(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘ஏய் சாய்பு ….’
அப்துல்காதர் லேசாய் ஆச்சரியப்பட்டார். உடைமரக் காடு வழியாக நடப்பித்த கால்களுக்கு அந்தத் தெருப் புழுதி தரையில் நங்கூரம் பாய்ச்சிபடியே எதிர்திசையை வியப்பாகப் பார்த்தார். அப்துல்லா என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்தை பேசாத பிச்சாண்டி அனைவரின் சம்மதத்துடன் ஏன் அப்படி அழைக்கிறான் என்பது அவருக்கு புரியவில்லை . பாதிச் சந்தேகமாகவும், மீதி நம்பிக்கையாகவும் உடம்பை வலது பக்கமாக வளைத்துப் பார்த்தார். இதுவரை கேட்டறி யாக அந்த வார்த்தை ஒரு கெட்ட வார்த்தையா, அல்லது தற்செயலாய் இருதயத்தில் சம்பந்தப்படாமல், வாய்க்குள் ளேயே ஊறி , தவறி விழுந்த வார்த்தையா என்ற புதிருக்கு விடை கேட்பவர் போல் தன்னோடு நடந்து வந்த தங்கை நசீமாவை நோக்கி உடம்பை இடது பக்கமாக வளைத்துப் பார்த்தார். அருகேயுள்ள மலைப் பகுதியில் பாய் நெய்வதற் குரிய கோரைகளை வெட்டு வெட்டாய் வெட்டி , கட்டிக் கட்டாய் கட்டி, வெறுந்தலையில் சுமந்து வந்த நசீமா, ஊருக்குள் நுழைந்ததும் அந்தக் கோரைக் கட்டை கும்பக் காரி போல் தலையை வளைத்து சரி செய்தாள். இதனால் எதிர்திசையின் பேச்சோ அல்லது அண்ணனின் தவிப்போ அவளுக்குப் புரியவில்லை. இந்த எதிர்திசை சாவடியில் வம்பளந்துவிட்டுத்தான் அண்ணன் வரும் என்பது அறிந்து வைத்திருந்த, நசீமா தன்பாட்டுக்கு நடந்தாள். ஆனால் அந்த திசையில் மீண்டும் ஒலித்த குரல் அவளையும் திடுக்கிட வைத்து, அண்ணன் பக்கம் ஓடி அவனோடு ஒட்டி நிற்க வைத்தது.
“ஒன்னத்தாண்டா சாய்புப் பயலே…. வாடா இங்கே.”
எதிர்சாவடியில் பிச்சாண்டி எகிறிக் கொண்டிருந்தான் நான்கு பேர் அவனை ஒப்புக்கு பிடித்தாலும், வேட்டி கீழே விழுந்து கால்களில் சிக்க, அவன் வெறும் டவுசரோடு நின்றான். முன்பெல்லாம் “அப்துல்லா இல்லடா என் பேரு. அப்துல் காதரு – எதுக்குடா அப்துல்லா அப்துல்லான்னு கூப்புடுறே” என்று இதே இந்த அப்துல் காதர் அவனை செல்லமாக அதட்டும்போது, அதே அந்தப் பிச்சாண்டி “ஒன்னைப் பார்த்தா அல்லா மாதிரி தெரியுது. அதனால தான் நீ அப்துல்லா” என்று இவர் தோளில் கை போட்டுப் பேசுவான். ஆனால் இன்றைக்கோ , வெறும் டவுசரை வேட்டியாக நினைத்து, தார்பாய்ப்பது போல் டவுசர் பட்டை யை அவன் தூக்கியதில் அந்தப் பாடாதிப்பட்டை அவன் கையோடு மேலே போனது. அந்தச் சுரணைகூட இல்லாமல், அங்குமிங்குமாகத் தாவினான்.
“ஒன்னை இன்னைங்க்குவிடப் போறதில்லடா …”
அப்துல் காதர் இன்னும் புரியாமல் . விழித்தார். வறட்சி மாங்காய் நிறத்து மனிதரான அவர், வேல் போன்ற தனது தாடியைத் தடவிவிட்டுக் கொண்டே , ஒரு ஆட்டின் லாகவத் தோடு கண்களை இடுக்கிப் பார்த்தார். நசீமாவோ, எதி திசையை பார்த்தும், ஊர் திசையை பார்த்தும், அண்ணனை பார்த்தும் கோரைக் கட்டோடு ஒரு சுற்றுச் சுற்றியபோது அந்த கோரை கூட அப்துல் காதர் முகத்தில் போய் இடித்தது. பிச்சாண்டியை நான்கு பேர் பிடித்துக் கொண்டார்கள்.
இப்படிப் பிடித்த நான்கு பேர்களின் காலடிகளின் இடை வெளியில் ஒரு சில முகங்கள் சட்டம் போட்ட சதை முகங் களாய் தென்பட்டன. அந்த முகங்களும், அப்துல்காதரை, அசை போட்டு பார்த்தன. ஆசாமிகள் இருந்தபடியே கண் களில் மிரட்டினார்கள்.
அந்தச் சாவடிச் சுவரை ஒட்டியிருந்த ஒரு குத்துக் கல்லில் உட்கார்ந்திருந்த முத்துலிங்கம், தனக்கும் அங்கே நடைபெறுவதற்கும் சம்பந்தமில்லை என்பது போலவும், அது தனது தரத்திற்கு தாழ்ந்தது என்பது போலவும் அண்ணாந்து பார்த்தார். அதே சமயம் மேல் நோக்கிய முகத்திலிருந்து கண்கள், அந்தப் பக்கமாய் கீழ் நோக்கின ஒருத்தன் மேல் கண்ணணா இருப்பன்’. இல்லன்னா , ‘கவு கண்ணணா’ இருப்பான். ஆனா இந்த முத்துலிங்கம் கீழே பார்த்துக் கிட்டே மேல பார்க்கார். மேல பார்த்துகிட்டே கீழே பார்க்கார். இவரு எந்தக் கண்ணுல சேத்தி என்று ஒரு ‘வாலன்’ ஒரு தடவை கேட்டபோது, ‘ரெட்டைக் கண்ணன்’ என்று இந்த பிச்சண்டிதான் அப்போது பெயர் வைத்தான். இதுவே அவருக்கு வக்கணையாக ஊர் வாயில் பதிவாகிப் போனது. ஆசாமி குத்துக்கல்லோடு குத்துக்கல்லாக அதன் தொடர்ச்சி போல் அமர்ந்திருந்தார். பிச்சாண்டி வாய் வீச்சில் தன் பேருக்கு எதிர்மறைவாய் விளாசினார்.
‘அடே நம்பிக்கைத் துரோகி. இன்னிக்கு நீ பதில் சொல்லாம ஊருக்குள்ள போக முடியாதுடா . ஒப்பனை உதைக்கிற பயலே. ஈரத் துணியைப் போட்டு கழுத்தறுக்கிற கவர்மெண்டு பயலே.’
அப்துல் காதருக்கு, இது அதிகபட்சமாகத் தோன்றியது. செயினை பிசைந்தபடி வானத்தை நோக்கிய நசீமாவை முதுகைப் பிடித்துத் தள்ளியபடியே அந்த இடத்தைவிட்டு அகலும் படி சமிக்ஞை செய்துவிட்டு, ஏதுவுமே நடக்காதது போல் அப்படி நடக்கவிடப் போவதில்லை என்பது போல் பேசினார். ஆனாலும், அவர் குரல் லேசாய் நடுங்கியது.
“என்ன பிச்சாண்டி. பாக்கெட்ட அதிகமாகப் போட் டுட்டியா? ஓரு பாக்கெட்டுக்கு மேல போட்டுட்டு இப்படிப் பேசிரை உடம்பு தாங்காதுப்பா ….”
சென்னையிலே உறை என்றும், மதுரையில் பாக்கெட்டு என்றும் ஆகு பெயராகி, மலிவு விலை மது என்ற பெயரை மறைத்து, நாட்டுச் சாராயம் என்ற புனைப் பெயராக்கிய திரவத்தை குடித்துவிட்டுத்தான், பிச்சாண்டி பேசுகிறான் என்ற அனுமானத்தில் பதிலளித்த அப்துல்காதரை, அருகே உள்ள நாச்சிமுத்து நல்லதுக்கு சொல்வது போல் பொல்லாப் பாய் பேசினான். இரண்டு பாக்கெட்டுக்களை உறிஞ்சிக் குடித்துவிட்டு, மூன்றாவது பாக்கெட்டை உள்ளேயிருக்கும் சாராயத்தோடு கடித்து குடிக்கும் மனிதர் இவர். வாய்க்கு மேலே சாராயம் எட்டிப் பார்க்கும், கண்களில் சிவப்புப் சிவப்பாய் தேக்கி வைத்திருக்கும் நடுத்தரம். நல்ல உயரமும், செட்ட அகலமும், கொண்டவர் ஆனாலும் போதையில் லாமலே அதட்டினார்
“அவன் என்னடான்னா, நம்பிக் கெட்டுட்டோமேன்னு துடிக்கான். நீ எரிகிற தீயிலே எண்ணையா ஊத்துறே? அவன் உடம்பு தாங்காதுன்னா என்னய்யா அர்த்தம்? அவனை அடிச்சுப் பாரு பார்க்கலாம். உன் கச்சத்துக்குள்ள நாங்க நுழையுறோம்.”
அப்துல்காதர் அழாக் குறையாக கேட்டார். நசீமா அவர் முன்னால் போய் நின்று கொள்ள, அவர் தங்கையின் கழுத்து வழியாக முகத்தை நீட்டிக் கேட்டார்.
“நான் எப்போய்யா அடிப்பேன்னு சொன்னேன்… உங்களுக்கு என்னய்யா வந்திட்டு? குடிச்சா நம்ம உறவு முறை கூட மறந்துடணுமா? ஏய் பிச்சாண்டி என் மொகத்த ஒரு தடவ பார்த்துப் பேசுடா உனக்கு நான் என்னடா கெடுதி பண்ணிணேன்?”
அப்துல் காதர் நேருக்கு நேராய் பார்த்து இப்படிக் கேட்டதில் பிச்சாண்டி அதிர்ந்து போனான். ஆறடி உடம்பை வைத்திருந்தால், கொக்கன் என்று பெயர் கொண்ட அவன், இப்போது குருவி போல் குறுகி நின்றான். அப்துல்காதருடன், அவன் மேற்கொண்ட பஸ் பயணங்கள், அண்ணன் தம்பியாய் ஒரே கட்டிலில் தூங்கிய இரவுகள் , அவன் கோபத்தை தணித்தன. அதைப் புரிந்துகொண்ட குத்துக்கல்லு ரெட்டை கண்ணன், முத்துலிங்கம், லேசாய் செருமினார். இதுக்கு மேல என்ன கெடுதி இருக்க முடியும்? பாவ்லாவப் பாரு பாவ்லாவா” என்று ஆகாயத்தைப் பார்த்து ஒரு அம்பை வீசினார். அது பிச்சாண்டியை உந்த, அவன் ஸ்கட் ஏவுகணையானான்.
“இன்னிக்கு ஒன் கணக்கை முடிக்காம விடப் போறதில்லடா.”
“இந்தா பாரு பிச்சாண்டி … நாம தாயா பிள்ளையா பழகுகிறோம். எந்தக் காலத்துல ஒரே சாதியில் இருந்தமோ தெரியாது. ஆனா அப்போயிருந்தே அண்ணன், தம்பி, மாமன், மச்சான் உறவுல வழி வழியாப் பழகுகிறோம். என்னை வேணுமுன்னா நாயே பேயேன்னு திட்டு. ஆனா சாய்புன்னு மட்டும் சொல்லாதே. இந்த வார்த்தை இந்த பட்டியிலே கேட்டறியாத வார்த்தை … ஒன்ன கள்ளப் பயலேன்னு நான் சொன்னா நீ சம்மதிப்பியா? உங்க சாதி சனம்தான் சம்மதிக்குமா? கேடு வரும் பின்னே , மதி கெட்டு வரும் முன்னே.”
“அப்போ நாங்க….கெட்ட சாதிப் பயலுன்னு சொல்லுறே ..பிடிங்கடா துலுக்கப் பயல – மரத்திலே பிடிச்சு கட்டி வையுங்கடா”
பிச்சாண்டியைப் பிடித்து கொண்டிருந்த நான்கு ஐந்து பேர் , இப்போது அவனை தள்ளிப் போட்டுவிட்டு அப்துல் காதரைப் பார்த்து பாய்த்தார்கள். அந்தச் சமயம் பார்த்து அந்தப் பக்கமாய் வந்த கான்ட்டிராக்டர் காதர் மொகைதீன், அது வினை என்று தெரிந்தாலும் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டது போல், குத்துக்கல் மனிதரைப் பார்த்து பல்லோடு சேர்த்து வாயைக் காட்டிவிட்டு தன் பாட்டுக்கு நடந்தார். அப்துல்காதர் விவேகானந்தர் போல் கைகளை மடக்கிக் கொண்டு அசைவற்று நின்றார். ஆனால் நசீமா கோரைக் கட்டைக் கீழே போட்டுவிட்டு அண்ணனை நோக்கி வந்தவர்களைப் பார்த்துக் கும்பிட்டாள் குத்துக்கல் மனிதரைக் கண்களால் கெஞ்சினாள். பிறகு ஆகாயத்தைப் பார்த்து ‘அல்லா, அல்லா’ என்று அரற்றினாள்.
இதற்குள், அப்துல்காதரைத் தாக்க வந்த ஐவர் அணி யில் பீமனாக முன் நடந்த உதிரமாடனின் காலில் ஒன்று இடறியது. எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு ஒத்தக்கால் இளைஞன் கீழே விழுந்து அவரது கால்களை தனது கை களால் பிடித்துக்கொண்டு முழுமையான காலையும் அவரது காலோடு வளைத்துக் கொண்டு கத்தினான்.
விட்டுடு மச்சான். விட்டுடு. இவரு நம்ம காதரு. போன வருஷம் கார்ல என் காலு தூர விழுந்தப்போ நீங்கள் ளாம் ‘உனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்’ என்கிற மாதிரி பேசீனீக . ஆனா இந்த காதருதான் எனக்கு செய்ப்பூரு காலை பொருத்தின மனுஷன். என்ன கொல்லாம. அவரை கொல்ல முடியாது.’
இந்த ஐவரும் அசைவற்று நின்றபோது –
சாவடியிலிருந்த வேறு ஒருவன் ஓடி வந்து பாம்பு போல் கால்களை சுற்றிக் கொண்டே அந்த இளைஞன் கையை ரத்தம் வரும்படி கிள்ளினான். வலி பொறுக்க முடியாத அந்த இளைஞனின் ஒத்தக்காலும், அரை குறைக்காலும் ஒருங்காய் துடித்தபோது, பிச்சாண்டி அவனை எட்டித் தள்ளினான். அப்போதும், அந்த இளைஞன் சுருண்டு சுருண்டு அவர்கள் முன்னால் நகர்ந்தான். இவர்கள் காலால் இடறித்தள்ளி னாலும் அவர் உடம்பு முழுவதையும் ஆமை போல் சுருட்டி அவர்கள் முன்னால் முட்டுக்கட்டையான போது –
நசீமா, அண்ணனைச் சுற்றிச் சுற்றியே வந்தாள். அல் லாவைத் தொழும் அந்தக் கரங்கள் அந்த கூட்டத்தைப் பார்த்து தொழுதன. அவர் ஆற்றாமையை சகிக்கமாட்டாது, பாய்ந்து வந்த கூட்டம் பதுங்கியது போல பார்வையிட்ட போது ‘குத்துக்கல்லு மனிதர்’ செருமிக்கொண்டே எழுந்தார். உட்கார்ந்திருந்த கல்லில் ஒரு காலை வைத்து உதைத்தபடியே கத்தினார். ‘ஏமுலு … பேடி பயலு மாதிரி நிக்கிறீங்க. அவர் சாதிக்கு நாம் பொறந்தோமா? நம்ம சாதிக்கு அவர் பொறந்தாரா?’
ஏவல் கூட்டம் இப்போது அப்துல் காதரின் அழுத்தம் திருத்தமான எதிரிக் கூட்டமாகியது. நசீமாவைப் பார்த்து நகரச் சொல்லி சைகை செய்தது.
நசீமா வீறிட்டுக் கத்தினாள். அண்ணனுக்கு கேடயமானாள். இரண்டு பேர் அவளைப் பிய்தெறியப் போவது போல் கைகளை கொக்கி போல் குவித்து சிரேன்களாக்கி னார்கள்”. இதற்குள் அந்த பக்கமாய் வந்த இரண்டு மூன்று பேர் தாக்க வந்தவர்களை, தங்கள் மார்புகளில் தாங்கிக் கொண்டே சமாதானப்படுத்துகிறார்கள்.
இந்த இடைவெளியில் என்ன செய்யலாம் என்பதுபோல் நசீமா இங்கும் அங்குமாய் சுழன்றாள். பிறகு ‘இரு இரு’ என்று கையாட்டிச் சொல்வது போல் முகமாட்டி பார்த்து விட்டு….
வண்டிப் பாதை வழியாக ஊர்ப்பக்கம் ஓடினாள். ஓடி, ஓடி நிற்பதும், அண்ணனை திரும்பிப் பார்ப்பதுமாய் ஓடிக் கொண்டே இருந்தாள். ஊர்க் கிணற்றில் வாளியைப் பிடித்த பெண்கள் அவளை வளைந்து பார்த்தனர். கடைக்காரர்கள் வளைகளுக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் எலிபோல் தலை யைக் காட்டினார்கள். சிலர்; ‘என்னம்மா ஆச்சு , என் னம்மா ஆச்சு’ என்று அவள் பின்னால் ஓடினார்கள். எதிர் திசையில் வந்தவர்கள் அவளை ஆற்றுப்படுத்துவது போல் கைகளை நேராய் நீட்டி விரல்களை உயர்த்தி உள்ளங்கை களைக் காட்டினார்கள். ஆனால் அவளோ , வண்டிப்பாதை வளைந்த இடத்திலிருந்து பிரிந்து, மேற்குப் பக்கமாய் ஓடி, தென் கிழக்காய் பாய்ந்து கூட்டுறவுச் சங்கத்தை தாண்டி, குறுக்காய் கிடந்த புறம்போக்கு தரிசுக் காட்டில் தாவி, பள்ளி வாசல் முன்னால் வந்து நின்றாள். பரக்கப் பரக்கப் பார்த் தாள். அப்போது தொழுகைக்கு பாங்கு சொல்லும் லப்பை அவளைப் பரிவோடு பார்த்து, அவள் சொல்லப் போவதைக் கேட்க ஆயத்தம் காட்டினார். நசீமா என்ன நினைத் தாளோ , அங்கிருந்து ஓடி , பீடிக் கடையைத் தாண்டி , பள்ளிக்கூடத்தை கடந்து ஊரின் இன்னொரு மூலையில் கிடந்த ஒரு ஓலை வீட்டுக்குள் புகுந்தாள்.
வீட்டு முற்றத்துடன் ஒட்டியிருந்த தொழுவில் ஒரு காளை மாட்டிற்கு “உன்னி” (மாட்டுப்போன்) எடுத்துக் கொண்டிருந்த மூக்கையா, நசீமாவைப் பார்த்துப்பதறினார். மாட்டை அதன் பிட்டத்தில் ஒரு குத்து குத்தி தள்ளிவிட்டு அவள் பக்கமாக ஓடி வந்தான். வியப்பொன்றும் புரியாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி எந்த வீட்டிற்கும் வந்தறியாதவள். என்ன ஆச்சு…
அடர்ந்த கூந்தலுடன் மஞ்சளை அரைத்து மருதாணி யில் தேய்த்தது போன்ற லாகவத்துடன் மான் குட்டி போல் தேம்பிய நசீமாவைப் பார்த்தபடியே ‘ஏ ராசம்மா இங்க வா’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் ‘என்னம்மா ஆச்சு? வாப்பாவுக்கு ஏதாவது….’ என்ற துக்கச் செய்தியை வானொலிச் செய்தியாளர் குரலைத் தாழ்த்துவது போல் தாழ்த்தினார், மூக்கையா. இதற்குள் மூக்கையாவின் மனைவி ராசம்மா, தங்கை மீனாட்சி, தம்பித் தடியன்களான பாண்டியன், செல்லமுத்து ஆகியோர் அங்கே திமுதிமுவென்று வந்தார்கள்.
நசீமாவால் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் பேச முடியவில்லை. அண்ணன், அண்ணன்’ என்று தான் சத்தம் வந்தது. சிறிது விலகிப் போய் நின்று கொண்டு அண்ணன் இருந்த திசையைக் காட்டி அடிக்காங்க , அடிக் காங்க’ என்று அழுதழுது சொன்னாள். எப்படியோ அவசர அவசரமாய் நடக்கிறதைச் சொல்லி விட்டாள். உடனே மூக்கையா சாட்டைக் கம்பை எடுத்துக்கொண்டு சரி நட என்றான். தம்பிகளில் ஒருவன் வெட்டரிவாளையும் இன் னொருத்தன் வேல் கம்பையும் எடுத்துக் கொண்டான்… பிள்ளை குட்டிகளும் சேர்ந்து கொண்டன.
நசீமாவுடன் ஒரு குடும்பமே ஊர்வலமாகி, அந்தச் சாவடிப் பகுதிக்கு வந்தது.
ஏழெட்டுப் பேரின் வியூகத்திற்குள் மாட்டிக் கொண்ட அப்துல் காதர் , மூக்கையாவைப் பார்த்துவிட்டு சத்தம் போட்டே அழுதார். மூக்கையா, அந்த வியூகத்தை அபிமன்யூ மாதிரிப் பார்த்தான். ஒவ்வொருவனையும் முதுகைப் பிடித்தும், மார்பைப் பிடித்தும் தள்ளினான். உள்ளே பாய்ந்து காதரை தோளோடு இழுத்துக் கொண்டு துள்ளினான்.
‘காதர் அண்ணன இப்ப எவனாவது தொடுங்க பார்க் கலாம்…..பேடிப் பயல்வளா வாங்கல.’
குத்துக்கல்லில் உட்கார்ந்திருந்த ரெட்டைக் கண்ணனும், முத்துலிங்கமும் எழுந்தார்கன். மூக்கையாவுக்குச் சொல்வது போல் கூட்டத்தில் நின்ற நாச்சிமுத்து சொன்னார்.
“குலத்தக் கெடுக்குமாம் கோடாறிக் காம்பு. இந்த பயல் கொழுந்தியா புருஷன் பிச்சாண்டியை ஏமாத்தினது பெரிசா தெரியலை பாரு … நிலச் சீர்திருத்தத்துல நம்ப அம்பலத்துக்கிட்டே இருந்து கிடைச்ச உதிரி நிலத்துல அரை ஏக்கரை பச்சாண்டிக்கு கொடுக்கறதா இந்தக் காதரு பய வாக்குக் கொடுத்துட்டு கடைசியிலே பாய் விக்கிற மொய் தீனுக்குக் கொடுத்துட்டான் அடுத்துக் கெடுத்த பய. இந்த அநியாயத்தைக் கேக்க துப்பில்லே. வந்துட்டானுவ பெரிசா…”
மூக்கையா, பதில் சொல் என்பது மாதிரி கூட அப்துல் காதரைப் பார்க்கவில்லை. காதரே இப்போது அழுகையை அடக்கிக் கொண்டு மூக்கையா விடம் ஒப்பித்தார்.
“அல்லாவுக்குத்தான் எல்லாம் தெரியும். அம்பலக்காரர் நிலத்துல உபரியான அரை ஏக்கரை நம்ம பிச்சாண்டிக்குக் கொடுக்கணுமுனனுதான் , அசிஸ்டெண்ட் கமிஷனர்கிட்டே சொன்னேன். இதுக்காகவே இந்த பிச்சாண்டியையும் கூட்டிக்கிட்டுப் போய் அவருகிட்டே ஒரு கும்பிடு போட வெச்சேன். ஆனால் நான் யாரு , சாதாரண பியூன். நாலு ஜில்லாவுக்கு பைல்களைத் தூக்கிட்டு லொக்கு லொக்குன்னு அலையுற எளியவன். எனக்குத் தெரியாமலே பாய் விக்கிற மீரான் ஒரு பெரிய ஆளோட சிபாரிசலே கலெக்டர்கிட்ட போயிட்டாரு. அவரும் ஆடரு போட்டுட்டாரு. கலெக்டர் கிட்ட என் சொல் எடுபடுமா , இல்ல மீரான் கூட்டிக்கிட்டுப் போன யூனியன் சேர்மன் சொல்லு எடுபடுமா? நீயே சொல்லு மூக்கையா …. இவ்வளவுக்கும் இந்த பிச்சாண்டிய நானே டிக்கெட் எடுத்து மதுரைக்கு கூட்டிப் போனேன். அவன் சாப்பாடு சௌகரியத்துக்கு நானே செலவளிச்சேன். இவன்கிட்டே அதுக்கு காசு கேட்டு கை நீட்டியிருப்பேனா? அப்படிப்பட்ட என்னப் போயி கைநீட்டவரான் மூக்கையா…. தாலூக்கா ஆபீஸ்ல பியூனா இருந்த என்னை நாலு ஜில்லா வுக்குப் போட்டு டி .ஏ. பணமும் கொடுக்காமல் பந்தாடுறாங்க. நான் அந்தக் கவலையில் துடிச்சுக்கிட்டிருக்கேன்… இந்த பிச்சாண்டிக்கு இது தெரியல … இவனைவிட எந்த மீரானும் எனக்கு ஒசத்தியில்ல என்கிறதும் அவனுக்குப் புரியல.”
குத்துக்கல் மனிதர், மீண்டும் உட்கார்ந்தபடியே சவால் தோரணையில் ஒரு மிரட்டலை விட்டார். “இவன் ஜாலம் போடுகிறான். நம்பாதீய. என்ன செய்வானோ, ஏது செய் வானோ …. மீரானுக்கு கிடைச்ச அரை ஏக்கர் சொத்து நம்ம பிச்சாண்டிக்குக் கிடைச்சாகணும். அதுக்கு முன்னால இந்த அப்துல் காதா இந்த எடத்திலேருந்து ஒரு அடி கூட நகர முடியாது. எந்தக் கொம்பன் வந்தாலும் சரி.”
அப்துல் காதரை தன் உடம்போடு உடம்பாக சேர்த்துக் கொண்டு, மூக்கையா பீரட்டான். குத்துக்கல்லருக்குச் சொல்வது போல் ‘கொழுந்தியா புருஷன’ பிச்சாண்டிக்கு பதிலளித்தான.
“ஏல பிச்சாண்டி – ஊரு உலகத்தல எவனுக்கு….இந்தப் பேர் பொருந்துமோ இலலியோ ஒனக்குப் பொருந்துமுல. நம்ம மாதிரி ஒரு ஏழைக்கு கிடச்ச நிலத்துக்கு ஏமுல இப்படி நாக்க தொக்கப் போடுறே. அப்படியே அந்த நிலம் பிடிச்சா லும் ஒன்னால் கட்டிக் காப்பாத்த முடியுமாடா…. ‘ஓ எப்படா நிலம் கடக்கும். அதே குழிதோண்டி புதைக்கலாமுன்னு சில பயலுவ காத்துக் கிடக்கது தெரியாதாடா. பத்து கிலோ இறைச்சி தின்னக் கொடுத்ததும் பதினைஞ்சு பாக்கெட் ஊத்தி கொடுத்ததும் அதை உற்சாகத்துல இருந்த சொத்தையெல்லாம் வித்தவன் நீ…. ரெட்டக் கண்ணு பயலுவ பேச்சக் கேட்டு… கெட்டுப் போகாதடா….. விக்கிறத்திற்கு பாய் இருந் தாலும் படுக்கத்துக்கு ஒரு தரை கூட இல்லாத மொய்தின் தான் வச்சுட்டுப் போட்டோன்டா.”
பிச்சாண்டி, அப்துல் காதருக்குப் பயந்தது போல் கண்களைத் தாழ்த்தியபோது குத்துக்கல்லர் இன்னொரு அம்பை எய்தார்.
“காதருக்கு வால் பிடிக்க இவன் யாருன்னு கேளேம்ல சாதி கெட்ட பயல.”
மூக்கையா இப்போது ஒரு காலில் நிமிர்ந்து நின்ற, அந்த ஒன்றைக் கால் இளைஞனுக்குச் சொல்வதுபோல் குத்துக்கல் ரெட்டைக் கண்ணனை, பேச்சுப் பேச்சாய் குட்டினார்.
“நான் யார்னு சொல்றேன்…. இனிமேலாவது எருமை மாட்டுப் பயல்வளுக்கு சொரணை வரட்டும்… நான் இந்த மூக்கையா அவன் தம்பி தங்கச்சிகளோட பெண்டாட்டி பிள்ளைகளோட இந்த அப்துல் காதர் குடும்பத்துக்கு ஒரு குடிக்கள்ளன். ஆதி காலத்திலிருந்தே இந்த சுற்று வட்டா ரத்துல இருக்கிற ஒவ்வொரு முஸ்லீம் குடும்பத்துக்கும், கள்ளர் சாதில ஒரு குடிக்கள்ளன் இருக்கது சில பயலுவளுக்குத் தெரியுமோ தெரியாதோ? நாலு காடு சுத்தி கால ஓடிச்சுக் கிட்ட ஒனக்கு தெரியும்னு நெனக்கேன். இந்த வகையறாவுல எம்பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்தே அப்துல் காதர், பாட்டன் முப்பாட்டனுக்கு நாங்க குடிக்கள்ளன் வம்சம். அண்ணன் தம்பி முறையில் பழகுறோம். அவன் வீட்டுக் கல்யாணத்துல நான் மொதல்ல நிப்பேன் என் வீட்டுக் கல்யாணத்துல இவன நிப்பான். போன வருஷம் அவன் தங்கச்சி பாத்திமா கல்யாணத்துக்கு மொதல் வெத்திலை எனக்குத்தான் தந்தான். என் தங்கச்சி நசீமா, குடிக் கள்ளன் அண்ணன்கிட்டே முறையிடும்போது என்னால சாதி அபிமானத்தைப் பாக்க முடியாது நான் சாதி கெட்டவனா இருக்கலாம். ஆனா சில பயலுவள மாதிரி எளியவன் சொத்த அமுக்குற கெட்டவன் இல்ல. இப்போ எங்க காதர் அண்ணனை கூட்டிட்டுப் போறேன். இந்த குடிக்கள்ளனோட அவன் இப்பவும் நடப்பான், எப்பவும் நடப்பான். இதோ நடக்கப் போறான். எந்தப் பயலாவது தடுங்க பார்க்கலாம். மீசையை எடுத்துடுறேன்.”
– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை.