(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள், தேச சேவையை உத்தேசித்துத் தங்கள் வாழ்நாட்களைப் பிரம்ம சாரியாகவே கழிப்பதாகச் சங்கல்பம் செய்துகொள்ளும் வழக்கத்தை ஒட்டி, ஸ்ரீசைலபதியும் சங்கல்பம் செய்து கொண்டான். பிறகு காலேஜுக்கு வந்ததும் மற்றப் பையன்களைப்போல் முதல் சங்கல்பத்தை ரத்துசெய்து தானும் விவாகம் செய்துகொள்வதென்ற இயற்கையான முடிவுக்கு வந்தான். வந்ததும் இல்லறத்தின் இன்பக் கனவையே – ஏழடுக்கு மாளிகையையே – எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
பி.ஏ. தேறிய மறு வருஷம் மணம் முடிந்தது. மணம் முடிந்த மறு வருஷம் அவன் மனைவி லலிதா வீட்டுக்கு வந்துவிட்டாள். பானை பிடித்தவள் பாக்கியத்தினால் ஸ்ரீசைலபதி, ஸ்ரீசைலபதி ஐயர் ஆனான்; அதாவது நாற்பத்திரண்டு ரூபாய்க்குத் தாலூக்கா போர்டு ஆபீசில் பேனா ஓட்டும் உத்தியோகம் பெற்றான்.
ஒன்று கிடைத்தால் மற்றொன்று போய்விடும் என்பது உலக தத்துவத்தின் ரகசியம். உத்தியோகமும் மனைவியும் கிடைத்த பிறகு இல்லறத்தில் எதிர்பார்த்த இன்பம் ஒரு டிகிரி குறைய ஆரம்பித்தது. காரணம் தாயார். அவள் கெட்டவளென்று ‘சொல்வதற்குச் சிறிதேனும் இடமில்லை. ஆனால் வெறும் கர்நாடகம். வெகு ஆசாரக்காரி. ரஸம் என்பது லவலேசங்கூடத் தெரியாது. ஆகையால் தம்பதிகள் இளமையின் இன்பத் தைச் சுயேச்சையாக அருந்தக்கூடவில்லை. எனவே தாயார் மீது அபாரப் பிரேமை வைத்திருந்த ஒரே பிள்ளைகூடத் தன் காரியம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சமாதானம் முன்னதாகவே தயார் செய்ய வேண்டிய ஸ்திதி வந்து விட்டது. மனைவிக்கென்று மூன்று காத தூரம் வாசனை வீசும் கதம்பம் வாங்கிக்கொண்டு வருவதில்லையாம்; சுவாமி பூஜைக்காகவாம்! கிளப்பிலிருந்து வீட்டுக்குப் பட்சணங்கள் வரவழைத்துச் சாப்பிடுவானேனென்றால், கிளப்புகள் அசங்கியமாக இருக்கின்றனவாம்
இவ்விதமாக இல்லறத்தின் ஏழடுக்கு மாளிகையின் தலையடுக்கு முதலில் மறைந்தது. பிறகு மாமியாருக்கும் நாட்டுப்பெண்ணுக்கும் அல்ப விஷயங்கள் காரணமாக இரண்டு இலை விட்ட தகராறுகள் முளைத்தன; ”வெறும் பறக்குட்டி,மடியும் கிடையாது; விழுப்பும் கிடையாது. ஒரு எழவும் தெரியல்லே. வேலைக்காரி தேச்சு வெக்கற பத்துப் பாத்திரத்தைப் பத்தில்லாமெ அலம்பி எடுக்கச் சொரணை இல்லை. நாணல் கோணல் இல்லாமே, மொட்டுப் போல அவனுக்கு எதுத்தாப்பலே நிக்கறதைப் பார்!” என்பவை போன்ற பாணங்கள் பறந்தன.
பிள்ளை இவ் விஷயங்களில் தலையிடுவதில்லை; புருஷ னுக்குச் சம்பந்தப்பட்டவை அல்ல என்று தள்ளிவிடுவான். இப்படிப்பட்ட மனோபாவம் தாயாருக்கு அதிருப்தியை உண்டாக்கிற்று. தன்னுடன் சேர்ந்து மனைவியைக் காய்தா செய்யாததால், ‘தலையணை மந்திரோபதேசம்’ என்று எப்போதாவது முணுமுணுப்பாள். ஆனால் பெரும்பாலும் பிள்ளையின் நடவடிக்கையை ஜாடை மாடையாகவே மௌனமாகக் கவனிப்பாள்.
மாமியாரின் மனோபாவம் வடக்குக் கோடி என்றால் நாட்டுப்பெண்ணுடையது தெற்குக் கோடி. தன் கட்சியை ஆதரித்து -வேண்டாம் விளக்கியாவது-தாயா ரிடத்தில் ஏன் சொல்லக்கூடாது? அல்லது தன்னிடம் அந்தரங்கமாகவாவது தாயாரின் செய்கைகளைத் தான் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லி ஏன் ஆறுதல் அளிக் கக் கூடாது? இப்படி அவள் இரண்டொரு சமயங்களில் நினைத்தது உண்டு. ஆனால் யௌவனப் பெருக்கில் இந்த எண்ணங்களெல்லாம் நாய்க்குடைபோல் பலமற்றவை தாமே?
2
லலிதா வீட்டுக்கு வந்து இரண்டு வருஷங்கள் ஆயின. முதலில் பிறந்த குழந்தை சீமந்த புத்திரன்; குல தீபம் அல்லவா? எல்லோருக்கும் எல்லையற்ற சந்தோஷம். ஸ்ரீசைலபதி ஐயருக்கு ஆபீஸ் தொல்லைகள் அவ்வளவும் வீட்டுக்கு வந்ததும் மறந்துபோகும்.
பிள்ளை பெற்றதில் லலிதாவுக்கு ஆரம்பத்தில் செருக்கும் சந்தோஷமுந்தான். ஆனால் ஆண்டு நிறைவு வருவதற்குள்ளாகவே சிற்சில சமயங்களில் குழந்தையின் மேல் கோபம் பிறக்கத் தொடங்கிவிட்டது. சமையல் அவசரத்தில் குழந்தை அடுப்பு விறகை இழுத்துச் சமையலைத் தவக்கப்படுத்திவிட்டால், எண்ணெய் நெய் முதலியவற்றைக் கை சொடுக்கும் நேரத்தில் கொட்டி விட்டால், தொட்டி முற்றத்தில் தடாரென்று விழுந்து விட்டால், அவ்வளவுக்கும் ஜவாப்தாரி லலிதாதான். எனவே குழந்தையின்மேல் கோபம் வருவது சகஜந் தானே?
அப்படிப்பட்ட சமயங்களில் ஸ்ரீசைலபதி ஐயருக்கு மனைவியின் மேல் கொஞ்சம் தாபம் உண்டாகும். “ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டில் உள்ளவர் களுக்கு யோக்கியதை இல்லையென்றால், ஆள் வைக்க ஐவேஜி எந்த நல்ல மாமனார் கொடுக்கப்போகிறார்?” என்று கத்துவார்.
மாமியார்க்காரி குழந்தையைப் பார்த்துக்கொள்ளக் கூடாதோவெனில், எவ்வளவு நாழிகைதான் எடுத்துக் கொள்ளுவாள்? தவிர, பிராதஸ்நானம், ஜபம், சாப்பாடு, மத்தியான்ன வம்பர் மகாசபை, கோவில், குளம் இவ்வளவுக்கும் கண்டு அவகாசம் மிஞ்சுவதில்லை.
இவைகளின் பயனாக ஆண்டு நிறைவுக்குப் பிறகு குழந்தை தீர்மானமாக அப்பாபிள்ளை ஆகிவிட்டான். இராக் காலத்தில் படுக்கை தகப்பனாருடன்; பாட்டியிட மாவது தாயாரிடமாவது போவதில்லை. ஆபீசுக்கு வருகிறே னென்று பிடிவாதம் செய்யும் சக்தி மட்டும் வரவில்லை.
பையனுக்கு இரண்டு வருஷங்கள் முடிவதற்குள் ஐயரவர்களுக்கு இல்லற இன்பத்தின் புதுமை தேய்ந்து விட்டது; ஏழடுக்கு மாளிகையில் ஆறடுக்குக் கீழே விழுந்து மண்ணைக் கவ்வின.
நாளாவட்டத்தில், கடைத் தெருவிலிருந்து புஷ்பம் வாங்கி வரும் வழக்கம் அவரை அறியாமலே நழுவிப் போய்விட்டது; காபிக் கிளப்புகளெல்லாம் சுத்தமான இடங்களாக மாறிவிட்டன.
லலிதாவுக்குக் கணவனுடைய உணர்ச்சிகளின் கூர் மழுங்கிப் போய்விட்டது என்னும் விஷயம் தனக்கு இரண்டாவது குழந்தை – ஒரு பெண் – பிறந்த பிறகுதான் தெரிய வந்தது. இரண்டாவது பிரசவத்துக்கப்பால் அவளுக்குச் சரீரம் வெகு துர்ப்பலமாகிவிட்டது; நல்ல ரத்தம் செத்துப்போய்ப் பாலும் சுமாராக வறண்டு போயிற்று. பாலுக்காகக் குழந்தை சதா அழுதுகொண்ட டிருக்கும். மாவுப்புட்டி இருந்தாலாவது சற்றுச் சௌகரிய மாக இருந்திருக்கும். ஆனால் கணவன் சம்பளத்திலும் சிக்கனத்தின் வாள் பாய்ந்துவிட்டதால் மாவுப் புட்டி வாங்குவது நின்றுபோய்விட்டது.
குழந்தை அழும்போதெல்லாம், “சத்தம் தாங்க வில்லை; காது குத்தல் எடுக்கிறது” என்று மாமியார் கூச்சல் போடுவாள். ஐயரவர்களும் ஆமோதிப்பார்; மனைவியை வெறித்துப் பார்ப்பார்; ‘குழந்தைகளை வளர்க்கத் தெரி யாத முட்டாள்களுக்கு எவ்வளவு சுலபமாகக் குழந்தை களைக் கடவுள் கொடுக்கிறார்!” என்று ஆச்சரியப்படுவார். இந்த வார்த்தைகள் லலிதாவின் உள்ளத்தை ரம்பம்போல் அறுக்கும். கண்ணில் ஜலம் குவியும். ‘பெண்களின் கஷ்ட நிஷ்டுரங்களை அறியாத – அறிய முடியாத கல் மனத்தைக் கடவுள் கணவர்களுக்குக் கொடுத்தாரே!’ என்று ஏங்கு வாள். தனக்குப் பாலில்லாமல் போனதைப்பற்றித் தனிமையில் அழுவாள். அதைப்போன்ற சமயங்களில் தான் தனக்கும் கணவருக்கும் மணமாகிக் குழந்தைகள் இருந்தும், உண்மையான மணம் – ஆத்ம நட்பு – கொஞ்ச மேனும் ஏற்படவில்லையே என்று ஏங்குவாள்.
3
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் ஒரு வண்டி கச்சேரிக் கடுதாசைப் பரப்பி ஏதோ திணறிக்கொண்டிருங் தார் ஐயர். மூடியிருந்த சமையல் அறையிலிருந்து இரண்டு குழந்தைகளும் இரட்டை நாயனம் வாசித்தன. ஐயருடைய தொல்லைப்பட்ட மனத்துக்கு அது சகிக்கக் கூடவில்லை; ரௌத்திராம்சம் கிளம்பிற்று.
“என்ன இழவு பிசாசுகளடா பெண்சாதிகள்! இப்படி வீட்டில் அழவிட்டால் ஆபீஸ் காரியம் செய்து கிழித்ததுபோலத்தான்! கையாலாகாத கபோதிகள்” என்று உறுமிவிட்டு மறுபடியும் கடுதாசுகளைப் புரட்டத் துவக்கினார்.
மறுகணம் சமையல் அறை உள்பக்கத்திலிருந்து திறக்கப்பட்டது. “போடாப்பா ஒங்க அப்பா கிட்ட” என்று லலிதா பிள்ளையைத் தள்ளிவிட்டாள். மணிக் கட்டால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பையன் அழுகைக்கு முற்றுப்புள்ளி போட்டான்; தகப்பனார் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். அதை அவர் கண்ணால் பார்த்தாரே அன்றி மனத்தால் அறியவில்லை.
சில நிமிஷங்கள் சென்றிருக்கலாம். பர்ரென்று கடுதாசு கிழியும் சப்தம் கேட்டுத் தகப்பனார் திடுக்கிட்டுப் பார்த்தார். ஆபீஸ் தஸ்தாவேஜு ஒன்று, இரண்டு தஸ்தாவேஜாகிப் பாவட்டாக்களைப்போல் பிள்ளையின் கையில் தொங்கின. வந்த கோபத்தில் பளார் என்று அருமைக் குழந்தை கன்னத்தில் ஓர் அறை விட்டார்; மனைவியைச் சரமாரியாகத் திட்டிவிட்டு, “பச்சைக் குழந் தைகளை வைத்துப் பரிபாலிக்கத் தெரியாத முட்டாள் பிணங்களுக்கெல்லாம் பதினெட்டு முழம் பட்டுப்புடைவை யும், மாங்காய் ஜரிகைச் சேலையும் இல்லாமல் அழுகிற தாம் ! தரித்திரப் பிணங்கள் ! இதைவிடச் சிவனே என்று சந்நியாசம் வாங்கிக்கொள்ளலாம். ஒரு தொல்லையும் இல்லை” என்று அத்தியாயத்தை மோக்ஷதர்மத்துடன் முடித்தார்.
லலிதாவுக்குக் கோபம் தன்னை மீறிக்கொண்டு வந்து விட்டது. கணவர் கச்சேரி வேலை பார்க்கும் வேளையில், பையன் கூடத்தில் போகாவண்ணம் சமையல் அறையை உள்பக்கம் சார்த்திக்கொண்டதும், பையன் பிடிவா தம் செய்து அழுததும், பையன் அழுததால் கைக் குழந்தை அழுததும், பிறகு பையன் கடு தாசைக் கிழித்ததும், மொத் தத்தில் இரண்டுமாகச் சேர்ந்து தன்னைக் கணவர் வாய்ப் படுத்தியதும் லலிதாவுக்கு வெறுப்பை உண்டாக்கின.”இந் தாங்கோ. இந்தக் குழந்தையையும் பாத்துக்கோங்கோ” என்று கைக்குழந்தையையும் தொப்பென்று கணவர் முன்னால் கொண்டு வந்து உட்கார்த்தினாள். அப்போது ல்லிதாவின் மையிட்ட கண்கள் ரத்தம் சோர்ந்த வேல் போல் ஜ்வலித்தன ; உதடுகள் துடித்தன.
“இந்த வீட்டுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆச்சு. மூணு ரூபாய்க்குப் புடைவை வாங்கினேன்னு விரலை மடக்குங்கோ” என்றாள்.
கணவர் முகம் சிவந்தது. மாமியின் முகத்தில் ஆவேசம் தலைவிரித்து ஆடிற்று. ஆவேசம் என்னவோ நாட் டுப்பெண்ணைப் பற்றித்தான். ஆனால் அது பாய்ந்தது மகன்பேரில்:
“அப்பா! அப்பவே புடுச்சுக் கிளிப்புள்ளைக்குச் சொல்றாப்பலே சொன்னேன்: எடத்தைக் குடுக்காதே; மடத்தைப் பிடுங்கும் இன்னு.. .ஊம்! இப்போ தலையிலே தூக்கி வச்சுக்கோடா; இல்லியோ” என்று பேய்ச்சிரிப்புச் சிரித்தாள்.
ஐயருக்கு ரோசமும் கோபமும் பொத்துக்கொண்டு வந்தன. ஆனால் கோபத்தின் மூட இயல்பை ஒட்டி அது மனைவிபேரில் பாய்ந்தது. ” “அவளுக்குப் பணத்திமிர்; அதனால் வாய்க்கொழுப்பு. ஒருநிமிஷத்தில் அடக்கிவிடுகி றேன்” என்று வீரம் பேசினார்.
மனைவியாவது சும்மா இருந்திருக்கக் கூடாதா?
“அப்படி ஒண்ணும் சொல்லல்லே; எண்ணவும் இல்லே. பணம் வாங்கினது மனசுலே உறுத்தராப்பலெ இருந்தால், திருப்பி வேணாக் குடுத்தூடறதுதானே ? இல்லாததும் பொல்லாததும் சொல்றேளே; நியாயமா?” என்று கபடமற்ற மனத்துடன் அவள் சொன்னாள்.
அவள் நினைத்ததற்கு நேர் விரோதமாக இந்தப்பேச்சு நெருப்புக்கு நெய்யாயிற்று. தம்மை ஏழையென்று மனைவி குத்திக்காட்டுவதாகக் கணவர் எண்ணினார்; சுயப்பிரக் ஞையை இழந்து இரண்டடி பாய்ந்தார். “என்ன சொன்னாய்?” என்று கையை ஓங்கினார்; ‘பணத்திமிர்’ என்று உதடுகள் முணுமுணுத்தன.
லலிதாவின் கண்களில் நீர் தாரையாகப் பெருகிற்று. “என்னை அடியுங்கள்; வேண்டாம்ங்கவில்லை. உங்களை நம்பி வந்ததுக்குப் பிசகு இன்னதூன்னூட்டுச் சொல் லிட்டு அடியுங்கோ” என்று அழுதாள்.
ஓங்கிய கை அப்படியே நின்றுவிட்டது. முகம் அசட்டு வெளுப்புத் தட்டியது.
“அப்படியா சமாசாரம்? புத்தி வரும்படி செய்கி றேன். நான் சொல்வதற்கு எதிர்ப் பேச்சா? இருக்கட்டும்’ என்று சொல்லியபடியே கச்சேரித் தாள்களை யெல்லாம் கீரைபோல் பெட்டியில் வாரிப் போட்டுவிட்டு வேகமாக வெளியே போய்விட்டார் ஸ்ரீசைலபதி ஐயர்.
வெளியே போனபிறகு இன்னது செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. பிக்காரியைப்போல் குறிப் பின்றி நடந்து சென்றார். முடிவில் ஊர்க்கோடியில் இருக்கும் ஆலமரச் சந்துக்கு வந்து சேர்ந்தார். ஒதுக்குப் புறமாகக் கிடந்த ஓர் ஆலங்கட்டையின்மேல் உட்கார்ந்தார்.
சுற்றிலும் இயற்கையின் கோலாகலம். எதிரே மரக் கிளையில் காகங்கள் தம்பதி சமேதர்களாக உட்கார்ந்து கொண்டு தலைமயிரைக் கோதிக்கொண் டிருந்தன. புல்தரை யின்மீது, வெண்கலக் குரலில் மைனாக்குருவிகள் ஆர வாரித்து நின்றன. அணில்கள் வெயில் துணுக்குப்போல் மரங்களில் பாய்ந்து விளையாடின. சிறு காற்றில், காலண்டை ஆலஞ்சருகுகள் ஒன்றை ஒன்று காதல் வேகத் தில் விரட்டுவதுபோல் பறந்தன. மேலே வானுச்சியில் காகிதக்கப்பல்போல் மேகங்கள் மிதந்துபோயின.
இயற்கையின் மெய்ம்மறந்த அமைதிக்கும் அவர் உள்ளத்தின் குழப்பத்துக்கும் பொருத்தம் கழுத்துக்குக் கத்திபோல் இருந்தது. பார்க்கப் பார்க்க, நெஞ்சில் குரோதம் தீப்பற்றி எரிந்தது.இப்படியே பொழுது சென்றது.
சூரிய வெப்பம் அதிகப்படவே ஸ்ரீசைலபதி ஐயர் களைப்பினால் கண்ணயர்ந்தார்.
4
அதே நாள் அந்திப்பொழுது; மேய்ச்சலிலிருந்து திரும்பிவரும் மாட்டு மந்தைகளின் மணியோசை கேட்கும் நேரம்; தாய் மாடு ‘ஹம்மா’ என்று தயங்கி நிற்கும் கன்றை அன்புக்குரலில் அழைக்கும் நேரம்; குருவிகளும் காகங்களும் மடையான்களும் மரங்களில் வந்து அடையும் நேரம்; எட்டிய குடிசைகளிலும் எட்டிய வானத்திலும் விளக்குகள் மின்னும் நேரம்.
தூங்கியவர் கண்விழித்து எழுந்தார்; மார்பின் மீது கைகளைக் கட்டிக்கொண்டு மெதுவாக வீட்டுக்குக் கிளம்பினார். வீட்டுக்குப் போனதும் சண்டையை மறந்து மனைவி யிடம் பேசலாமா? அதுவும் தாமாகப் பேசலாமா வெட்கக் கேடில்லையா? தாயார் ஏளனம் செய்யமாட் டாளா? வழி நெடுகிலும் இப்படிச் சிந்தனை செய்து கொண்டு சென்றார்.
வீட்டுக்கு வந்த சமயத்தில் தாயாரைக் காணவில்லை பையனையும் காணவில்லை. மனைவிமட்டும் கோடரி முடிச்சுப் போட்ட தலைமயிருடன் அசிரத்தையாகச் சுவரின்மேல் சாய்ந்துகொண்டு குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண் டிருந்தாள். பால் இல்லாததால் குழந்தை சிணுங்கிக் கொண்டிருந்தது.
ஐயர், மனைவியைக் கவனிக்காதவர்போல் கிணற்றங் கரைக்குப் போய்க் கால்களைச் சுத்தி செய்துகொண்டு நடுக் கூடத்துக்குத் திரும்பிவந்தார். முற்றத்தின் ஓரத்தில் வழக் கம்போல் சந்தியாவந்தனத்துக்கு விபூதியும் ஜலமும் லலிதா கொண்டுவந்து வைத்தாள். ஆனால் வழக்கத்துக்கு விரோத மாக ஒரு டம்ளர் ஜலத்தையும் அன்று ஒரேயடியாகக் கொட்டிவிட்டு, சந்தியாவந்தனத்தைக் . குறுக்கிவிட்டார் கணவர். எதிலாவது ருசி இருந்தால் தானே?
அதற்குள் தாயாரும் பையனும் வந்தார்கள். ஒரு தரம் அலங்கமலங்க விழித்துவிட்டு, “ஏண்டாப்பா? ஆம்படையாளோடெ சண்டேன்னா நான் சாதம் எடுத்துப் போடமாட்டேனோ? கண்ணெல்லாம் குழி விழுந்து போச்சே. இப்பிடிப் பகலெல்லாம் பட்டினி கடந்து சாறயே ; நன்னா இருக்கா? உக்காரு; சாதம் போடறேன்” என்று பரிவுடன் தாயார் சொன்னாள்.
பிள்ளை பதில் பேசவில்லை. தாயாருக்கோ தன்னால் சண்டை முற்றி, பிள்ளை பட்டினியாகக் கிடக்கும்படி ஆகி விட்டதே என்ற துக்கம்.
“இல்லா தபோனா அவளையே போடச் சொல்றேன். லலிதா, இந்தா, எலையைப்போடு’ என்று உருகிப்போய் உத்தரவிட்டாள்.
லலிதா இலைபோட்டுத் தண்ணீர் எடுத்து வைத்தாள்.
“எனக்கு வேண்டாம்” என்றார் ஐயர். தாயார் மன்றாடி மன்றாடிப் பார்த்தாள் ; பிரயோஜனப்படவில்லை.
“நீதான் சொல்லிப் பாரேன். வாயிலெ கொழக் கட்டை அடச்சிருக்கா? நீயும் பட்னி” என்று லலிதா வைப் பார்த்துத் தாயார் சொன்னாள்.
லலிதா உடனே வணக்கமாகவும் அன்பாகவும் சாப்பாட்டுக்கு அழைத்தாள்.
“வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தம் மெத் தையை எடுத்துக்கொண்டு திறந்த மாடிக்குச் சென்றார், ஸ்ரீசைலபதி ஐயர். படுக்கையை விரித்து வானத்தைப் பார்த்தவண்ணம் படுத்துக்கொண்டார்.
பகலில் நடந்த சம்பவத்தைப்பற்றித் தொடர்ச்சி யாக அவர் எண்ணிப் பார்த்தார். ‘சண்டை மூண்டது மனைவியாலா? தாயாராலா? அல்லது நாம் கணவன் லலிதா வெறும் மனைவி என்ற புருஷ அகங்காரத்தாலா?” என்று ஆராய்ந்தார். ஒன்றும் விளங்கவில்லை. சிறிது நேரத்துக்குள் சித்தம் ஓய்ந்து போய்விட்டது. தென்ன ஓலையின் ஓசை மயக்க மருந்து ஊட்டிற்று.
நள்ளிரவு; திடீரென்று கண் விழித்து எழுந்து உட்கார்ந்தார். மேலே நக்ஷத்திரங்கள் மாமூல்போல் பாராக்கொடுத்துக்கொண் டிருந்தன. சுற்றிலும் மரங்கள் அநாதிப் பொருளுக்கு வெண்சாமரம் வீசி நின்றன. இடை விட்டுவிட்டு நரிகளின் ஊளை காற்றில் கலந்தது. அதனுடன் சமீபத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல். ‘பக்கத்து வீட்டில்போல் இருக்கிறது’ என்று மறுபடியும் ஸ்ரீசைலபதி ஐயர் படுத்துக்கொண்டார். தூக்கம் பிடிக்க வில்லை. பகல் கலகம் அகத்தினுள் முன்னும் பின்னுமாகப் போயிற்று.
அழுகை நெருங்கிவந்தது. மறுகணத்தில், பையனை எடுத்துக்கொண்டு மனைவி எதிரில் வந்து நின்றாள்.வாய் மட்டும் திறக்கவில்லை. ஸ்ரீசைலபதி ஐயரின் உள்ளத்தில், கூட்டில் அடைத்த புனுகு பூனையைப்போல் ஒரு குடைச்சல் உண்டாயிற்று. அழுகையுடன் அழுகையாகப் பையன், “ஏப்பா ஒங்கிட்ட என்னெத் தூங்கவச்சுக் கல்லெ?” என்றான்.
பாதி ராத்திரியில் திறந்த மாடியில் பதில் சொன்னால் குடும்பக் கலகத்தை உலகத்துக்குத் தண்டோராப் போட் டதுபோல் ஆகுமோ என்னவோ என்ற அசட்டுப் பயம்; சும்மா இருந்தார் ஐயர்.
“ஏன் அப்பா வச்சிக்கல்லேங்கறேன்? இப்போ முழிச் சுண்டு பாத்தேன்.காணும்.மாடீலே இருக்கியோன்னு வந் தேன். இருட்டு, கறுப்பா பயமாயிருந்தது. அழுதேன். அம்மா இங்கே எடுத்துக்கிண்டு வந்தா. அம்மா நல்லவ, ஏப்பா!” என்று மேலே அடுக்கினான் பையன்.
அப்போதும் சும்மா இருந்தார். லலிதாவுக்கோ துயரம் தாங்கக்கூடவில்லை. தன் பேரில் இன்ன குற்ற மென்று சொல்லிவிட்டால் எவ்வளவு வைதாலும் தாங் கத் தயார் என்பது போன்ற உணர்ச்சி அவள் மனத்தில் பொங்கிக்கொண் டிருந்தது; “ஒங்கப்பா சந்நியாசம் வாங் கிக்கப் போரா. என்மேலே கோபம். இம்மே தொட மாட்டார் ஒன்னை” என்று பையனைப் பார்த்துச் சொன் னாள். ‘தொடமாட்டார்’ என்று சொன்னதைக் கேட்டதும் ஒரே தாவாகத் தாவிப் பையன் தகப்பனாருடைய கழுத் தைக் கட்டிக்கொண்டு, “கோபம்ன்னா என்னப்பா?” என்று கேட்டான்.
தகப்பனார் பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.
“அது ஏனப்பா வரணும் அம்மாபேரில்?” என்று பின்னும் பாணம் தொடுத்தான் பையன்.
“இப்போதாவது சொல்லுங்கோ; அப்பா, அம்மா, அண்ணன், தம்பி எல்லாரையும் விட்டுவிட்டு, எல்லாம் நீங்கதான்னூட்டு இருக்கேனே. இன்னிக்கி நான் பண்ணின பெசகென்ன? என் பேரில் பெசகுன்னா என்ன வேணா சிட்சியுங்கோ; வீணாப் பட்ணி கிடக்கிறேளே” என்று அழாத தோஷமாகக் கெஞ்சினாள் லலிதா.
கணவரின் மனம் தளர்ந்தது. அகக்கண்ணுக்கு முன்பு பகல் வேளைச் சம்பவம் வரிசையாக எழுந்தது. குற்றம் தன்னைச் சார்ந்ததென்று மனச்சாட்சி தெளிவா கச் சொல்லிற்று. அதைப் பளிச்சென்று ஒப்புக்கொண்டு விடலாம் அல்லவா? அப்படிச் செய்யாமல் கணவர்கள் வழக்கத்தை ஒட்டி, “பிசகு யார்பேரில் இருந்தால் என்ன? கச்சேரிக் கடுதாசு போய்விட்டது” என்று மழுப்பினார்.
“பாவம் குழந்தைக்கு என்ன தெரியும்?” என்றாள் லலிதா.
“தெரிந்தவள் நீ என்ன செய்தாய் என்று நான் கேட்கிறேன் ?”
“கோவிச்சுக்காதிங்கோ. சமையல் கட்டுலே இருந்தவ கவனிக்காதது பிசகுதான். கடுதாசுக் கிட்ட நீங்க இருந்தேளே…”
“சரி, சரி, சும்மா இரு. போனது போகட்டும். இரண்டாம் சண்டையைக் கிளப்பாதே” என்று சமரசப் படுத்தினார் ஐயர்.
கீழே இருந்து கைக்குழந்தையின் குரல் இரவின் நிச்சப்தத்தைக் கிழித்துக்கொண்டு கிளம்பியது. ஒரு நிமிஷம் லலிதா தயங்கினாள்.
“கீழே குழந்தை அழுகிறதே” என்றார் கணவர்.
“ஆனால் இன்னிக்கு வந்த கோபம் அர்த்தமில்லாத முன் கோபம்ன்னு ஆம்படையா கிட்ட ஒப்புக்கிண்டா அகௌரவமாக்கும்” என்று சொல்லிக்கொண்டே லலிதா கீழே இறங்கினாள்.
ஸ்ரீசைலபதி ஐயரின் மனம் முற்றும் இளகி விட்டது. மனச்சாட்சி உறுத்திற்று.
“ஏண்டீ!” என்பதற்குள் மாடிப்படியில் கால் மெட்டி யின் ஓசை கேட்டது. பையனை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.
“ஏதாவது சாப்பிட்டியோ, இல்லையோ?” என்று பரிவோடு போய்க் கேட்டார் மனைவியை.
“ஆயிடுத்தே.”
தன்னைச் சமாதானப்படுத்த வேண்டிச் சொல்லிய முழுப்பொய் அது என்று அவருக்குத் தெரியும்.
“போகட்டும். இன்னொரு தரம் சாப்பிடு.”
“அகாலத்திலே இரண்டாம் தரம் வேண்டாம். நீங்க கீழே வாங்கோ. ஒங்களுக்குப் பால் வச்சிருக்கேன். சாப்பிடுங்கோ. எனக்கு ஒரு நாள் ஏகாதசியாகத்தான் இருக்கட்டுமே.
ஸ்ரீசைலபதி ஐயர் தமாஷாக லலிதாவின் தோள் பட்டையில் தட்டினார்.
– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.