(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
செக்கலுக்குள் தான் வள்ளம் கரை தட்டியது. இப்போதெல்லாம் கடல் முன்னர் போல இல்லை. உடம்பை முறித்து விடுகிறது. வெய்யில் அகோரம் ஒரு பக்கம்… பொக்குணிக்குத் தெரியும் எங்கு நல்ல வடிசாராயம் கிடைக்குமென்று. உடம்பு அலுப்புக்கு மாற்று ஏது? சாராயத்தால் தொண்டைக்குளியை நனைத்தபடியே கொட்டாபெட்டிக்குள் இருந்த மாசி கருவாட்டை எடுத்துக் கடித்துக் கொண்டதில் எல்லையற்ற சுகம்.
தள்ளாடியபடியே நடந்தான். கையில் ஒரு மணலை மீன். “மண்ணை விற்றும் மணலை தின்” என்பார்களே…அதே மீன்தான். மறுகையில் போத்தல்.
இருட்டில் பூதங்கள் போல நெருக்கமாகத் தெரியும் குடிசைகளை எல்லாம் தள்ளாடும் கால்களால் கடந்து செல்லும்போதே, பொக்குணி அந்த அந்த குடிசைகளை அடையாளம் கண்டு தனக்கும் அவ்வக் குடிசையில் இருக்கும் மனிதர்களுக்கும் இடையே இருக்கக் கூடிய பகைமைக்கும் நட்புக்கும் ஏற்ப புலம்பியபடி சென்றான்.
“டேய் மண்டாடி…நான் தானடா…உனக்கு யமன்” என்று கூறியும்,”தூ…….” என்று காறி உமிழ்ந்தும் செல்வான்.
“ஏய் ராசாத்தி…நீ நல்லவள். நான் குடிக்கேல்லை . குடிக்கவேயில்லை. கண்ணனைக் கேட்டதாய்ச் சொல்லு”… என்றும் சரணடைவான்.
அந்த வெறியிலும் அவனுடைய கால்கள் எந்த இலக்கை நோக்கிச் சென்றனவோ அந்த இலக்கை எய்தின. குடிசை வாசலிலிருந்து பிய்த்துப் பிடுங்கி விடுவதாக படலையை நோக்கிப்பாய்ந்து வந்த வீமன் நாய், மோப்பசக்தி காரணமாக பொக்குணியை அடையாளங்கண்டு “ங்…” என்று அனுங்கியபடி அவனது கால்களுக்கிடையே விழுந்து புரண்டு எஜமான் விசுவாசத்தை உணர்த்தியது.
தெய்விக்கு முப்பதுக்கு மேல் இருக்காது. கட்டழகி! ஆனால் அதற்குள்ளாகவே அவள் இந்த வாழ்க்கையின் மேடு பள்ளங்களை நன்கு அனுபவித்து சலித்து விட்டிருந்தாள். தனது தெய்வம் என்று அவள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அவள் கணவன் மண்டாடியின் மகளோடு ஓடிவிட்டபின் அவள் எதிர்கொண்ட அவமானங்கள் எண்ணிலடங்கா. அதன் காரணமாகவே ஆண்களை மதிக்காத தன்மை ஒன்று அவளுள் மூகிழ்த்து எழுந்தது.
அவளுக்குப் பொக்குணி யார்? யாருமல்ல…வெறுமனே அவளுக்கு உழைத்துப் போடவேண்டியவன்..அவளைக் கட்டாக்காலிகள் மேய்ந்து விடாதபடி காவலிருக்க வேண்டியவன். சில வேளைகளில் அவளது வக்கிரத்துக்கு தீனி போடவேண்டியவன். மற்றும்படி அவளுக்கு அவன் வெறும் தூசு.. “தெய்வி…என்னடி செய்யிறாய்? குப்பிவிளக்கு குடிசைக்குள் சிணுங்கி கொண்டிருந்தது. எனவேதான் தெய்வி எங்கிருக்கிறாள் என்று வினாவால் துளாவினான் அவன். “நான் என்ன செய்யிறது…வாற வழயிலை எந்தக் குடிசை தடக்கி எங்க மல்லாந்து கிடக்கிறியோ எண்டுதான் கவலைப்பட்டுக் கொண்டு கிடக்கிறேன்.” தெய்வி உக்கிரம் ஏற்றினாள்.
“என்னத்தை இழந்தாலும் உன்னுடைய வாய்க்கொழுப்பு போகாதே!” என்று கூறியபடியே கையில் வைத்திருந்த மீனை அவளிடம் நீட்டினான். தெய்வி உடுப்பு மாற்றும் மறைப்புக்கும் பின் தட்டிக்குமிடையே அந்த வடிசாராயப் போத்தல் மறைக்கப்பட்டது.
தெய்வி, உலையை ஏற்றினாள். பின் அரிவாளை எடுத்து குப்பி விளக்குக்கு முன்னால் வைத்தாள். மீனின் கழுத்துப் பகுதியில் அரிவாளை ஏற்றினாள். விரல்களை வெட்டுண்ட பகுதிக்குள் செலுத்தி நுங்கு தோண்டுவதுபோல எதையோ பிதுக்கினாள். குடலும், ஏனைய பகுதிகளும் விரலில் சிக்குண்டு வந்தன. அந்த மீனினுடைய இருப்பே அவ்வளவுதான்!
பொக்குணிக்கு அவளுடைய குத்தல் பேச்சு விளங்காமல் இல்லை. வடிசாராயம் விற்கும் கயல்விழிக்கும் அவனுக்கும் தொடுப்பு இருக்கக்கூடும் … இல்லாமலும் இருக்கக்கூடும் அது பற்றி அவளுக்கு எந்த ருசுவும் கிடையாது. ஆனால் பொக்குணியின் பலவீனங்களை ஒரு புறமும் கயல்விழியின் எடுப்புச் சாய்ப்பை மறுபுறமும் அறிந்தவள்தான் அவள். அதை வைத்து அவள் மானசீகமாக வளர்த்துக் கொண்ட கற்பனைதான் அதிகம்.
பொக்குணி பொறுத்துப் பார்ப்பான். அவளுடைய வாய் அடங்கும் வாயல்ல. “போனாய் ….” என்று கூறுவாள். சிறிது நேரம் கழித்து ……..” கதைத்தாய்…” என்று கூறுவாள். பின் “தொட்டாய்.” என்றும் “தொடர்ந்தாய்…” என்றும் கதை வளருமே தவிர முற்றுப் பெறாது.
“போனால் தான் என்னடி?’ என்று பொக்குணி
அதட்டினான். அதற்கு மேல் தெய்வியின் கற்பைைன கரை புரண்டோடியது.“ஓ….”என்று குரல் வைத்தாள். ஊரைக்கூட்டுவதுபோலக் கூப்பாடு போட்டாள்….. திட்டினாள். பின் இடுப்புச்சேலையை உருவி உதறிவிட்டாள். உடுப்பு மாற்றும் மறைப்புக்குள் போனாள். வந்தாள். பொக்குணி மௌனம் காத்தான். அவனுக்குத் தெரியும். அவளுக்கு கோபம் எல்லைமீறும் போது அவனுக்குத் தெரியாமல் வடிசாராயத்தில் ஒரு மிடறு பருகி வைப்பாள்…
“நீ போனாலென்ன…கிடந்தாலென்ன…நான்.நான் தான் என் புருஷன் சரியாக இருந்திருந்தால் நான் இக்கேடு கெடுவேனா? தெய்வி குரல் வைத்தாள்.
பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து மிளகாய்ப்பொடியும் மஞ்சளும் தடவி வைத்த மணலை மீன் குழம்பு குமிழியிட்டு பொடுபொடுத்தது. உலையும் உவிந்து மணம் வீசியது. அவள் தனது புருஷனை அதுவும் ஓடிப்போய் விட்ட புருஷனை இழுத்துப் புகழ்ந்தது பொக்குணிக்குப் பெருங் கோபத்தையே உண்டு பண்ணியது.
இருந்தபடியே எட்டிக் காலால் உதைத்தான் அவளை. தெய்வி விலகிக் கொண்டாள். இவளுடனான வாழ்க்கையே வேண்டாம் என்று அவனுக்குத் தோன்றியது. போத்தலைத் திறந்து வடிசாராயத்தை சிறிதளவு ஊற்றிக் கொண்டான். பின் குடிசை முற்றத்தில் குடம் வைக்கும் தென்னங்கன்றுடன் சாய்ந்து நின்றபடி யோசித்தான். “போய்விடலாமா?’
அப்போதென்று மீன் குழம்பு அதிக அளவு வாசத்தை வீசியது. சினிமாக்காரிகள் போன்று அவளது மாராப்பு எடுப்பு நினைவுக்கு வந்தது. நிலவும் எழுந்து வந்தது.
“ஏய்.தென்னங்கன்று ஒன்றும் சாய்ந்து விடாது. வந்து சாப்பிட்டு விட்டுத் தூங்கு…” தெய்வி குரல் கொடுத்தாள். பாத்திரங்கள் கழுவுவதற்கென வைத்த குடத்து நீரை சரித்து கைகால் அலம்பிவிட்டு பொக்குணி குடிசை மத்தியில் அமர்ந்தான். அவனது இடது கால் தொடையோரம்
அமர்ந்து மீனுக்கு முள் உடைத்து சோற்றைக் குழம்புடன் திரட்டி அவனது வலது கையில் வைத்தாள். அவர்களுக்கிடையே சண்டை மூளாத இரண்டு சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் அது! தெய்வியும் உணவருந்தி கையலம்பிய பின் கூறினாள்.
“இனிமேல் கயல்விழியைத்தேடி அலையாதே…அப்படி அலைந்தாய்…புழுப்பிடித்துத்தான் சாவாய்…” பொக்குணிக்குக் கோபம் சிரசைத் தட்டியது.
“உனக்கு உன் புருஷன் தான்ரி சரி” என்று ஓடிப்போன அவளது கணவனை இழுத்தான். தெய்வியின் பெண்மைக்கு அது சவாலாக அமைந்தது போலும்! எழுந்தாள்…அரிவாளை வலது கையில் உயர்த்திப் பிடித்தாள். பின் அதட்டினாள்.”ஏய் …மற்ற பொம்பிளைகளுக்கு எல்லாம் அகப்பைதான் ஆயுதமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இந்த அரிவாள் தான் ஆயுதம்.”
பொக்குணியும் அடங்கிப்போய் விடவில்லை. இப்போதுதான் அவனுக்கு அந்த வடி சாராயம் அதிக அளவு வேலை செய்தது. புலம்புவது போலவே அவளை மடக்கினான். “ஏய்…யாரை விரட்டுகிறாய். நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு…அண்டைக்கு நான் விரால் மீன் கொண்டுவந்த தினம்….கண்ணன்ரை மனுசி ராசாத்தி…உன்னை ஏன் ஏசினவள்?
தெய்வி “ங்..” என்று ஓலமிட்டு அழத்தொடங்கினாள். பொக்குணி மீண்டும் மீண்டும் கேட்டான்.”கண்ணன்ரை மனுசி ராசாத்தி..உன்னை ஏன் ஏசினவள்?”
தெய்வி வாயடைத்துப் போனாள்! அவளது ஓலம் படிப்படியாகக் குறைந்தது. பதில் மட்டுமில்லை! பொக்குணி அந்த அமைதியில் அரைத்துக்க நிலைக்குப் போய்க்கொண்டிருந்தான்.
தெய்வி இலாவகமாக மாராப்பை அவிழ்த்து வீசியதில் குப்பி விளக்கு அணைந்தது..!
– தினமுரசு ஏப்ரல் 21.27.2002, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.