குடும்ப தர்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2024
பார்வையிட்டோர்: 269 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தந்திக் குமாஸ்தா தணிகாசலம் செட்டியார் ஆவலுடன் தபாலை எதிர்பார்த்து நின்றார். நாலைந்து நாட்களின் ஏமாற்றத்திற்குப் பிறகு, நீண்ட பழுப்பு நிறமான கவர் ஒன்றைத் தபால்கார னுடைய கையில் காணவே, செட்டியாரின் இருதயம் கோணலும் மாணலுமாக அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. தபால்காரன் இரண்டு மூன்று கடிதங்களைக் கொடுத்துவிட்டுப் போனான். அதற்குள் செட்டியாரின் மனைவியும் அங்கே வந்துசேர்ந்தாள். “ஆபீஸ் கடுதாசி போலிருக்கிறதே!” என்று விநயத்துடன் தன் ஆவலைத் தெரிவித்தாள். 

“என்ன எழுதியிருக்கிறார்களோ, தெரியவில்லை” என்று சொல்லிக்கொண்டே, பதறும் கைகளுடன் அவர் தபால் உறையைப் பிரித்துக் கடிதத்தைப் படித்தார் ; பிரமித்து நின்றார். “என்ன எழுதியிருக்கிறார்கள்?” என்று வேதவல்லியம்மாள் மூன்றாம் முறை கேட்டபின்புதான் செட்டியாருக்கு மறுபடி நினைவு வந்தது. 

“நம்பிக்கைத் துரோகம்! முழு நம்பிக்கைத் துரோகம்! தலையில் பெருங்கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டார்கள்! அயோக்கியப் பயல்கள்! நாம் என்ன கோட்டை கட்டிக்கொண்டிருந்தோம்! நான் ‘ஸ்தல மாற்றல் வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதன் பேரில், என்னைப் பன்னுவுக்கு மாற்றியிருக்கிறார்களாம்! என்ன கூத்து!” என்று செட்டியார் பதற்றத்துடன் சொன்னார். 

”பன்னுவா? அது எங்கே இருக்கிறது?’ 

“டில்லி, லாஹோர், ராவல்பிண்டிக்கெல்லாம் அப்பால் இருக் கிறது. வடமேற்கு எல்லைப்புறத்தில், 2000-மைல் தூரத்தில், சுத்தக் காட்டுமிராண்டி நாட்டில் இருக்கிறது. அந்தக் கொள்ளைக் கார ஊரில், பட்டப்பகலில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களைத் தூக்கிக்கொண்டு போய்விட்டுப் பிறகு விடுதலைப் பணம் கேட்பார்கள்.” 

“ஐயோ, தெய்வமே!… ஏன் இப்படிச் செய்துவிட்டார்கள்? படுபாவிகள்!” 

“போக்கிரித்தனம்! நம்பிக்கைத் துரோகம்! வேறு என்ன? இருக்கட்டும்.இதற்காக நீ கவலைப்படாதே.” 


தணிகாசலம் செட்டியார் ஆரம்பத்தில் சென்னையில் வேலையில் அமர்ந்தார். அப்பொழுது அவருக்கு ஊர் மாற்றல் என்ற தொந்தரவு இல்லை. ‘ஸ்டேஷன் ஸெர்வி’ஸில் இருந்தார். ஆனால் சம்பளம் குறைவு. அந்தக்காலத்தில் ‘ஜெனரல் ஸெர்விஸ்’ என்னும் ஸ்தலமாற்றல் நிபந்தனைக்கு உட்பட்டு, அதிகச் சம்பளம் வாங்கிவந்தவர்கள் பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியரே. பிறகு ஒரு கிளர்ச்சியின் பலனாக அநேக இந்தியர்களும் ‘ஜெனரல் ஸெர்வி’ஸில் எடுத்துக்கொள்ளப் பட்டார்கள். அவர்களுள் தணிகாசலஞ் செட்டியாரும் ஒருவர். 

அவர் ‘ஜெனரல் ஸெர்வி’ஸில் சேர்ந்த உடனேயே, வெளியூர் களுக்கு மாற்றப்பட்டார். அவர் ஸெர்விஸ் பார்த்த கல்கத்தா, மாண்டலே, கோரக்பூர், லக்கௌ முதலான ஊர்களில் தமிழ்க் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் முதலிய வசதிகள் இல்லாமை யால், அவர் தம் குடும்பத்தைச் சென்னையில் விட்டுவிட்டுத் தனி வாழ்க்கையே நடத்திவந்தார். அது அவருக்குப் பிடிக்கவே இல்லை. வாழ்க்கை ரசமற்று இருந்தது. 

மனம் நொந்துகொண்டும், மாதம் எழுபது எண்பது ரூபாய் நஷ்டமானாலும், ‘ஜெனரல் ஸெர்வி ‘ஸிலிருந்து ஸ்டேஷன் ஸெர்வி ‘ஸுக்கு மாற்றிக்கொண்டு விடலாமா என்று சிந்தித்துக் கொண்டும் அவர் ஏழெட்டு வருஷங்கள் எப்படியோ கழித்தார். அதன்பிறகு அவர் நான்கு மாத ரஜாவுக்கு எழுதிப்போட்டார். கூடவே, தம் அசௌகரியங்களை விவரமாகத் தெரிவித்து, விடு முறை தீர்ந்ததும் தமிழ் நாட்டிலேயே ஏதேனும் ஒரு பெரிய ஊரில் மாற்றிப் போட வேண்டுமென்று பிரார்த்தித்து ஒரு மனுவும் அனுப்பினார். 

ரஜா ஆரம்பித்ததும், அவர் நேராக டில்லிக்குப் போய், பெரிய ஆபீசில் தம் கஷ்டங்களைப் பற்றியும், தம் மனுவைப் பற்றியும் மேல் அதிகாரியிடம் சொல்லி, அவருடைய தலைமைக் குமாஸ்தாவோடும் கலந்து பேசித் தம் மனுவின்மேல் சாதகமான உத்தரவு போட வேண்டியதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, காரியம் கைகூடினவர்போல் ஊர் வந்து சேர்ந்தார். 

ரஜாவில் மூன்று மாதங்கள் கழிந்து நான்காவது மாதம் ஆரம்பித்ததுமே, எந்த ஊரில் போடுவார்களோ என்ற கவலை அவருக்கு உண்டாயிற்று. ‘மதுரையா, திருச்சிராப்பள்ளியா, பங்களூரா?’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே பன்னு என்ற இடி விழுந்தது. அவருக்கு வந்த கோபத்தில், ‘ஜெனரல் சர்விஸும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம். நான் உடனேயே அதை ராஜிநாமா செய்துவிட்டு, ‘ஸ்டேஷன் ஸர்வி ஸுக்கு மாற்றிக்கொண்டு விடுகிறேன். அதில் கிடைத்த சம்பளம் போதும் என்று பிடிவாதம் செய்தார். வேதவல்லி நல்ல வார்த்தை சொல்லி, “2000-மைல் தூரத்தில் நித்திய கண்டமான இடத்திற்குப் போவதென்றால், அந்தக் கஷ்டம் உங்களுக்கு மட்டுந் தானா? எனக்கு இல்லையா? ஆனாலும் நம் கடமையைச்செலுத்தித் தானே தீரவேண்டும்? திரைகடலோடியும் திரவியம் தேடுவது தானே புருஷர்களுக்கு அழகு? நீங்கள் தைரியமா யிருந்தால் தானே எனக்கும் தைரியம்? நம்முடைய குடும்பச் செலவு இரண்டு பங்கு, மூன்று பங்கு என்று அதிகரிக்கும் இந்தச் சமயத்தில், நாமாகவே வரவைக் குறைத்துக் கொள்ளலாமா? இன்னும் நாலைந்து வருஷங்கள் இதேமாதிரி பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்து விட்டால், அதற்குள் பெரியவனுக்கு வேலை கிடைத்துவிடும். அதற்குப் பிறகு, நீங்கள் என்னவோ 28 மாத லீவ் என்கிறீர் களே, அதை வாங்கிக்கொண்டு சொஸ்தமாய் வீட்டில் வந்து உட்காரலாம்” என்று தைரியப்படுத்தினாள். 

செட்டியார் புறப்பட்டார். ரெயிலில் இரண்டு மூன்று வாலிபர்கள் டில்லியில் வேலை ஒப்புக்கொள்ளுவதற்காகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிறுபிள்ளைத்தனத்தையும் அட்டகாசத்தையும் கண்டு அவர் முதலில் அசூயைப்பட்டார். பிறகு பரிதாபப்பட்டார். கடைசியாக, குடும்பத் தொல்லைகள் வந்து அழுத்தும் வரையிலாவது துள்ளி விளையாடட்டுமே என்று மானஸிக அனுமதி கொடுத்தார். 


பன்னு அவர் நினைத்ததைவிட மோசமாக இருந்தது. ஒரு மண் மதில் கோட்டைக்குள் மற்ற ஆபீசுகளுடன் தந்தி ஆபீசும் இருந்தது. இரவு எட்டு மணிக்குப் பிறகு கோட்டைக்கு வெளியே, பொது ஜனங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் போக முடியாது; விசேஷ அனுமதி பெறவேண்டும். பகலிலும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிப்போனால் அவனுடைய உயிருக்குச் சர்க்கார் உத்தரவாதி அல்ல. தொழில் முறையில் போகவேண்டி நேர்ந்தால் ராணுவ மெய்காப்புடன்தான் போக வேண்டும். கோட்டைக்குள் நாம் எதிர்பார்க்கும்படி நல்ல பண்டங்கள் கிடைப்பது துர்லபம். கறிகாய், பால், தயிர் வாங்குவதானால், “அப்துல்லாவின் கடையைக் காட்டிலும், ரஹ்மானின் கடை ஒரு மாற்றுத் தேவலை” என்பதுதான் நமக்குக் கிடைக்கக் கூடிய ஆறுதல்! 

செட்டியார் முடுக்கிவிட்ட யந்திரம்போல் ஆபீசுக்குப் போவதும், வீட்டுக்கு வந்து சாப்பாடானதும் ஒன்றிரண்டு பத்திரிகை புஸ்தகங்களைப் புரட்டிவிட்டுத் தூங்குவதுமாயிருந் தார். ஆனால் அந்தச் சாப்பாடு சாப்பாட்டில் சேர்த்தியா? தூக்கந் தான் களைப்பைப் போக்கும் சக்தியுள்ளதா? முருங்கைக்காய் ஸாம்பாரும் தேங்காய்ச் சட்டினியும் இட்டிலி தோசையும் நினை வுக்கு வந்துவிட்டால், பாவம், நாக்கிலும் கண்ணிலும் ஊற்றுக் கிளம்பிவிடும்! ஜெர்மன் கவி கெதேயின் வார்த்தைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் செட்டியார் தாரக மந்திரம்போல் நாக்கால் உருட்டிக்கொண்டே இருப்பார்:- 

“கண்ணீ ரூறிய அன்னமுண் ணாதோனும் 
விடியுமோ விடியுமோ வெனத் தவம் காக்காதவனும்
உன்னை அறியார் அறியார் அறியார் பராபரமே!’ 

செட்டியார் ஜனங்களோடு அதிகமாகக் கலப்பதில்லை. சர்க்கார் தம்மை வீணாய்க் கஷ்டப்படுத்துகிறது என்ற எண்ண மும், வீட்டுக்கவலையுந்தான் அவருடைய நண்பர்கள் என்று சொல்லவேண்டும். 

இப்படி இருக்கும்போது ஒரு நாள் செட்டியார், ஒரு துர் சொப்பனத்தின் காரணமாக, முன்னிலும் அதிக மனக்கசப்புடன் தம் மனைவியின் விருப்பத்திற்கு விரோதமாயிருந்தாலுங்கூட, ஸ்டேஷன் ஸெர்வி’ஸுக்கு எழுதிப்போட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டு ஆபீசுக்குப் போனார். அங்கே ஓர் அழுக்கடைந்த முரட்டுப் பட்டாணி ஸ்திரீ, “பாபுஜி,தயவு செய்து ஒரு தந்தி எழுதிக்கொடுங்கள் என்று வணக்கமாகக் கேட்டாள்.

“ஏன், கூலிக்கு எழுதுபவன் வாசலில் இல்லையா?” என்று செட்டியார் சற்றுக் கடுமையுடன் கேட்டார். 

“இருக்கிறான். சாதாரணச் செய்திகளை அவன் சுமாராக எழுதி விடுவான். இது கொஞ்சம் நாசுக்கான விஷயம். சற்று விசேஷ மாகக் கவனம் செலுத்தி, அர்த்தம் புரள்வதற்கு இடமில்லா மலும், மரியாதைக்கு மரியாதையாகவும், கண்டிப்புக்குக் கண்டிப் பாகவும் எழுதவேண்டியிருக்கிறது. படிப்பாளிகள் எழுதினால் நல்லது”. 

“இது என் கடமையே அல்ல சரி என்ன விஷயம் சொல்”. 

“உங்கள் கடிதம் கிடைத்தது. ஒன்றும் அவசரப்பட்டுச் செய்துவிட வேண்டாம். பிரிவு உங்களுக்குத்தானா? எனக்கு இல்லையா? செலவும் பொறுப்பும் அதிகரிக்கும்போது, ஊர் பிடிக்கவில்லை யென்று சொல்லி நீங்கள் தொழிலை விட்டு வருவது தர்மமா? அங்கேயும் லக்ஷக்கணக்கான ஜனங்கள் வசிக்கவில்லையா? நாம் கஷ்டப்பட்டால்தானே நம் பிள்ளை கள் கஷ்டப்படாமல் நல்ல நிலைமைக்கு விருவார்கள்? நான் ஒருத்தி காய்கனிகள் விற்று எவ்வளவு சம்பாதிக்க முடியும்? தைரியமா யிருங்கள். எனக்கும் தைரிய மூட்டுங்கள்.” 

இந்த வார்த்தைகளைக் கேட்டுச் செட்டியார் ஒரு க்ஷணநேரம் மெய்ம் மறந்திருந்தார். சொப்பனத்தில், யாரோ ஒருவர்,தமக்கு உபதேசம் செய்வதுபோல் அவருக்குத் தோன்றிற்று. அவருடைய மனத்தில் ஒரு விபரீத மாறுதல் ஏற்பட்டது. பிறகு நினைவு வந்து, “இது கடிதமா,தந்தியா?” என்று அவர் கேட்டார். 

“ஐயா, தந்திதான்.” 

“ஊர்ப்பட்ட செலவாகுமே?”

“என்ன செய்யலாம்!” 

“தபாவில் அனுப்பினால்? அவ்வளவு அவசரமான சங்கதியா?” 

“தந்தி,சுடுகஞ்சி; தபால், ஆறின கஞ்சி!” 

செட்டியார் அந்த ஸ்திரீ சொன்னதை ஜாக்கிரதையாய் மொழிபெயர்த்து, நிதானமாய்ப் பிசகு ஏற்படாவண்ணம், ராவல் பிண்டி ஆபீசுக்கு அடித்துவிட்டு, ராவல்பிண்டி தந்தி குமாஸ்தா விடம் அதைத் தாமதம் இல்லாமலும் பிழை இல்லாமலும் அப்பால் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். 

செட்டியாருடைய மனோபாவமே மாறிவிட்டது. உலகமேபுதுப் பிரகாசத்தோடும் புதுப் பசுமையோடும் அவருக்குத் தோன்றிற்று. மற்றக் குமாஸ்தாக்களுடனும் அக்கம்பக்கத்தாருடனும் பழக ஆரம்பித்தார். குழந்தைகள் அவர் வீட்டிற்கு வர ஆரம்பித்தன. அவர் அவர்களுக்குப் பத்திரிகைகளிலிருந்து படங்கள் காட்டுவார்; கற்கண்டு, பாதாம் பருப்பு முதலியன கொடுப்பார்; அவர்க ளுடைய பாஷையைப் புரிந்துகொள்ள முயலுவார். விட்டத் தில் குளவிக் கூடையும், திண்ணையில் கறையான் புற்றையும் பார்த்தால், “ஆஹா, என்ன பொறுமை! என்ன சுறுசுறுப்பு!’ என்று மெச்சுவார். தெருக்காரர்கள் அவருடைய புதுச் சிநேக பாவத்தைக் கண்டு, “மிஸ்டர் செட்டியார் டர்பி பந்தயத்தில் ஜயித்திருக்கிறாரோ?” என்று பேசிக்கொள்வார்கள். 

செட்டியார் தம் மனைவிக்கு எழுதின ஒரு கடிதத்தில் பின் வருமாறு எழுதியிருந்தார்:- 

“…….என்னைப்பற்றி நீ இவ்வளவு கவலை கொள்ளக் கூடாது. வந்த புதிதில் ஒருமாதிரி இருந்தது, வாஸ்தவந்தான். இப்பொழுது பழகிப்போய் விட்டது. நான் உள்ளூர் ஆள் ஆகிவிட்டேன். இரண்டு மூன்று ஆப்த நண்பர்கள் கூடக் கிடைத்துவிட்டார்கள். இந்த வேடிக்கை பார்: மேல் மூடி போன்ற நடை உடை பாவனைகளை விலக்கிவிட்டால் மனிதனின் உள்ளம் எங்கேயும் அநேகமாக ஒரேமாதிரிதான். இருக்கிறது…..காலம் சந்தோஷமாகக் கழிகிறது. வொருவனும் தன் குடும்பப் பொறுப்பை நிறைவேற்றுவதற் காக என்ன பாடுபடுகிறான்! பக்ஷிகளையும் தேனீக்களையும் பார் : தம் கஷ்டத்தை மறந்து குடும்பத்திற்காகவும் வம்சத்திற்காகவும் எப்படி ஏகமனசாய் உழைக்கின்றன! ஆச் சரியம்! ஒரு நாள் ஓர் அழுக்கடைந்த முரட்டுப் பட்டாணிக்காரி என் ஆபீசுக்கு வந்தாள். அவள் புருஷன் மதுரை ஜில்லாவில் ஆண்டிப்பட்டிக்கு அருகே ரயில் கண்ட் ராக்ட் வேலை செய்துவருகிறான். பத்து வருஷமாய் அங்கேயே வசிக்கிறானாம். அவன் தன் மலைநாட்டை நினைத்து நினைத்து என்ன பெருமூச்சு விடுகிறானோ! தந்தூர் ரொட்டியின் நினைவும், பாசுமதி அரிசிப் புலாவின் நினைவும் அவனை எப்படித் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும்? மூன்று நான்கு மாதத்திற்கு ஒருமுறை 100 அல்லது 150 அனுப்புகிறான். இங்கே அவனுடைய மனைவி வீட்டைக் கவனித்துக்கொள்ளுகிறாள் அவர்களுக்கு குழந்தைகள். பெரியவன் ஸ்கூல் பைனல் படிக்கிறான். அடுத்தவன் ஒரு தையற்கடையில் வேலை கற்கிறான். அவள் ஒரு நாள் தன் கணவனுக்குத் தந்தி அனுப்ப ஆபீசுக்கு வந்தாள். தந்தி சமாசாரம் வெளியே விடக்கூடாது. ஆனால் உன்னிடம் சொல்வதற்கென்ன? ரூ. 7-5–0 செலவழித்து ஒரு நீளத்தந்தி அடித்தாள். அதில்……”

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *