கிளிஞ்சல் பொம்மைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 196 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிளிஞ்சல்கள், சின்ன வயது முதலே, அவனை ஈர்த்திருக்கின்றன. அப்பா அம்மாவுடன், கடற்கரைக்கு, சின்னப் பையனாக போன காலத்திலிருந்தே, அவன் கிளிஞ்சல்களை சேகரித்து ரகம் பிரித்து வைப்பான். மனிதர்களின் ரேகைகள் போல், கிளிஞ்சல்களின் மேல் பலவிதமான கோடுகள் இருப்பதைப் பார்த்து, அவன் வியந்திருக்கிறான். ஒரு கிளிஞ்சலைப் போல் மற்றொன்று இருந்ததாக அவனுக்கு நினைவில்லை. அவன் வகுப்புத் தோழர்களெல்லாம், அவனைப் போல் இனம் பிரித்துக் காண தெரியாதவர்கள். அவன், இரண்டு கிளிஞ்சல்களை கையில் வைத்துக்கொண்டு, அவற்றிற்குள் இருக்கும் வேற்றுமைகளை விவரிக்கும் போது, அவர்கள் அவனை வினோதமாகப் பார்ப்பார்கள். வளர்ந்தபின் கடற்கரைக்குப் போகும் போதெல்லாம், அவன் கிளிஞ்சல் பொம்மைகளால் கவரப்பட்டிருக்கிறான். இன்று கூட அப்படித்தான். ரேகாவையும், குழந்தைகளையும், வார விடுமுறை நாளானதால், கடற்கரைக்குக் கூட்டி வந்திருந்தான். அவர்கள் முன்னே சென்று விட்டிருந்தார்கள். அவன் கால்கள், அவனை அறியாமல், கிளிஞ்சல் பொம்மைக் கடையைத் தாண்டும்போது, தானாக நின்றுவிட்டன. அழகான கிளிஞ்சல் பொம்மைகள். ஆண் பொம்மை, பெண் பொம்மை. ஆனை பொம்மை. தற்கால சிறுவர் சிறுமியர் ஆசைப்படும் டைனோசர் பொம்மை கூட இருந்தது. பெரிய கிளிஞ்சலில் முகம். சிறு கிளிஞ்சல்களினால் ஆன உடல். குழல் போன்ற கிளிஞ்சல்களினால் கோர்க்கப் பட்ட கைகள், கால்கள். ஏதோ ஒரு அட்டையிலோ அல்லது காகிதக் கூழிலோ அதை ஒட்டி வடிவமைத்திருந்தார்கள். காஸ் லைட் வெளிச்சத்தில் அவை பளபளவென்று மின்னின.

“ என்னங்க! கிளிஞ்சல் பார்க்க நின்னுட்டீங்களா? அப்படி என்னதான் இருக்குதோ அதிலே! ரேகாவின் குரல் பின்னாலிருந்து கேட்டது.

ரேகாவைக் காதலித்த போதெல்லாம், அவனும்,அவளும் இந்தக் கடற்கரைக்குத்தான் வருவார்கள். அப்போதும் அவன் கிளிஞ்சல் கடையைக் கவனிக்காமல் போனதில்லை. அப்போதும் ரேகாவிடம் இருந்து இதே கேள்விதான் எழும். ஆனால் அப்போதெல்லாம் அந்தக் கேள்வி ஒரு கொஞ்சல் தொனியில் இருக்கும். இப்போது, கல்யாணம் ஆகி, பதினாறு வருடங்களுக்குப் பிறகு, கேள்வி மட்டும் மாறவில்லை. ஆனால் தொனியில் கொஞ்சல் போய் அதட்டல் வந்திருக்கிறது. அலுப்பு வந்திருக்கிறது. “இந்தக் கிளிஞ்சல்களுக்குப் பின்னால் உழைப்பு இருக்கிறது ரேகா’

அவனுடைய பதிலும் மாறவில்லை. பதினாறு வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதே பதில். கிளிஞ்சல்களை அணு அணுவாக ரசித்தவனுக்குத்தான், அவைகளின் அருமை தெரியும். அதை பொம்மையாக்க தேவைப்படும் உழைப்பு புரியும். கிளிஞ்சல் பொம்மை செய்ய மேல் எது கீழ் எது என்று தெரியவேண்டும். மேல் கீழ் மாறிப் போனால் பொம்மையின் வடிவமே மாறிப்போகும். கிளிஞ்சல் பொம்மை செய்ய பொறுமை வேண்டும். சிறியது பெரியதாக பிரித்தெடுக்கும் பக்குவம் தெரிய வேண்டும். எது தலைக்கான கிளிஞ்சல், எது உடலுக்கான கிளிஞ்சல், எது கை எது கால் என்று புரிய வேண்டும். ஒட்டும்போது கையெல்லாம் பசை அப்பிக்கொள்ளும். கவனம் குறைந்தால் கிளிஞ்சல்கள் கையுடன் ஒட்டிக் கொள்ளும்.

“என்னங்க கொழந்தைங்க எங்ங்கியோ போயிட்டாங்க. வாங்க “ ரேகாவின் குரலில் பதட்டம் இருந்தது. ங் ‘கின் அழுத்தம் அவனை தரைக்கு இழுத்து வந்தது.

அவனுக்கு இரண்டு குழந்தைகள். விஜா எட்டாம் கிளாஸ் படிக்கிறாள். மிதுன் பத்தாவது. சிறு வயதில் அவர்களுக்குக் கிளிஞ்சல்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். வளர்ந்த பின் ரேகா அவனிடம் அவர்களை அதிகம் விடுவதில்லை.

“உங்கப்பா மாதிரி நீங்களும் கிளிஞ்சல் பைத்தியம் ஆயிடாதீங்க “

அவன் ரேகாவை நோக்கி நடந்தான். விஜாவும் மிதுனும் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கடலைப் பற்றியும், அதன் ஆபத்துகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறான். அவர்கள்

இயல்பாக ஜாக்கிரதை உணர்வு கொண்டவர்கள். கடலுக்கு அருகில் போகமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

அவன் ரேகாவை நெருங்கிய போது, மிதுனும் விஜாவும் அருகே வந்திருந்தார்கள். விஜா ஓடி வந்து கழுத்தைக் கட்டிக்கொண்டாள். மிதுன் கைகளைக் கட்டிக்கொண்டு தனியே நின்றான். இவன் கை அசைத்தவுடன் அருகில் வந்து இடுப்பில் கை போட்டான்.

குழந்தைகளின் மனது ஈர சிமெண்டைப் போல.. எதை சொல்கிறோமோ அல்லது செய்கிறோமோ அது அழுத்தமாக அவர்கள் மனதில் படிந்து விடும். நல்ல விசயங்களை பதிய வைத்தல் அவசியம். கிளிஞ்சல் பொம்மைகளின் விலை மலிவை, அதைச் செய்யும் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மட்டும் பார்த்து ஒரு கணிப்புக்கு வருகிறாள் ரேகா. அவளைச் சொல்லிக் குற்றமில்லை. அவள் வளர்ந்த விதம் அப்படி. ஆயிரம் ரூபாய்க்கு பஞ்சு பொம்மைகளை வாங்கிக் குவித்திருந்தார் அவளுடைய அப்பா. அதுவும் விஜா கைக்குழந்தையாக இருக்கும்போதே.. பேட்டரியில் இயங்கும் ரோபோ, சிறிய மோட்டார் சைக்கிள் என்று வாங்கிக் கொடுத்து அசத்துகிறார் மிதுனை.. ஆனாலும் கிளிஞ்சல் பொம்மைகளில் இருக்கும் உயிரோசை அவைகளில் இல்லைதான். அதைச் சொன்னால் ரேகாவுக்கு புரியாது. விஜாவையும் மிதுனையும் பார்த்தான்.

‘இவர்களும் கிளிஞ்சல் பொம்மைகள் தான். எத்தனை ரகமான கிளிஞ்சல்கள் இவர்கள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன’.

பிறந்தவுடன் போலியோ டிராப்ஸ், வளர்ந்தவுடன் ஜெர்மன் மீஸில்ஸ் தடுப்பூசி, எல் கே ஜி யில் இருந்து இதுவரை எத்தனையோ…. பேனா, பென்சில், புத்தகம், யூனி பார்ம், ஷ¥, மருந்து போஷாக்கு என்று.. இதில் மேல் எது கீழ் எது என்று பார்த்து பார்த்து ஒட்டிய பெருமை ரேகாவிற்கு உண்டு. ஆனால் அவளுக்குத் தெரியாது அவள் ஒட்டிய கிளிஞ்சல்களால்தான் இன்று குழந்தைகள் ஆளுயரம், தோளுயரம் என்று வளர்ந்து நிற்கிறார்கள் என்று.

– மே 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *