கீதா காதல் செய்கிறாள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 3,842 
 
 

கொதித்துப் போனாள் சுஜாதா. நம்ம கீதுகுட்டியா இப்படிச் செய்திருக்கிறாள்?

காதல் கடிதம்! யார் இந்த மனோகர்? இன்னும் சின்னக் குழந்தை என்று இவளை நினைத்துக் கொண்டு இருந்தேனே! என்ன காரியம் செய்திருக்கிறாள்? அப்பாவுக்குக் தெரிந்தால் ஆகாயத்துக்கும் பூமிக்கும் அல்லவா குதிப்பார்? வரட்டும் கீதா, நேரடியாகவே கேட்டு விடுவது. என்ன சொல்லி எப்படி மழுப்புகிறாள் என்று பார்ப்போம்? கிராதகி!

சுஜாதாவுக்கு இரவு வரை பொறுமையாக இருக்க முடியவில்லை. அம்மா கூட இரண்டு முறை கேட்டுவிட்டாள். தலைவலி என்று சொல்லி சமாளித்து விட்டாள். வெளியே கூட எங்கேயும் போகவில்லை.

மணி எட்டரை ஆயிற்று….. கீதா வந்துவிட்டாள். ஆர்ப்பாட்டமாய் அருகில் வந்து கிசுகிசுத்தாள்.

“அக்கா உனக்கு சர்ப்ரைஸ் ஒன்று சொல்லப் போகிறேன். நீ யாரிடமும் சொல்லக் கூடாது. அப்பாகிட்ட கூட சொல்லக் கூடாது. சொன்னால் திட்டுவார்.”

நேரம் வந்து விட்டது சுஜாதாவுக்கு. “அப்பா திட்ட மாட்டார். கட்டி வைத்து உதைப்பார்”

“ஏய்! நீ என்ன சொல்லற? உனக்குத் தெரியுமா?.”

“எனக்கு எல்லாம் தெரியும். இங்கே கேட்டால் சரிப்படாது. விலாவாரியா உங்கிட்டே கேட்கணும். அந்த ரூமுக்கு வா” என்று கீதாவின் பதிலுக்குக் காத்திராமல் சுஜாதா ஓடினாள்.

உள்ளே வந்ததும் கதவை லேசாக மூடினாள். “அக்கா வாட் ஹாப்பன்ட்? நீ என்னவோ உளறுகிறாய். நீ என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.”

“இதற்கும் மேலே புரிவதற்கு என்ன இருக்கிறது?” சுஜாதா அந்த கடிதத்தை கீதாவிடம் க்ளோசப்பில் காட்டினாள்.

“ஓ! இதுவா? உன்னிடம் சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் நீ அதற்குள் ஏக கற்பனைகள் செய்து கொண்டுவிட்டாய். நீ ரொம்ப அவசரம்”

செய்வதையும் செய்துவிட்டு சாதிக்கிறாளே! சுஜாதாவுக்கு மூச்சிரைத்தது. அழுகை கூட லேசாக வந்து விட்டது. “அப்போ இதெல்லாம் உண்மையா? பொய் சொல்லாதே”

“ஆமாம். நான்தான் எழுதினேன். மறுக்கலியே. என்ன? எழுதினால் தப்பா?”

“என்ன தப்பா? கீதா யூ ஜஸ்ட் எய்ட்டீன்”

“ஸோ வாட்?”

“வீ ஆர் ப்ரம் எ மிடில் கிளாஸ் ஆர்தோடாக்ஸ் பேமிலி. அப்பாவுக்கு தெரிஞ்சா உன்னை வெட்டிப் போட்டுடுவா. எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிற இந்த நேரத்தில உன்னோட நடத்தை நிச்சயமா இடைஞ்சல் உண்டு பண்ணத்தான் போறது.”

“ஸ்டாப் அக்கா. ஸ்டாப். சும்மா உன்னை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தேன். என் அசட்டு அக்காவே! வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் அக்காவே! தயவு செய்து சற்று அருகில் வா. இந்த கடிதத்தின் மேலே என்ன எழுதியிருக்கிறது என்று பார்”

என்ன குழப்புகிறாள் ? சுஜாதா வாங்கிப் பார்த்தாள். “ஆமாம். ஐந்து என்று எழுதியிருக்கிறது. அப்படியானால்?…

கீதா பெரிசாய் சிரித்துவிட்டு ” என் அசட்டு அக்காவே. நான் முதன் முதலாக ஒரு குறுநாவல் எழுதப் போகிறேன். அதுவும் காதல் கதை. அதனால்தான் சர்ப்பரைசாக அப்பாவிடம் கூட சொல்லாமல் செய்யப் போகிறேன். அதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ஒரு காதல் கடிதம் வரும். என் போதாத காலம் உன்னிடம் இந்த ஐந்தாவது பக்கம் கிடைத்துவிட்டது. இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பம் ஐந்தாவது பக்கம் வருகிறது. அதுவரை எழுதிவிட்டு நேத்து ராத்திரி தூங்கப் போய்விட்டேன். ஃபேன் காற்றில் பறந்து போயிருக்கிறது இந்த ஐந்தாவது பக்கம். காலையில் அவசரத்தில் நான் பார்த்து எடுத்து வைக்க மறந்துவிட்டேன். இந்தா. மற்ற நாலு பக்கங்கள். இப்போ படி. உன் சந்தேகங்கள் நிவர்த்தியாகும்.”

சுஜாதாவின் முகத்தில் அசடு லிட்டர் கணக்கில் வழிந்தது!

– 1995 மே 21 இதயம் பேசுகிறது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *