கிழவரும் குட்டியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 3,322 
 

“நான் இந்தக் கறுப்புப் பூனையைக் கொல்லாம விடப்போறதில்லே!” தனக்குள் பேசிக்கொள்வதாக நினைத்து, உரக்கவே சொன்னார் மாத்ருபூதம்.

இடுப்பில் குழந்தையுடன், தோட்டத்தில் மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த கவிதாவின் காதுகளிலும் மாமனாரின் வார்த்தைகள் விழுந்தன. முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டாள்.

வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தவர் அருகில் பூனை எதுவும் நின்றிருக்கவில்லை. கடந்தவாரம் அவரிடம் வாங்கிய உதைகளை அந்த கறுப்புப் பூனை மறக்கவில்லையோ, என்னவோ!

அன்று மாலை, அது அவர்கள் வீட்டின் வெளியே, தெரு ஓரமாக அசுத்தப்படுத்தியது.

சும்மா இருப்பாரா, மா.பூதம்! அவசரமாக வெளியே ஓடி, அதை உதைத்தார். திரும்பத் திரும்ப.

பயந்தோடிய பிராணியைப் பார்த்த கவிதா, “பாவம்பா! வாயில்லா ஜீவன்! அதுக்கு என்ன தெரியும்?” என்று மன்றாடியபோது, “நீ சும்மா இரு. நாம்ப வெளியே போறபோது, பூனை குறுக்கே வந்தா, கெட்ட சகுனம்! இது கறுப்பு வேற!” என்று அவளை அடக்கினார்.

அவள் பிறந்தகத்தில், இரண்டு பூனைகள் துள்ளி விளையாடும். அவள் தரையில் படுத்துக்கொள்ள, அவள்மேல் ஏறும் ஒரு குட்டி.

அவள் தன் தலையை பக்கவாட்டில் ஆட்ட, அதுவும் அப்படியே செய்ததைப் பார்ப்பதில் அவளுக்கு ஆனந்தம் பெருகும்.

`பாடும்மா!’ என்று அவள் ஒவ்வொரு ஸ்வரமாகச் சொல்லிக்கொடுக்க, ‘ஸ்வர சுத்தம் இதுகிட்டதான் கத்துக்கணும்!’ என்று அவள் பெருமையாகச் சொல்லும் அளவுக்கு, இனிமையான குரலில் அப்படியே திரும்பப் பாடும் இன்னொன்று.

“இதுக்கு என்ன பேர் வெச்சிருக்கே? ஜிஞ்சர்னு (ginger) கூப்பிடலாமா? அந்தக் கலராத்தானே இருக்கு?” என்று அவளுடைய அண்ணன் விளையாட்டாகக் கேட்க, கவிதா அதிர்ந்தாள்.

“ஐயோ, வேண்டாம்பா. ‘டீ, கவி! இஞ்சியை நறுக்குடி’ன்னு அம்மா என்னைக் கூப்பிடறபோதெல்லாம் மனசு பக்கு பக்குங்கும்! இதைச் செல்லக்குட்டின்னு கூப்பிடப்போறேன்!” என்றாள் தீர்மானமாக.

‘ரொம்ப ஆசாரமா இல்லாத வீடா ஒனக்கு மாப்பிள்ளை பாக்கணும். ‘பூனைக்கு வேற ஆகாரம் போடணுமா! தண்டச்செலவு!’ன்னு மாமியார் நொடிப்பா’ என்று அம்மா ஆதங்கப்பட்டாள்.

மாமியார் இல்லாத வீடே அவளுக்குக் கிடைத்தது. தனி வீடு. அதில் எல்லா சௌகரியங்களும் இருந்தன.

ஆனால், வந்த சில நாட்களுக்குள், மாமனார், “அது என்ன, ஒங்காத்திலே ரெண்டு பூனை துள்ளி விளையாடறது? அங்கே சாப்பிடவே பிடிக்கலே. எனக்குப் பூனை, நாயெல்லாம் கண்டாலே வெறுப்பு!” என்று அடுக்கிக்கொண்டே போக, அவளுக்கு அழுகைதான் வந்தது.

தன் அருமைப் பூனைகளைப் பரிந்து எதுவும் சொல்ல முடியவில்லை.

‘வாழ்க்கைப்பட்டுப் போற இடத்திலே எல்லாரிடமும் மரியாதையாக, அடக்க ஒடுக்கமா இருக்கணும்!’ என்று அனுதினமும் கூறிய தாயின் அறிவுரையைக் கேட்டு வளர்ந்தவளாயிற்றே!

தாயைப் பார்க்கப் போனபோது, “ஒன் செல்லக்குட்டி ஒன்னைத் தேடறது, கவி. மூலை முடுக்கெல்லாம் மோந்து பாக்கறது! நீ எப்பவும் ஒக்காந்து படிப்பியே, அந்த நாற்காலியைவிட்டு நகர்றதே கிடையாது!” என்று அடுக்கியபோது, மீண்டும் அழுகைதான் வந்தது கவிதாவுக்கு.

அவளைப் பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டது குட்டி அதிவேகமாக வீட்டு வாசலிலிருந்து பின்புறம்வரை ஓடி, ஓடி.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் கிழவருக்குப் புரியுமா? இல்லை, காது கொடுத்துத்தான் கேட்பாரா?

எப்படிச் சொல்வது?

நோய்த்தொற்று காரணமாக வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் நிலையாலோ, நண்பர்களுடன் அரசியலையும், `சினிமாக்காரி’களையும் உரத்த குரலில் அலச முடியவில்லையே என்ற எரிச்சலாலோ, அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது என்றுதான் கவிதாவுக்குத் தோன்றியது. இப்போதுதான் ஐந்தில் ஒருவர் அப்படி ஆகிவிட்டாராமே!

இந்தவரை, மனிதர் தன் குடும்பத்தினரிடம் வன்முறையைக் காட்டவில்லையே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

தன் பேத்தியிடம் உயிராக இருந்தவருக்கு மற்ற இனங்களின் குட்டிகளிடம் அன்பு வைக்கமுடியவில்லையே! கவிதாவுக்குப் புரியத்தான் இல்லை.

ஒரு நாள், தன் பின்னங்காலைத் தரையில் பதிக்கமுடியாது, அந்தப் பூனை நொண்டி நடந்ததைப் பார்த்தபோது பரிதாபம் மேலிட்டது. மாமனார் டிவியில் மூழ்கி இருந்த தைரியத்தில், காம்பவுண்டுக் கதவைத் திறந்தாள். பூனைகளுக்கு இனிப்பு ஆகாது என்று, உப்பு பிஸ்கோத்து ஒன்றைப் போட்டாள்.

பலரிடமும் அந்தப் பூனை பிரம்படியும், உதையும் வாங்கியிருக்கும் என்ற எண்ணமே அவளால் தாங்க முடியாததாக இருந்தது.

அடுத்த இரண்டு நாட்களிலும், ஆகாரத்தை எதிர்பார்த்து, அங்கு வந்தது அந்தக் குட்டி.

ஏதோ திருட்டுத்தனம் செய்வதுபோல், அவளும் அதன் பசியைப் போக்கினாள்.

இரு கால்களிடையை அது சுற்றிச் சுற்றி வந்தபோது, அதன் அன்பும், நன்றி உணர்வும் அவளுக்குப் புரிந்தது. ஆனால், பயமும் எழுந்தது.

மெல்லிய குரலில், “போயிடு. உதை வாங்காதே!” என்று எச்சரித்தாள்.

“நான் பாப்பாவுக்குப் பால் குடுக்கணும்,” என்று பொதுவாகக் கூறிவிட்டு, கதவைத் தாளிட்டாள்.

“குழந்தை எங்கேப்பா?”

‘போட்ட படத்தையே போடறான்! அபூர்வமா ஒரு புதுப்படம்! அதை சுவாரசியமாப் பாக்கறபோது இதென்ன தொணதொணப்பு!’ என்றெழுந்த எரிச்சலால் வந்தது பதில் கேள்வி: “என்னைக் கேட்டா?”

தவழும் குழந்தை! அப்படி எங்கே போயிருக்கும்?

பதைபதைப்புடன், வீட்டில் ஒவ்வொரு அறையாகத் தேட ஆரம்பித்தாள் கவிதா.

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்திருக்குமோ? குளியலறை, கழிப்பறையிலும் நுழைந்து எட்டிப்பார்த்தாள்.

பூனை வாசலிலிருந்து கத்தியது.

“நீ அதுக்கு ஆகாரம் ஏதாவது போட்டியா?”

“இல்லேப்பா”. மனமறிந்து பொய் சொன்னாள்.

“போடாதே. அப்புறம் இதான் நம்ப வீடுன்னு இங்கேயே தங்கிடும்!”

இடைவிடாமல், மீண்டும் கத்திய சத்தம் கேட்க, “அந்த சனியனை இன்னிக்குக் கொல்லாம விடப்போறதில்லே,” என்று சபதம் போட்டுவிட்டு, தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு வாசல்புறம் போனார் கிழவர்.

தான் பெற்ற குழந்தையைக் காணோம் என்ற கலவர உணர்வு சற்றே மறைய, ஒரு கொலையைத் தடுக்க அவரைத் தொடர்ந்து வாசலுக்கு விரைந்தாள் கவிதா.

“இங்கே பாரேன்!”

வீட்டின் வெளிப்புறத்தில் அகலமும், ஆழமுமான சாக்கடை. அதற்குள், விழிகள் விரிய, குழந்தை! அழவும் பயந்து, அசையாமல் உட்கார்ந்திருந்தது.

அதையே பார்த்துக்கொண்டிருந்த பூனை மீண்டும் கத்தியது.

“இந்தப் பூனை பலே கில்லாடி! நம்பளைக் கூப்பிடத்தான் அந்தக் கத்து கத்தியிருக்கு! நல்லவேளை, இன்னிக்கு மழை பெய்யலே!”

மழை பெய்யும்போது, வெள்ளமாக ஓடும் தண்ணீரில் குழந்தை அடித்துக்கொண்டு போயிருக்கும் என்ற நினைப்பே இருவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

“நீ இரு. நான் குழந்தையை வெளியே எடுக்கறேன்!” எப்போதும், கால் வலி, இடுப்பு வலி என்று வியாதி கொண்டாடும் கிழவர், அருமைப் பேத்தியைக் காப்பாற்ற சாக்கடைக்குள் இறங்கினார்.

“குழந்தையை டாக்டர்கிட்ட அழைச்சிண்டு போ. மூஞ்சி, ஒடம்பெல்லாம் சிராய்ச்சிருக்கு. ஒரே ரத்தம்!” என்று கரிசனப்பட்டவர், “அப்படியே அந்தப் பூனைக்கு ஏதாவது ஆகாரம் வாங்கிண்டு வா. பாவம், வாயில்லா ஜீவன்!” என்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *