர் மூன்றாவது மனைவியையும் எடுத்திருக்கிறார்; பதினெட்டு வயதுப் பெண். அவளுடைய நடனத்தைப் பார்க்க ஊர் முழுக்க அங்கே கூடிவிடும். ஆனால் மிகவும் முக்கியமானது, இப்போதெல்லாம் யானை இறைச்சி கிடைப்பது வெகு அபூர்வம்.”

வீட்டிற்கு நான் வந்திறங்கியதும் சாரதி காரைப் பூட்டி விட்டு எடுத்தான் ஓட்டம். மனைவி என்னிடம் “ஏன் ‘ம்பாயா’ இப்பிடித் தலை தெறிக்க ஓடுறான்” என்று கேட்டாள்.

நான் வழியில் கண்ட காட்சியை விவரித்தேன். மலைக்குவியல் போல அந்த யானை பெரிய லொறியில் செத்துப் போய் கிடந்ததையும் பானை விருந்து நடக்கப் போவதையும் சொன்னேன். ஆனால் அதன் காரணகர்த்தா யாரென்பதை சொல்ல மெள்ளத் தவிர்த்து விட்டேன்.

“ஊர் முழுக்க இந்த யானை இறைச்சியை மூன்று நாள் வரை தின்னுமாம். மிக்க ருசியாய் இருக்குமாம். அவர்களுக்கு பாட்டும் கொண்டாட்டமும் தான்” என்றேன்.

“யானை இறைச்சியைச் சாப்பிடுவினமா?” என்று என் மனைவி அதிர்ந்து போய் கேட்டாள்.

“இறைச்சி எண்டு வந்த பிறகு யானை இறைச்சி என்ன, குதிரை இறைச்சி என்ன; எல்லாம் ஒண்டு தான்” என்றேன் நான்.

“அப்ப நாங்கள் மாவிலையும், பலாவிலையும் சாப்பிடுறோமா?”

“ஏன் இல்லை? ருசியாக இருந்தால் விட்டு வைப்போமா? அதையும் தான் சாப்பிடுவோம்” என்றேன் நான்.


அடுத்த நாள் கார்சாரதி லேட்டாகத் தான் வந்தான். எதிர் பார்த்தது போல குதம்பே வரவே இல்லை. இன்னும் பல பேரும் கந்தோருக்கு மட்டம். யானை விருந்து அப்படி ஆட்களை மயக்கி விட்டது.

மறு நாள், சனிக்கிழமை, நான் வழக்கம் போல வெளி விறாந்தையில் இருக்கிறேன். என் குட்டி மகள் காலடியில் இருந்து படம் போட்டுக் கொண்டிருக்கிறாள். என் மனைவி உள்ளுக்கு மும்முரமாகச் சமையல் செய்கிறாள்.

வெளியே விளையாடிக் கொண்டிருந்த என் மகன் தான முதலில் கண்டான். ‘குதம்பே, குதம்பே’ என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான்.

குதம்பேயின் பேர் இப்போது எங்கள் வீட்டிலே அப்படிப் பிரபலம். மனைவி கைவேலையைச் சடாரென்று போட்டு விட்டு வெளியே ஓடிவந்து விட்டாள். என் குட்டி மகள் மாத்திரம் கண்களை மலர்த்தி நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் படம் போடத் தொடங்கினாள்.

குதம்பே வழக்கம் போல வேர்க்க விறு விறுக்க ஒட்டமும் நடையுமாக வந்தான். நான் ‘வாரும், வாரும்’ என்று சொல்லி அவனை உள்ளே கூப்பிட்டு இருத்தினேன். என் மகன் சொல்லாமல், கொள்ளாமல் குதம்பேக்கு பிடித்தமான பீரை கொண்டு வந்து அவன் முன் வைக்கிறான். அவனும் ‘மடக்மடக்’ கென்று குடிக்கிறான்.

ராத்திரி நடந்த விருந்தைப் பற்றி வருணிக்கிறான், குதம்பே. விடிகாலை ஐந்து மணி வரைக்கும் கூத்தும் கும்மாளமும் தொடர்ந்ததாம்.

இதிலே விசேஷம் என்னவென்றால் குடிகள் தலைவருக்க இப்ப வயது 65 ஆகிறது. இது மூன்றாவது மனைவி; கொஞ்சம் குமரி அவள். 40 ஆடுகளும், 8 மாடுகளும் கொடுத்து அவளை வாங்கினாராம். இப்படியான மயக்கும் அழகி அவருக்கு மிகவும் மலிவாகவே கிடைத்துவிட்டதாக குதம்பே அபிப்பிராயப்பட்டான்.

என் மனைவியோ தவித்தபடி நின்றாள். ‘பின்னால் யாராவது தலையில் ஏதாவது தூக்கி வைத்த படி வருகிறார்களா?’ என்று கண்களால் தேடினாள். ‘ஒரு வேளைலொறியில் வருமோ? என்று அந்த வழியால் போகும் லொறிகளையும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.

அப்போது பார்த்து குதம்பே எழுந்தான். கமக்கட்டில் வைத்திருந்த பேப்பர் சுருளை உருவினான். அதற்குள் இருந்து இரண்டு தந்தங்களை எடுத்து என் மனைவியின் கையில் மிக்க பணிவோடு வைத்தான். பிறகு என்னவெல்லாமோ சொன்னான். ‘பெண் யானை’ என்றது மாத்திரம் என் காதில் விழுந்தது. அவன் போய் விட்டான்.

எங்கள் ஊரில் சொல்வார்கள் ‘நாடி விழுந்து விட்டது’ என்று. நான் அப்படியே கொஞ்ச நேரம் நிலைத்து நின்று விட்டேன். தந்தத்தைப் பார்த்த மாத்திரத்தில் என் மனைவியின் கண்கள் பெரிதாக விரிந்தன. வாய் திறந்தது. பிறக பொத்திக் கொண்டாள். ‘மேல் மூச்சு’ வாங்க மெதுவாக அங்கே இருந்த கதிரையில் இருந்து விட்டாள்.

என் மகன், அவள் கையில் இருந்த தந்தங்களைப் பிடுங்கி தன் கால் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு ஓடி விட்டான், விளையாட.

உலகம் கவிழ்ந்தது தெரியாமல் என் மகள் காலடியில் இருந்து படம் போட்டுக் கொண்டிருந்தாள்.


அன்றிரவு ‘டம், டம்’ என்று மேளச் சப்தம் வெகு நேரம் வரை கேட்டுக் கொண்டேயிருந்தது. கூவும் குரலில் பெண்கள் பாடுவதும், ஆடுவதும் கடல் அலைபோல வந்து வந்து அடித்தது.

என் மனைவி நித்திரை கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு முறை எழும்பிப் போய் ஜன்னல் பக்கம் கொஞ்ச நேரம் நின்றாள். பிறகு திரைச்சீலையை இழுத்து விட்டு வந்து படுத்துக் கொண்டாள். திடீரென்று நடுவே எழும்பி கொஞ்சம் தண்­ர் குடித்தாள்; திரும்பித், திரும்பிப் படுத்தாள். அடிக்கடி பெருமூச்சு விட்ட படியே இருந்தாள்.

நானும் தூங்கவில்லை. ஆனால் கனவுகள் மட்டும் வந்தன. அந்த கனவிலே யானை காலை உயர்த்திக் கொண்டு மல்லாக்காகக் கிடக்கிறது; பிறகு ஏசுநாதர் வருகிறார்; ரத்தம் ஆறாக ஓடுகிறது. எனக்கு தேகம் குளிருகிறது.

திடுக்கிட்டு விழித்து விட்டேன். பலபலவென்று விடிந்திருந்தது. பிள்ளைகள் இரண்டு பேரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

காலைச் சாப்பாட்டை கடமைக்காகச் சாப்பிடுகிறேன். மனைவி பரிமாறுகிறாள். என் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு கூசியது போலும். கடைசியில் பொறுக்க முடியாமல் கேட்டாள்; “அந்தப் பெரிய யானையை, அதுவும் பெண்யானையை, இந்த தந்தத்துக்காகவா கொன்றார்கள்? பாவிகள்?”

அவள் கண்களிலே முத்தாக ஒரு சொட்டுக் கண்­ர்.


இரண்டு நாளாக அந்தத் தந்தம் மேசை மேலேயே கிடந்தது. பிறகு அதைக் காணவில்லை. நானும் கேட்கவில்லை.

என்னுடைய பன்னிரண்டு மாத ஒப்பந்தம் ஒரு நாள் முடிந்தது. கம்பனி லொறி வந்து எங்கள் சாமான்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போனது.

விமான நிலையத்துக்கு நாங்கள் புறப்பட்டோம். மனைவியும் நானும் லெவாலியிடம் சொல்லிக் கொள்ள அவர் வீட்டுக்குப் போனோம்.

லெவாலி சாய்ந்த கதிரையில் நீண்ட சுருட்டைப் புதைத்தவாறு உட்கார்ந்து இருக்கிறார். பின்னணியில் மெல்லிய இசை. நானும், மனைவியும் போய் அவரிடம் விடை பெறுகிறோம். பெருந்தன்மையாக எங்களுக்கு நன்றி கூறி அடிக்கடி தொடர்பு கொள்ளச் சொல்கிறார். நாங்களும் எங்கள் அன்பைத் தெரிவிக்கிறோம். லெவாலி எங்களை வீட்டு வாசல் வரை வந்து மரியாதையாக அனுப்புகிறார்.

வாசலிலே இரண்டு யானைத் தந்தமும் இரண்டு பக்கமுமாக, கல்யாண வீடுகளில் வாழை மரம் கட்டுவது போல, உயர்ந்து நிற்கிறது.

நான் வெளியே வரும்போது மனைவியிடம் “யானைத் தந்தத்தை பார்த்தீரா?” என்று கேட்டேன்.

“ச்சீ, அது பார்க்கவே அருவருப்பாயிருக்கு” என்றாள்.

– திகடசக்கரம், முதற் பதிப்பு: ஆனி 1995, காந்தாளகம், மறவன்புலவு, சாவகச்சேரி

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *