கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 12,968 
 

நகரத்துக்கு வெளியே மூன்று கிலோமீட்டர் தொலைவில் எந்தவகை இரைச்சலும் இல்லாமல், அமைதியின் பிறப்பிடமாக இருப்பது வளர்மதி காலனி.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் வக்கீல் வீட்டு போர்டிகோவில் வழக்கம்போல கலந்துரையாடல் மும்முரமாக இருந்தது.

குட விளக்கு

வக்கீல் ஒன்று பேச, வாத்தியார் ஒன்று பேச, இடைமறித்து டாக்டர் பேச, குறுக்கிட்டு போஸ்ட் மாஸ்டர் பேச, உற்சாகத்தில் ஆடாத குறையாக, இடத்தைவிட்டு எழுந்த ஜோஸ்யர், உரக்கத் தம் கருத்தை நுழைக்க அவர்கள் பேச்சில் கலகலப்பு, வெடிச்சிரிப்பு, கிண்டல் எல்லாம் மாறி மாறி கூத்தடித்தன. அந்தக் கூத்தில் வடகொரியாமுதல் வளர்மதி காலனிவரை எல்லாம் இருந்தன.

தலையில் குல்லாயும் வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பாவுமாக உயரமான ஒருவர், குள்ளமான ஒருவருடன் கையில் நோட்டுப் புத்தகத்துடன் வந்து வணக்கம் போட்டார்.

பவர்கட்டில் நின்றுபோன அரவை மிஷின்போல, கலகலப்பான சபை கப்பென்று அமைதியானது.

“”என்ன?”

ஜோஸ்யர் முந்திக்கொண்டு கேட்டார். அந்தக் கேள்வியில் அதிகாரமும் அலட்சியமும் வெளிப்பட்டன.

“”அனாதை ஆசிரமத்திலிருந்து வர்றோம். ஏதாவது உதவி செய்யுங்க” தொய்வுபட்ட குரலுடன் மெதுவாக நோட்டை நீட்டினார் குல்லாய்க்காரர். அதை யாரும் வாங்கவில்லை.

“”நிறைய குடுத்தாச்சு” என்றார் போஸ்ட் மாஸ்டர். “”பணம் பறிக்க இப்படியொரு வேலை” என்றார் வாத்தியார் வெறுப்புடன்.

சுவாரஸ்யமான பேச்சு தடைபட்டதில் வக்கீலுக்குக் கோபம் வந்தது. “”போய்யா போ உதவியாம் உதவி” என்று கடுகடுப்பைக் காட்டினார்.

“”அதோ அந்த எதிர் வீட்டுக்குப் போ. அங்க வள்ளல் இருக்காரு” என்று ராமசாமி குடியிருக்கும் வீட்டைக் காட்டி ஜோஸ்யர் கமெண்ட் அடித்தார்.

குல்லாய்க்காரர் ராமசாமி வீட்டு வாசலில் நின்று “ஐயா’ என்று பவ்யமாகக் குரல் கொடுத்தார். வெளியே வந்த ராமசாமி இரண்டொரு கேள்வி கேட்டுவிட்டு நோட்டை வாங்கி, தொகை எழுதிப் பணம் கொடுத்தான். முகம் மலர வாங்கிக்கொண்டு, குல்லாய்க்காரர் கும்பிட்டுப் போனார்.

வக்கீல் குரூப் அதைக் கவனித்துவிட்டு குபீரென்று சிரித்தது.

ராமசாமி ஓர் இளிச்சவாயன் என்பதுபோல அந்தச் சிரிப்புக் காட்டியது.

“”ஜோஸ்யரே பார்த்தீரா? வள்ளல்னு கிண்டல் அடித்தீர். ராமசாமி பணம் குடுத்துட்டானே” என்றார் வக்கீல் தொனியைக் குறைத்து.

“”ஆமா பெரிசா கொட்டிட்டான். போங்க சார் இதெல்லாம் பாவ்லா. பெருமைக்குச் செய்யறான். டவுனுக்குள்ள ஒரு டீக்கடை வச்சிருக்கான். அவ்வளவுதான்” என்று ஜோஸ்யர் சொன்னார்.

“”நல்ல சைக்கிள்கூட இல்ல. ஒரு பாடாவதி சைக்கிள்லதான் அவனும், அவன் பொண்டாட்டியும் தினமும் டவுன் கடைக்குப் போறாங்க” என்று டாக்டர் சொன்னார்.

“”புதுவண்டிக்கு எங்க போவான். அவனுடைய ஒரே செல்ல மகன் மெரிட்ல சீட் கிடைச்சு கோயமுத்தூர்ல டாக்டருக்குப் படிக்கிறான். அந்தச் செலவு வேற இருக்கே” என்று சொன்னார் வாத்தியார்.

“”கடை எங்க வச்சிருக்கான்?” போஸ்ட் மாஸ்டர் கேட்டார்.

“”சொன்னாத் தெரியறதுக்கு, அது என்ன பைவ் ஸ்டார் ஓட்டலா? டவுனுக்குள்ள நகைக்கடைத் தெருவுல, ஒரு சந்துக்குள்ள இருக்கு. “ஆண்டாள் டீ ஸ்டால்’ன்னு பொண்டாட்டி பேர்தான் வச்சிருக்கான் ராமசாமி” என்று ஜோஸ்யர் கிண்டலாகச் சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள்.

“”ராமசாமிக்கு சொந்த ஊர் எது?” வக்கீல் கேட்டார்.

“”வயலூராம். சொந்தமாவது பந்தமாவது. உங்கள மாதிரி, என்னை மாதிரி, அவனுக்குச் சொந்த வீடோ, சொந்தமோ இல்ல. வாடகைக்கு அந்த ஓட்டு வீட்ல இருக்கான். செத்தா தூக்கிப் போட ஆள் இல்ல. அநாதையாக வந்தவன் ஓட்டல்கள்ல, எடுபிடிவேல செய்தான். எப்படியோ ரெண்டு காசு மிச்சம் பண்ணி ஒரு டீக்கடை வச்சு காலத்தை ஓட்றான்” என்று சொன்ன ஜோஸ்யர் சகல விவரமும் தனக்கு அத்துப்படி என்பதுபோல நண்பர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்.

விடிகாலை ஐந்து மணி. ராமசாமியும், ஆண்டாளும் டீக்கடைத் தொழிலுக்கு சைக்கிளில் புறப்பட்டுப் போனார்கள். வாக்கிங் புறப்பட்ட ஜோஸ்யர் அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார்.

கிழக்கு வெளுத்து வெளிச்சம் பரவியது. காலனி வீடுகளில் வாசல் தெளித்தவர்கள், பால் வாங்கிக் கொண்டிருந்தவர்கள், கோலம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

ராமசாமி வீட்டு வாசலில் ஓர் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஆண்டாள் வேகமாக வீட்டுக் கதவைத் திறந்துவிட்டு ஆட்டோ பக்கம் வந்து “”மெதுவா தூக்கு” என்றாள். அவளும், ஆட்டோ டிரைவரும், கடைப் பையனுமாகச் சேர்ந்து, ஆட்டோவில் சாய்ந்திருந்த ராமசாமியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனார்கள்.

வாக்கிங் போய்த் திரும்பிய ஜோஸ்யருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. “ஒரு மணி நேரத்துக்கு முன்னால் ராமசாமி நல்லா இருந்தானே’ என்று நினைத்தார். காலனியில் கசமுசா பேச்சு தொடங்கியது.

வீட்டுக்குள்ளிருந்து வேகமாக ஆட்டோ டிரைவரும் கடைப் பையனும் வெளியே வந்தார்கள்.

வாசலில் நின்றிருந்த ஜோஸ்யர் கேட்டார்.

“”ராமசாமிக்கு என்ன?”

“”ஹார்ட் அட்டாக்கில இறந்துட்டாருங்க” என்று ஆட்டோ டிரைவர் சொன்னார்.

அந்தக் காலனியில் ராமசாமி, ஆண்டாள் இருவரிடமும் யாரும் முகம் கொடுத்துப் பேசியதில்லை. சாதாரண டீக்கடைக்காரன்தானே என்ற மேலோங்கிய அலட்சியம். வசதி வாய்ப்பு இல்லாதவனை அவமதித்தே பழக்கப்பட்ட சமுதாயம்.

தலைமாட்டில் ஒற்றைத் தீபம் எரிய நீண்டு கிடந்த ராமசாமியின் உடல் பக்கம் கண்ணீருடன் ஆண்டாள் இருந்தாள்.

வக்கீல், ஜோஸ்யர், வாத்தியார், போஸ்ட் மாஸ்டர், டாக்டர், அவர்களின் மனைவிகள் எல்லாரும் துக்கம் விசாரித்தார்கள். சிறிது நேரத்தில் வெளியே வந்தார்கள். அவரவர் தொழிலுக்குப் போய்விட்டார்கள்.

பொழுது சாயும் நேரம். தொழிலைப் பார்த்துவிட்டுத் திரும்பிய வக்கீல், ஜோஸ்யர், வாத்தியார், போஸ்ட்மாஸ்டர் எல்லோரும் ஆச்சரியப்பட்டு வாய் பிளந்து நின்றார்கள்.

ராமசாமி வீட்டு முன்னால் துக்கம் விசாரிக்க பெரிய கூட்டம் கூடி இருந்தது.

சாதாரண டீக்கடைக்காரனின் சாவுக்கு இவ்வளவு கூட்டமா? என்று காலனியே வியப்படைந்தது. வக்கீல் குரூப் கூட்டத்தை விசாரித்தது.

நடமாடும் சலவைக் கடைக்கு இஸ்திரிப் பெட்டி. சில மாணவர்க்கு யூனிஃபார்ம். சில மாணவர்களுக்குத் தனிக்கட்டணம். கட்சிக்காரர்களுக்கு நன்கொடை. அனாதை விடுதிக்கு, கோயில் விழாவுக்கு நன்கொடை என ராமசாமியிடம் சின்னச் சின்ன உதவி பெற்றவர்கள் டீக்கடை வாடிக்கையாளர்கள், பழகியவர்கள் என்று வந்த கூட்டம் அது.

ராமசாமியின் இறுதி ஊர்வலம் வண்டியின் பின்னால் இரக்கமுள்ள இதயங்களும், நன்றிகளும், மவுனமாகப் போய்க் கொண்டிருந்தன.

வக்கீல் வீட்டு போர்டிகோவில் நின்றிருந்த அவருடைய குரூப் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தது.

“”என்ன ஜோஸ்யரே, செத்தா, தூக்கிப்போட ஆள் இல்லேன்னு ராமசாமியைப் பத்திச் சொன்னீரே” என்று வக்கீல் கேட்டார். ஜோஸ்யர் வாயடைத்து நின்றிருந்தார்.

ராமசாமி ஒரு குடவிளக்கு. அந்த விளக்கு எரியும்போது, யாருக்கும் தெரியவில்லை.

அணைந்த பிறகு ஊர் தெரிந்து கொண்டது.

– உடுமலை நன்னன் (மார்ச் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *