கிழித்த கோடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 12,370 
 
 

வீட்டின் வெளிப்புறத்துத் திண்ணை.

நாற்காலி ஒன்றில் சாய்ந்துகொண்டு ஆறுமுகத் தேவர் அமர்ந்திருக்கிறார். கண்கள் தெருவைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அவருக்காகக் கொண்டு வந்த காபியை ஸ்டூலின் மேல் வைத்து விட்டு, அவருடைய மகள் மீனாட்சி நிமிர்கிறாள்.

”ராவுத்தர் வரட்டும்” – பார்வையை மாற்றா மலேயே ஆறுமுகத் தேவர் கூறுகிறார்.

அந்த வார்த்தைகளின் அர்த்தம் மீனாட்சிக்கு தெரியும். அவள் கொஞ்சம் படித்தவள்; நாகரிகமும் நாசூக்கும் தெரிந்தவள். அதோடு அவள் ஆண்டிபட்டியில் வாழ்க்கைப்படுவதற்கு முன்பும், வாழ்க்கைப்பட்ட பிறகு – இங்கு வந்து போகின்ற வேளை களிலும் மைதீன் ராவுத்தருக்கும் தன் தந்தைக்குமிடையே உள்ள பழக்கத்தையும் நெருக்கத்தையும் நன்றாக அறிந்து வைத்திருந்தவள்.
கொண்டு வந்த காபியை மறுபடியும் திருப்பி எடுத்துகொண்டு உள்ளே போகிறாள்.

வடகரைப் பள்ளிவாசல்.

மாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு, மைதீன் ராவுத்தர் வெளியே புறப்பட்டபோது, ஹாஜி மேத்தா ராவுத்தர் கூப்பிட்ட சத்தத்தைக் கேட்டுத் திரும்பி நிற்கிறார்.

”அப்ப எல்லாத்தையும் நீங்களே கவனிச்சுக்கிறீங்களா மாமு?” என்று கேட்ட ஹாஜி மேத்தா ராவுத்தருக்கு, ”இன்ஷா அல்லாஹ்… அதைப் பத்தி நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம். என் பையன் நான் கிழிக் கிற கோட்டைத் தாண்டவே மாட் டான். நானே முடிச்சுடறேன்” என்று பதில் கூறிவிட்டு, நகரத் தொடங்கினார் மைதீன் ராவுத்தர்.

”அப்ப, ஜமாத்திலே நான் உறுதி சொல்லட்டுமா?”

” சரி.”

ஆறுமுகத் தேவர் வீட்டின் உட்கூடம்.

எதிரெதிரே இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தபடி மைதீன் ராவுத்தரும் ஆறுமுகத் தேவரும் காபி சாப்பிடுகிறார்கள்.

”தேவரு, இன்னிக்கு என்ன காபி ரொம்ப ருசியாருக்கு?”

”ஆண்டிபட்டியிலேருந்து மீனாட்சி வந்திருக்கா. அவதான் இன்னிக்கிக் காபி போட்டா!”

”மீனாட்சி வந்திருக்குதா?” – மைதீன் ராவுத்தர் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே தேவரின் மகள் மீனாட்சி உட்புறத்திலிருந்து வெளிப்படுகிறாள்.

”வாங்க மாமா, சௌக்கியமுங் களா? வீட்டிலே மாமியெல்லாம் நல்லாயிருக்கிறாங்களா?”

”ஆண்டவன் புண்ணியத்திலே அதுக்கென்னம்மா குறைச்சல்? நீ உன் வீட்டுக்காரர், குழந்தைகள் எல்லாரும் சௌக்கியமா?”

”எல்லாரும் சௌக்கியந்தான் மாமா!”

”உன் பெரிய பையன் முத்தழகு இந்தத் தடவையும் பரீட்சை எழுதுறதா தேவரு சொன்னாரே, நல்லா எழுதியிருக்கானா?”

”ஏதோ எழுதியிருக்கான் மாமா. பி.யூ.சி. பரீட்சையை மூன்றாவது தடவையாக எழுதியிருக்கான். அவன் இந்தத் தடவை எப்படியாவது பாஸ் பண்ணிவிட வேண்டும். அதற்காகத்தான்…” – மீனாட்சி முடிப்பதற்குள் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தேவர் குறுக்கிடுகிறார்.

”நேரமாயிட்டுது ராவுத்தரே! வந்து பேசிக்கலாம். புறப்பட லாமா?”

ஊரை இரண்டாக்கிக் கொண்டு ஓடும் வராக நதி. அதன் ஓரமாக, மேற்கு நோக்கி நீண்டு செல்லும் சாலை.

ஆறுமுகத் தேவரும் மைதீன் ராவுத்தரும் அந்தச் சாலையில், மிக நெருக்கமாக எதையோ பேசியவாறே நடக்கிறார்கள்.

ஆடாமல் இருந்தும் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் ‘ஆடு பாலம்’ என்று பெயர் பெற்று விட்ட பாலத்தைக் கடந்து, ஆறுமுகத் தேவரும் மைதீன் ராவுத்தரும் மீனாட்சியம்மன் படித்துறைக்குப் பக்கத்தில் நெருங் கிக்கொண்டு இருந்தபோது, ஒரு கார் அவர்களுக்குப் பக்கத்தில் வந்து நிற்கிறது.

அதிலிருந்து ரிடையர்டு சப்- கலெக்டர் பூரணலிங்கம் பிள்ளை யின் மகன் புவனேஸ்வரன் இறங்கி, மைதீன் ராவுத்தருக்கு ஸலாம் சொல்கிறான்.

”என்னப்பா புவனேஸ்வரா, அப்பாவெல்லாம் சௌக்கியமா?”

”சௌக்கியமுங்க.”

”நம்ம ஜில்லாவைப் பத்தி இங்கிலீஷ்லே ஏதோ புத்தகம் எழுதுறதாச் சொன்னியே, எழுதிட்டியா?”

”எழுதிட்டேனுங்க. அதற்கு முன்னுரை வாங்குவதற்காகத்தான் இரண்டு நாளைக்கு முன் மதுரைக் குப் போயிருந்தேன். புரொபஸர் ஜமாலை கல்லூரியில் போய்ப் பார்த்தேன்…”

”என் பையனையா..?”

”ஆமாங்க. இன்றைக்கு இருக் கிற ஆங்கிலப் பேராசிரியர் களிலேயே அவருக்குத்தான் நிறையப் பெயரும் புகழும் இருக்கிறது.”

மைதீன் ராவுத்தர் தேவரைப் பார்த்துச் சிரித்தபடி சொன் னார்… ”தேவரு, பார்த்தீரா பையன் எவ்வளவு சாமர்த்தியமாகப் பேசுறான்னு…”

”அப்படி இல்லைங்க. உண்மையைத்தான் சொன்னேன். இல்லாவிட்டால் போன வருஷம் மலேசியாவிற்கும் இந்த வருஷம் அமெரிக்கா விற்குமாகச் சொற் பொழிவு செய்ய அவரை அழைப்பாங் களா?”

”சரி, உன் விஷயம் என்ன ஆச்சு, சொல்லு?”

” வேலை அதிகமாக இருக்கிறதாம். என் புத்தகத்தை முழுக்கப் படித்துப் பார்த்து முன்னுரை எழுதுவ தென்பது இப்போ தைக்கு இயலாதென்று சொல்லிவிட்டார்.”

”அப்படியா சொன் னான்? சரி, நாளைக்கு நான் ஒரு கார்டு எழுதிப் போடுறேன்.கண்டிப்பா முன்னுரை எழுதித் தருவான். தைரியமாகப் போயிட்டு வா!”

பெரியகோயில்.

பெரியகுளம் நகரின் அழகான, இதமான இடங்களில் அதுவும் ஒன்று.

கோயிலுக்குள் போய் வழிபாட்டை முடித்துக்கொண்டு, நெற்றி நிறையத் திருநீறு பொலியும் தோற்றத்தோடு வந்த தேவர், படித்துறையில் இறங்கி, ஆற்றைத் தாண்டி மைதீன் ராவுத்தருக்குப் பக்கத்தில் மணலில் உட்கார்ந்து கொள்கிறார்.

”ராவுத்தரே, சப்-கலெக்டர் பையனுக்கு நீரு பாட்டுக்கு வாக்குக் கொடுத்திட்டீரே, ஜமாலு சம்மதிக்குமா?”

”என்னா தேவரு, நீரே இப்படிக் கேட்கிறீரே… என் ஜமாலு என்னிக்காவது என் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசி நீரு கண்டதுண்டா? காலேஜுப் படிப்பிலிருந்து கல்யாணம் வரைக்கும் நான் எதைச் சொன்னேனோ, அதைத்தானே அவன் கேட்டு நடந்துக்கிறான். அவன் இஷ்டப்பட்டதை யெல்லாம்கூட விட்டுப்பிட்டு என் சொல்படிதானே கேட்டிருக்கான்! நான் கிழிச்ச கோட்டை அவன் என்னிக்காவது தாண்டி யிருக்கானா? ‘அத்தா என்ன சொல்லுறாரோ, அதுதான் எனக்கு குர் ஆன் வாக்கு’ அப்படீன்னு அடிக்கடி சொல்லுவானே… அப்பேர்ப்பட்ட என் மகனைப் பத்தி நீரே இப்படிச் சந்தேகமாப் பேசினா எப்படி?” என்று கேட்டு விட்டுத் தேவரின் முகத்தை உற்றுப் பார்த்தார் ராவுத்தர்.

தேவர் பதிலேதும் கூறாமல், ஓடிக்கொண்டிருக்கும் வராக நதியையே வெறித்துப் பார்க் கிறார்.

மைதீன் ராவுத்தரின் மாடி வீடு. மின் விளக்குகள் பளிச்சிடு கின்றன. வாக்கிங் முடிந்து, அப்படியே தொழுகைக்கும் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய ராவுத்தர், வாயிலைத் தாண்டி உள்ளே நுழையும்போது தேவரின் மகள் மீனாட்சி வெளியே வந்து கொண்டிருக்கிறாள். வீட்டின் முன் ஹாலிலேயே இருவரும் எதிர்ப்பட்டுக் கொள்கிறார்கள்.

”என்னம்மா, மாமியைப் பார்த்து சேமம் விசாரிச்சாச்சா?” – ராவுத்தர் கனிவுடன் கேட்கி றார்.

”பார்த்துவிட்டேன் மாமா! உங்களையும் பார்த்துவிட்டுப் போகலாமென்றுதான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன். நேரமாகி விட்டதென்று இப்போதுதான் புறப்பட்டேன்…”

”அப்படியா? ஏதாவது சமா சாரம் உண்டுமா?”

”ஆமாம் மாமா…” – மீனாட்சி அதற்கு மேல் சொல்லத் தயங்கி னாள்.

”சும்மா சொல்லும்மா” என்று ராவுத்தர் ஊக்கம் கொடுத்த பிறகு, மீனாட்சி தயங்கியவாறே கூறினாள்…

”என் மூத்த பையன் முத்தழகு சம்பந்தமாகத்தான் உங்களிடம் சொல்ல வந்தேன் மாமா. அவன் இந்தத் தடவையாவது பாஸ் பண்ணவேண்டுமே என்று எனக் குக் கவலையாக இருக்கு. மற்ற பேப்பரெல்லாம் நன்றாக எழுதி யிருக்கிறானாம். இங்கிலீஷ் மட்டும் அவ்வளவு திருப்திகரமாக எழுத வில்லை என்று சொன்னான். இந்தத் தடவை யூனிவர்சிடியிலே பி.யூ.சி இங்கிலீஷ் பேப்பருக்கு சீஃப் எக்ஸாமினர் உங்கள் மகன் தானாம். என் வீட்டுக்காரர் விசா ரித்துச் சொன்னார். நீங்க உங்கள் மகனிடம் சொன்னால், அவர் ஏதாவது முயற்சி பண்ணிச் சரி செய்து, என் பையன் பாஸ் பண்ணுவதற்கு ஏதாவது வழி செய்யலாம். ஆண்டிபட்டியிலி ருந்து நான் இங்கு வந்ததே இதை உங்களிடம் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான்…”

ராவுத்தர் கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தார். எதையோ நினைத்துத் தயங்கி விட்டுக் கேட்டார்… ”அப்படியா? தேவரு எங்கிட்டே இதைப் பத்தி ஒரு வார்த்தை கூடச் சொல்ல வில்லையே!”

”அப்பாவிற்கு இந்தக் காரியத் தில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை மாமா! இதெல்லாம் தப்பு, வீணாக உங்களுக்குத் தொந்தரவு கொடுக் கக்கூடாதென்று சொல்லிவிட் டார். அதனால்தான் நானே உங்களிடம் சொல்லிவிடலாம் என்று வந்தேன்.”

மறுபடியும் ராவுத்தர் எதையோ யோசிப்பது தெரிந்தது. அவர் என்ன பதில் சொல்லப் போகி றாரோ என்று மீனாட்சி தவித் தாள். கடைசியில், ஏதோ தீர்மா னத்திற்கு வந்துவிட்ட ராவுத்தர் கூறினார்… ”சரிம்மா, நீ எப்படி யாவது தேவரைச் சரிசெய்து நாளைக்கு மதுரைக்குப் புறப்படத் தயார் பண்ணிடு. ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு மத்ததை நான் கவனிச்சுக்கறேன். இன்ஷா அல்லாஹ்… ஜமாலை நேரிலேயே போய்ப் பார்த்து, காரியத்தை முடிச்சுட்டு வந்துடறோம். நீ ஒண்ணும் கவலையே பட வேணாம். தைரியமா வீட்டுக்குப் போம்மா.”

ராவுத்தர் வீட்டிற்குள் நுழை கிறார். மீனாட்சி வீட்டைத் தாண்டி வெளியேறுகிறாள். மீனாட்சியின் மனத்தில் குடியிருந்த சுமை, அங்கிருந்து வெளியேறி இப்போது ராவுத்தர் மனத்தில் குடி புகுந்து கொள்கிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்.

சத்தியமான மனிதர்கள் கண்ட, கண்டுகொண்டிருக்கின்ற கனவு களைப் போல் கோயிலின் கோபு ரங்கள் உயர்ந்து நிற்கின்றன. வரப் போகிற சித்திரைத் திருவிழாவிற்கு முன்னறிவிப்பான கலகலப்பு கோயிலைச் சுற்றிலும் இப்போதே தென்படுகிறது.

தேவர் மீனாட்சியம்மனையும் சொக்கலிங்கப் பெருமானையும் மனங்குளிரத் தரிசித்து வணங்கித் தன்னுடைய வழிபாட்டை முடித் துக்கொண்டு… பொற்றாமரைக் குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந் திருக்கும் மைதீன் ராவுத்தரின் பக்கத்தில் வந்து உட்காருகிறார்.

”என்ன ராவுத்தரே, நான் எவ்வளவு சொல்லியும் கேட்கா மல் மதுரைக்குக் கூட்டிக்கிட்டு வந்துட்டீரே! உம்ம மகன் ஜமாலு எவ்வளவு மரியாதையா ‘மாமா, மாமா’ன்னு என்னை மனங் குளிரக் கூப்பிடுது! நல்ல படிப் பாளி, நாணயமானவரு, கண்டிப் பானவரு, பெரிய மேதை அப்படின்னு ஊரெல்லாம் பேராக இருந்தாலும், சாதாரணமான என் கிட்டே எவ்வளவு பணிவா நடந்துக்குது! அப்பேர்ப்பட்ட உத்தமமான பிள்ளைகிட்டப் போயி, ‘என் பேரன் சரியாப் பரீட்சை எழுதலியாம். அவனுக்கு எப்படியாவது மார்க்கைக் கூட்டிப் போட்டுப் பாஸ் பண்ணி வைக்க ஏதாவது ஏற்பாடு செய் தம்பி’ன்னு நான் கேட்டா நல்லாயிருக்குமா?”

”நீரு கேக்க வேணாம். நானே கேட்டுட்டுப் போறேன்.”

”நீரு கேட்டால் மட்டும் நல்லா இருக்குமோ? யாரு கேட்டாலும் தப்பு தப்புத்தானே!”

”தேவரு, நாம ஒருத்தர்ட்ட சொல்லுற காரியம் தப்பா ரைட்டா என்பது அந்தக் காரியத்துலே மட்டும் இல்லே; நமக்கு அது எவ்வளவு முக்கிய மானது என்பதுலேயும், நாம யார்கிட்டே சொல்லுறோமோ அவங்க நாம சொல்லுற பேச்சை எந்த அளவுக்குக் கேப்பாங்க என்பதிலேயும்தான் இருக்குது. இப்போ உம்ம பேரனுக்காக நான் செய்ய வந்திருக்கிற இதே காரியத்தை வேறு யாருக்காகவும் செய்ய நான் சம்மதிக்க மாட்டேன். என்னோட பேரனுக்குன்னா கூடச் சம்மதிக்க மாட்டேன். அதோட, இதே காரியத்தை என் மகன் ஜமாலைத் தவிர வேறு யாரிடமாவது சொல்ல வேண்டியதாக இருந்தா, நான் இதைப் பத்திக் கனவிலே கூட நெனைக்க மாட்டேன். யாருக்காக நான் எதையும் செய்து தீரணுமோ அவங்களுக்காக நான் இதைச் செய்யப் போறேன். யாரு எனக்காக எதையும் செய்வானோ அவனிடத்துலேதான் இதை நான் செய்யப் போறேன். நீரு ஒண்ணும் அலட்டிக்காமல் பேசாமல் இரும். இன்ஷா அல்லாஹ்… எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடும்.”

மைதீன் ராவுத்தர் வீட்டின் மாடி.

மாடியின் மதிலோரமாய் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தபடி, எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ராவுத்தர்.

”என்ன இருந்தாலும் ராவுத் தரே, நீரு ஜமாலுகிட்டச் சொல்லிக்காமக் கொள்ளிக்காமத் திடீர்னு புறப்பட்டு ஊருக்கு வந்தது அவ்வளவு நல்லா இல்லே.”

”தேவரு, நீரும் என்னைக் கஷ்டப்படுத்தாதீரும். நான் கிழிக் கிற கோட்டைத் தாண்டாத என் மகன் இன்னிக்கி எதுத்துப் பேசி, நான் சொன்னதைக் காதிலே கூட வாங்கிக்காம, மறுத்து விடுகிற அளவுக்குப் பெரிய ஆளா ஆயிட்டான்…”

”நீரு சொன்னதையெல்லாம் ஜமாலு கேக்காம மறுத்துடுச்சுன்னு சொல்லுறீரே… சப்-கலெக்டரோட பையன் விஷயத்தையும் மத்த விஷயத்தையும் அது கேட்டுக் கிட்டதா இல்லையா?”

”அதெல்லாம் கேட்டுக்கிட்டது ஒண்ணும் பெரிசில்லே. நான் எதை முக்கியம்னு சொன்னேனோ அதை அவன் கேக்கலியே..! மதுரைக்கு நானே நேரடியாய் புறப்பட்டுப் போனதுக்கு என்ன காரணம்னு சொன்னேனோ அந்த விஷயத்தை, நான் உம்ம மகளுக்கு வாக்குக் கொடுத்திருந்த உம்ம பேரன் விஷயத்தை நானே தனியா வற்புறுத்திச் சொல்லியும் கூட ஜமாலு கேட்காம மறுத்துட் டான். இதைக் காட்டிலும் எனக்கு வேறு என்ன அவமானம் இருக்கு?”

”என்னோட பேரன் விஷயத் தைப் பத்தி நீரு பிரஸ்தாபித்ததே தப்புதான்!”

”என்னா பெரிய தப்பைக் கண்டுபிடிச்சுட்டீரு?”

”தருமத்தை மீறும்படியா, பெத்த தகப்பனே மகனுக்குக் கட்டளையிடுறது தப்பில் லையா?”

ராவுத்தர் நெடுநேரம் மௌனம் சாதித்துவிட்டுத் தன்னுடைய தலையில் கையை வைத்துக் கவிழ்த்துக் கொண்டவராய், ”என் மகன் நான் கிழிக்கிற கோட்டைத் தாண்டமாட்டான், தாண்ட மாட்டான்னு எல்லார்கிட்டேயும் பெருமையாச் சொல்லிக்கிட்டிருந்தேன். அவன் என் மொகத்திலே நல்லா கரியை வாரிப் பூசிப்புட் டான்” என்றார்.

”ராவுத்தரே! நீரு கிழிக்கிற கோட்டை என்னிக்கும் தாண்டாத உம்ம மகன் இன்னிக்கு தாண்டிட் டானேன்னு வருத்தப்படாதீரும். ஏன்னா, நீரு கிழிச்ச கோடே தப்பாப் போயிடுச்சு. அதனாலேதான் ஜமாலு அந்தக் கோட்டைத் தாண்டிடுச்சு. நீரு கிழிச்சு கோடுதான் தப்பே தவிர, ஜமாலு தாண்டினது தப்பில்லே.”

நெடுநேரம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தன் வீட்டிற்குப் புறப்பட்டுப் போன தேவரை, வீட்டின் வாயில் வரை உடன் வந்து, விடைகொடுத்து அனுப்பிவிட்டு, அப்படியே தெருவைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் ராவுத்தர்.

பக்கத்து வீட்டு இஸ்மாயிலின் மகன் எட்டு வயதுச் சிறுவன் சந்தோஷத்துடன் துள்ளலோடு வந்து, ”தாதா… தாதா” என்றான்.

”என்னடா?”

”இங்கே வா தாதா” – கையைப் பிடித்து இழுத்துச் செல்கிறான்

தெருவின் குறுக்கே ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை கரிக்கட்டையால் ஒரு பெரிய கோடு போடப்பட்டிருக் கிறது. அதற்கு முன்புறம் சற்றுத் தொலைவில் ஒரு சிறிய வட்டம்!

”தாதா, இந்த வட்டத்தில் மிதித்துத் தாவி, அந்தக் கோட்டைத் தாண்டமுடியுமானு நாங்க பந்தயம் போட்டோம். நான் ஜெயிச்சுட்டேன். ஓ…..டி வந்து இந்த வட்டத்திலே ஒரு காலை மிதித்து, ஒரே தாவலில் அந்தக் கோட்டைத் தாண்டிட்டேன் தாதா!”

இஸ்மாயிலின் மகன் தன்னுடைய எவரெஸ்ட் சாதனையைத் தாத்தாவிற்குக் காட்டி, மகிழ்ச்சியில் குதி குதி என்று குதித்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து வேறு சில சிறுவர்களும் குதித்துக் கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள்.

கோடுகளைத் தாண்டாமல் இருப்பதில் மட்டுமல்ல… சில கோடுகளைத் தாண்டுவதிலும் கூடத்தான் பெருமை இருக்கிறது!

– 17-05-1970

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *