கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 3,441 
 
 

பூரணி தூக்கம் கலைந்து கண்ணிமைகளை மெல்லத் திறந்தான். விடியற் பொழுதின் இளம் படரொளி அந்தப் படுக்கை அறைச் சன்னல் நீக்கல்களூடாகத் தன் விரல்களை நீட்டி உள்ளே தூங்கி வழிந்த இருள் முகத்தை இலேசாகத் துடைத்துக் கொண்டிருந்தது. அவள் இருகைகளாலும் தன் சோம்பிய முகத்தை யும், கண்களையும் கசக்கி விட்டுக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தாள். குலைந்து போன நீளக் கூந்தலை வாரிக் கொண்டை கட்டினாள். கழன்று கிடந்த மார்புச் சட்டைப்பொத்தான்களைப்பூட்டி விட்டாள். சிதைந்து போன மேலங்கியை இழுத்துக் கால்களை மறைத்தவாறு பக்கத்தில் கிடக்கும் தன் கணவனைத் திரும்பி சோர்வுற்ற கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கால்களை இங்கொன்றும், அங்கொன்றுமாக அகல எறிந்து, கைகளை மடக்கி நெஞ்சுக்குள் சொருகி, தலையணையில் முகம் புதைத்து நித்திரை. “நான் ஆடி அடங்கி விட்டேன்; நீயும் உன் பாடும்” என்று பாவனை காட்டுவது போல அவன் கிடந்தான், அவளுக்கு உடல் அசதியாக இருந்தது. கொட்டாவி வந்தது. ஆறுமணி ஆகியிருக்கும் என்ற கணிப்பில் தலைமாட்டில் வைத்த சிறு வானொலிப் பெட்டியை எட்டி எடுத்துச் சுவிச்சைப் போட்டாள். “காற்று வெளியினிலே கண்ணம்மா” என்ற பாரதியின் பாட்டுப் போனது. அவளுக்கு மிகவும் பிடித்தமான பாட்டு மீண்டும் படுக்கையில் சரிந்து, நெஞ்சிலே வானொலியை வைத்துக் கொண்டு, ஒரு கையைப் பிடரிக்குள் மடித்து வைத்தபடி நிமிர்ந்து கிடந்து அப்பாட்டுக்குத் தன் மனக்கதவைத் திறந்து விட்டாள்.

“றேடியோவை மூடு”

கணவன் கப்பறக் கிடந்து கூறினான்.

“நல்லவொரு பாட்டுங்கோ”

“மூடெண்டால் மூடன்”

வெளியே படுக்கை அறைப் பக்கத்தால் ஒரு நாய் குரைத்துக் கொண்டோடியது.

அவள் வானொலியை நிறுத்தி விட்டு, முகட்டை வெறித்தபடி கிடந்தாள். முகட்டுப் பரபமைப் பரவி அந்தகாரம்.

மார்பு ஏறி இறங்கிற்று

அடிவளவில் நிற்கும் கிழட்டுப் புளிய மரத்திலிருந்து ஒரு குயில் ஈனக்குரலில் மெதுவாகக் கூவிக் கொண்டிருந்தது. அவள் நெஞ்சுக்கு அதன் கூவல் இதமாக இருந்தது. முற்றத்தில் நிற்கும் சடைத்த மாதுளை மரத்தில் சிறு சிட்டுக்குருவிகள் சோடிசோடியாக இருந்து கீச்சிட்டன. கூரைக்கு மேலால் காகங்கள் கரைந்து கொண்டு சிறகடித்தன.

அவள் நெஞ்சுமூச்சு விட்டுச் சுகம் பெற்றது.

அன்று போயா தினம்

திருமதி பூரணி சத்தியநாதன் ஆசிரியைக்கும், வங்கி உதவி முகாமையாளர் சத்தியநாதனுக்கும் ஓய்வுநாள். இருவரும் வீட்டில் இருந்தனர்.

மீண்டும் மெதுவாகத் தலையைத் திருப்பி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அந்தக் கோலத்திலேயே கிடந்தான். அவன் வெளிச்சத்திலும், இருட்டிலும் கறுப்புத்தான். அவள் தன் சிவப்புத்தோலை அவனோடு ஒப்பிட்டுப் பார்த்ததில்லை, ஏனோ இவர் சரியான கறுவல் என்று மனதில் தோன்றுகிறது. தாலி மார்பில் குத்துமாப்போல் உணர்வு தட்டிற்று விரலால் அதைச் சரிசெய்து விட்டாள். அப்படிச் செய்தாலும் அது குத்தும் தான் என்று நினைத்தாள்.

வானொலியில் நிற்பாட்டிய பாரதியின் பாட்டு ஞாபகம் வந்திற்று. அறை வெளிறிப் போகிறது.

விடிந்த பின்பும் படுக்கையில் கிடக்க அவள் விரும்புவதில்லை; விருப்பம் வரவும் இல்லை, அவள் கட்டிலை விட்டிறங்கி அப்படுக்கையறைக் கதவை ஓசை படாமல் திறந்து கொண்டு ‘ஹோலு’க்குள் வந்தாள். ஏதோ ஒரு ஆழ்ந்த அமைதி அந்த வீட்டை நிறைத்திருந்தது. அது அவள் நினைப்பு, கொஞ்சக் காலமாகத்தான்.

அது அவளின் சீதன வீடு. அந்த வீட்டோடு ஒட்டினாற் போல் உள்ள அடுத்த வீட்டில் அவளுடைய பெற்றோர் குடியிருக்கிறார்கள். அவளுடைய தாய் வெள்ளென எழுந்து முற்றத்தைக் கூட்டும் சத்தம் கேட்கிறது. அப்பா அடிவளவில் சுருட்டுப் புகைத்தவாறு முருங்கை மரங்களில் பூத்தின்னும் அணில்களைப் பாத்ததுக் கொண்டு நிற்பார். அவர்களுக்கு தம் ஒரே மகள் நல்ல இடத்தில் வாழ்க்கைப் பட்டதில் பெரும் பாரச் சுமையை இறக்கி விட்ட சுகம். ஹோலில் உள்ள சாப்பாட்டு மேசையில் செம்பில் ஊற்றி வைத்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.

அது நெஞ்சுக்குள்ளால் குளிர்ந்து கொண்டு போனது. அவள் செம்பை மேசையில் வைத்துவிட்டு, அவ்வீட்டோடு இணைந்து பின்னால் உள்ள குசினியை நோக்கி நடந்தாள். உடம்பு சோர்வாயிருந்தது இன்னும் கொஞ்ச நேரம் கட்டிலில் கிடந்திருக்கலாம் என்றும் ஓர் உணர்வு.

சத்தியநாதன் நித்திரை விட்டு எழுந்ததும் ஆவி பறக்க முட்டைக் கோப்பி கட்டிலில் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். அவன் குளித்து விட்டு வந்ததும் காலைச் சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். அவனுக்குப் பிடித்தமான சாப்பாடு செய்ய வேண்டும். அரிசிமாப் பிட்டும், கத்தரிக்காய் வதக்கிச் சமைத்த குளம்பும், மாசுச் சம்பலும். அவளுக்கு “அதுகள்” விருப்பமில்லை.

அவள் அடுப்பை மூட்டித் தண்ணீர் சுடவைத்து, முட்டைக் கோப்பி ஊற்ற எல்லாம் ஆயத்தமாய் வைத்துவிட்டு, இரண்டு முறை படுக்கை அறைக்கு வந்து பார்த்து விட்டாள். அவன் இன்னும் தூக்கம், ஏழரை இருக்கும். எழுப்பினாலும் சினப்பார்; எழும்பட்டும் என்று திரும்பி வந்து தேங்காய் துருவத் தொடங்கினாள். தோள் மூட்டுகள் உளைந்தன. யாராவது துருவித்தந்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்தாள்.

“பூரணி”

அவன் கூப்பிட்டது அவளுக்குக் கேட்கவில்லை, குயிலின் கூவலில் இலயித்திருந்தாள்.

“பூரணி!”

“ஓம் வாறன்” ‘மாடு மாதிரிக் கத்தத்தான் தெரியும்’

தேங்காய்ப்பாதியைப் போட்டு விட்டுப் போனாள்.

“என்ன?”

“உன்னை இப்ப என்ன கொஞ்சவா கூப்பிட்டனான், கோப்பி எங்கை?”

“கொண்டுவாறன்”

பூரணி அவனை நிமிர்ந்து பார்க்காது திரும்பிப் போனாள்.

“இவ்வளவு நேரம் அங்கை என்ன செய்தனி?”

‘படுத்துக் கிடந்தனான்’ என்று சொல்ல வாயுன்னிவிட்டுப் போசாது போய் ஒரு கையில் கோப்பிக் கோப்பையும், மறுகையில் தண்ணீர்ச் செம்பும் கொண்டு விரைந்து வந்தாள். அப்போது –

சந்தியநாதன் கட்டிற் சட்டத்தோடு சாய்ந்திருந்தான். வானொலியில் “வாடி என் கப்பக் கிழங்கே” போயக் கொண்டிருந்தது. அவளுக்கு அப்பாட்டு அருவருப்பு, அவன் அதை இரசிப்பது தெரிந்தது ‘சிக்”

அவன் ஜன்னலைத் திறந்து வாய் கொப்பளித்து துப்பி விட்டு, கட்டிலில் வந்தமர்ந்தான். அவள் ஆவிபறக்கும் கோப்பியை கணவனின் கையில் பவித்திரமாக கொடுத்து விட்டு நகர்ந்தாள்.

“எங்கை போறாய்? அங்கை என்ன வெட்டி விழுத்திறாய்?”.

‘புளியமரம்” என்று சொல்ல நினைத்தாள் “நான் ஒண்டும் வெட்டி விழுத்தேல்ல” என வெடுக்கெனக் கூறினாள்.

“அந்த சிகரட் பெட்டியையும் தீப்பெட்டியையும் எடு” சிறிது தூரத்தில் ரீப்போவில கிடந்த அவற்றை எடுத்துக் கட்டிலில் வைத்தாள்.

“அடுத்த அறையிலை நேற்றைய ‘டெயிலி நீயுஸ் கிடக்கு எடுத்தா” எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“இனிப்ப போய் வெட்டி விழுத்திறதை விழுத்து”

அவள் கோப்பிக் கோப்பையையும், செம்பையும் எடுத்துக் கொண்டு குசினிக்கு நடந்தாள். இவர் “கப்பக்கிழங்கை விழுங்கப் போறார்”

சந்தியநாதன் கட்டில் சட்டத்தோடு, தலையணையை நிமிர்த்தி வைத்து அதில் முதுகை அணைத்து, மடக்கி உயர்த்திய காலுக்கு மேல் ஒரு கால் போட்டு, நெற்றியில் ஒரு கையை மடித்து வைத்துக் கொண்டு சிகரட்டைப் புகைத்தான். மனம் அப்பாட்டிலேயே கிளர்ச்சியுறுகிறது.

பூரணி குசினிப்பக்கம் போய்கொடியில் தொங்கிய அவனுடைய சாறத்தையும், துவாயையும் எடுத்து, குசினிக்கடுத்துள்ள குளியலறைக் கதவில் போட்டாள். பற்பசையை பிறசில் பிதுக்கி அதையும் அங்கே கொண்டு போய் வைத்தாள். அவன் குளிக்க வரும்போது அவை தயாராக இருக்க வேண்டும்.

சத்தியநாதன் குளித்து விட்டு வரும் போது “பூரணி சாறம் உரிஞ்சி போட்டிருக்கன் தோய்ச்சுப்போடு” என்று சொல்லி விட்டு அறைக்குச் சென்று உடுப்பை மாற்றினான்.

பூரணி பிட்டையும் கறிகளையும் எடுத்துக் கொண்டு போய் ஹோலில் உள்ள மேசையில் வைத்துவிட்டு சாப்பிட வாருங்கோ என்றாள்.

“பொறு” என்ன அவதிப்படுறாய்?

சத்தியநாதன் படுக்கை அறையில் கண்ணாடிமுன் நின்று தலைசீவிக் கொண்டிருந்தான்.

“புட்டு ஆறினாலும் பிடிக்காது”

அவள் மேசையருகில் காத்துக் கொண்டு நின்றாள்; கண்கள் முற்றத்து மாதுளை மரத்தில். சத்தியநாதன் வந்து கதிரையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான்.

“குழம்புக்கு உப்புக் கூடிப்போச்சு, என்ன யோசனையிலை இருந்தனி!” அவள் பேசவில்லை, தலை குனிந்தபடி நின்றாள் “தூக்கி எறிந்து விடுவாரோ” அவன் தொடர்ந்து சாப்பிட்டான்.

“இண்னடக்கிப் பின்னேரம் வீரசிங்கம் மண்டபத்தில் பாரதியாரைப் பற்றி ஒரு கருத்தரங்கிருக்கு போவமா?”

அவள் குழைந்து கேட்டாள்.

“பாரதியார் பற்றியோ” என்று கேட்டவன், சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு “எனக்கு வேறை வேலை இல்லையே?” என்றான்.

“நான் போயிட்டு வாறன்?!”

“நான் போயிட்டு வாறனோ? எல்லாம் உம்மடை எண்ணப்படிதானோ?”

“நான் அப்படிக் கருதயில்லை உங்கடை விருப்பத்துக்கு மாறாக என்ன நடந்திட்டுது?”

“கோள்வம் வருகுதோ? நீ போறயில்லை”

அவள் பேசாது நிமிர்ந்த போது நெஞ்சுக்குள் தாலி குத்திற்று, சத்தியநாதன் பீங்கானைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“குழம்பு கொஞ்சம் விடு உன்ரை உப்புக்குழம்பு!”

அவள் கை குழம்பை விட்டது.

“நீயும் உத்தியோகம் பார்க்கிறதெண்டு உனக்குத்திமிர் அதுதான் இப்பிடி!”

“எப்பிடி?”

“வாய்க்குவாய் காட்டாதையெண்டு எத்தினைமுறை சொல்லியிருக்கிறன்”

“நீங்கள் எதையும் பேசலாம்; நான் ஒண்டும் சொல்லக் கூடாதா?”

“பொத்தடி வாயை எச்சிற் கையாலை வேண்டப் போறாய் அடி!”. அவள் எகிறி வந்த சினத்தை அடக்கிக் கொண்டாள்.

“இராத்திரி என்னை முத்தமிட்ட வாயா இது ”. அவள் கண்கள் முற்றத்து மாதுளை மரத்தில் போய் விழுந்தன. அங்கே சிட்டுக்குருவிகள் சோடி சோடி யாய் ……

சத்தியநாதன் சாப்பிட்டு கைகழுவிவிட்டு, வங்கி முகாமையாளர் தோரணையில் எழுந்து, படுக்கை அறைக்குப் போனான். பூரணி அவன் சாப்பிட்டுக் கை கழுவிய கோப்பையையும், மீதிச் சாப்பாட்டையும் தூக்கிக் கொண்டு குசினிக்குப் போனாள்.

அவளுக்குத் தலை கனத்து இடிப்பது போல் இருந்தது. சாப்பாட்டில் மனம் இல்லை. அவளது உள்ளம் அடிவளவுப் புளியமரத்தில் விடியற்காலையில் கூவிய குயிலைத் தேடியது. அவள் பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினாள்.

அவள் கழுத்தில் சத்தியநாதன் தாலி கட்டிய பின்னர் புவி சூரியனை இருமுறை சுற்றி வலம் வந்து விட்டது, புவி சூரியனைச் சுற்றுவதால் பருவ காலங்கள் உண்டாகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளில் அவளுக்கு மழைக்காலம் ஞாபகத்தில் இல்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் மழை பெய்த மாதிரி நினைப்பு. திருமணத்துக்கு முன் தனக்கு வரப்போகும் கணவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டுமென அவள் கற்பனை செய்திருந்தாள். தன்னோடு பழகி, தன்னை அறிந்து, தன்னைப் புரிந்து கொண்டு விரும்புகிற ஒருவனைத் திருமணம் செய்ய அவள் இலட்சியம் கொண்டிருந்தாள். அவளோடு படிப்பித்த தேவநேசன் அவள் எதிர்பார்த்த குணஇயல்புடையவனாக இருந்தான். பூரணி அவனை விரும்பினாள்.

அவனிடம் தன் விருப்பத்தைக் கூற நினைத்தாள். ஆனால் பெற்றோர்கள் எதிர்ப்பை எண்ணி கொஞ்சம் தயங்கிக் கொண்டிருந்த போது திடீரெனச் சத்தியநாதனைத் திருமணம் பேசினர் “இப்போது எனக்குத் திருமணம் அவசியமில்லை” என்றாள். யார் கேட்பது? “நல்ல குடும்பம்; நல்ல மாப்பிள்ளை; உன்னைச் சந்தோஷமாக வாழ வைக்கத்தான் நாங்கள் எல்லாம் செய்யிறம்” என்றனர் பெற்றோர்.

ஒரு இலட்சம் ரூபா நன்கொடை; வீடுவளவு; நகைநட்டு, சத்தியநாதன் முகம்மலரத்தாலி கட்டினான். எல்லாம் இனிதே நிறைவேறிற்று.

ஒரு நல்ல கணவனாக இருப்பதற்கு முதலில் நல்ல மனிதனாக இருக்க வேணும். இரவில் சதை இரப்பவனாகவும், பகலில் உயிரை வதைப்பவனாகவும் இருப்பவன் மனிதனேயல்ல; படு சுயநலவாதி. ஆண் ஆதிக்க சமுதாய நிலைமை களைத் தன் சுகங்களுக்காகச் சாதகமாகப் பயன்படுத்துபவனை, எல்லாம் நீயே என்று நம்பி நடக்கும் மனைவியைத் தன் வீரத்தைக் காட்ட இடமில்லாத வீரனைப்போல் அடக்கியொடுக்குபவனை அவள் உள்ளம் இப்பொழுதும் அருவருத்து வெறுத்தது.

குசினியில் தனிமையில் நின்று தன் உள்மனதோடு சுதந்திமாக உறவாடுவதில் அவளுக்கு ஏதோ ஒருவகைச் சுகம் இருந்தது. அதனால் இப்போதெல்லாம் அதிக நேரம் குசினியில் இருக்க விரும்பினாள்.

“பூரணி”

“…….”

“பூரணி”

சத்தியநாதன் அழைத்தான்.

அவள் ஹோலுக்குள் வந்தாள். அவன் வெளிவிறாந்தையில் சாய்வுநாற்காலியில் கிடந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான்.

“ஏன் கூப்பிட்டீங்க?”

“உனக்கு வாயுக்கை என்ன முட்டையா? எத்தனை முறை கத்துறது?”

அவள் மௌனம்.

“ஒரு தலையணி எடுத்துக் கொண்டு வா!”

அவள் எடுத்து வந்து கொடுத்தாள், அவன் அதைத்தன் தலையின் கீழ் அணைத்து வைத்தான்.

“அந்த ஸ்டூலை எடுத்துக் காலுக்குக் கிட்டவை!”

அவள் எடுத்து வைத்தாள். அவன் அதில் கால்களை நீட்டிப் போட்டான். “நான் பின்னேரம் ஓரிடத்தை போகவேணும், சப்பாத்தைப் பொலிஸ் பண்ணி வை.”

“சப்பாத்து நல்லாத்தானே இருக்கு!”

“பொலிஸ் பண்ணிவையெண்டா பிறகென்ன கதை – உனக்குத்தலைக்கனம்!”

“ஓம் தலை கனக்குதுதான்!”

அவள் கூறிக்கொண்டு அறைக்குள் சென்று உடுப்புக்களை கணவனுடையது தான் எடுத்துக்கொண்டு தோய்ப்பதற்காகக் குளியலறைக்குப் போனாள்.

அவள் உடுப்புக்களை உலரப் போட்டு வர ஒன்பதரை மணியாகப் போச்சு. குசினிக்கும் வீட்டுக்கும் நடந்து கால்களும் உளைந்தன. கொஞ்ச நேரம் படுப்பம் என்று கட்டிலில் வந்து சரிந்தாள்.

“பூரணி!”

அவள் எழுந்து போனாள்.

“என்ன ?”

“அந்த சிகரட் பெட்டியையும் தீப்பெட்டியையும் எடு!”. சத்தியநாதன் அவற்றைச் சற்றுத் தூரத்தில் கிடக்கும் கதிரைச் சட்டத்தில் வைத்திருந்தான். அவள் அவற்றை எடுத்துக் கொடுத்து விட்டு, அந்தக் கதிரைக்கும் அவனுக்குமுள்ள தூரத்தைப் பார்த்தாள்.

“என்ன அப்பிடிப் பார்க்கிறாய்?”

“ஒண்டுமில்லை இதை எடுக்கவா அங்கையிருந்து என்னைக் கூப்பிட்டீங்க?”

“உனக்கு வேறை வேலை என்ன?”. அவன் சிகரட்டை வாயில் வைத்து பற்றியபடி சொன்னான்.

“ஓ அது சரி வேலைக்காரி இல்லைத்தானே?”

“நீ இருக்கிறாய் தானே?”

“ஓ! தாலியைத் தூக்கிக் கொண்டு!”

“எனக்கு விசரைக் கிளப்பாமல் போ?”

அவன் நீட்டி நிமிர்ந்து சிகரட் புகையை ஊதியபடி பத்திரிகையில் கண்களை விட்டான்.

அவள் அறைக்குள் சென்று கட்டிலில் விழப்போனாள்.

“பூரணி! தேத்தண்ணி போட்டுக் கொண்டுவா!”

“களைச்சுப் போனார்”

குசினிக்குப் போய் தேனீர் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தாள்.

படுக்கை அறைக்குள் வந்தாள். தலை இடித்துக் கொண்டிருந்தது. படுக்க விரும்பவில்லை, சப்பாத்துக்களை எடுத்துப் பொலிஸ் பண்ணி வைத்துவிட்டு, மத்தியானச் சமையல் செய்யவென்று குசினிக்குப் போக எழுந்தாள்.

“பூரணி இங்கை வா!”

“என்னது?”

அவள் அவன் முன்னால் நின்றாள்.

“என்ன கவ்விநாய் மாதிரி?”

“உங்களிட்டை எத்தின முறை கெஞ்சிக் கேட்டிருப்பன் நீ, வா, போ எண்டு என்னோடை கதைக்கவேண்டா மெண்டு, நானென்ன மாடா, கழுதையா, நாயா?” அவள் கண்கள் கலங்கியிருந்தன.

“எனக்கு அப்பிடித்தான் விருப்பம்!”

“எனக்கு விருப்பமில்லை அவ்வளவுதான்!”

“என்ரை விருப்பப்படி தான் நான் நடப்பன், நீ சொல்லி நான் செய்யப் போறதில்லை”

“நீங்க செய்யிறது நியாயமா?”

“இதிலை நிண்டு கதைக்காதை போ! வாங்கின அடியள் மறந்து போச்சோ? பொம்பிளையளை வைக்கிற இடத்திலை வைக்க வேணும். இல்லாட்டித் தலைக்கு மேலை ஏறியிருப்பினம்”

“நீங்கள் என்ன எங்களைத் தோளிலையா தூக்கி வைச்சிருக்கிறீங்க?”

“இப்ப உன்னைத் தோளிலை தூக்கி வைச்சிருக்கட்டோ?”

“அதுக்கு இன்னும் இருட்டயில்லையே”

அவன் பூரணியை வெடுக்கெனப் பார்த்தான்.

“போடி அங்காலை இதிலை நிண்டு குலைக்காமல்!”

“நீங்கள் கட்டி வைத்திருக்கின்ற நாய் கடிக்காது”

அவள் விறுக்கென்று அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

“என்ரை லெட்டர் பாட்டையும் பேனையையும் எடுத்துக் கொண்டு வா!”. அவள் எடுத்துக் கொடுத்து விட்டுப் போனாள். அவளுடைய கண்களுக்குள் நீரும் நெருப்பும்.

பூரணி சமைத்து முடிந்து படுக்கை அறையில் வந்து கட்டிலில் மல்லாந்து படுத்தாள். தலைக்குக் கீழ் இருகைகளையும் கோர்த்து வைத்தாள். அதே கண்கள்; நீரும் நெருப்பும் ஆழ்ந்த யோசனை. இமைகளை மூடி தீர்க்கமாக யோசித்தாள். அறைக்கதவுப் பக்கமாகச் சரிந்து ஒரு கையை தலைக்குக்கீழ் மடித்து வைத்து, நிலத்தை வெறித்து நோக்கினாள். மனச்சலனம் அடங்கிப் போயிற்று நெஞ்சடிப்பு சமநிலை அடைந்தது.

“இஞ்சேருங்கோ!” கணவனைக் கூப்பிட்டாள்

“இஞ்சேருங்கோ!”

“என்னது” அவன் விறாந்தையில், சாய்வுநாற்காலியில் கிடந்தபடி வெடுக்கெனக் கேட்டான்.

“இஞ்சை ஒருக்கா வாங்கோ!”

அவன் எழுந்து வந்தான்.

“என்னது?”

“அந்த அறையில மேசையிலை ஒரு கதைப்புத்தகமிருக்கு. ஒருக்கா எடுத்துத் தாங்கோ.”

“இதுக்கா என்னைக் கூப்பிட்டனி, ஏன் உன்னாலை எடுக்கேலாதா?”

“எனக்குக் கைகாலெல்லாம் உளையிது!”

“என்ன அப்பிடி வெட்டி விழுத்தினாய்? எழும்பி எடு உனக்கு நான் வேலைக்காரனா?”

“உங்களுக்கு நான் என்ன வேலைக்காரியா எண்டு நான் எத்தின முறை கேட்டிருக்கிறன்?”

“என்ன சொன்னனி, நீ என்ரை மனைவி. நீ எனக்குத் தொண்டு செய்யத்தான் இருக்கிறாய்.”

“எங்கை அப்பிடி எழுதியிருக்கு, தொண்டு, அன்பு, மதிப்பு ஒரு வழிப்பாதையில்லை. கணவன் மனைவிக்கிடையிலை அவையெல்லாம் பரஸ்பரமாயிருக்க வேணும்”

“எனக்கென்னடி வகுப்பா வைக்கிறாய்; உனக்கு நான் தொண்டு செய்ய வேணுமோ? அதுக்கு வேறை யாரையும் பார். நீயும் என்னைப் போல உழைக்கிற தெண்ட தலைக்கனம்.”

“உழைக்கிறது பிழையோ? நானும் உங்களுக்குத் தொண்டு செய்ய வேணுமோ என்று கேட்க உரிமை இருக்கு”

போகக்காலடி எடுத்து வைத்தவன், சினங்கொண்டு திரும்பினான்.

“என்னடி சொன்னனி என்னோடை என்ன உரிமைப் போராட்டமா நடத்துறாய்! பல்லுடைச்சுக் கையிலை தருவன்!”

“ஆருடைய பல்லை?”

“என்னடி விட விட வாய் நீளுது!”

“என்னை நீங்க மதிக்காவிட்டால் நானும் இனி உங்களை மதிக்கப் போறதில்லை. மனைவி எண்டு மதிக்காவிட்டாலும் ஒரு மனிதப்பிறவியெண்டு மதிக்க வேணாம்? நான் நாய் மாதிரி இருக்க உங்களைக் கல்யாணஞ் செய்யேல்லை, உங்களோடை வாழத்தான் வந்தனான். அவள் பதட்டமின்றி நிதானமாகக் கூறினாள்.

“என்னடி சொன்னனி பெட்டை நாயே, என்னை இனி மதிக்கப் போறதில்லையோ? என்னை என்ன ஏறி மிதிக்கவா போறாய்… உனக்குப் பார் …..” அவன் பற்களை நெருமிக் கொண்டு பாய்ந்து பூரணியின் தலைமயிரைப் பற்றிப் பிடித்து அவளை இழுத்து வீசினான். அவள் நிலத்தில் முகக்குப்புற விழும்போது முதுகில் காலால் உதைத்தான். முகம் நிலத்தில் அடிபட விழுந்த அவள் வீறு கொண்டு எழுந்து கலைந்த கூந்தலைக் கட்டிக்கொண்டு,

“நீ மனுஷனே இல்லை ஒரு மிருகம்!” என ஆத்திரமாய்க் கர்ஜித்தாள்.

“நான் மிருகந்தான்ரி, திமிர் பிடிச்ச மூதேவி!” என்று சத்தியநாதன் பிறங்கையால் முகத்தில் அடித்தான். காலால் வயிற்றில் உதைத்தான், அவள் கட்டிலில் மல்லாந்து விழுந்தாள், சொண்டு வெடித்து இரத்தம் வடிந்தபடி விழுந்தவள் உடனே ஆவேசங் கொண்டு எழுந்து கண்ணாடி மேசையில் கிடந்த கத்தரிக் கோலைத் தூக்கினாள், மூச்சு சினங்கொண்டு இளைத்தது.

“இனி என்ரை மேலிலை கை வச்சா, உன்னைக் குத்திக் கொல்லுவன், என்ரை மேலிலை கை வைக்க உனக்கு என்னடா உரிமை இருக்கு? நீயும் ஒரு புருஷனா! சீ! தூ! நீ எனக்கு வேண்டாம் போ ! போய்த்துலை போ.” அவள் கண்களிலிருந்து கொதிநீர் வழிந்தாலும், நெருப்பு இன்னும் அணையவில்லை.

அடிக்க முனைந்த சத்தியநாதன் திகிலுற்று நின்றான். இதற்கு முன் பல தடவைகள் அவன் அடித்த போதெல்லாம் பொறுமையோடு தாங்கியிருக்கிறாள். அவனது கைகால்கள் கோபக்கொதிப்பில் நடுங்கின. அவள் கண்களைப் பார்க்க அவனுக்குப் பயமாயிருந்தது.

“உனக்குக் கள்ளப் புருஷன் இருக்கிறானடி, அது தானடி உப்பிடிச் சொல்றாய் தோறை!”.

“சீ நாயே! உனக்கே வெட்கமாயில்லை?. வாயைக் கழுவிப் போட்டுச் சொல்லு மூண்டு வருஷமாக் காதலிச்சவளை ஏமாத்திப் போட்டு, சீதனத்துக்கு ஆசைப்பட்டுத் தானே என்னை வந்து கலியாணஞ் செய்தனி, நீ அப்பிடித்தான் சொல்லுவாய். நான் காட்டின அன்புக்கு நீ செய்தென்ன?”

மிருக கோபங் கொண்ட அவனால் அவளுக்கு கிட்ட நெருங்க முடியவில்லை. கை கால்கள் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கிக் கொண்டிருந்தன.

“தோறை கழட்டடி நான் கட்டின தாலியை!”

அவள் விறுக்கெனத் தாலியைக் கழட்டி வீசினாள்.

“இந்தா கொண்டு தொலை!”

சத்தியநாதன் திகைத்துப் போனான். அவன் அதை எதிர்பார்க்கவே இல்லை. அவன் அறைக்கதவோடு அடிபட்டுக் கிடந்த தாலியைப் பார்த்தான்.

“என்ரை சீதனக் காசில வாங்கின தாலி தானே?” அவள் மெதுவாகச் சொன்னாள்.

சத்தியநாதனால் நெஞ்சுபொறுக்கமுடியவில்லை. அவன் முகச்சதைகள் துடிக்க கைவிரல்களை விரித்துக் கொண்டு அவள் மேல் பாயப் போனான்.

“கிட்டவராதை, என்னைத் தொட்டால் குத்துவன்!”

அவள் இருகைகளாலும் கத்தரிக்கோலை விரித்துப் பிடித்துக் கொண்டு தைரியமாக நின்றாள். அவள் கண்களில் தீச்சுவாலைகள்.

“உன்ரை தாலியைக் கொண்டு போ? என்னை நிம்மதியா இருக்கவிடு! போ!” அவள் கண்ணீர் மல்க, துயரம் தோய்ந்த குரலில் வீரிட்டாள். சத்தியநாதன் நின்று சற்று நேரம் அவளை வெறுப்புடன் நோக்கினான். சட்டென குனிந்து தாலியைக் கையில் எடுத்தான். அடுத்த அறைக்குச் சென்று ஒரு சேட்டை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

“தோறை இரடி உனக்குச் செய்யிறன்வேலை!”

“உன்னால் என்ன செய்ய முடியும்? நீ திரும்பி வந்தா இங்கை ஒரு கொலை நடக்கும் போடா”

அப்போது பூரணியின் தாய் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தாள், அவள் பின்னால் தகப்பனும் நொண்டி நொண்டி வந்தார், தாய் அறைக்குள்,

“எடி அடங்காப்பிடாரி, என்ன காரியமடி செய்தனி, அவன் தாலியோடை போறான். அடக்கமில்லாத நாயே! என்ரை வாழ்நாளிலை உன்ரை தகப்பனிட்டை நான் வேண்டாத அடியா, உதையா? வாய் திறந்து எதிர்த்துக் கதைச்சிருப்பனா. உன்ரை வாழ்க்கையிலை நீயே மண் அள்ளிப் போட்டிட்டியேடி!” என்று மகளைத் திட்டித் தன் தலையில் இருகைகளாலும் அடித்துக்கொண்டாள். பின்பு கணவனைப் பார்த்து “போங்கா போய் பொடியனைக் காலிலை விழுந்தாலும் கூட்டி வாங்கோ! எங்கடை மானமெல்லாம் போப்போது போங்கோ!” என்று புலம்பினாள்.

“அப்பா”

பூரணி வீரிட்டுக் கத்தினாள்.

“போகவேண்டாம். இது என்ரை வாழ்க்கையைப் பற்றி நான் எடுத்த முடிவு. வேறு எவராலும் மாத்த முடியாது. சொல்லிப் போட்டன்”

அவள் தீர்க்கமாக கூறிவிட்டு, வந்து கட்டிலில் கைகளை எறிந்து நீட்டி நிமிர்ந்து கிடந்தாள்.

– வீரகேசரி 1983 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *