கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 5,562 
 
 

குடைஅப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கையில் வாங்கியதுமே தியாகுவிற்கு சாந்தா டீச்சரின் ஞாபகம்தான் வந்தது.சாந்தா டீச்சரை அவனால் மறக்கவே முடியாது.‘‘நீ நல்லா வருவேடா. உன்கிட்டே இருக்கற திறமைக்கு நிச்சயம் நீ ஒரு நாள் கவர்மென்ட் ஜாப்புக்கு போவே தியாகு! எனக்கு நம்பிக்கை இருக்கு! அந்த நாள் வர்றப்போ நீ இந்த சாந்தா டீச்சரை நெனைச்சுக்குவே…’’ அன்றைக்கே மனசார வாழ்த்தினாள்.

சாந்தா டீச்சரின் வார்த்தை இதோ பலித்து விட்டது. பேங்க் எக்ஸாமில் பாஸாகிவிட்டான். அதுவும் முதல் ரேங்க்கில். அப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் கொடுத்து விட்டார்கள்.நினைத்து நினைத்துப் பார்த்தான்.

சாந்தா டீச்சர் போல ஒரு பெண்ணைப் பார்க்கவே முடியாது. அப்படி ஒரு மனசு. இரக்க குணம். கண்டிப்பில் கூட கனிவு கலந்துதான் இருக்கும். சின்ன வயதிலேயே போட்டித் தேர்வில் பாஸ் பண்ணி வேலைக்கு வந்திருந்தாள்.முதல் பணியே கிராமத்து பள்ளியில்தான். ஆற்றங்கரையோரமாக, இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பள்ளிக்கூடம்.

நடுநிலைப்பள்ளி. ஆறாங்கிளாஸ் முதல் எட்டாம் கிளாஸ் வரை தமிழ்ப் பாடம் எடுப்பாள் சாந்தா டீச்சர்.தியாகு எட்டாவது வரை சாந்தா டீச்சரிடம்தான் தமிழைக் கற்றான்.மற்ற மாணவர்களைப் போல சுட்டித்தனமோ… பரபரப்போ இல்லாமல் எப்பவும் அமைதியாய் இருப்பான்.கையில் நோட்ேடா, புத்தகமோ இல்லாமல் அவனைப் பார்க்கவே முடியாது. எதையாவது தானாகவே எழுதிக்கொண்டிருப்பான். அல்லது வாய்விட்டு படித்துக் கொண்டிருப்பான்.

தியாகுவின் தனித்தன்மைக்கு குடும்பச் சூழலும் ஒரு காரணம். அப்பா கிடையாது. அம்மாவும் இரண்டு தங்கைகளும்தான். குடிசை வீடு. தினமும் அரை வயிற்றுச் சாப்பாடு கிடைப்பதே அரிது.வயல்காட்டில் கூலி வேலை செய்துதான் பிள்ளைகளின் வயிற்றை நனைத்துக் கொண்டிருந்தாள் அம்மா. கஷ்டப்பட்டு படித்தால்தான் சிகரம் தொடலாம்; வெளிச்சம் பெறலாம். தியாகுவின் பிஞ்சு மனசு பக்குவப்பட்டிருந்தது.

தான் படித்து… வேலைக்குப் போய் அம்மாவையும், தங்கைகளையும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். தியாகுவிற்குள் தீப்பிழம்பாய் வெறி.

அவனை ஒளி தீபமாய் மாற்றுகிற சக்தியாய் விளங்கினாள் சாந்தா டீச்சர்.முரட்டு மாணவன் கூட சாந்தா டீச்சரின் வகுப்பறையில் கட்டுப்பட்டுத்தான் நடப்பான். சரியாக படிக்கத் தெரியாத மாணவர்களைக் கூட போதிய பயிற்சி கொடுத்து ஓரளவு மதிப்பெண்களை வாங்க வைத்து விடுவாள். யாரையும் திட்டியதில்லை; அடித்ததில்லை. அன்புதான் சாந்தா டீச்சரின் ஆயுதம்.

சாந்தா டீச்சரின் முகம் எப்பவும் மலர்ச்சியாகவே இருக்கும். தன்னைப்போலவே மாணவர்களும் மலர்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புவாள்.

தியாகுவின் வீட்டில் பெரும்பாலும் காலைச் சாப்பாடே கிடைக்காது. வெறும் வயிற்றோடுதான் பள்ளிக்கு வருவான். மதியம் மணி அடித்து பள்ளியில் போடுகிற சத்துணவைச் சாப்பிடுவதற்குள் வயிறு கபகப வென்று எரியத்தொடங்கிவிடும்.

ஒரு நாள் பசியைப் பொறுக்க முடியாமல் வகுப்பறையிலேயே மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். சாந்தா டீச்சர்தான் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.தண்ணீரை முகத்தில் அள்ளித் தெளித்தாள்.

‘‘என்னடா ஆச்சு..?’’

‘‘சாப்பிடாம வந்துட்டேன் டீச்சர்…’’

‘‘ஏன் சாப்பிடாம வந்தே..?’’

தியாகுவினால் பதில் சொல்ல முடியவில்லை. தன் வீட்டில் சாப்பாடு இல்லை எனச் சொல்ல முடியுமா?

‘‘கேட்கறேன்ல… ஏன் சாப்பிடாம வந்தே?’’

அதற்குள் அதே தெரு கோபு முந்திக் கொண்டான்.‘‘டீச்சர்… தியாகு பாவம். அவங்க வீட்ல தெனமுமே காலையில சாப்பாடு இருக்காது. அப்பா இல்லியா… அம்மா வயக்காட்டு வேலைக்குப் போயிட்டு வந்து… தெனம் ராத்திரிக்கி ராத்திரிதான் சமைப்பாங்க. தங்கச்சிங்க ரெண்டு பேரும் காலையில பழைய சோறை சாப்பிட்டுடுங்க… இவனுக்கு இருக்காது!’’

அடுத்த நாளிலிருந்து தியாகுவிற்கும் சேர்ந்து காலைச் சாப்பாட்டை சாந்தா டீச்சர் கொண்டு வரத் தொடங்கினாள்.

பாலத்தடியில் வந்து நிற்கும் மினி பேருந்தில்தான் சாந்தா டீச்சர் வந்து இறங்குவாள். காலை ஒன்பது பத்து மணிக்கு வரும். மறுபடியும் சாயங்காலம் ஐந்து மணி. நாலரைக்குள் பள்ளி நேரம் முடிந்து விடும். ஐந்து மணி மினிபஸ் வரும் வரை பாலத்தடியில்தான் நிற்பாள் சாந்தா டீச்சர்.

தியாகுவும் கூடவே நிற்பான்.

‘‘வீட்டுக்குப் போடா… உங்கம்மா தேடப் போறாங்க…’’

‘‘மினி பஸ்சுல ஒங்களை ஏத்தி விட்டுட்டுதான் போவேன் டீச்சர்…’’

சாந்தா டீச்சருக்கு குடைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். இருக்கிற அத்தனை வண்ணங்களிலும் குடை வைத்திருந்தாள். எந்த வண்ணத்தில் சேலை கட்டி வருகிறாளோ… அதே வண்ணத்தில் குடை பிடித்திருப்பாள். வெயில், மழை என வித்தியாசமே பார்க்கமாட்டாள்.

‘‘வாட்ச் கடை… வளையல் கடை மாதிரி ஒங்கப்பா குடை கடை வெச்சிருக்காங்களா டீச்சர்..?’’

எட்டாம் கிளாஸ் மாணவி ஒருத்தி விளையாட்டாய் கேட்டபோது முகம் வழிய சிரித்தாள்.

சாந்தா டீச்சரின் வீடு கும்பகோணத்தில் இருந்தது. தினமும் கும்பகோணத்திலிருந்து கிளம்பி வரமுடியாது என்பதால் திருத்துறைப் பூண்டியில் லேடீஸ் ஹாஸ்டலில் அறை எடுத்துத்தங்கியிருந்தாள்.

‘‘கும்பகோணத்துல உங்க வீடு எங்க இருக்கு டீச்சர்..?’’

‘‘காசி தியேட்டருக்கு பின்னாடி தெருவுல! வாசல்ல பெரிய மகிழம் பூ மரம் இருக்கும்…’’

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வீட்டிலிருந்து வருகிறபோது சாந்தா டீச்சரிடம் மகிழம்பூ வாசனை அடிக்கும். நெருக்கமாய்க் கோர்த்த மகிழம்பூக்களை கூந்தலில் சூடியிருப்பாள்.

பள்ளிக்கூடத்திலிருந்து கல்விச் சுற்றுலாவாக கங்கை கொண்ட சோழபுரத்திற்கும், தாராசுரம் கோயிலுக்கும் மாணவ மாணவியர்களைக் கூட்டிப் போனபோது எல்லோரையும் கும்பகோணத்திலிருக்கும் தன் வீட்டிற்கும் அழைத்துப்போய் விருந்து வைத்திருந்தாள்.மாணவிகளுக்கு வளையல், மணி, தோடு என வாங்கி பரிசளித்திருந்தாள். மாணவர்களுக்கு தொப்பி, கைக்கடிகாரம்.தியாகு மட்டும் சுற்றுலாவிற்குச் செல்லவில்லை. பணம் கட்ட முடியவில்லை. கடைசி நேரத்தில் கழன்று கொண்டான்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்பதற்காக முதல் நாளே சாந்தா டீச்சர் கும்பகோணம் போய்விட்டாள். தியாகுவும் சுற்றுலாவில் கலந்துகொள்வான் என நினைத்திருந்தாள். தியாகு வராததே பிறகுதான் தெரிய வந்தது.‘‘தெரியாமப் போயிடுச்சே… நானாச்சும் பணம் கட்டியிருப்பேனே…’’ ரொம்பவே புலம்பி வருத்தப்பட்டாள்.‘‘ஏண்டா இப்படி செஞ்சே..?’’ பள்ளி திரும்பியதும் உரிமையாய் கோபப்பட்டாள்.

‘‘அம்மா பணம் தரலை டீச்சர்…’’

‘‘நான் தந்திருப்பேனேடா…’’

‘‘ஒங்களுக்கு சிரமம் குடுக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிடுச்சு டீச்சர்…’’

சுற்றுலா போய்வந்த மாணவர்கள் கதை கதையாய் விவரித்தார்கள். கங்கைகொண்ட சோழபுரத்து நந்தியைப் பற்றியும், தாராசுரம் கோயிலின் சிற்பங்களைப் பற்றியும்தான் நாள் முழுக்க பேசினார்கள்.

தியாகு ஆர்வம் ததும்ப சாந்தா டீச்சரின் வீட்டைப் பற்றிக் கேட்டான்.‘‘போனோமே! அவங்க எல்லோருக்கும் கேசரி, வடை, பொங்கல், இட்லி எல்லாம் செஞ்சிருந்தாங்க… இன்னுங் கொஞ்சம் சாப்பிடுங்கடான்னு நெறைய நெறைய அள்ளி வெச்சாங்க…’’ கூடப்படிக்கிற வேலு பெருமையாகக் கூறினான்.

தியாகுவிற்கு சற்றே பொறாமையாய் இருந்தது.யாருமே எதிர்பார்க்கவில்லை. சாந்தா டீச்சருக்கு கும்பகோணம் பக்கமாய் ஏதோ ஒரு ஊருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்திருந்தது. வீட்டிலிருந்து கிளம்பி அரை மணி நேரத்தில் பள்ளிக் கூடத்திற்குப் போய்விடலாமாம்.

சாந்தா டீச்சரின் முகத்தில் பெரு மகிழ்ச்சி பொங்கியது.பிரிய மனமில்லாமல் மாணவ – மாணவியர்கள்தான் கதறினார்கள். ஓங்கி குரல் கொடுத்து விசும்பினார்கள்.‘‘எதுக்காக அழறீங்க? நாலு வருஷமா இந்த ஸ்கூல்ல வொர்க் பண்ணிட்டாங்க! சொந்த வீட்ல தூங்கி எழுந்து அம்மா கையால சாப்பிட்டுட்டு பக்கத்தூருக்கே வேலைக்குப் போகணும்னு அவங்களுக்கும் ஆசை இருக்கும்தானே..? இப்பதான் அந்த ஆசை நெறைவேறியிருக்கு! சந்தோஷமா வாழ்த்தி வழி அனுப்பி வைங்க…’’ தலைமையாசிரியை கடிந்து கொண்டார்.

அனைவருக்கும் இனிப்பு கொடுத்து பள்ளி முடியும் வரை இருந்து கண்ணீருடன் விடை பெற்றுக் கிளம்பினாள் சாந்தா டீச்சர்.

ஏனோ தியாகு அன்றைக்கு பள்ளிக்கு வரவேயில்லை.‘‘ஏன்டா அவன் வரலை..? நான் டிரான்ஸ்ஃபர்ல போறது தெரியும்தானே..?’’ மனம் தாங்காமல் கோபுவிடம் கேட்டாள் சாந்தா டீச்சர்.‘‘தெரியும் டீச்சர்… ஆனா, அவன் காலையிலயே கௌம்பி டவுனுக்குப் போயிட்டான்…’’

ஐந்து மணி மினிபஸ் ஏறுவதற்காக பாலத்தடிக்கு வந்து விட்டாள்.

எங்கிருந்தோ மூச்சிரைக்க ஓடி வந்து சேர்ந்தான் தியாகு.‘‘உண்டியல்ல சேர்த்து வெச்சிருந்த காசை எடுத்துகிட்டு… இதை வாங்கறதுக்காக டவுனுக்குப் போயிருந்தேன் டீச்சர்…’’ கையில் வைத்திருந்த அந்தக் குடையை நீட்டினான்.புத்தம் புது குடை. அழகான குடை. மஞ்சளில் கறுப்பு வண்ணப்பூக்கள் சிதறிய குடை.சாந்தா டீச்சர் திகைத்துப் போய் பார்த்தாள். ‘‘எதுக்குடா இதெல்லாம்?’’

‘‘குடைன்னா ஒங்களுக்குப்பிடிக்கும்தானே? அதான் வாங்கியாந்தேன். டவுனுக்கு நடந்தே போயிட்டு நடந்தே திரும்பிட்டேன்! என் ஞாபகமா எப்பவும் கையிலயே இருக்கணும் டீச்சர்…’’ பொங்கிப் பொங்கி அழுதான்குடையை வாங்கிக் கொண்டாள். அதற்குள் மினிபஸ்சும் வந்துவிட்டது.

சாந்தா டீச்சருக்கும் கண்ணீர் வழிந்தது.

‘‘கும்பகோணத்துக்கு வந்தா வீட்டுக்கு வாடா. காசி தியேட்டருக்கு பின்னாடி தெரு… வாசல்ல மகிழம்பூ மரம் நிக்கும்…’’

தியாகு தலையை ஆட்டி கையை அசைக்க… சாந்தா டீச்சருடன் மினிபஸ் நகர்ந்தது.இரவும் பகலும் மாறி மாறி வந்தது. முழுமையாய் பத்து வருடங்கள் முடிந்திருந்தன.படித்துக்கொண்டே தியாகுவும், தங்கைகளும் வேலைக்குப் போனார்கள். வயல்காட்டு வேலைதான். விடுமுறை நாட்களில் மூவருக்கும் ஓய்வே இருக்காது. அம்மாவோடு சேர்ந்து உழைப்பார்கள். பெரிய படிப்பில் எல்லாம் தியாகுவால் சேர முடியவில்லை. அரசு கல்லூரியில் இருந்து டிகிரி சான்றிதழுடன் வெளியேறியதுமே கோச்சிங் சென்டரில் சேர்ந்து விட்டான். தீவிரமாய் படித்தான்.

திரும்பத்திரும்ப போட்டித் தேர்வுகளை எழுதினான். நம்பிக்கை வீண்போக வில்லை. முயற்சிக்கு பலன் கிடைத்திருந்தது. உள் மனசுக்குள் இருந்து சாந்தா டீச்சர்தான் அவனை வழி நடத்தினாள்.பேங்க் மானேஜர் வேலை. பணியில் சேருவதற்கு முன்பு கும்பகோணம் சென்று சாந்தா டீச்சரைச் சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள மனசு துடித்தது.

கும்பகோணம். காசி தியேட்டர் பின்னாடி தெரு. மகிழம்பூ மரம் நிற்கும் வீடு. அந்தக் கால ஓட்டு வீடு. எப்படியோ கண்டுபிடித்து வந்து சேர்ந்திருந்தான் தியாகு.‘சாந்தா டீச்சருக்கு கல்யாணம் ஆசியிருக்கும்… இந்த வீட்டில் இருக்கிறாரோ இல்லை புருஷன் வீட்டில் இருக்கிறாரோ..? வீட்டாரிடம் பேசி போன் நம்பரையாவது வாங்கி விட வேண்டும்…’
தயங்கித்தயங்கி படியேறினான்.

‘‘யாருப்பா நீ?’’

வயதான பெரியவர் ஒருவர் முன்திண்ணையிலேயே அமர்ந்திருந்தார்

‘‘இதானே சாந்தா டீச்சரோட வீடு…’’

‘‘ஆமா! நான்தான் சாந்தா டீச்சரோட அப்பா!’’

‘‘டீச்சர் இருக்காங்களா..?’’ ஆர்வமாய்க் கேட்டான்.

பெரியவர் பதிலே பேசாமல் அமர்ந்திருக்க… வயதான பெண்மணி ஒருத்தி வெளியே வந்தாள்.‘‘நீ சாந்தா டீச்சரைத்தானே பார்க்கணும்.? உள்ளே வாப்பா..! அதோ அந்த ரூம்ல போய் பாரு! நான் அவளோட அம்மாதான்…’’ மெல்லிய குரலில் பேசினாள்.விறுவிறுவென படியேறி வீட்டிற்குள் நுழைந்து அவள் சுட்டிக்காட்டிய அறைக்குள் போனான்.நிறைய வௌவால்கள் தலையை உரசியபடி பறக்க… உள்ளே யாருமே இல்லை.

சுவரில் புகைப்படமாய் சிரித்துக் கொண்டிருந்தாள் சாந்தா டீச்சர். காய்ந்த பூ மாலை தொங்கியது.

தியாகு தூள் தூளாய் நொறுங்கிப் போனான்.அறைமுழுவதும் சாந்தா டீச்சர் பயன்படுத்திய பொருட்கள். மர அலமாரியில் புத்தகங்கள், நோட்டுகள்.

எல்லாமே தூசிபடிந்து காட்சியளிக்க… அவன் கடைசி நாளன்று கொடுத்த குடையும் இருந்தது. ‘‘டீச்சர்…’’ வாய்விட்டு அலறினான்.‘‘கல்யாணம் நிச்சயமாயிருந்துச்சு. வாத்தியார் மாப்ளை… புதுசா ஸ்கூட்டி வாங்கியிருந்தா. கல்யாணத்துக்கு ஒரு வாரம் முந்தி… லாரி மோதி…’’ விம்மத்தொடங்கினாள் சாந்தா டீச்சரின் அம்மா.

அறையின் ஒரு மூலையில் மேஜை மீது மிக மிக பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது அந்தக் குடை.அழுகையோடு அந்தக் குடையைக் கையில் எடுப்பதற்காகப் போனான்.‘‘அதை தொடாதேப்பா… அந்தக் குடைன்னா அவளுக்கு உசுரு. அவகிட்டே படிச்ச பையன் அந்தக் குடையை குடுத்தானாம்… எப்பவும் கையிலயே வெச்சிருப்பா! நடு ராத்திரியில கூட அந்தக்குடையைப் பிரிச்சு புடிச்சுகிட்டு உள்முத்தத்துல நடப்பா..!

ஆனா, குடையை மழையில நனைய விட மாட்டா! கேட்டா ‘பழசாப் போயிடும்’னு சொல்வா..! அந்தப் பையனுக்கு கல்யாணப்பத்திரிகை அனுப் பணும்… டிரெஸ்ஸெல்லாம் வாங்கித்தரணும்னு சொல்லிக்கிட்டே இருந்தா… துணிக் கடைக்குப் போறப்பதான்… லாரி மோதிடுச்சு…’’

தியாகு வீறிட்டு அழத்தொடங்கினான்.மழையில் நனைந்திடாத அந்தக் குடை அவன் கண்ணீரில் நனையத் தொடங்கியது.

– ஜூலை 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *