வசந்தாவும் சோமுவும் யோசனையில் இருக்க, மகனும் மருமகளும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல குழப்பம் என்பதைவிடப் பேரப் பிள்ளைகளைப் பற்றிய கவலைதான் அதிகம் இருந்தது.
“நல்லா யோசித்துதானே முடிவு செய்திருக்கீங்க. இதில் நாங்க சொல்ல என்னப்பா இருக்கு. பேரப்பிள்ளைகளை எப்படிப்பாக் கவனிப்பீங்க? சோமு கவலையாகக் கேட்க,
“அதெல்லாம் பெரிய பிரச்சனை இல்லை மாமா. சந்துரு ஸ்கூலுக்குப் போனா சாயங்காலம்தான் வருவான். அவன் போற ஸ்கூலிலே பிளே ஸ்கூலும் இருக்கு. இலக்கியாவை அங்க விட்டுட்டாச் சாயாங்காலம் ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்திரலாம். ரஞ்சித் எனக்குக் கூடமாட உதவி செய்றேன்னு சொல்லியிருக்கார். அதனால், சமாளிச்சிருவோம்.” உதயாவிடம் இருந்து பட்டென்று பதில் வந்தது.
வசந்தாவின் கவலை மேலும் அதிகமாக, “அவளுக்கு ரெண்டு வயசுதான் ஆகுது. இப்பவே ஸ்கூலில் கொண்டு விடனுமா? நீங்க ரெண்டு பேரும் பகல் இராத்திரின்னு மாற்றி மாற்றி வேலைக்குப் போறீங்க. குழந்தைகளை எப்படிக் கவனிப்பீங்க. இங்க நாங்க இருக்கோம் கவனிச்சிப்போம். எதுக்கு இந்தத் திடீர் முடிவு?” என்றார்.
“அத்தை, அதையெல்லாம் யோசிக்காமலா இருப்போம். நாங்க மாற்றி மாற்றிப் போனாலும், யாராவது வீட்டில் இருப்போம். அதனால், குழந்தைகளைக் கவனிக்கிறது பெரிய விஷயமே இல்லை. இங்க விட்டா நாங்கதான் இங்க, அங்கன்னு அலையனும்.”
“திடீர் முடிவு இல்லைம்மா. ரொம்ப நாளா யோசித்துதான் முடிவு பண்ணோம். சஞ்சுவை கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. ஆனால், அவ மாதத்தில் நான்கு, ஐந்து முறை இங்க வரா, அத்தை, மாமான்னு எல்லாச் சொந்தமும் வராங்க. அவங்க வரும் ஒவ்வொரு முறையும் நாங்க எங்களுக்குச் சேர்த்து வைத்திருப்பதை அவங்களுக்குத்தான் செலவு பண்ண முடியுது. அவங்களை அடிக்கடி வராதீங்கன்னு சொல்ல முடியாது. எங்க பிள்ளைகளுக்குன்னு சேர்த்து வைக்கனும்னா நாங்க தனியா போய்தான் ஆகனும்.”
ரஞ்சித் பேச்சில் அதிர்ந்த பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “எங்களுக்குன்னு ஒரு பிரைவேசி வேணும் அத்தை. எங்களுக்கு அது இங்க கண்டிப்பாக் கிடைக்காது. எங்க இடத்திலிருந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்க அத்தை.”
இருவரையும் அதற்கு மேல் இழுத்து பிடிக்க வசந்தாவும் சோமுவும் விரும்பவில்லை. கட்டாயப்படுத்தினாலும் குடும்பத்தில் நிம்மதி குலைந்துவிடும் என்பதால், அவர்கள் விருப்பம் போல் இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர்.
அடுத்தச் சில நாட்களிலே தாங்கள் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் குடிபெயர்ந்தனர். தனியாக வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். தன் குடும்பம் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.
காலை எழுந்ததும் இருவரும் சேர்ந்தே எல்லா வேலையும் செய்து, குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தாங்களும் அலுவலகம் புறப்பட்டுச் சென்றனர். இருவருக்குமே பகல் நேர வேலை என்பதால் எல்லாமே சுலபமாகச் சென்றது.
மூன்று மாத காலம் மகிழ்ச்சியாக உலா வந்தார்கள். இருவருக்கும் காலை நேர வேலை என்பதால் குழந்தைகளைப் பள்ளியில் விட்டுட்டு அவர்களும் அலுவலகம் செல்ல வசதியாக இருந்தது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வேலை நேரம் இருவருக்கும் மாறும். அடுத்த மாதத்திலிருந்து உதயாவுக்கு இராத்திரியும் ரஞ்சித்துக்கு மதிய நேரமும் வேலை மாற, குழந்தைகளைக் கவனிப்பதில் குழப்பமானார்கள்.
“ரஞ்சித், நான் இராத்திரி எட்டு மணிக்குக் கிளம்புவேன். நீங்க இராத்திரி ஒரு மணிக்குத்தான் வருவீங்க. இடைப்பட்ட நேரத்தில் பிள்ளைங்களை எங்க விடுறது? மூன்று மாதம் மட்டும் அத்தையை வரச் சொல்லலாமா?”
வேகமாக வேண்டாமென்று தலையை ஆட்டிய ரஞ்சித், “அம்மா வந்தா அப்பா வருவாங்க. அப்பா வந்தா சஞ்சு வருவா. அப்படியே வரிசையா எல்லோரும் வர ஆரம்பிச்சிருவாங்க. திரும்பப் பழையபடி ஆயிடும். நீ காலை ஷிஃப்ட் மாற்ற முடியுமா பாரேன்.”
“போன தடவை எனக்கு நைட் ஷிஃப்ட்தான். நான்தான் காலையில் மாத்திட்டு வந்தேன். அதனால், எனக்கு முடியாது.”
“சரி விடு நானே கேட்டுப் பார்க்கிறேன்.” என்றபடியே அன்றே அலுவலகத்தில் கேட்டுக் காலையில் மாற்றிக் கொண்டு வந்தான் ரஞ்சித்.
இரவு தூங்காமல் வேலை முடித்து வந்த உதயா வீட்டைக் கண்டதும் கண்கள் அகல விரிந்தது. துணிகள் அங்காங்கே கிடக்க, சமையல் அறையில் சமைக்கிறேன் என்று ரஞ்சித் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து அதை அறை முழுவதும் போட்டு வைத்திருக்க வீடே தலைக் கீழாக இருந்தது. அதை எல்லாம் சுத்தம் செய்வதற்கே ஒரு நாளாகிடுமே தான் எங்கிருந்து தூங்குவது என்பதை நினைத்து நுனி மூக்குச் சிவந்தது.
“என்ன ரஞ்சித் இதெல்லாம்? உங்களை யார் சமைக்கச் சொன்னது. நான் வந்து செஞ்சிருந்தா ஒரு மணி நேர வேலைதான். இதையெல்லாம் சுத்தம் செய்யவே ஒரு நாள் ஆகும் போல.” கோபத்தில் முகம் சுளித்தாள்.
“நீ வந்து எப்ப சமைச்சு, நாங்க சாப்பிட்டுக் கிளம்பறது. குழந்தைங்களுக்கு எதைக் கொடுத்து அனுப்புறது? கோபம் மட்டும் வருது யோசிக்கமாட்டியா?”
“அவங்களுக்கு நான் ஸ்கூலில் கொண்டு போய்க் கொடுத்திருப்பேன். நீங்க ஆபீஸ் கேண்டீனில் சாப்பிடலாமில்ல. இப்ப எனக்குதான் டபுள் வேலை. அழுக்குத் துணியைக்கூடக் கூடையில் போட முடியாதா? அப்படி அப்படியே போட்டு வச்சிருக்கீங்க.”
“தூங்காம வந்து கஷ்டப்படுவியேன்னு எல்லாம் செஞ்சு வச்சா. ஓவரா பேசிட்டு இருக்க. இனிமே நான் எதுவும் செய்யமாட்டேன். நீயே எல்லாத்தையும் பார்த்துக்கோ.” எனக் குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு கோபத்தில் புறப்பட்டான்.
தன் கைப்பையைத் தூக்கி எரிந்த உதயா, நான்கு அறைகளும் குப்பைப் போல் இருந்ததைச் சுத்தம் செய்து முடித்துவிட்டுப் படுத்தாள். குழந்தைகளை அழைத்து வர நேரமானது தெரியாமல் அசந்து தூங்கிவிட்டாள்.
இருவரையும் அழைக்க யாரும் வரவில்லை என்றதும் பள்ளியிலிருந்து உதயாவிற்கு அழைக்க, அவளுக்குக் கைப்பேசியின் ஒலியும் கேட்கவில்லை. உடனே ரஞ்சித்திடம் விபரத்தைக் கூறினார்கள். அவன் அடித்துப் பிடித்து வந்து இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
ஆத்திரத்தில் உதயாவை அடித்து எழுப்பி, “என்ன பொம்பளை நீ? இப்படியா தூங்குவ? ஸ்கூலிருந்து எத்தனை தடவைக் கால் பண்ணியிருக்காங்க. அதை எடுத்துப் பேசக்கூட முடியலையா? குழந்தைங்களைப் பார்த்துக்கிற இலட்சணமா இது?”
“ரஞ்சித், தேவையில்லாம பேசாதீங்க. இராத்திரியும் தூக்கம் இல்லை. வீட்டுக்கு வந்தா குப்பையாக்கி வச்சிருக்கீங்க. அதையெல்லாம் சுத்தம் செய்துட்டுப் படுத்தேன். அலுப்பில் தூங்கிட்டேன். இது அவ்ளோ பெரிய தப்பா? ஒரு சின்ன வேலையைக் கூட உங்களுக்கு ஒழுங்காச் செய்யத் தெரியலை. உங்களை நம்பி நான் தனியா வேற வந்தேன் பாருங்க. என்னைச் சொல்லனும்.” என முனுமுனுத்தபடியே சென்றாள்.
வேலை பளு அதிகமாக அதிகமாக அவர்கள் போட்டக் கணக்கைவிடச் செலவுக் கணக்கு அதிகமானது. “உதயா, வர சம்பளம் செலவுக்கே இருக்கு. சேமிக்கன்னு ஒன்னுமே இல்லை. நீ சம்பாதிக்கிறன்னு பணத்தைத் தண்ணி மாதிரி செலவு பண்ணுவியா? குடும்பப் பொம்பளைக்குப் பொறுப்பு வேண்டாமா?”
“வீட்டு வாடகைப் போதாதுன்னு மருத்துவக் காப்பீடு, விபத்து காப்பீடுன்னு எல்லாத்தையும் என் தலையில் போட்டாச்சு. இதுக்குப் பிடிச்சது போக மீதி இருப்பது நாக்கு வலிக்கக்கூட ஆகாது. நான் தண்ணி மாதிரி செலவு பண்றேன்னு என்னைக்
கேள்வி கேட்கீங்க. உங்க சம்பளத்தை என்ன பண்றீங்க? அப்படியேத்தானே வச்சிருக்கீங்க.”
“ஸ்கூல் ஃபீஸ், கரண்ட் பில், வண்டிக்குப் பெட்ரோல், வீட்டுச் செலவு, அவசரச் செலவுன்னு எல்லாத்துக்கும் பணம் உங்க ஐயாவா கொடுக்கிறார்.” வீட்டின் அத்தியாவசியத்தை சமாளிக்க திணறும் நேரம், இருவருக்குமிடையில் சிறு சிறு பிரச்சனைகளும் விஸ்வரூபம் எடுத்து நின்றது.
இருவருக்கும் நடந்த மோதல் பெரிதாக இரு வீட்டினரின் உறவுகளும் பஞ்சாயத்துக்குக் கூடி விட்டார்கள். சுமுகமாகப் பேசி முடிக்கலாம் என நினைத்து வந்த சோமுவும் வசந்தாவும் பிரச்சனைப் பூகம்பமாக வெடித்து இரண்டாகப் பிளவுப் பட்டு நிற்பதைக் கண்டு விக்கித்துப் போனார்கள்.
“உதயா, இவன் தயவை எதிர்பார்த்து நீ இல்லை. நீ சொந்தக் காலில் நிற்க. இவனை விட்டுட்டு வா. உன்னையும் பிள்ளைகளையும் நாங்க பார்த்துக்கிறோம். என்ன பேச்சுப் பேசுறான். பொண்டாட்டின்னா அவ்ளோ இளக்காரமா?” உதயாவின் அண்ணன் எகிறினான்.
“கூட்டிட்டுப் போ உன் தங்கச்சிய? இவளை விட்டா என் மருமகனுக்கு வேற பொண்ணுக் கிடைக்கமாட்டாளா? வேற நல்ல பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் செய்து வைப்போம்.” ரஞ்சித் தாய்மாமாவின் பேச்சுக்குத் தடை ஏதும் சொல்லாமல் சம்மதம் என்பது போலிருந்தான். அதைக் கண்ட உதயா விவாகரத்துக்குச் சம்மதம் சொல்லிவிட்டாள். அவளே சொன்ன பிறகு தான் சொல்லாமல் இருப்பதா என்ற வறட்டுக் கர்வம் ரஞ்சித்தும் சம்மதம் என்றான்.
வசந்தா, சோமு அதிர, இதற்கு மேல் பேசாமல் இருந்தால் இருவரின் வாழ்க்கை வீணாவது மட்டும் இல்லாமல், பேரப்பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்று இருவரும் முதலில் ஒரு வருஷம் பிரிந்து இருங்க. இதே முடிவில் அப்போதும் இருந்தால் விவாகரத்து வாங்கிக்கலாம் என்றார்கள்.
இருவரும் உடன்படக் கையோடு ரஞ்சித்தை தங்களுடன் அழைத்து வந்துவிட்டார்கள். வேலையின் நிமித்தம் உதயா அதே வீட்டில், அவள் அம்மா குழந்தைகளுடன் இருப்பதாகக் கூறிவிட்டாள்.
ஒரு வாரம் கழித்து உதயாவின் அண்ணன் அம்மா இல்லாமல் குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்று அவன் குழந்தைகளை விட்டுச் சென்றான். போனவன் போனவன்தான் மூன்று மாதமாகியும் திரும்ப வரவே இல்லை. அண்ணன் தன் மேல் குதிரைச் சவாரி செய்ய நினைக்கிறான் என்பது உதயாவிற்கு புரிய தொடங்கியது. குழந்தைகளை நான் கவனித்துக் கொள்கிறேன் என்று தன் தாயை அண்ணனின் குழந்தைகளுடன் ஊருக்கு அனுப்பி வைத்தாள்.
“ரஞ்சித், எங்களுக்கு வயசாகிருச்சு. இனிமேல் உன் வேலையை நீயே பார்த்துக்கோ.” என்று வசந்தாவும் சோமுவும் ஒரே வீட்டில் இருந்தாலும் விலகி இருக்க,
சஞ்சு வந்தாலும் அவன் முகம் பார்த்து பேசுவதில்லை. அலுவலகம் முதல் செல்லும் இடமெங்கும் மனைவியைக் கூட்டிட்டு வந்துட்டியா? என்ற கேள்வி ஒலிக்க, ரஞ்சித்துக்கு நெருப்பில் நிற்பது போல் இருந்தது.
ஆறு மாத காலம் இருவருக்கும் ஒருவரைப் பற்றி ஒருவருக்குப் புரிய தொடங்கியது. இரண்டு நாள்கள் தீவிர யோசனைக்குப் பின், உதயாவின் அலுவலகம் சென்ற ரஞ்சித், அவளையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
இருவரின் பிரிவு அவர்களை ஒன்று சேர்க்கும் என்று வசந்தா, சோமு போட்ட கணக்குத் தப்பாகவில்லை. குழந்தைகளைப் பழையபடிப் பாட்டி, தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு அலுவலகம் பறந்தார்கள். அவர்களின் மலர்ந்த முகமே அவர்களின் மனமாற்றத்தைப் பறைசாற்றியது.
சிறு பிரச்சனை என்றாலும் கணவன் மனைவிக்குள் இருக்கும் மனம் திறந்த பேச்சு எந்தப் பிரச்சனைகளையும் எளிதாக்கும். இருவருக்குமிடையில் மற்றவர்கள் நுழைய இடம் கொடுப்பதால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பிரிவு என்பதைத் தேடிச் செல்கிறது.